எழில்மிகு அரங்கில் தியாகத்தின் அடையாளமாம் பகத்சிங்கின் நினைவு தினப் பொதுக் கூட்டம்

ஆண்டு தோறும் இடைவிடாது சி.டபிள்யு.பி மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் பகத்சிங் நினைவுதினம் இந்த ஆண்டு மார்ச் 29-ம் நாள் மதுரை நகருக்கு அருகில் உள்ள சமயநல்லூரில் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது.

சி.டபிள்யு.பி. தோழர் ராமநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திரு. நாகராஜன், அ.இ.அ.தி.மு.க-வை சேர்ந்த வழக்கறிஞர் திரு. மலையாளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் பகத்சிங் ஆகியோருடன் சி.டபிள்யு.பி மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளான உழைக்கும் மக்கள் போராட்டக்கமிட்டி, பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பின் தோழர்கள் வரதராஜ் (உழைக்கும் மக்கள் போராட்டக்கமிட்டி), அமெரிக்கன் கல்லூரி மாணவர் திரு. கோபிநாதன் (பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பு), தோழர் பிரேம்குமார் மற்றும் 'கேளாத செவிகள் கேட்கட்டும்' ஆசிரியர் தோழர் த. சிவக்குமார் ஆகியோர் உரையாற்றினர். சிறப்புரை சி.டபிள்யு.பி. மாநில அமைப்பாளர் தோழர் ஆனந்தன் அவர்களால் ஆற்றப்பட்டது.

தோழர் ராமநாதனின் தலைமையுரைக்குப் பின் முதலில் உரையாற்றிய திராவிடர் கழகப் பொறுப்பாளர் திரு நாகராஜன் தனது உரையில் மாவீரன் என்று அழைக்கப்படும் ஒரே தகுதி படைத்தவர் உலக வரலாற்றிலேயே தியாகி பகத்சிங் ஒருவர்தான் என்று எடுத்துரைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் பகத்சிங் தனது உரையில் பகத்சிங் எவ்வாறு மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் என்பதையும் அத்தனை நெஞ்சுரமும் உறுதியும் படைத்த தியாகியின் இதயம் மென்மையான உணர்வுகளான காதல், அன்பு போன்றவற்றையும் எவ்வாறு சரியாக அணுகி அந்த உன்னதமான மனித குணங்களையும் உயர்த்திப் பிடித்தது என்பதையும் நெகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தார்.

சி.டபிள்யு.பி. தோழர் பிரேம்குமார் தனது உரையில் சி.டபிள்யு.பி-யும் அதன் வெகுஜன அமைப்புகளும் தொடர்ந்து இடைவிடாது பகத்சிங் நினைவுதினத்தை அனுஷ்டிப்பதற்குக் காரணம் அவர் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட அதே வேளையில் எவ்வாறு உழைக்கும் வர்க்கத் தலைமைக்கு அந்தப் போராட்டம் சென்று அது மனிதனை மனிதன் சுரண்டும் அவலத்திற்கே முற்றுப்புள்ளி வைப்பதாக அமையவேண்டும் என்று விரும்பினார் என்பதற்காகவும் ஆகும் என்று கூறினார். இன்று எந்த மாணவர், இளைஞர், மக்கட் பகுதியை சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதில் முன்னிலை வகிக்கக்கூடிய பகுதி என்று  பகத்சிங் கருதினாரோ அந்தப் பகுதியினரிடமும் உலகமயம், வேற்றிட வேலைவாய்ப்பு ஆகியவற்றின் காரணமாக அதிகப் பணம் ஈட்டவேண்டும் என்ற முதலாளித்துவ மனநிலை தோன்றி வளர்ந்து வருவதையும் அவர்களின் சமூக உணர்வு மங்கி மறைந்து கொண்டுள்ளதையும் வேதனையுடன் குறிப்பிட்டார்.

அடுத்து உரையாற்றிய மாணவத் தோழர் திரு. கோபிநாதன் அமெரிக்கன் கல்லூரியின் வளாகம் விலை பேசப்படுவதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூர்ந்தார். துன்பகரமான அப்போராட்டமே பகத்சிங் மாணவர்-இளைஞர் கூட்டமைப்பு என்ற அமைப்பை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு அறிமுகம் செய்த இன்பகரமான பணியையும் செய்தது என்பதை சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளான துன்பங்களுக்கும் வாழ்த்துக்கள் இன்பங்களுக்கும் வாழ்த்துக்கள் என்பதை மேற்கோள் காட்டி எடுத்துரைத்தார். மற்ற அமைப்புகள் எல்லாம் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக அப்போராட்டத்தை அணுகிய வேளையில் எவ்வாறு அந்த அமைப்பு மட்டும் சுயநல நோக்கம் எதுவுமில்லாது அப்போராட்டத்தை ஆதரித்தது என்பதையும் எடுத்துக்கூறினார்.
 
