எந்த ஒரு கலைப்படைப்பும் தன் காலகட்டத்திற்கும், அக்காலகட்டத்தின் சமூக வாழ்க்கைக்கும் உண்மையானதாக இருந்தால் அது கதையாக இருக்கும் போது அதை எழுதியவரோ அல்லது திரைப்படமாக இருந்தால் அதை எடுத்தவரோ கூட வெளிப்படையாக கூற முன்வராத பல விஷயங்களை படிப்பவர் அல்லது பார்ப்பவர் மனதில் ஏற்படுத்துவதாக அமையும்.

இதனால் அது கதையாக இருந்தால் அதை படிப்பவரை பலமுறை படிக்கத் தூண்டும். அவ்வாறு அவர் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அவர் முதலில் படித்த போது அவருக்கு புலப்படாத பல்வேறு புதிய விஷயங்கள் அடுத்தடுத்து படிக்கும் போது அவருக்கு புலப்படும். அதைப் போலவே அது திரைப்படமாக இருந்தால் அதைப் பார்ப்பவரை மீண்டும் மீண்டும் அது பார்க்கத் தூண்டும்; ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அதற்கு முன்பு அவர் பார்த்த போது அவருக்கு தோன்றாத பல புதிய விஷயங்களை அவர் மனதில் அது தோற்றுவிக்கும். இதைத் தான் ஒரு உண்மையான கலைப்படைப்பு எப்போதும் மனதிற்கு மகிழ்வூட்டுவதாக இருக்கும் என்று ஆங்கில கவிஞர் கீட்ஸ் கூறுகிறார்.

ஆனால் அக்கூற்று எதிர்பாராப் புத்துணர்ச்சி தரும் போக்கு (Romanticism) ஆங்கில இலக்கிய உலகில் கோலோச்சிய காலத்தில் முன் வைக்கப்பட்டது. ஆனால் இன்று அது போல் வீர, தீர செயல்கள் பெரிதாக நிகழவும் அல்லது நிகழ்த்தப்படவும், அழகுணர்வு மிகுந்து விளங்கவும் ஏற்ற சமூகப் பின்னணி இல்லை. சூதும், ஏமாற்றும், வலங்களும் நிறைந்து ததும்பும் இன்றைய காலகட்டத்தில் ஒரு கலைப்படைப்பு எப்போதும் மகிழ்வூட்டுவதாக உள்ளது என்று கூறுவது சரியானதாக இராது. இன்று ஒரு உண்மையான கலைப்படைப்பு படிப்பவர் அல்லது பார்ப்பவர் மனதை எப்போதும் பாதிப்பதாக வேண்டுமானால் இருக்கும்.

அந்த வகையில் தற்போது தமிழக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘சுப்ரமணியபுரம்’ என்ற தமிழ் திரைப்படம் பார்த்தவர்களயே மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் தன்மையதாகவும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதுப்புது இடங்களில் மனதை பாதிக்க வைப்பதாகவும் உள்ளது. சரியாகச் சொன்னால் பார்ப்பவரை ரசிக்க வைக்கும் தன்மையதாக மட்டுமல்லாமல், வரும் அதில் மானசீகமாக பங்கேற்க, ஈடுபட வைக்கும் தன்மையதாகவும் உள்ளது. படத்திற்கு ஒவ்வொரு முறை செல்லும் போதும் நம்மை போலவே பல முறை பார்த்தவர்கள் மீண்டும் வந்துள்ளனர் என்பதை அறிய முடியகிறது. ஏனெனில் குறிப்பிடத்தக்க காட்சிகள் வருவதற்கு முன்பே ரசிகர்களின் கைதட்டல்களும் உற்சாக கூச்சல்களும் ஆரம்பித்து விடுகின்றன.

பழைய காலங்களை குறிக்கும் படங்கள் எத்தனையோ தமிழில் வந்துள்ளன. ஆனால் இந்த படத்தைப் போல் அத்தனை உண்மையாக அக்கால கட்டத்தை சித்தரித்து பார்ப்பவர்களை காலகட்டத்திற்கே இழுத்துச் செல்லும் படம் எதுவும் நாமறிந்த அவரை இதுவரை வந்ததில்லை. அத்துடன் அக்காலகட்டத்தின் ரசியல், இளஞர்களின் மனப்போக்கு, மக்கள் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகள் என அக்கால சமூக வாழ்க்கை முழுவதுமே நிஜமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் அது நாம் கீழே விளக்கமாக முன்வைத்துள்ள விஷயங்கள் எதையுமே வலியுறுத்தி சொல்வது போல் வெளிப்படையாக தெரியப்படுத்தவில்லை. ஆனால் அவற்றை அழுத்தமாக மனதில் பதிக்கிறது.

