maatruveli_nov13

தொடர்பு முகவரி: பரிசல் புத்தக நிலையம், எண்: 96 J பிளாக், நல்வரவுத் தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி,
அரும்பாக்கம், சென்னை - 106.
செல்பேசி: 93828 53646, மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டு இறுதியில் கேரள வாழ்க்கை பற்றிய தேடல், இயல்பாகவே புதிய பொருளாதாரக் கொள்கைபற்றியதாக அமைந்துவிடும். 1991 ஜூன் இறுதியில் ஆட்சிக்குவந்த பி.வி.நரசிம்ம ராவ் அமைச்சரவை புதிய பொருளாதாரக் கொள்கையை நடை முறைப்படுத்தியது. சமாளிக்க முடியாத பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிப்பதற்காக அந்த அரசு சர்வதேச நிதிநிறுவனம், உலக வங்கி இவற்றிடமிருந்து மிகப்பெருந்தொகையைக் கடன்பெற்று, அந்த நிறுவனங்களின் சட்டதிட்டங்களுக்கு உடன்பட்டு பொருளாதாரத் தாராளமயமாக்கம், உலகமயமாக்கலை நடைமுறைப்படுத்த துணிந்தது. அன்று நடைமுறைப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கைகள்தான் புதியபொருளாதாரச் சீர்திருத்தங்கள் எனப்படு கின்றன. பொருளாதாரத் தாராளமயமாக்கம், உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம், சந்தைப் பங்கீட்டுமுறை, தகவல் தொடர்புக் கல்விப் பயன்பாடு முதலியன இப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் அடிப்படைக் கூறுகள்.

முதலீடு, இறக்குமதி, உற்பத்தித் துறைகளில் இருந்துவந்த சில கட்டுப்பாடுகளைக் கைவிடுதலே பொருளாதாரத் தாராளமயமாக்கம். இது சுதந்திரமான சந்தைக்கு வழியமைத்தது. இத் தாராளமயமாக்கக் கொள்கை காரணமாகவே நாட்டின் அரணமைப்புக்கு அவசியமான, ராஜதந்திர முக்கியத்தும் வாய்ந்த தொழில்கள்தவிர ஏனையவற்றுக் கான தொழில் உரிமம் 1991இல் கைவிடப்பட்டது. இந்தியாவில் தொழில்முனைவில் 51%வரை அந்நிய முதலீடு அனுமதிக்கப் பட்டது.பல பொதுத்துறை நிறுவனங்களில் பெருமளவிலான தனியார் முதலீடுகள் குவிந்தன.

உலகப் பொருளாதாரமுறையுடன் இந்தியப்பொருளாதாரத்தின் இணைவாதலே உலகமயமாக்கம். வணிகம்,தனியார் தொழில் முனைவைத் தாராளமயமாக்கி இந்தியப் பொருளாதாரமுறை உலகமயமாக்கப்பட்டது. இந்தியத் தொழில்கள் உலகளாவிய மையநீரோட்டத்தில் தீவிர வளர்ச்சியடைந்து உற்பத்தி வளர்ச்சியும் போட்டியும் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பை உலகமயமாதல் முன் வைத்தது.அதற்காக ரூபாயின் மதிப்பைக் குறைத்தும் இறக்குமதிக் கான சுங்கவரியைக் குறைத்தும் அந்நிய முதலீடுகளுக்கு எந்தக் கட்டுப்பாடுமின்றி வாசல் திறந்தளிக்கப்பட்டது. வெளிநாட்டுத் தொழில்நுட்பக்கல்வி முன்னுரிமை பெற்றது. இப்படியாகப் பன்னாட்டுக் குத்தகைக் கம்பனிகள் இந்தியாவில் காலூன்றும் வாய்ப்பைப் பெற்றன.

அவர்கள் வளர்ச்சிபெற்ற நாடுகளின் திறன்மிகு தொழிற்கல்வியை இந்தியாவில் அறிமுகம் செய்தனர். உலகமயமாதல் காரணமாக நமது உற்பத்திமுறையின் முன்னுரிமை ஒழுங்கு சரிந்தது. செல்வந்தர்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களும் ஆடம்பரப்பொருட்களும் உற்பத்தியில் முன்னுரிமை பெற்றன.அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட் களால் சந்தை நிறைந்தது. பெரும்பான்மையினரான ஏழைபாளை களின் வாழ்க்கைக்கு அவசியமான உணவுப்பொருள் மற்றும் பண்டங்களின் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை இல்லாமல் போனது. வேளாண்மையும் உலகமயமாக்கப்பட்டது. இன்றியமை யாததாகிய அரிசி உட்பட்ட உணவுப்பொருட்கள் கூட ஏற்றுமதி செய்யப்பட்டு அவசியமற்ற பொருட்கள் (உதா:பாமாயில் போன் றன) இறக்குமதி செய்யப்பபட்டது. மிகுநிலை வளர்ச்சியடைந் திருந்த தொழில்நுட்பம் உற்பத்தியைப் பெருமளவு குவித்தது. இந்தியச் சந்தையில் பன்னாட்டுக் குத்தகையின் இருப்பு வலுப்பெற்றது.

உலகமயமாதலின் விளைவாக உலகம் முழுக்க தனியார்மய மாக்கம் விரைவடைந்தது.பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாயின. வங்கி, காப்பீடு, தகவல்தொடர்பு முதலிய துறைகளில் தனியார் நிறுவனங்கள் நுழைந்தன. பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்திய சீர்திருத்தங்கள் நாட்டின் பொதுநலனைவிடத் தனியார் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்குவதாக அமைந்தன.

நாட்டு வளர்ச்சியை முன்னிறுத்தித் தீட்டப்பட்ட திட்டங்கள் தவிர்த்துக் கட்டுப்பாடற்ற புதிய சந்தைமுறையே சந்தைப்பங்கீட்டு முறை. இம்முறையை நடைமுறைப்படுத்தவே சர்வதேச நிதி நிறுவனமும் உலகவங்கியும் பரிந்துரைத்த மாற்றங்கள் நடை முறைப்படுத்தப்பட்டது. இம்மாற்றங்களை ‘அமைப்பு சார் ஒழுங்குகள்’ என்றனர். நுகர்வோரின் வாங்கும்திறனை மையமிட்ட உற்பத்திப் பொருட்களைப் பெரும்நிறுவனங்கள் சந்தையில் குவித்தன. சொகுசுக் கார்கள்,அலைபேசிகள்,மதுவகைகள் எனச் செல்வந்தர்களால் வாங்கப்படுகிற பொருட்கள் பெருமளவில் உற்பத்தியானது. விளம்பர,நேரடி ஆர்வப்படுத்தல்கள், தற்காலிக கடனுதவிகள் மூலமாக நடுத்தரமக்களும் இச்சந்தையின் நுகர்வோராக மாற்றப்பட்டனர். பொதுமக்களுக்குத் தேவையான விவசாயக் கருவிகள் உற்பத்தி, சுத்தமான குடிநீர் வினியோக வாய்ப்புக்களைப் பெருக்குதல் போன்ற அடிப்படைத் திட்டங்கள் அரசு கைவிட்டதால் பொதுமக்கள் வாழ்வு பெரும் சிக்கலுக் குள்ளானது.

கடந்த இருபது ஆண்டுகளில் அறிவியல்தொழில்நுட்பத் துறையில் நிகழ்ந்த வியப்புக்குரிய கண்டுபிடிப்புகள் மாபெரும் தகவல் வெடிப்பை ஏற்படுத்தியது. கணினி,செயற்கைக்கோள் பயன்பாடு தகவல்தொடர்பியலில் புரட்சியை ஏற்படுத்தியது. ஆரம்பத்திலிருந்தே தகவல்தொடர்பியல் கல்வியின் கட்டுப்பாட்டை முதலாளித்துவ நாடுகள் கையகப்படுத்தியிருந்தன. அவர்கள் வெளியிடும் செய்திகளும் தகவல்களும் உலகின் மூலைமுடுக்குகள் வரைப் பரவின. உலகையே ஒரு கிராமமாக மாற்றிட தகவல்தொழில் நுட்பத்தால் இயன்றது. விளம்பரங்களின் வழி உற்பத்திப்பொருட் களை உலகின் அனைத்து சந்தைகளுக்கும் கொண்டு சென்று எளிதில் விற்பனை செய்ய பன்னாட்டு நிறுவனங்களால் இயன்றது. அறிவை யும் உண்மையையும் தம் தேவைக்கேற்ப வளைக்கவும் இருட்டடிப்பு செய்யவும் முதலாளிய நாடுகள் தகவல்தொழில் நுட்பத்தை எவ்விதக் கட்டுப்பாடுமின்றிப் பயன்படுத்துகின்றன. தகவல்தொடர் பியலின் வாய்ப்புக்கள் நமது நாட்டிலும் பலதுறைகளில் பயன் கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்து வதற்கான நெருக்கடி 1991இல் ஏற்பட்டதெனினும் அந்நிலை திடீரென உருவானதொன்றுமல்ல. பலகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பொருளாதாரக் கொள்கையின் பலனாகத்தான் அப்படியரு நெருக்கடி ஏற்பட்டது. உலக அரசியல் மாற்றங்கள் அதற்கு வலுவூட்டின.அம்மாறுதல்களின் பின்னணியில்தான் இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை மதிப்பிடமுடியும்.

1980களில் உலக அரசியல், பொருளாதார உறவுகளில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன. எண்பதுகளின் இறுதிக்குள் சோவியத் ருஷியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்தன. கம்யூனிஸ்ட் நாடுகளின் வீழ்ச்சி அமெரிக் காவைத் தன்னிகரற்ற வல்லரசாக்கியது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் படிப்படியாக உயர்ந்துவந்த அந்நாடு 1990களில் உலகத்தைத் தனது ஒற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் அமைக்கும் வல்லரசானது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் நலிவடைந் திருந்த ஐரோப்பிய நாடுகளிடமிருந்து ஆசிய, ஆப்பிரிக்க காலனிகள் ஒவ்வொன்றாக விடுதலையடைந்தன. காலனி ஆதிக்கத்தால் கொள்ளையடிக்கப்பட்ட அந்நாடுகள் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தன்னாட்சியைத் தன்னிறைவைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தன. அம்முயற்சிகளுக்கு ருசியாவும் பிறகம்யூனிஸ்ட் நாடுகளும் தயங்காமல் உதவிவந்தன.

சோவியத் யூனியனின் திட்ட மாதிரி களைப் பின்பற்றியே இந்தியாவும் ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கிக் கொண்டது. தொடக்ககாலத்தில் இந்தியாவின் தொழில் முயற்சிகளுக்கு சோவியத் யூனியன் பொருளாதார, தொழில்நுட்ப உதவிகள் வழங்கியது. ருஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அரசியல் மாற்றம் இந்தியா போன்ற நாடுகளின் அரசியல், பொருளாதாரத் துறைகளில் எதிர்மறையான பாதிப்பைச் செலுத்தியது. சேரிசேராக் கொள்கை பலமிழந்தது. ஐக்கிய நாட்டுச் சபை அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. உலகப் பொருளாதார ஒழுங்கை அமெரிக்கா கட்டுப்படுத்த தொடங்கியது இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் வளர்ச்சியை மிக மோசமாகப் பாதித்தது.

வளர்ச்சிப்பணிகளில் தொலைநோக்குப் பார்வையின்மையும் திட்டமிடுதலின் குறைபாடுகளும் ஆரம்பத்திலிருந்தே இந்தியப் பொருளாதார அமைப்பில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. அச்சிக்கல்களைக் களையும் பொருட்டு இந்தியா சர்வதேச நிதி நிறுவனத்திடமிருந்து 1981இல் கடன் வாங்கியது. சர்வதேச நிதிநிறுவனத்திடமிருந்து பெறும்கடன் நாட்டின் தன்னாட்சி, தன்னிறைவுக்குக் குந்தகம் விளைக்கும் ஒப்பந்தங்களில் சிக்கவைத்து விடும் என்ற புரிதலுடன் இந்திராகாந்தி அரசு கடன் பெறுவதைக் கைவிட்டது. ஆனால் 1985இல் ராஜீவ்காந்தி அரசாங்கம் சர்வதேச நிதிநிறுவனத்திடமிருந்து குறுகியகாலக் கடன்பெற்றது. 1991ற்குள் இந்தியாவின் அந்நியச் செலாவணிக் குறைவை எதிர்கொள்ளவிய லாத நிலை உருவானது. வி.பி.சிங், சந்திரசேகர் தலைமையில் அமைக்கப்பட்ட நடுவணாட்சிகளின் பின் 1991இல் ஆட்சிக்குவந்த பி.வி. நரசிம்மராவ் அரசு நாட்டில் நிலவிவருகின்ற பொருளாதார நெருக்கடியை நேரடியாக அறிவித்தது. இரண்டு வாரங்களுக்கு போதுமான அந்நியச்செலாவணி மட்டுமே அன்று அரசாங்கத்தின் கையிருப்பாக இருந்தது.

உலகச்சந்தையில் இந்தியாவின் நிலை மிக மோசமாக இருந்தது. அனைத்து நாடுகளும் இந்தியாவுக்குக் கடன் மறுக்கும் அவலநிலை உருவானது. 1990 நவம்பரில் உலகவங்கி இந்தியா அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் ரூபாயின் மதிப்பை 20%மேனும் குறைத்துக்கொள்ள வேண்டுமென அறிவித்தது. இவ்வறிப்பின் பின்னர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தமது முதலீடு, வைப்பு நிதிகளைத் திரும்பப்பெறத் தொடங்கினர். இதனால் அந்நியக் கடன் தவணைகளை, வட்டியை அடைக்கமுடியாத நெருக்கடி ஏற்பட்டது. நெருக்கடியை எதிர்கொள்ளவியலாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாக அறிவித்து பி.வி. நரசிம்மராவ் அரசு சர்வதேச நிதி நிறுவனம், உலகவங்கியிடமிருந்து பெருந்தொகையைக் கடன்வாங்கியது.

அந் நிறுவனங்களின் பரிந்துரைகளுக்கு உடன்பட்டு தாரளமயமாக்கமும், உலகமயமாக்க மும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியாவின் தன்னாட்சி, வளர்ச்சித்திட்ட இயக்கங்களைச் சீர்குலைக்கின்ற புதுப்பொருளா தாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஓராண்டிற்குள் பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் பெரும் விபத்து களை விதைத்த அந்நிகழ்வுக்கும் புதுப்பொருளாதாரக் கொள்கைக் கும் நேரடித் தொடர்பேதுமில்லை என்றாலும் தொடர்ந்துவந்த ஆண்டுகளில் நமது சமூக,பொருளாதார நிகழ்வுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மும்பை பங்குச்சந்தை நிறுவனக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்திய பிரிவினைக்காலத்தை நினை வூட்டும்படியான கலவரங்கள் ஏற்பட்டன. பாபரிமஸ்ஜித் நிகழ்வின் தொடர்ச்சியாகவே இக்கலவரம் கருதப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்ததுடன் மதச்சார்பின்மை குறித்த ஆட்சியாளர்களின் அறிக்கைகள் வெறும்வார்த்தைகளாகவே இருந்தன. மதரீதியான பிரிவினையைத் தூண்டிவளர்த்திட இந்நிகழ்வுகள் காரணமாயின.

உலகமயமாதலுக்கு முன்னரே ருஷ்யா,கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்து விட்டிருந்தன. மானுட விடுதலைக்கான தத்துவ அடிப்படையாகவும் நடைமுறைத் திட்டமாகவும் கருதப்பட்ட மார்க்சியத்தின் தோல்வி யாகவே இதை ஊடகங்கள் வருணித்தன. மூன்றாம் உலகநாடுகளின் சமூகக் கண்ணோட்டத்தை கம்யூனிஸத்தின் வீழ்ச்சி பெரிதும் பாதித்தது. தேசிய அளவிலான பேரியக்கங்களுக்கு மாறாக இன/வர்க்க,சமுதாய/சாதீய அளவிலான குழுக்களாக மனிதர்கள் பிரிவுபட மேற்கூறிய ஊடகச் சித்தரிப்பு உதவி செய்தது.

