maatruveli_nov13

தொடர்பு முகவரி: பரிசல் புத்தக நிலையம், எண்: 96 J பிளாக், நல்வரவுத் தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி,
அரும்பாக்கம், சென்னை - 106.
செல்பேசி: 93828 53646, மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மெக்கன்சி குறித்த இன்றைய புரிதல் குறித்த உரையாடல்

இந்தியாவின் நில அளவைத் துறையின் முதல் தலைவ ரான மெக்கன்சி தாம் கண்ட கட்டடக் கலை சார்ந்த முக்கிய மான கட்டங்கள் அனைத்தையும் வரைந்தார். அது நாள்வரை இந்தியா அறிந்திராத ஓவியங்களையும் ஓலைச் சுவடிகளை யும் சேகரிப்பதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி கண்டவர். ஆனால் அவர் எழுத முயன்ற வெகுசில கட்டுரை களும் அரைகுறையாகவே இருந்தன. அவரிடம் இருந்த அறிவுக் களஞ்சியத்தில் பத்தில் ஒன்பது பங்கு அவருடனேயே மரித்துவிட்டது.

-ஜேம்ஸ்ஃபெர்குசன்,1876

1799இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார். 1858இல் இந்தியா என்ற நிலத்தின் பெரும்பகுதி பிரித்தானிய அரசியின் ஆதிக்கத்திற்குட் பட்டது என அறிவிக்கப்பட்டது. 1947இல் ஆட்சி அதிகாரம் கைமாறியது. பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியர்களின் ஊடாட்டம் இந்நிலப்பகுதியில் இருந்தாலும், சுமார் 150 ஆண்டு களில் ஐரோப்பியர்கள் உருவாக்கிய கல்வி ஆய்வு மற்றும் நிர்வாகம் தொடர்பான நிறுவனங்கள், இந்த மண்ணில் இருந்த அறியப்படாத பலவற்றை அறியும் வாய்ப்பை உருவாக்கியது. ஐரோப்பிய மண்ணில் உருவான புத்தொளி மரபின் வளங்களை இந்த மண்ணிற் கும் மடைமாற்றம் செய்தனர். ஆட்சி அதிகாரம் மற்றும் சமயப் பரப்பல் நோக்கில் நிகழ்ந்த இச்செயல்களால், ‘இந்தியா’ என்ற பகுதியின் பல்வகைப் பரிமாணங்கள் புரிந்து கொள்ளப்பட்டன.

ஐரோப்பியப் புத்தொளி மரபால் உந்துதல் பெற்ற அந்த நிலப் பகுதியின் இளைஞர்கள் பலர் கீழைத்தேயத்தைக் கண்டுபிடிப் பதில் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தனர். அவ்வகை ஆர்வம், சமயப் பரப்பல் அனைத்து தரப்பு வரலாறுகளையும் மீள்கட்டமைப்பு செய்தல் எனும் செயல்களின் வழியாக வெளிப்பட்டது. அவர்கள் பாதிரியார்களாகவும் ஆட்சி செய்யும் அதிகாரிகளாகவும் ஆராய்ச்சி யாளர்களாகவும் இம்மண்ணில் செயல்புரிந்தனர். இவை ஒருவகை யான அதிகாரச் செயல்பாடுகளே. அறிதல் எனும் செயல் அதிகாரத் தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதிகாரத்தின்வழி உருவான அறிவுசார், புலமைசார் செயல்களை, விளைவுகளை இன்று நமது கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளும் தேவை உருவாகி யுள்ளது. இந்தப் பின்புலத்தில் கர்னல் காலின் மெக்கன்சி குறித்தப் புரிதலுக்கு முயற்சி செய்வோம்.

-           மெக்கன்சி எனும் நில அளவையாளர் - இராணுவவீரர் - ஆட்சி யாளர் குறித்து உரையாடல் நிகழ்த்தவேண்டிய தேவை உருவாகியுள்ளதா? ஆம் எனில் அதற்கான தர்க்கங்கள் எவையெவை?

-           மெக்கன்சியின் தொகுப்புகள் மறுஆய்வுக்கு உட்படும் சூழலில் தமிழியல் ஆய்வில் அதற்கான இடத்தை எப்படி வரையறை செய்து கொள்வது?

-           மெக்கன்சி குறித்து அண்மைக்காலங்களில் நிகழ்த்தப்படும் ஆய்வுகளின் வளங்களை எவ்வகையில் உள்வாங்குவது?

-           மெக்கென்சியை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியச் சமூகம் எவ்வகையில் எதிர்கொண்டது? தமிழ்ச்சமூக எதிர்கொள்ளல் எவ்வகையில் நிகழ்த்தப்பட்டது?

-           மெக்கன்சி தொகுப்புக்களின் இன்றைய நிலை என்ன? மெக்கன்சி தொகுப்புகள்சார் அருங்காட்சியகம் ஒன்றை நமது சூழல் உருவாக்குமா?

நவீன வரலாற்று மானிடவியலில் நிலம் மிக முதன்மையான குறியீடு. நிலம் என்பது அறியப்படாது இருந்த காலத்திலிருந்து, அதற்கு ஓர் அடையாளம் கொடுக்கப்படும் காலம் வரையிலான வரலாறு நமக்குத் தேவைப்படுகிறது. பொது என்ற நிலைமாறி தனிப்பட்டவர் சொத்து எனும் அதிகாரச் செயல் நிலம் சார்ந்து நடைபெற்றது. இந்தச் செயல் நடைபெறும் காலத்தில் அதன் அளவு; எல்லை, பரப்பு எனும் கோணங்களில் மதிப்பீடு செய்யப்படுகிறது. தொடக்ககாலத் தமிழ் நிலப்பரப்பில் ‘நாடுகள்’ எனும் பண்பாட்டு அடையாளம், வட்டாரம் சார்ந்து அடையாளப்படுத்தப்பட்டது. கொங்குநாடு, நடுநாடு, தொண்டை மண்டலம் என்பவற்றை இதற்கான எடுத்துக்காட்டாகக் கூறலாம். வட்டார அடையாளம் என்பது அரச அதிகார ஆட்சியில், குறிப்பிட்ட அரசர்களின் எல்லை களாகக் கட்டமைக்கப்பட்டன. அந்த எல்லைகளைக் கடப்பது, அபகரிப்பது, அதிகாரம் செலுத்துவது என்பது நடைமுறையில் இருந்தது.

பிற்காலச் சோழர் காலத்திற்குச் சற்று முன்பு, நாடு, கோட்டம், மண்டலம், ஊர் எனும் அடையாளங்கள் உருவாக்கப் பட்டன. இக்காலத்திலும் நிலத்தை அளந்து பிரித்ததாக அறிய முடியாது. ஊக எல்லைகள் இருந்தன. பிரித்தானிய அரசு உருவாக் கத்தில் தான் நிலம் அளக்கப்பட்டது. எல்லைகளை வரைபடங்களாக வரைதல் தொடங்கியது. ஐரோப்பிய சமூகத்தில் நிகழ்ந்த நில அளவையை இங்கும் நடைமுறைப்படுத்தினர். இவ்வகையான நில அளவையின் முதன்மையான நபராக மெக்கன்சி செயல் படுகிறார். கீழைத்தேயக் கணக்கியலைப் படிக்க வந்தவர்; போர் வீரராக நின்று நாடுகளை வெற்றி கொண்டதால் (திப்புசுல்தான் முறியடிப்பில் முக்கியப் பங்காற்றியவர் மெக்கன்சி) நிலங்களை அளவு செய்து, பிரித்தானிய அரசுக்குக் கொடுக்கும் வேலை வழங்கப்பட்டது.

நிலத்தோடு அவருக்கு உருவான உறவு, நிலத்தில் இருப்பவைகள் எல்லாம் குறித்தப் பதிவாகவும் மாறிப்போனது. நிலத்தை வெறும் யாந்திரிகமாகப் பார்க்காமல், அதில் இருந்த/ இருக்கும் அனைத்துத் தன்மைகளையும் ஆவணப்படுத்தும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார். நிலத்தை ஓர் உயிர்ப்பொருளாகப் புரிந்து கொண்ட கணித ஆர்வமுள்ள இளைஞன் மெக்கன்சி. முப்பது வயதுள்ள கணித ஆர்வமுள்ள இளைஞன் நிலத்தை அளக்கும் கணித முறையை நடைமுறைப்படுத்தியதோடு, நிலத்தில் இருப்பதையும் பதிவு செய்யத் தொடங்கினார் என்று கருதமுடியும். இவர் காலத்தில், கீழைத்தேய மண்ணைப் பதிவு செய்ய முயன்றவர்கள் இங்கிருந்த உயிரினங்கள் குறித்து அக்கறை செலுத்தியபோது (எ-டு பல்வேறு பழங்குடிகள், இனங்கள் பற்றிய பதிவுகள்) உயிரற்ற நிலத்தில் இருக்கும் பொருள்களைப் பதிவு செய்யமுயன்ற மெக்கன்சியின் அணுகுமுறை வேறானது. நிலத்தை அதில் இருக்கும் பொருள்க ளோடு கணக்கிடும் அதிகாரச் செயல்பாட்டில் கைதேர்ந்த வல்லுநராக மெக்கன்சியைப் புரிந்து கொள்ளலாம். எனவே நில அளவை யாளனாக, நிலத்தை உயிர்ப்பொருளாகக் கட்டமைக்க மேற்கொண்ட செயலை அவரின் தனித்தன்மையாகக் கருதலாம்.

உருவாக்கப் பட்டவை அழிந்து போவது இயல்பு. உருவாக்கப்பட்டவற்றின் எச்சங்களையும் சமகால நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தும் நோக்கம், ஐரோப்பியப் புத்தொளி தந்த பயிற்சியால் மெக்கன்சிக்குச் சாத்தியமானது. மிக விரிந்து பரந்த இவ்வகையான நிகழ்வை, அந்த நபருக்குக் கிடைத்த அதிகாரம்/செல்வாக்கு/பணவளம் சார்ந்து நடைமுறைப்படுத்த முடிந்திருக்கின்றது. இது வேறு எவராலும் கைக்கொள்ளப்படாத அரிய செயலாகவும் வடிவம் பெற்றிருப்பதை, இன்றைய சூழலில் மதிப்பிடும்போது அதன் பிரம்மாண்டம் பெரும் வியப்பிற்குள் நம்மை ஆழ்த்துகிறது. ஆம்... மெக்கன்சியின் செயல்கள் மந்திர தந்திர தன்மைகளோடு இணைத்துப் பார்க்க வேண்டிய தன்மையைக் கொண்டிருப்பதாகக் கருதலாம். இவற்றின் தற்காலத் தர்க்கம் என்பது விளிம்புநிலைப் பதிவுகள், அடிநிலைப் பதிவுகள், வட்டாரப் பதிவுகள், அதிகாரப் பதிவுகள் எனும் பல்வேறு கூறுகளில் அமைகிறது. வட்டாரம் சார்ந்த இனவரைவியல் முதன்மைப்படும் இன்றைய சூழலில், மெக்கன்சி பதிவுகளுக்குப் புதிய பொருள் உருவாகியுள்ளது. இதனால் மெக்கன்சி உழைப்பு வீண்போகவில்லை எனும் நிகழ்வும் ஒருபுறம் உருவாகிறது. எனவே, மெக்கன்சி தொகுப்புகளை மேற்குறித்தத் தர்க்கப் போக்கில் புரிந்துகொள்ள, அதற்கான ஆவண உருவாக்கம் தேவைப்படுகிறது. அதற்கான சிறிய அளவிலான முயற்சியாக இவ்விதழைக் கருதலாம்.

*******

பேராசிரியர் சுப்பராயலு அவர்களுடன், மெக்கன்சி சிறப்பிதழ் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, சுவையான தகவல் ஒன்றைப் பரிமாறிக் கொண்டார். அரசினர் கீழைத்தேய சுவடிகள் நூலகத்தில்(GOML) தற்போது இடம்பெற்றிருக்கும் மெக்கன்சி தொகுப்பு களைக் குறித்துச் சென்னைப் பல்கலைக்காக அன்றைய வரலாற்றுத் துறைப் பேராசிரியர்கள் (மிகவும் சிரத்தையாகத் தமிழ்ச்சூழலில் வரலாற்று ஆய்வில் ஈடுபட்டவர்கள்) எப்படிக் கருதினார்கள் என்பதை இச்செய்தி சொல்லுகிறது. “மெக்கன்சி சேகரிப்புகளை மேசைமீது கிடத்திவிட்டு மேலே இருக்கும் மின்விசிறியைப் போடுவது, காற்றில் அடித்துக் கொண்டு போனதை விட்டு விட்டு எஞ்சியவற்றை எடுத்துக் கொள்வோம்” என்று கூறியதாக அப்போது அங்கு ஆய்வாளராக இருந்த பேரா. சுப்பராயலு கூறினார்.

இந்தக் கூற்றை மெக்கன்சியின் சேகரிப்பில் உள்ள பொருட்களின் பௌதிகத் தன்மை மற்றும் அதன் தகுதிப்பாடு ஆகியவை சார்ந்து புரிந்து கொள்ளவேண்டும். கண்டதைப் படித்தால் பண்டிதனாவான் என்பதைப் போல கண்டதை எல்லாம் மெக்கன்சி தொகுத்திருக்கிறார். இது வரலாற்றுப் பேராசிரியர்களின் அன்றைய முறையியலில் கேளிக்கையாகப் பட்டதை நாம் தவறாகப் புரிந்து கொள்ள இயலாது. வரலாற்றுத் தரவுகள் குறித்து அன்றைய பேராசிரியர்கள்/ ஆய்வா ளர்கள் கொண்டிருந்த மனப்பதிவைப் புரிந்து கொள்ள இத்தகவல் உதவுகிறது. இருந்தாலும் மெக்கன்சி சேகரிப்புகளுக்கான அட்டவணைகள் தமிழ்ச்சூழலில் இந்தக் காலத்தில்தான் உருவானது. எச்.எச்.வில்சன் (1828), வில்லியம் டெய்லர் (1857-62) ஆகியோர் உருவாக்கிய அட்டவணைகளை அடிப்படையாகக் கொண்டு பேரா.தி.வை.மகாலிங்கம் அவர்களும் மெக்கன்சியின் வரலாறு சார்ந்த சுவடிகளுக்கான அட்டவணையை (1972) உருவாக்கினார். இப்போது அதன் மறு அச்சை சென்னைப் பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ளது (2011).

மெக்கன்சி தொகுத்த கல்வெட்டுகளைத் தென்னிந்திய கோயிற் சாசனங்கள் எனும் நூலில் திரு தி.நா.சுப்பிர மணியம் ஆவணப்படுத்தியுள்ளார். அவர்தரும் குறிப்பு பின்வருமாறு அமைகிறது. ‘மெக்கன்சியின் உதவியாளர்கள், அவர்கள் தொகுத்த கல்வெட்டுகள் அனைத்திற்கும் பட்டியல் உருவாக்கியுள்ளனர். எங்கு படி எடுக்கப்பட்டது? கல்வெட்டுகளில் காணப்படும் கொடை யாளிகள் யார்? கல்வெட்டின் மொழி, கல்வெட்டின் எழுத்து வடிவம், ஆண்டு, சுருக்கமான பொருட்குறிப்பு ஆகியவற்றையும் அவர்கள் தொகுத்துள்ளார்கள். மிகப்பெரிய தொகுதிகளாக அவை உள்ளன’ (1955:பாகம்:3:பகுதி:1) என்று குறிப்பிட்டு அப்பட்டியலையும் இந்நூலில் இணைத்துள்ளார். இவ்வகையில் பேராசிரியர் தி.வை. மகாலிங்கம் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் தி.நா.சுப்பிரமணியம் ஆகியோர் மெக்கன்சி தொகுப்புகளை ஆவணப்படுத்துவதைத் தமிழ்ச்சூழலில் மேற்கொண்டார்கள். வட்டாரம் சார்ந்த சுவடிகளைத் திரு.சு.சௌந்திரபாண்டியன் (1997-99) பின்னர் ஆவணப்படுத்தியுள் ளார்.

தமிழ்ச்சூழலில் ஆவணப்படுத்தல் நிகழ்ந்த அளவிற்கு அது குறித்த ஆய்வு நிகழவில்லை. விரிவான ஆய்வுகள் நிகழ்த்த வாய்ப்பிருந்தும் அது நிகழவில்லை. தமிழியல் ஆய்வில் பண்பாட்டு வரலாற்று அணுகுமுறைகள் பெரிதும் பின்தங்கிய சூழல் உருப் பெற்றுள்ளது. கல்வெட்டு, சுவடி ஆகிய பிற ஆவணங்கள் தமிழ் மாணவர்களுக்கு உரிய முறையில் அறிமுகப்படுத்தும் தமிழ்க்கல்விச் சூழலும் இல்லை; எனவே வரலாறும் தமிழும் இணைந்த ஆய்வு களை எதிர்பார்க்கும் மனநிலை பேராசையாகவே அமைந்து போகிறது. மெக்கன்சி பற்றிய ஆய்வில் தமிழ்ச்சூழல் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது என்பதைக் குறியீடாகக் காட்டும் வகையில் இவ்விதழைக் கருதலாம்.

*******

மெக்கன்சியை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள் அண்மை யில் ஆங்கிலத்தில் வளமாக வெளிவந்திருப்பதைக் காண்கிறோம். அவை இக்கட்டுரையின் இறுதியில் உள்ள ஆதார நூற்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மெக்கன்சி தொடர்பான இவ்வாய்வுகளைச் சுருக்கமாகத் தொகுத்துக்கொள்வோம்.

-           நிக்கோலஸ் பி.டர்க்ஸ் (2001) தனது “சாதிய மனம்” (Castes of Mind) எனும் நூலில் மரபு - பிரதி - ஆவணம் - தன் வரலாறு எனும் போக்கில், மெக்கன்சியின் தொகுப்புகள் குறித்து ஒருகட்டுரை (Chapter) எழுதியுள்ளார். (அக்கட்டுரை இவ் விதழில் இரெ.மிதிலா அவர்களால் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது). ஆவணங்கள் மரபுகளைப் புரிந்து கொள்ளும் பிரதிகளாக எவ்வாறு அமைகின்றன? என்பதையும் அவ் வாவணங்கள் தம்மைபற்றிக் கூறிக்கொள்ளும் கதையை அல்லது ஆவணங்களுக்குள் உள்ள குரலை அல்லது மௌனத்தை எப்படிப் புரிந்து கொள்வது என்பது தொடர்பான உரையாடலைச் செய்துள்ளார்.

-           தாமஸ் ஆர்.டிரவுட்மன் (2009) தனது சென்னைக் கீழைத்தேயப் பள்ளி (Madras School of Orientalism) என்னும் நூலில் மெக்கன்சி குறித்த நிக்கோலஸ் பி. டர்க்ஸ் கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜெனிபர் ஒவ்ஸ் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இவ்விரு ஆய்வாளர்களும் இத்தொகுதியில் தமது கட்டுரைகளை இடம்பெறச் செய்வதன் மூலம், கீழைத்தேயம் சார்ந்த புலமைத்துவத்தை மெக்கன்சி வழியாக வெளிப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். (இத்தன்மை குறித்து இவ்விதழின் அழைப்பாசிரியர் கட்டுரை இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.)

-           ஜெனிபர் ஒவ்ஸ் (2010) ‘மெக்கன்சியின் ஆய்வுகளும் தொடக்க கால இந்தியக் காலனியமும்’ எனும் பொருளில் விரிவான ஆய்வை நிகழ்த்தியுள்ளார். இந்நூல், மெக்கன்சியின் சேகரிப்புகள் வழி அறியப்படும் ஹைதராபாத் நிசாம் நிலப்பகுதியின் நிலஅளவை, கீழைத்தேய ஆய்வு மரபு, கோயில்கள், மகாபலிபுரம் மற்றும் மெக்கன்சியின் நில அளவைகள் குறித்த ஆய்வைப் பேசியுள்ளது.

-           இரமா சுந்தரி மண்டேனா(2012) “இந்தியாவின் நவீன வரலாற்று வரைவின் தொடக்கம்” (Modern Historiography) என்பதை மெக்கன்சி சேகரிப்புகளை அடிப்படைத் தரவாகக் கொண்டு ஆய்வுசெய்துள்ளார். பழமை இயல் மற்றும் மொழிநூல் ஆகிய பொருண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, மெக்கன்சி சேகரிப்பின் பல்பரிமாணங்களை வெளிக்கொண்டு வந்துள்ளார். மெக்கன்சி தரவுகள் சார்ந்த இவ்வாய்வு, மெக்கன்சியை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. நவீன வரலாற்று வரைவிற்கான தரவுகளை மெக்கன்சி மூலம் பெற்று, வரலாறு கட்டமைத்தல், வரலாற்றைத் தேடல், மெக்கன்சி செயல்பாடுகளில் காவளி சகோதர்கள் பங்களிப்பு, தெலுங்கு இயல் வரலாற்றுக்கு மெக்கன்சி பங்களிப்பு எனும் பொருண்மைகளில் வெளிவந்தள்ள நூல், மெக்கன்சியைப் புதிதாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

மேற்குறித்த ஆய்வுகள் அனைத்தும் இருபத்தோராம் நூற்றாண் டின் தொடக்கத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண் டின் தொடக்கத்தில் மறைந்துபோன மெக்கன்சி (1821) சுமார் இருநூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் உயிர்ப்புடன் கண்டெடுக்கப் படுகிறார். இந்நிகழ்வு, அவருடைய சேகரிப்புகளின் ‘நவீனத்துவ உயிர்ப்பை’க் காட்டுவதாகக் கருதலாம். எதுவும் எப்போதும் அழிந்து விடுவதில்லை; காலம் எதையும் எப்போதும் புதிதுபுதிதாக வெளிக் கொண்டுவரும் என்பதற்கு மெக்கன்சி சேகரிப்புகள் அரிய சான்றாக அமைகிறது. இந்தப் போக்கில் தமிழ்ச்சூழலும் இணைந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசையாக இச்சிறப்பிதழைக் கருதலாம்.

*********

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்கால மற்றும் பத்தொன் பதாம் நூற்றாண்டின் தொடக்கால சேகரிப்புகள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அட்டவணைப்படுத்தும் பணியை ஐரோப்பியச் சமூகம் செய்தது. ஆனால் அவை முழுநிறைவாக நடை பெற்றதாகக் கூறமுடியாது. இருபதாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் தமிழ்ச்சூழலில் மெக்கன்சி சேகரிப்புகள் ஆவணப்படுத் தப்பட்டன. அவை குறித்த ஆய்வுகள் குறிப்பிடத்தக்க அளவில், தமிழ்ச்சூழலில் இல்லை என்பதை முன்னரே பதிவு செய்துள்ளேன். இப்போது, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் மெக்கன்சி குறித்துப் புதிய புலமைத் தளத்தில் ஆய்வுகளை வெளிப்படுத்தும் போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ற உரையாடல் அவசியமாகும். நம் சூழலில் மெக்கன்சி எப்படி இருக்கிறார்? என்பதைக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்வோம்.

-           மெக்கன்சியின் கல்வெட்டுக்களை ‘தென்னிந்திய கோயிற் சாசனங்கள்’ எனும் பெயரில் பதிப்பித்த ஆய்வாளர் தி.நா.சுப்பிரமணியன் அவர்களின் நூல் எந்த நூலகத்திலும் முழுமையாக இல்லை (சென்னை நகரில்). ஒவ்வொரு தொகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன. அந்நூலின் மறுஅச்சும் சாத்தியப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

-           அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் கிடத்தப்பட்டுள்ள மெக்கன்சியின் தொகுப்புகள்; அந்நூலகமே வெளியிட்டுள்ள பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தேடுவோர்க்கு அரிதில் கிடைப்பதாக இல்லை. அதன் முக்கியத்துவம் தெரிந்த அலுவலர்கள் இல்லை. வயது முதிர்ச்சி எனும் அரசாங்க வழி சார்ந்து, ஆய்வு நிறுவனங்களுக்கு எவ்விதமான புலமைத்துவ பயிற்சி மற்றும் அறிவு அற்றவர்கள் தலைமைப் பொறுப்பில், நியமிக்கப்படுகிறார்கள். தமிழ்ச் சூழலின் அவலங்களில் ஒன்று இது. அவர்களால் மெக்கன்சி தொகுப்புகள் காப்பாற்றப்படுவதைவிட அழிக்கப்படும் அல்லது அழிந்துபோகச்செய்யும் செயல் சிறப்பாக நடை முறைப்படுத்தப்படுகிறது. இதனைக் கண்டு மனம்நொந்து, சோர்ந்து போவதை விட வேறு எந்த வழியும் தென்பட வில்லை; ஆரவார அரசியல் வாதிகளின் தலையீட்டால் இவ்வகையான அவலங்கள் தமிழ்ச்சூழலில் நிலையாக உருப்பெற்றுவிட்டது. புலமைத்தளம் என்பதை ‘வெகுசனத் தன்மை’யாகப் புரிந்து கொண்ட தமிழக அரசியல்வாதி ஒருவரால் உருப்பெற்ற இந்த அவலத்திற்கு மாற்று இருப்பதாகப் படவில்லை. வாழ்க தமிழ்ப் புலமைத்தளம்

இன்றைய சூழலில் மெக்கன்சி தொகுப்புக்களை அடிப்படை யாகக் கொண்ட அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்னும் ஆசை இருக்கிறது. பேராசைதான் என்னசெய்வது? லண்டன், கல்கத்தா, சென்னை ஆகிய மூன்று இடங்களில் உள்ள மெக்கன்சி சேகரிப்புகள் ஓர் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு “தக்காண பீடபூமி மற்றும் இந்தியாவின் கிழக்குப்பகுதி – ஜாவா” சார்ந்த அருங்காட்சியகம் ஒன்றை எதிர்காலச் சமூகம் உருவாக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்வோம்.

ஆதார நூல்கள்

1. Nicholas B.Dirks Caste of Mind - Colonialisom and Making of Modern India, Princeton and Oxford 2001

2. Thomas. R. Trautmann - The Madras School of orientalism – Producing Knowledge in Colonial South India, Oxford University Press, 2011

3. Jennifer Howes - Illustrating India; The Early colonial investigations of Colin Mackenzie (1784-1821), Oxford, 2010

4. Rama Sundari Mantena - The orgins of Modern historicgraphy in India - Antiquarianism and philology 1780-1880, Palgrave, Mac Millan

5. Wilson.H.H. - Mackenzie collection, A Descriptive Catalogue of the oriental Manuscripts and other articles, Vol.I, II, Asiatic Society, 1828

6. Taylor. William - A Catalogue Raisonne of Oriental Manuscripts – I (1857), II (1860), III  (1861), Madras

7. Mahalingam.T.V. - Mackenzie Manuscripts Vol.I, University of Madras, 2011

8. தி.நா.சுப்பிரமணியன் - தென்னிந்திய கோயிற் சாசனங்கள் 3 தொகுதிகள், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை, 1957.

Pin It

சில ஆண்டுகளுக்கு முன் சுவடிப் பட்டயத் தேர்வுக்காக ஒரு சுவடியைப் பதிப்பிக்க வேண்டிய நிலையில் சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்திற்குள் நுழைந்தேன். நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த பரந்த அளவிலான சுவடிகள் பெரும் வியப்பை என்னுள் ஏற்படுத்தியது. அந்நூலகத்தின் வரலாறு குறித்து அறிய முற்பட்டபோது அது காலின் மெக்கன்சி என்ற ஐரோப்பியர் தொகுத்த ஆவணங்களை மூலாதா ரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்ற செய்தி அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கான தூண்டுதலைக் கொடுத்தது.

இந்நிலையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள வெவ்வேறு ஆய்வுக்களங்களில் பயணித்த நிலையில் இறுதியாகக் காலின் மெக்கன்சியின் ஆவணங்களில் ஆய்வினை மேற்கொள்வது என்ற நிலைப்பாட்டை எடுத்தேன். இதற்கு எல்லா வகையிலும் என்னுடைய நெறியாளர் பேரா. வீ.அரசு அவர்கள் ஊக்கத்தினைக் கொடுத்தார்கள்.மேலும் அவர் 19ஆம் நூற்றாண்டின் தமிழியல் வரலாறு குறித்து நிகழ்த்தும் விரிவான உரையாடல் என்னுடைய ஆய்வுப் பொருண்மைக்கு மிகுவலிமை சேர்ப்பதாய் அமைந்தது.

காலின் மெக்கன்சி கிழக்கிந்தியப் படையின் பொறியாளராக, நில அளவையாளராகப் பணியாற்றித் தன்னார்வத்தின் அடிப்படையில் பல இந்திய உதவியாளர்களின் துணையுடன் தென்னிந்தியப் பகுதி முழுமைக்கும் பயணித்து கல்வெட்டுகள், சுவடிகள், செப்பேடுகள், ஓவியங்கள், தொல்பொருட்கள் உள்ளிட்ட பலவகைப்பட்ட ஆவணங்களைத் தொகுத்திருக்கிறார். இந்த ஆவணங்கள் தொடக்கத் தில் ஆர்வத்தின் அடிப்படையிலும் பிறகு தென்னிந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் நோக்கோடும் அவரால் தொகுக்கப்பட்டவை.

தென்னிந்திய மரபு வட இந்திய மரபிலிருந்து விலகித் தனித்த அடையாளத்தோடு செயல்படக்கூடியது என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இயங்கிய மெக்கன்சி அதனை நிறுவும் வகையிலான ஆவணங்களை முப்பதாண்டு காலம் தொகுத்திருக்கிறார். இவ் வாவணங்களைக் கொண்டு தென்னிந்திய வரலாற்றைக் கட்டமைக்க நினைத்த மெக்கன்சியின் எண்ணம் அவருடைய மரணம் காரணமாக ஈடேறவில்லை.

இவ்வாறு மெக்கன்சியால் தொகுக்கப்பட்ட ஆவணங்கள் பிறகு எந்த அளவிற்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டன? அவை தென் னிந்திய வரலாறெழுதியலுக்கு வகித்த பங்கு எத்தகையவை? அவ் வாவணங்கள் முறையாகப் பாதுகாக்கப்படுகின்றனவா? பதிப்பிக்கப் பட்ட ஆவணங்கள் சரியாகத்தான் பதிப்பிக்கப்பட்டனவா? அதன் வரலாற்றுத் தேவையும் இன்றையத் தேவையும் உணரப்பட்டதா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலையே சொல்லவேண்டியிருக்கும். இது தமிழ்ச்சூழலின் அவலம். ஆனால் மெக்கன்சி தொகுத்த ஆவணங்களின் ஒரு பகுதி பிரித்தானியர்களால் இலண்டனுக்கு அனுப்பப்பட்டு பிரிட்டிஷ் நூலகத்தில் முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்றைக்கு அத்தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு தாமஸ் டிரவுட்மன், நிகோலஸ் பி டர்க்ஸ், ஜெனிபர் ஒவ்ஸ், ரமா மண்டேனா போன்ற ஐரோப்பிய ஆய்வாளர்களால் தென்னிந்தியவியலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு நூல்கள் வெளியிடப்படுகின்றன. தமிழில் தி.நா.சுப்பிர மணியன், தி.வை.மகாலிங்கம் ஆகியோர் கவனம் செலுத்தியதோடு சரி, அவர்களுக்குப் பின்னர் அம்முயற்சி தொடரவில்லை.

15-19ஆம் நூற்றாண்டு வரைக்குமான தென்னிந்திய மக்களின் பண்பாட்டுக் கூறுகளின் பதிவுகளை மெக்கன்சி ஆவணங்கள் கொண்டுள்ளன. அவற்றுள் சமணர்கள் மற்றும் பழங்குடிகள் குறித்த பதிவுகள் மிக முக்கியமானவை. தமிழில் பழங்குடிகள் குறித்து வெளியான ஆய்வொன்றில் மெக்கன்சி சுவடிகள் அதன் முக்கியத் துவம் அறியாமல் பயன்படுத்தப்பட்டு சுவடிகள் திரிக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. காட்டாக, குறும்பர் வரலாறு என்னும் சுவடியில் “குறும்பர் யாதவ வமுசத்தைப் பத்தினவர்களென்று சொல்லி குறும்ப இடையரென்று அழைக்கப்படுகிறார்கள்.அவாள் சைவ மதத்திலாவது வைஷ்ணுவ மதத்திலாவது இன்னும் மத்தவளது தீய மதத்திலாவது சேர்ந்தவர்களல்ல. குறும்பருடைய மாற்கம் முழுதும் பிரத்தியேகமாக இருக்கப்பட்டது...” என உள்ளது.