அன்று இருந்த அரசியல்வாதி இவன், அன்று இருந்த இளஞர்கள் இவர்கள், அன்று நிலவிய சமூக சூழல் இது. இதை உங்கள் முன் உண்மையுடன் வைப்பது மட்டுமே என் வேலை என்ற பாணியிலேயே கதை படமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இத்தனை யதார்த்தத்துடன் நாம் றிந்த அவரை எந்த தமிழ் படமும் எடுக்கப்பட்டதில்லை. உண்மையான ஒரு திரைப்பட தயாரிப்பில் எந்தெந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமோ அந்த விஷயங்களில் முழுக்கவனம் செலுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் பாத்திரங்களும், வசனங்களும் இலக்கணம் வகுத்தாற் போல் மைந்துள்ளன. மேலோட்டமாகப் பார்க்கும் போது முதல் பாதி முழுவதும் நகைச்சுவைக் காட்சிகளாகவும், இரண்டாம் பாதி முழுவதும் கொலை வெறிக் காட்சிகளாகவும் இருப்பதாக பலருக்கும் தோன்றும். ஆனால் அடுத்தடுத்து பார்க்கும் போது படம் வெளிப்படையாக எதையும் சொல்வது போல் தோன்றாவிடினும் அது க்காலகட்டத்தின் கண்ணாடியாக விளங்குவது வெளிப்படும்.

விடுதலைப் போராட்டக் காலம் உருவாக்கிய தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு அரசியல் சீரழிந்து சின்னாபின்னமாகி, அரசியல் ஒரு தொழில் மட்டும் அல்ல; அது மிகவும் லாபகரமான தொழில் என்றாகிவிட்ட காலகட்டத்தை இப்படம் சித்தரிக்கிறது. தொழில் ஆகிவிட்ட எதிலும் போட்டி இருக்கத்தானே செய்யும். அந்த போட்டிகள் படத்தில் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

1950களில் அரசாங்க வேலை செய்யும் ஒருவர் அரசியலில் ஈடுபட விரும்பும் தன் சகோதரனைப் பார்த்து உத்தேசமாக என்ன கூறுவார்? ‘இது ஒரு தேவையில்லாத வேலை; உருப்படியாக ஏதாவது ஒரு வேலையையோ அல்லது தொழிலையோ பார்க்க முயற்சி செய்’ என்று தான் கூறுவார். ஆனால் இப்படத்தில் வரும் கதாபாத்திரம் தன் இளைய சகோதரர்களைப் பார்த்து ‘கவுன்சிலராக இருந்தவன் அடுத்து கட்சிக்கு தலைவராகலாமா, மேயராகலாமா அல்லது டெபுடி ஆகலாமான்னே பார்க்கனும். அதை விட்டு விட்டு வெட்டுவேன், குத்துவேன் என்று பேசக்கூடாது. நமக்கு பதவிதான் முக்கியம்’ என்று கூறுகிறார். இது 80களில் அரசியல் எத்தனை அப்பட்டமான காரியவாதமாக ஆகிவிட்டது என்பதை ழகாக கோடிட்டு காட்டுகிறது.

சகோதரன் மட்டுமல்ல அந்த முழு நேர அரசியல்வாதியின் வாழ்க்கைத் துணைவியும் தன் கணவருக்கு மாவட்ட தலைவர் பதவி கிட்டாத வேளையில் மிகுந்த ஆதங்கத்துடன் கூறி அதனால் அடிவாங்கும் வேளையில் பேசும் வசனமும் குறிப்பிடத்தக்கது. ‘இவரும் என்னைக்கோ ஒரு நாள் கவுன்சிலராக இருந்துட்டாரு; அன்னையிலிருந்து இன்னிக்குவரைக்கும் நான் மேயராவேன், தலைவராவேன்னு சொல்லிக்கிட்டு திரியிறாரு. ஆள இல்லாத ஊரில் என் வீட்டுக்காரரும் பண்ணையார் என்று நானும் சொல்லித் திரிய வேண்டியதுதான்’ என்று ஆதங்கத்துடன் கூறுவதில் தொடங்கி, அந்த அரசியல்வாதிக்கு மாவட்ட தலைவர் பதவி கிடைத்தபின் வாயெல்லாம் பல்லாக, தன் தகப்பனாரிடம், பதவி பெற்று வரும் தன் கணவனை வரவேற்க தன் தாயாருடன் வந்து சேர கோருவது வரையிலான வசனங்கள் அரசியல் எவ்வாறு ஒரு குடும்பத் தொழிலாக, குடும்பத்திலுள்ள னைவரின் ஈடுபாட்டோடும் வளர்ந்து வரும் தொழிலாக மாறிவிட்டது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது.