1991க்குப்பின் கேரளத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய கேரளத்தின் நவீனமாக்கத்தின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்வை யிட வேண்டும். அடிப்படையாக ஒரு வேளாண் சமூகமான கேரளத் தின் நவீனமாக்கம் சில தனிப்பண்புடையது. காலனியாதிக்கம் நிலவுடைமைச் சமூகத்தின் வாழ்க்கை ஒழுங்கையும் அதன் சமூக நிறுவனங்களையும் ஓரளவுவரை மாற்றியமைத்தது என்றாலும் அதன் சாதி, மத, சமுதாய எண்ணங்கள் முழுமையாக மாறவில்லை. மறுமலர்ச்சியின், விழிப்புணர்வின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டபோதும் ஓரளவு நிலவுடைமை மதிப்பீடுகளையும் தக்கவைத்துக் கொண்டுதான் நவீன கேரளம் உருவானது.

 நிலவுடமைச் சமூகத்தின் எச்சங்கள் நவீன கேரளச் சமூகத்திலிருந்து களையப்பெறவில்லை. முற்போக்குச் சிந்தனைகளையும் இயக்கங் கங்களையும் இந்த நிலவுடைமை எச்சங்கள் எதிர்த்தன. அதை வன்மையாகக் கண்டித்துக் கொண்டே முற்போக்கு இயக்கங்கள் செயல்பட்டன. 1959இல் கேரளத்தில் நடைபெற்ற மீட்சிப் போராட் டம் நிலவுடைமைச் சக்திகளுக்கு எதிராகவே நடைபெற்றது என்பதிலிருந்து நவீனமாக்கத்தால் கேரள மன உருவாக்கத்தின் அடிப்படைகளை முழுமையாகப் புரட்டிப்போட இயலவில்லை என்பதை அறியலாம். பல நிலைகளில் இன்றும் கூட மலையாளி நிலவுடைமைக்கால வாழ்க்கைப்பார்வையையே கொண்டிருக்கின்றான்.

விடுதலைக்குப் பின் கேரளத்தில் ஏற்பட்ட கல்வி வசதிகளும் சமூக அமைப்பும் மலையாளி வாழ்வில் சாதகமான பல மாற்றங் களைத் தந்தது. இக்காலத்தில், கல்வியறிவு பெற்ற புதிய தலை முறையினர் இந்தியப் பெருநகரங்களில் பெருமளவு குடியேறினர். கல்விபெற்ற இளைஞர்கள் விவசாயம்,உற்பத்தித்துறைத் தொழில் களைவிட அலுவலக ஊழியங்களுக்கே முதன்மையளித்தனர். கேரளத்திலேயே கிடைக்கின்ற இத்தொழில்கள் வாழ்க்கைக்கு ஒரு தனிப் பாதுகாப்பளிப்பதால் அப்படிப்பட்ட தொழில்கள் பெரிதும் விரும்பப்பட்டன. அடிப்படைத்தொழில்கள், உற்பத்தித்தொழில் துறைகளில் பணிபுரிவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததுடன் சேவைத்துறைகளில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்தது.

இவை இரண்டும் விடுதலைக்குப் பிற்பட்ட கேரளத் தின் தொழில்துறையில் ஏற்பட்ட கவனிப்புக்குரிய மாற்றங்களாகும். இந்த அலுவலக ஊழியத்தில் நாட்டமிக்க பிரிவினரே கேரளத்தில் நடுத்தர வர்க்க உணர்வுகளை உற்பத்தி செய்தனர். எழுபதுகளில் வளைகுடா நாடுகளில் இருந்து வந்தடைந்த பணம் கேரளத்தில் பெரிய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் இருந்து வந்தடைந்த பணம் உற்பத்தித்துறை சாராத கட்டுமானப்பணிகளுக்கே அதிகமாக முதலீடு செய்யப்பட்டதெனினும் அது சமூக பொருளாதார மாற்றங்களுக்குப் பெரிதும் காரண மானது.தனிநபர் வருமானம் அதிகரிக்காமலேயே கேரளத்தில் பெரிய சமூக மாற்றம் நிகழ்ந்தது.

வளைகுடா நாடுகளில் இருந்து வந்தடைந்த பணப் பரவல் கேரளத்தில் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் படைத்தது. நடுத்தர மக்கள் புதுப்பணக்காரர்களான வளைகுடா வருமானக்காரர்களுடன் போட்டி போட்டு வாழத் தொடங்கினர். அத்துடன் நடுத்தரசமூகத்தின் தற்பெருமையும் பேராசையும் அதிகரித்தது. பெரிய கனவுகளும் உன்னத லட்சியங்களுமற்ற பலர் எதிர்மறையான கருத்துக்களைப் பின்பற்றத் தொடங்கினர். கேரளத்தில் சாதீய/ மத அமைப்புகள் ஆற்றல்பெற்று வேரோட, பின்னர் புதுப்பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ற சூழல் உருவாவதற்கும் வளைகுடா நாடுகளின் பணம் உதவியது.

1970களின் இறுதியடையும் முன்னரே கேரளத்தில் குடியானவ முறை ஒழிந்திருந்தது. நிலஉரிமை அடைந்த கீழ்த்தட்டினர் திடீரென சமூகஉயர்வு பெற்றனர். இப்புதிய இனத்தின் தோற்றம் கேரளத்தின் பிற்காலச் சமூக அரசியல் மாற்றங்களைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றியது. நிலவுடைமை முறையின் சீர்குலைவு வேளாண்மைத் துறையைப் பாதித்தது. வேளாண்மைத்தொழில் லாபகரமற்ற, கவர்ச்சியற்றதாகத் தொழிலாக இளந்தலைமுறையினரால் புறக் கணிக்கப்பட்டது. சமூக அடித்தட்டிலிருந்து எழுந்த இவர்களுக்கும் நடுத்தர வர்க்கமே முன்மாதிரியாகத் திகழ்ந்தது.இந்த நடுத்தரவர்க்கம் ஏற்கனவே அவர்களின் வாழ்க்கைச் சூழலால் உருக்குலையத் தொடங்கி நிலவுடைமை மதிப்பீடுகளை மெல்லமெல்ல உள்ளேற்று வந்தது.

எண்பதுகளின் இறுதிக்குள் நடுத்தரவர்க்கத்தின் வீழ்ச்சி பரவலானது. புறவாழ்க்கைச் சூழல் நவீனமாக்கத்திற்குத் பணிந்து கொண்டிருந்தாலும் நவீனமாக்கத்திற்கு முந்தைய நிலைக்குத் திரும்பிச்செல்வதற்கான மன அடிப்படைகளே வெற்றிபெற்றன. கம்யூனிசத்தின் வீழ்ச்சியும் இந்தியாவின் அரசியல் நிரந்தரமின்மை யும் இதற்கு வேகமளித்தன. இப்படியரு சூழலில்தான் உலக மயமாதல், தாராளமயமாக்க மாற்றங்கள் நுழைந்தன. இவற்றுடன் நுகர்வுக்கலாச்சாரத்திற்குச் சாதகமான நடுத்தர உணர்வுகளும் நிறைந்தன.

உலகமயமாக்கமும் தாராளமயமாக்கமும் கேரளவாழ்வை முற்றிலும் மாற்றியமைத்தன. தாராளமயமாக்கத்தின் தொடக்க ஆண்டுகளில் பணத்தின் மீதான கட்டுப்பாடுகள் முற்றிலுமாகக் கைவிடப்பட்டதால் நாட்டில் ஒரு செயற்கையான செழிப்பு ஏற்பட்டது. உலகமயமாதல் வழி வந்த வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளின் உற்பத்திப் பொருட்களுடன் போட்டியிட்டுக் கொண்டு இந்தியப் பொருட்களும் சந்தையை நிறைத்தன. உலகமயமாதல் இந்தியாவின் முப்பதுகோடி நடுத்தட்டு மக்களைக் குறிவைத்தது. கேரள நடுத்தரமக்கள் ஏற்கனவே நுகர்வு நாட்டம் கொண்டிருந்தனர்.

விளம்பரங்களில் உற்பத்திப்பொருட்களின் மீதான இச்சையைத் தீவிரப்படுத்த தயாரிப்பாளர்கள் இக்காலத்தில் தீவிரமாக முயன்றனர். நுகர்வுப் பொருட்களைத் தொட்டுப்பார்த்து வாழ்வதுதான் வாழ்க்கை என்ற கருத்து விளம்பரங்களின் வழி நுழைக்கப்பட்டது. விளம்பரக் கலை தனதாகிய இருப்பை அடைந்ததுடன் இதர கலைகளைவிட புதிய தலைமுறையினரின் வரவேற்பையும் பெற்றது. நுகர்வு வேட்கை வலையில் ஏராளமானோர் சிக்க்குண்டனர். வாகனங்கள், அழகு சாதனப் பொருட்கள், பேட்டண்ட் முத்திரைகள் உடைய ஆயத்த ஆடைகள், இயந்திரங்கள், கருவிகள் இவற்றை வாங்கிக் குவிப்பதற்கான பதட்டத்தைத் தாராளமயமாக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் காணமுடிந்தது.

தேவையானதையும் தேவையற்றதையும் வாங்குவது எனும் மனநிலை திடீரென மக்களிடம் உருவானது. கேரளத்தனித்துவத்தைத் தீர்மானித்த அடிப்படைக்கூறுகள் கூட மாறுதலடைந்தன. உணவு, உடை, உறையுள், தொழில், குடும்பம், ஒழுக்கம், அரசியல், வாழ்க்கைப்பார்வை, சமூக/சாதீய வழக்கங்கள், தலைமுறைகளுக்கிடையிலான உறவு, கல்வி, கலை, இலக்கியம், ஃபாஷன் என வாழ்வின் அனைத்து நிலைகளையும் இது பாதித்தது. உற்பத்திகளின் தயாரிப்பு வேகம் அதிகரிக்கும்வேளை சந்தை அவற்றால் நிறைகின்றது. மீண்டும்மீண்டும் புதிய வடிவங்களில் பொருட்கள் வரும்வேளை இச்சை அதன்மீது படிகிறது. பொருட் களின் மீதான இச்சையைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்தல் இக்காலத்தின் முக்கிய வியாபாரத் தந்திரமாக இருந்தது.இச் சந்தை செயல்பாடுகள் மனிதனின் நோக்கு மற்றும் காலம் குறித்த கற்பனைகளை மாற்றியமைத்தது.

உற்பத்திப் பொருட்களின் வரவும் மறைவும் காலத்தின் வேகத்தை அதிகரிக்கச் செய்தது. ஊடகத் தயாரிப்புக்கள் இளைஞர்களிடையே வாழ்க்கை நிகழ்காலத்தின் கொண்டாட்டம் மட்டுமே என்ற உணர்வைத் தோற்றுவித்தது. அவர்களே நுகர்வுக் கலாச்சாரத்தில் முற்றிலுமாக மூழ்கிப்போயினர். உண்மைச் சூழ்நிலைகளில் எந்த மாற்றமும் ஏற்படாமலேயே நாட்டில் உடனடியாக வளம் பெற்றுவிட்டதான ஒரு பிரமை உருவானது. வைப்புநிதி வட்டியைக் குறைத்து பணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதுடன் வியக்கத்தக்க நிலையில் பணப்புழக்கம் ஏற்பட்டது. வரவு செலவுகளுக்கு இடையேயான விகிதாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் பணம் செலவழிக்கின்ற அதிர்ச்சியூட்டும் காட்சிகள் கேரளத்தில் காணமுடிந்தது.

பொருளீட்டலல்ல, செலவழித்தலே பின்முதலாளிய சமூகத்தில் பொதுமக்களின் பொருளாதாரப் பழக்கம் என ஐரோப்பியப் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். அது இக்காலத்தில் கேரளத்தைப் பொறுத்தவரை ஓரளவு வரை மெய்யானது. சொத்து, வருமானம் கொடுக்கல் வாங்கல் களால் வாழ்கிற ஒரு வர்க்கம் சமூகத்தின் மேற்தட்டாக உருவானது. பணச்சங்கிலி, தேக்கு, மாஞ்சியம் வளர்ப்பு, ஆட்டுப் பண்ணைத் திட்டங்கள், பல்வேறு ஊக வியாபாரங்கள், பங்கு வணிகம், முதலிய துறைகளில் பணம் பெருக்கெடுத்தது. பட்டணங்கள், சிறு அங்காடிகள், ஊர்ப்புறச் சந்தைகளில் இடைத்தரகர்கள் நிறைந்தனர். நிலத்தின் விலைமதிப்பு எந்த விகிதத்துடனும் பொருந்தாமல் அதிகரித்துப் பெருகியது. நில உரிமையாளர்கள் தங்கள் கைவசம் இருக்கும் இடத்தின் சந்தைமதிப்பைக் கணக்கிட்டு மகிழ்ந்தனர்.

புதிய பொருளாதாரமுறை கல்வி மற்றும் தொழில் குறித்த எண்ணங்களை மாற்றியமைத்தது. பட்டப்படிப்புடன் நிறைவடை கின்ற வழக்கமான கல்வி எவருக்கும் வேண்டாமல் போனது. உலகமயமாக்கலின் மூலம் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட தொழில்களைப்பெற முறைசார் கல்வியோ,பட்டங்களோ தேவை யில்லை என்ற நிலை உருவானது. கணினி, தொலைத்தொடர்பு, தகவல் துறை,கேபிள் டி.வி,போன்ற புதிய உற்பத்திகளின் விற்பனை முகமை போன்ற முன்பு இல்லாமலிருந்த தொழில் வாய்ப்புக்கள் இளைஞர்களைக் கவர்ந்தன.

இரு சக்கர வண்டிகளில் சாலைகளில் பாய்ந்துகொண்டிருந்த இளைஞர்களில் பெரும்பான்மையும் இத்துறையில் பணியாற்றினர். இவர்களின் வாழ்க்கைமுறை, அழகியல் கண்ணோட்டங்கள், மனிதாய நோக்குகள் புதிய தலைமுறைக்கு முன்மாதிரியானது. ஆக, மேலோட்டமான செழிப்பு, வியாபார மனநிலை,அவசர வாழ்க்கை, பாசமான, உறுதியான மனித உறவுகளைப் புறக்கணித்தல் போன்ற இயல்புகள் இவர்களின் மூலமாகச் சமூகத்துள் நுழைந்தது. தொழில்கல்விக்கு தேர்ச்சி பெறுவதற்கான நுழைவுத்தேர்வுப் பதட்டக்காய்ச்சல் இவ்வேளை யில் கேரளத்தில் பரவியது. வேறுவழியின்றித் தங்களுக்குக் கிடைக்காத பொருளாதாரப் பாதுகாப்பு தமது பிள்ளைகளுக்கேனும் கிடைக்கட்டும் என எண்ணிப் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் நுழைவுத்தேர்வுப் பயிற்சிப் பள்ளிகள்/ முகாம்களுக்குப் படை யெடுத்தனர். ஆங்கிலக்கல்வியின் மவுசு திடீரென அதிகரித்தது.

கேரளத்தில் தொலைக்காட்சி பரவலானது இக்காலத்தில்தான். கேபிள் டி.வி. இணைப்புகளும் பெருகின. இரவுபகல் வேறு பாடின்றி மக்கள் தொலைக்காட்சியின் முன்பு அமரத்தொடங்கினர். வெளிநாட்டுத் தொலைக்காட்சி சானல்கள் ஒளிபரப்புகின்ற ஆபாசக்காட்சிகளும், குற்றச் செயல்களும் நிறைந்த நிகழ்ச்சிகள் குமரப் பருவத்தினரைப் பெரிதும் பாதித்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக வீட்டுவேலைகளும் உணவுவேளை களும் முன்திட்டமிடப்பட்டன. காணொலி ஊடகங்கள் உலகமய மாதலுக்கு மிகவும் உதவின. நாட்டு எல்லைக் கெடுபிடிகளைப் உதாசீனப்படுத்தி மேற்பரப்பினூடாக உற்பத்திப் பொருட்கள் வந்திறங்கின. வெளியினூடாகச் செய்திகளும் தகவல்களும் அறிவும் அறிவிப்புக்களும் வந்தடைந்தன. ஊர்களும் கூட ‘உலக கிராம’த்தின் நிலையை அடைந்தன. எப்பொருளும் எல்லா இடத்திலும் இருக்கின்ற அனுபவம் மனிதனின் தன்னிருப்பையும் கடந்தகால அறிவையும் தகர்த்தது. புதிய தலைமுறையினரிடையே இது பெரிதும் வெளிப்பட்டது. கேரளவாழ்வின் அடையாளங்களாகக் கருதப்பட்டுவந்த கூறுகளில் பல மறைந்துபோயின. தனது வரலாறு, பண்பாட்டுடன் நாட்டம் குறைந்தது. நமதல்லாத அனுபவங்களின் மீதான இச்சை வலுத்தது. பாஷன், ஒழுக்கவுணர்வு இவற்றில் காணொலி ஊடகங்கள் மிகையான பாதிப்பைச் செலுத்தின.