இப்பதிவு ஆய்வு நூலில் “குறும்பர்கள் யாதவ வகுப்பைச் சேர்ந்த வர்களல்ல என்று கூறி குறும்ப இடையர் என்றழைக்கப்படுகிறார்கள். அவர்கள் சைவ மதத்திலோ வைணவ மதத்திலோ சேர்ந்தவர் களாவார்கள்” என்று ஒரு பழங்குடி இனத்துக்கான மிகமுக்கிய அடையாளத்தைச் சிதைக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே ஒரு சன்னியாசி குறும்பர் சரித்திரம் என்னும் சுவடியில் குறும்பர்கள் “....பிராமணாளையும் அவாள் மதத்துக்குள் பட்டிருந்த சூத்திராளையும் பிறகணித்து கொடுமைப்படுத்தினார்கள்” என்று உள்ளது.இப்பதிவு ஆய்வு நூலில் “...இவாள் பிறும் கைவிரல்..... அவாள் மதத்துக்குள்பட்டிருந்த சூத்திராளையும் பிறக்கணித்துக் கொடுமைப்படுத்தினார்கள்” என்று மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஒரு பழங்குடி இனம் பிராமணர்களைக் கொடுமைப்படுத்தி யிருக்கிறது என்ற பதிவு சமூக வரலாற்றில் மிகமுக்கியமானது”. “பிராமணாளை” என்று மிகத்தெளிவாக உள்ள வார்த்தை “பிறும் கைவிரல்” என்று திரிக்கப்பட்டுள்ளது. இதன் அரசியல் குறித்து விரிவாகப் பதிவு செய்யமுடியும்.

எனினும் இன்றைய நிலையில் சில பழங்குடி இன மக்களுக்கும் பிறருக்கும் மெக்கன்சி ஆவணங்களே முதன்மை எழுத்து ஆவணங் களாக அமைய வாய்ப்பிருக்கிறது.சில பழங்குடியின மக்களுக்கு இனப்பெயர் பிரச்சனை காரணமாகப் பழங்குடியினர் என்னும் சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை.அதற்காகப் போராட்டங்கள் நடந்துவரும் சூழலில் மேற்காணும் வகையிலான ஆய்வுகள் அம்மக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கக்கூடும்.இவ்வாறாகத் தமிழில் வெளிவந்துள்ள மெக்கன்சி தொடர்பான நூல்களில் ஏராளமான இடர்களைச் சுட்டிக்காட்ட முடியும். தமிழ்ச்சூழலில் பழைய ஆவணங்களைக் கையாள்வதில் உள்ள சிரத்தையற்ற தன்மையையே மேற்கண்ட போக்கு காட்டுகிறது.இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியது.மெக்கன்சி ஆவணங்களைச் சமகாலத் தேவை குறித்த புரிதலோடு அணுக வேண்டியதன் அவசியம் மிகுதியாக இருப்பதையே இது உணர்த்துகிறது.

மெக்கன்சி மக்களிடையே நிலவிய வாய்மொழி மரபுகளின் மீதும் பண்பாட்டுக் கூறுகளின் மீதும் கவனம் செலுத்தி அவற்றைப் பதிவு செய்யும் முறையைக் கையாண்டிருக்கிறார். இத்தொகுப்பு முறை அவர் காலத்திலும் பிறகும் இனவரைவியல்சார் அற்ப விஷயங்கள் என்றும் எண்ணில் அடங்காத விசித்திரமான வரலாற்றுக் கதைகளின் தொகுப்பு என்றும் கருதப்பட்டு விமர்சிக்கப்பட்டன.அதனால் அவரின் ஆவணங்கள் ஆய்வாளர்களால் பெரிதாகக் கண்டுகொள்ளப் படவில்லை. ஆனால் இன்றைய ஆய்வுச் சூழலில் குறிப்பாக இனவரைவியல் சார்ந்த வரலாற்று ஆய்வுகளில் மெக்கன்சி கவனம் செலுத்தித் தொகுத்த ஆவண வகைமாதிரிகளே பிரதானமாகக் கருதப்படுகின்றன.

இந்நிலையில் மெக்கன்சி குறித்தும் அவர் தொகுத்த ஆவணங்கள் குறித்தும் குறைந்தபட்ச அளவிலாவது அறிமுகப்படுத்தவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. மெக்கன்சியின் ஆவண வகைகள் ஒவ்வொன்றின் மீதும் விரிவான ஆய்வு நிகழ்த்தவேண்டிய அவசியமிருக்கிறது. ஏனெனில் 15-19ஆம் நூற்றாண்டு வரைக்குமான வேறுபட்ட வரலாற்றை அறிவிக்கக்கூடியதாய் அந்த ஆவணங்கள் உள்ளன.

என்னுடைய தேவையற்ற நிதானத்தின் காரணமாகவே இச் சிறப்பிதழ் காலதாமதமாய் வெளிவருகிறது.இவ்விதழின் கட்டுரை யாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றி. அவ்வப்போது இவ்விதழ் குறித்துப் பேசிய வ.கீதா, இரா.கமலக்கண்ணன், கு.கலைவாணன், மு.தேவராஜ், அ.மாலதி ஆகியோருக்கு நன்றி உரியது. குறிப்பாக ஐரோப்பியர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வினை மேற்கொள்வதற்கு 18,19ஆம் நூற்றாண்டு களில் வெளியான ஆகச்சிறந்த நூல்களையெல்லாம் மின்நூல்களாக வழங்கும் கூகுள் நிறுவனத்திற்கும் மெக்கன்சி தொகுத்த ஒரு பகுதி ஆவணங்களைச் சிறப்பாகப் பாதுகாத்து வரும் பிரிட்டிஷ் நூலகத் திற்கும் இவ்விதழ் உருவாக அனைத்து நிலைகளிலும் உழைத்த பேரா.வீ.அரசு அவர்களுக்கும் வெறும் நன்றியை மட்டும் சொல்லி முடிக்க முடியாது.                                                                       

- தே.சிவகணேஷ்

Pin It

நிக்கோலஸ் பி.டர்க்ஸ்

தமிழில் -  இரெ.மிதிலா

தொடக்ககாலக் காலனியத்தின் வரலாற்று வரைவு உண்மையான வரலாறும் காலநிரலும் இல்லாத குறையை இந்திய வரலாறு இன்றுவரை கொண்டுள்ளது. மக்களின் மேதைமை யிலிருந்தும் அவர்களது பழங்கால அரசின் மேதைமை யிலிருந்தும் அத்தனை வெற்றிகரமாக இல்லாத ஐரோப்பியரின் இதுவரையிலான விவரச் சேகரிப்புகளிலிருந்தும் இந்தியர் களிடம் உள்ள நம்பத்தகுந்த ஆவணங்கள் மிகக் குறைவு என்றே நம்பும்படி யாகிறது. லெப்டினண்ட்-கர்னல் மெக்கென்சி பலனளிக்கக்கூடிய வகையில் அதீதமான உழைப்பின் வழி எங்கெங்கோ மூலையில் இரைந்து கடந்த மிகப்பழங்கால நிகழ்வுகளின் ஏதேனும் சான்றுகள் உள்ளனவா என்று தேடிக் கண்டடைய மிகவும் பிரயாசைப்பட்டார்.

- கட்டுப்பாட்டு வாரியம், கிழக்கிந்தியக் கம்பெனி, பிப்ரவரி 9, 1810.

இந்தியாவில் இருந்த பிரித்தானியருக்கு வரலாறு என்பது முக்கியத்துவம் அற்றதாக எப்பொழுதும் இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல பிரித்தானிய எழுத்தாளர்கள் - குறிப்பாக டௌ, எல்ஃபின்ஸ்டன், வில்க்ஸ், மால்கம் மற்றும் மெக்கென்சி ஆகியோர் இந்தியாவின் காலனியத்திற்கு முந்தைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தனர். இந்தியாவைக் கைப்பற்றி ஆட்சிபுரிவது பற்றிய காலனியமாக்கத் திட்டத்தின் பின்னணியில் எழுந்த ஆழ்ந்த விவாதங்களின் அடிப் படையில் இவர்கள் இந்திய சமூகத்தின் அடிப்படை இயல்பைப் பற்றியும் அதன் குடிமை மற்றும் அரசியல் நிறுவனங்களைப் பற்றியும் பலவாறான கருத்துகளையும் விவாதங்களையும் வளர்த்தெடுத்தனர்.

ennore_madam_640

சென்னை அருகே எண்ணூரில் அமைந்திருந்த சத்திரம், ஓவியர்: காலின் மெக்கன்சி, 1786

வாரன் ஹாஸ்டிங்ஸ் மற்றும் பிட் சட்டத்தின் மீது எழுந்த குற்றச்சாட்டுகளின் விளைவாகவும் வங்காளத்தில் நிகழ்ந்த நிரந்தரக் குடியேற்றத்தின் மீதான விவாதங்களிலும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள வேளாண் மக்களின், கிராம சமுதாயத்தின் வருவாயை நிர்ணயம் செய்யும் வழிமுறைகள் பற்றியும் இராணுவ ரீதியிலான கைப்பற்றுதலுக்கான கொள்கை வரைவினை வளர்த்தெடுப்பது பற்றியும் எந்த அளவுக்குச் சமூக மற்றும் மதம் சார்ந்த தலையீடு இருக்கலாம் என்பது பற்றியும் கிழக்கு இந்தியக் கம்பெனியின் அடிப்படை நிறுவனங்கள் பற்றிய விவாதங்களிலும் வரலாறு சார்ந்த பல கேள்விகள் எழுந்தன. பல பிரித்தானிய ஆய்வாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டைப் பிரித்தானிய ஆட்சியினை நியாயப்படுத்துகின்ற ஒரு நலிவுற்ற முன்னோடியாகக் கண்டாலும், இந்திய வரலாற்று உணர்வுகளையும் மரபுகளையும் அடிக்கடி இளக்காரம் செய்தாலும் வரலாற்று ரீதியாக இந்தியாவைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவையை உணர்ந்திருந்தனர். அவர்கள் ஈடுபாடு கொண்டிருந்த வரலாறானது வேற்றுலகம் பற்றிய அக்கறையை மட்டும் கொண்ட காலவரையறை அற்ற ஒரு பண்பாட்டைக் கொண்டதாக இல்லாமல் அரசியல்சார் ஆட்சியாளர் களையும் நிறுவனங்களையும் போர்வீரர் குடிகளையும் இராணுவ வெற்றிகளையும் முரண்பட்ட சமுதாயக் கூறுகளையும் கலவையான மதக் கூறுகளையும் கொண்டதாக இருந்தது.

பொதுவாகவே இந்திய வரலாறு தொடர்பான நுண்ணுணர்வு களும் தரவுகளும் மதிப்பற்றதாக, கீழானதாகக் கருதப்பட்டதாலும் அத்துடன் வரலாற்றுரீதியான புத்தாய்வு என்பது ஏறக்குறைய நிலத்தில் குடியேறுவதை நியாயப்படுத்தும் முயற்சியுடனும் பல வகையான அரசாங்க ஆட்சி முறைமையுடனும் முற்று முழுக்கத் தொடர்புடையதாக இருந்த காரணத்தால் காலனிய ஆட்சியின் தொடக்க காலத்தில் ’வரலாற்று அறிஞர்’களை விடப் பிரதிகளிலும் மொழி ஆய்விலும் பயிற்சி பெற்றக் கீழைத்தேய ஆய்வாளர்களே பெயர் பெற்றவர்களாய் இருந்தனர். ஏற்கெனவே நாம் கண்டபடி, வரலாற்று ரீதியாக எழுதுதல் என்பது ஏறத்தாழ இந்தியாவில் வசித்த பிரித்தானியர்களைப் பற்றியதாகவோ அல்லது கிராமத்திலுள்ள சாதிகளைப் பற்றிய பொதுப்புத்தி உருமாதிரிகளையும் கீழைத்தேயக் கொடுங்கோன்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்தியாவைப் பார்ப்ப தாகவோ இருக்கும். ‘இந்து’ வரலாறுகளைப் பற்றிய மூலாதாரத் தரவுகளின் போதாமை பற்றிய முறையீடு அடிக்கடி எழுந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மௌண்ட் ஸ்டூவர்ட் எல்ஃபின்ஸ்டன் இந்திய வரலாறு பற்றி இரண்டு தொகுதிகளை எழுதிய போது, தமது மேதைமையின் தீர்க்கத்திற்கு மராட்டிய ராஜ்யத்தின் ஆவணங் களுடனான அனுபவத்தையே அடிப்படையாக வைத்தார். ஆனால் பிற ஏராளமான இடங்களைப் பற்றி மென்மேலும் ஆவணங் களுக்கான தேவை இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

எடுத்துக்காட்டாக, தக்காணத்தின் வரலாற்றுக்கு காலின் மெக்கென்சி திரட்டிய வரலாற்று ஆவணத் தொகுப்பையே அவர் நாடினார். தக்காண இந்தியாவின் நிலப்பட வரைவாளராகவும் ((cartographer)) நில அளவாய்வாளராகவும் (surveyor) தமது தொழிற் பணியின் பெரும்பகுதியினைக் கழித்த மெக்கென்சி, தம்மால் இயன்றவரை கிடைக்கின்ற வரலாற்றுப் பதிவுகளையும் பழம் பொருள்களையும் சேகரிப்பதற்கே தமது பெரும்பான்மையான நேரத்தையும் செல்வத்தையும் செலவழித்தார். 1821இல் அவர் மறைந்த போது, தென்னிந்தியாவின் தொடக்க கால நவீன வரலாற்று மானுடவியலைப் பற்றிய ஆய்விற்கு அடிப்படையாக இன்றும் அமைந்திருக்கும் ஆகப் பெரியதொரு மூலாதாரக் களஞ்சியத்தை அவர் திரட்டி வைத்திருந்தார். மேலும் மெக்கென்சியின் இந்தத் தொகுதி இந்திய வரலாற்றுடனான காலனிய பிரிட்டனின் மிகப் பெரிய, அகண்டதொரு ஈடுபாட்டினை எடுத்துக்காட்டி நிற்பதோடு, காலனியப் படையெடுப்பின் வெற்றி குறித்தக் கவலைகள் காலனிய ஆட்சியின் முன்னிறுத்தும் செயல்பாடுகளுக்கு வழிகோலியபோதே மறைந்துவிட்ட ஒரு வகையான வரலாற்று முனைப்பையும் ஆர்வத் தையும் நினைவுறுத்தும் நினைவுச்சின்னமாகவும் இன்று வரை விளங்குகிறது.

எந்தவொரு இந்திய மொழியையும் கற்றிராத காரணத்தால் மெக்கென்சியை ஒரு கீழைத்தேய ஆய்வாளர் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. வெறுமனே ஆவணங்களைத் திரட்டுவதில் இருந்த ஆர்வம் அவற்றைப் புரிந்துகொண்டு பொருள்கொள் வதிலோ மொழிபெயர்ப்பதிலோ அவருக்கு இல்லாமல் இருந்ததே சற்று விசித்திரமான அவரது சாதக அம்சமாகும். இவ்விரண்டு பணிகளையுமே காலனிய, கிறித்தவ சமயப் பணியின் ஆதிக்கத்தி லிருந்தும் மதமாற்றத்திலிருந்தும் பிரித்துப்பார்க்க முடியாது. தக்காண இந்தியா குறித்தப் பாரிய வரலாற்று ஆவணக் களஞ்சியத்தை ஒன்றுதிரட்டுவதற்கு மெக்கென்சியை விடச் சிரத்தையாகக் கிழக்கிந்திய கம்பெனியின் வேறெந்தப் பணியாளரும் முயற்சி எடுக்கவில்லை என்பதே இதிலுள்ள முரணாகும்.

இவ்வாறான முயற்சிகளில், கிட்டத்தட்ட இந்திய உதவியாளர்களையும் தகவலாளிகளையும் மட்டுமே நம்பியதோடு மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றினை எழுதும் இந்தத் திட்டப் பணியை இந்திய வரலாற்றைத் தோற்றுவித்த இந்தியர்களிடமிருந்தும் இந்தியாவில் காலனிய ஆட்சியினை நிலைநாட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்த பிரிட்டனின் அரசியலில் இருந்தும் பிரித்துப்பார்க்க முடியாது என்ற புரிதலுக்குத் தள்ளப்பட்டிருந்தார். இருப்பினும், மெக்கென்சியின் இந்தத் தொகுதி அதிகாரப்பூர்வமான கீழைத்தேய ஆய்வியலுக்கும் காலனிய சமுதாயவியலுக்கும் இடையே வளர்ந்துவந்த இடை வெளியில் தோன்றிய கோட்டில் அடியெடுத்து வைத்தது.

ஒரு பக்கம், கீழைத்தேய ஆய்வியலால் முன்வைக்கப்பட்ட செவ்வியல் தன்மையின் தொன்மையின் தரத்தை மெக்கென்சியின் பிரதிகள் எட்டவில்லை; மற்றொரு பக்கம் மெக்கென்சியின் வரலாறுகள் மிகவும் விசித்திரமானதாக, தொன்மத்தாலும் கற்பனை யாலும் மிகவும் மாசுபட்டதாக, சிறிய வட்டாரத்திற்கு உட்பட்டதாக, ’கீழைத்தேய மரபினதாக’ நிர்வாக ஒழுகலாற்றின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவிகரமாக இல்லாததாகத் தோன்றின. மெக்கென்சி யின் வரலாற்று ஆர்வத்தினைத் தெள்ளத்தெளிவாக ஒளிவுமறை வின்றி எடுத்துக்காட்டுவது மெக்கென்சியின் அறியாமையா அல்லது காலனியக் கைப்பற்றலில் நேரடியாக அவர் ஈடுபட்டிருந்ததார் -  இவ்விரண்டில் எதுவெனத் தெரியவில்லை. ஆனால் காலனிய அறிவின் வரலாற்றைப் பொறுத்தவரையில் ஓர் அசாதாரண நபராக அவர் தனித்து நிற்கிறார். எவரும் மெச்சும்படித் தக்காண இந்தியாவின் அரசியல், சமுதாய வரலாறு தொடர்பாக எத்தனை ஆவணங்களைச் சேகரிக்க இயலுமோ அத்தனையையும் சேகரிக்க வேண்டி உள்ளூர் வட்டார மேதைகளையும் முகவர்களையும் பெரிய அளவில் தமது அலுவல்ரீதியிலான பதவியின்மூலம் அதிலும் பெரும்பகுதித் தமது சொந்தச் செலவில் பணியமர்த்தியிருந்தார்.

ஆவணங்களைச் சேகரித்தல் என்ற பொதுக் குறிக்கோளை நிறைவேற்ற அந்த முகவர்களுக்கு அவர் கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார். அதன் விளைவாக, இந்த ஆவணத் தொகுப்பானது உதவியாளர்களின் தனிப்பட்ட உறவுகளாலும் அக்கறைகளாலும் அளிக்கப்பட்டத் தகவல்களின் சமூகவியல் சார்ந்த அறிவினைப் பிரதிபலிக்கின்ற அதே அளவு காலனிய ‘எஜமான’னுக்கும் பிரதியின் சூழலுக்குமான சமூகவியல் அறிவினையும் பிரதிபலித்து நிற்கின்றது. தொகுக்கப் பட்ட அறிவின் முழுமை மீதான நம்பகத்தன்மையை மெக்கென்சி ஒருசார்பில் மறுதலித்தார் என்றாலும் காலனிய ஆட்சியதிகாரத்தின்கீழ் ‘மண்ணின் மைந்தர் கள்’ வெறும் தகவலாளிகளாக மட்டுமே இருக்க முடியும்; ‘மண்’ சார்ந்த அறிவானது மானுட வியல் ஆர்வத் திற்கான பொருளாக மட்டுமே இருக்க முடியும். மெக்கென்சியின் மறைவிற்குப் பின் அவரதுத் திட்டப்பணியினைத் தொடர்ந்து செய்வதற்கு அவரது இந்திய உதவியாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மெக்கென்சியின் திரட்டு ஒருவழியாகக் தொகுக் கப்பட்ட போது, மாவட்ட அளவிலான காலனிய நிர்வாகத்தால் அதற்கு உதவியாகத் தயாரிக்கப் பட்ட கையேடுகளிலும் அரசாங்க விவரக்குறிப்பேடுகளிலும் பதிவு செய்யப்பட்டிருந்த உள்ளூர் வட்டார சாதிகளின் நதிமூலக் கதைகளைக் குறிப்பதற்காகவே பயன்பட்டது. மெக்கென்சியின் திரட்டில் பெரும்பகுதி ‘சாதி’யைப் பற்றி எதுவும் இல்லை என்ற உண்மையும் சமுதாயப் பாகுபாடு என்பது எல்லாவகையிலும் அரசியல் அதிகாரத்துடன் தொடர்புடையதாக இருந்த பழைய ஆட்சிமுறையிலான ஓர் உலகத்தின் பிழைத்திருக்கும் ஆவண எச்சத்தையே பிரதிபலித்தது என்ற உண்மையும் பார்க்கப்படாமல் விடப்பட்டதன் ஒரு பகுதி மட்டுமே.

மெக்கென்சியின் திரட்டு பழைய ஆட்சிமுறையிலான அரசியல் உலகத்தை இழந்துவிட்ட கதையினையும் அத்துடன் தொடக்க காலக் காலனிய ஆட்சியுடனான கொந்தளிப்பான உரசல்கள் நிறைந்த உலகத்தினை மொழிபெயர்க்கப் போராடிய குரல்களின் கதை யினையும் சொல்கிறது. அதற்கு மாறாக, மிகுந்த சிரத்தையுடன் ஆனால் விமர்சன நோக்கின்றிச் சேகரிக்கப்பட்ட மெக்கென்சி திரட்டின் சில துண்டுப்பகுதிகள் பல வேறுபட்ட விதங்களில் பயன்படுத்தப்பட்டன. அவரது திரட்டினைக் கொண்டு இந்திய வரலாற்றின் போக்குகளைப் பற்றிப் பேச வைப்பதை விட்டுவிட்டு இந்திய வரலாற்றின் இன்மையைப் பற்றிப் பேசவைத்தது. மெக்கென்சியின் திரட்டினைக் கீழைத்தேய ஆய்வாளரான ஹெச். ஹெச். வில்சன் பட்டியலிட்டுத் தொகுத்தார். அவர் இந்திய நாகரிகத்தினை இழிவுபடுத்திய மில்லின் கருத்தினைத் திருத்தியவர் என்றாலும் மெக்கென்சி திரட்டி வைத்திருந்தது போன்ற வரலாறு களின் மீதும் பிரதிகளின் மீதும் அவருக்கு அத்தனை நல்ல அபிப்பிராயம் இல்லை. அதன் பிறகு, மெக்கென்சியின் ஆவணத் தொகுப்பு வில்லியம் டெய்லர் அவர்களால் கையகப்படுத்தப் பட்டது, அத்தொகுப்பினைத் தானும் ஒரு கீழைத்தேய ஆய்வாளர் தான் என்பதனை உறுதிப்படுத்திக் காட்டும் பொருட்டுப் பயன்படுத்த எண்ணினார், ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிட்டவில்லை.

கடைசியில் காலனிய ஆவணக் களரியில் பூச்சியரித்துப்போனக் கவனிக்கப்படாது விடப்பட்ட அத்தொகுப்பு கிட்டத்தட்ட ஒட்டு மொத்தமாகத் தொலைந்து போய்விட்டது எனலாம். புதியதொரு காலனிய அறிவினால் செலுத்தப்படும் ஆட்சியின் கீழ் ஆவணப் படுத்தப்பெறும், முற்றிலும் வேறுபட்ட எப்போதாவது சுட்டப் படும், இனவரைவியல் அறிவுக்கான வெறும் அடிக்குறிப்பாக அது நின்றுபோனது. மெக்கென்சியின் ஆவணத்தொகுப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்த தர்ஸ்டன் மற்றும் பிற அலுவலர்களின் இனவரைவியல் சார் எண்ணங்களுக்குத் துணைபோன விதம் இந்தியாவின் வரலாறு காலனிய ஆட்சியின் மற்றொரு பதிவேட்டில் தொலைந்துபோன கதையினைச் சொல்கின்றது.

கர்னல் காலின் மெக்கன்சியும் இந்திய நில அளவாய்வும்

கர்னல் காலின் மெக்கென்சி தனிச்சிறப்பான புகழினைப் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் பரந்துவிரிந்த பார்வையினைக் கொண்ட செயல்துடிப்பு வாய்ந்த ஒரு மனிதர். பிறப்பினால் ஸ்காட்லாந்து மேட்டுப்பகுதியைச் சேர்ந்தவராக, வளர்ப்பினால் ஓர் ஐரோப்பியராக, தொழிற்பணியால் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கருவியாக இருந்தாலும் அவர் ஓர் உலகளாவிய மனிதராவார்.

- தி. வை. மகாலிங்கம், 1972

1754இல் பிறந்த காலின் மெக்கென்சி ஹெப்ரிடெஸின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த ஸ்காட் ஆவார். ராணுவப் பணியினைத் தொடரவும் இந்தியக் கணிதத்தின் மீதான ஆர்வத்தினைத் தொடரவும் தமது இருபத்தொன்பதாவது வயதில் இந்தியா வந்தவர். அதன் விளைவாகத் தமது கணிதத் திறமையைப் பயன்படுத்தி ஒரு திறனார்ந்த நில அளவாய்வாளராகவும் நிலப்பட வரைவாளராகவும் ஆனார். இந்தியாவில் தொடர்ச்சியாக அவர் மேற்கொண்ட நில அளவாய்வானது அதன் அகற்சியிலும் மேதைமையிலும் ஏனைய வற்றை விட வேறுபட்டிருந்தது. 1810இல் மெக்கென்சி மதறாசி முதல் தலைமை நில ஆய்வாளர் (Surveyor General) ஆனார், 1815இல் இந்தியாவின் முதல் தலைமை நில ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். 1821இல் அவர் இறக்கும் வரை அந்தப் பதவியை வகித்தார்.

முதன்முதலாக மெக்கென்சி இந்தியாவிற்கு வந்தபோது ஒரு முறை மதுரையில் தங்கினார். அங்கே ”அந்த வட்டாரத்தின் மிகப் பிரசித்தி பெற்ற பிராமணர்களுக்கு” அறிமுகப்படுத்தப்பட்டார். அவர்கள் மெக்கென்சியை விருந்தோம்பியவர்களுக்காகக் கணித விவரங்களைச் சேகரித்துக் கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட வர்கள். விருந்தோம்பியவர்களின் மகனும் மெக்கென்சியின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவருமான அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் கீழ்க்கண்டவாறு கூறுகிறார், “அவர்களுடன் (பிராமணர்கள்) பேசியதன் விளைவாக ஒரு இந்திய வரலாற்றுக்கான மிகுந்த மதிப்பு வாய்ந்த ஆவணங்களைத் தக்காணப் பகுதிகளில் இருந்து திரட்டக்கூடும் என்று கண்டு கொண்டார். மதுரையில் தங்கியிருந்த போது அப்படி யான ஒரு சேகரிப்பிற்கானத் திட்டத்தினை முதன் முதலில் உருவாக்கினார். பின்னர் அதுவே அவரது 38 ஆண்டுகால வாழ்வின் மிகவும் பிடித்தமான தேடலாக, நாட்டமாக ஆனது.”

காலனிய அதிகாரத்தின் கோரமான நிதர்சனங் களுக்கிடையில் தாமும் அவற்றுடன் ஒத்துப்போக வேண்டியதன் அவசியத்தைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்திருந்தார் மெக்கென்சி. அவரது தொடக்க காலகட்டக் கண்டுபிடிப்புகள் எல்லாம் இராணுவப் பாசறைகளிலே நிகழ்ந்தன. படைவீரர், விஞ்ஞானி என்ற இரட்டைக் குதிரையில் அவர் சவாரி செய்தார். அவரே, “பாசறைகளின் பயணங்களின் ஓய்வு நேரங்களில் அறிவியல் உதவியை வருவிக்கலாம், அறிவு பகிரப் படலாம் என்பது பெரிய கண்டுபிடிப்பு இல்லை; ஆனால் நான் இன்னொன்றையும் நிறுவிக்காட்ட விரும்பு கின்றேன். இந்தியாவில் பயணத்தின் இடையில் தங்கும் போதும், குறிப்பாகப் பயணம் மேற்கொள்ளும் போதும் இருக்கும் வெற்றுக் கணங்களில் (ஒரு இந்தியத் துணிகரப் பயணியின் வாழ்வானது ஆகப் பெரிய அளவில் தொடர்ச்சியான பயணத்தை மேற்கொள்வதாக இருப்பதை யன்றி வேறெவ்விதம் இருக்கும்) திரட்டப்பட்ட அவதானிப்புகள் பயனுள்ளவையாக இருக்கலாம். தத்துவம், அறிவியல் சார்ந்த முக்கியமான உண்மைத் தரவுகளைப் பதிவு செய்யாதுபோயினும் அத்தகைய மிகச்சிறந்த அவதானத்தை உடையவர்களின் அவதானிப்புகளைக் குறைந்தபட்சம் பயனார்ந்த விஷயங்களின் வழி நெறிப்படுத்தலாம்.” என்று எழுதியுள்ளார்.

மெக்கென்சியின் ஆரம்ப கால ஆண்டுகள் தொடர்ந்த இராணுவப் பாசறைப் பயணங்களால் ஆனவை. இந்தியாவின் சீர்கெட்ட நிலையினால் அது அழிவதிலிருந்து பிரித்தன் அதனைக் காப்பாற்றியது என்ற கதையினைப் பேணிப் பாதுகாப்பதற்கு அவரது வாழ்வு அர்ப்பணிக்கப்பட்டபோதும் பிரித்தானிய ஆட்சியின் உயர்தரமான தாக்கத்தின் மீது மெக்கென்சிக்குக் கிஞ்சித்தும் ஐயமிருக்கவில்லை. தமது தொடக்க கால ஆண்டுகளில் இந்தியா வில் ஆங்காங்கே பயண இடைவெளியில் தங்கியிருந்ததைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்: “பஞ்சம், ஏழ்மை, போர் ஆகியவற்றின் கோரப் பிடியிருந்து இந்நிலம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வந்துகொண்டிருந்தது. பிரித்தானிய அரசாங்கத்தின் நன்மைவாய்ந்த தாக்கத்தின் கீழ் தென்னகத்தின் உடனடி நிர்வாகம் வருவதற்கு முன்பு நீண்ட காலமாக மோசமான நிர்வாகத்தின் துன்பங்களின் கீழ் சிக்குண்டுப் போராடியது.” மெக்கென்சியின் தாக்கத்தினையே இந்திய வரலாற்று அறிஞர்கள் அடிக்கடிப் புகழ்ந்தாலும் கூட இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்கொண்டு வெற்றிபெற அவர் முழுவதும் பங்குகொண்டார் என்பதை மறைத்துவிட முடியாது.

மெக்கென்சி இராணுவப் பொறியாளராக இருந்த ஆரம்ப ஆண்டுகளில் மைசூரின் ஹைதர் அலியும் ஹைதராபாத் நிஜாமும் விட்டுக்கொடுத்தத் தக்காணப் பகுதி மாவட்டங்களில் நில அளவாய்வுப் பணியினை மேற்கொள்வதன் பொருட்டு அவர் அடிக்கடி அங்குப் பிரதிநியாக அனுப்பப்பட்டார். 1792க்கும் 1799க்கும் இடையில் நிஜாமின் பகுதிகளில், அதாவது இன்றைய ஆந்திராவின் கடப்பா மற்றும் கர்னூல் பகுதிகளில், நில அளவாய்வு செய்யும் பணியில் தமது பெரும்பகுதியான நேரத்தை அவர் செலவழித்தார். இந்த நில அளவாய்வுப் பணியின் போக்கில் ஒரு நில அளவாய்வு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய ஓர் அகல்விரிவான புரிதலை வளர்த்துக்கொண்டார்.