அரசு உத்தியோகத்தில் ஒருவன், அரசியலையே முழு நேர தொழிலாக கொண்ட மற்றொருவன், அவனுடைய பதவியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி சூழ்ச்சியுடனும் தந்திரத்துடனும் கீழிறங்கி செயல்பட்டு பண பலத்தையும் ஆள் பலத்தையும் சேர்ப்பதையே தொழிலாக கொண்ட மற்றொருவன் என்ற அடிப்படையில் பணம், பதவி இவை அனைத்தையும் நேர்த்தியாக ஒருங்கிணைத்து அதிகபட்ச சம்பாத்தியத்தை உறுதி செய்யும் ஒரு கூட்டுத் தொழில் நிறுவனம்போல் குடும்பங்கள் மாறிவிட்டதை, பழைய குடும்ப மதிப்புகள் அழிந்தொழிந்து பணத்தை அடிப்படையாக கொண்ட புதிய சீரழிவு தலைதூக்கி விட்டதை ஒரு குறி டையாளமாக இப்படம் முன்வைக்கிறது.

இதற்கு நேர்மாறாக பழக்கம், நட்பு இவற்றிற்காக எந்தவகை காரியார்த்தமான பொருளாதார ரீதியான பலனும் கருதாது உயிரையும் கொடுக்க முன்வரும் ஒரு சாதாரணமான மனநிலை கொண்ட இளஞர் குழுவும் தன் சாதாரணமான ஆனால் ஆர்ப்பாட்டமின்றி உள்ளீடாக நிறைந்திருக்கும் மனிதப் பண்பும் முன்னிறுத்தப்படுகின்றன. ஏதாவது ஒரு வேலையை செய்யலாமே என்று கதாநாயகனின் தாய் முதல் அவரது நண்பனின் அண்ணி அவரை அனைவரும் கூறுவதிலிருந்தே இதோ இருக்கிறது வேலை இதை நீ செய்யலாம் என்று கூறும் அளவிற்கு நிச்சயமான வேலைவாய்ப்பு எதுவும் இல்லாத சமூக சூழல் கண் முன் நிறுத்தப்படுகிறது.

அச்சூழலுக்கு இரையாகி ஏதோ வேளா வேளக்கு ஓரளவு சாப்பிட வாய்ப்பிருந்தால் போதும், ஒன்றாக சேர்ந்து திரிந்து ஒருவருக்கு வரும் பிரச்னைகளில் மற்றவர் தலையிட்டு வாழும் நெருக்கமான வாழ்க்கை; கதாநாயகனின் தாய் ‘நான் உனக்குமட்டும் தாயல்ல உன் நண்பர்களாக இருக்கும் இந்த ஐந்து பேருக்குமே தாய்தான்’ என்றுணர்த்தும் போது அவரிடம் நிரம்பி வழியும் தன்னலத்தைத் தாண்டிய தாயுள்ளம்; அண்ணன் பதவி எதுவும் வகிக்காத சூழ்நிலையிலும் கூட, தங்களை தன்னுடன் வைத்துக் கொள்வதற்காக ரசியல்வாதியின் கடைசி தம்பி போலிஸாரிடம் அவனே போட்டுக் கொடுத்து தன் பின்னர் அண்ணனின் அதிகாரம் மற்றும் தன் கரிசனம் ஆகியவற்றால் அவர்களை மீட்பது போல் பாவனை செய்யும் சூழ்ச்சிகள் போன்றவற்றை நுணுகிப் பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ முயலாத அவர்களின் பெரும்போக்கான பேதமை; ஆனால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை அறியும் வேளையில் பழிவாங்கத் துடிக்கும் ஆத்திரம் கலந்த ஆவேசம்; உருப்படியில்லாத பிள்ளைகள் என்று உலகம் கருதும் காலிப்பையன்களிடம் நிறைந்து ததும்பும் ஆனால் பார்வையுள்ளவர்களுக்கு மட்டுமே புலப்படும் மகத்தான மனிதப் பண்புகள்.