தொலைக்காட்சியுடன் இணைந்து கிரிக்கெட் பரவலான பிரச்சாரத்தை அடைந்தது. நாட்டின் மிக முக்கியமான நிகழ்வு களைக்கூட ஒத்திவைத்து அரசாங்கமும் செய்தி ஊடகங்களும் கிரிக்கெட் விளையாட்டைக் காலத்தின் ஆவேசமாக வருணித்தன. கிரிக்கெட் நாட்களில் இழக்கப்படுகின்ற மனித உழைப்பு மணிநேரம் உற்பத்தியைப் பாதிக்குமளவு பெருகியது. புதிய தலைமுறையை வாழ்வின் தனித்துவமான அனுபவங்களில் இருந்து அகற்றி ஒரு கற்பனையுலகில் வாழ்ந்திட தொலைகாட்சியும் கிரிக்கெட்டும் காரணமானது. ஒட்டியவயிற்றுடன் கொதிக்கும் வெயிலில் கிரிக்கெட் ஆடுகிற ஏழைச் சிறுவர்களைக் கேரளத்தின் எந்தக் கிராமத்திலும் காணலாம். உறக்கத்தைத் துறந்து நள்ளிரவுவரை டி.வி.யில் கிரிக்கெட் பார்க்கிற பாட்டிகளும் குறைவல்ல. தொலைக்காட்சி, கிரிக்கெட் மூலமாக நம் மீதான பண்பாட்டு ஆக்கிரமிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. கேரளப் பண்பாடு குறித்த நினைவுகள் ஏதுமற்ற ஒரு பெரிய மக்கள்திரள் மட்டுமாகக் கேரளியர் மெதுவாகப் பரிணமித்து வருகின்றனர்.

உலகமயமாதலின் சூழலில் கேரளீயச் சமூக வாழ்வும் குடும்ப மும் கணிசமான மாற்றங்களை அடைந்துள்ளது. தொலைகாட்சியில் இரவுபகலின்றி நழுவிமறையும் காட்சிகள் நடுத்தரவர்க்கத்தை வீட்டினுள் சிறைசெய்துள்ளது. வீட்டுக்குள் உறுப்பினர்களிடையே பேச்சும் தொடர்பும் அருகியுள்ளது. சமூகத்திலிருந்து வீடு , வீட்டிலிருந்து தன்நபர் எனும் நிலைக்கு மனிதன் சுருங்கி விட்டான். தொலைக்காட்சி வழி ஒளிபரப்பப்படும் காட்சிகள் சிறார்களிடம் மயக்கத்தையூட்டி வேற்றுலகத்தை அளித்து அவர்களைச் சமூக வாழ்வினின்று தடுத்தது. முதியோர் இல்லங்கள் பெருகின. குழந்தைகளிடம் செலவிட நேரமற்ற பெற்றோர்கள் பிள்ளைகளை அவர்கள் வழியில் செல்லவிடுகின்றனர். பல காரணங்களால் குழந்தைகள் அவர்களின் சிறார்பருவத்தை இழந்துவருகின்றனர். இன்று குழந்தைகள் எல்லாம் அறிந்த முதியவர்களின் மனம்படைத்த வயதடையாத மனிதர்களாகியுள்ளனர். சைபர் ஸ்பெயிஸ் முதல் ஆணுறை வரை அவர்கள் அறிவர். குமரப்பருவம் நுழைவுத் தேர்வுக்கனவுகள் நிறைந்தது. சமூகவாழ்வின் சலனங்கள் ஏதும் பாதிப்புசெய்ய அனுமதிக்காத நிலையில் பெற்றோர்கள் அவர்களை வளர்க்கின்றனர். ஏதேனும் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யவியல்கிற விலை உயர்ந்த பொருளாகத்தான் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சார்ந்த திறமையான பிள்ளைகள் தயாரிக்கப்படுகின்றனர்.

குடும்பம் உறவுகளின் அன்பால் அரவணைப்பாலான நிறுவனம் என்ற நிலை மாறியுள்ளது. கேரளத்தில் அதிகரித்துவருகிற மது/போதைப் பழக்கம், தற்கொலைகளை இதனுடன் தொடர்புபடுத்தி மனநல மருத்துவர்கள், சமூகவியலாளார்கள் காண்கின்றனர். இந்தியவிலேயே அதிகமான தற்கொலைகள் கேரளத்தில்தான் நடக்கின்றது. முழுக்குடும்பத் தற்கொலைகளும் அதிகம்தான்.96-97 ஆண்டுக்காலத்தில் மட்டும் 15,200 நபர்கள் தற்கொலை செய்துள் ளனர். தீடீரென ஏற்பட்ட பொருளதார நெருக்கடிகளே பல முழுக் குடும்பத் தற்கொலைகளுக்குக் காரணமாகியுள்ளது. இதர மாநிலங் களுடன் ஒப்பிட மனநல சிகிட்சை மருந்துகளின் பெருஞ்சந்தையும் கேரளம்தான். அலுவலகக் கணக்குகளில் உட்படாத மதுபானங்களின் அளவையும் எடுத்துக்கொண்டால் கேரளத்தில் தனிநபர் மதுப்பயன் பாட்டுப் பங்கு வியப்பூட்டுவதாக இருக்கும்.

மேற்கத்திய வாழ்க்கை முறைகள் மலையாளியின் புற வாழ்வைப் பெரிதும் பாதித்துள்ளது. பாலியலில் சமூகத்தின் கட்டுப்பாடு மிகவும் நெகிழ்ந்துள்ளது. உபயோகி வீசியெறி எனும் நுகர்வுமுறை ஆண்-பெண் உறவுகளிலும் கடந்துவந்துள்ளது. மனித உறவுகளுக்கு நீண்ட ஆயுள் அவசியமற்றதாகியது. வாழ்க்கையை ஒரு ‘டிஸ்போஸபிள்’ எதார்த்தமாகப் புதியதலைமுறை பார்வையிட்டது. சமூகவாழ்வின் அசைவியக்கம் பற்றி அவர்கள் அறியாதவர்கள். அவர்களைச் சமூக வாழ்வுடன் நெருங்கச் செய்திடப் பெற்றோர்களால் இயல்வதில்லை. அதற்கான ஈடுபாடும் புதிய தலைமுறையிடம் இல்லை. சகமனித வாழ்வுடன் பற்றற்ற வாழ்க்கை அவர்களுடையது. இறந்தோர் நினைவின் அடையாளங்கள் விரைவிலேயே வாழ்வினின்று நீக்கம்பெறுகின்றது. யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் எண்ணிக் கவலையில் மூழ்கிடக் காலத்தின் விரைவு எவரையும் அனுமதிப்ப தில்லை.

பணக்கார மற்றும் நடுத்தரவர்க்க மகளிர் இக்காலத்தில் சற்றே சுதந்திரம் அடையமுடிந்தது. நிறுவனங்கள், கல்விகூடங்களில் ஆண்பெண் உறவு மக்களாட்சித்தன்மை பெற்றது. கார், இருசக்கர வண்டிகள் ஓட்டிச்செல்லும் மகளிர் எண்ணிக்கை பெருகியது. வணிகத்துறை சார் பணிகளில் மகளிர் பங்கேற்பு மிகுந்தது. பெண் விடுதலை,பெண்ணியச் சிந்தனைகள் பிரச்சாரமடைந்தன. பெண்ணின் கடமைகள்/பொறுப்புகள் குறித்த மரபான கண்ணோட் டங்கள் பல கருத்தளவிலேனும் விசாரணை செய்யப்பட்டன. இருப்பினும் பெண்கள் மீதான வன்முறைகள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன. வரதட்சணை வன்முறைகள், பாலியல் வன்முறைகள், குழுப் பாலியல் வன்கொடுமைகளும் பெண்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.

சமூக அமைப்பியக்கத்தின் தோல்வி ஆன்மீகவாழ்வைப் பலவிதமாகப் பாதித்துள்ளது. சமயப் பரப்பு திருப்பணிகள் ஆபத்தான நிலையை அடைந்துள்ளன. பாசிசநிலை சமயச்செயல்பாடுகள், அடிப்படைவாத கருத்துகளின் பிரச்சாரமும் கேரளத்தில் பரவி யுள்ளது. சமயப்பொறை மிகமிக அருகிவருகின்றது. மதத்துடன் தொடர்பற்ற புனிதர்களும், மனிததெய்வங்களும் நாடெங்கும் உருவாகியுள்ளனர். மக்களின் பக்தி, ஆன்மீக உணர்வுகளைச் சுரண்டும் அமைப்புகள் கேரளத்தில் படர்ந்துவருகின்றன. பெரிய வியாபார நிறுவனத்தின் பணி ஒழுங்கை இவை கடைப்பிடிக் கின்றன. கேரளத்திற்கு அறிமுகமற்ற புதுப்புது ஆன்மீகத்தலை வர்களின் பலவண்ண உருவப்படங்கள் சினிமாச் சுவரொட்டி களுடன் போட்டியிட்டுக் கொண்டு சாலையோரங்களில் இடம்பிடிக் கின்றன. பலவிதமான இயற்கை,யோகா, மூச்சுப்பயிற்சி (பிராணிக் ஹீலிங்) சிகிச்சைமுறைகள் அண்மைக்காலமாகக் கேரளத்தில் பிரபலமடைந்துள்ளது. ஆன்மீகத்தின் லேபிலோடுதான் இவை விலைபோகின்றன. உடல், மன அமைதி நாடி இத்தகு சிகிச்சைகளில் அபயம் தேடும் ஆட்களின் எண்ணிக்கையிலும் குறைவேதுமில்லை.
 
உலகமயமாதலின் விளைவாகச் சுற்றுலாத் துறைத் தொழில்கள் வளர்ச்சியடைந்தன.புதிய வாழ்க்கைமுறை பணம் செலவழிப்பதற் கான மானசீகக் கட்டுப்பாட்டை முற்றிலும் தளர்த்துவிட்டிருந்தது. எதிர்காலத்திற்காகச் சம்பாத்தியத்தையும் மகிழ்ச்சியையும் சேமித்துத் தள்ளிப்போடுகிற நிலவுடைமை மனநிலை நுகர்வு மற்றும் வாழ்க்கைக் கொண்டாட்டத்திற்காக வழிவிட்டுக் கொடுத்தது. இன்பச் சுற்றுலாக்கள் வாழ்வின் ஒருபகுதியாக மாறிவிட்டன. உள்நாட்டுச் சுற்றுலாக்களும் பெருகியுள்ளது. சொகுசு வண்டிகள் பயணங்களுக்கு ஆர்வமூட்டின. வருமானமற்ற வாலிபர்கள்கூடக் குழுச்சேர்ந்து பாடியாடிச் சுற்றுலாச் செல்வதைக் காணமுடிகிறது. நமது சுற்றுலா மையங்களில் வெளிநாட்டுப் பயணிகளைவிட உள்ளூர்ப் பயணிகளே குவிகின்றனர். பன்னாட்டுநிறுவன முதலீடு களில் நடத்தப்படுகிற பெருமட்ட ஹோட்டல்கள் கேரளத்தில் உருவானதும் ஹோட்டல் மானேஜ்மென்ட் ஒரு தொழிலாகவும் கல்வியாகவும் வளர்ச்சியடைந்ததும் இந்தத் தாராளமயமாக்கக் காலத்தில்தான். கேரளத்தில் பல இடங்களில் தனியார் பூங்கா, நீர்விளையாட்டு பூங்காக்கள் தோன்றின. இன்பச்சுற்றுலாக்களால் ஒரு புதிய ஒழுக்க உணர்வும் உருவாகியுள்ளது.

உலகமயமாதலின் ஆரம்பத்திலிருந்தே நகர-கிராம வேற்றுமை கள் மறையத்தொடங்கின. தொலைக்காட்சி வழியாக நுழைந்த அழகு பற்றிய கற்பிதங்கள்,வாழ்க்கைப் பார்வை எல்லா இடங் களிலும் ஒரே சமயத்தில் பிரசாரம் அடைந்தது. கிராமங்கள் நாகரீக உலகின் நிகர்நிலை அடைந்ததுடன் கிராமீயத்தனம் ஒரு கற்பனை மட்டுமாகியது. அனுபவங்களின் உயர்வு தாழ்வுகள் எவ்விடத்தும் இல்லாமல் போனது. அனைத்திடங்களிலும் பியூட்டி பார்லர்கள், பியூட்டி கிளினிக்குகள் தோன்றின. பெருநகர வாழ்க்கைத் தரத்திற்கு நிகரானதாகக் கேரள வாழ்க்கை உயர்ந்தது. ஃபாஸ்ட் ஃபுட், மினரல்வாட்டர் இன்று எங்கும் கிடைக்கிறது. கிராமவிருந்துகள் கூட டிஸ்போஸபிள் டம்ளர், தட்டுக்களே பயன்படுத்தப்படுகின்றன. மலையாளி இன்று தனது கிராமத்திலல்ல ‘உலக கிராம’த்தில் வாழ்ந்துவருகிறான்.

உடல்நலம் பேணுவதில் மிகையான கவனமும் ஆடம்பரமான சிகிட்சை வசதிகளுக்குத் தயங்காத ஒரு வர்க்கம் இன்று கேரளத்தில் உண்டு. அவர்களைச் சுரண்டுவதற்காகச் சுகவாச மையங்கள் போன்ற மருத்துவமனைகள் எல்லா நகரங்களிலும் உள்ளன. அதி நவீன தொழில்நுட்ப திறனைப் பயன்படுத்தி நோய் நிர்ணயம் செய்கிற மருத்துவமனைச் சிகிட்சைச் செலவுகள் சாதாரணமானவர்களால் தாங்கவியலாமல் போனது. ஆனால் சிறுசிறு நோய்நொடிகளுக்குக் கூட சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை நாடுகிற ஒரு வர்க்கமும் கேரளத்தில் உண்டு. உலகிலுள்ள அனைத்து சிகிட்சை முறைகளும் இன்று கேரளத்தில் கிடைக்கிறது. மருந்தகங்களின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. அழகைப் பெருக்க, இளமை நிலைநிறுத்த என நூற்றுக்கணக்கான மருந்துகள் கேரளக் கடைகளில் விற்பனைக்குண்டு. மனித வாழ்நாட்காலம் அதிகரித்துள்ளது என்றாலும் நோய்நொடிகளும் பெருகியுள்ளன.

கலை இலக்கியத்தில் இன்று புதிய பல போக்குகள் தோன்றி யுள்ளன. உலகமயமாதலின் பண்பாட்டுப் பாதிப்புகளை ஆழ்ந்து ஆராயும் இலக்கியப் படைப்புகள் ஏராளமாகவே எழுதப்பட்டுள்ளன. சிறுகதையே இத்துறைக்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது. உலகமயமாதலுடன் நிகழ்ந்த வரலாற்றுப் புறக்கணிப்பைக் கண்டித்து விமர்சிக்கும் பலநாவல்கள் மலையாளத்தில் எழுதப் பட்டன. இலக்கியத் திறனாய்வுத்துறையில் பின்நவீனத்துவம் குறித்து ஏராளமான விவாதங்கள் நிகழ்ந்தன. இலக்கியத்தைத் தேசீய அடிப்படைவாத மனநிலையுடன் அணுகியவர்கள் மலையாளத்தில் பின்நவீனத்துவத்தை ஆதரிக்கவில்லை. இருப்பினும் தொண்ணூறு களில் மிகமுதன்மையான விமர்சனப்போக்கு பின்நவீனத்துவம்தான்.

புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்ப திரைப்படங்கள் மாறின. பொருளாதார லாபமீட்ட ஏற்ற கலவைகள் கண்டடைவதில் வணிக நோக்கிகள் வெற்றியடைந்தனர். மிக மேலோட்டமான வாழ் வனுபவங்களைச் சித்தரித்து பார்வையாளர்களை ரசிக்கவைக்கவே பல படங்களும் முயன்றன. வாழ்வின் அனைத்து நிலைகளும் நகைச்சுவை, மிமிக்ரியாகக் கட்டுடைவு பெற்றன. குடும்பம், காதல், சமூகவாழ்வு, அரசியல் போன்ற துறைகளில் இருந்துவருகிற சிக்கல்களை மிகமேலோட்டமாகப் பரிகாசித்துடன் அலசும் அப்படங்கள் தீர்வுகள் எதையும் பரிந்துரைப்பதில்லை. நிலவுடைமை வீழ்ச்சி,அதன் மீட்டுருவாக்கப் பணிகளைப் பிரச்சாரம் செய்யும் திரைப்படங்களும் ஒரு பிரிவின.

 யதார்த்தமற்ற அனுபவங்களை ஆடிப்பாடி அரங்கேற்றும் புதுத்திரைப்படங்கள் வாலிபப் பருவத்தைப் பெரிதும் வசீகரித்தது. இந்திப் படங்களுடன் போட்டிபோடுகின்ற பாடல்காட்சிகள் படத்தின் வெற்றிக்கு அவசியமானது. இப்பாடல்கள் தொலைக்காட்சி வழியாகச் சுதந்திர இருப்பைப் பெறுகின்றன. இதற்கிடையே வாழ்வின் யதார்த்தங் களை நேர்மையுடன் உரையாடும் திரைப்படங்களும் வெளியாகி யுள்ளன. நடுத்தர வர்க்க குடும்பப் பிரச்சினைகள், கேரளச் சமூகத்தில் பெண்ணின் யதார்த்த நிலை, கபட ஆன்மீகம் உருவாக்கும் சமூகப் பிரச்சினைகள் இவற்றைச் சித்தரிக்கும் சில படங்களும் இக்காலத் தில் தோன்றின. கலைப்படங்கள் என்ற நீரோட்டம் முற்றிலும் மறைந்து போன ஆண்டுகள் இப்பத்தாண்டுகள். தொலைக்காட்சித் தொடர்கள் பெரும்பாலும் நடுத்தரவர்க்கப் பெண்களையே முன்னிறுத்தின. பெரும்பாலும் கேரளத்தில் இல்லாமலாகிவிட்ட கூட்டுக்குடும்ப வாழ்வின் போராட்டங்களை அவை சித்தரித்தன. ஒளிபரப்புக் கால அதிகரிப்பும் தனியார் சானல்களின் பெருக்கமும் ஏற்பட்டதுடன் இவை பல வடிவங்களில் சித்தரிப்புப் பெறுகின்றன.

நாடகக் கலையும் வணிக நோக்கிற்கு அடிமைப்பட்டுப் போனது. பொருளாதார லாபத்தை அடைவதற்கு அவசியமான கலவைகளை புரொபஷணல் நாடகங்கள் உள்வாங்கியுள்ளன. சமகாலவாழ்வுடன் தொடர்பற்ற கதைப்பொருண்மைகள் நகைச்சுவை,பாலியல் வாடையுடன் அளித்துப் பார்வையாளரை வரவேற்கின்றன நாடகங்கள். இன்று நாடகத் தயாரிப்புக்குப் பெரும்தொகை முதலீடு தேவை. ஆகவே அம்முதலீட்டைத் திரும்பப்பெறச் சினிமாக்களை பலநிலைகளில் பின்பற்ற வேண்ய கட்டாயத்தில் உள்ளன புரொபஷணல் நாடகங்கள். சந்தைமயமாக்கம் வாழ்வில் உருவாக்கி விட்ட மாற்றங்கள், நடுத்தரவர்க்க மனநிலைகளைச் சித்தரிக்கும் நாடகங்களும் சில இக்காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. சாஸ்திர சாகித்ய பரிஷத், பிற நற்பணி மன்றங்கள்,அமெச்சூர் நாடகக் குழுக்கள் தயாரித்து அரங்கேற்றிய நாடகங்கள் வழியாக உலகமய மாதலுக்கு எதிரான பண்பாட்டுப் போராட்டக்குரல் ஓங்கி ஒலிக்கப்பட்டதை இங்கு நினைவு கூரலாம்.

கேரளத்தில் இன்று கட்டிடத்தொழில் துறை வேகமாக முன்னேறி வரும் மிகப்பெரும் தொழில்துறையாகும். வளைகுடா நாடுகளின் பணவரவுடன் ஆரம்பித்த வீடுகட்டும் ஆசை உலகமயமாதல் காலத்திலும் வலுத்தது. அணுக்குடும்ப அமைப்பில் தனிவீடு ஒரு இன்றியமையாத தேவையாகியுள்ளது. வீடுகட்டலில் வளைகுடாப் பணக்காரர்கள், செல்வந்தர்களோடு நடுத்தர வர்க்கம் போட்டி போட்டு வருகிறது. விலை உயர்ந்த கட்டிடப்பொருட்கள், ஃபிட்டிங் பொருட்கள், மார்பிள், கிரானைட் போன்றவைக் கேரளச் சந்தைகளில் பெரும் புழக்கமடைந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்திக் கட்டியமைக்காத வீடுகள் மிகமிக அபூர்வம். தொலைக்காட்சியுக ஆரம்பத்திலிருந்து மனிதன் அதிக நேரத்தை வீட்டினுள்தான் செலவிடுகின்றான்.

உலகின் அனைத்துப் பொருட்களும் வீட்டினுள் ளேயே கிடைக்கவேண்டும் என்பதால் பல வீடுகளும் பொருட் காட்சிசாலை போலாகியுள்ளன. உள்ளறை அலங்கார அழகியலின் வரவுடன் வீட்டின் உள்பகுதிகள் அசைவற்ற நிலைக்காட்சிகள் போல அழகூட்டம் பெற்றுள்ளன. கேரளத்தில் சிறு,பெரு பேதமின்றி அனைத்து நகரங்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் வந்து விட்டன. ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு தளத்தில் ஒரு வீட்டையேனும் சொந்தமாக்குதல் என்பது கேரள நகரவாசிகளில் சிறுபிரிவின் கனவாக மாறியுள்ளது. ஒரு நுகர்வோர் யுகத்தில் கேரள மக்களின் வீடுகட்டும் ஆசை வியப்பளிக்கிறது. புற உலகம் போட்டிபொறாமைகளும் யந்திரத்தனமாகவும் இருப்பதால் வீடு மிக இதமான, பாதுகாப்பான இடமாக உணரும் அனுபவ நிலை இன்று கேரளத்தில் உண்டு. வீட்டைவிட்டுப் போதல் எழுபதுகளின் நவீனத்துவப் பிரக்ஞையின் அடையாளமாக இருந்தது. இன்றையப் புதுத் தலைமுறை இதை ஒரு கருத்தாகவே மதிக்கவில்லை.

தொண்ணூறுகளில் ஓவியக்கலை மிகுந்த அசைவுகளைப் பெற்றது. உலகமயமாதலை கேரள ஓவியக்கலை உள்ளூர்மய மாதலை முன்னிலைப்படுத்தி எதிர்கொண்டது.
 
உலகளாவிய ஓவியமொழி, குறியீடுகளைப் புறக்கணித்து கேரள வழமைகளை வடிவமைத்தெடுக்கும் முயற்சி ஓவியத்துறையில் பரவலாக இடம்பெற்றது. ஆசிரியத்துவச் சிக்கல், சந்தைமயமாக்கம், சூழலியல் சீர்கேடுகள், பெண்களின் மீதான கொடுமைகள் என்பன இக்கால ஓவியங்களின் மையப்பொருண்மையாக இருந்தன. எக்ஸ்பிரசனிச பாணி, எடுத்துரைப்புப் பாணியும் ஓவியங்களில் இடம்பெற்றன. பல்வேறு காட்சிகளை ஒரே பிரேமில் சித்தரிக்கும் முயற்சிகளும் நிகழ்ந்துள்ளன. வணிகக்கலையே ஓவியக்கலையின் வாய்ப்புக்களை அதிகமாகப் பயனாக்கம் கொண்டது. கணினியின் வாய்ப்புக்களுடன் இணைய கலை-தொழில்நுட்பம்-சந்தை இவற்றின் இணைவு அபாரமான வணிகவெற்றியை ஓவியத்திற்கு அளித்தது. சந்தைமயமாக்கத்தால் அதிகப் பயனை ஈட்டியவை வணிக ஓவியங்கள்தான்.

உலகமயமாதலின் பின் ஏற்பட்ட புதுப்புது தேவைகளும் வாழ்க்கைப் பார்வைகளும் கேரளத்தின் நிலவியற்கை, உயிர்வாழ் சூழலை மிகவும் மாற்றி அமைத்தது.செயற்கையான அழகின் மீதான நாட்டம் இயற்கை அழிவுக்குக் கொண்டுசென்றது. கட்டிடங்கள் கட்டுவதற்காகப் பள்ளமான நிலப்பகுதிகள் சமதளப்படுத்துவதற் காகக் கனரக வண்டிகளில் மேல்மண் தோண்டி எடுத்துச் செல்லப்படும் காட்சி கேரளத்தில் சர்வசாதாரணமாகி விட்டது. நிலத்தைக் குடைந்து மண்ணைத் தோண்டி எடுக்க ராட்சச இயந்திரங்கள் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. குன்றுகள் நமது நிலவியற்கையின்றும் மறைந்து வருகின்றன. மேல்மண்ணின் அவசியம் பற்றியோ அதை நாசமாக்குவதன் அதர்மம் குறித்தோ எண்ணிப்பார்க்க மலையாளிக்கு நேரமில்லை.

நெல் விவசாயம் பெருலாபம் அளிக்காகாததால் நெல்வயல்கள் பிற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. தொழில்மயமாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, இயற்கை உணர்வற்ற அழகியல் கற்பிதங்களால் கேரளத்தின் இயற்கைச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகள், நகரக் கழிவுகள் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. புது அழகுணர்வு இறந்த காலத்தின் சுவடுகளை, வரலாற்று நிகழிடங்களைத் தயவின்றி நாசப்படுத்தி வருகின்றது. பண்பாடு, வரலாறு குறித்து மார்தட்டிக் கொள்கிற மலையாளி சுயலாபங்களுகாக இவற்றை கண்ணைமூடிக் கொண்டு அழித்துவருகிறான். காங்க்ரீட் தொழில்நுட்பம் கட்டிடத் துறையில் செலுத்திவரும் தாக்கம் இதற்குக் காரணம். காங்க்ரீட் தொழில்நுட்பம் குறுகிய கால ஆயுள்கொண்டது என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. பெரிய பெரிய கட்டிடங்கள் மேம்பாலங்களின்றிப் பொருளாதார வளத்தைக் காட்டமுடியாதுதான். முற்றங்களும் நடைபாதைகளும் காங்க்ரீட் செய்யப்பட்ட வீடுகளில் வசிக்கும் சிறார்கள் பூமியின் ஸ்பரிசமின்றி வாழ்ந்துவருகின்றனர்.

உலகமயமாதல் பணக்காரர்களைப் பெரும்பணக்காரர்களாக் கியது. மக்கட்தொகையில் 30% வருகிற நடுத்தரவர்க்கத்தின் நுகர்வுவேட்கையைத் தூண்டி உச்சப்படுத்தியது. இந்திய மக்களில் சுமார் 20% பேர் அனைத்து உபயோகப் பொருட்களையும் வாங்கும்திறன் படைத்தவர்கள். இப்பிரிவினரை மையமிட்டே ஆடம்பரப் பொருட்கள், பிற தொழில்களும் இருந்துவருகின்றன. உபயோகப் பொருட்களின் பெருக்கம், வாழ்க்கைக் கொண்டாட் டங்களுக்கு இடையில் மிகுபெரும்பான்மையினரின் யதார்த்த வாழ்க்கைத் துயரங்கல் மூடிவைக்கப்படுகின்றது.

புதுப்பொரு ளாதாரக் கொள்கையால் இம்மிகு பெரும்பான்மை வர்க்கம் மேறும் வறுமைக்குள் உழன்றுவருகின்றனர். மறுகாலனியாக்கத்தின் விளைவுகள் பரவலாகக் காணமுடிகின்றது. இன்று உணவுப் பொருட்கள், அன்றாடப் பயன்படு பொருட்கள், மருந்துவகைகளின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. தாராளமயமாதலின் பகுதியாக உணவு எண்ணை மற்றும் ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டது கேரளத்தின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்தது. இதனால் ஏற்பட்ட தேங்காய், ரப்பரின் விலைச்சரிவு விவசாயம் மற்றும் சார்தொழில்களைப் பாதித்தது. வெளிநாடுகளில் இருந்து காய்கறிகள், பழவகைகள் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் நடந்தேறி விட்டன. இயல்பாகவே அப்பொருட்களின் விலை அதிகமாகவே இருக்கும். சாதாரண மக்களுக்கு இவை கைக்கெட்டாமல் போகிற நாள் அதிதொலைவில் இல்லை. இப்போதே ஏழ்மையும் நோய்மையும் வாட்டும் சாதாரண மக்களை மேன்மேலும் ஏழையராக வும் நோயாளிகளாக்கவும் இது பயன்படும்.

உலகமயமாதல் செல்வந்தர்கள், நடுத்தரவர்க்கத்தின் கருத் துலகை, கொள்கையை மாற்றியமைத்துள்ளது. மறுமலர்ச்சி, நவீனமாக்கத்தால் கேரளச் சமூகத்தில் ஏற்பட்ட பிரக்ஞைவிகாசம் உறைபட்டோ திசைமாறியோ போய்விட்டது. மறுமலர்ச்சியின் பலனாகக் கேரள வாழ்வில் ஏற்பட்ட பலன்கள் புதிய சமூகமாறுதல்களின் முன் ஒளிமங்கிப் போனது. சிந்தனைத் தளத்தில் ஒரு பெரும் நெருக்கடி இங்கு ஏற்பட்டது. தனிநபர் வாழ்வின் திட்டமிடல், வாழ்க்கை குறித்த சிந்தனைகளும் மாறிப்போயின. உலக நிகழ்வுகளை எதிர்கொள்ள அறிவை மறுஅமைப்பு செய்யவோ பண்பாட்டு ஆக்கிரமிப்பை மறுத்துப் போராடவோ இயலாமல் போனது. உலகமயமாதலின் பெரும் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்படுகிறது மலையாளியின் வாழ்வு. இச்சூழ்நிலையிலிருந்து விடுதலை பெறப் பலரும் மறுமலர்ச்சிக்கு முற்பட்ட நிலவுடமைக் கருத்தியல் அதன் பண்பாட்டில் புகலிடம் தேடுகின்றனர்.

புதுப்பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பலனாக ஏற்பட்ட ஏழ்மை யாக்கம் இதர மாநிலங்கள் போலக் கேரளத்தைப் பாதிக்கவில்லை. அதன் காரணங்கள் இரண்டு. வளைகுடா நாடுகளில் இருந்து வந்துகொண்டிருந்த பணம் இக்காலத்திலும் வழக்கம்போலவே இருந்தது. அதனால் தேசியப் பொருளாதார நெருக்கடியை ஓரளவேனும் எதிர்கொள்ள இயன்றது. தாராளமயமாக்கத்தின் ஆரம்பநாட்களில் தேசியபொருளாதார நிலையில் சற்று முன்னேற்றம் இருந்தது எனினும் 1995ற்குள் நிலைமை மோசமடைந்தது. நாடு கடனில் சிக்குண்டது. இந்த இரண்டாம் கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் கேரளத்தை அவ்வளவாக நெருக்காமல் போகக் காரணம் 1996ல் ஆரம்பிக்கப்பட்ட வெகுசன மேம்ப்பாட்டுத் திட்டம்(ஜனகீய ஆசூத்ரண பத்ததி) இத்திட்டம் சாமானிய மக்கள் வாழ்வுக்குக் குறைந்த அளவிலாவது பொருளாதாரப் பாதுகாப் பளித்தது.