தாம் அளவாய்வு செய்த பகுதி யினைப் பற்றி எழுதிய போது, “தக்காணப் பகுதியானது அப்பொழுது எனக்கு முற்றிலும் புதிதான, அறியப்படாத பகுதியாக இருந்தது. நவீன காலம் கோருகின்ற துல்லியமான உண்மைகளைக் கொண்டிராத புஸ்ஸி மேற்கொண்ட அணிவகுப்புகளின் ஒரு சில உறுதிப்படாத அறிக்கைகளையும் உருச்சிதைந்த சித்திரங்களையும் தவர்னியர் மற்றும் தெவெனாட்டின் (Tavernier and Thevenot) பயணக்குறிப்புகளையும் தவிர வேறெங்கும் நம்பத் தகுந்த விவரப் பதிவுகள் இராத பகுதியாகும்.” என்று குறிப்பிடுகின்றார். அதனால் இந்த நிலப்பகுதியினைத் தெரிந்த நிலப்பகுதியாக ஆக்க எண்ணினார். அதனைச் செயல்படுத்து வதற்காகப் பற்பல உத்திகளைக் கையாண் டார். மிக விளக்கமான விரிவான நில வரைபடம் எழுதுவதும் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த நம்பத்தகுந்த ஆதாரங்களைத் தம்மால் எவ்வளவு இயலுமோ அவ்வளவையும் கண்டுபிடித்துச் சேகரிப்பதுமே அவர் கையாண்ட உத்திகளாகும்.

mahabothi_temple_640

மகாபோதி கோவில் (புத்தகயா), 1800

தக்காணப் பகுதியில் தமது நில அளவாய்வுப் பணியினை மேற்கொண்டிருந்த போது, இராணுவத் தாக்குதல்களின் போது தாழில்நுட்ப ஆலோசகராகச் செயல்படவும் பீரங்கிப்படையைச் சரியான நிலையில் இருத்துவதற்கு அவரது பொறியியல், அளவாய்வுத் திறனைப் பயன்படுத்திக் கொள்ளவும் நான்கு முறை மெக்கென்சி இராணுவப் பணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டார். மெக்கென்சியின் இத்தகைய இராணுவப் பணியில் மிகவும் பரபரப்பான ஒன்றாக இருந்தது 1799இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடைபெற்ற ஆங்கிலேயர்-மைசூர் இடையிலான நாலாவதும் இறுதியானதுமான போராகும். தக்காண இந்தியாவில் பிரித்தானிய இராணுவம் கனவுகண்ட குறிக்கோளுக்குப் பெருஞ்சவாலாக இருந்த, அதற்கு முந்தைய நாற்பது ஆண்டுகளில் தென்னிந்தியாவின் அரசியல், சமூக நிலப்பரப்பு அமைப்பினைத் தன் தந்தை ஹைதர் அலியுடன் இணைந்து மாற்றுவதற்குக் காரணமாயிருந்த ஒர் ஆட்சியாளரை ஒருவழியாக பிரித்தானியர் தோற்கடித்த போராகும். திப்பு சுல்தானின் இறுதி நிலைப்பாட்டின் போது, காவேரி ஆற்றின் வடக்குக் கரையில் இருந்த பீரங்கிப்படையின் பொறுப்பினை ஏற்ற பொறியாளர் மெக்கென்சியே. “அந்த வடக்குக் கரைப் பகுதியி லிருந்தே வெற்றியை ஈட்டித் தந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.”

திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மைசூருக்கான நில அளவாய்வினை ஒருங்கிணைத்து நிகழ்த்துவதற்கும் புதிதாகக் கைப்பற்றிய நிலப் பகுதிகளின் எல்லைகளை நிர்ணயிப்பதற்கும் ஸ்காட்லாந்தின் பரப்பளவில் மூன்றில் இரு பங்கு அளவில் இருக்கும் நிலப்பரப்பைப் பற்றிய முதற்கட்ட விரிவான விவரங்களை அறிந்துகொள்ளவும் நில வரைபடத்தினை வரையவும் மெக்கென்சி அழைக்கப் பட்டார். மாபெரும் மைசூர் நில அளவாய்வு (The Great Mysore Survey)) என்று அழைக்கப்பட்ட அப்பணி 1799இல் தொடங்கி மார்ச் 1809 வரை நடைபெற்றது. அதே சமயம் மெக்கென்சி தக்காண நில அளவாய் வினை முடிப்பதிலும் பெயரளவில் பொறுப் பேற்றிருந்தார். அவரது பணி நியமனக் கடிதத்தில் அவரது கவனம் “வெறுமனே இராணுவம் சார்ந்த தாகவோ நிலவியல் விவரங்கள் சார்ந்ததாகவோ மட்டும் இல்லாமல் அவரது தேடல் ஒட்டுமொத்த தேசத்தினைப் பற்றியப் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதிலும் செலுத்தப்பட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. மெச்சத் தகுந்த வகையில் அவர் உருவாக்கிய ஒரு நில அளவாய் விற்கான திட்டம் “நாட்டின் புள்ளிவிவரத்தையும் வரலாற்றையும் மட்டுமன்றி அதன் நிலவியலையும் உள்ளடக்கியதாக இருந்தது.” இருப்பினும் அவரது இந்தத் திட்டத்திற்குக் கிழக்கிந்தியக் கம்பெனி யிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காத மனக்குறை அவருக்கு இருந்தது.

ஏனெனில் கம்பெனி மிகவும் குறைந்த செலவில் இந்த நில அளவாய்வினைச் செய்ய விரும்பியது, மெக்கென்சி கூறியபடியான பரந்தகன்ற அளவாய்வுக்கான தேவை இருப்பதாக அது நம்ப வில்லை.

மெக்கென்சியின் மைசூர் நில அளவாய்வின் மிக விரிவான பகுதி யாக அவரது “மைசூரின் வடக்கு பர்குனாக்களைப் பற்றிய ஆய்வுக் குறிப்புகள்” அமைந்தது. 1800-1801இல் மேற்கொள்ளப்பட்ட பணியின் விளைவாக, செலவுக் குறைப்பு நடைமுறைபடுத்தப் படுவதன் முன்னர் வெளிவந்தது. கணீஷமரி என்று அழைக்கப்பட்ட வழமையான புள்ளிவிவர அட்டவணையோடு கூடுதலாக ஒவ்வொரு பகுதியின் அரச குடும்பத்தைப் பற்றிய எண்ணற்ற வரலாற்றுக் குறிப்புகளையும் மெக்கென்சி சேகரித்தார். ஜூலை 1800லேயே இந்தப் பகுதியினைப் பற்றிய வரலாற்றுத் தேடல் பணியில் தாம் முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். “இந்த நாட்டின் . . . . இந்து அரசர்களுக்குச் சொந்தமான இந்த நாட்டின் வரலாற்றினையும் பற்பல மாவட்டங்களிலும் எனக்குக் கிடைக்கின்ற புத்தகங்கள், கல்வெட்டுகள், மரபார்ந்த பதிவுகள் என அனைத்துத் தரவுகளையும் சேகரிக்கிறேன்.” மேலும் தமக்கு இந்தப் பகுதிகளின் மொழிகள் தெரியாததால் “கன்னட, மராட்டிய மொழி பேசும் எழுத்தர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும்” பணியமர்த்த வேண்டிவந்ததாகவும் குறிக்கின்றார்.

சித்திரதுர்கா பகுதிக்காக மெக்கென்சியின் உதவியாளர்கள் நான்கு வேறுபட்ட குடும்ப வரலாறுகளைச் சேகரித்து மொழிபெயர்த்தனர். பிறகு பதிவுசெய்யப்பட்ட அரச குடும்பத்தின் குடிவழியினை அப்பகுதிக் கல்வெட்டிலிருந்து கிடைத்த காலவரிசையிலான விவரத்துடன் ஒத்துப் பார்த்தனர். தமது இரண்டாவது அறிக்கையில், “மாவட்ட அரசாங்கத்தின் மக்கள்தொகையின் வரலாற்றுக் குறிப்புகள் நம்பத்தகுந்த மூலாதாரங்களில் இருந்து அவ்விடத்தி லேயே தொகுக்கப்பட்டன; பதிவேடுகளில் இருந்து கிடைத்த, தேதிகளாலும் காலங்களாலும் கட்டம் கட்டப்பட்ட மரபுகள் சில சமயம் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருந்த மானியங்களுடன் ஒத்து நோக்கிவைத்துப் பார்க்கக்கூடிய இடத்தில் ஒத்துநோக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன. ஒன்றுக்கொன்று ஒப்புநோக்கிப் பார்க்கப் பட்டு அவற்றிலிருந்து பரஸ்பரம் திருத்தங்கள் வருவிக்கப்பட்டன. எப்போதெல்லாம் ஒரு வகையான அகச்சான்று அவற்றின் துல்லியத் திற்குச் சாதகமாக அமைகின்றதோ அப்போது அது மிகவும் திருப்திகரமான இருந்தது.

ஏனெனில் வேறுபட்ட அதிகாரங்களுக்கிடையில் எந்த விதமான தொடர்பும் இல்லாமலிருந்தது.” அரச வரலாறுகள் அல்லது வம்சாவளிகள் பரம்பரைப் பரம்பரையாக நாடுகௌடேக்கள், கௌடேக்களிடம் ஊழியம் செய்துவந்த அலுவல்ரீதி யிலான நபர்களின் பாதுகாப்பில் இருந்ததால் அவர்களிடமிருந்தே பெறப்பட்டன. ஒரு குறிப்பிட்ட குழுவோ குடும்பமோ ஏன் ஓரிடத்தில் தங்கியிருந்தது என்றும் அதன் விளைவாகக் காலப்போக்கில் அவ்விடமே அவர்கள் ஆட்சியின் மூல இடமாக அறியப்பெற்றது என்றும் வம்சாவளிகள் அடிக்கடிப் பதிவு செய்து வந்தன. குடும்பவரலாறுகளும் அந்தந்த அரசர்களின் புகழ் வாய்ந்த வீரச்செயல்களையும் துணிவுடன் ஆட்சிபுரிந்த கதையையும் கூறின. அதன் மூலம் சமகால ஆட்சியாளர்களுக்கும் இடங்களுக்கும் ஒரு சிறப்பான பழமரபினையும் சக்தியினையும் ஏற்றிக்கூறின.

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் சித்திரதுர்கா போன்ற பகுதிகளின் அரசர்கள் (பாளையக்காரர்கள்) ஹைதர் அலியாலும் திப்பு சுல்தானாலும் ஏற்கெனவே பேரளவில் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் முறைமையாகத் திட்டமிட்டு அரசர்களின் கோட்டைகளைத் தாக்கி அரச குடும்பம் முழுவதையும் கைப்பற்றி அவர்களை அவர்களின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு மூட்டை கட்டினர். அவர்களின் இடத்தில் அமில்தார்களை அதாவது மேலாளர்களை ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் நியமித்தனர். அவர்களுக்குச் சட்டஒழுங்கினைப் பேகின்ற பொறுப்பும் வருவாய் சேகரிக்கும் பணியும் அளிக்கப்பட்டன.

விஜயநகரத்தின் முன்னாள் அரசர்கள் படையெடுத்து வெற்றிகொண்டதன் பிறகு அமல்படுத்திய ‘நிலப்பிரபுத்துவ’ ஒன்றிணைப்பு முறையில் இருந்து மிகவும் வேறுபட்டதாக இருந்த இந்த நிர்வாகரீதியிலான மையமாக்கமானது கிழக்கு இந்தியக் கம்பெனியின் இராணுவ, நிர்வாக உத்திகளை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தது. எது எப்படியாயினும் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் தக்காணத்தின் உள்ளூரைச் சேர்ந்த அரசியல் மேட்டுக்குடிகளை அப்புறப்படுத்துவதிலும் இடமாற்றுவதிலும் பிரித்தானியரைக் காட்டிலும் வெற்றிகரமாக இருந்தனர். ஏனெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கும்போது பல பிரித்தானிய அலுவலர்களும் உள்ளூர்த் தலைவர்களான நிலப்பிரபுக்கள் அல்லது ஜமீந்தார்களின் மூலமாகவே ஆட்சி புரியவும் வருவாயினைத் திரட்டுவதற்குமான அவசியத்தை உணர்ந்தனர். உண்மையில், இப்படி இடம் பெயர்க்கப்பட்டத் தலைவர்களின் குடிவழிப் பரம்பரைப் பதிவுகளைச் சேகரிக்கின்ற மெக்கென்சியின் திட்டமிட்ட முயற்சி, உள்ளூர் அரசியலின் சட்டபூர்வமான உரிமை கோரலைத் தீர்த்துவைக்கவும் இவ்வகை யிலான உள்ளூர் அரசியல் ஆட்சிகளின் எதிர்ப்பாக மாறக்கூடிய தன்மையையும் மதிப்பிடவிரும்பிய கிழக்கு இந்திய கம்பெனிக்குக் கடன்பட்டதாகும்.

ஏனெனில் பிரித்தானிய ஆட்சியினை இந்தியாவில் பரவ ஒட்டாமல் தடுக்கக்கூடிய நிர்வாக ரீதியிலான அகக்கட்டமைப்பினை வளர்ப்பதைத் தங்களது உத்தியின் ஒரு பகுதியாக மைசூர் சுல்தான்கள் கொண்டிருந்தனர். எனவே மைசூரின் சுல்தான்கள் ஏற்கெனவே அமல்படுத்திய நேரடி ஆட்சியின் வடிவங்களைக் காலனியம் கைக்கொள்ளவேண்டியிருந்தது.

உள்ளூர்த் தலைவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற் கான தெளிவான அரசியல்ரீதியிலான விளக்கம்/ காரணம் இருந் தாலும் மெக்கென்சி மிகுந்த ஆர்வத்துடன் திரட்டி ஒன்றிணைத்த கூற்றுக்குறிப்புகள் முழுவதும் அவரது சமகாலத்த வர்களால் இனவரைவியல்சார் அற்ப விஷயங்கள் என்றும் எண்ணில் அடங்காத, விசித்திரமான வரலாற்றுக் கதைகள் என்றும் கருதப் பட்டன. மெக்கென்சியே கூட மிகுந்த விசுவாசத்துடன் மறுபதிவு செய்யப்பட்ட பல பிரதிகளின் பயன்பாட்டின் மீதும் மெய்ம்மைத் தன்மை மீதும் அடிக்கடி சந்தேகம் கொண்டார். சான்றாக, ஒரு வம்சாவளியினைப் பற்றிக் கருத்துரைக்கும் போது, “இதில் சொல்லப்பட்டிருப்பது முழுவதும் மரபில் இருந்து வந்ததாகத் தெரிகின்றது.

பாளையக்காரர்களின் குடிவழிப் பரம்பரையின் காலத்தைத் தவறாகச் சுட்டாவிடினும் இது சந்தேகத்திற்குரியதாக இருக் கின்றது.” என்று கூறியுள்ளார். “மண்ணின் இயற்கைக் குடிகளால் பொத்திப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வகைமாதிரிக் குறிப்பு களின் மூலமாக” மட்டுமே பிற கூற்றுக்குறிப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், பல கூற்றுக்குறிப்புகள் அரசியல் அதிகாரம் என்பதன் அர்த்தம், சமூக அடையாளங்களின் வகைகள், வட்டாரப் பிரதிகளின் இலக்கிய வகைமைகள், அறிவின் சமூக வியல்கள் ஆகியவற்றை அற்புதமான கோணத்தில் வழங்கினாலும் மெக்கென்சி வெறும் குறுகிய அளவில் கருக்கொண்ட வரலாற்றுப் பதிவிலேதான் பெருத்த ஆர்வம் கொண்டிருந்தார். எது எப்படி இருந்தாலும், ஒவ்வொரு ‘மரபியல் கூற்றுக்குறிப்பும்’ சிறிதளவாவது பயன் தரக்கூடிய வரலாற்றுத் தகவலைக் கொண்டிருந்ததாகத் தெளிவாக உணர்ந்தார். அதனால் எதனையும் விடாது சேகரிக்கவும், கண்டடையவும் விழைந்தார்.

மேலும், தமது 1805ஆம் ஆண்டின் மைசூர் நில அளவாய்வு ஆண்டறிக்கையில், தாம் சேகரித்த ஆவணங்களில், “வெறும் வறட்சியான சுவாரசியமற்ற உண்மை களின் சங்கிலித் தொடர் மட்டுமில்லை அவை மக்களின் மேதைமை யையும் நடத்தையையும் எடுத்துக்காட்டும் பல்வேறுபட்ட சான்றுகளையும், அவர்களது பல்தரப்பட்ட அரசாங்க நிர்வாக முறைமைகளையும் பல மதங்களையும், இன்றுவரை அவர்களது நெகிழுணர்வின், கருத்துகளின் மீதுதாக்கம் செலுத்தக் கூடிய பிரதான காரணிகளையும் ஒன்றிணைக்கின்றன. அத்துடன் நில உரிமையின் கால அளவின் மீதும், குத்தகைத்தொகையை நிர்ணயிக்கும் மூலத்தையும் அதன் பல வகைகளையும்,மக்களின் கதியையும், வெவ்வேறு வர்க்கங்களின் சலுகைகளையும், எடுத்துக்காட்டும் பல்வேறுபட்ட சான்றுகளையும், அவர்களது பல்தரப்பட்ட அரசாங்க நிர்வாக முறைமைகளையும் பல மதங்களை யும், இன்றுவரை அவர்களது நெகிழுணர்வின், கருத்துகளின் மீது தாக்கம் செலுத்தக் கூடிய பிரதான காரணிகளையும் ஒன்றிணைக் கின்றன. அத்துடன் நில உரிமையின் கால அளவின் மீதும், குத்தகைத் தொகையை நிர்ணயிக்கும் மூலத்தையும் அதன் பல வகைகளையும், மக்களின் கதியையும், வெவ்வேறு வர்க்கங்களின் சலுகைகளையும், தென்னகத்தில் பொதுவாகப் புழக்கத்தில் இருந்த அரசாங்கத்தின் உயிர்நாடி யினையும் வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளன.” “கர்நாடகப் பேரரசு” என்று தாம் பெயரிட்டு அழைத்த விஜயநகர சாம்ராஜ் ஜியத்தின் ஆட்சியின் கீழ் ஓர் அரசியல் ஒற்றுமை இருந்ததாகத் தாம் வெற்றிகரமாக நிறுவியுள்ளோம் என நம்பினார்.

விஜயநகர ஆட்சியின் பகுதியான இந்து அரசாங்கத்தின் நிறுவனங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் கம்பெனிக்கு “இன்றைய நாளில் மக்கள் திரளின் பொது வெகுசன மாகத் திகழும் மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரிடம் இந்நிறுவனங்களின், விதிமுறைகளின், சம்பிரதாயங்களின் தாக்கம் இருப்பதனால் இவை பற்றிய மிகவும் பயனுள்ள தகவல்களை” கம்பெனி பெற்றுப் பயனுறும் என்று கருதினார். எந்த ஸ்திரமற்ற நிலைமை மண்ணின் மைந்தர்களான மக்களின் சமூக, அரசியல் வாழ்வினைச் சீரழிவுக்கு இட்டுச் சென்றதோ அதுவே உள்ளூரைச் சார்ந்த வெகுவான வரலாற்று அறிவினையும் அழித்துவிட்டது என்பதே மெக்கென்சியின் பெருத்த கவலையாக இருந்தது. “நீண்ட காலமாக நாடு ஸ்திரமற்ற நிலையில் இருந்த காரணத்தால் பொதுவான அழிவுக்கும் சிதைவிற்கும் தப்பிய எழுத்துப் பதிவுகளும் நிரந்தரமான நினைவுச்சின்னங் களும் இந்த நாடுகளின் இயற்கைக் குடிகளின் கையில் எஞ்சியிருந்தவையும் எவையெவை என்பதனைத் தேடி விசாரிப்பதற்கான என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறதோ அவை அனைத்தையும்” கைக்கொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாக மெக்கென்சி அறிவித்தார்.

தமது செயல்பாடு அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்று மிகவும் நம்பிக்கை கொண் டிருந்த மெக்கென்சி தமது முயற்சிகளை மைசூருக்கும் அப்பால் நீட்டித்தார். அவரது கோரிக்கையின் பேரில், 1808இல் தென்னிந் தியாவில் இருந்த மூத்த பிரித்தானிய அலுவலர்களுக்கு “தென்னிந்தாயாவின் தொல் வரலாறு, அரசு மற்றும் நிறுவனங்கள்” பற்றிய விவரங்களைக் கோரி அதிலும் குறிப்பாகத் “தங்களது அறியாமையினால் புறக்கணிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் மண்ணின் இயற்கைக் குடிகளின் கையில் பலதரப்பட்ட விளக்கங்களுடன் இருக்கின்ற, தூதரக, நீதித் துறை சார்ந்த, மருத்துவத் துறையில் உள்ள பெரு மக்களின் தலையீட்டினால் மீட்கப்படக்கூடிய ஆவணப் பொருட்களை”ப் பற்றிக் கேட்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மெக்கென்சி தமக்கு நன்கு பழக்கமான அலுவல் அதிகாரிகளுக்கு மிக நீண்ட விரிவான சுற்றறிக் கைகளை அனுப்பினார். அதில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் தொடக்க கால பௌத்த, சமண மதங்கள் தொடர்பான ஆவணங்கள் மீதும் அத்துடன் பொதுவாக மதப்பூசல்கள் மற்றும் மத நிறுவனங் களைச் சார்ந்த கூற்றுக்குறிப்புகள் மீதுமான தமது ஆர்வத்தினைக் குறிப்பிட்டிருந்தார். நாணயங்கள், விவரக் குறிப்புகள் அடங்கிய தொல்லியல் பொருள்கள், தொன்மையான சமாதிகள் மற்றும் கல்லறைகளின் ஓவியங்கள், கல்வெட்டுகளின் படிகள் ஆகியவற் றில் ஆர்வங்கொண்டிருந்தார்.

இவை அனைத்தையும் விட, இந்தியத் துணைக்கண்டத்தின் அரசியல் வரலாற்றினை நிறுவுவதற்கான அடிப்படை சான்றாதாரங் களை ஒருங்கிணைப்பதில் அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். பண்பாட்டு வகைமை சார்ந்தும் அரசியல் சூழ்நிலை சார்ந்தும் வரலாறானது எப்படி உருவாக்கப்பட்டது என்பது குறித்த ஒரு விமர்சன ரீதியான புரிதலை அவர் கொண்டிருந்தார். சான்றாக, “முறையான வரலாற்று எடுத்துரைப்புகளும் ஆய்வுக்கட்டுரைகளும் இந்த மண்ணின் இயற்கைக் குடிகளிடம் கிட்டத்தட்ட காணக் கிடைக்கவில்லை. அப்படியே ஏதேனும் குறிப்புகள் இருந்தாலும் பொதுவாக அவை மதம் தொடர்பான பழங்கதைகளாகவோ பிரபலமான பாடல்களாகவோ கதை வடிவமாகவோ பேணப்பட் டிருந்தன.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்குச் சில விதிவிலக்குகள் இருந்ததாகக் குறிப்பிடும் மெக்கென்சி அவற்றைக் கீழ்க்காணுமாறு பட்டியலிடுகின்றார்:

“வம்சாவளி அல்லது பற்பல அரசகுலங்களின், முக்கியமான குடும்பங்களின் பரம்பரைகள்; தண்டகாவளி அல்லது அலுவல் அதிகாரிகளால் பேணப்பட்ட காலநிரல்பட்ட பதிவேடுகள், பதிவுக்குறிப்புகள்; வருவதை முன்னுரைக்கும் தீர்க்கதரிசனங்கள் என்ற பெயரில் மறைமுகமாகச் சில விஷயங்களைக் கூறும் கலிகானங்கள்; கீழைத்தேய முடியரசுகளில் கூடக் கிட்டாத சுதந்திரத்துடன் கூடிய வரலாற்றுத் தகவல்; பிரபலமான கதைகளாகக் கருதப்படினும் சில சமயம் சில நிகழ்வுகளைப் பற்றியும் முக்கியக் கதாபாத்திரங்களைப் பற்றியும் நமது ஆய்வுக்குறிப்புகள் போலத் துல்லியமான சரியான தகவல்களைத் தரக்கூடிய சரித்திரா மற்றும் சுதா; பண்டைய கால வருவாய் மற்றும் நிதி மூலாதாரங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட நிதியியல் பதிவுக்குறிப்புகளும் பதிவேடுகளுமான ரகாக்கள்”

எனவே, பிரதிகளின் நம்பகத்தன்மை குறித்த சிக்கல்களை இதுவரையிலும் உணர்ந்திருந்தாலும் அனைத்தையும் தேடித் திரட்டும் தமது ஆர்வத்தினையும் செயல்முறைகளையும் மெக்கென்சி நியாயப்படுத்தினார், விளக்கினார். ஓர் அதிகாரிக்கு அவர் இவ்விதம் எழுதியனுப்பினார்: “தங்களின் நில அளவாய்வின் போது கன்னட நாட்டின் வரலாறு பற்றி ஏதேனும் விவரக்குறிப்புகள் கிடைத்தால் அதனைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்துத் தருவதை விட அந்த மூலத்தையே விரும்புவேன்.” வரலாற்றுத் தன்மை அற்ற கீழைத்தேய மனத்தினைப் பற்றி மனக்கசப்பு கொள்வதைவிட, வரலாற்றுச் சார்பற்றதும் அரைகுறையான வரலாற்றுத் தன்மையுடையதுமான தீர்க்கதரிசனங்கள், பிரபலமான கதைகள் போன்ற இலக்கிய வகைமைகள் தங்களது அரசியல் இயல்பு காரணமாக அபாயகரமானவையாக இருக்கும் தன்மையினை மறைக்கவே வரலாற்றுத் தன்மை குறைந்தவையாக இருந்தன என்று கருதிக்கொண்டார்.

பல குடும்ப வரலாறுகளும் வம்சாவளி என்ற வகைமையைச் சார்ந்தவையே. அதாவது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் (வம்சத்தின்) குடிவழிப் பரம்பரை வரிசையினை மீட்டுரைப்பவை. ஒவ்வொரு பாளையக்காரர் குடும்பத்திற்கும் அவர்கள் வரலாற்றினை, அதன் நீட்சியாக அவர்களது ராஜ்ஜியத்தின் வரலாற்றினையும் கூறும் குறைந்தபட்சம் ஒரு வம்சாவளியாவது இருந்தது. பெரும்பாலான வம்சாவளிகள் தேர்த்தெடுக்கப்பட்ட பரம்பரைக் குடும்பத் தலைவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தொடர்ச்சியாகக் கூறும் வகையில் அமைந்திருந்தன. வாழ்க்கை நிகழ்வுகள் வம்சக் கால்வழிப்பட்டியலுடன் இணைக்கப்பட்டிருந்தன. சிலசமயம் அவற்றில் இடையிடையே சில சுவாரசிய மான குடும்பத் தலைவர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன.

இந்த வம்சாவளிகள் ஒரு குடும்பத்தின் ஒட்டு மொத்த தலைமுறைகளின் அடுக்கு வரிசையாக வும் இந்தப் பரம்பரைக் கால்வழிவரிசை பிரதியின் எடுத்துரைப்புச் சட்டமாகவும் இருந்தது. இந்த இரு வகையிலும் இவை வம்சாவளியினைக் கூறுவதாக அமைந்தன. வரலாற்றினை எடுத்துரைக்கக் காலநிரல் எப்படி அவசியமோ அதே போல் வம்சாவளிக்குக் கால்வழிப் பரம்பரை வரிசை அவசியம்: அவை தொடர்ச்சியை, ஒன்றுக்கொன்றுடனான தொடர்பை, கட்டமைப்பினை வழங்கு கின்றன. வம்சாவளியை எடுத்துரைப்பதற்கான தலையாய நோக்கம் என்னவென்றால் தற்போதைய பாளையக்காரர் மற்றும் அவரது குடும்பத்தின் நதிமூலத்தை எடுத்துரைப்பதே. அந்த எடுத்துரைப்பில் சற்றே விரிவாகச் சில நிகழ்வுகள் சேர்க்கப்பட்டிருந்தன. அந்த நிகழ்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: ஒன்று அவை தற்போதைய அரசரின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்தின, மற்றொன்று அவை அக்குடும்பத்தின் வரலாற்றி னை விரிவாக எடுத்துக்காட்டி விளக்குவதன் அர்த்தத்தை முன்னிறுத்தின.

ஒவ்வொரு அத்தியாயமும் நாயக-முன்னோர் செய்த ஏதேனும் மாபெரும் வீரதீரச் செயலை எடுத்துரைப்பதாக இருக்கும். சான்றாக, அவர் அரசரின் ஆட்சிப் பகுதியில் மக்களை அச்சுறுத்திக் கொண் டிருந்த ஒரு புலியினைக் கொல்வார் அல்லது மன்னரின் ஏதேனும் ஒரு பகைவனுக்கு எதிராகப் போர்தொடுத்துச் செல்வார். அதன் பிறகு மன்னர் பாளையக்காரரைத் தமது அரசவைக்கு அழைத்துப் பட்டங்கள், அரச சின்னங்கள், நில உரிமைப் பட்டாக்கள் (சில வேளை அது தோற்கடிக்கப்பட்ட எதிரி மன்னரின் நிலமாகவே இருக்கும்) ஆகிய ஏராளமான பரிசுகளை வழங்குவார். பிரதியின் இந்த அடிப்படையான கட்டமைப்பு மீண்டும் மீண்டும் திரும்பவரும். ஆனால் ஒவ்வோர் அத்தியாயமும் ஓர் உறவினை நிலைநிறுத்து வதைப் பற்றியே இருக்கும். எந்த உறவும் நிரந்தரமானதும் நிலைத்து நிற்பதும் அன்று; மாறாகக் காலந்தோறும் புதுப்பித்துக்கொள்ளவும் மீளவும் நிலைநிறுத்திக்கொள்ளவும் வேண்டியதாக இருக்கும்.

சமுதாயத்தில் மேம்பட்ட நிலையையுடைய அந்த மாமன்னரின் அரசவையே அந்த எடுத்துரைப்பின் மையப்புள்ளியாக இருந்தாலும் ஒவ்வொரு புதிய உறவும் அந்தத் தலைவனின் பதவியை, அந்தஸ்தை மாற்றும் விதமாக இருக்கும். அந்தப் பரம்பரைத் தலைவர்கள் ஆற்றிய அருஞ்செயல்கள் கற்பனையான சூழலில் நடைபெற்றாலும் அவை ஒரு பொதுவான காப்பிய விழுமியங்களைச் சுட்டிநிற்கும்: அவை இறக்கும் வரையில் வீரத்தைக் கைவிடாது இருத்தல், விசுவாசம், அளப்பரிய உடல்வலிமை. இந்த அருஞ்செயல்களுக்குப் பரிசாக அளிக்கப்பெறும் வெகுமதிகள், அக்காலத்தின் அரசியல் சூழ்நிலையைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளடக்கும் வகையிலும் இருக்கும் அரசியல்சார் உறவுகளை நிலைநாட்டுவதாகவும் மாற்றுவதாகவும் இருக்கும். முன்னரே நாம் அறிந்துகொண்டபடி மரியாதை நிமித்தமான பரிசுகள், பட்டங்கள், சின்னங்கள், நிலங்கள் ஆகியவை அரசியல் முறைமையின் தலையாய நாணயமாகும்.

இந்த மரியாதைகள், பட்டங்கள், சின்னங்களால் சுட்டப்பெறும் சமூக, அரசியல் உறவுகள் அடங்கிய அரசியல் முறைமையில் இடம் பெற்றிருந்த வம்சாவளிகள் வரலாற்றுப் பிரதிகளாகவே தீர்மானிக் கப்பட்டன. இதில் நில உடைமையும் அரசியல் பதவியும் அதே உறவின் இன்றியமையாத அங்கமாகும். பின்னாளில் ‘சாதி’ என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கக்கூடிய சமூக அடையாளங்கள் சார்ந்த விஷயங்கள் கூட இந்தப் பிரதிகளின் மையமான எடுத்துரைப்புச் சொல்லாடலில் அடங்கியிருக்கும். இவற்றைப் படித்த மெக்கென்சி யின் சமகால காலனிய அன்பர்கள் ஒன்றுக்கும் உதவாதவை என்றும் கட்டுக்கதை என்றும் ஒதுக்கினர். அனைத்து அமைப்புகளிலும் உள்ளது போல் வரலாற்றுச் சூழலின் சட்டகத்தினுள்ளேயே வரலாற்று வடிவங்களும் பொதிந்துள்ளன.

தென்னிந்தியாவில் இருந்த தமது சமகால காலனிய அன்பர் களைக் காட்டிலும் அறிவின் அரசியலைப் பற்றிய மிகத் தெளிவான புரிதலைக் கொண்டிருந்தார் மெக்கென்சி. ஏனெனில் வரலாற்றுத் தகவல்களை சேகரிக்கின்ற பணியில் அவர் மிக ஆழமாக ஈடுபட் டிருந்தார். குறிப்பாகத் தமது உதவியாளர்களுடன் அவருக்கு இருந்த நெருக்கமான உறவின் மூலமாகவும் தமது நில அளவாய்வுப் பணியின் மூலமாகவும் தகவல் சேகரிப்பில் அத்தனை ஆழமாக ஈடுபட்டிருந்தார். அவரது தனித்த சிறப்பு என்னவென்றால் உள்ளூர்ப் பகுதிகளின் பிரதிகள் என்னதான் புரிந்துகொள்ள இயலாத கட்டுக்கதைகளால் புனையப்பட்டிருந்தாலும், இயன்ற வரையில் கிடைக்கும் பிற உள்ளூர் ஆவணங்களுடன் தகுந்த பின்புலத்தில் வைத்து, அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள இலக்கிய வகைமை, பாணி மற்றும் அணியிலக்கண உத்திகளையும் கவனமாக ஒருங்கே வைத்து அவற்றைப் படித்தால் அவை வரலாற்றுத் தகவல்களை அளிக்கவல்லன என்று நம்பினார். அவர் சேகரித்த பல பிரதிகளை அவரது சமகாலக் காலனிய அதிகாரிகள் அத்தனை சுவாரசிய மில்லாதவை என்றும் இந்தியாவின் காலனியத்துக்கு முந்தைய வரலாற்றினைப் போதுமான அளவு கட்டியெழுப்புவதற்குத் தேவையான முக்கியமான குறிப்புகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் நிராகரித்தனர்.