அந்த மனிதப்பண்புகளை அதாவது சீரழிந்த அரசியல் கராதிப்படியான பலவீனங்கள் பலவற்றில் ஒன்றான பழக்கத்திற்காக எதையும் செய்வது என்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் அரசியல்வாதியின் தம்பி, தனது காரியத்திற்காக தன் அண்ணன் மகளின் காலில் விழுந்து தன் மூலம் உணர்ச்சி வேகத்தை தூண்டி தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் (Emotional Blockmail) செயலில் ஈடுபட்டு தனது உச்சகட்ட துரோகத்தை ரங்கேற்றும் செயல் கேடுகெட்டதாக மாறிவிட்ட அரசியலின் போக்கை சுட்டிக்காட்டுகிறது.

80களில் அரசியல்வாதிகள் வழியில் வந்த இன்றைய அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகள் அதைப்போல் பலமடங்கு திகரித்துள்ளன. ஆனால் அந்த அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு இரையாகும் அப்பாவி இளஞர்களிடம் மட்டும் நம்மை இவன் ஏமாற்றிவிட்டான் இவனை பழிவாங்க வேண்டும் என்ற அந்த மனநிலை அறவே இல்லாத சூழ்நிலை வந்துவிட்டது. பணம், பதவி இவை தரும் பலம் எதையும் பொருட்படுத்தாது துரோகத்திற்கு தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என்று ன்றிருந்த எதையும் பொருட்படுத்தாத ஆவேசம் மட்டும் இன்று ஏறக்குறைய இல்லாமல் போய்விட்டது.

அது மனதை பாதிப்பதனாலேயோ என்னவோ ‘எப்படியெல்லாம் இருந்த மதுரையே இன்று இப்படி ஆகிவிட்டாயே’ என்று மனம்விட்டு புலம்பத் தோன்றுகிறது. இந்த உணர்வு நமக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் பலருக்கும் இருப்பதை படத்தில் வரும் சில வசனங்களுக்கு இருக்கும் வரவேற்பு உணர்த்துகிறது. ‘கூலிக்காகவோ, ரோஷத்திற்காகவோ என்று இல்லாமல் பழக்கத்திற்காக கொலை செய்வது நம் ஊரில் மட்டும் தாண்டா’ என்ற வசனம் கைதட்டலால் திரையரங்கையே திரச் செய்கிறது.

ஒரு பெண்ணின் சகவாசத்தை தன் நண்பன் வைத்திருப்பதில் அடிப்படையில் நாயகனின் நண்பனுக்கு உடன்பாடு இல்லை. எனினும் தன் நண்பனுக்கு அது மகிழ்ச்சியை தருகிறது என்ற எண்ணத்தில் தானும் கமகிழும் ஒரு உன்னதமான நட்பு; அது வெளிப்படுத்தும் மறக்க முடியாத முகமலர்ச்சி; பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையைத் தருவதே காதல், இது போன்ற நிச்சயமற்ற எதிர்காலத்தை கொண்டுள்ள இளைஞனிடம் கதாநாயகிக்கு இருப்பது ஒருவகையான கற்றுக்குட்டித் தனமான கவர்ச்சியே என்ற வளது கல்லூரி தோழியின் கருத்தை, நிலவும் மித மிஞ்சிய குழப்ப நிலையிலும் கூட தூக்கி எறிந்து அத்தகைய காரியவாதக் காதலைவிட காரியவாதம் எதுவுமின்றி சிறுவயது முதல் அரும்பி வளர்ந்த (அவள் கூறும்) கற்றுக்குட்டி தனம் எவ்வளவோ மேல் என்பதை உணர்த்துவது போன்ற ரசமான காட்சிகள்;

அதே சமயத்தில் ‘நான் செத்தேனா அது என்னோட போயிரும். ஆனா அவன் ஒருத்தன் உயிரோட இருந்தான்னா என்ன மாதிரி இன்னும் ஆயிரம் பேரை நாசமாக்கிடுவான்’ என்று கதாநாயகன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு கதாநாயகியிடம் அவளது சித்தப்பா பற்றி கூறுவதையும், ‘அம்மா என்னடா பன்னுது, அவன் வரலியான்னு கேட்டிச்சா; நாலு காசு சம்பாதிக்கலேன்னாலும் சந்தோசமாத்தானடா இருந்தோம். பழக்கத்திற்காக பழக்கத்திற்காகன்னு சொல்லியே வாழ்க்கையைப் பாழாக்கிட்டோமேடா’ என்று கதாநாயகனின் நண்பன் புலம்பும் கடைசி காட்சியையும் பார்க்கும்போது பார்ப்பவருக்கு உருவாகும் நெஞ்சத்தை கசக்கிப் பிழியும் சோகம் என அருமையான காட்சிகளை மிகவும் இயல்பாக படத்தில் இயக்குனர் கொண்டுவந்திருக்கும் அற்புதம்;