கிராமங்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றன. வளர்ச்சிப் பணிகளைத் தாமே நடைமுறைப்படுத்தியது கேரள வாழ்வில், வாழ்க்கைப் பார்வையில் ஓரளவுவரை மாற்றத்தைக் கொணர்ந்தது. இந்தியா முழுமையும் உலகமயமாதலுக்கு அடிபணிந்தபோது கேரளம் இத்திட்டத்தின் மூலமாகக் கிராமத் தன்னிறைவு, தன்னாட்சிக்கு வழியமைத்துக் கொண்டது. உலகமயமாதலுக்கு ஆளான எந்த நாட்டிலும் இக்காலத்தில் இது போன்றதொரு திட்டம் சோதனை செய்யப்படவில்லை. “கோலா-கொக்கெய்ன் - கால்கேர்ள்” பண்பாட்டு திணிப்பைத் தடுத்து சமூகவாழ்வுக்கு புதிய தலைமுறையை அழைத்துவர இத்திட்டம் சிறிதளவேனும் உதவியுள்ளது.

1998 க்குப் பிறகான பொருளாதாரச் சிக்கல்களின் உலகமயமாதலுக்காளான நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிகள் கேரள நடுத்தரவர்க்கத்தின் கண்களைத் திறந்துள்ளது. பண்பாட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் சிறிதளவேனும் எதிர்வினை யாற்ற மலையாளி ஆயத்தமாகியுள்ளான். பொருளாதாரத் தன்னிறைவு அடைவதற்கான திட்டப்பணிகளோடு பண்பாட்டுத் தன்னிறைவு பெறுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளும் கேரளத்தில் பரவலாக நடைபெற்று வருகின்றது.

Pin It

பேராசிரியர் கெ.ஏ.ஜயசீலன் கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கல்வி,மொழியியல்,இலக்கியத் துறைகளில் பங்காற்றி வருகின்றார். சாம்ஸ்கீய மொழியியலில் இந்திய அளவில் பெரிதும் அறியப் படுபவர். நவீன மொழியியலில் சாம்ஸ்கீ அலைஎழுந்த காலத்தில் ஐதராபாத் Central Institute of Foreign Languages -இன்று English and Foreign Languages University இல் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தியாவில் ஆங்கிலக்கல்வியின் நெறியியல், கற்பித்தல், பாடத்திட்ட உருவாக்கத்தில் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக நடந்த வளர்ச்சி மாற்றங்களுக்கு மேலான பங்களிப்புகளைச் செய்தவர். தொடரமைப்பு பற்றி, குறிப்பாக மலையாளத் தொடர் அமைப்புத் தன்மைகள் பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகளும் Parametric Studies in Malayalam Syntax என்ற நூலும் எழுதியுள்ளார். தனித்துவமான படைப்புவழிகளும் உலகப்பார்வையும் கொண்டவர் கவிஞர் கெ.ஏ.ஜயசீலன். மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. 

உரையாடியவர்கள் : கெ.எம்.ஷெரீப், ஸஜய்.கெ.வி

நாற்பது ஆண்டுகளாக ஆங்கிலக் கல்வி, நவீன மொழியியல் துறையில் செயல்பட்டு வரும் உங்களுக்கு அத்துறைகளில் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிக் குறிப் பிட்ட புரிதல்களும், கருத்துக்களும் இருக்கும். NCERT, SCERT பாடத்திட்ட சீர்திருத்தத்திலும், பாட புத்தக உருவாக்கத்திலும் ஆளுமை செலுத்தியவர் என்ற முறையில் இந்தியாவில் குறிப்பாகக் கேரளத்தில் ஆங்கிலக் கல்வித் துறையில் வந்தடைந்துள்ள மாற்றங்களை ஒட்டுமொத்தமாக எங்ஙனம் மதிப்பிடுகிறீர்கள்? 

ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவின் ஆங்கிலக் கல்வியின் முகமே மாறிவிட்டது. கொள்கை ரீதியான நமது பார்வைகள் இன்று மிகவும் அறிவியல்பூர்வமாகிவிட்டது. ஐம்பது ஆண்டுகள் முன்பு இலக்கணம்-மொழிபெயர்ப்பு என்ற முறையே இருந்தது. மொழியை வார்த்தைகளின், கட்டமைப்புகளின் இணைப்பாகவே அன்று கண்டிருந்தனர். வார்த்தைகளையோ, கட்டமைப்புகளையோ ஒவ்வொன்றாக எடுத்து கற்பித்தனர். மொழிக்கல்வி வீடுகட்டுவது போல அமைந்தது - ஒவ்வொரு செங்கற்களாக வைத்து கட்டி யெழுப்புதல். ஒவ்வொரு செங்கல்லும் ஒரு கட்டமைப்பு. 

எல்லாக் கட்டமைப்புகளையும் கற்று முடித்தால்,வீட்டின் உருவாக்கம் முடிந்தது-மொழி கற்றாகிவிட்டது !கற்பித்தலின் உயிர்நாடி (ஆசிரியனின்) நடிப்பு/சைகைவாதமாக இருந்தது. செங்கற்களை அடுக்குவதற்குப் பதிலாக இன்று மொழிக்கல்வி ஒரு செடி முளைத்து வளர்வதோடு ஒப்பிடப்படுகிறது. ஏனெனில் மொழியின் வளர்ச்சி உயிரியல் தன்மையானது. மொழிக்கு உயிரும் வாழ்வும் உண்டு. ஓரளவு பொருத்தமான சூழலும், ஆர்வமும் தேவையும் இருக்கும் போதுதான் மொழி பேசுவோனிடம் வளர்ச்சியடைகிறது என்று சாம்ஸ்கி கூறினார். குழந்தை பிறந்த பிறகு தான் மொழியைக் கற்கிறது என்பதால் குழந்தையிடம் அதற்கு முன்பு மொழி இருக்கவில்லை என்று பொருளல்ல. மொழி, அதைப் பேசும் சமூகத்தில்தான் வாழ்கிறது. அப் பேச்சுச்சமூகம் அதன் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. குழந்தை மொழி பயில அதன் சூழலிலிருந்து பெறும் ஊட்டம் அவசியம். எப்படியோ, அறிவு என்பது புத்தகத்தில் காணப்படும் அதே பொருளென்ற காலம் மலையேறிவிட்டது. ஆனால், இது நேர்கூற்று, இது அயற்கூற்று என்று தரம் பிரித்துக் காட்டிய பழைய ரென் மற்றும் மார்ட்டின் இலக்கணம் அக்கருத்தையே பரப்பியது. 

நமக்கு ஆங்கில மொழி குறித்த அறிவு மிகவும் குறைவுதானே? John is easy to please என்ற வாக்கியம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் John is easy to kill என்ற வாக்கியம் ஒத்துக்கொள்ள முடியவதில்லை. எதனால் அது ஏற்புடையதல்ல என்று இன்றும் நமக்கு தெரியாதே? 

ஆம், மொழி குறித்தான நமது அறிவு Tip of the Iceberg என்று கூறும் அளவுதான். முழுமையானதல்ல. ஒரு நாள் ஒரு புத்தாக்கப் பயிற்சி வகுப்பில் இலக்கணம் கற்றுத் தர வேண்டுமா? என்று ஓர் ஆசிரியர் கேட்டதற்கு, அந்தக் கேள்வியே அர்த்தமில்லாதது என்று நான் கூறினேன். காரணம் அதற்கு நமக்கு இலக்கணம் தெரிந்திருக்க வேண்டுமல்லவா! மேலும்மேலும் ஆழந்து செல்லுந்தோறும் மொழி பற்றிய நமது இருண்மை அதிகமாக வெளிப்படும். 

இந்த மாற்றங்கள் அடிப்படையான ஒரு கருத்தியல் மாற்றத்திற்கு (Paradigm Shift) வழிகோலியது என்று கருதுகிறீர்களா? 

ஆமாம், கண்டிப்பாக. ஒரு கருத்தியல் மாற்றம் தான். 

கோட்பாட்டு அடிப்படையிலான மாற்றங்கள் பொது சமூகம், ஆசிரியர்கள், மாணவர்கள், இடையே சரியான முறை யில் சென்றடைந்துள்ளதா? ஆசிரியர்கள் புதிய திட்டங்களின் தத்துவ அடிப்படையைச் சரியாக உள்வாங்கிக் கொள்ளாம லும், நடைமுறைப்படுத்தலில் சரியான பயிற்சி அடையாம லும் இருக்கும் வரை புதிய சோதனைகள் தோல்வியடையத் தானே செய்யும்? 

ஒருவேளை, செயல்தளத்திற்குப் போதுமான அளவு கொண்டு வர இயலாது போனாலும், புதிய அணுகுமுறைகளின் வழி உருப்பெற்ற வாய்ப்புகள் பற்றியும், கல்வியில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் பற்றியும் ஆசிரியர்கள் பலரும் அறிந்துள்ளனர் என்றே நான் கருதுகிறேன். அன்று போல் இலக்கணம் கற்பிப்பது மட்டுமல்ல மொழிக்கல்வி என்பதைப் பெருவாரியான ஆசிரியர் களும் அறிந்துள்ளனர். 

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பகர்ந்தளிப்பதல்ல அறிவு. தன் சுற்றுப்புறத்திலிருந்து, முன் அனுபவத்திலிருந்து, ஆசிரியர்கள், தங்களைவிட அறிவுபெற்றவர்களின் உதவி வழி மாணவர்கள் சுயமாக அறிவை உருவாக்கிக் கொள்கி றார்கள் என்ற கருத்து அடிப்படை கொண்ட கட்டமைப்பு வாதம் (Constructivism), கல்வியியலில் உலகளவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அறிவு சம்பாதித்தலை சமூக உறவுகளோடும், சமூக நிகழ்வுகளோடும் இணைக் கின்ற சமூக கட்டமைப்புவாதம் (Social Constructivism) பல நாடுகளின் கல்வித் திட்டங்களில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. சம்பிரதாயமான குருபடிமம் உடைந்து போனது தான் இதன் பரிணாம பலன். மேலோட்டமான முற்போக்குச் சிந்தனையும் மிகமிகக் குறுகிய மனப்பான்மையும் கொண்டது மலையாளி சமூகம் என மதிப்பிடப்படுகிறது. ஆனால் மலையாளிகளிடையே இன்றும் குருப்படிமம் சேதாரமின்றி நிலைபெற்றிருக்கிறது! குருப்படிமத்தின் சமயத்தன்மையை எதிர்ப்பவர்கூட, ஓர் அதிகாரவடிவம் என்ற நிலையில் அதைக் கேள்விக்குள்ளாக்குவதில்லை. குருப் படிமத்தை உடைக்காமல் இங்குப் புதிய திட்டங்கள் நிறைவேற்ற இயலுமா? 

அறிவு கட்டமைக்கப்படுகிறது என்பது புதிய புரிதல். அறிவு உருவாக்கத்தில் வழி, இலட்சியத்தை வசப்படுத்தவோ, உருவாக் கவோ கூடச் செய்யும். கல்வி என்பது பகிர்ந்தளிப்பதல்ல - வளர்த்தெடுத்தல். தானாகவே வளர்ந்து வருவதை, மேலும் நன்றாக வளர்த்தெடுத்தல். ஆசிரிய மாணவ உறவை ஒருவேளை, ஒரு கோழி வளர்ப்பவன் - பொறிக்க வைத்த முட்டை இடையேயான உறவோடு உவமிக்கலாம். முட்டைக்குள் நடக்கும் செயல்களுக்குக் கோழி வளர்ப்பவனுக்கு நேரடித் தொடர்பு இல்லை. முட்டை பொறிப்பதற்கான சூழலை மட்டுமே அவரால் உருவாக்க இயலும் - குறிப்பிட்ட வெப்ப நிலை என்பதுபோல. ஆசிரியன் குருவல்ல. ஆனால் வெறும் பார்வையாளனுமல்ல. ஊக்கமளிப்பவர் (Facilitator) என்ற வார்த்தை ஆசிரியருக்கு பொருத்தமானது. கேரளச் சமூகத்தில் குருப்படிமம் பற்றிய உங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன். 

நீங்கள் கேரளத்தில் SCERT யின் பாடத்திட்ட சீர்திருத்தத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள். அதன் கொள்கை வரைவில் முன்னிறுத்தவில்லை என்றாலும் வரலாற்று ரீதியாகச் சமூக கட்டமைப்புவாதத்திலிருந்து ஒரு படி முன்னேறிச் செல்கின்ற Critical Pedagogy யின் புதிய கருதுகோள்களுக்குப் பொருந்தும் விதத்தில் தானே பாடப்பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன, தயாரிக்கப்பட்டன. அறிவு அடைவதுடன், அடைந்த அறிவை விமர்சனத்திற் குள்ளாக்கும் பணியையும் கற்பவர்கள் மேற்கொள்ள வேண்டும். இது எதிர்காலத்தில் எவ்வித மாற்றங்களுக்கு வழியமைக்கும்? 

எனது புரிதல் சரியென்றால், இப்பாடத்திட்டத்திற்கு ஒரு புதிய தலைமுறை கேரள இளைஞர்களை உருவாக்கும் திறனுண்டு. எதையும் விமர்சன அடிப்படையுடன் அணுகும், எதிர்வினை யாற்றும், விடைகாணும் ஒரு புதியதலைமுறை. வாசிக்கும் வேளையிலேயே, வாசித்த பகுதிகளைப் பற்றிய கேள்விகளைக் கற்பவர் எதிர்கொள்கிறார். “இப்பாடப் பகுதியில் சொல்லப் பட்டிருப்பவை சரியானவையே என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? ”, “ இது போன்றதொரு சூழலில் உங்கள் எதிர்வினை என்ன? ” - என்பது போன்ற வினாக்கள். இங்குப் பாடம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அனுபவத்திற்கு இணையாகின்றது. 

பிரெக்கெட்ன் எபிக் தியேட்டரில் நடப்பதும் இதுதானே. நாடகம் காணுகின்ற போதே நாடகத்தை விமர்சித்தல். ஆனால் பாடத்தோடு வாழ்க்கையும் மாறும் போதுதானே விமர்சனம் பலன் தருகின்றது? அப்படியரு வேகமும் அசைவும் கேரளச் சமூகத்திற்கு உண்டா? 

சமூகம் மாறும். பாடத்திட்டத்தின் வழிக் கண்ணோட்டம் மாறுகின்ற போது கண்டிப்பாக அம்மாற்றம் சமூகப் பரிமாற்றங் களுக்கு வழியமைக்கும். வகுப்பில் விமர்சனமுறையில் முடிவெடுக் கின்ற மாணவன் வாழ்விலும் அதே அணுகுமுறையைக் கைக்கொள் வான். இந்த விமர்சன முறையியல் தான் கற்பவரைப் பிற பண்பாடுகளைக் கூடக் கண்டறிவதற்கான ஊக்கமளிக்கிறது. கேரளப் பாடத் திட்டத்தில் ஆங்கிலம் முதல் மொழியாகப் பேசுகின்ற எழுத்தாளர் களை மட்டுமல்ல, ஆங்கிலத்தில் எழுதுகின்ற பிற மொழி பேசுகின்ற வர்களையும், மொழிபெயர்ப்பின் வழிப் பிற மொழிகளில் எழுது கின்றவர்களையும் உட்படுத்தியது இதற்கு உதவி செய்வதற்குத்தான். 

ஆம், மாதவிக் குட்டியும், மார்க்கோஸம், குந்தர் கிராஸம், அக்டோவியாபாஸம் ஆங்கிலப் பாடநூற்களில் இடம் பெற்றுள்ளனரே?

கற்றலில் விமர்சனத்தன்மையை வளர்க்க மேலும் சிலவற்றைச் செய்யலாம். பொருண்மைகள்,வரலாற்றுநிகழ்வுகளை சமகாலத்தின் பல்வேறு முரண் பார்வைகளை அறிமுகம் செய்து, விவாதத்திற்கு வழித் திறப்பது ஒரு வாய்ப்பு . உதாரணமாக 1857 கலகம் முதலாம் சுதந்திரப் போராட்டமாகவும், சிப்பாய் கலகமாகவும், மத அடிப்படைவாத எழுச்சியாகவும் பலவிதமாக விவாதிக்கப்பட் டுள்ளது. இம்மூன்று பார்வைகளையும் விமர்சனப்பூர்வமாகச் சோதித்துப் பார்க்க மாணவர்களால் இயல வேண்டும்.