தென்னிந்திய கிராமப் பகுதியின் அரச குடும்பங் களின் எண்ணற்ற வரலாறுகளைக் கூறும் பிரதிகளின் மீது மற்றெதையும் விட அத்தனை ஆர்வமில்லை. ஒரு சில நிர்வாக அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட வட்டாரப் பகுதியின் ஆட்சியுரிமையும் அதன் நீட்சியாகச் சொத்துரிமையும் இருப்பதாகக் கோரும் உரிமைகள் உண்மைதானா என்பதைத் தீர்மானமாகத் தீர்த்துவைக்க எண்ணி னாலும், 1793இல் வங்காளத்தில் செயல்பட்ட மாதிரி ஜமீந்தார் களைவிடப் பயிர் செய்பவருக்கே உரிமை வேண்டும் என்பதற்கு ஆதரவு பெருகியதால் மெக்கென்சியின் வரலாற்றுப் பிரதிகளில் இருக்கும் இத்தகைய உரிமை கோரல்கள் மீது ஆர்வம் குறைந்தது.

மைசூர் நில அளவாய்வின் போதே வரலாற்று ஆவணங்களைச் சேகரிக்கும் மெக்கென்சியின் முயற்சி சூடுபிடித்தது. நில அளவாய்வுப் பணியினை மேற்கொண்டிருக்கும் போது, “மாகாணத் தின் அனைத்துப் பகுதிகளிலும் வரலாறு, தொல்லியல், நாட்டின் புள்ளிவிவரம் சார்ந்த ஆவணங்களைச் சேகரிக்கும் பணி நடை பெற்றுக் கொண்டிருந்தது. இது புனித ஜார்ஜ் கோட்டையின் ஆட்சியதிகாரத்தின் கீழ் மைசூர் நில அளவாய்வில் கிடைத்த அசல் தகவல்களின் அடிப்படையில் என்னிடம் பயிற்சி பெற்ற, நான் பிறப்பித்த ஆணைகளைப் பின்பற்றிய இந்த மண்ணின் இயற்கைக் குடிகளால் அந்த ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன” என்று மெக்கென்சி குறிப்பிடுகின்றார். இந்த முயற்சி அரசாங்கத்திற்குச் சற்றே செலவை இழுத்துவிட்டது என்பதை வலியுறுத்தினார்.

ஏனெனில், “நான் எனது தனிப்பட்ட சொந்தச் செலவிலே தான் அனைத்து ஆவணப் பொருட்களையும் வாங்கினேன். கர்நாடகம், மலபார், தெற்கத்திய பிராந்தியங்கள், சர்க்கார்கள், தக்காணம் என இந்தப் பகுதிகள் முழுவதிலும் என் சொந்தச்செலவிலேயே ஓலைச்சுவடிகளைச் சேகரித்தேன்” என்றார். ”இராணுவத்தின் மூலம் இடங்களைக் கைப்பற்றி ஆக்கிரமித்துக் கொள்ளும் பணிக்கு இடையில் அதே போன்ற வசதிகளைப் பிரித்தானிய அரசாங்கத்தின் தாக்கமானது அளித்தால் இது போன்ற ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதானால் கணிசமான ஆதாயத்தைத் தருவிக்கலாம் என்ற நம்பிக்கையை இந்தத் தேடுதல் வேட்கையின் வெற்றி நியாயப் படுத்துகின்றது” என்று அவர் கூறியிருப்பது பிரித்தானிய அரசாங்கம் தமது இத்தகைய முயற்சிகளில் இன்னும் மேலான ஆர்வம் காட்ட வேண்டும் என்று எண்ணினார் என்பதைத் தெளி வாகக் காட்டு கின்றது.

மைசூர் நில அளவாய்வின் போது, வரலாறு, நிலவியல், இனவரைவியல்சார் ஆவணங்களைச் சேகரிப்பதற்கும் மொழி பெயர்ப்பதற்கும் மட்டுமின்றி, சிக்கலான பிராந்திய அறிவின் சமூகவியலைப் புரிந்துகொள்வதற்கும், பிரித்தானியரின் ஆர்வத் தினைச் சந்தேகக் கண்கொண்டு மக்கள் பார்க்கும் சுழ்நிலை ஏற்பட்ட சமயத்திலும் தமது இந்திய உதவியாளர்கள் இன்றியமையாதவர் களாக இருந்தனர் என்பதை உணர்ந்துகொண்டார். உள்ளூருக்கு உரித்தான அறிவைச் சேகரிப்பதில் பிரித்தானியரோ அல்லது திப்பு சுல்தானின் அமீல்தார்களோ கைக்கொண்டது போலான உருட்டல் மிரட்டல் தொனிகளைப் பயன்படுத்தக்கூடாது என்பதில் அக்கறையுடன் இருந்தார் மெக்கென்சி. அவர், “பிராந்தியக் குடிமக்களின் உறவினரும் சொத்துகளும் என்னால் எந்த வகையான வன்முறைக்கும் ஆளாதவாறு பாதுகாக்கப்பட்டனர். அவர்களின் மனத்தை இணங்கவைக்கும் முயற்சியில் நான் முனைப்பாக இருந்தேன். ஏனெனில் அதுவே எனக்கு வேண்டியதை மிக எளிதில் பெற்றுத் தரக்கூடிய ஒன்றாகும்.” என்று கூறியுள்ளார்.

நில அளவாய்வு தொடர்பான விவரங்களைச் சேகரிப்பதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் “சுமுகமில்லாத சந்தேகம்” என்ற பனிப்பாறையின் வெறும் மேலுச்சி மட்டுமே. தகவல் அளிப்பதற்கு மறுப்பு எழக்கூடிய சாதகம் இருந்தது என்பது பற்றி மெக்கென்சியே ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அதன் மறுபக்கமாக, அவர் சற்றும் கவனம் பிசகாத எச்சரிக்கையுடன் நடக்காவிடில் எதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விழைகின்றாரோ அப்படிப் பட்ட விவரங்கள் மட்டுமே கிட்டும் என்பதையும் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. 1816இல் பி. கானருக்கு வரைந்த மடலில், ”இந்த மண்ணின் குடிமக்களின் பொதுவான குணாம்சத்தைப் பற்றிப் போதுமான அளவுக்கு நீங்களாகவே அறிந்திருப்பீர்கள் என்றும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி அதீத ஆர்வத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தினால் அதுவே சந்தேகத்தையும் தாமதத்தையும் சில சமயம் எதிர்ப்பினையும் கிளப்பும் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.

சற்றே அலட்சியமான போக்கு பயனுள்ளதாகவும் அவசியமான தாகவும் இருக்கும். அத்துடன் அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு அளித்த பதிலின் மீதான உங்களது கருத்துக் குறிப்புகளை அவர்களின் முன்னிலையில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.” என்று வலியுறுத்துகின்றார். மெக்கென்சியின் ஆவணத் தொகுப்பின் பெருந்திரட்டில், அதிகாரப்பூர்வ உரிமையின் மீதும் அதிகாரத்திற்கும் அறிவிற்குமான இடையிலான எண்ணற்ற உறவுகளின் மீதும் மண்ணின் குடிமக்களின் குணத்தைப் பற்றிய வழமையான காலனிய கருத்துகள் மீதும் கேள்விகள் எழுப்பப்பட்ட வண்ணம் இருக் கின்றன.

சில பிரதிகள் தங்களது வரலாற்றுப் பின்புலத்தை வெளிக்காட்டி யதன் பின்னணி அதன் மூலம் அவை கம்பெனியிடமிருந்து சாதகமான ஓர் ஏற்பாட்டினை எதிர்பார்த்ததால், கம்பெனியிடம் கொடுக்கப்படும் மனு போல் ஆயின. அந்தப் பிரதிகளுக்கு உரியோர் தங்களது ராஜ்ஜியத்தை நிரந்தரமாக ஜமீந்தாரி பண்ணையாக மாற்றக் கோரியோ, தாங்கள் கட்டும் கப்பத்தைக் குறைக்கக் கோரியோ, ஒரு சில நேரங்களில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி யில் பாளையக்காரப் போர்களில் ஈடுபட்டதற்காகச் சிறையில் அடைபட்டு வாடும் அரசகுல வாரிசை விடுவிக்கக் கோரியோ கம்பெனியிடம் விண்ணப்பித்தனர். 

ஜமீந்தாரி நிலத்தீர்வை முறைக்குப் பின்னரும் பாளையக்காரப் போர்களில் இறுதிகட்டப் போருக்குப் பின்னரும் ஓர் அமைதிநிலை ஏற்படும் வகையிலான சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதை நியாயப்படுத்தும் வகையில் இந்த அரச குடும்பங்கள் பிரித்தானிய அரசுக்கு விசுவாசமாக இருந்தனவா என்பதை அறிய இப்பிரதிகள் உதவுமா என்பதை அறிவதில் மட்டுமே, மெக்கென்சியையும் அவரைப் போன்ற மனப்போக் குடைய ஒரு சிலரையும் தவிர்த்த, மற்ற கம்பெனி அலுவலர்கள் அனைவரும் ஆர்வம் கொண்டிருந்தனர்.

சாதி சார்ந்த பதிவுகளைச் சேகரித்தல்

பின்னாளில் இந்தியாவின் நில அளவாய்வுத் தலைவர் ஆன காலின் மெக்கென்சி தாம் கண்ட கட்டடக்கலை சார்ந்த முக்கியமான கட்டடங்கள் அனைத்தையும் வரைந்தார். அதுநாள்வரை இந்தியா அறிந்திராத ஓவியங்களையும் ஓலைச்சுவடிகளையும் சேகரிப்பதில் விடா முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றிகண்டவர். ஆனால் அவரால் எழுத இயலாது. அவர் எழுத முயன்ற வெகுசில கட்டுரைகளும் அரைகுறையாகவே இருந்தன. அவரிடம் இருந்த அறிவுக் களஞ்சியத் தில் பத்தில் ஒன்பது பங்கு அவருடனேயே மரித்துவிட்டது.   - ஜேம்ஸ் ஃபெர்குசன், 1876

மெக்கென்சியும் அவரது உதவியாளர்களும் தங்களால் கண்டுகொள்ள முடிந்த வரலாற்று, இனவரைவியல், மதம் சார்ந்த ஒவ்வொரு பிரதியையும் மரபையும் ஆவணத்தையும் சேகரித்தனர். அவற்றுடன் கல்வெட்டுப் படிகளையும் தொல்பொருட்களையும் காசுகளையும் ஓவியப் படிமைகளையும் சேகரித்தனர். தாங்கள் நில அளவாய்விற்குச் சென்றபோது கண்ட நூற்றுக்கணக்கான காட்சி களையும் வரைந்தனர். மெக்கென்சியின் சேகரிப்பில் உள்ள ஓவிய வரைவுகள் பல இடங்களில் இருந்தும் தருவிக்கப்பட்டவை. அவற்றுள் அவரே வரைந்தவையும் பயணத்தின் போது பிற அளவாய்வாளர்கள் வரைந்தவையும் அடங்கும். அந்த 1,500 ஓவிய வரைவுகளும் பலதரப்பட்ட அகன்ற பொருண்மையைக் கொண் டவை. அவற்றுள் சில விவசாயக் கருவிகள், கிணறுகள், நீர்ப்பாசனக் கருவிகள், பிற விவசாயத் தொழில்நுட்பக் கூறுகள் ஆகியவற்றை மிக கவனமாகச் சித்திரிக்கும் வரைவுகளாகும். மற்றவை கோயிலில் உள்ள சிற்பங்களின் விரிவான ஓவிய வரைவுகள் ஆகும்.

தக்காணப் பகுதி முழுவதிலும் மெக்கென்சி மேற்கொண்ட பயணங்களின் போது கண்ட பலதரப்பட்ட காட்சிகளையும் நில அமைப்புகளையும் சித்திரிக்கும் ஓவியங்கள் பல உள்ளன. கோட்டைகள், தொன்மையான கட்டடங்கள், உள்ளூர்க் கட்டுமானங்கள் ஆகியவற்றின் சித்திரங்களுடன் தக்காணப் பகுதியின் நிலப் பின்னணியிலும் கட்டடங்களின் பின்னணியிலும் நிற்கும் பிரித்தானியர் சிலரின் ஓவியங்களும் உள்ளன. இறுதியாக, பலவகை உடைகளை அணிந்திருக்கும் பல சாதி இனம் சார்ந்த மக்களின் நீர்வண்ணத்தால் வரையப்பட்ட ஓவியங்களும் உள்ளன.

மெக்கென்சியின் இனவரைவியல்சார் ஓவியங்கள் - பல்வேறு பட்ட குழுக்கள், வகைகள், சாதிகள், இனங்களின் ”வகைமாதிரி” பிரதிநிதிகளின் சித்திரங்கள் - பெரும்பாலும் அவரிடம் இருந்த இந்தியப் படியெடுப்பாளர்களால் ஐரோப்பிய பாணியில் வரையப் பட்டதாகத் தெரிகின்றது. மைசூர் நில அளவாய்வுப் பணியின் முதல் இரு ஆண்டுகளில் வரையப்பட்ட ஒரு தொகுப்பில் வடக்குத் தக்காணப் பகுதியில் - பாலக்காட்டில் - இருக்கும் பல்வேறு சாதி களைச் சித்திரிக்கும் எண்பத்திரண்டு (82) ஓவியங்கள் உள்ளன. அவை “பல்லா கௌட்டின் உடை, கர்நாடிக், 1800 & 1801” என்று பெயரிடப் பட்டுள்ளன. சாதியினைக் குறித்து நிற்கின்ற, ஏன் அனைத்து விதமான சமூக வேறுபாடுகளையும் குறித்து நிற்கின்ற, முதன்மையான அடையாளமாக இருந்தது உடையே. உடையே இனம் சார்ந்த வேறுபாட்டைச் சுட்டும் முக்கிய அடையாளமாகவும் குவிமைய மாகவும் இருந்தது.

ஐரோப்பாவிலும் சரி இந்தியாவிலும் சரி அதிகாரப் படிநிலையை யும் வேறுபாட்டையும் குறிப்பவை ஆடைகளே. இந்திய சமூகப் படிநிலை வரிசையின் வண்ணமயமான, வினோத மான கூறுகளின் ஒரு பகுதியாகவும் கண்ணுக்கு விருந்தாகும் தன்மையை எடுத்துக் காட்டவும் ஆடைகள் முன்னிலைப்படுத்தப் பட்டன. பல்லா கௌட் தொகுப்பில் இடம்பெற்றிருந்த ஓவியங் களில் சித்திரிக்கப்பட்டிருந்த உடைகள் அரச குல மாந்தர், புனித மாந்தர் ஆகியோரது உடைக ளோடு வேறுபட்டத் தொழில் வகைகளைச் செய்வோரது உடைகளையும் சித்திரித்திருந்தன. சில சமயம் அவை “போயா பணியாளர்கள் (ஙிஷீஹ்ணீ ஜீமீஷீஸீs)” என்ற வகையி னுள்ளேயே விளக்கம் தரப்படாத வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. பகட்டான உடை களுடன் கூடிய இந்து நாடகங்களின் எண்ணற்ற ஓவியங்களையும் உள்ளடக்கியிருந்தை அவை நியாயப்படுத்துகின்றன. எது எப்படி யாயினும், அந்த ஓவியங்கள் உடைகளைப் பற்றியதாக மட்டுமன்றி அதனையும் தாண்டியதாக இருந்தமை உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரிகிறது. மைசூர் நில அளவாய்வில் அவதானித் திருந்தபடி கர்நாடக மக்களையும் வழக்காறுகளையும் வண்ண மயமாகச் சித்திரிக்கின்றன.

மெக்கென்சியின் தொகுதியில் இடம்பெற்ற சாதிகள் மற்றும் குழுக்களின் பட்டியல் ஒரு விதத்தில் வேறுபட்ட இனவரைவியல் மரபுணர்வுகளை வெளிப்படுத்தின. அதன்பிறகு அவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்த அரசாங்க விவரக்குறிப்பேடுகளிலும், கையேடுகளிலும் புனிதமானவையாக நிறுவப்பட்டன. முதல் ஓவியம் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு சமணரின் ஓவியமாகும். இது ஆச்சரியத்திற்கு உரிய விஷயமன்று, ஏனென்றால் பண்டைய இந்தியாவில் சமணத்தின் முக்கியத்துவத்தைக் கவனித்த முதன்மையான ஐரோப்பியர்களுள் தாமும் ஒருவர் என்று மெக்கென்சி கூறிக்கொண்டார்.

அரச குல நபர்களின் இரண்டு ஓவியங்கள் உள்ளன. ஒன்று அரசர்களின் மரணத்தை நினைவுறுத்தும் சோகச் சின்னமான பண்டைய விஜயநகர அரசர்களின் சித்திரம். மற்றொன்று அரசவையை அருமையாகச் சித்திரிக்கும் “தேவசமுத் திரத்தில் கூடிகொட்டா அரசரின் வருகை” என்று பெயரிடப்பட்டுள்ள ஓவியம். ஒரு தக்காணத் தலைவரின் எஞ்சியிருக்கும் அரசியல் அதிகாரத்தைச் சுட்டும் வகையில் சாமரங்களுடனும் பிற சின்னங் களுடனும் ஒழுகலாறுகளுடனும் அரசவையின் அரசியல் நடைமுறைகள் நயமாகச் சித்திரிக்கப்பட் டிருந்தன. சித்தரதுர்க்கத்தில் உள்ள அரச குல அங்கத்தினர் (அரச குடும்பத்திற்கு உறவினரும் கூட) ஒருவரின் சித்திரம் “பதவியிலுள்ள ஒரு போயா” என்ற பெயரில் உள்ளது. ஆரம்ப கால ஓவியங்கள் பல உள்ளூர்த் தலைவர்களான பாளையக்காரர்களிடம் பணிபுரிந்த அரசவைப் பணியாளர்களையும் படைவீரர்களையும் சித்திரிக்கின்றன.

வழிவழியாக அரசவையில் இருக்கும் ஏவலாட்களான இவர்கள் சித்திரதுர்க்கத்து அரசவையுடன் தம்மை இணைத்துக் கொண்ட வர்கள். மெக்கென்சியால் முதன்முதலில் நில அளவாய்வு செய்யப்பட்ட மாவட்டங்களுள் சித்திர துர்க்காவும் ஒன்று. இந்த ராஜ்ஜியத்திற்காக அவர் வழக்கத்திற்கு மாறாகப் பெருமளவில் அரச குடும்ப வரலாறுகளையும் மரபு களையும் சேகரித்தார். ஒவ்வொரு படத்திலும் பணியாளின் சாதி சுட்டப்பட்டிருந்தது. அந்தத் தனிநபரின் அரசியல் அந்தஸ்தின் முக்கியத்துவம் அவரது சாதி அடையாளத் திற்குக் கீழடங்கிய ஒன்றாகவே காணப்பட்டது தெளிவு. வருவாய் அலுவலராக இருந்த பிராமணர் ஒருவரைப் போன்ற அரசவை அலுவலர்களும் அரசியல் ஆளுமைகளின் வகைகளுக்கு எடுத்துக் காட்டுகளாக உள்ளடக்கப்பட்டிருந்தனர். குருமார்களும் பரதேசி யாகத் திரியும் சாமியார்களும் கூடப் பிரதானமாக இடம்பெற் றிருந்தனர்.

வேறுபாடுகளையும் அடையாளத்தையும் ஆதிக்க முறைமை யாகக் கொண்டு செயல்படும் சாதி இந்த இனவரைவியல் சித்திரங் களில் மிகக் குறைந்த இடத்தையே வகிக்கின்றது. நாவிதர்கள், கூடை முடைவோர், கைரேகை பார்க்கும் சோதிடர்கள் எனத் தொழில் ரீதியான வகைப்பாடுகளின் வேறுபாட்டினைச் சுட்டிக்காட்டுகின்ற - அதாவது சாதியும் செய்தொழிலும் ஒன்றுக்கொன்று ஒத்திருக்கின்ற - அந்தப் பின்னணியில் ஒரு முக்கியமான குறியாகவே சாதி தோன்று கின்றது. பல தரப்பட்ட விவரணைகளுடன் கூடிய அதிகாரப்பூர்வ அரசவை பிராமணர்கள் உள்ளிட்ட பிராமணர்களின் சித்திரங்களிலும், மருத்துவர் ஒருவரின் சித்திரத்திலும், துங்கபத்திரை நதியில் துணி துவைக்கின்ற ”பிராமணப் பெண்களின்” கவிதையான ஓவியத்திலும் சாதி இடம்பெறுகின்றது. கூடுதலாக, பல்வகைப்பட்ட சாதியினர் சில சமயம் தனியாகவும் சில சமயம் கூட்டமாகவும் சித்திரிக்கப் பட்டுள்ளனர். அதில் ஒன்று ஊர் ஊராகச் சுற்றித் திரியும் கன்னட ஆட்டிடையரான குறும்பர் ஒருவரைச் சித்திரிக்கும் படமாகும். தங்களது சாதிப்பெயரைத் தாங்கள் நெய்யும் கம்பளியில் இருந்து அவர்கள் பெற்றுள்ளனர். இன்னொரு சித்திரம் பலரை ஒருசேர வரைந்துள்ள சித்திரம். அதில் ஒரு “கொமுட்டி அல்லது பனியனும்” மாதவரன் என்ற பெயருடைய பல்ஜாவார் சாதியைச் சேர்ந்த ஒருவரும் ஒரு கன்னட பிராமணரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஓவியங்கள் மற்போர் வீரர்கள், பாணர்கள், வணிகர்கள் ஆகிய வகையினரின் அச்சுவார்ப்பு சித்திரங்களையும் அளிக்கின்றன. குடும்பத்தை உள்ளடக்கிய வீடு என்பது முக்கியமான ஓர் இனவரை வியல் அலகாகப் பார்க்கப்பட்டது. இது “வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ள ஒரு குடும்பம்” என்ற பெயரிலான ஓவியத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இன்னொரு சித்திரத்தில் ஒரு தக்காணக் கிராமத்தின் சொத்துபத்துகளையும் மக்களையும் பாதுகாக்கின்ற பொறுப்பேற்ற இரண்டு காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். வேறு இரண்டு, விவரணையற்ற மரச் சித்திரத்தில் “ஜகன்னாத்திலுள்ள சிற்பங்கள்” இடம்பெற்றுள்ளன. கன்னட நாட்டு ரெட்டி ஒருவரின் நறுவிசான சித்திரம் ஒன்று உள்ளது. அது விகிதாசார அளவில் சற்றே முன்பின்னாக இருந்தாலும் அதிலுள்ள நபரின் வேட்டி, மேலங்கி, தலைப்பாகை ஆகியவற்றைக் கவனமாகச் சித்திரித்துள்ளது. “ராம்சரண், ராஜபுத்திர சாதியைச் சேர்ந்தவர்” என்ற மற்றொரு சித்திரம் மற்ற சித்திரங்களை விட அதிகமாக முகவெட்டில் கூர்த்த கவனத்தைக் காட்டுகிறது. பெயராலும் சமூக அந்தஸ்தாலும் அடையாளம் காணப்படும் மிகச்சில படங்களுள் இதுவும் ஒன்று என்பதனால் இருக்கலாம்.

பின்னர் அந்த நூற்றாண்டில் மானுடவியல் ஆய்வு முன்னிறுத்திய தரத்தின்படி இனவரைவு சார்ந்த அச்சுவார்ப்பு வகையினைச் சித்திரிப்பவை - மெக்கென்சி நில அளவாய்வுத் தலைவராகக் கல்கத்தாவிற்கு வெளிப்புறத்தே இருந்த ஆண்டுகளில் அவருடைய உதவியாளர்கள் தீட்டிய ஒரிசாவைச் சேர்ந்த பழங்குடி மக்களின் சித்திரங்கள். இந்தச் சித்திரங்கள் கோண்டு, மரியா, பில் போன்ற இனக்குழுக்களைச் சித்திரிக்கின்றன. இந்தியாவின் மையநீரோட்டப் பிரிவினரான இந்திய வேளாண் இன மக்கள் தொகுதியில் இருந்து வேறாகப் பிரித்துப் பார்க்கப்பட்ட, பழங்குடி இனத்தவர் என்று குறிப்பிட்டு அழைக்கப்பட்ட குழுக்களுக்கு ஆரம்ப கால மானுட வியல் ஆய்வுகள் தந்த முன்னுரிமையைப் பிரதிபலிக் கும் வகையிலான எந்த அறிகுறியும் இந்தப் படங் களிலோ பொதுவாக அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட இடத்திலோ சிறிதும் இல்லை. அந்தச் சித்திரங்களுக்கு ஈடான “இனவரைவியல்” தன்மையைக் கொண்ட மற்றொரு படம் வடக்குத் தக்காணப் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு விழாவில் பல வகையான நடனங்களை ஆடும் பிராமணச் சிறுமி களைத் தீட்டியுள்ள படமாகும். இந்தச் சித்திரத்தின் அடியிலுள்ள எழுத்துப்பதிவு அந்த விழா, அதன் முக்கியத்துவம், அதன் சடங்கு முறைமைகள், அதில் பங்கு பெறுபவர்கள் என அனைத்து விவரங்களையும் கூறுகின்றது. இந்து நாடகங்களில் இருந்தும் பல காட்சிகள் தீட்டப்பட்டுள்ளன. அப்படியான ஒரு ஓவியத்தில் இராமாயண நாடகக் காட்சி தீட்டப்பட் டுள்ளது.

கதாபாத்திரங்களையும் வகைமாதிரிகளையும் மெக்கென்சி அவர்கள் வகுத்து வைத்திருந்த முறையி லிருந்து சமூக அடுக்குமுறை பற்றி அவருக்கிருந்த புரிதல் தெற்றெனத் தெரிகின்றது. முதலில், சமகாலத்திய ராஜ்ஜியங்கள் மற்றும் அவற்றின் அரசியல்சார் அடுக்குவரிசைகளின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார் - முன்னாள் மற்றும் இன்னாள் மன்னர்களின் படச்சித்திரங்கள் தக்காணத்தின் அரசியல் வரலாறு பற்றிய மெக்கென்சியின் புரிதலை எடுத்துக் காட்டுவன. உள்ளூர்த் தலைவர்களின் முக்கியத்துவத்தை ஆவணப் படுத்திய நூற்றுக் கணக்கான குடும்ப வரலாறுகளையும் உள்ளூர் வரலாறுகளையும் மெக்கென்சி சேகரித்தார்.

ஒவ்வொரு பகுதியின் மரபுகளையும் வழக்கங்களையும் புரிந்துகொள்வதற்கும் நிலம் உள்ளிட்ட மற்ற உள்ளூர் இயற்கை வளங்கள் மீதான உரிமைகளைச் சரியாகப் பகிர்ந்தளிப்பதற்கும் அந்த உள்ளூர்த் தலைவர்களின் ஆட்சி வடிவம் மிக முக்கியமானது என்று நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே தான் நாம் அரசவைக் காட்சிகளை, உள்ளூர் அதிகாரிகளை (பெரும்பாலும் வருவாய் அதிகாரிகள்), அரசவையில் வழிவழியாக இருக்கும் ஏவலாட்களை, அரசவைப் பணியாட்களை, படைவீரர் களைப் பார்க்கின்றோம். இவர்களுக்கும் நில அளவாய்வாளர்களுக்கும் இடையே பெரிய அளவில் ஊடாட்டம் இருந்தது தெள்ளத் தெளிவு. அடுத்து பிராமணர்கள், பல வகையான புனைவுகளில், முக்கியமாக இடம்பெற்றிருந்தனர். பிராமணர்கள் அரசவை அதிகாரிகளாக (புரோகிதர்களாகவும்) இருந்தனர். அது மட்டுமின்றி மெக்கென்சி யின் நம்பிக்கைக்குரிய இந்திய உதவியாளர்களாக இருந்த பலரும் பிராமணர்களே. அவர்கள் உள்ளூர்ப் பிரதிகளையும் மரபுகளையும் சேகரிக்கச் சென்றபோது ஐயத்திற்கிடமின்றி அவ்வாறான தேடலை அப்பகுதி பிராமணர்களைத் தொடர்புகொள் வதில் இருந்தே தொடங்கினர்.

பிராமணப் பெண்கள் துணிகளைத் துவைப்பதும் குளிப்பதும் கண்ணைக் கவரும் வகையிலான சித்திரம் வரையும் மனப்போக்கிற் கான வாய்ப்புகளை ஏற்படுத்தின. அப்படங்களின் அடியில் எழுதப்பட்டிருந்த மென்மையான காதல் கவிதையுடன் சேர்ந்து அவை பூரணத்துவம் பெற்றன. குருமார்களும் பரதேசியாகத் திரியும் சாமியார்களும் சிறப்பான வகையில் கண்ணைக்கவரும் விதமாக இருந்தது மட்டுமின்றி இந்தியாவின் ஆன்மிக ஞானத்தின் வடிவ மாகவும் உணரப்பட்டனர். நாவிதர் முதல் சோதிடர் வரையிலான தொழில்முறை குழுவினர் சாதியின் வரையறைக்கும் ஒழுங்கமைப் பிற்கும் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால் கிராமப்புற இந்தியாவானது தன்னிறைவு பெற்ற, முழுமையாக இயங்கிய, பொருளாதார அமைப்பையுடைய எண்ணற்ற கிராமம்சார் மக்களாட்சிகளால் ஆனது என்ற மறுக்க முடியாத உண்மையினை நூற்றாண்டின் திருப்பத்தில் பிரித்தானி யருக்கு அவர்கள் (அதாவது அந்த சாதிப் பிரிவினர்) தெரியப்படுத்தினர். சிலசமயம் போகிற போக்கில் வரையப்பட்ட பிற ஓவியங்கள் இந்திய சமூகத்தைக் கட்டமைப்பதற்கு அடிப்படையான தாக அடையாளம் காணப்பட்ட, இந்தியாவில் இருந்த பிரித்தானியரின் குறிக்கோளுக்கு அவசியப் பட்ட, பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐரோப்பியரின் கற்பனை உலகத்தில் கவர்ந்து இழுக்கக் கூடிய ஓர் அற்புத நிலக் காட்சியைக் கொண்ட இந்தியாவின் அங்கங்களான குழுவகைகளை ஆவணப்படுத்தின.

எந்தவிதமான முறையான, தன்னாட்சி வகையிலான “சாதி அமைப்பை”க் கொண்டிராத நிலையில், பதினெட்டாம் நூற்றாண்டில் தக்காணப் பகுதியின் அரசியல் நிலவமைப்பினைப் பிரதிபலித்த, இடைக்காலத்தின் முடிவில் புழங்கிய நிலமானியப் பண்பாட்டின் சமுதாயத்தின் எச்சமாக விளங்கிய கதாபாத்திரங்களுக்கு ஓவியம் வரைதலின் மூலமாகக் கொடுக்கப்பட்ட கவனத்தில் இந்திய இன வரைவியல் பற்றிய மெக்கென்சியின் பார்வைக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் புனிதமானதாக அது கட்டமைக்கப் பட்டதற்கும் இடையிலான வேறுபாடுகளை நம்மால் காணமுடி கின்றது.

பிற்கால காலனியச் சித்திரிப்பிற்கு அவசியமான ஆவணப் படுத்தலுக்கும் விவரணைக்குமான சில கருவிகளை மெக்கென்சி யின் நோக்கு வழங்கியிருந்தாலும் தனிநபர்களுடன் குழு வகையினர், அரசியல் புள்ளிகளுடன் சாதியைச் சார்ந்தவர், நாவிதர் தொடங்கி மற்போர் வீரர் வரையான தொழில்வகையினர் என அனைவர் மீதும் தமது கவனத்தை மெக்கென்சி செலுத்தி இருந்தமை - சாதிகள் மற்றும் பழங்குடிகள் அளவாய்வுகளின் அறிவியல் களஞ்சியத்திலிருந்து அடிப்படையில் வேறுபட்டதான ஒன்றாக அவரது மானுடவியலை எடுத்துக்காட்டின. இது இவ்வாறிருக்க, இந்தப் பின்னாள் அளவாய்வுகள் வரலாற்றுக்கு மிகவும் எதிரிடையாக இருந்தன. இந்தியாவின் வரலாற்றினை இன்னும் முற்றிலுமாக அழித்துவிட்டு அந்த இடத்தைக் காலனிய மானுடவிய லால் இன்னமும் நிரப்பியிராத தொடக்க கால பிரித்தானிய ஆட்சியின் குறைந்தபட்சம் ஒரளவேனும் வரலாற்றில் காலூன்றிய எதிர்பாரா நிகழ்வுகளுக்கு மெக்கென்சியின் இனவரைவியல் துணைநின்றது.