சூழ்நிலைக்கும், சூழ்ச்சிக்கும் இரையாகி தன் காதலனையே காட்டிக்கொடுக்கும் கதாநாயகி அவன் பேசுவதற்கெல்லாம் அழுகையை மட்டுமே பதிலாக தருகிறாள். அவளால் அந்நிலையில் அதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது. ஏனெனில் அவள் ஒரு பெண், சூழ்நிலையின் கைதி. படம் பிரதிபலிப்பது இந்த யதார்த்தத்தையே. ஆனால் அது பார்ப்பவர் மனதில் முன்னிறுத்துவது யதார்த்தத்தை மட்டுமல்ல; பெண்ணினத்தின் நிர்க்கதியான நிலையினையும் சேர்த்துத்தான்.

கடைசியில் அந்த அரசியல் குடும்பம் காட்டிக் கொடுத்தவனையே தனது அரசியல் செல்வாக்கால் கொலையாளி ஆக்கி 27 ஆண்டு கால சிறைத்தண்டனை அனுபவிக்க வைத்திருப்பது பணபலத்தால் சாதிக்கப்படும் சூதின் சிகரம். அது போன்ற ஒரு விஷயத்தை இத்தனை ரத்தினச்சுருக்கமான வசனங்களின் மூலமும் கொண்டுவர முடியும் என்று காட்டும் இயக்குனரின் திறன்; உண்மையான குற்றவாளியான அரசியல்வாதி படிப்படியாக மக்களின் பார்வையில் மட்டுமல்ல; கொலையுண்ட கதாநாயகன் மற்றும் அவன் நண்பனின், நண்பர்களின் பார்வையிலிருந்தும் தப்பி விடும் கொடுமை. துரோகி என்ற அடிப்படையில் காட்டிக்கொடுத்த காசியே கடைசியில் அக் கூட்டத்தில் மீதம் இருக்கும் இருவருக்கும் பகைவனாகிவிடும் பரிதாபம். ஒட்டு மொத்தத்தில் மிகக் குறைந்த உயிரிழப்புடன் தப்பி விடுகிறது அந்த அரசியல் குடும்பம். அது அடையாள பூர்வமாக இன்றைய அரசியல் இப்படித் தண்டனைகளுக்கு தப்பிய அரசியல்வாதிகளைக் கொண்டதுதான் என்ற சூழ்நிலையை தலையில் சம்மட்டியால் அடித்து உணர்த்துகிறது.

எவ்வாறு அன்பு ததும்பிய ஒருவருக்கென மற்றவர் வாழும் ஒரு கூட்டுக் குடும்ப வாழ்வு அறவே நிலவாமல் போன இன்றைய நிலையில் துபோன்ற ஒரு குடும்பத்தின் சித்தரிப்பை திரைப்படத்திலாவது பார்த்து திருப்தி அடைவோம் என்று நம் மக்கள் ‘ஹம் ஆப் கே ஹைன் கோன்’ போன்ற படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கிறார்களா, அதைப் போலவே மதுரையில் ஒரு காலத்தில் இருந்து இன்று அவ்வூர் இளஞர்களிடம் இல்லாமல் போய்விட்ட பழக்கத்திற்காக உயிரையும் கொடுப்பது, பணம் காசு கருதாது நட்பிற்காக எந்த சிரமத்தையும் மேற்கொள்வது, காரியவாதமற்ற கிடைத்ததை வைத்து அதிக அளவு சந்தோஷமாக வாழ்வது, இவை அனைத்திற்கும் மேலாக துரோகம் செய்தவன் எத்தனை பண பலம், அதிகார பலம், செல்வாக்கு படைத்தவனாக இருந்தாலும் அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் என்று கருதி அவனிடமிருக்கும் உலகரீதியான அனைத்து செல்வாக்குகளையும் துச்சமென தூக்கியெறிந்து அவனை பழிவாங்கி பாடம் புகட்டுவது இவை அனைத்தையும் பார்க்கும் வாய்ப்பு இப்படத்தின் மூலமாவது கிட்டுகிறதே என்பதுதான் இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க இளைஞர்களைத் தூண்டுகிறது.

வாசகர் கருத்துக்கள்
saravanan.p
2008-12-30 02:26:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

this article wonderful sir, i saw this movie more then 5 times .it is wonderfulmovie then your explanation of the movie it is super sir

Pin It