மொழி மனிதனின் உயிர்மைப் பண்பு - மரபுச் சொத்து என்றே சாம்ஸ்கி கூறினாலும் உயிரியல், பிற அறிவியல் துறைகளோடு மொழியியலுக்கு அவ்வளவாக நெருக்கமில்லை. இது மொழி யியலுக்கு மட்டுமல்ல பல சமூகஅறிவியல் துறைகளிலும் நிலவும் பிரச்சனைதான். மரபணு ஆராய்ச்சிகள் தொடர்பாகச் சமீப காலத்தில் ஏற்பட்ட சில முன்னேற்றங்கள் மொழியியலுக்குப் புதிய ஆற்றலை ஏற்படுத்தியுள்ளது. லூக்கா ஸ்பார்ஸ, ஸ்பென்ஸர் வெல்ஸ் முதலிய மரபியல் அறிஞர்கள் மரபணு மற்றும் மொழியியல் தரவுகளின் அடிப்படையில், இன்றுள்ள மனித சமூகம் அறுபது, எழுபது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து பரவிய மக்களினத்தின் சந்ததியினர் என்றும், இன்றுள்ள மொழிகள் அனைத்தும் ஒரே மூல மொழியில் இருந்து உருவாயின என்றும் வாதிடுகின்றனர். இது சரியென்றால் நமது மொழி குறித்த அறிதலுக்குப் புதிய ஒரு அடையாளம் ஏற்படும். அனைத்து உலக மொழிகளுக்குமாக ஓரிலக்கணம் (Universal Grammar) என்ற கருத்தாக்கத்தினைத் தோற்றுவித்த சாம்ஸ்கிக்கு உண்மையில் இந்த அறிதல் இருந்ததா?

மொழி மூளையில் நெருக்கமாக இருக்கும், தனிமையாக்கப்பட்ட வடிவம் என்றே சாம்ஸ்கி கூறினார். எல்லா மொழிகளும் மூல மொழியிலிருந்து தான் உருவானது என்ற கருத்துடன் சாம்ஸ்கி முரண்படவில்லை. சாம்ஸ்கி தனது ஓரிலக்கணக் கொள்கையை வெளியிட்ட போது அவரிடம் இப்படியரு அறிதல் இருக்க வில்லை. அனைத்து மொழிகளுக்கும் பொதுவான சில இலக்கணக் கூறுகள் உண்டென்று சாம்ஸ்கி கூறுவது, அவை மனித மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ, சில குறிப்பிட்ட பகுதிகளிலோ அவை உருக்கொண்டதால்தான். மூன்று விஷயங்களை சாம்ஸ்கி முதன்மைப்படுத்தினார்.முதலாவதாக, மொழி உயிரியலோடு தொடர்புடையது. இரண்டாவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான ஓர் இலக்கணம் ஒன்றுண்டு. மூன்றாவது, அறிவியல் துறையில் சமகாலக் கருத்துகளின் அடிப்படையில் சாம்ஸ்கி கூறியது - மனித மூளையின் அமைப்பு, அறைகளாகப் பிரிக்கப் பட்டது என்றும் அவ்வறைகள் ஒன்றோ அல்லது அதற்கதிகமோ ஆன மொழிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதாகும். மொழியின் இடம் (ங்கள்) சரியாக எங்கு இருக்கிறது என்பது பற்றிய விவாதங்கள் இருக்கின்ற போதும் கூட, எந்த உயிரியல் ஆய்வாளரும் இவ் விஷயத்தில் முரண்படுவதில்லை.

அறிவியல் - சமூகவியல் பாடங்களை தாய்மொழியில் கற்பதே மிகவும் பயனளிப்பது எனும் கருத்து இன்று கல்வியியலில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகளாவிய கருத்துப்பரிமாற்ற மொழி என்ற நிலையில், அனைத்து அறிவுத்துறைகளிலும் பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் மொழி என்ற நிலையில் ஆங்கிலத்தை ஒதுக்கிவிடவும் முடியாது. இப்படியிருக்க நமக்கான சிறப்பான மொழிக்கொள்கை என்ன?

கற்றல் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நமக்கு ஆங்கிலமும் வேண்டும், ஆங்கிலவழிக் கல்வி வேண்டாம் என்ற நிலையிலும் கூட. ஆங்கிலத்தைப் பள்ளியில் துவக்கம் முதலே கற்பிக்க வேண்டும். உயர்ந்த வகுப்புகளில் வருகின்ற போது சோதனைநிலையில் சில பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதில் தவறில்லை.

புதிய ஒரு மொழியைக் கற்றலைக் கடினமான வேலை யாகவே பலரும் கருதுகின்றனர். குறிப்பாக ஆங்கிலம். ஆனால் ஆங்கிலம் மட்டுமல்ல எந்த மொழியையும் கற்பது அவ்வளவொன்றும் கடினமல்ல என்று நிரூபிக்கப்பட் டுள்ளது. இந்த அறிவு மொழிக் கல்வியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் தானே?

ஆம். அதற்கு நிறைய சாட்சியங்கள் உண்டு. முதல் வகுப்பில் ஆங்கிலம் கற்க ஆரம்பித்த மாணவனுக்கும், ஏழாம் வகுப்பில் ஆங்கிலம் கற்க ஆரம்பித்த மாணவனுக்கும் இடையே மொழி அறிவில் இருக்கும் வேறுபாடு, ஒன்றாகக் கற்கத் துவங்கியவுடன் ஏதேனும் மாதங்களுக்குள் மறைந்துவிட்டதாக சோதனைகள் நிரூபித்திருக்கின்றன.

ELT (English Language Teaching) என்ற பெயரே ஆங்கிலத்தை உச்சாணிக் கொம்பில் இருத்துவது போன்ற ஏற்பாடுதானே? ஒரு கற்றல் விஷயத்திற்கு அவ்வாறு பெயரிடலாமா? அப்படியென்றால் MLT( Malayalam Language

Teaching)யோ TLT (Tamil Language Teaching) யோ ஏன் இல்லை?

அவ்வாறு உச்சாணிக் கொம்பில் இருத்த வேண்டிய அவசிய மில்லை. LT (Language Teaching) போதும். அதில் மற்ற மொழி களைப் போல் ஆங்கிலத்திற்கும் ஒரு துணைப்பிரிவாக இடம் அளிக்கலாம். மொழிக் கல்வி இரண்டாம் தரம் என்ற நோக்கு மாறவும் வேண்டும்.

பெருமுதலாளியக் குழுமங்களின் (Corporate companies) தேவைக்காகவே நமது குழந்தைகள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற எண்ணம் தானா, ஆங்கிலத்திற்குக் கொடுக்கப்படும் இந்த அதிக கவனத்திற்குக் காரணம்?

ஆங்கிலம் சரளமாகப் பேச வேண்டும் என்று பிடிவாதம் செய்பவர்கள் எப்படி நினைத்தாலும் சரி, அறிவிற்கான ஒரு சாளரம் என்ற நிலையில்தான் நாம் ஆங்கிலம் கற்க வேண்டும். Communicative English என்ற கருத்து எனக்கு உடன்பாடில்லை. இந்திய ஆங்கிலக் கல்வியின் மூலகர்த்தாவான என்.எஸ்.பிரபுவின் கருத்தும் இதுதான். ஆங்கிலத்தில் கருத்துப் பரிமாற்றம் நடத்தவல்ல, மாறாக ஆங்கிலத்தின் கட்டமைப்பைத் தெரிந்து கொள்ளத்தான் அடிப்படை யாக முயல வேண்டும். இதை Grammatical Competence என்று சொல்வார்கள். ஒருவேளை, இலக்கணம் கற்பதால் உண்டாவதல்ல, மொழியோடு ஈடுபடுவதால் நமது அறிவில் உருப்பெற்று வருவ தாகும் இது.

 

சிசெக்கின் போன்ற புலமையாளர் ஆங்கிலத்தை உச்சரிக்கக் கேட்கும் போது நமக்கு விருப்பம் ஏற்படாது. ஆனால் வார்த்தைகளை அவர் மிகவும் சரியாகவே பயன்படுத்துகிறார். உச்சரிப்பு போன்ற, ஒருவேளை ஒப்பீட்டுநிலையில் அவ்வளவு முக்கியமல்லாதவற் றுக்கு ஆங்கில ஆசிரியர்கள் முன்னுரிமை தருகின்றனர்.

ஆம். ஆங்கிலப்பள்ளிகள் பெரும்பாலும் அதைத்தான் செய் கின்றன. ஆங்கிலத்தின் கட்டமைப்பைக் கற்றுவிட்டால் உண்மை யில் ஆங்கிலத்தை எளிமையாக, தவறில்லாமல் பயன்படுத்தலாம். வாசிப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். பேசுவது அடுத்த நிலையில் மட்டும் போதும். அதற்காக ஆங்கிலத்தில் பேசுவதையே கைவிட வேண்டும் என்பதல்ல. என் அனுபவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படிக்கின்ற பொழுது ஆங்கிலம் வாசிப்பது எனக்கு பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் பேச வேண்டி வந்தால் முதலில் அதை மலையாளத்தில் யோசித்து, ஒவ்வொரு வார்த்தையாகப் பொறுக்கி எடுத்து, ஆங்கிலத்தில் பேச வேண்டி வந்தது.

பாணினியையும், பர்த்ரூஹரியையும் நினைத்துக் கொண்டு கேட்கிறேன். இலக்கணக் கல்வி, மொழிக் கல்வி இவற்றிடையே யான வேறுபாட்டை எவ்வாறு விளக்கலாம்?

பாணினி இலக்கணக் கல்வியை உண்மையில் எவ்வாறு கற்பனை செய்திருந்தார் என்று நமக்குத் தெரியாது. கற்றலின் அறிவியல்பூர்வ மான முறையியல் பற்றி அவர் ஒன்றும் கூறுவதில்லை. மொழியை விளக்குவதற்கான மிக நல்ல வழி இலக்கணம் அல்ல என்று சாம்ஸ்கி புரிந்திருந்தார். மிகவும் குறைந்த விதிகளால் மொழியை விளக்கவே அவர் முயன்றார். அதுதான் மொழியைப் புரிந்துகொள்வதற்கான எளிய வழி. பாணினியின் இலக்கணத்திற்கும் நவீன மொழியியலுக் கும் இடையேயுள்ள அடிப்படையான வேறுபாடு, இலக்கணம் என்பது நாம் உருவாக்குவதல்ல, அது நமது மூளையில் முன்னரே நிலைபெற்றிருக்கிறது என்ற புரிதலாகும். பாணினியின் காலம் மொழியியலின் வரலாற்றுக்கு முந்திய காலமாகும். நம்முடையது அதன் வரலாற்றுக் காலம்.

மொழியியலாளர் என்பதைத் தாண்டி மலையாளத்தில் நிறையவே நல்ல கவிதைகளை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். உங்களின் கவிதைகள் சரியான விதத்தில் கவனிக்கப்பட வில்லை. என்று கருதுகிறேன். சஜய் போன்ற ஒரு சிலரே உங்கள் கவிதைகள் பற்றி எழுதியிருக்கிறார்கள். உங்களின் கவிதைகளில் இடம்பெறுகின்ற வடிவரீதியான பன்முகத் தன்மை திடீரென்று பார்வையில் படுவதுண்டு. யாப்பிலும், யாப்பு இல்லாமலும் முன்காலத்தைப் போன்று இப்பொழு தும் நீங்கள் கவிதை எழுதுகிறீர்கள்.

எனக்கு சில வேளை யாப்பு தேவைப்படும். சிலவேளை அது இல்லாமலும் இருக்கலாம். சில கவிதைகளுக்குச் சில குறிப்பிட்ட உருவம் தேவைப்படுகிறது. அப்போது என் தேர்வுகள் சுய நினைவற்று இருக்கும். எனது நல்ல கவிதைகள் எல்லாம் யாப்போடு எழுதப்பட்டவை.

உங்களின் முதல் கவிதையான ‘சந்திரோதயம்’ கூட நிறைய விஷயங்களை அடக்கிவைத்து, குறுகச் சொன்னதல்லவா? ஒருவேளை அதை உரைநடையில் சொல்ல இயலாது. யாப்பு முற்றிலும் வேண்டாம் என்ற கருத்து இப்போது மலையாளக் கவிதையில் மேலோங்கியுள்ளது.

யாப்பு வேண்டுமா? வேண்டாமா? என்பது ஒரு மடத்தனமான கேள்வி. அதை முன்கூட்டியே நிச்சயிக்க முடியாதே? என்னக் கூற நினைக்கிறோமோ அதுதான் உருவத்தைத் தீர்மானிக்கிறது.

யாப்பில் எழுதிய கவிதையை யாப்போடு மொழிபெயர்க்க இயலாதது, மொழிபெயர்ப்பாளனின் தோல்விதான் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் இக்கூற்றை ஒத்துக் கொள்கிறீர்களா? யாப்பு கவிதையின் முக்கியப் பகுதியாகும் போது அது மொழி பெயர்ப்பிலும் இடம்பெற வேண்டுமே? ஷெல்லியின் Ode to a Skylarkற்கு ‘வேழாம்பிலொனோடு’ என்ற பெயரில் வைலோப்பிள்ளி எழுதிய அழகான மொழிபெயர்ப்பு நம்மிடம் உள்ளதே?

சந்தேகமில்லை. யாப்பில் மொழிபெயர்க்க இயலவில்லை என்றால் ‘மன்னிக்கவேண்டும்’, இது ஓரளவு மொழிபெயர்ப்பு மட்டுமே’ என்ற பணிவுரையுடன் மொழிபெயர்ப்பாளர் தன் மொழிபெயர்ப்பை வாசகனின் முன்பு வைக்க வேண்டும்.

மரண ரிப்போர்ட்’, ‘ஞண்டின்றெ தெய்வ சங்கல்பம்’, ‘ஹே, குபேரா’, முதலிய கவிதைகளெல்லாம் நீங்கள் யாப்பில்தான் எழுதினீர்கள். பிறகு வஞ்சிப்பாட்டின் (நதோன்னத) யாப்பை உடைத்து உரைநடை போல எழுதியமுறையும் சுவாரசியமானது.

ஆம். வஞ்சிப்பாட்டின்(நதோன்னத) முதல் அடி எடுத்து அதை நான்காக உடைப்பது எனக்கு மிக விருப்பம். ஒருவேளை அந்த யாப்புதான் உரைநடையுடன் மிக நெருங்கிய யாப்புவகை. நாம் கூற வேண்டியதன் வலிமை குறைந்தால் யாப்பு நம்மேல் ஏறிக் கொள்ளும். இருப்பினும் கொஞ்சம் போராடிப் பார்ப்பதில் தவறில்லை.

அறிவுக்குச் சவால் விடுகின்ற ஏதேனும் ஒன்று எப்போதும் வேண்டுமென்றும், அதன் சுகத்தைத் தான் நீங்கள் அனுபவிக் கின்றீர்கள் என்றும் ஒரு நேர்காணலில் - கவிதையைப் பற்றியல்ல, மொழியியலைப் பற்றி நீங்கள் கூறியிருந்தீர்கள். கவிதையின் விஷயத்தில் இது சரிதானா?

ஆமாம். கவிதையும் சவால் விடுவதாக இருக்க வேண்டும்.

மொழியியலின் அரூபம் கவிதையில் கொண்டு வருவதன் இன்பம்தானா அது?

பலருக்கும் என் கவிதை பிடிக்காமல் போகக் காரணம் இதுவாக இருக்கலாம். என்னை அர்த்தப்படுத்திக் கொள்ள ஒரு குறிப்பிட்ட விவேகத்தன்மை வேண்டும். அவ்வளவுதான்.

மனிதனை மையமிடாத ஒரு உலகப் பார்வையை உங்களுடைய பல கவிதைகளிலும் காணமுடிகிறது. Deep Ecology என்றெல்லாம் இந்நிலையை அழைப்பதுண்டு. ‘பூமியுடெ அவகாசிகள்’ என்ற சொல்லாக்கத்தின் வழி, பஷீர் அதனை மலையாளத்தில் நிலைத் திருக்கச் செய்திருக்கிறார். மலையாளத்தில் இருப்பதால் என்னவோ உங்களுடைய கவிதைகள் கவனிக்கப்படாமல் போயிருக்கிறன. 1962ல் ரேச்சல் கார்ஸனின் ‘சைலண்ட் ஸ்பிரிங்க்’ வெளியான பிறகு மேற்குலகின் மொழி இலக்கியங்கள் பலவற்றிலும் Deep Ecology மிகுந்த செல்வாக்குச் செலுத்தியது. இந்தக் கவிதைகள் உயிர்களுக்கு மட்டுமல்ல, உயிரற்றவைகளுக்காகவும் பேசுகிறது - புல்லினோடு, புழுவோடு மட்டுமல்ல, கற்களோடும்.