செமச்சுள்ளம் தூண்இருந்தபோதிலும், மெக்கென்சி சேகரித்த வரலாற்று ஆவணங்களில் இடம்பெற்றுள்ள பண்டைய அரசர்களின், அரசகுலப் பணியாளர்களின் ஓவியங்கள் இந்த நபர்களின் முக்கியத்துவத்தை முழுவதுமாகப் படம்பிடிக்கவில்லை. அதற்குப் பதில், உள்ளூர் சாகச நாயகர்களான இவர்களைத் தேய்ந்து மறைந்துபோன நிலமானிய ஒழுங்கமைப்பின் ஓவிய எச்சங்களாகவே தோற்றமளிக்கச் செய்கின்றன. அவை இப்பொழுது அணிந்தவரைக் குறிப்பனவாக அன்றிப் பகட்டான, வண்ணமயமான, இனம்சார் நினைவெண்ணங்களை எழுப்பக்கூடிய ஆடைகளைக் குறிப்பன வாக (மட்டும்) மாறிப்போயின. மெக்கென்சியின் வரலாற்றுத் திட்டப்பணியில் இனவரைவியல் நுண்ணுணர்வுகள் புதைந்திருந் தாலும், இந்த ஓவியங்கள் அதற்கு முரணாக இந்தத் திட்டப்பணியின் முற்றுப் புள்ளியைக் குறித்து நின்றன. இனவரைவியல் பண்பார்ந்த ஒரு நாட்டின் மீதான அழகிய எதிர்பார்ப்புடன் இந்திய வரலாறு முதல் முறையாகக் கண்ணைக் கவரும் விதத்தில் தோற்றமளிக்கச் செய்யப்பட்டது.

காலனிய வரலாற்று வரைவின் இருமனப்போக்கு

கணிசமான நேரம், உழைப்பு, பணம் ஆகியவற்றின் செலவில் உருவாக்கப்பட்ட ஒரு திரட்டு. இதுவரை எந்தத் தனிநபராலும் இதுபோல் சேகரிக்க இயவில்லை, ஒருவேளை, இனிமேல் யாராலும் மீண்டும் இவ்விதம் திரட்ட இயலாது போகலாம். அதனுள் இடம்பெற்றிருப்பவை பலவகையின. இந்திய வரலாற்றையும் புள்ளிவிவரத்தையும் பொறுத்தவரையில் அதன் மதிப்போ இன்னும் வரையறுக்கப்படவில்லை. இவற்றைச் சேகரித்தவரே கூட இதன் பயன்களைச் சரிபார்ப்பதற்கு எந்தச் சிறு முயற்சியும் எடுக்கவில்லை என்பது உண்மை.         - ஹெச். ஹெச். வில்சன், 1828

பிரித்தானிய அரசாங்கம் மெக்கென்சி மேற்கொண்ட தீவிர முனைப்புகளின் மதிப்பினைக் குறித்து ஒருபோதும் கருத்து வெளிடாமல் இருந்தது. மைசூர் அளவாய்விற்கான சலுகைத் தொகைகள் 1801இல் திடீரென வெகுவாகக் குறைக்கப்பட்டன. இது அவருடைய அளவாய்வுகளைச் செயல்முறைப்படுத்துவதையும் மேலும் பரந்துபட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதையும் தடுக்கின்ற மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியது. அவ்வப் பொழுது பல கட்டங்களில் கம்பெனியும் அரசாங்க அதிகாரிகளும் தங்களது ஒப்புதலை அளித்தாலும் மெக்கென்சியின் தொழில்முறைப் பணியானது அவரது அளவாய்வு மற்றும் நிர்வாகத் திறமை யினாலேயே செழிப்புற்றது. அத்துடன் அக்காலத்தில் கம்பெனியின் ஊழியர்களில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் கடினமாகவும் உழைத்தவர் மெக்கென்சியே. 1807இல் மதறாஸ் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர், “தாம் நீண்ட காலமாக ஈடுபட்டிருந்த மிகக் கடினமான கடமைகளை மிகுந்த உற்சாகத்துடன் மேற்கொண்டு செயல்பட்ட மேஜர் மெக்கென்சியை இந்தியாவிலுள்ள வேறு எந்தப் பொதுத்துறை அதிகாரியாலும் வென்றுவிட முடியாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று குறிப்பிடுகின்றார்.

மெக்கென்சியின் நில அளவாய்வுத் திறமையின் மீதும் நில வரைபடம் வரையும் திறமையின் மீதும் ஒருபோதும் சந்தேகம் இருந்ததில்லை. தொடக்க கால பிரித்தானிய ஆட்சியில் வங்காள அளவாய்வின் கட்டுமான நிபுணராகவும் மூத்த நில வரைபட மெழுதுபவருமான ஜேம்ஸ் ரென்னெல் மெக்கென்சியின் “நிபுணத்துவ முறைமை”யைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்: “பல்வேறு பொருட்களை வேறுபடுத்தி வகைதொகைப்படுத்துவது இந்த நாட்டின் இயற்கையைப் பற்றிய ஒரு கருத்தை உருவாக்கு வதை நோக்கமாகக் கொண்டது. இது சோதித்துப் பார்க்கும்போது தெளிவாகத் தெரிகின்றது. அதன் துல்லியம் அதன் செயலாக்கத் திற்குச் சமானமாக இருக்கின்றது என்பதில் எனக்கு ஐயமில்லை. மேலோட்டமாகப் பார்த்தாலே மிகப் பாரிய அளவிலானது இந்தப் பணி. நான் சொல்வது சரியாக இருக்குமானால் இது அயர்லாந்து ராஜ்ஜியத்தை விடக் கணிசமான அளவில் பெரியதாக இருக்கும்.” லண்டனில் இருந்த வாரிய இயக்குநர்கள் மிகுந்த மெச்சுதலுடன் மைசூர் அளவாய்வின் தரவுகளைப் பெற்றுக்கொண்டனர். பிப்ரவரி 9, 1810 தேதியிட்ட தமது அறிக்கை யில் அவர்கள் கீழ்க்காணுமாறு குறிப்பிட்டுள்ளனர்:

தமக்குப் பணிக்கப்பட்டிருந்த எளிதில் செய்யவியலாத பணியினை வெகுகாலம் தொடர்ந்து விடாமுயற்சியுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் இந்த வினைமுயற்சியையும் அவர் மேற்கொண்ட விதத்தினையும் இந்த வினைமுயற்சியின் பயனாகக் கிடைத்துள்ள வற்றையும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் நாங்கள் பாராட்டுகின்றோம். வடிவியல் கணிதத்தின் கோட்பாடுகளின் படி 40,000 சதுர அடிகளுக்கு மேலான பரப்பளவைக் கொண்ட, மலைகளும் காடுகளும் நிறைந்த மிக அதீதக் கடுமையான நிலப்பரப்பினைக் கொண்ட, அத்தகைய பணியினை மேற்கொள்வதற்கான எத்தகைய வசதிகளும் தங்குவதற் கான முகாந்திரங்களும் அற்ற, ஐரோப்பிய அறிவியலால் கண்டு ணர்ந்து ஆராயப்பட்டிராத ஒரு நிலப் பகுதியினை உடல்நிலைக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பருவநிலையிலும் கூட அளவாய்வு செய்யும் பணியானது சாதாரணமான விஷயமில்லை; அத்துடன் அந்த அளவாய்வின் ஆய்வுக் குறிப்பேட்டில் உள்ள பொதுவான நில வரைபடத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வகையான இடத்தின் நுண்ணிதான பகுப்புகளும் விவரங்களும் பெரிய அளவில் மிகக் கைதேர்ந்த செயல்முறையுடன் பதியப்பட்டுள்ள விதத்திற்கும் பற்பல பொருட்களையும் தீர்க்கமாகப் பேதப்படுத்திக் காட்டும் விதத்திற்கும் இதுவரையிலும் எங்களது அவதானிப்புக்கு வந்துள்ள இதே தன்மையைக் கொண்ட எந்தப் பணியும் ஒருபோதும் சரிநிகர் சமானமாக முடியாது. இந்திய நிலவியல்சார் சேமிப்புக் கிடங்குக்குப் பெரும்பாலான பொருள்களை வழங்கியதோடு இராணுவ, நிதியியல், வாணிக நோக்கங்களுக்கான பயனுள்ள விவரங்களை வழங்கக்கூடிய இது ஆக மொத்தத்தில் அசாதாரணமான சிறப்புமிக்க ஒரு சாதனையாகும்.

மெக்கென்சியின் பயனளிக்கக் கூடிய நில வரைபடங்களையும் ஆய்வுக் குறிப்பேடுகளையும் மிகவும் சிலாகித்த வாரியத்தின் இயக்குநர்கள் இந்த அளவாய்வு பதிப்பிக்கப்படக்கூடாது என்றும், “பொதுத் துறை அலுவலகங்களின் தேவைக்கு உரியவற்றைத் தவிர்த்த அவரது ஏனைய நில வரைபடங்களோ அவற்றின் எந்தப் பகுதியுமோ பிரதியெடுக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது” என்றும் உறுதிபட அறிவித்தனர்.

மெக்கென்சியின் “இந்த நாட்டின் வரலாறு, மதம், தொல் பொருட்கள் சார்ந்த மிகைப்படித்தான உசாவல்களையும் (விசாரணைகளை/ கேள்விகளை)” புகழ்ந்துரைத்த வாரியம், மெக்கென்சியின் “பணிக்கப் பட்ட வேலையில் இருந்து தடம்மாறிய பிற அயர்ச்சி தரக்கூடிய வேலைகள் அவர் சில நிகழ்வுகளில் பங்கேற்காததற்குச் சாக்காக அமைந்தன.” என்று ஒத்துக்கொண்டது. சேகரிக்கப்பட்ட ஆவணங் களின் உள்ளபடியான “நம்பகத்தன்மை” யின் மீதும் இத்தகைய ஓர் வினைத்திட்பம் சார்ந்த பொதுவான அறிவுநுட்பத்திற்கு இத்தனை “அளப்பரிய கடின உழைப்பு” தேவைதானா என்றும் சற்றே சந்தேகம் ஏற்பட்டாலும் “உண்மையைப் புலப்படுத்தும் மெய்யான வரலாற் றின் சிதறிக் கிடக்கும் துண்டுத்துணுக்குகளின் மூலம் இதுவரை இருந்த இருண்மை நிலையிலிருந்து வெளிவரக்கூடிய நியாயமான எவற்றையும் கைக்கொள்வதற்கான வாக்குறுதியை இந்த முயற்சி அளிக்கின்றது. நாட்டின், அதன் தற்கால அரசாங்கங்களின் நிலைமை என்ன வென்பதையும் அதன் அசலான நிறுவனங்களையும் முற்காலப் புரட்சிகளையும் ஓரளவு அறிவுத்திறத்துடன் இறுதியாக அறிந்து கொள்வதற்கான எதிர்பார்ப்பினை ஊக்கப்படுத்துகின்றது.”

பெரும்பாலான கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகளின் மையப் பொருண்மையாக இடம்பெற்றிருந்த, பிராமணர்களுக்கு வழங்கப் பட்ட மானியங்களின் நம்பகத்தன்மை மீது எழுந்த சந்தேகங்களுக்கு “ஒன்றே ஒன்றைத் தவிர (அதுவும் ஒரு வகையில் வரலாற்றுக்கு உதவி செய்வதே) வேறெந்த வகையிலும் மோசடி நடந்ததாகக் கண்டுபிடிக்கப்படவும் சந்தேகப்படவும் இல்லை” என மிகவும் அழுத்தமாகப் பதிலளித்தார் மெக்கென்சி. மெக்கென்சியின் கடினமான உழைப்பினைப் பற்றி வாரியம் கொண்டிருந்த சுவாரசிய மான ஒரு கருத்து என்னவென்றால் இந்தியாவில் “மெய்யான வரலாறும் காலநிரலும்” இல்லாத குறையை வரலாற்றுப் பிரக்ஞையின்மையைக் குறிக்கும் அத்தாட்சியாகக் கருதாமல் “அரசியல் ஆவணங்களைப் பேணிக்காப்பதற்கான சாதகமற்ற” அத்தகைய சுழல் உருவாக “குழப்பங்களும் மாற்றங்களுமே” காரணமாக இருந்தன என்று கருதியதாகும். இந்தியாவின் வரலாற்று இன்மை - வரலாறு பற்றிய புரிதல் இன்மை - இன்னமும் காலனியப் பழமரபாக மாறவில்லை.

மதறாசின் ஆளுநரான வில்லியம் பெண்ட்டிங்க், மைசூரை உறைவிடமாகக் கொண்டிருந்த பிரித்தானியர் மார்க் வில்க்ஸ், பூனாவில் தங்கியிருந்த ஜான் மால்கம் ஆகியோர் தமது மடலில், மெக்கென்சிக்குப் போதுமான அளவு அரசாங்கத்தின் ஆதரவும் ஊக்குவிப்பும் இல்லாத கவலையைத் தெரிவித்திருந்தனர். அதற்குப் பதிலாக, அந்த மடலை அடிப்படையாக வைத்தே மெக்கென்சியின் சேகரிப்பை வாரியத்தினர் மதிப்பீடு செய்தனர். “ஓலைச்சுவடிகளை யும் உச்சமான தொல்லியல் மதிப்புள்ள பொருள்களையும் காண்ட மதிப்புமிக்க சேகரிப்பைத் திரட்ட உதவிய அந்த அதிகாரி, கீழைத்தேய வரலாற்றின் இருண்ட காலங்களின் மீது பயனுள்ள வகையில் வெளிச்சம் பாய்ச்சுவார் என்றும் அதே சமயம் இலக்கிய அறிவின் நாட்டத்திற்கும் சொத்து விஷயங்களைப் பொறுத்தவரையில் முன்னாள் உரிமைக் காலவரையறை சார்ந்த மிகச்சரியான தகவலைப் பெறவும் தக்காண இந்தியாவின் பண்டைய அரசகுலங்களின் சட்டங்களை அறிவதற்கும் மதிப்புமிக்க ஒரு வழிகாட்டியாக இருப்பார் என்றும் எதிர்பார்ப்பு எழக்கூடும்.” என பெண்டிங்க் கருதினார்.

பிரித்தானிய ஆட்சியின் பொதுவான திட்டத்திற்கு அவரது சேகரிப்பின் முக்கியத்துவம் வாய்ந்தது என பெண்டிங்க் முற்றிலும் உணர்ந்திருந்ததாகத் தெரிகின்றது. மெக்கென்சியால் மட்டுமே இந்த ஓலைச்சுவடிகளின் அர்த்தத்தைப் புரிந்தகொள்ள முடியும் என்று அவர் எண்ணினார் ஏனென்றால் அவரைப் போன்ற அனுபவமும் நிபுணத்துவமும் வேறெவருக்கும் இல்லை. “மெக்கென்சியாலேயே இந்த நோக்கம் நிறைவேறும் இல்லையென்றால் இது ஒருவேளை நிறைவேறாது போகலாம். இன்று அவை உள்ள நிலைமையில் அவரது ஆவணப்பொருட்கள் வேறொருவர் கைக்குச் செல்ல நேர்ந்தால் அவை தொலைந்து போனதாகவே கருதிக்கொள்ளலாம்.” என்றார். ஓலைச்சுவடிகள், மெக்கென்சி என்ற மனிதர் - இவ்விரண்டின் முக்கியத்துவத்தையும் லண்டன் உணர்ந்துகொள்ள வேண்டும், குறைந்தபட்சம் அவருக்கு ஏற்பட்ட செலவினங்களை யாவது திருப்பித் தரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மெக்கென்சியின் ஆவணத் தொகுப்பிலிருந்து ஏராளமான குறிப்புகளுடன் ஆவணப்படுத்தப்பட்ட தென்னிந்தியாவின் வரலாற்று ஓவியங்கள் என்ற பெயரிலான தமது நூலை மூன்று தொகுதியாக 1817இல் வெளியிட்ட மார்க் வில்க்ஸ் மெக்கென்சி மேற்கொண்ட வரலாறு சார்ந்த கடின உழைப்புகளை மிகுந்த உற்சாகத்துடன் ஆதரித்துப் பேசியவர். இருப்பினும் கல்வெட்டு களைத் தவிர்த்த ஏனைய வேறெதற்கும் வரலாற்று மதிப்பு உண்டா என்ற பெரிய ஐயப்பாடு அவருக்கு இருந்தது. “இந்நாட்டிலுள்ள வரலாற்றுத் துறை கட்டுக்கதைகளாலும் கால முரண் பாட்டாலும் உருவிழந்து கிடப்பதால் இந்திய இலக்கிய மானது முற்றிலும் வெறுமையாக இருப்பதாகக் கொள்ளவேண்டியுள்ளது.” என்று குறிப்பிடுகின்றார்.

இந்திய “வரலாற்று”ப் பிரதிகளும் காலவரிசைக் கதைகளும் தொன்மத்தாலும் கற்பனையாலும் மாசுபட் டிருப்பதால் இடைக்காலத்தின் இறுதி, நவீன காலத் தின் தொடக்கம் ஆகிய காலப்பகுதியைச் சேர்ந்த இந்திய இலக்கியத்தின் வளர்ச்சியினை அறிந்து கொள்ள மட்டுமே அவை உதவும் என்று பெரும் பான்மை யான இந்திய வரலாற்று அறிஞர்கள் அதுவரை எண்ணியிருந்தனர் என்றும் கருத்துரைத்தார். பல்லாயிரக்காண கல்வெட்டு மட்டும் செப்பேடுகளைப் பிரதியெடுத்துத் தென்னிந்திய கல்வெட்டுகளைப் பதிவு செய்யும் பணிக்கு மிகுந்த பங்காற்றினார் மெக்கென்சி. இந்தக் கல்வெட்டுப் பதிவின் உதவியை நாடினார் வில்க்ஸ். “முன்னர் குறிப்பிட்டஇந்தக் குறையினை நிவர்த்தி செய்வதற்கான மிகத் தொலைதூர நம்பிக்கையை ஒரு வழி அளிக்கின்றது.

தெற்கு இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கிடைக்கும் கல்வெட்டு களிலும் செப்பேடுகளிலும் இடம்பெற்றுள்ள பொதுவாக மதம் சார்ந்த மானியங்கள் ஆர்வத்தைத் தூண்டக்கூடியத் தன்மை யுள்ளவை. அவை ஏறத்தாழ எப்போதுமே காலவரிசையை உறுதிபடுத்துபவை. தானம் கொடுத்தவரின் அவரது முன்னோர்களின் காலவரிசையிலான பரம்பரையையும் படைப்பிரிவு சார்ந்த வரலாற்றையும் அவற்றுடன் கூடவே குறிப்பிடத்தகுந்த வகையில் அமைந்த குடிமை நிறுவனங்கள், மதச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை அடிக்கடிச் சுட்டிநிற்பவை” என்று கருதினார். அதனால் அதற்குப் பிறகான இந்திய வரலாற்றுவரைவின் செயல்முறைகள் இன்னவாக இருக்கும் முன்கூட்டியே கருதிய வில்க்ஸ், வரலாறானது கால நிரலால் உறுதிப்படுவதாகக் கருதியதால் கல்வெட்டுகளே பிற பிரதிகளைவிட அதிகம் விரும்பப்பட்டன. அரசர்கள், ஆட்சிகள், போர்கள், பிற நிகழ்வுகள் ஆகியவற்றின் காலத்தை நிர்ணயிக்கக் கல்வெட்டுகள் பயன்படும் என்பது ஒருபுறம் இருக்க, மெக்கென்சி யின் பிரதிகள் - அறுதியிடப்பட்ட காலத்தையோ நம்பகத்தன்மை யையோ கொண்டிராத சிதறலான வாய்மொழி மற்றும் இலக்கிய மரபுகளால் கட்டமைக்கப்பட்டிருந்த பிரதிகள் - தம்மளவில் தமக்கேயுரிய ஓர் அகச்சார்பில் காலக் குறியீடுகளையும் நிகழ்வுகளை யும் கட்டமைப்புகளையும் கொண்டிருந்ததாகவும் வரலாற்றுப் பெருங்கதையாடல்களுக்கும் ஒதுக்குதலுக்கும் அத்தனை எளிதில் அடிபணியாதவையாகவும் தோன்றின.

சாமுண்டா சிற்பம்நிலச் சொத்துபத்துகள் பற்றிய ஏதேனும் நம்பகமான வரலாற்றுத் தகவலின் தன்மையைப் பற்றி பெண்டிங் கொண்டிருந்த அதிகாரப் பூர்வமான அதே கோணத்தை வில்க்ஸ§ம் கொண்டிருந்தார். அதனால் அவர், “இந்தியாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் நிலச்சொத்து களின் வரலாற்றைப் பற்றிய நம்பகமான ஆவணங்களின் தொடர்த்தொகுப்பின் மூலமாகக் கண்டடைய முடியக்கூடுமானால், அதை விடப் பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்தைக் கவரக் கூடிய மேம்பட்ட சுவாரசியத்தையும் முக்கியத்துவத்தையும் தரக்கூடியது வேறெதுவும் இல்லை என்று நம்புகின்றேன்.” என்று குறிப்பிட்டார். ஜமீந்தார்களினுடனான நிரந்தரமான நிலத்தீர்வையினைப் பரிந்துரைப்பவர்களுக்கும் “பயிரிடுபவர்களுடனான” நேரடித் தீர்வையினைப் பரிந்துரைத்த மன்றோவைப் பின்பற்றியவர்களுக்கும் (ரயத்வாரிகள்) இடையிலான விவாதங்கள் காரசாரமாக, குறிப்பாகத் தென்னிந்தியாவில், நடைபெற்றுக்கொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் இதனைத் தவிர வேறெந்த விஷயமும் பிரித்தானியரின் அதிகாரப்பூர்வமான கருத்தினைப் பின்பற்றவில்லை.

மதம் சார்ந்த விஷயங்களை விட நில உரிமை சார்ந்தவற்றில் வில்க்ஸ§க்கு ஆர்வம் இருந்தாலும், இந்துமதத்தின் வரலாற்றினைப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான கதவுகளை மெக்கென்சி திறந்துவைத்தார் என்று அவர் குறிப்பிடுகின்றார். இந்துக்களின் மதமானது “மாறாததாகவும் மாற்றமுடியாததாகவும் குறிப்பிடப்படு கின்றது” என்பதை உணர்ந்துகொண்ட அவர், “ஐரோப்பாவின் மத வரலாறு எப்போதுமே புரட்சிகளால் நிறைந்துள்ளது” என்றும் வழக்கமாகப் பொது வரலாற்றில் மிகவும் சுவாரசியமானதாகவும் அறிவுறுத்துவதாகவும் இருப்பதாகக் கருதப்படும் எந்த சிறிய விஷயமும்” மெக்கென்சியின் பிரதிகளால் “கண்டடையவும் எடுத்துக்காட்டப்படவும்” படும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மெக்கென்சி மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தகுந்த ஊதியத்தை அவருக்குப் பெற்றுத் தர இயலாதபடிக்குக் கட்டுப்பாட்டு வாரியத் தால் தமது கைகள் கட்டுண்டிருந்ததைப் பற்றிப் பல ஆண்டு களுக்கு பெண்டிங்க் அவர்கள் மிகவும் வருந்தினார் என்றாலும் அவரது தொடர்ந்த கடிதங்களின் விளைவாக மெக்கென்சியின் பங்களிப் பினை அங்கீகரித்த கம்பெனி அவரது ஊதியத்தை 50% அதிகரித்தது. அவரது சேகரிப்பைப் பராமரிப்பதற்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்காக மாதாந்திரத் தொகை ஒன்றை அளித்ததோடு அவரது ஒருசில ஆய்வுச் செலவுகளுக்காக ஒரு தனிக் கணக்கை, “அதை மீறிய பெருஞ்செலவு எதையும் வைக்காது என்ற நம்பிக்கையுடன்” தொடங்கிவைத்தது.

மைசூர் நில அளவாய்வு முடிந்தவுடன் மைசூர் “படைவீரர்கள் முகாம் தலைவராக” நியமிக்கப்பட்ட மெக்கென்சி, இந்தப் புதிய பணி “அவர் சேகரித்த தரவுகளை உள்வாங்கிக் கொண்டு மேம்படுத்த” வேண்டியதற்குப் போதுமான ஓய்வினை அவருக்குத் தரவல்லது என்று நம்பிக்கை தெரிவித்தது வாரியம். ஆனால் அதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு, 1810இன் இறுதியில், வெகுகாலமாக மெக்கென்சி பரிந்துரைத்த மதறாஸ் நில அளவாய்வுத் தலைவர் பதவியை மதறாஸ் அரசாங்கம் உருவாக்கி அவரை அந்தப் பதிவியில் அமர்த்தியது. மெக்கென்சியின் வார்த்தையில் சொல்வதானால், நில அளவாய்வுகளின் அதிகரித்த செலவுகளையும் “எந்தவிதமான பொதுவான, நிலையான முறைமையையும் பின்பற்றாது தொடர்பற்றும் குழப்பத்துடன் மேற்கொண்ட பணி களையும்” பற்றி அரசாங்கம் திடீரென அக்கறை காட்டியது. இருப்பினும், மெக்கென்சிக்குக் கிடைத்த அங்கீகாரத்தாலும் பதவி உயர்வாலும் அவரது வரலாற்று ஆர்வமிக்க பணியில் ஈடுபடுவதற்கான நேரம் கிடைப்பது கடினமாயிற்று. அதற்கு ஓராண் டிற்குப் பிறகு 1811இல் ஃபிரெஞ்சிடமிருந்து சாவகத் தீவினைக் வெற்றிகரமாகக் கைப் பற்றிய படைக்குத் தலைமைப் பொறியாளராகப் பணியமர்த்தப்பட்ட போது அவரது முயற்சிகள் இன்னும் பின்னடைந்தன. அப்பொழுதும் சாவக ஆவணத்தரவுகளின் ஓர் அசாத்திய சேகரிப்பைத் திரட்டினார். “இந்தியாவில் அத்தனை முக்கியத்துவம் பெற்றிருந்த, எல்லாவற்றை யும் ஊடுருவிச் செல்லக்கூடிய பிராமணர்களின் அசாத் தியமான திறமையின் உதவி இல்லாததே இங்குள்ள பெருங்குறை” என்று மட்டும் சற்றுப் புலம்பினார்.

1815இல் மெக்கென்சி இந்தியாவின் நில அளவாய்வுத் தலைவ ராக நியமிக்கப்பட்டார். இந்த மாண்புமிக்க பதவியை முதன்முதலாக வகித்த பெருமை அவரையே சேரும். அவரது புதிய நிர்வாகப் பொறுப்புகளும் கல்கத்தாவிற்கு இடம்மாறியதும் அவரது வரலாற்று ஆய்வினைத் தீவிரமாகப் பாதித்தது. குறிப்பாக, தமது இடத்தைத் தென்னிந்தியாவில் இருந்து மாற்றுவது அவருக்குக் கஷ்டமாக இருந்தது: “கடலோர, தெற்குப் பிராந்திய மண்ணின் டிகளாக இருந்தவர்களுக்கு, ஐரோப்பியர்கள் எந்த அளவுக்கு வங்காளத் திற்கும் இந்துஸ்தானுக்கும் அந்நியர்களோ அதே அளவு அந்நியர் களாகவும் இருக்கும், பல்லாண்டுகள் என்னைப் போற்றிய அன்பர் களைக் கல்கத்தாவுக்கு இடம்மாற்றுவது ஒன்று நடைமுறைக்கு ஒவ்வாதது மற்றது என்னுடன் நீண்ட காலமாகத் தனிப்பட்ட முறையில் பழகிப் பற்றுகொண்ட வெகுசிலர் (என்னுடன் இருந்த தலைமை பிராமணர், சமண மொழிபெயர்ப்பாளர் மற்றும் பிறர்) தங்களது விசுவாசத்தின் கடைசிச் சான்றைக் காட்டத் தயாராக இருந்தாலும் அது மிகுந்த செலவினை இழுத்துவிட வல்லது.” என்று குறிப்பிட்டுள்ளார். தமது முழுமையான உதவியாளர் குழு இல்லாத நிலையில், “இந்நாட்டு மூல மொழிகளில் இருந்து சுருக்கி மொழிபெயர்க்க எண்ணியிருந்த எனது திட்டத்தைக் கல்கத்தாவில் கிஞ்சித்தும் செய்வதற்கான வாய்ப்பு வசதியில்லை” என்று அவர் வருத்தப்பட்டது சரியே.

இருந்தாலும், இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று உறுதிபூண்டிருந்த மெக்கென்சி அதற்கெனத் திட்டமிட்டு, “இந்தக் கடைசிக் கட்டத்தில், நான் ஐரோப்பாவிற்குக் கிளம்பிச் செல்வதற்கு முன், இந்த ஒட்டுமொத்த சேகரிப்பினைப் பற்றி ஒரு சுருக்கக் குறிப்பையும் இந்த மண்ணின் ஓலைச்சுவடிகள், நூல்கள் முதலிய வற்றை முழுமையாக முறையே எண்ணிட்டுப் பட்டியலிடவும் அத்துடன் மொழிபெயர்க்கப்பட்ட தரவுகளின் ஒரு சில பகுதி களுக்காவது அவற்றை வெளியிடும் அளவுக்கான வடிவத்தைக் கொடுக்கவும் செயல்பட முயல்கின்றேன். ஏனெனில் எனது உடல் நலத்தின் காரணமாகவோ வயதின் காரணமாகவோ இந்த நற்பணி யினை என்னால் செய்ய இயலாது போனால் என்னை விடத் தகுதி மிக்க நபர்களால் பொது மக்களின் பார்வைக்குப் போகலாம்.” என்று கூறினார். “இந்த முப்பத்து நான்கு ஆண்டுகளாக இந்தத் தட்பவெப்ப நிலையில், ஒரு முறை கூட ஐரோப்பாவிற்குச் சென்று திரும்பும் வாய்ப்பினைப் பெற்றிராத ஒருவருக்கு, அமைதியுடனும் ஓய்வுட னும் இந்த ஆவணங்களைக் குறைந்தபட்சம் அலாதியாகத் தனிச்சிறப்புடன் ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம் என்பது இளகிய மனமுள்ள எந்த மனிதருக்கும் தோன்றும்” என்று நம்பு வதாகத் தமக்கு மிகவும் நெருக்கமான அலெக்சாண்டர் ஜான்ஸ்டனிடம் கருத்து தெரிவித்திருந்தார் மெக்கென்சி.

இந்தக் கட்டத்தில் கூட, மெக்கென்சிக்கு கம்பெனியின் அதிகாரி களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவோ கருணையோ கிட்டவில்லை. அவர்கள் மெக்கென்சியின் வரலாறுசார் கடின உழைப்புக்குத் தகுந்த மெய்யான கடப்பாட்டினை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. இதற்கிடையில், ஜான்ஸ்டன் தமது நண்பரின் குறிக்கோளுக்காக இயக்குநர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவரான சார்லஸ் கிராண்டை அழைத்து அவரை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சியில் மெக்கென்சியின் பணியினைக் குறித்து, “மெக்கென்சி இங்கிலாந் துக்கு விடுமுறை செல்ல இயக்குநர்கள் அனுமதியளித்தால் ஐரோப்பாவில் உள்ள இலக்கியக் கதாபாத்திரங் களின் உதவியுடன் மதிப்பு வாய்ந்த அவரது ஆவணச் சேகரிப்பை ஒழுங்கு வரிசைப் படுத்தக்கூடும், இது கீழைத்தேய வரலாற்றுக்கும் இலக்கியத்திற்கும் பெரிய சாதகமாக அமையும்” என்று பரிந்து பேசினார். கிராண்ட் இதற்குச் சாதகமாகப் பதிலளித்தாலும் வேறெதுவும் செய்ததாகத் தெரியவில்லை. இதனை ஜான்ஸ்டன் அறிந்துகொள்வதற்குள் 1821இல் மெக்கென்சி கல்கத்தாவில் “தமது சேகரிப்புகளின் சுருக்கக் குறிப்பினை எழுதுவதற்கான தயாரிப்பினை மேற்கொள்வதற் குள்ளாகவே” இறந்துவிட நேர்ந்தது.