'கேளாத செவிகள் கேட்கட்டும்' ஆசிரியர் தோழர் த. சிவக்குமார் தனது உரையில் முக்கியமான இரண்டு விசயங்களை மட்டும் வலியுறுத்தினார். அதாவது பகத்சிங் உள்நாட்டு முதலாளித்துவச் சுரண்டல் அபாயம் விடுதலை பெற்றவுடன் இந்தியாவில் தோன்றவிருப்பதை உணர்ந்தவராக இருந்ததோடு மட்டுமின்றி அதனை முறியடிக்கவல்ல ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் நடைமுறை வேலையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் என்பதைச் சுட்டிக் காட்டினார்.

மேலும் கண்ணோட்டம் உன்னதமானதாக இருந்தாலும் நடைமுறையில் சோசலிச ரீதியிலான சமூகம் எப்படி உள்ளது என்பதை அக்கால கட்டத்தில் சோசலிசம் நடைமுறையில் இருந்த ஒரே நாடான சோவியத் யூனியனுக்கு ஒரு நம்பகமான தோழரை அனுப்பி அறிந்து கொள்ளவும் முயன்றார். அதற்காக அவர் வெள்ளை போலீசாரின் வாயைப் பிடுங்கி அதைச் செய்யவல்ல பொருத்தமான தோழரான பிருத்விசிங் என்பவர் குஜராத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவும் செய்தார்.
சிறையில் இருந்தவாரே தனது தோழர்கள் மூலம் பிருத்வி சிங்-கிற்கு ஆள் அனுப்பி அவரிடம் தனது விருப்பத்தைத் தெரிவிக்கவும் செய்தார். தன்மேல் பகத்சிங் கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கையினால் நெகிழ்ந்து போன பிருத்விசிங் சோவியத் யூனியன் சென்று அங்கு ஒரு பல்கலைக்கழக மாணவராகச் சேர்ந்து சோசலிச நடைமுறை அறிந்து சில ஆண்டுகள் கழித்து திரும்பவும் செய்தார். ஆனால் அவர் திரும்பிய வேளையில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டு தியாக மரணத்தை தேடிக்கொண்டுவிட்டார்.

இவ்வாறு பகத்சிங் உயர்ந்த லட்சியங்களால் வழிநடத்தப்பட்டவராக மட்டும் இல்லாமல் அவற்றின் நடைமுறையிலும் கண்ணும் கருத்துமாக எவ்வாறு இருந்தார்; அச்சம் என்பது அறவே இல்லாத அவருடைய மனநிலை இன்றுள்ள காவல்துறையினரைக் காட்டிலும் பல மடங்கு திறமை படைத்தவர்களாக இருந்த வெள்ளை காவல்துறையினரிடமிருந்தும் தகவல்களை அறிந்து கொள்ளும் தனித் திறமை பொருந்தியவராக அவரை எவ்வாறு ஆக்கியது என்பதையும் எடுத்துரைத்தார்.

காலத்தின் போதாமையைக் கருத்திற்கொண்டு தோழர் வரதராஜ் பகத்சிங்கின் கருத்துக்களைக் கடைப்பிடிக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு தனது உரையினை ரத்தினச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

தோழர் ஆனந்தனின் சிறப்புரை

இறுதியாக சிறப்புரை ஆற்றிய தோழர் ஆனந்தன் தனது உரையில் பகத்சிங்கை எதற்காக உயர்த்திப் பிடிக்கிறோம்? வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு என்றோ உயிர்நீத்த அவரை இன்றும் நாம் உயர்த்திப் பிடிப்பதன் காரணம் என்ன? இன்றைய நிலையில் மாமேதை மார்க்ஸ் போன்றவர்களின் கருத்துக்கள் என்றுமில்லாத அளவிற்கு பொருத்தமும் வழிகாட்டும் தன்மையும் கொண்டவையாக உலக அளவில் சிந்தனையாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களால் பார்க்கப்படும் வேளையில் அதே கருத்துக்களை கொண்டிருந்த பகத்சிங்கை உயர்த்திப் பிடிப்பதன் காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கான பதிலாக தனது வாதத்தை முன்வைத்தார்.