மலையாள வாசகனின் விவேகத்தன்மை இன்னும் வளர வேண்டி யிருக்கிறது. இளைய வாசகர்களைப் பொறுத்தவரை கடினமான மொழி, கஷ்டமான கவிதை என்று சில பிரச்சனைகளுண்டு. ரில்கே போன்றவைகள். ஆனால் சிலரெல்லாம் வாசிக்கின்றனர்.

ரில்கெயும் பிறவும், மலையாளத்தில் குறிப்பிடும்படி பேசப்படவே இல்லை.

வாசிப்புச் சமூகம் வளரும் போதுதான் அவ்வாறான கவிதை களுக்குப் பிரச்சாரம் கிடைக்கும்.

நீங்கள் மொழியியலாளன் என்ற நிலையிலா, அல்லது கவிஞன் என்ற நிலையிலா புகழ்பெற விரும்புகிறீர்கள்?

கவிஞனாகத் தான். கவிதைதான் என் முக்கியத் தொழில். அதற்காகத் தான் என் நேரங்களைச் செலவிடுகிறேன்.

பாணினியைக் கொன்ற சிங்கத்தைப் பற்றி உங்களுடைய கவிதையில் கூறப்படுகிறதே. அது மொத்தத்தில் உங்களுடைய கவிதையைப் பற்றியதா?

அல்ல. அது சாம்ஸ்கியன் மொழியியலைப் பற்றியது. சாம்ஸ்கியன் மொழியியல் தன்னளவில் முழுமையானதல்லை, முடிவானதுமில்லை. ஒரு கட்டத்தை அடைந்தபோது பாணினியைக் கொல்ல வேண்டியதாகிவிட்டது.

Pin It

இந்திய நிலப்பரப்பில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலை -இலக்கியக் கொள்கைகள் உருவாக்கம் கொண்டன. உரையாசிரியர்கள் இக்கொள்கைகள் மீதான விவாதங்களை பதினோழாம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக நிகழ்த்தினர். பதினோழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் அதிகாரமைய மாற்றம் கல்விப்புலத்திலும் கால்கொண்டது. இதனால் இந்தியாவின் தொன்மையான கலை - இலக்கிய சிந்தனை மரபில் உருத்திரண்டிருந்த இலக்கிய அணுகுமுறை புடைமாற்றமடைந்து மேற்கத்திய ஆய்வு மரபில் இணைந்துவிட்டது. இதன் நீட்சியால் சமசுகிருதம் - திராவிடம் உருவாக்கிய கலை - இலக்கியக் கொள்கைகள், கோட்பாடுகள் குறித்த உரையாடல் மேலெடுக்கப்படவில்லை. இதனால் இலக்கிய வாசிப்பிலும் ஆய்விலும் மேற்கத்திய மனநிலை இடம்பெற்ற தொடு இந்திய பாரம்பரிய சிந்தனை மரபுகள் மீதான இடையறாத மறுவாசிப்பில் பெரும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது.

அறுபட்டுப்போன சமசுகிருத அழகியலையும் திராவிட சூழிடவியல் / திணையியல் கோட்பாட்டையும் மலையாள சிந்தனையாளரான கெ.அய்யப்ப பணிக்கர் சமசுகிருதம் X திராவிடம் எனும் எதிர்வாகக் கருதாமல் இரண்டையும் ‘இந்திய’ நிலப்பரப்பின் தொன்மையான பாரம்பரியம் மிக்க சிந்தனை மரபுகளாக அணுகுவதன் மூலம் இந்திய நிலப்பரப்பிற்கான இலக்கியக் கோட்பாட்டினை “இந்திய இலக்கியக் கோட்பாடுகள் சூழல் - பொருத்தம்” எனும் நூலின் மூலம் கட்டமைக்க முயற்சித்துள்ளார்.

இந்த நூலாக்க செயல்முறை சமசுகிருதத்தின் கலை - இலக்கிய கொள்கைகளான ரசம், தொனி, அனுமானம், வக்ரோத்தி, ரீதி, அணி, ஒளசித்யத்தோடு திராவிட திணைக் கோட்பாட்டையும் புதிய முறையியலில் அறிமுகம் செய்வதாகவுள்ளது.

இந்த அறிமுகம் சமசுகிருத அழகியல் கொள்கைகளையும் திராவிட திணையியலையும் மிக நுட்பமாக அவற்றின் சாரத்தை முன்வைப்பதாக மட்டுமல்லாமல் இன்றைய இலக்கியங்களின் மீது பொருத்துகிறார். இதனால் அவற்றின் தற்கால ஏற்பமைவை உறுதிபடுத்தியிருக்கிறார்.

கலை - இலக்கியங்களின் மீதான வாசிப்பும் ஆய்வும் மேற்கத்திய / ஐரோப்பிய அறிவு மரபுகளின் அடிப்படையில் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் மாறியிருந்தது. இதற்கு எதிராக அய்யப்ப பணிக்கர் செய்திருக்கும் இவ்வாய்வு தமிழியல் ஆய்வை மற்றொரு முற்றிலும் மாற்றான கருத்து நிலைகளை அறிமுகம் செய்வதாகவுள்ளது.

இந்த நூலை அறிமுகம் செய்யும் தொழிற்பாட்டிற்கு கீழ்வருமாரு தொகுத்து புரிந்துக்கொள்வது  வசதியாக இருக்கும்.

  • அச்சு ஊடகவருகையால் பதினெட்டாம் நூற்றாண்டின் இருதியில் சமசுகிருத இலக்கிய, இலக்கணங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இதனை ஆதாரமாகக் கொண்டு மார்க்ஸ்முல்லர் போன்றவர்கள் கீழைத்தேய / இந்தியவியல் ஆய்வு சமசுகிருதத்தினை அடிப்படை யாகக் கொண்டே நிகழ்த்தப்படுதல் வேண்டும் என உறுதிப்படுத் தினர். 19ஆம் நூற்றாண்டின் இற்தியில் கால்டுவெல் சமசுகிருதத்திற்கு மாற்றான திராவிட கருத்து நிலையை முன்வைத்தார். இவ்விரு போக்குகளும் ஆய்வுப்பரப்பில் மோதல் மன நிலையை ஏற்படுத்தியது.

இதற்கு மாற்றாக இரு மொழிகளின் கலை - இலக்கிய கொள்கைகளை இந்திய நிலப்பரப்பின் இரு பாரம்பரிய சிந்தனை மரபுகளாக்கக் கட்டமைத்தல்.

  • அவ்வாறு கட்டமைக்கப்பட்ட கோட்படுகளை மேற்கத்திய இலக்கியக் கொள்கைகளுக்கு நிகரான - எதிர் நிலையில் முன்வைத்தல்.
  • இந்திய - மேற்கத்திய கோட்பாடுகளின் பொருத்தப்பாடு சாத்தியப் படும் பட்சத்தில் இரண்டையும் இணைத்தல். அதன் மூலம் புதுமையான வாசிப்பு, ஆய்வு அணுகுமுறையை உருவாக்குதல்.
  • மேற்கத்திய இலக்கியக் கோட்பாடுகளால் பல மாற்றங்களை உள்வாங்கியிருக்கும் இலக்கியங்களின் இன்றைய போக்குகளின் ஏற்பமைவிற்குள் பாரம்பரிய இந்திய கோட்பாடுகளைப் பொருத்துதல். 
  • இந்திய நிலப்பரப்பிற்கு தொடர்பில்லாத பிறமொழி இலக்கியங்களில்   இந்திய கோட்பாடுகளைப் பொருத்துவதன் மூலம் உலகிலேயே மிகத் தொன்மையானதும் முக்கியமனதுமாக திராவிட சமசுகிருத கோட்பாடுகள் உள்ளதை உறுதிப்படுத்துதல். (பக். 117, 129)
  • சமசுகிருத கொள்கைகளை விட திராவிட திணையியல் கோட்பாடு ஆற்றல் மிக்கதும் வளமானதுமாக இருப்பதை சார்பின்றி கோட்பாட்டின் சாரத்தின் அடிப்படைகளை முன்வைத்து நிறுவுதல். இதனை பின்வரும் பகுதிகள் உறுதிபடுத்துகின்றன. “சொல்லிற்கு வெளியே நிற்பதும் அதனின்றும் மாறுபட்டதுமே தொனி என்றால் உள்ளுரை எனும் கொள்கையின் ஆற்றல் தொனிக்கு இல்லை யென்றுதான் கூற வேண்டும்” (ப. 39)
  • “சமஸ்கிருத இலக்கியச் சிந்தனையில் மிகவிரிவாக விவாதிக்கப் பட்டுள்ள தொனிக் கோட்பாட்டை விட மேலைத் திறனாய்வாளர்கள் கவனம் செலுத்திய படிமக் கோட்பாட்டை விட ஆற்றல் மிக்க, வள்மான ஒரு உணர்ச்சியும் பொருளும் இணைந்த நிறைவே பொருளதிகாரத்தில் உள்ளுரை உவமையால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.’’ (ப. 126) 
  • இவ் அணுகுமுறைகளில் இந்திய இலக்கியக் கோட்பாடுகளை அவற்றின் நுண்மையான வடிவத்தை கண்டடைந்து விளக்குதல்; விரிவாக்கம் செய்தல்; அறுபட்டுப்போன விவாதத்தை மீட்டெடுத்தல்.

மேலே தொகுக்கப்பட்ட பணிக்கரின் அவதானிப்புகள் தமிழியல் ஆய்வில் இதுவரை இல்லாத எதிர்வினையை ஏற்படுத்துவதாக இருக்கும். தமிழியல் ஆய்வை பல புதிய கருத்து நிலைகளை கொண்டுசேர்த்து செழுமையடையச்செய்யும் இந்தக் கடினமான ஆக்கத்தை மலையாள மொழியிலிருந்து மொழிபெயர்த்தது என்று அறியமுடியாதளவு மொழியாக்கம் செய்திருப்பவர்  ந.மனோகரன்.

Pin It

தொகுதி 1 : சென்னை இலௌகிக சங்கம் (1878-1888)

தத்துவ விவேசினிThe Thinker இதழ்கள் வழிப் பதிவுகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சூழலில் செயல்பட்ட சென்னை இலௌகிக சங்கம் என்னும் அமைப்பு குறித்து யாரும் அறியாத சூழல் இதுவரை நிலவிவந்தது. இப்பொழுது அவ் வமைப்புத் தொடர்பான ஆவணங்களை வெளிப்படுத்தும் வகையில் சென்னை இலௌகிக சங்கம் (1878 - 1888) தத்துவவிவேசினி – The Thinker  இதழ்கள் வழிப் பதிவுகள் என்பதாக இம்முதல் தொகுதி அமைகிறது. இத்தொகுதியில் இதுவரை அறியப்படாத நாத்திக இயக்கத்தின் கோட்பாடுகள், இயக்கத்தின் அமைப்பு விதிகள், செயல்பட்ட முறைமைகள் ஆகியவை மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தத்துவ விவேசினி மற்றும் The Thinker ஆகிய இதழ்களிலிருந்து சென்னை இலௌகிகசங்கம் தொடர்பான விவரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத் தொகுதியில் தமிழில் 262 பதிவுகளும் ஆங்கிலத்தில் 161 பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. சென்னை இலௌகிக சங்கம் குறுநூல் வெளியீட்டு அமைப்பு ஒன்றையும் கொண்டிருந்தது. அவ்வமைப்பின் மூலம் பல நூல்கள் வெளியிடப்பட்டன. அவர்களின் முதல் வெளியீடான வருணபேதச் சுருக்கம் (1885). அந்நூல் பின்னர் வருண பேத விளக்கம் என்னும் பெயரில் இரண்டு முறை அச்சிடப்பட்டுள்ளது. வருண பேத விளக்கமே இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இத்தொகுதி 648 பக்கங்களைக் கொண்டது.

தொகுதி 2 : தத்துவம், கடவுள், நாத்திகம்

சென்னை இலௌகிக சங்கம் என்பது நாத்திக கருத்துப் பிரச்சார சங்கமாகும். இதற்கென அவர்கள் தத்துவ விசாரிணி, தத்துவ விவேசினி,  ஆகிய இதழ்களை நடத்தினர். தத்துவ விவேசினி Philosophic Enquirer, The Thinker இதழில் கடவுள் மறுப்பு எனும் கருத்து சார்ந்து  உருவாகும் நாத்திகக் கோட்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட 242 கட்டுரைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இயற்கை அறிவும் பகுத்தறிவும், ஆஸ்தீக நாஸ்தீக சம்வாதம், கடவுள் இலக்கணம், மெய்யறிவு போன்ற பிற தலைப்புகள் கடவுள் இருப்பைக் குறித்த கேள்வியை முன்வைக் கின்றன. கடவுள் இருப்பைச் சந்தேகத்திற்கு உள்ளாக்கும் கோட்பாடு களைச் சங்கா நாஸ்திகம் என்னும் தலைப்பில் இலௌகிக சங்கத்தினர் பயன்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். தங்களைச் சுயசிந்தனை யாளர்கள் என்று அழைத்துக் கொண்டு சுயாக்கியானிகள் என்ற பெயரில் இயங்கிய இவ் லௌகிக சங்கத்தினர் உலகம் தழுவிய நாத்திக உரையாடலைத் தமிழ்ச் சூழலுக்குக் கொண்டுவந்தவராவர். இக்கருத்தினைப் புரிந்து கொள்ளும் வகையில் தொகுதி இரண்டில் அமைந்துள்ள கட்டுரைகள் உள்ளன. இத்தொகுதி 487 பக்கங்களைக் கொண்டது.

தொகுதி 3: சாதி, பெண்கள், சமயம்

சென்னை இலௌகிக சங்கம் அடிப்படையில் வருணக் கோட்பாட்டை  எதிர்க்கும் அமைப்பாக இருந்தது. மனுநீதியை கடுமையாக விமர்சனம் செய்தனர். இங்குச் செயல்பட்ட மதங்கள் அனைத்தையும் மறுத்தனர். அவை குறித்த விரிவான விமர்சனங் களைச் செய்தனர். மதத்தின் மூலம் ஏற்படும் கொடுமைகளை விரிவாக எழுதினர். தமிழ்ச் சூழலில் புதிதாக உருவான பிரும்ம ஞான சபையைத் தீவிரமாக விமர்சனம் செய்தனர். இந்த வகையில் இத்தொகுதியில் 270 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை இந்து மதம், கிறித்தவ மதம், இசுலாமிய மதம், பிரும்மஞான சபை போன்ற அமைப்புகள் ஆகிய அனைத்திலும் உள்ள மூட நம்பிக்கைகளையும் அறிவுக்குப் புறம்பான கருத்துகளையும் விரிவாக விமர்சனம் செய்திருப்பதைக் காணமுடிகிறது. வெகுமக்கள் மூட நம்பிக்கை சார்ந்து செய்த பல்வேறு சடங்குகளையும் விமர்சனம் செய்துள்ளனர். இத்தொகுதியில் நாத்திக மரபின் செழுமையான செய்திகளைப் பதிவுசெய்திருப்பதாகக் கருதமுடியும். இத்தொகுதி 469 பக்கங்களைக் கொண்டது.