ஆவணத்தொகுப்பில் உள்ள குரல்கள்

இந்த மண்ணைச் சேர்ந்த ஒரு பிராமணருடன் எனக்கு ஏற்பட்ட ஒட்டுறவு இந்திய அறிவுஞானத்திற்கான நுழைவாயிலின் திறவு கோலாக அமைந்தது. இந்த மொழிகளைப் பற்றி எதுவுமே அறிந்திராத நான் நீண்ட காலமாகத் தேடியவற்றை அடைவதற்கான ஊக்கத்தையும் வழிகளையும் காட்டிய இந்த அன்பரின் மகிழ்ச்சி மிக்க மேதைமைக்கு மிகவும் கடன்பட்டிருக்கின்றேன். . . மிகவும் அதீதமாகப் பேசப்பட்ட போரியாவின் திறமைகள் செயல்வழிப் படுத்தப்பட்ட அந்தக் கணத்திலிருந்து இந்து அறிவுஞானத்திற்கான ஒரு புதிய வழி உண்டானது.   - காலின் மெக்கென்சி, 1817

மெக்கென்சி இறந்த பிறகு, சீர்க்குலைவும் மௌனமுமே நமக்கு எஞ்சியுள்ளன. ஏனென்றால், இந்த ஆவணத் தொகுப்பைப் பற்றிய ஒரு “சுருக்க வரைவினையோ” “முறைவரிசைப்படுத்தப்பட்ட பட்டியலையோ” செய்ய மட்டும் அவர் தவறவில்லை, அந்தச் சேகரிப் பினைப் பற்றியோ நான் ஏற்கெனவே அளித்த அறிக்கைக்கும் அப்பால் அந்தச் சேகரிப்பின் முக்கியத் துவத்தைப் பற்றியோ கூட அவர் எதுவும் எழுத வில்லை. அவரது பெரும்பாலான நூல்கள், அவரது உதவியாளர்களால் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளின் உரைவிளக்கக் குறிப்பாக இருப்பதைத் தாண்டி வேறெதுவாகவும் இல்லை.

தென்னிந்தியாவின் வரலாற்றில் சமணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறும் ஓரிரு கட்டுரைகளும் “கடந்த பத்தாண்டுகளில் முக்கியமாகச் சேகரிக்கப்பட்ட, ஒவ்வொரு பக்கத்தின் இறுதியிலும் உள்ள அடிக்குறிப்புகளில் இடம் பெற்றுள்ள பல்வேறு நம்பகமான ஆய்வுக்குறிப்பு களில் இருந்தும் அசலான ஓலைச்சுவடிகளில் இருந்தும் தொகுக்கப்பட்ட 1564இல் பழைய இந்து அரசாங்கம் கலைந்தது முதல் 1687இல் மொகலாய அரசாங்கம் நிறுவப்பட்டது வரையிலான, பீஜாபூர் மற்றும் கோல்கொண்டா ஆகிய தலைநகரங்களைக் கைப்பற்றி வென்றது ஆகிய கர்நாடகப் பகுதியில் நடைபெற்ற முதன்மையான அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய கருத்து.” என்ற தலைப்பில் ஏப்ரல் 1815இல் ராயல் ஆசிய சமூகத்தின் கூட்டத்தில் ஒப்படைக்கப்பட்ட ஒரு நீண்ட கட்டுரையும் மட்டும் விதிவிலக்குகள். இந்தக் கட்டுரையின் தலைப்பே மூலாதாரங்களை வலியுறுத்திக் காட்டுகின்றது, குறிப்பாக அவற்றின் நம்பகத்தன்மையையும் மெய்ம்மையையும் வலியுறுத் துவதோடு தென்னிந்திய வரலாற்றின் முதன்மையான அரசியல் நிகழ்வுகளின் காலநிரலையும் சூழலையும் நிறுவுவதில் அவருக்கு இருந்த கூர்த்த கவனத்தையும் வலியுறுத்தி நிற்கின்றது.

சரஸ்வதி சிற்பம்இந்த மிகச்சில தடயங்களைத் தவிர, மெக்கென்சி விட்டுச் சென்றது பாரிய அளவிலான, மிக விளக்கமான, வறண்ட அரசாங்கக் கடிதங்களைக் கொண்ட ஒரு கனத்த தொகுதியாகும். இது தமது கடமையின் மீதான அவரது கவனத்தைக் கண்கூடாகக் காட்டி, காலனிய இந்தியாவின் அளவாய்வில் அவரை மூத்த அதிகாரி பதவிக்கு உயர்த்திய கம்பெனியின் முடிவையும் உறுதிப்படுத்து கின்றது. மைசூர் அளவாய்வின் போதும் அதற்குப் பின்னரும் இந்தச் சேகரிப்புப் பணியில் உள்ளபடி ஈடுபட்டிருந்த இந்திய உதவி யாளர்கள் மற்றும் முகவர்களுடன் அவருக்கு இருந்த மிகச் செழுமை யான கடிதப் போக்குவரத்தை அவர் நமக்கு விட்டுச்சென்றுள்ளார்.

தமக்கு எவ்விதமான தரவுகளும் பிரதிகளும் வேண்டும் என்பதில் தெள்ளத் தெளிவாக இருந்த மெக்கென்சி இந்தக் கருத்தினைத் தமக்காகத் தரவுகளைச் சேகரிக்கும் நபர்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறினார் என்றாலும் இந்தச் சேகரிப்பின் தீவிரம் அவரை ஆட்டிப்படைத்ததால் சில சமயம் அவரது முதன்மையான ஆர்வம் வெறும் சேகரிப்பு மட்டும் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆகவே இந்தத் திரட்டு - அதன் பிரதிகள், ஓவியங்கள், நூலின் பக்கவாட்டு ஓரத்திலுள்ள குறிப்புகள், தொல்பொருட்கள், நாட்குறிப்புகள் ஆகிய - எண்ணற்ற குரல்களின் ஒரு வண்டல் படிவாகப் படிந்துள்ளன. அவற்றுள் மிகவும் துருத்தலாக ஒலிப்ப வற்றுள் சில “மண்ணின் நிறுவனத்தை”ச் சார்ந்தவையே. இந்தப் பிரதிகளில் ஒலிக்கும் பிற குரல்கள் ஒரு கிராமத்துப் பிராமண ருடையதாக, ஒரு பழைய முனிவருடையதாக அல்லது ஒரு பிராந்திய ஆட்சியாளருடையதாக இருக்கும். மெக்கென்சியின் வரலாற்று வரைவு குறித்த அக்கறைகளும் சேகரிக்கும் வழிமுறைகளும் அவரது ஆவணக் கருவூலத்தில் இதுவரை கேட்கப்பட்டிராத குரல்களை ஒலிக்க வைத்தன. ஆனால் இந்த வரலாற்றுத் திட்டப்பணியினைப் பற்றி மெக்கென்சிக்கு ஒரு நிலையான கருத்து இல்லாதது - அத்துடன் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு கீழைத்தேய ஆய்வாளருக் கான பயிற்சி இல்லாததும் கூட - ஒரு முரண்பட்ட நிலையில் கணத்தில் மாறக்கூடிய தன்மையினையுடைய பிற வரலாற்று மெய்ம்மைகளுக்கு அவரது வரலாற்றுத் திரட்டில் இடம்கொடுத்தது எனலாம்.

மெக்கென்சியின் முதன்மையான உதவியாளரான காவேலி வெங்கட போரியா அவருக்கு வெறுமனே ஒரு தகவலாளியாக மட்டும் இருக்கவில்லை. குறிப்பாக மைசூர் அளவாய்வின் பக்கங்கள் மெக்கென்சியின் தலையாய மொழிபெயர்ப்பாளர் அங்கிங்கெனாத படி எங்கும் ஊடுருவியிருக்கும் இருப்பைக் காட்டிக்கொடுக்கின்றது. மெக்கென்சி போரியாவை 1796இல் சந்தித்தார். அந்த இளைஞரின் அறிவாற்றலையும் இந்தியாவைக் கண்டுணரும் தமது திட்டப் பணிக்குத் தேவையான அவரது திறமையின் முக்கியத்துத்தையும் உடனே விரைவாக அடையாளம் கண்டுணர்ந்தார்.

மெக்கென்சி போரியாவைப் பற்றி, “மிகத் துடிப்பான மேதை, ஒழுங்கமைவு கொண்டவர்” என்று எழுதியதோடு, “இந்த அளவாய்வுகளுக்குப் பின்னரான விசாரணைப் போக்கில் அனைத்து இனப்பிரிவினரையும் பழங்குடிகளையும் விரைவில் இணக்கப்படுத்திய தன்வயப்படுத்திய மனப்போக்கைக்” கொண்டவர் என்றும் குறிக்கின்றார். தமது மைசூர் அளவாய்வின் ஆராய்ச்சி முயற்சிகள் குறித்து அரசாங்க உதவித்தொகைக்கு விண்ணப்பித்த போது, போரியா வலுத்த மொழியியல் திறமை வாய்ந்தவர் என்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர் என்றும் இடைக்காலக் கல்வெட்டுப் படிகளையும் இலக்கணத்தையும் பொருள்கொள்வதில் வல்லவர் என்றும் குறிப் பிட்டுள்ளார். மெக்கென்சியின் தலையாய மொழிபெயர்ப்பாளராக இருந்த போரியா பிரதிகள், மரபுகள், பல வகைப்பட்ட தரவுகள் ஆகியவற்றைத் திரட்டியதோடு அவற்றின் உள்ளடக்கப் பொருண்மையை விளக்கவும் மொழி பெயர்க்கவும் செய்தார். “சந்தேகத்திற்குச் சிறிதும் இடமின்றி அதுபோன்ற பிற ஆதாரத்தால் உறுதிப்படுத்தப்பட்ட” தமது சேகரிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகளுடன் கூட மேலும், “பல்லகாட்டில் செயல்முறையில் இருந்த நிர்வாக முறைமை மீதான ஆய்வுக்குறிப்பு” என்ற தலைப்பிலான ஆழமான கட்டுரை உள்ளிட்ட பெரும்பாலும் வடக்கு பர்கனாக் களைப் பற்றியதான கட்டுரைகளையும் தயாரித்தார்.

1803இல் அகால மரணம் அடைந்த அவர் - மெக்கென்சியிடம் ஏழு ஆண்டுகள் தொண்டு புரிந்த போரியா இன்னமும் இளவயது வாலிபராக இருந்தார் - தமது இரண்டு சகோதரர்களும் பற்பல உறவினர்களும் அறிந்தவர் தெரிந்தவர்களும் உள்ளிட்ட கற்றறிந்த பிராமணர்கள் நிறைந்த பணியாளர் குழாம் ஒன்றைப் பணியமர்த்திப் பயிற்சி அளித்திருந்தார். அதன்மூலம் மெக்கென்சியின் வாழ்நாள் திட்டப்பணியாகவே ஆகிவிட்ட இந்தியாவைச் “சேகரித்தல்” என்பதை நிறுவனப்படுத்தினார். அவரது “மண்ணுக்குரிய உதவியாளர் குழு”வின் சிறப்பி னாலும் தொடர்ந்த கவனிப்பினாலும் மட்டுமே தம்மால் “இந்த நாட்டின் இயல்பினையும் நிலைமையையும் அறியக்கூடிய ஆராய்ச் சிகளில் ஈடுபட முடிந்தது, அதுவே இது தொடர்பான ஆவணங் களைச் சேகரிக்கவும் உதவியது” என்று மீளவும் மீளவும் மெக்கென்சி வலியுறுத்திக் கூறினார்.

பல கிறித்தவர்களையும் ஒரேயரு சமணரையும் மெக்கென்சி பணியில் அமர்த்தியிருந்தாலும் அவருடைய உதவியாளர்கள் பலர் பிராமணராக இருந்தனர். பெரும்பாலான ஆராய்ச்சி விசாரணைகள் உள்ளூர் பிராமணர்களைத் தேடுவதிலேயே தொடங்கின. நித்தல நைனா “சுப்பாவு சாஸ்திரி என்ற பெயருடைய, புனித நூல்களும் மத நூல்களும் நிறைந்த ஒருபெரிய நூலகத்தைக் கொண்டிருந்த ஒரு கற்றறிந்த பிராமணருடன் தனித்த முறையில் நட்புறவு ஏற்படுத்தி யிருந்தார். . . . அவருக்கு நான் ஒரு ரூபாய் பரிசளித்தேன்” என்றார். 1817ஆம் ஆண்டின் ஓர் அறிக்கையில் சி. அப்பாவு அவர்கள், “இன்று பல பிராமணர்களும் கற்றறிந்த மக்களும் ஆற்காட்டிலுள்ள கஸ்பாவில் தலைமை ஹிச்சாராதௌரில் மாவட்ட ஆட்சியரின் நெறிப்படுத்தலின்படி ஒன்றுதிரட்டப்பட்டனர். அவர்கள் ஆற்காட்டை மதித்து எனக்கு நிறைய விவரங்களை அளித்தனர்” என்று எழுதினார். மற்றொரு அறிக்கையில் சி. வி. ராம் அவர்கள், “ஆனமகொண்டாவிலும் வாரங்கல்லிலும் ஆட்சிபுரிந்த காகத்தி ராஜாலுவின் வரலாற்றைப் பற்றி நான் விசாரித்துக்கொண்டிருந்தேன். அப்போது காகத்தி ராஜாலுவின் பண்டைய அரசர்களைப் பற்றிய வரலாறு தெரிந்த, பனையோலைச் சுவடிகள் நிறைந்த நூலகத்தைக் கொண்ட ஒரு படித்த வயதான பிராமணரைப் பற்றி அறிந்தேன்.

நானே நேரடியாக அவர் வீட்டுக்குச் செல்வது என்பது நடவாத காரியம் என்பதால் அவருக்குத் தெரிந்தவர் மூலமாக அவருடன் நட்புறவு ஏற்படுத்திக்கொள்ள எண்ணியிருந்தேன். . . . அந்த நாட்டின் அரசர்களைப் பற்றிய எந்தவொரு தகவலையும் எனக்குக் கொடுக்கும்படி அந்த வயதான பிராமணரைப் பணிக்குமாறும் கடினமான கல்வெட்டுக்களை எனக்கு விளக்குமாறும் அவரிடம் கோரிக்கை விடுத்தேன்.” என்று எழுதியுள்ளார். அதற்குப் பிறகு அந்த அறிக்கையில் இடம்பெறும் தகவல்கள் அனைத்தும் அந்த வயதான பிராமணரின் வாய்மொழி வார்த்தைகளை முற்றிலும் அடிப்படை யாகக் கொண்டே அமைந்திருந்தன.

நந்தி சிற்பம் (ஒரிசா), 1815

நந்தி சிற்பம் (ஒரிசா), 1815

மெக்கென்சியின் உதவியாளர்கள் தாங்கள் ஒன்றுதிரட்டி கிடைத்த தகவல்களை எந்தவிதத் திருத்தக் கருத்துரையும் இன்றி, தங்களது பயனுள்ள கடின உழைப்பினால் பதிவுசெய்ய முடிந்ததை எண்ணி ஆசுவாசத்துடன் அப்படியே அறிக்கையாக எழுதினர். கிடைத்த ஆவணங்களை அது ஒரு நூலில் இருந்து எடுக்கப்பட்ட பிரதியா, உள்ளூர் பிராமணரால் சொல்லப்பட்டதா, கிராமத் தலைவர் கூறியதிலிருந்து எழுதப்பட்டதா என்று வகுத்து வைத்தாலும், “வரலாறும்” “கட்டுக்கதைகளும்” தாறுமாறாகக் கலந்திருந்த தரவுகளைப் பற்றி பிரித்தானிய அவதானிகள் தெரிவித்தது போன்ற கருத்துகளை மிக அரிதாகவே எழுதினர். அடிக்கடி நீதிக் கதைகளும், அரசர்களின் பிற நாயகர்களின் வீரதீரப் பிரதாபங்களைப் பற்றிய அசாதாரணக் கதைகளும், அரசகுலத்தின் காலத்தைக் கணிக்கும் முயற்சிகளும் ஒரே கதையாடலில் ஒன்றாகக் கோக்கப்பட்டிருந்தன. அதன் மறுபக்கம் இவற்றைச் சேகரிப்பதில் உள்ள கஷ்டத்தைப் பற்றிக் கூறப்பட்டிருந்தது. சில பிரதிகள் படியெடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட அந்தக் கட்டத்தில் - எடுத்துக்காட்டாக, களத்திலிருந்து கிடைத்த தோராயமான மொழிபெயர்ப்புகளும் பிரதிகளும் பல தொகுப்புகளைக் கொண்ட ஒரு தொகுதியாக மெக்கென்சியுடைய வாழ்நாளின் கடைசி ஆண்டுகளின் போது அவரது நேரடிக் கண்காணிப்பின்கீழ் தொகுக்கப்பட்டன - அப்பிரதி களின் இலக்கிய வகைமை குறித்தும் அனுபவரீதியிலான அறிவு குறித்தும் தெரிவிக்கப்பட்ட நவீனகாலக் கவலையைப் பதிப்புரைகள் பிரதிபலித்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் மெக்கென்சியின் உதவியாளர்கள் தக்காண இந்தியாவில் பரவலாகப் பயணம் செய்து ஆவணங்களைச் சேகரித்து, படியெத்து, மொழி பெயர்த்து வந்தனர். அதே நேரத்தில் போரியா இறந்தபிறகு மெக்கென்சியின் தலையாய உதவியாளராக அந்த இடத்திற்கு வந்திருந்த அவருடைய சகோதரரான லட்சுமையாவுடன் ஒழுங்காகக் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தனர். லட்சுமையாவிற்கு எழுதப்பட்டிருந்த கடிதங்கள் எப்போதும் ஆவணங்களின் பட்டியல், குறிப்பிட்ட மரபுகள் மற்றும் வரலாறுகளின் நீண்ட பொருட் சுருக்கங்கள், ஆவணங்களைச் சேகரிப்பதில் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட வெற்றி தோல்விகளைப் பற்றிய அகல்விரிவான பயணக்குறிப்புகள், கூற்றுரைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தன. பல தரப்பட்ட ஆவணங்களையும் சேகரிப்பதற்கு அனுமதியளிக்க உள்ளூர் மக்களை இணங்கவைக்கும் பொருட்டு உதவியாளர் களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தக் கடிதங்கள் அடிக்கடி முன்வைத்தன.

பிரித்தானிய நேரடி ஆட்சியின்கீழ் வராத திருவாங்கூர் போன்ற பகுதிகளில் மெக்கென்சி யின் ஆட்கள் தங்களது சாமர்த்தியத்தைக் காட்டவேண்டியிருந்தது. சி. அப்பாவு கூறுவதன்படி: “திரு. வார்ட் அவர்கள் திரு. டர்ன்புல் அவர்களிடம் இந்த நாட்டிலிருந்து எந்த வித வரலாற்றையும் தன்னால் பெற முடியவில்லை என்றார். எந்தத் தகவலும் கொடுக்கு மாறு இந்நாட்டு மக்களுக்கு ஆணை பிறப்பிக்க முடியாது, ஆனால் வேலைக்காரர்கள் நாட்டு மக்க ளுடன் நட்பாகப் பழகி பழைய அரசர்களைப் பற்றிய விவரங்களைப் பெறலாம் என்று கர்னல் மன்றோ அவர்கள் அவரிடம் கூறினார்.” செல்வாக்குள்ள குடிமைத் தொண்டராக இருந்து மதறாசின் ஆளுநராக உயர்ந்த தாமஸ் மன்றோ பிரித்தானிய இந்தியாவிற்கு அருகில் இருந்த பகுதிகளின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிக்கும் அவர்களது உதவியைக் கோரி கடித மெழுதி அதனை நில அளவாய்வாளர்களுக்கு உத்தர வாக எழுதி அவர்களின் மூலம் கொடுத்தார். பிற பகுதிகளில், மெக்கென்சியின் ஆட்கள் அங்கிருந்த உள்ளூர் மாவட்ட ஆட்சியரை நாடினர்.

“சீனிவாசய்யா” (சீனிவாஸ் அய்யர்) 1809இல் தஞ்சாவூருக்கு பயணம் மேற் கொண்டபோது கோயில் கல்வெட்டுகளைப் படியெடுக்க, கோயில் குருக்களோ அவர் படியெடுப்பதை நிறுத்தச் சொன்னார். “அதன் பிறகு அந்தக் கோயில் குருக்கள் என்னைத் தடுத்து நிறுத்தி சர்க்காரின் உத்தரவு வேண்டுமென்று கேட்டனர். அதனால் அடுத்த நாளே கருங்கூலியில் இருந்த கச்சேரிக்குச் சென்று அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் திரு. ஹைட் அவர்களிடம் அறிமுகப் படுத்திக்கொண்டேன். அவரும் நீங்கள் இப்போது செல்லலாம் அவர்கள் உங்களைத் தடுக்கமாட்டார்கள் என்று கூற நானும் அதன்படியே அன்று மதியம் கோயிலுக்குச் சென்று கல்வெட்டு களைப் பார்த்தேன்.” என்று அவர் கூறுகின்றார்.

பெரும்பாலான உதவியாளர்கள் கல்வெட்டுகளையோ உள்ளூர்ப் பிரதிகளையோ படியெடுப்பதற்கு முன்னர் மெக்கென்சி யிடம் இருந்து தமக்கு வந்திருந்த கடிதங்களைக் காட்டி உள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கடிதங்களைப் பெற முயன்றதாகத் தெரிவித் துள்ளனர்.

மக்கென்சியே சில பகுதிகளில் மட்டும் தான் அறியப் பட்டிருந்தார். உள்ளூரில் இருந்த பிரித்தானிய அதிகாரிகள் உறுதி படுத்தியதன் மூலமே மெக்கென்சி தமது அதிகாரத்தைச் செலுத்த முடிந்தது.

பிரித்தானிய அதிகாரம் இல்லாத இடங்களில் சி. வி. ராம் சந்தித்தது போன்ற இடர்ப்பாடுகள் அடிக்கடி ஏற்பட்டன, அவற்றைப் பற்றி அவர் எழுதியிருக்கின்றார். காளஸ்தி ஜமீனில் அவர் இருந்த போது அங்கிருந்த பெரிய கோவிலில் இருந்த சில கல்வெட்டுகளை அவர் படியெடுத்தார். மூன்று கல்வெட்டுக்களை அவர்கள் படியெடுத்து முடித்த பிறகு அவர்களை அழைத்துவரச் சொன்ன அரசர் இதற்கு மேலும் தமது சமஸ்தானத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தும் விதமாகக் கல்வெட்டுகளைப் படியெடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். “நாராயண ராவ்” இதே போன்ற இடர்ப்பாடுகளை “குட்வால்” சென்ற போது சந்தித்ததாக எழுதியுள்ளார்.

இந்த சம்பவத்தில், அவர் தமது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் மெக்கென்சியின் பாரசீக மொழிக் கடிதத்துடன் உள்ளூர் ஜமீந்தாரிடம் நேரடியாகச் சென்றார். திவான் “பரம்பரைக் கால்வழிக் கதைகளும் வம்சாவளிகளுமான இந்தப் புத்தகங்களால் எனக்கு என்ன பயன் என்று திவான் கேட்டார். என் எஜமானருக்குப் பழைய அரசர்களின் வரலாற்றை அறிந்துகொள்வதில் பெருத்த ஆர்வம் உள்ளது. அதனால் தான் இங்கு வந்தேன் என்று பதிலளித்தேன்” என்று பதிவுசெய்கிறார். அரசரும் மெக்கென்சிக்குப் பதிலுக்குக் கடிதமொன்றை எழுதி நாராயண ராவுக்கு சம்பிரதாயப்படி வெற்றிலை பாக்கு கொடுத்து மரியாதை செய்தார். பிறகு அவர் ராஜ்ஜியத்தை விட்டுக் கிளம்பும்போது வழியனுப்பி வைத்தார். பிரித்தானியர் இல்லாமல் அமைவது ஒன்றும் எப்போதும் எளிதல்லவே.

வீரியத்திற்கும் மறுப்புக்கும் இத்தனை சான்றுகள் இருந்தபோதி லும், குறிப்பிட்ட சில காலனியக் கவலைகளின் அகப்பாட்டு எல்லைக்கு மிகவும் அப்பாற்பட்டதான சிக்கலான அதிகார-அறிவு தொடர்புகளில் பங்குகொண்டிருந்தாலும் “களத்தில்” இருந்து சேகரிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட பிரதிகள் எல்லாமே பிரித்தானியருக்கு முன்பிருந்த அறிவுஞானத்தின் சமூகவியலின் மெய்யான வாழ்வெச்சங்கள் என்று நான் கூற வரவில்லை. மெக்கென்சியின் கிறித்துவ உதவியாளர்களுள் ஒருவரான அப்பாவு, சில வகையான உள்ளூர் மரபுகளை ஒடுக்க முயலும் பிராமணர்களின் முயற்சிகளைப் பற்றிச் சிலசமயம் முன்கூட்டியே கூறுவார்: “பிராமணர்களால் சமணர்கள் மற்றும் குறும்பர்களின் வரலாறு இங்கே மிகவும் மறைக்கப்பட்டுள்ளது. படித்த, கற்றறிந்த சமணரோ குறும்பரோ ஒருவர்கூட இல்லாததால், அவர்களைப் பற்றிய ஒரு சில தகவல்களைத் தவிர்த்து, எழுதப்பட்ட வரலாறு என்பது மிக அரிதே... பிராமணர்களும் பிற இனத்தவரும் அவர்களிடம் பகைமை பூண்டுள்ளமையால், என் பாதையில் பலரும் அத்தகைய தகவல்களை அளிக்க மறுக்கின்றனர்.” இப்படிப்பட்ட ஒரு சந்தேகம் இருந்த போதிலும், வம்சாவளிகளாலும் பழைய ராஜ்ஜியத்தின் வீரநாயகர் களின் பிரதாபங்களைக் கூறும் பிற பிரதிகளாலும் நிறைந்திருந்த இத்திரட்டு சம்ஸ்கிருதப் பிரதிகளிலும் மரபுகளிலும் மட்டுமே மூழ்கியிருந்ததாகக் கருதப்படும் பிராமணர்களின் ஈடுபாட்டை அப்படியன்றும் பிரதிபலிக்கவில்லை.

இது இவ்வாறிருக்க, உள்ளூர் ஆவணங்களைச் சேகரித்தபோது அவற்றின் அதிகாரவுரிமை யும் ஆசிரியவுரிமையும் உள்ளூர் முகவர்களின் - தொடர்பு கொள்ளப் பட்டப் படித்த பிராமணர்கள் மற்றும் அவர்களைத் தொடர்பு கொண்ட மெக்கென்சியின் உதவியாளர்கள் - ஆர்வத்தினால் மட்டும் பாதிக்கப்படவில்லை அவை உள்ளுர்ச் சூழலில் இருந்து காலனியச் சூழலுக்கு இடம்மாற்றப்பட்டன. புதிய காலனிய ஆவணக் கருவூலத்தில் இடம்பெற்ற பிறகு, அந்த ஆவணத்திரட்டின் படைப் பாக்கப் பணியில் பின்னிப்பிணைந்து இருக்கும் பற்பல குரல்களும் செயற்பாடுகளும் அவற்றை அதிகாரப் பூர்வமாக்கும் வழிமுறைகளும் அமுக்கப்பட்டுப் பின்னர் முற்றிலும் தொலைந்துபோயின. பிரதிகளின் வகைகளில் உள்ள வேறுபாடுகளும் (பழைய ஆசிரியரின் பிரதியில் இருந்து வருவிக்கப்பட்டப் பிரதிகளா அல்லது உள்ளூர் ஆதாரத்தில் இருந்து அவசர அவசரமாக எழுதப்பட்டக் குறிப்புகளா என்ற வேறுபாடு), மதிப்பார்ந்த இந்த அறிவுஞானத்தின் பயன்பாடு பற்றிய கவலைகளும் (ஆசிரியர் உரிமையையும் அதன் சட்டப்பூர்வத் தன்மையையும் நீக்குவதற்குப் பிரதிசார் அறிவு எப்படி பயன்படும் என்பது) மங்கிப்போய் சேகரித்தல், படியெடுத்தல், பிரதியாக்கம் செய்தல், மொழிபெயர்த்தல், ஆவணத் திரட்டை முறையாக ஒருங்கே தொகுத்தல் என இந்த ஒவ்வொரு கட்டத்திலும் அவை கொஞ்சங் கொஞ்ச மாகக் குறைந்துகொண்டே வந்து கரைந்துவிட்டன.

mahabalipuram_varaka_temple_640

வராக அவாதாரக் குகையின் வெளிப்புறத் தோற்றம் (மாமல்லபுரம்), 1816

மேலும், மெக்கென்சியின் உதவியாளர்களின் பங்கு வெறும் இடைத்தரகுத் தொழில்நுட்ப நிலைக்கு ஒதுக்கித் தள்ளப்பட்டது, அவர்களுடைய நாட்குறிப்பு களும் கடிதங்களும், மிகமிக அரிதாகவே, மறுபிரதி எடுக்கப்பட்டும் எந்த ஆவணத்துடன் இருந்ததோ அதனுடன் ஒருங்கே சேர்த்துவைக்கவும் பட்டன. உள்ளபடி, தமது இறப்புக்குப் பிறகு தமது பணியாளர்களின் நலனுக்காக உதவியாளர் களில் எவரையேனும் இருத்திக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கவலை தெரிவித்தார் மெக்கென்சி. கிழக்கிந்தியக் கம்பெனிக்கோ மெக்கென்சியிடம் இருந்த மரியாதையைத் தவிர இதனைச் செய்வதற்கு வேறெந்த காரணமும் இல்லை. மெக்கென்சி 1818இல் கல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்தபோது அவரது பல உதவியாளர் களும் ஓய்வுச்சம்பளம் கொடுத்து விலக்கப்பட்டனர். லட்சுமையா மட்டும் எஞ்சியிருந்த ஒரு சில உதவியாளர்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். மெக்கென்சி இறந்த பிறகு அவரது பங்கும் வெகுவாகக் குறைக்கப்பட்டது.

ஆவணக் கருவூலத்தின் மௌனம்

பழக்க தோஷத்தின் காரணத்தினால் சீர்ப்பட ஒழுங்காக இருப்பது போல் தோன்றினாலும் இந்தத் திரட்டு சீர்க்குலைவுற்ற ஒன்றாக இருப்பதைத் தவிர வேறொன்றுமாக இல்லை.

- வால்டர் பெஞ்சமின்

ஒரு காலனிய ஆவணத்தொகுப்பில் உள்ள காலனியப்படுத்தப் பட்ட குரல்களின் திரட்டு, மெக்கென்சியின் தனிப்பட்ட திட்டப்ணியினையும் அந்தக் குரல்களை அவ்விதமே கேட்கக்கூடிய நமது ஆற்றலையும் ஒருங்கே வேரறுத்துவிட்டது. வில்சனாலும் பின்னர் டெய்லராலும் ஒருங்கிணைக்கப்பட்ட நூற்பட்டியல்களிலும் பின்னர் நூற்றாண்டின் இறுதியில் அலுவல்ரீதியிலான நிர்வாகப் பயன்பாடு களிலும் குறிப்புகளிலும் இடம்பெறும் மெக்கென்சியின் திரட்டில் உள்ள குரல்கள் ஒரு புதிய வகையான காலனிய அறிவின் அடை யாளமற்ற அடிக்குறிப்புகளாகிப் போயின.

பல நற்கூறுளை ஒன்று திரட்டிய மெக்கென்சியின் வரலாற்று வரைவியலின் கூர்த்த நல்லுணர்வு இருந்தாலும் கடந்த இருநூறு ஆண்டுகளாக மேற் கத்தியப் பிரதியியல் மேதைமையின் செயலாக்கத்தைத் தூண்டிய அதிகாரப்பூர்வ உரிமை, ஆசிரிய உரிமை, நம்பகத்தன்மை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்பட்டத் தரத்திலிருந்து தலைகீழாகப் புரண்டிருக்கும் ஆவணத்தொகுப்பில் உள்ள பிரதியின் மரபுகளால் இந்தக் குரல்களைக் குறிப்பிடவும் வகைதொகை செய்யவும் நாம் மேற்கொண்ட முயற்சி மேலும் தடைபடுகின்றது. மெக்கென்சியின் திரட்டு என்ற பெயரில் தற்பொழுது அறியப்படும் ஆவணத் தொகுப்பில் முன்னர் இருந்த அரசாங்கங்களிலிருந்து தப்பிப்பிழைத்த உண்மையான குரல்களைக் காட்டிலும் மிகுதியான குரல்களைக் கொண்டுள்ளது. வில்சனின் விசித்திரமான பொறுமையற்ற ஆர்வத்தின், பொத்தாம் பொதுவான கீழைத்தேய இகழ்ச்சியின் களஞ்சியமாகவும் வில்சனுக்குப் பிறகு அவரது இடத்தில் நியமிக்கப்பட்ட மாண்புமிகு வில்லியம் டெய்லரின் பாரிய திறமையின் மையைக் குறிப்பதாகவும் இருந்தது. தொடக்க காலக் காலனிய அறிவுஞானத்தின் பழந்தொகுப்பில் எங்கே வெகு ஆழமாக அவை பதிந்துள்ளனவோ அங்கே கூட அக்குரல்கள் காலனியப் படுத்தப்பட்ட குரல்களாக எழுதப்பட்டன.