உலக அரங்கில் இன்றும் எந்த வகையான சர்ச்சைக்கும் இடமின்றி தியாகத்தின் திருவுருவமாய் போற்றப்படும் சே-க்வேரா -வின் தியாகத்திலிருந்து எள்ளளவும் குறையாத தியாக சிந்தையுடன் விளங்கிய பகத்சிங்-கை அவரது தியாகத்திற்காக மட்டுமே நினைவு கூர்ந்தால் கூட அதுவும் சாலப் பொருத்தமுடையதாகத்தான் இருக்கும்.

இருந்தாலும் அதற்காக மட்டும் அவரை நாம் நினைவு கூர்ந்து அவரது நினைவு தினத்தை அனுஷ்டிக்கவில்லை. இன்று முதலாளித்துவ உலகத்தையே நடுநடுங்கச் செய்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கான காரணம் இந்த முதலாளித்துவப் பொருளாதார முறையே என்று அனைவரும் ஒப்புக் கொள்ளுகின்றனர்.

ஆனால் அக்கருத்தை 150 ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்திக் கூறிய மாமேதை மார்க்ஸின் நூல்களை படித்தறியாமலேயே சோவியத் சோசலிசப் புரட்சியையும் அது குறித்த கருத்துக்களையும் தெரிந்து கொண்டிருந்த அளவிலேயே 1925-ம் ஆண்டு வாக்கிலேயே முதலாளித்துவ அமைப்பு பல தீர்க்க முடியாத சமூகப் பிரச்னைகளை உருவாக்கவல்லது என்பதை அறிந்தவராக பகத்சிங் இருந்தார்.

பகத்சிங் உயர்த்திப் பிடித்த உண்மையான மதச்சார்பின்மைக் கண்ணோட்டம்

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மதச்சார்பின்மை என்பதை தனது முக்கிய முழக்கமாக முன் வைக்கிறது. பல சமரசங்களுக்கும் திரிபுகளுக்கும் ஆட்பட்டு நிலைகுலைந்த நிலையில் காங்கிரஸ் கட்சியால் முன்வைக்கப்படும் அந்த முழக்கத்தை அப்பழுக்கற்ற விதத்தில், உண்மையான மதச்சார்பின்மை மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியை அங்கீகரிக்காமல் இருக்கும் தன்மையிலேயே உள்ளது என்ற அடிப்படையில் உயர்த்திப் பிடித்தவர் பகத்சிங் ஆவார்.

மார்க்ஸின் மதம் குறித்த கருத்தான மதம் இதயமற்ற இந்த உலகின் இதயமாக உள்ளது; ஆன்மாவற்ற இந்த சமூக அமைப்பின் ஆன்மாவாக மக்களை பார்க்கச் செய்கிறது. அது மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வைக்கும் அபினி செய்யும் வேலையை செய்கிறது என்ற கருத்தினை ஒத்த கருத்தினை 'நான் ஏன் நாத்திகவாதி' என்ற தனது புகழ் பெற்ற கட்டுரையில் உயர்த்திப் பிடித்தவர் பகத்சிங். அவர் இன்று மக்களை வாட்டிவதைக்கும் வகுப்புவாத ஜாதிய பிரச்னைகளுக்கு எதிராக காந்தியவாத சமரசத்திலிருந்து அடிப்படையில் விலகி நின்ற ஒரு உயர்ந்த மக்கள் ஒற்றுமைக் கண்ணோட்டத்தை உயர்த்திப் பிடித்தார்.

இவ்வாறு இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவச் சுரண்டலின் விளைவான பொருளாதார நெருக்கடி, மதச்சார்பின்மை, வகுப்புவாத எதிர்ப்பு, ஜாதிய ஒழிப்பு ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு இன்றும் சமூகத்திற்கு வழிகாட்ட வல்லதான கருத்துக்களை பகத்சிங் கொண்டிருந்தார். இவையே பகத்சிங்கை நாம் நினைவு கூறுவதற்கும் அவரை உயர்த்திப் பிடிப்பதற்குமான முழு முதற்காரணங்களாகும்.

பகத்சிங்கின் கருத்து வேர்களே உண்மையான கம்யூனிஸ்டுகளை உருவாக்கவல்லவை

இந்திய மண்ணில் சுயசிந்தனையுடன் மக்களின் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து பார்த்து அத்தனை இளம் வயதில் அதற்கான தீர்வு கம்யூனிசமே என்பதை உணர்ந்து அதன் நடைமுறைக்காக பாடுபட்ட ஒரு மாபெரும் வழிகாட்டி என்பதாலும் இந்திய மண்ணில் அவரது கருத்துக்களை வேரெனப்பற்றி ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்தெடுப்பதே- கம்யூனிசம் ஒரு அந்நிய கண்ணோட்டம் என்ற கருத்து அர்த்தமற்ற விதத்தில் பெரிய அளவில் முன் வைக்கப்படும் இன்றைய சூழ்நிலையில் - மிகச் சரியானதாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே சி.டபிள்யு.பி. பகத்சிங்-கை நினைவு கூர்கிறது.