தொகுதி 4: காலனியம், விஞ்ஞானம்,மூடநம்பிக்கை

காலனியம், விஞ்ஞானம், மூடநம்பிக்கை என்னும் தலைப்பில் அமைந்த இந்தத் தொகுதியில் 477 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்ச்சூழலில் காலனியம் ஏற்படுத்திய மாற்றங்கள் மிகுதியாகும். காலனியம் உருவாக்கிய கல்வி, அச்சுமரபு ஆகியவைபுதிய புதிய தகவல்களைத் தமிழ்ச் சூழலுக்குக் கொண்டுவந்ததை அறிகிறோம். அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில்உருவான அறிவியல் மாற்றங்களைத் தமிழ்ச்சூழலுக்கும் காலனியம் தான் கொண்டுவந்தது. இவ்விதம் உருப்பெற்ற மாற்றங்களை இலௌகிக சங்கத்தினர் எவ்வகையில் தமது இயக்கப்பணிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை இத்தொகுதியில் காணப்படும் கட்டுரைகள் மூலம் அறியமுடியும். இத் தொகுதியில் உள்ள அறிவியல் செய்திகள் குறித்த கட்டுரைகள் நவீன அறிவியலைத் தமிழுக்குக் கொண்டுவந்ததை காட்டுவதாக அமைகின்றன. சமூகத்தில் நிலவிய பல்வேறு மூடநம்பிக்கைகளை அறிவியல் கண்டுபிடிப்புகளே மறுத்தன. இந்த அடிப்படைக் கருதுகோளை இத்தொகுதியில் உள்ள கட்டுரைகளின் மூலமாகப் புரிந்து கொள்ள முடியும். இத்தொகுதி 648 பக்கங்களைக் கொண்டது.

தொகுதி 5: Atheism and Theism

Atheism and Theism என்னும் ஆங்கிலத் தலைப்பில்  அமைந்துள்ள இத்தொகுதி The Thinker  என்னும் ஆங்கில இதழில் வந்த நாத்திக மற்றும் ஆத்திக மரபுகளைப் பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ளது. இத்தொகுதியில் 356 ஆங்கிலக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் உலகம் தழுவிய  அளவில் நாத்திக மரபு எவ்வகையில் உருப்பெற்று வளர்ந்து வந்துள்ளன என்பதை விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். கிறித்தவ மதம் எவ்வகையான மூட நம்பிக்கைகளை பரப்பி அறிவியலுக்குப் புறம்பாகச் செயல்பட்டது என்பதை இத்தொகுதி யில் உள்ள கட்டுரைகளின் மூலம் அறிகிறோம். அதைப் போலவே பிரும்ம ஞான சபையினர் பரப்பிய மூடநம்பிக்கைகள் குறித்தும் இத்தொகுதியில் கட்டுரைகள் அமைந்துள்ளன. லண்டன் நகரில் இருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகைகளிலிருந்து பல்வேறு கட்டுரைகளை இவ்விதழில் மறுபிரசுரம் செய்துள்ளதைக் காண்கிறோம். Secular Review, Anti Christian போன்ற பல பத்திரிகைகளின் கட்டுரைகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள் ளன. இத்தொகுதி 568 பக்கங்களைக் கொண்டது.

தொகுதி 6 : Women - Culture and Poverty

Women - Culture and Poverty என்னும் ஆங்கிலத் தலைப்பில் அமைந்துள்ள ஆறாவது தொகுதியில் 233 ஆங்கிலக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சென்னை இலௌகிகசங்கத்தினர் ஒடுக்கப் பட்ட பெண்களுக்காகவும் வறுமைக்கெதிராகவும் செயல்பட்டனர். மால்தூசியன் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி வறுமையை ஒழிக்க வேண்டும் எனக் கருத்துப் பிரச்சாரம் செய்தனர். குழந்தை மணத்தை மறுத்தனர். விதவை மணத்தை போற்றினர். மேற்குறித்த செய்திகள் தொடர்பான விரிவான ஆங்கிலக் கட்டுரைகளை இவ்விதழில் காண்கிறோம். இத்தொகுதியிலும் லண்டனில் இருந்து வெளிவந்த ஆங்கில இதழ்களிலிருந்து பல்வேறு கட்டுரைகள் மறுபிரசுரம் செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இத்தொகுதி 512 பக்கங்களைக் கொண்டது.

இவ் ஆறு தொகுதிகளையும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.3000. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூக வரலாற்றை எழுத விரும்புவோர்க்கான ஆவணமாகிய இத்தொகுதிகளை ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்தொகுதிகளில் மொத்தம் 2000 கட்டுரைகள் உள்ளன. பக்கங்கள் 3330 ஆகும்.

Pin It

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  84 பக்கங்களுடன் மாற்றுவெளியின் முதல் இதழ் வெளியாயிற்று. 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் 176 பக்கங்களுடன் மாற்றுவெளியின் பத்தாவது இதழ் வெளியாகியுள்ளது. 

நான்கு ஆண்டுகளில் ஆய்விதழின் பக்கங்கள் இரட்டிப்பாகி விட்டன. மாற்றுவெளியின்  வெளியீட்டில் இது ஒரு நல்ல அறிகுறி.  முதல் இதழ் மெலிந்து காணப்பட்டது.  ஆனால் பத்தாவது இதழோ நல்ல பருமனாக, வண்ணமாக வெளியாகியுள்ளது. 2008ஆம்  ஆண்டில் ஓர் இதழும் 2009ஆம் ஆண்டில் ஓர் இதழும்  2010ஆம் ஆண்டில் மூன்று இதழ்களும் 2011ஆம் ஆண்டில் மூன்று இதழ்களும்  வெளிவந்துள்ளன. 2012இல் இதுவரை இரு இதழ்கள் வெளியாகி யுள்ளன. மேலும் ஓரிரு இதழ்கள் வெளியாகலாம் என்னும் எதிர்பார்ப்பு உள்ளது. ஓராண்டில் குறைந்தது மூன்று இதழ்களாவது வெளிவர வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்று நினைக்கிறேன்

ஆனால் மாற்றுவெளி தன்னை எந்தக் காலவரையறைக்கும் உட்படுத்திக்கொள்ளவில்லை.  காலாண்டிதழ்  என்றோ அரை யாண்டிதழ் என்றோ ஒரு சட்டகத்திற்குள் மாற்றுவெளி  தன்னை அடக்கிக்கொள்ளவில்லை.  இவ்வாறு அடக்கிக்கொள்ளாதது அதற்குக் கிடைத்திருக்கும் சுதந்திரம்.

மாற்றுவெளி ஆய்விதழ் தன்னைக் காலவரையறைக்குள் அடக்கிக்கொள்ளாவிட்டாலும் வேறொரு சட்டத்திற்குள் தன்னை உட்படுத்திக்கொண்டுள்ளது. ஏதேனும் ஒரு பொருண்மை அடிப்படையில்தான் ஆய்விதழ் வெளிவரும் என்று மாற்றுவெளி  தனக்கு ஒரு வரையறையை  விதித்துக்கொண்டது.

பொருண்மையை அடிப்படையாகக் கொண்ட ஆய்விதழ் என்பது மாற்றுவெளியின் தனித்தன்மை, அதன் வேறுபட்ட அடையாளம். இதுவரை வந்துள்ள பத்து இதழ்களும்  பத்துப் பொருண்மைகளில் வெளியாகியுள்ளன.எல்லாப் பொருண்மைகளும் எல்லோர்க்கும் உகந்ததாகவோ எல்லோரையும் கவர்வதாகவோ இருக்க முடியாது.

கால்டுவெல் சிறப்பிதழும், தமிழ்ச் சித்திரக்கதைச் சிறப்பிதழும் என்னைக் கவர்ந்தன.  அந்த இரு இதழ்களையும் நான் முழுமையாக, முன்னட்டையிலிருந்து பின்னட்டை வரை, படித்தேன். கால்டுவெல் சிறப்பிதழ் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம் சொல்லத் தேவை யில்லை. நான் மொழியில் ஆய்வு செய்பவன்.

சித்திரக்கதைச் சிறப்பிதழ் என்னைக் கவரக் காரணம்,21 அது என் இளவயது வாசிப்பு நினைவுகளையும், என்  மகனின் இளவயது வாசிப்புப் பழக்கத்தையும் கிளறிவிட்டதாக இருந்ததுதான். அந்தச் சிறப்பிதழின் அழைப்பாசிரியர் கண்ணனைத் தொலைபேசியில் அழைத்து என் கிளர்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.  மேலும், சித்திரக்கதைகளைச் சேகரித்து வைத்திருக்கும் சிலரின் அனுபவங்கள் அந்த இதழில் வெளியாகியிருந்தன. அவற்றைச் சேகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அவர்கள் பட்ட தொல்லைகளை, என் மகனின் மிக்கி மௌஸ் தொகுப்புகளை அண்மையில் பழைய பத்திரிகைகார ரிடம் எடைக்குப் போட்ட செயலுடன் ஒப்பிட்டபோது ஒரு நெருடல் உணர்வு தோன்றியது. நண்பர் கண்ணன் சித்திரக்கதை தொகுப்பாளர் கலீல் என்பவரிடம் என் நெருடல் உணர்வைத் தெரிவித்தார். அவர் என்னைத்  தொலைபேசியில் அழைத்துப் பேசியது மனதிற்கு மகிழ்ச்சி தந்தது.

தமிழ் நாவல் சிறப்பிதழ், தமிழ்ச் சிறுகதைச் சிறப்பிதழ், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகச் சிறப்பிதழ் ஆகிய மூன்றையும் அவற்றுள் அடங்கியிருக்கும் தரவுகளுக்காக அவற்றைக் கருவி நூல்களாக (Reference works) வைத்திருக்கிறேன்.ஏனைய ஐந்து சிறப்பிதழ்களுள் ஓரிரு கட்டுரைகளைப் படித் திருக்கிறேன்; பக்கங்களைப் புரட்டிப் பார்த்திருக்கிறேன்.

ஒரு கேள்வியை இங்கே எழுப்ப வேண்டும். ஓர் ஆய்விதழை எப்படி மதிப்பீடு செய்வது? அந்த ஆய்வேட்டின் தாக்கத்தை அறிந்துகொள்ள வழிமுறை உண்டா?

எத்தனை பிரதிகள் விற்பனை ஆகின்றன என்பதைக் கொண்டு ஒரு நாளேடு, தன்  இடத்தை அளவிடலாம். ஆய்வேடு circulation என்பதை அடிப்படையாகக் கொள்ளவே முடியாது. சில நூறு பிரதிகளே ஆய்வாளர்களைச் சென்றடைகிற ஆய்விதழின் இடத்தை அல்லது தாக்கத்தை வேறு வழியில்தான் அறிய வேண்டும்.

ஆய்விதழின் செல்வாக்கு என்பது Impact Factor வழியாகக் கணிக்கப்படுகிறது. இந்த Impact factor எப்படி தீர்மானிக்கப் படுகிறது என்று பார்ப்போம்.அறிவியல், சமூகவியல் ஆகியவற்றில் பொதுவாகவும் அவற்றின் ஒவ்வொரு துறைக்கும் சிறப்பாகவும் பல ஆய்விதழ்கள் உலக நாடுகளில் வெளியாகின்றன. Science என்ற ஆய்விதழும்,  Nature என்னும் ஆய்விதழும் ஆய்வாளர்களால் மிகவும் மதிக்கப்படுகிற ஆய்விதழ்கள். அவற்றில் வெளியாகும் கட்டுரைகள் தீவிரமான ஆய்வுகளின் வெளிப்பாடுகள். இவ்விரு ஆய்விதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகள் உலக அளவில் அந்தந்தத் துறை சார்ந்தவர்களால் கவனிக்கப்படுகின்றன. ScienceWatch.com என்னும் இணையதளத்தில் ஜனவரி 1999இலிருந்து மார்ச்சு 2009 வரையான 10 ஆண்டுகளில் 

“அதிக அளவில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட முதல் பத்து ஆய்விதழ்கள்” (Top Ten Most-cited Journals) பட்டியலில் Nature மூன்றாவது இடத்திலும் Science நான்காவது இடத்திலும் உள்ளன.

1999-2009 இந்தப் பத்தாண்டுகளில் Nature ஆய்விதழில் வெளியான  ஆய்வுக்கட்டுரைகள்  10,549. இவை உலகெங்குமிருந்து வெளிவரும் ஆய்விதழ்களில் 12,42,392 முறை மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. Science ஆய்விதழில் 1999-2009 பத்தாண்டுகளில் வெளியான ஆய்வுக்கட்டுரைகள் 9,369. இவை 11,25,022 முறை மேற்கோளாகக் காட்டப்பட்டதாகப் புள்ளிவிவரம் ScienceWatch.com இல் தரப்பட்டுள்ளது. 

ஆய்விதழ்களில் வெளியாகும் கட்டுரைகள் எந்தெந்த ஆய்விதழ் களில் மேற்கோளாக  ஆளப்பட்டன என்பதை Thompson Reuters கணக்கெடுத்துப் புள்ளிவிவரங்களைத் தருகிறது. நூலகவியலில், தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ளவர்கள்  Impact Factor பற்றி அறிவார்கள். அதன் நுணுக்கங்கள், அதன் போதாமை, போதாமையை நிறைவுசெய்வது என்பன குறித்து ஆய்வுகள் நிரம்ப உண்டு.

தமிழகத்தில் வெளியாகும் ஆய்விதழ்களில் Impact Factor என்பது அறியமுடியாத ஒன்று. இது தேவைதானா, தேவையற்றதா என்பது ஒரு கேள்வி. தேவை என்றால் அதனை நிறைவேற்று வதற்கான சாத்தியக்கூறுகள் நம்மிடையே உண்டா என்பது மற்றொரு கேள்வி.  Impact Factor என்பதை  இதோடு நிறுத்திவிட்டு மாற்றுவெளியின்  புதுமைக்கு வருகிறேன்.

பொருண்மை அடிப்படையில் ஆய்விதழ் என்பது மாற்று வெளிக்குத் தனித்தன்மையும் அடையாளமும் தந்திருப்பது உண்மைதான், என்றாலும் நான் கவனித்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பொருண்மை அடிப்படையில் ஆய்விதழ் வெளியாகும்போது பொருண்மை முதன்மைபடுத்தப்படுகிறது; ஒரு பொருண்மையின் விவரிப்புகள் முக்கியமாகின்றன. ஒரு பொருண்மையைப்பற்றி எழுதுகிறவர்கள் தங்கள் பங்களிப்பைத் தருகிறார்கள். ஆனால் அவர்கள் - கட்டுரையாளர்கள் - தனிக் கவனம் பெறுவதில்லை.

இதை வேறு வகையில் சொல்கிறேன்:

கல்விச் சிறப்பிதழில், மாற்றுப் பாலியல் சிறப்பிதழில்யாருடைய கட்டுரை நினைவில் நிற்கிறது? இது போன்ற கேள்விகளை எழுப்புவது வீண் என்று தோன்றுகிறது. ஒவ்வொருவரும் அந்தந்தப் பொருண்மைக்குத் தங்கள் பங்களிப்பைத் தந்துவிட்டு அந்தப் பொருண்மையில் கரைந்துபோய்விடுகிறார்கள். கட்டுரையாளர் முக்கியத்துவம் பெறுவதில்லை; அந்தப் பொருண்மையின் எடுத்துரைப்பில் அவர்கள் கர்ப்பூரம் கரைவது போல் தங்களை இழக்கிறார்கள்.

இதற்கு மாறாக, பொருண்மையை அடிப்படையாகக் கொள்ளாத ஆய்விதழ்களில் கட்டுரையாளர்  முதன்மை பெறுகிறார், அவரின் கட்டுரை ஆய்வுச்செறிவுடன் இருக்குமேயானால், ஆய்விதழில் வெளியாகி அவரையும் அவரின் ஆய்வையும் பலரின் கவனத்திற்குக் கொண்டுவருகிறது.

பொருண்மையை அடிப்படையாகக் கொண்ட மாற்றுவெளி ஓர் அரங்கம் போன்றது; அந்த அரங்கத்தில் கட்டுரையாளர்கள் குழுவாக நின்று தங்கள் பங்கை நிகழ்த்துகிறார்கள். ஆனால், அந்தக் குழுவில் நாயகனோ நாயகியோ கிடையாது. பொருண்மைக்கு முதன்மை அளித்துவிட்டுத் தங்களை முதன்மைப்படுத்திக்கொள்ளாத பங்களிப் பாளர்களின் அடக்கம் மிகப் பண்பட்ட ஒன்று.இந்தப் பண்பை வளர்த்தெடுக்கிற சிறப்பாசிரியரையும் அழைப்பாசிரியர்களையும் பாராட்டுகிறேன்.

இன்னும் ஐந்தாண்டுகளில் மாற்றுவெளி தன் இருபத்தைந்தாவது இதழைக் கொண்டுவந்து விழா எடுக்கும் என்று நம்புகிறேன்.

Pin It