தி.வை. மகாலிங்கம் அவர்கள் மிக ரத்தினச்சுருக்கமாகக் கூறியபடி, எவ்வளவு தூரம் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தி யத்தின் கருவியாக மெக்கென்சி இருந்தாரோ அந்தளவு அவரது வாழ்க்கையும் அவரது சேகரிப்பும் சற்றே தொடக்க கால காலனிய ஆட்சியின் பற்பலக் கூறுகளில் இருந்து நோக்கப்படும் ஒரு கோணத்தில் இருந்தது. தமது வரலாறுசார் ஈடுபாட்டில் மெக்கென்சி மட்டும் தனித்து இருக்கவில்லை: வில்க்ஸ், மால்கம், எல்ஃபின்ஸ்டன், ராஃபில்ஸ் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்த பல பிரித்தானிய அதிகாரிகளும் இருந்தனர் (இவர்களுள் பலரும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்கள்). ஆனால் இந்த நபர்களைப் போல் மெக்கென்சியால் தமக்கேயுரிய ஒரு முதன்மையான வரலாற்றுச் சொல்லாடலை முன்னெடுக்க இயலவில்லை.

இந்தக் காலனிய வரலாற்று அறிஞர்களே மதிப்புகொடாத எதிர்பாராத பணிகளைச் செய்யவைத்த ஒரு திரட்டினை ஏற்படுத்தினார். இந்தத் திரட்டினை முதன்முதலாகப் பட்டியலிட்ட மிகவும் பெயர்போன நூற்பட்டிய லாளர் ஹெச். ஹெச். வில்சன், மெக்கென்சியின் திட்டப்பணியில் மேலும் பணியாற்றப் பணியாற்ற அதில் ஆர்வம் இழக்கத் தொடங்கினார், பல பிரதிகளின் வரலாற்று மதிப்பின் மீது சந்தேகம் கொண்டார். இந்தத் திட்டப்பணியினை முடிப்பதற்கு முன்னரே அதனைக் கைவிடும் அளவிற்கு வந்தபோது பெண்டிங்கின் பயம் கிட்டத்தட்ட உண்மையானது.

கர்னல் மெக்கென்சி இறந்தவுடன் இந்த மொத்தத் திரட்டும் முடிக்கப்பட்ட ஒன்றாகக் காட்டப்பட்டு அதற்காக விதவையான மெக்கென்சியின் மனைவிக்குப் பத்தாயிரம் பவுண்டுகள் பணம் கொடுக்கப்பட்டதாகக் கம்பெனியின் இயக்குநர்கள் புகார் தெரிவித்தனர். அவர்கள் தாங்கள் கண்ட தரவுகளின் ரு பகுதி, “மிச்சமுள்ளவற்றைப் பற்றிச் சாதகமான கருத்தை உண்டாக்கவில்லை” என்று கூறினர். நிலவரைபடங்கள் பிரித்தானியக் கைப்பற்ற லின் பெருமைமிக்க ஆவணங்களாக இருந்தன. இந்திய நில அளவாய்வின் வரலாற்றைப் பொறுத்த வரையில் மெக்கென்சிக்கு எந்தக் குழப்பமுமில்லாமல் ஒருமனதான முழுமையான பெயரும் புகழும் கிட்டியது தற்செயலாக நிகழ வில்லை. ஆனால் இந்தப் பிரதிகளில் - கட்டுக்கதை தொன்மங்கள், குழப்பமான காலவரிசைக் கதைகள், அவரது சேகரிப்பாளர்கள் அனுப்பிய குழப்பமான கவிதை வடிவிலான கடிதங்கள், இவை அனைத்தின் மூலமாக சூழல் மற்றும் பொருள், அதிகாரம் மற்றும் அறிவு ஆகியவற்றின் மோதலைச் சாற்றும் இப்பிரதிகளில் - மையை விடத் தூசியே அதிகம் படிந்துள்ளது.

மெக்கென்சியின் மௌனத்தைக் குறித்து பெண்டிங்க் மற்றும் ஜான்ஸ்டன் போன்றோர் தெரிவித்த கவலைகளை மெக்கென்சிக்குப் பிறகான அவரது சேகரிப்பின் வரலாற்றில் மிகவும் குறைந்த அளவிலேயே பிறர் எதிரொலித்தனர். நாம் முன்னரே பார்த்தபடி வில்சனின் நூற்பட்டியல் இந்தச் சேகரிப்பின் மதிப்பினைப் பற்றி இருமன மாகவே இருந்தது. முதற்கட்ட நூற்பட்டியலை முடித்த வுடன், அது 1828இல் நூலாக வெளியானதும் வில்சன் இந்தத் திட்டப்பணியினை முழுவதும் கைவிட்டார். மெக்கென்சியின் தலையாய உதவியாளர் காவேலி வெங்கட லட்சுமையா ஆசிய சமூகத்தின் மதறாஸ் பிரிவிற்கு மெக்கென்சியின் பணியினைத் தொடர்வதற்காக விண்ணப்பித்த போது அது அவரது விண்ணப் பத்தை, இத்தகைய ஒரு திட்டப்பணியினை மேற்கொண்டு செயல்படுத்துவதற்குத் தேவையான நிர்வாக ரீதியான கருத்தியல் ரீதியான/ விமர்சன ரீதியான வேலைகளை எந்தக் “கீழைத்தேயத் தாராலும்” செய்ய முடியாது என்ற அடிப்படையில் நிராகரித்தது.

வங்காள ஆசிய சமூகத்தின் தலைவரான ஜேம்ஸ் பிரின்செப் அவர்களைப் பொறுத்தவரையில், “இத்தகைய அகல்விரிவான திட்டம் பொதுமைப்படுத்துவதற்குப் பழகிய, கல்வெட்டுகள் மற்றும் இலக்கியச் சான்றாதாரங்களின் மதிப்பினையும் உட்கருத்து களையும் மதிப்பிடும் திறமையையுடைய ஒரு நிபுணரின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியது அவசியம். காவேலி வெங்கட லட்சுமையா எழுதிய ‘சுருக்கவுரை’யில் இருந்து அவரது தகுதிகளை மதிப்பிடும்போது, அவர்கள் இவ்வாறான ஆராய்ச்சிப் பணிக்கு எவ்வளவு தான் உதவிகரமாக இருந்தாலும், இத்தகைய ஒரு கடினமான பணியினை எடுத்துச் செய்யக்கூடிய தகுதி அவருக்கோ இல்லை வேறெந்த இந்திய மண்ணின் குடிமகனுக்கோ இருப்பதாகத் தெரியவில்லை.” என்ற கருத்தே இருந்தது. அவருக்குப் பதிலாக, தாம் ஒரு கீழைத்தேய ஆய்வாளர் என்று கூறிக்கொண்ட மதறாசைச் சேர்ந்த ஒரு கிறித்தவ சமய ஊழியரான டெய்லரை அவர்கள் நியமித்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனிய விதிகளின்படி பார்த்தாலும் கூட ஒரு மோசமான கல்வியாளராகவும் அதற்கும் மேல் மிகச்சரியாகச் சொல்வதானால் ஒரு விநோதமானவராக, திறமையற்றத் தொல் பொருள் ஆய்வாளராகவே அவரை (டெய்லரை) எடைபோட முடியும்.

ஆகவே, மெக்கென்சியின் ஆவணத்தொகுப்பு இந்தியாவில் ஒரு புதிய அறிவாதார சாம்ராஜ்ஜியத்தின் தோற்றத்தைக் குறித்து நிற்கின்றது. அங்கே பிரித்தானியக் காலனிய சமூகவியலின் மரபான நடைமுறைகள் மற்றும் உறுதிப்பாடுகளுடன் பிரதிசார்ந்த மேதைமை யின் செயலூக்கம் மேம்பட்ட முறையில் உறவை ஏற்படுத்திக் கொண்டது. இந்தியக் குரல்களும் அர்த்தங்களும் வரலாறுகளும் காலனிய அறிவினால் அதிரடியாக ஒதுக்கிவைக்கப்பட்ட கதையை யும் மௌனத்தின் வரலாறு கூறுகின்றது. தமது சேகரிப்பிற்குப் பொருளடைவும் நூல்பட்டியலும் செய்வதில் மெக்கென்சி காட்டிய அழுத்தமான மௌனம் இந்தத் திட்டப்பணியில் முக்கியக் கருவியாக மெக்கென்சியே கருதிய இந்திய உதவியாளர்களை ஒதுக்கிவைப் பதற்கு அடிகோலியது. இதில் மெக்கென்சியின் மௌனத்தாலும் இப்பணிக்குப் பிறகான பல்வேறு விதமான செயல்களுக்கு அவரது வாழ்க்கை பயன்பட்டதாலும் மெக்கென்சியின் குரலும் தொலைந்து போனது. “விஜயநகரத்தில் (விஜயநகரமாக இருக்கலாம்) உள்ள ஒரு பாழடைந்த கோவிலை வரையத் தயாராக இருக்கும் ஒரு கம்பெனி அதிகாரி” என்ற தலைப்பிட்ட மெக்கென்சியின் ஓவியங் களுள் ஒன்றில் அந்த ஆவணத்தைத் தாம் பதிவுசெய்வதுபோன்று வரைந்துள்ளார்.

ஆவணப்பதிவின் போக்கில் தம்மைத் தாமே சுட்டிக்கொள்வதாக அமைந்த அந்த ஓவியத்தில் இந்தத் திட்டப்பணியினைப் பற்றிய அவரது சொந்தப் பார்வையை முன்வைக்கின்றார். அந்த ஓவியத்தின் மையத்தில் ஒரு ஒற்றைக் கட்டடம், மிகப்பெரிய தனித்து நிற்கும் விமானத்தைப் (கருவறைக்கு மேலிருக்கும் கோபுரம் போன்ற அமைப்பு) போன்று ஒரு கோவில் இருக்கின்றது. அந்தக் கோவிலின் கோபுரம் சிதிலமடைந்துள்ளது, இருப்பினும் கோவிலைச் சுற்றியுள்ள அனைத்துப் பக்கங்களிலும் உள்ள சிற்பச் செதுக்கல்கள் அழகியல் திறமையும் ஆற்றலும் கொள்ளையாக நிறைந்திருப்பதை கண்கூடாகக் காட்டுகின்றன. ஆனால் தற்போது இந்தக் கோவில் சிதிலமடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, முன்பு கருவறைத் தெய்வம் இருந்த இடத்திற்கு மேற்புறமுள்ள விமானத்தின் நடுவில் இருந்து ஒற்றை மரம் ஒன்று முளைத்துவந்துள்ளது. மரமும் அதன் கிளைகளும் அந்தக் கற்கோவிலைப் பிளந்துள்ளன. பண்பாட்டின் மீது ஆக்கிரமித்து வெற்றிகொண்ட இயற்கையால் விரைவில் அது உடைந்துவிழுவது போல் தோற்றமளித்தது. அந்த ஓவியத்தின் பக்கவாட்டில் சட்டகம், மை, ஒரு நாற்காலி ஆகியவற்றைச் சுமந்தபடி பல இந்திய உதவியாளர்கள் நிற்கின்றனர்; அவர்களுக்கு முன்னால் நீல மேலங்கி அணிந்த ஒரு பிரித்தானிய அதிகாரி இருக்கின்றார். அந்த அதிகாரி சிதிலமடைந்த அந்தக் கோவிலை வரைய, கற்கோவிலைத் தாளில் பதிய வந்துள்ளார். இயற்கையில் தொலைந்துபோகும் நிலையிலுள்ளதை, கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருப்பது போல் தோன்று வதைக் காப்பாற்ற வந்துள்ளார்.

மெக்கென்சி இந்து மதத்தின் கடந்த காலத்தில் வசப்பட்டு மயங்கிவிட்டார். தமது சேகரிப்பின் மூலம் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அது நிலைகுலைந்து விழும் முன்னர் வரைவதன் மூலமும் அதனை மீட்டெடுக்க முயன்றார். ஆனால் இங்கு தான் அவரது இருப்பின் (அவரது வரலாற்றினதும்) முரண் இருக்கின்றது. ஒரு புறம், மெக்கென்சியின் அனுபவ அறிவுசார் திட்டப்பணியினைப் பாரிய முறையில் ஆவணப்படுத்தும் பணி மிகக் குறைந்த இடையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டது: சேகரிப்பினைத் தொடர்ந்து செய்ய வண்டும் என்ற எண்ணத்தில் அதற்குப் பொருளடைவும் நூற்பட்டியலும் எழுதும் பணியினைக் கூட மெக்கென்சி தள்ளிப்போட்டார்.

மறுபுறம், மெக்கென்சி இல்லாமல் இருத்தலே அவரது இருப்பினை அதிகாரப்பூர்வமாக்கு கின்றது. இந்தியாவின் வரலாறுகளும் மரபுகளும் அவற்றின் போக்கிலேயே விடப்பட்டால் கூடிய விரைவில் அவை மறைந்து போய்விடும் என்ற காலனியக் கருதுகோள், மெக்கென்சியின் ஊக்கத்துடன் கூடிய முயற்சிகள் இல்லாமல் ஆவணங்களை மீட்டெடுப்பதும் பிரதியெடுப்பதுமான பிரதிநிதித்துவம் நடக்க இயலாது என்ற காலனிய பிரதிநிதித்துவத்தின் அடிப்படையான செருக்கினை நமக்கு நினைவுறுத்துகின்றது. அதனால் தமது பட வரைவுகளில் மட்டும் மெக்கென்சி தம்மைத் தோன்றவைத்துள்ளார். ஆனாலும் அவர் அந்தத் தொகுப்பினுடன் கூடவே முழுதும் இருந்தார். வரலாற்றுரீதியான சேகரிப்பின் மீதிருந்த அவரது சிரத்தையான தொல்பொருள் ஆய்வுரீதியிலான கவனம், இந்தியாவை அறிவதற்கான பிற்கால காலனிய முயற்சிகளின் மாபெரும் மனமிரங்கிய கருணைக்கு வழிவகுத்தது.

Pin It

காலின் மெக்கன்சி 1782இல் தன் 29ஆவது வயதில் கிழக்கிந்திய கம்பெனியில் நில அளவைப் பொறியாளர் பணிக்குச் சேர்ந்த நாள் முதல் 1821இல் கல்கத்தாவில் காலஞ்சென்ற நாள் வரை ஏறக்குறைய 39ஆண்டுகள் இந்தியாவில் கழித்தார். இதில் பெரும்பகுதி தென்னிந்தியாவில் பழைய மைசூர் மாநிலம், ஆந்திராவில் ராயல சீமை (பழைய ஹைதராபாத் நிஜாம் பகுதி), தமிழ்நாடு (சென்னை மாகாணம்) ஆகிய பகுதிகளில் நில அளவைத் துறை சார்பான பணிக்காகப் பரவலாகப் பல இடங்களுக்குச் சென்று வந்தார். இவர் கண்காணிப்பில் செய்த நில அளவையும் நிலப்படங்களும் (maps) மிகச் சிறப்பாக மதிப்பிடப்பட்டதன் காரணமாக 1810இல் சென்னை மாகாணத்தில் தலைமை நில அளவையாளராகவும் (Surveyor General) 1815இல் கல்கத்தாவில் இந்தியத் தலைமை நில அளவையாள ராகவும் அமர்த்தப்பட்டார்.

பணித் தொடக்க முதல் இந்த நாட்டின் பழமையை அறிந்து கொள்ளப் பேரார்வம் கொண்டிருந்தார். முதலில் இந்தியப் பராம்பரிய கணித அறிவைப் பற்றி செய்திகள் திரட்ட முனைந்த அவர் விரைவில் பல்வேறுபட்ட செய்திகளையும் அறிய முற்பட்டார். அவருக்கு முன்பும் சமகாலத்திலும் பலர் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருந் தனர். இந்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் நன்கு புரிந்து கொண்டாலே தங்கள் அரசியல் ஆதிக்கத்தைத் திறம்படச் செய்ய முடியும் என்ற நோக்கம் எல்லா ஆங்கிலேயர் மனத்திலும் இருந்தது. மெக்கென்சியின் கருத்தும் அதுவே. ஆனால் போகப்போகப் பண்டைச் செய்திகளையும் பொருள்களையும் திரட்டுவதில் இவர் காட்டிய ஆர்வம் அளவு கடந்ததாக இருந்தது. அதை ஒரு வெறியென்று கூடச் சொல்லலாம். தன் சொந்த முயற்சியால் சொந்தச் செலவில் பல உள்நாட்டு உதவியாளர்கள் உதவியுடன் இவர் செய்த தொகுப்பு மிகப் பெரியது என்று கருதப்படுகிறது.

அதைப்பற்றிய ஒரு குறிப்பு வருமாறு: இலக்கியச் சுவடிகள் 1568, வட்டார ஆவணங்கள் 2070, கல்வெட்டுகள் 8076, மொழி பெயர்ப்புகள் 2159, பழங்கட்டட நிலவரை படங்கள் 79, பல்வேறு வரைபடங்களும், ஓவியங்களும் 2630, காசுகள் 6000, சிலைகள் 145. இத்தொகுப்பை இவர் இறப்புக்குப்பின் கம்பெனி அரசு ஒருவிலை கொடுத்து வாங்கி ஒருபகுதியை இலண்டன் இந்திய அலுவலக நூலகத்திலும் ஒரு பகுதியைக் கல்கத்தாவிலும் இன்னொரு பகுதியைச் சென்னையிலும் வைத்துப் பாதுகாக்க ஏற்பாடு செய்தது. இத் தொகுப்பைப் பயன்படுத்தி ‘Ancient Hindu Manners, Geography and History‚ (பழம் இந்தியப் பண்பாடு, நிலவியல் மற்றும் வரலாறு) என்ற நூலை எழுதவேண்டுமென்று மெக்கென்சி கொண்டிருந்த எண்ணம் கடைசிவரை ஈடேறவில்லை. ஓரிரு கட்டுரைகள் மட்டும் எழுதினார். இறுதிவரை தேடுவது, சேர்ப்பது என்றே இருந்து விட்டார். அவற்றை வகைபடுத்தி முறைபடுத்தி அட்டவணை செய்யக் கூட நேரம் இல்லை. இத்தொகுப்புக்கு எச்.எச்.வில்சன் மற்றும் வில்லியம் டெய்லர் ஆகியோர் செய்த அட்டவணைகள் முழுமையானவை யென்று சொல்லமுடியாது.

mahabalipuram_beach_temple_640

கடற்கரை கோவில், மாமல்லபுரம், 1784

டி.வி.மகாலிங்கம் வரலாற்று ஆவணங்கள் பற்றிச் செய்ய அட்டவணை இரு தொகுதி களாகச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இத் தொகுப்பைச் சேர்ந்த இலக்கியச் சுவடிகளை சி.பி.பிரவுன் பின்னால் நிறையப் பயன்படுத்தியுள்ளார். சில வரலாறு, சமூகம், தொடர்பான ஆவணங்களையும் தமிழ் கல்வெட்டுகளையும் சென்னைக் கீழ்த் திசைச் சுவடி நூலகம் வெளியிட்டுள்ளது. தெலுங்குக் கல்வெட்டு களில் சிலவற்றையும் வேறுசில வட்டார, ஊர் ஆவணங்களை ஆந்திர மாநிலத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இவ் வெளியீடுகள் மூலமாகவும், வெளியிடப்படாத சில ஆவணங் களைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களிலிருந்தும் மெக்கென்சி தொகுப்பை ஓரளவு அறிந்து மதிப்பிடலாம். முழுமை யாகப் புரிந்து கொள்ள இன்னும் பல ஆய்வுகளும் வெளியீடுகளும் தேவை.

காலனி ஆதிக்கச் சூழலை மறந்துவிட்டு நடுநிலையோடு பார்த்தால் மெக்கென்சி தொகுப்பு இந்தியப் பழம்மரபு வரலாற்றைப் பற்றிய பல செய்திகளை ஆவணப்படுத்திக் காப்பாற்றியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. பொதுவாக நம் பழம் சமூகங் களில் எழுத்தறிவு குறைவு, அதுவும் சில குறுகலான வட்டங்களுக் குள் இருந்தது. ஆகவே பெரும்பாலான வரலாற்றுச் சமூகச் செய்திகளை செவிவழியாகவே அறிய முடியும். அவையும் காலப் போக்கில் திரிந்து மறைந்து விடும். ஆகவே 17-19ஆம் நூற்றாண்டு களில் ஐரோப்பியர் இங்கு தொகுத்து ஆவணப்படுத்திய செய்திகள் பெரிதும் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் மெக்கன்சி தொகுப்பு விலை மதிப்பற்ற ஒன்றாகும்.

ஒரு வகையில் தென்னிந்தியத் தொல்லியல் ஆய்வில் மெக்கன்சி முன்னோடியாக இருந்தார். பல தொல்லியல் நிலைகளைக் கண்டறிந்து நிலப்படங்கள் வரைபடங்கள் மூலம் அவற்றை ஆவணப்படுத்தினார். காட்டாக, உலகப் புகழ்பெற்ற புத்தமத நிலையமான அமராவதி இன்று தொல்லியலாருக்கு மிகப் பழகிப்போன ஒன்று. பல முறை அங்கு அகழாய்வுகள் மேற்கொண் டதன் பயனை இன்று அனுபவிக்கிறோம். ஆனால் முதன்முதல் இதன் முக்கியத்துவத்தைத் தம் நேர்த்தியான நில அளவை மூலம் நிலவரைபடங்கள் செய்து வெளி உலகுக்கு உணர்த்தியவர் மெக்கென்சி.

அதே போலப் பல கோட்டைகளை ஆவணப்படுத்தியுள்ளார். அவற்றுள் பல இன்று மிக அழிந்த நிலையில் உள்ளன என்று குறிப்பிட வேண்டும். பெருங்கற்படை நிலைகளைக் கண்டறிந்து அவற்றைப் பற்றிய பல வட்டார மரபுகளைக் குறித்துள்ளார்.

எழுத்தாவணங்களில் வம்சாவளிகள், ஊர்கள் பற்றிய தண்ட கவிலை, கைஃபீயத்து போன்றவை தொழில் பேட்டைகளைப் பற்றிய கணக்கு வழக்குகள் ஆகியன குறிப்பிடத்தக்கவை. அக்காலக் குறுநில அரசுகளான பாளையக்காரர் குடும்பங்களைப் பற்றிய

வரலாற்றாவணங்கள் வம்சாவளிகளாகும். இவை பல செவிவழிச் செய்திகள் இன்று கிடைத்துள்ள கல்வெட்டறிவு மூலம் உண்மை யென்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த வம்சாவளிகள் 15ஆம் நூற்றாண்டு தொடங்கி வரும் நிலமானிய வரலாற்றுக்குப் பெரிதும் துணைசெய்யும். சில அரிய பொருளியல் தொடர்பான ஊர்க் கணக்குகள் இத்தொகுப்பில் அடங்கும். காட்டாக, கர்நூல் மாவட்டம் ஆலம்கொண்ட என்ற நகரம் 1563இல் எப்படி திகழ்ந்தது என்பது பற்றி ஒரு நீண்ட தொழில் புள்ளி விவரப்பட்டியலைக் குறிப்பிடலாம். அதைத் தம் விஜயநகர வரலாற்றில் பர்டன் ஸ்டெயின் மிக உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னைக் கீழ்த்திசைச் சுவடி நூலகம் வெளியிட்டுள்ள சில பாளையப்பட்டு வம்சாவளிகள், வட்டார வரலாறுகள், இடங்கை வலங்கை பற்றிய சமூக ஆவணம் ஆகியவற்றைப் பார்த்தால் அவற்றின் வரலாற்றுத் தன்மையைப் புரிந்து கொள்ளலாம். மற்ற வரலாற்று மூலங்கள் தராத பல செய்திகளை இவை தருகின்றன. சில செய்திகள் தெரிந்த சான்றுகளுக்குத் துணைசெய்யும் அல்லது வேறுகோணத்தைக் காட்டும். தி.நா.சுப்பிரமணியன் அவர்களால் பதிப்பிக்கப்பட்ட தென்னிந்தியக் கோயில் சாஸனங்கள் தொகுதி சுமார் ஆயிரம் தமிழ்க்கல்வெட்டுகளைக் கொண் டுள்ளது. ஆசிரியர் கருத்துப்படி இவற்றுள் 30 விழுக்காடு வேறு யாரும் கண்டறியாத புதிய கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகள் சார்ந்து ஒரு குறையுண்டு. மெக்கன்சி உதவியாளர்கள் மூலம் கல்வெட்டுகளைப் படித்து மூலபாடத்தை அப்படியே தராமல் தங்களுடைய பேச்சு வழக்கு மொழியில் கொடுத்துள்ளார்கள். ஆகவே பாடத்தில் பல குறை யுண்டு. இருப்பினும் செய்திகளை வேறு கல்வெட்டுகள் துணையுடன் பயன்படுத்த முடியும்.

மெக்கென்சி போன்றோர் பெருமுயற்சியுடன் தொகுத்துத் தந்துள்ள ஆவணங்களைப் பலவகையாகப் பயன்படுத்தலாம். ஆனால் முதலில் இவ்வாவணங்களை உரிய வகையில் காப்பாற்றுவது முக்கியக் கடமையாக அரசு நிறுவனங் களும் மற்றவர்களும் கருத வேண்டும். உண்மையில் இக்கடமையை நாம் உணர்கிறோமா என்பது ஒரு கேள்விக்குறி. உலகில் வளர்ந்த நாடுகளிலும் சரி, வளரும் நாடுகளிலும் சரி, ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியன நாட்டின் பண்பாட்டுக் கருவூலங் களாகப் போற்றப்படுகின்றன. அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் மிகவும் பின் தங்கியுள்ளோம். ஆகவே, மெக்கென்சி போன்ற பல பெருமக்கள் முயற்சி வெளிச்சத்துக்கு வரப் பல ஆண்டுகள் செல்லும் என்பது உறுதி.

துணைநூற் பட்டியல்

Stein, Burton, The New Cambridge History of India I.2: Vijayanagara, Cambridge University Press, New Delhi, 2000.

Paddayya, K., ‘Colonel Colin Mackenzie and the Discovery of the Amaravati Site’, Deccan Studies, vol. III, no. 1 (2005) pp. 28–32.

Dirks, Nicholas B., Castes of Mind: Colonialism and the Making of Modern India, Permanent Black, New Delhi, 2004.

Pin It

ஐரோப்பியர்களுடைய வருகைக்குப் பிறகு இந்தியச் சூழலில் உருப்பெற்ற புலமைத்துவ செயல்பாடுகள் பலவற்றுள் மொழி, இனம், வரலாறு குறித்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் இந்தியா குறித்த பல்முனைபட்ட புரிதலுக்கு இடம் கொடுத்தன. ஐரோப்பா வில் மொழி - இனம் குறித்த ஆய்வுகள் 18ஆம் நூற்றாண்டு அளவில் முகிழத் தொடங்கி அவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்ற கருத்தாக்கம் வலுப்பெறத் தொடங்கியது. இச்சூழலில் ஐரோப்பிய ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவலான பொழுது உலக மொழிகள் குறித்த அறிவைப் பெற்றனர். பல்வேறு மொழிகளுக் கிடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிந்து மொழிக் குடும்பங்களை வரையறை செய்தனர். இந்தியாவில் ஆசியக் கழகத்தை உருவாக்கிய வில்லியம் ஜோன்ஸால் ஐரோப்பிய-ஈரானிய மொழிகளுக்கும், சமஸ்கிருதத்துக்கும் இடையிலான உறவினை அடிப்படையாகக் கொண்ட இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் முன்வைக்கப்பட்டது. மேலும், சமஸ்கிருத மொழியை அடிப்படை யாகக் கொண்ட ஒற்றைப் பண்பாட்டுத் தளத்தில் இந்தியா இயங்கிக் கொண்டிருக்கிறது. சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கெல்லாம் மூலமாக இருக்கிறது என்ற கருதுகோளின் அடிப்படையில் கல்கத்தா வின் ஆசியக் கழகக் கீழைத் தேயவியலார் செயல்பட்டனர்.

அமராவதி சிற்பம், 1798இந்நிலையில், ஆசியக் கழகத்தில் உறுப்பினர்களாகத் திகழ்ந்த காலின் மெக்கன்சி, எல்லிஸ் ஆகியோர் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒற்றை பண்பாட்டுத் தளத்தில் இந்தியா இயங்கவில்லை, தென்னிந்திய மொழி வரலாறு உள்ளிட்டக் கூறுகள் ஆசியக் கழகம் முன்வைக்கும் கருத்தாக்கத்திற்கு வேறுபட்டதாய் இருக்கிறது என்ற சிந்தனையைப் பெறுகின்றனர். வட இந்திய - ஆரிய மரபுக்கு மாற்றான தென்னிந்திய திராவிட மரபு முன்வைக்கப் பட்டு இதனை நிறுவும் வகையிலான செயல்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. தென்னிந்தியாவை மையப்படுத்தி முகிழ்ந்து புதிய சிந்தனைக்கு வழிவகுத்த இவ்வறிவுச் செயல் பாட்டைச் சென்னைக் கீழைத்தேயவியல் பள்ளி (The Madras School of Orientalism) என தாமஸ் டிரவுட்மன் குறிப்பிடுகிறார்.

சென்னைக் கீழைத்தேயவியல் பள்ளி என்னும் கருத்தாக்கம் உருப்பெறுவதற்கு 19ம் நூற்றாண்டின் தொடக் கத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு அறிவார்ந்த திட்டங்களே காரணமாய் அமைந்தன. முதலாவது திட்டம் காலின் மெக்கன்சி மற்றும் அவரின் இந்திய உதவியாளர் களால் தென்னிந்திய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்காக வணத் தொகுப்புகளை உருவாக்கும் திட்டம். இரண்டாவது எல்லிஸால் உருவாக் கப்பட்ட ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியின் மூலமாக தென்னிந்திய மொழிகள் குறித்த அறிவுச் செழுமையை உருவாக்கும் திட்டம் (2009,1) இந்த இரண்டு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டதன் விளைவாக தென்னிந்தியா குறித்த புதிய அறிவு உருவாக்கம் பெற்றது. இவ்வறிவு இந்தியப் பண்பாட்டுத் தளத்தில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வினைபுரிந்து கொண்டிருக்கின்றன.

காலின் மெக்கன்சி மற்றும் எல்லிஸால் முன்னெடுக் கப்பட்ட இவ்விரு திட்டங்கள் ஒன்றோடொன்று தொடர்புடைய அதே வேளையில் தனித்தனி நிலையில் செயல்படுகிற திட்டங்களாக அமைந்துள்ளன. மெக்கன்சியின் திட்டம் தென்னிந்திய வரலாறு குறித்ததாகவும், எல்லிஸின் திட்டம் தென்னிந்திய மொழிகள் குறித்ததாகவும் அமைந்துள்ளன. மேலும், சமகாலத்தில் வாழ்ந்த இவ்விருவரும் நெருங்கிய தொடர்பு கொண்டு தங்களுடைய அறிவுச் செயல்பாட்டிற்காக கருத்துக் களையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டு செயல்பட்டிருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. தற்கால தமிழ்ச் சூழலில் எல்லீஸ் குறித்து பரவலாக அறியப்பட்ட அளவிற்கு காலின் மெக்கன்சி குறித்து அறியப்படவில்லை.

மேலும், எல்லீஸால் மொழியப்பட்டு கால்டு வெல்லால் விரிவாக முன்னெடுக்கப்பட்ட திராவிட மொழிக் குடும்பம் என்னும் சிந்தனை தொடர்ச்சியாக வலுப்பெற்று உறுதியடைந்திருக்கிறது. ஆனால், காலின் மெக்கன்சி கவனம் செலுத்திய தென்னிந்திய வரலாற்று முன்னெடுப்பு தொடர்ச்சியாக வளர்த் தெடுக்கப்படவில்லை என்று கருத இடமிருக்கிறது. இந்தியத் தளத்தில் வட இந்திய வரலாறு பெறுகிற முக்கியத்துவத்தை தென்னிந்திய வரலாறு இன்றைக்கு பெறுவதில்லை. இச்சூழலில் தென்னிந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்களைத் தொகுத்த காலின் மெக்கன்சி குறித்து உரையாடுவது அவசியத் தேவை யாகவே அமையும். இக்கட்டுரை மெக்கன்சி மற்றும் எல்லீஸூக்கு இடையேயான உறவு, திராவிடச் சான்று மற்றும் தென்னிந்திய வரலாறு குறித்த மெக்கன்சியின் கருத்தாக்கம் மற்றும் மெக்கன்சியின் இந்திய உதவி யாளர்கள் குறித்த உரையாடலுக்கு உட்படுத்துகிறது.