வளர்க்கப்படும் பாஸிசம் - தகர்க்கப்படும் தார்மீக முதுகெலும்பு

இன்று ஒருபுறம் இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசு எந்திரம் மக்கள் இயக்கங்களின் மேல் பாசிஸ அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விடுவதையும், மறுபுறம் சமூக மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் தன்மை வாய்ந்த உழைக்கும் வர்க்கத்தின் தார்மீக முதுகெலும்பினை முறிக்கும் விதத்தில் வாக்கிற்கு பணம் கொடுக்கும் போக்கு வளர்ந்து வருவதையும் பகத்சிங்கின் வழித்தோன்றல்களாகிய நாம் தீவிரமாகக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசின் அடக்குமுறைக்கு நீதிமன்ற வளாகங்களும், கல்லூரி வளாகங்களும் கூட தப்பவில்லை. அதற்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் மீது நடந்த தாக்குதல்களும் மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்களுமே சான்று.

ஆளும் முதலாளி வர்க்கம் அன்னிய முதலீட்டைக் கவர்வதற்காக தொழில் அமைதி நாட்டில் முழுமையாக நிலவுவதாகக் காட்ட விரும்புகிறது. அதற்காக தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்ட விரும்பிய குர்காவுன் தொழிலாளர்கள் காட்டுத் தனமாக அடித்து நொறுக்கப்பட்டனர்.

அதே பாணியில் தமிழக அரசும் மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் போராட்டங்களின் மீது பாசிஸத் தாக்குதல்கள் தொடுப்பதன் மூலம் சுமங்கலித் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் சுரண்டப்படும் பெண் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அது போன்ற பல்வேறு தரப்பு மக்களின் பிரச்னைகளுக்காகவும் உழைக்கும் வர்க்க இயக்கம் ஏதாவது தோன்றினால் அது அத்தகைய கடும் அடக்குமுறையைச் சந்திக்க நேரும் என்று காட்ட விரும்புகிறது.

இன்று இடதுசாரி, கம்யூனிஸ்ட் என்ற பெயர்களில் நமது நாட்டில் செயல்படும் அமைப்புகள் மக்கள் இயக்கங்களின் பங்கும் பகுதியுமாகத் தேர்தல்களைப் பார்ப்பதை விடுத்து தேர்தல் முறையின் பங்கும் பகுதியுமாகத் தங்களை ஆக்கிக் கொண்டுவிட்டன. அதனால் உழைக்கும் மக்களின் விடுதலைப் பாதையில் நடைபோடும் தன்மை வாய்ந்த இயக்கங்கள் நடத்தத் திராணியற்றவையாக அவை ஆகிவிட்டன. இந்த நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு அனைத்து வகை மக்கள் போராட்டங்களையும் அடக்கு முறையின் மூலம் எதிர்கொள்பவையாக இன்றைய மத்திய மாநில அரசுகள் ஆகிவிட்டன.

இந்த நிலையை மாற்ற பகத்சிங்கின் பாதையில் நடைபோட்டு மக்கள் இயக்கப்பாதையில் பயணிப்பதே நம் கடமை. அதற்கான உறுதி ஏற்கும் தினமாகவே பகத்சிங் நினைவு தினத்தை நாம் அனுஷ்டிக்கிறோம் என்று கூறி தனது உரையை தோழர் ஆனந்தன் நிறைவு செய்தார்.

பார்த்த மாத்திரத்திலேயே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் செய்த தியாத்தின் உன்னத உயரத்தை உணர்த்தும் வகையில் அற்புதமாக அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையும், உரையாற்றிய அனைவருமே நடைமுறை அரசியலை பேசுகிறோம் என்ற பெயரில் நாய்ச் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் தியாக தினத்தின் மாண்பு சிறிதளவும் குறையாத விதத்தில் தரமாக தங்களது வாதங்களை முன்வைத்ததும் கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றிற்கும் மேற்பட்ட மக்களையும், ஆங்காங்கே நின்று உரைவீச்சுக்களை செவிமடுத்துக் கொண்டிருந்த மற்ற பலரையும் வெகுவாகக் கவர்ந்தது.

Pin It