காலின் மெக்கன்சி - எல்லீஸ் தொடர்பு

தென்னிந்தியவியலை முதன்மைப்படுத்திய சென்னை கீழைத் தேயவியல் பள்ளிக்கான திட்டங்களை செயல்படுத்திய காலின் மெக்கன்சி மற்றும் எல்லீஸ் கி.பி.1802க்கு முன்பாகவே அறிந்திருக் கிறார்கள். எல்லீஸூக்கு சங்கர சாஸ்திரியை (சங்கரய்யா) மெக்கன்சி தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார். (2009, 13) இந்நிகழ்வு தொடக்கம் இருவரும் கடைசி வரை தொடர்பில் இருந்திருக்கிறார்கள். எல்லீஸூக்கு மெக்கன்சி அறிமுகப்படுத்திய சங்கரய்யா சிறந்த அறிவாளியாகத் திகழ்ந்திருக்கிறார். தெலுங்கு பிராமணரான இவர், காலனிய நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் 23 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். எல்லீஸ் கும்பகோணம் மற்றும் சென்னை யில் இருந்தபோது அவரின் தலைமைப் பணியாளராக பணியாற்றி இருக்கிறார். சென்னை ஜார்ஜ் கோட்டை கல்லூரியின் முதல் பட்டதாரியான இவர், சிறிதுகாலம் ஆங்கிலத் தலைமை யாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும், எல்லீஸின் திராவிடச் சான்று கருத்துருவாக்கத்திற்கு மிக முக்கியப் பங்காற்றிய வராகவும், அது தொடர்பாக எல்லீஸூடன் விரிவாக உரையாடல் நிகழ்த்தியவதாகவும் சங்கரய்யா அறியப்படுகிறார். (2006, 104).

எல்லீஸை அடையாளப்படுத்தும் திராவிட சான்று கருத்தாக்கம் உருப்பெறுவதற்கு உறுதுணையாய் விளங்கிய சங்கரய்யாவை மெக்கன்சிதான் அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மெக்கன்சி மற்றும் எல்லீஸூக்கு இடையேயான அறிவுப்பகிர்வு குறித்து தாமஸ் டிரவுட்மன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். பெரிதும் மதிக்கவேண்டிய மெக்கன்சி மற்றும் அவரின் இந்திய உதவி யாளர்கள் செய்த பணியின்மீது எனக்கிருந்த தவறான அணுகுமுறை மற்றும் மதிப்பீட்டிலிருந்து தற்போது நான் விலகியிருக்கிறேன். எல்லீஸ் மற்றும் கல்லூரியின் தலைமை ஆசிரியர்கள் குறித்து நான் ஆராய்ந்தபோது அந்த ஆராய்ச்சியின் பல்வேறு இழைகள் மெக்கன்சி யின் ஆவணத் தொகுப்புகளை நோக்கி சென்றடைவதை அறிந்தேன். எனவே, மெக்கன்சி தொகுப்பின் மீதான என்னுடைய மனமாற்றம் படிப்படியாக நிகழ்ந்தது. மேலும், எல்லீஸ் எழுதிய பல கடிதங்களை நான் மீட்டெடுத்து வாசித்தபோது எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. அது, எல்லீஸூம் மெக்கன்சியும் தொடர்பிலிருந்து தங்களுடைய ஆய்வுகளுக்கான சிந்தனைகளையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லீஸின் கடிதங்கள் தெளிவு படுத்துகின்றன. மேலும், இருவருடைய திட்டங்கள் இணைந்து தென்னிந்தியாவுக்கான புதிய அறிவுச் சூழலை உருவாக்கியிருக்கும் போக்கைக் கண்டு நான் பாராட்டும் நிலையை அடைந்திருக்கிறேன். (2009, 14) என்று பதிவு செய்திருப்பது இருவருக்குமான அறிவு உறவினை வெளிப்படுத்துவதாய் அமைகிறது. எல்லீஸின் கடிதங்கள் அனைத்தும் வெளிப்படும்போது இருவருக்குமான உறவு நிலை குறித்த விரிவான புரிதலைப் பெற முடியும்.

மெக்கன்சி தொகுத்த ஓவியங்கள் மீதான ஆய்வினை தொடர்ச்சி யாக மேற்கொண்டுவரும் ஜெனிபர் ஓவ்ஸ் மெக்கன்சிக்கும் எல்லீஸூக்கும் இடையே நிகழ்ந்த புலமைத்துவ உறவு குறித்து பின்வருமாறு பதிவு செய்கிறார்.

மெக்கன்சி தொகுத்த ஓவியங்கள் மற்றும் பிற ஆவணங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்திய தொல் எழுத்துகளின் உண்மை உருவின் மாதிரிகள் அடங்கிய தொகுப்பு என்று தலைப்பிடப் பட்டுள்ள மெக்கன்சியின் ஓவியத் தொகுதிகளில் உள்ள ஒரு மாதிரி ஓவியம் எல்லீஸூக்கு சொந்தமான செப்பேட்டில் உள்ள ஓவிய மாகும். ஜான் நியூமென் என்கிற மெக்கன்சியின் உதவியாளர் 2.9.1809 அன்று அதனை பிரதி செய்திருக்கிறார். மேலும், மெக்கன்சியும் எல்லீஸூம் ஒரே மாதிரியான ஆவணங்களைச் சேகரித்து அதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் விளக்கப்பட் டிருக்கிறது. மேலும், மெக்கன்சி கணிசமான அளவில் செப்பேடு களை சென்னையில் தொகுத்திருந்தார். அச்செப்பேடுகள் அனைத்தும் எல்லீஸிடமும் இருக்க வேண்டுமென்று மார்க் வில்க்ஸ் தனது தென்னிந்திய வரலாறு வரைவியல் நூலில் குறிப்பிடுவதாக ஓவ்ஸ் பதிவு செய்கிறார். மேலும், எல்லீஸிடமுள்ள செப்பேடுகளை நியூமன் என்கிற தனது உதவியாளர்தான் பிரதி செய்ய வேண்டு மென்று முடிவு செய்து மெக்கன்சி பிரதி செய்கிறார். இந்நிகழ்வே மெக்கன்சி மற்றும் எல்லீஸ் ஆகிய இரண்டு அறிஞர்களுக்கு இடையேயான உறவினை உண்டாக்கியது என்றும் ஜெனிபர் ஓவ்ஸ் பதிவு செய்கிறார்.

சுவடிகள் மற்றும் கல்வெட்டுகளை மொழி பெயர்ப்பு செய்வதில் இந்தியர்கள் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற தங்களின் பார்வையை இருவரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி அவர்களுக்கு இடையே நிகழ்ந்த கடிதத் தொடர்புவழி அறிய முடிகிறது. கி.பி. 1806ல் எல்லீஸ் கும்பகோணத்தில் நீதிபதியாக இருந்தபொழுது மெக்கன்சிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத் தில் அறிவார்ந்த நோக்கத்திற்காகச் செய்யப்படும் மொழி பெயர்ப் புகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்று தன்னுடைய கருத்தினை எல்லீஸ் தெரிவிக்கிறார். குறிப்பாக ஆங்கிலேய மற்றும் இந்திய அறிஞர்களை ஒன்றுசேர்க்க வேண்டும் என்கிற தன் ஆலோசனையை முன்வைக்கிறார். அவ்வாறு செய்வதன் மூலமாக சமஸ்கிருதம் மற்றும் தமிழில் உள்ள இலக்கிய வகைமைகளின் மொழிபெயர்ப்புகளை மிக எளிதாக மொழிபெயர்த்து சேகரிக்க முடியும் என குறிப்பிடு கிறார். மேலும், மொழிபெயர்ப்பாளர் களுக்கான பள்ளியை எவ்வாறு உருவாக்கி கட்டமைப்பது என்பது குறித்தும் அதற்கான நிதியாதாரங்களை பெருக்குவது, ஆசிரியர்களுக் கான மாத சம்பளத்தை வழங்குவது, மொழி பெயர்ப்புப் பணியினை மேற்பார்வையிடுவது உள்ளிட்ட விரிவான திட்டத்தை அக் கடிதத்தின்வழ மெக்கன்சிக்கு தெரிவிக்கிறார்.

எல்லீஸ் தான் வகுத்த கொள்கையின் வழியாக இந்தியர்கள் செழுமையான ஆங்கில இலக்கண அறிவுடன் ஐரோப்பியர்களுடன் இணைந்து தென்னிந்திய பிரதிகள் மற்றும் கல்வெட்டுகளை மொழிபெயர்க்க முடியும் என்று பதிவு செய்கிறார். இது அவரால் 1812இல் உருவாக்கப்பட்ட ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியின் மொழி ஆசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சியாகவும் முன்னோட்ட மாகவும் அமைந்தது என்று கருத இடமிருக்கிறது. கி.பி.1790களின் இடைக்காலம் தொடங்கி மெக்கன்சியிடம் வெங்கட்ட போரியா போன்ற ஆங்கிலத்தில் திறமை வாய்ந்த இந்தியர்கள் மொழி பெயர்ப்புப் பணியாற்றினர். போரியா தன்னுடைய 14 முதல் 18 வயது வரைக்குமான காலத்தில் மிகப்பரவலாக ஆங்கிலமொழியில் கற்றார். மேலும், அவர் குறைகாண முடியாத அளவுக்கு ஆங்கிலத்தில் சரளமாக எழுதக்கூடியவராக இருந்தார். இத்தகைய ஈடுபாடு உள்ள கல்வி கற்ற அறிவார்ந்த மொழிபெயர்ப்பாளரை மெக்கன்சி பெற்றிருக்கிறார். சிறந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மெக்கன்சி பணியாற்றியதைக் கண்ட எல்லீஸ் தனது பள்ளி உருவாக்க திட்டம் குறித்து மெக்கன்சியிடம் ஆலோசனை செய்ய நினைத்திருக் கிறார். அநேகமாய் 1806ல் எல்லீஸ் தனது திட்டம் குறித்து மெக்கன்சிக்கு கடிதம் எழுதுவதற்கு இதுவே உந்துதலாய் அமைந் திருக்க முடியும்.

மெக்கன்சியும் தனது ஆய்வு குறித்து சென்னைக் கீழைத்தேயப் பள்ளியுடன் தொடர்புடைய பிறருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதற்கு 1803ல் மெக்கன்சி, எல்லீஸ் மற்றும் தாமஸ் ஸ்டிரேஞ் ஆகியோருடன் மகாபலிபுரத்திற்கு மேற்கொண்ட பயணம் குறித்து ஜான் லெய்டன் செய்யும் பதிவு சான்றாகிறது. 1803 அளவில் மெக்கன்சி போரியா மற்றும் லட்சுமய்யாவுடன் மகாபலிபுரத்தில் மிக விரிவான அளவில் பரப்பாய்வை மேற்கொண்டிருந்த நிலையில் மேற்கண்ட ஆளுமைகளை மெக்கன்சி அழைத்துச் சென்று மகாபலிபுரம் குறித்த உரையாடலில் ஈடுபட்டிருக்கிறார். (2009, 82) மேலும், எல்லீஸை பொறுத்த அளவில் அவரும் மெக்கன்சியும் மகாபலிபுரத்தின் ஒரு பகுதி கடலில் மூழ்கியிருக்கிறது என்ற கருத்து நிலையை நிரூபிப்பதில் ஆர்வமாய் இருந்திருக்கின்றனர். ஆனால், கடலுக்கு அடியில் உள்ளவற்றை வெளிப்படுத்துவதில் மேற் கொண்ட முயற்சியில் இருவரும் தோல்வியுற்றனர் என்று பாபிங்டன் பதிவு செய்கிறார். (1869, 49) மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் மெக்கன்சிக்கும் எல்லீஸூக்கும் இடையேயான உறவு, சென்னைக் கீழைத்தேயவியல் பள்ளி உருவாக்கம் பெறுவ தற்கு இருவரும் தங்களுடைய திட்டங்களின் வழியாக அறிவுப் பகிர்வை நிகழ்த்தியிருப்பது அறிய முடிகிறது.

திராவிடச் சான்று : மெக்கன்சியின் கருத்தாக்கம்

நடுகல், தும்கூர்தமிழ்ச்சூழலில் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல்தான் திராவிடக் கருத்தாக்கத்தை முன்மொழிந்தார் என்ற வாதம் மறுக்கப்பட்டு எல்லீஸின் திராவிடச் சான்றுதான் கால்டுவெல் லின் ஒப்பிலக்கணத்திற்கு முன்னோடியாய் அமைந்தது என்கிற வாதம் அறிஞர்கள் பலராலும் ஏற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திராவிட கருத்தாக்கத்தினுடைய முகிழ்வை காலின் மெக்கன்ஸியிட மிருந்து தொடங்கவேண்டிய தேவை இருப்பதை அறிய முடிகிறது.

லெய்டனின் பழங் கன்னடம் குறித்த குறிப்பு பின்வரும் நினைப்புக்கான காரணத்தைக் கொடுக்கிறது. தொடக்க காலம் முதலே எல்லீஸூடன் லெய்டன் தொடர்பில் இருந்தபோதும் மொழிகள் குறித்து மெக்கன்சியின் உதவியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளே லெய்டனின் பார்வையை வடிவமைத்திருக்கிறது. லெய்டன் தனக்கான சிந்தனையை மெக்கன்சி மற்றும் எல்லீஸ் ஆகிய இரண்டு தரப்பிலிருந்தும் பெற்றிருக்கிறார். 1816இல் கேம்பல் வெளியிட்ட தெலுங்கு மொழி இலக்கண நூலில்தான் எல்லீஸின் திராவிடச் சான்றுக்கான முன்னுரை வெளிவருகிறது. ஆனால், கி.பி.1807 அளவில் மெக்கன்சியால் எழுதப்பட்ட சுற்றுக்கை கடிதத்தை ரமா மண்டேனா என்பவர் கோதாவரி மாவட்ட ஆவணங்களிலிருந்து கண்டெடுத்திருக்கிறார். அக்கடிதம் சென்னை மாகாணம் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடையது. மேலும், அது தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருத மொழியிலிருந்து கிளைத்தவை அல்ல என்ற மெக்கன்சியின் தென்னிந்திய மொழிகள் குறித்த கருத்தாக்கத்தை பின்வரும் கேள்விகளுடன் வெளிப்படுத்த முற்படுகிறது.

-           தென்னிந்திய பகுதியில் உள்ள இந்து மொழிகள் சமஸ்கிருதத் திலிருந்து கிளைக்கவில்லை என்று உறுதியாகக் கூறமுடியும். பிராமணர்கள் தங்கள் மொழி, மரபு, சமயத்துடன் வடக்கி லிருந்து வந்தவர்கள் என்பது மரபு சார்ந்த சான்றுகளால் உறுதிப்படுகின்றன. வடமொழி யாகிய சமஸ்கிருதம் எந்த காலகட்டத்தில் இங்கு அறிமுகமானது என்ற கேள்வி பெரிதும் ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கிறது.

-           தென்னிந்திய மொழிகள் பலவற்றை ஒப்பாய்வு செய்வதும் சமஸ்கிருதத்திலிருந்து அம் மொழிகள் எத்தகையவற்றை பெற்றிருக் கின்றன என்பதை அறிவதும், அம்மொழிகள் வழங்கும் புவியியல் எல்லைகள் குறித்து மிக நுட்பமாக அறிவதும் தேவையாகிறது.

- தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்ட மிகத் தொன்மையான எழுத்து வடிவம் எது?

- தற்சமயம் வழக்கிலுள்ள தென்னிந்திய மொழிகளின் மூலமொழி எது என்பதற்கான அடையாளம் உண்டா? அப்படி இருப்பின் அம்மொழியின் பெயர் என்ன? அது எங்கு வழக்கில் உள்ளது? பிற தென்னிந்திய மொழிகளின் உருவாக்கத்திற்கு அம்மொழி எவ்வளவு தூரம் தாக்கத்தை செலுத்தியது?

- பழங்கன்னடம் இந்த கேள்விக்கு ஏதேனும் ஒருவகையில் விடையளிக்குமா? கல்வெட்டுகளிலிருந்து பெறப்பட்ட இந்த மொழிக்கான எழுத்து வடிவம் கற்றறிந்த சமண பிராமணர்கள்வழி கிடைக்கும் எனத் தெரிகிறது. மெக்கன்சி யின் கீழ் பணிபுரிந்த ஒரு பிரிவினர் இதனை முழுவதுமாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் இப்போதும் இருப்பார்களா னால் அவர்கள் மூலம் இதற்கான தெளிவு பெறலாம்.

-           சால்செட் (இதன்றைய மகாராஷ்டிராவுக்கு அருகில்) தீவின் கெனரா குகையிலுள்ள கல்வெட்டுகளின் வரிவடிவப் பிரதியும் அதன் மொழிபெயர்ப்பும் மேற்கண்ட எழுத்து வகையில் அமைந்திருக்கிறது. இது இவ்வாய்வுக்கு உதவக் கூடிய வல்லமை கொண்டதாய் அமையும் (2012, 89). ((Source:

APSA : Godavari District Records, 1807) என ரமா சுந்தரி மண்டேனா பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.

மெக்கன்சியின் அச்சேறாத இக்கடிதத்தின் மூலம் மேற்கண்ட தென்னிந்திய மொழிகள் குறித்தான அவரின் பார்வை திராவிட மொழிக் குடும்ப சிந்தனைக்கான தொடக்க புள்ளியாக அமைந் திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. தென்னிந்திய மொழிகளில் மெக்கன்சிக்கு போதிய தேர்ச்சி இல்லாத காரணத்தால் தொடர்ச்சி யாக அவரின் சிந்தனை வளர்த்தெடுக்கப்படவில்லை என்று கருத இடமிருக்கிறது. மேலும், அவர் செய்த பரப்பாய்வுப் பணியும் விரிவான அளவில் பலவகையிலான ஆவணங்களைச் சேகரிக்கும் நோக்கமும் கொண்ட மெக்கன்சிக்கு குறிப்பிட்ட ஒரு கருதுகோளின் அடிப்படையில் ஆய்வு செய்யும் இயல்பை அவர் பெற்றிருக்க வில்லை எனவும் அவரின் பணிகளின்வழியே அறிய முடிகிறது. எனினும், திராவிட கருத்தாக்கம் உருப்பெறுவதற்கான சிந்தனை முகிழ்வு அவரிடத்திலிருந்து தொடங்கியிருக்கிறது என்று கூற இடமிருக்கிறது.

கடந்தகால ஆய்வுச் சூழல் திராவிடக் கருத்தாக் கத்தை உருவாக்கியவர் கால்டுவெல் அல்ல அவருக்கும் முந்தைய எல்லீஸ் என்ற கருத்தினை உறுதியாக முன்வைத்தது. தற்போது எல்லீஸூக்கு முந்தைய மெக்கன்சியை அடையாளப்படுத்தும் வாய்ப்பிருப்பதை அறியமுடிகிறது. காரணம் தென்னிந்திய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்தமைவின் அடிப்படையில் மிக விரிவான பல தளங்களிலான ஆவணங்களைச் சேகரித்த மெக்கன்சிக்கு திராவிடச் சிந்தனைக்கான கருத்தாக்கம் தோன்றியதில் வியப்பேதும் இருக்க முடியாது. எனினும், அவருடைய பணியிட மாற்றம் மற்றும் எதிர்பாராத மரணம் ஆகியவை காரணமாக அவர் நினைத்தது போல அவரின் ஆவணங் களை அடிப்படையாகக் கொண்ட தென்னிந்திய வரலாற்றை அவர் உருவாக்கவில்லை.

40 வயது முடியும் வரை எதையும் வெளியிடு வதில்லை என்று கூறிய நிலையில் எதிர்பாராமல் 41 வயதில் எல்லீஸ் மரணமடைந்தார். அதைப் போலவே சேகரித்த ஆவணங்களை பயன்படுத்தாமல் மெக்கன்சி மரணமடைந்திருக்கிறார். சென்னை கீழைத்தேயவியல் பள்ளி உருவாக்கத்திற்கு மையமாய் விளங்கிய இருவரும் தென்னிந்தியா குறித்த ஒற்றைச் சிந்தனையில் பயணித் திருக்கிறார்கள். திராவிடச் சான்று கருத்துருவாக்கத்தில் இருவருக் குமான பங்கு குறித்து இணைத்தாற் போல ஆராய வேண்டியதன் தேவை இருப்பதை அறிய முடிகிறது. இவ்விரு ஆளுமைகள் குறித்த காலனிய ஆவணங்கள் முழுமையாய் வெளிப்படும்போது திராவிட கருத்தாக்கம் தொடர்பான புதிய தளமும் ஆய்வும் கிளர்ந்தெழும் சூழல் உருவாகும்.

காவள்ளி சகோதரர்கள்: மெக்கன்சி தொகுப்பின் மையம்

ஐரோப்பிய அறிஞர்களை முன்னிறுத்தி இம்மண்ணில் உருவான புலமைத்துவக் கருத்தாக்கங்களை அறிகிற வேளையில் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து செயல்பட்ட இந்திய அறிவாளர்களின் மீது கவனம் செலுத்துவது மிகவும் இன்றியமையாதது. காலின் மெக்கன்சியை முன்னிலைப்படுத்தும் இவ்வேளையில் அவரின் ஆவணத் தொகுப்பு உருவாக காரணமாய் அமைந்த இந்திய உதவியாளர்களின் செயல்பாடுகள் குறித்து அறிவது அவசியமாகிறது. மெக்கன்சியின் மிக முக்கியமான உதவியாளர்களாக விளங்கிய வர்கள் காவள்ளி வெங்கட்ட போரியா மற்றும் காவள்ளி வெங்கட்ட லட்சுமய்யா ஆகிய இருவர். இவர்கள்தான் தென்னிந்திய பரப்பாய்வு பணியின் தொடக்காலம் முதலே அவருடன் நெருக்கமாக இருந்து பணியாற்றி இருக்கிறார்கள். இவர்களுள் முதன்மை மொழிபெயர்ப் பாளராக இருந்த போரியா கி.பி. 1803இல் இறந்துவிட, அவரின் இடத்திற்கு அவருடைய இளயை சகோதரரான லட்சுமய்யா பணியமர்கிறார்.

மெக்கன்சியின் ஆய்வுப் பயணத்தை திட்டமிட்டு உள்ளூர்வாசிகளைத் திரட்டி குழுவின் ஆய்வுப் பணியை போரியா ஒருங்கிணைத் ததுடன், மெக்கன்சியின் வரலாற்று ஆய்வுக்கான சட்டகத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. நியோகி பிராமணர்களான காவள்ளி சகோதர்கள் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் எல்லூரைச் சேர்ந்தவர்கள். மெக்கன்சியிடம் ஐந்து காவள்ளி சகோதரர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களுள் போரியா, லட்சுமய்யா மற்றும் இராமசாமி ஆகியோர் மிக முக்கியமானவர்களாகத் திகழ்ந்திருக் கிறார்கள். நரசிம்மலு மற்றும் சீத்தையா ஆகிய இருவர் லட்சுமய்யாவின் குறிப்புப்படி அவருக்கு உதவியாளர் களாகப் பணியாற்றி இருக்கிறார்கள்.

ஐந்து சகோதரர்களுள் மூத்தவரான போரியா, மெக்கன்சியின் தலைமை மொழிபெயர்ப்பாளராக 1796 முதல் 1803வரை அவர் இறக்கும் வரை பணியாற்றி இருக்கிறார். போரியாவின் எதிர்பாராத மரணம், மெக்கன்சியைப் பெரிதும் பாதித்திருக்கிறது. அவரின் இழப்பு குறித்தும் அவர் மேற்கொண்ட பணிகள் குறித்தும் மெக்கன்சி பின்வருமாறு பதிவு செய்கிறார்: “இன்று நம்மிடையே இல்லாமல் போய் நமக்கு பெரும் துயரத்தைக் கொடுத்திருக்கிற காவள்ளி வெங்கட்ட போரியா என்னும் இளவயது பிராமணர் மிகவும் நுண்ணறிவு கொண்டவராக அறிவாளியாக விளங்கியவர். கூடவே பல்வேறு நற்குணங்களைக் கொண்டவர். பரப்பாய்வில் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது அவர் சந்தித்து பேசிய பல்வேறு பழங்குடிகள், குழுக்கள் ஆகியவற்றின் வேறுபட்ட தன்மைகளை திறந்த மனத்துடன் உள்வாங்கிக் கொண்டவர். ஏழு ஆண்டுகள் உழைத்த பிறகு அவர் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டார். ஆனால், அதற்கு முன்னாள் அவருடைய இளைய சகோதரர்கள், பிற சாதிகளைச் சேர்ந்தவர்கள், பிராமணர்கள், சமணர்கள், மலபார் காரர்கள் என்று பலரை இந்தப் பணியில் ஈடுபடுத்திவிட்டுச் சென்றார். அதனால்தான் பணிகள் தொடர்ந்து மனநிறைவுடன் நடந்தன” (1809, 335) என்ற பதிவின்வழி போரியா எத்தகைய உதவியாளராக மெக்கன்சிக்கு திகழ்ந்திருக்கிறார் என்பது அறிய முடிகிறது.

போரியா நம்பகமான பல மொழிபெயர்ப்புகளைச் செய்ததுடன், தென்னிந்தியா குறித்த மிக விரிவான வரலாறு எழுதுகைக்கு எவ்வாறு ஆராய வேண்டும், எத்தகைய தரவுகளைச் சேரிக்க வேண்டும் என்பது போன்ற திட்ட வரைவினை உருவாக்கியிருக் கிறார். தென்னிந்திய சமயம், சமூக மற்றும் மானிடவியல் அறிவுடன் கூடிய வரலாற்று அறிவை போரியா பெற்றிருக்கிறார். மெக்கன்சியின் குறிப்புகளின்வழி அவர் ஒரு மானிடவியலாளராக அறியப்படு கிறார். குறிப்பாக, போரியா மெக்கன்சிக்காக மைசூர் மற்றும் முட்கரி பகுதிகளில் சமணர்களை மையமிட்ட மிக விரிவான நேர்காணல் களைச் செய்தது இதற்கு உதாரணமாக அமையும். இது சமணர்களின் பண்பாட்டுக் கூறுகளை விளக்கும் வகையில் Account of the Jains என்ற தலைப்பின்கீழ் 1809ஆம் ஆண்டின் Asiatic Researchesஇதழில் வெளிவந்திருக்கிறது. தென்னிந்திய சமணர்கள், பழங்குடிகள் குறித்த ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது (2012, 100). இவற்றுக்கு அடிப்படை யாக போரியாவின் கண்டுபிடிப்பு இன்றியமையாததாக இருந்திருக்கிறது.

1802இல் போரியா, மெக்கன்சியிடம் வழங்கிய மிக முக்கிய ஆவணம், தென்னிந்திய வரலாற்றிற்கான விரிவான திட்ட வரை வினை வெளிப்படுத்துவதாய் அமைகிறது. இத்திட்டம் விரிவான அளவில் பண்டையக் காலம் முதல் சமகாலம் வரைக்குமான வரலாற்றினை உள்ளடக்கியதாய் அமைந்திருக்கிறது. தென்னிந்திய பகுதியின் சமயம், பழக்கவழக்கங்கள், கட்டடக்கலை, இலக்கியம், சமூகம்,அரசியல் மற்றும் வரலாறு உள்ளிட்ட கூறுகளை வெளிக் கொணரும் தன்மையில் பின்வருமாறு அத்திட்ட வரைவு அமைந்திருக்கிறது:

 • கடவுள் மற்றும் தேவதைகள் குறித்து அறிதல்
 • உலக உற்பத்தி மற்றும் அதன் தன்மைகள் குறித்து அறிதல்
 • எவற்றையும் காலவரிசைப்படி அறிதல்
 • பண்டையகால அரசர்களின் வரலாற்றை அறிதல்
 • தற்காலம் அல்லது கலியுகத்தைப் பற்றி அறிதல்
 •  தற்கால விதிமுறைகள், சட்டங்கள் மற்றும் வழக்கங்கள் குறித்து அறிதல்
 • 56 தேசங்களின் விரிவு, பகுப்பு, எல்லை குறித்து அறிதல்
 • கலியுகத்தின் தொடக்கத்திலிருந்து நாடுமற்றும் அரசர்களின் வரலாற்றை அறிதல்
 • தென்னிந்தியப் பகுதியின் அரசாட்சியை அறிதல்
 • தென்னிந்தியப் பகுதியின் சமயங்களை அறிதல்
 • தென்னிந்திய மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் விநோத நடவடிக்கைகளை அறிந்து இந்தியாவின் பிற பகுதிகளோடு அவற்றை ஒப்பிடுதல்
 • தென்னிந்திய நகரங்கள், கோட்டைகள், ஆறுகள், கோவில்கள், தாவரங்கள், விலங்குகள், உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றையும் அறிதல்.
 • பண்டைய மற்றும் சமகாலத்தின் சமூக விதிமுறைகள், இராணுவ விதிமுறைகள் குறித்து அறிதல்
 • தென்னிந்தியப் பகுதியின் எல்லைகளுடன் அதன் கோட்டைகள், துறைமுகங்கள், நகரங்கள் உள்ளிட்ட பலவற்றினைக் கண்டறிதல்
 • தென்னிந்தியாவின் இயற்கை வளங்கள், உற்பத்தி பொருட்கள், கனிமங்கள் உள்ளிட்டவற்றை அறிதல்
 • தென்னிந்தியாவில் பயிலப்படும் எழுத்து வகைகள், கல்வெட்டுகள், புத்தகங்கள், மொழிகள் பற்றி அறிதல்
 • மிகவும் குறிப்பிடத்தகுந்த புலவர்கள், நூலாசிரியர்கள் குறித்து அறிதல்
 • பண்டைய கால கட்டடங்கள், தற்கால கட்டடங்கள், கோவில்கள், நினைவுச் சின்னங்களை அடையாளம் காணுதல்
 • தாழ்ந்த நிலையிலுள்ள பலவகைப்பட்ட பழங்குடிகளின் பழக்கவழக்கங்கள், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அறிதல்
 • சமண சமயத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழச்சியைக் கண்டறிதல்
 • பண்டைய காலம் முதல் இன்று வரையிலான தென்னிந்திய அரசர்களின் வரலாறு குறிப்பாக வாராங்கல் அரசர்கள், மதுரை அரசர்கள், கல்யாண்கள் (மகாராஷ்டிரா), செஞ்சி, தஞ்சை பகுதிகளை ஆண்ட மராட்டியர்கள் உள்ளிட்ட பலரையும் கண்டறிதல்
 • மைசூர், பெத்னூர், திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகளின் வரலாற்றை அறிதல்
 • முகம்மதிய படையெடுப்பின் வரலாறு, தென்னிந்திய மற்றும் தக்காணப் பகுதியில் அவர்களின் அரசு உருவாக்கம் போன்றவற்றை பாமினி சுல்தான்கள் காலத்திலிருந்து தற்போதைய நிஜாம் காலம் வரைக்குமாறு வரலாற்றை அறிதல்
 • ஹைதரின் வாழ்க்கை, அவரின் வெற்றிகள் குறித்தவற்றை கண்டறிதல்
 • திப்பு சுல்தான் வரலாற்றை முழுமையாக அறிதல்
 • தென்னிந்தியாவில் பிரித்தானிய அரசு உருவாக்கம் பெற்றதையும், தொடர்ச்சியாக அது தன் எல்லைகளை விரிவாக்கம் செய்ததையும் அறிதல்
 • தட்ப வெப்பம், பருவநிலை, மண் வகைகள் உள்ளிட்ட வற்றை அறிதல் 
 • துறைமுகங்கள், வெளிநாட்டு வணிகம், உள்நாட்டு வணிகம், கடல் வழியான ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் குறித்தனவற்றை அறிதல் (2012, 102).

Source : OIOC, Mackenzie Collection, General. 

thirumalai_naicker_620

திருமலை நாயக்கர் ஓவியம், மதுரை, 1780

இத்தன்மையிலான தரவுகளைத் திரட்டுவதன் மூலமாக தென்னிந்தியா குறித்த விரிவான வரலாற்று அறிவினைப் பெற முடியும் என்கிற கருதுகோள் மெக்கன்சி குழுவினருக்கு இருந் திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே ஆவணத் தொகுப்பு பணியும் செய்திருக்கிறார்கள். இதற்கு போரியா சகோதரர்களின் பங்கு முதன்மையாய் விளங்கியிருக்கிறது. அச்சகோதரர்களின் திறனைக் கண்டு அவர்களின் பணியை கிழக்கிந்தியக் கம்பெனி அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சென்னை அரசாங்கத்திற்கு மெக்கன்சி கடிதம் எழுதுகிறார். மெக்கன்சியின் மறைவுக்கு பிறகு அவரின் நெருங்கிய நண்பர் அலெக்ஸாண்டர் ஜான்ஸ்டன் கம்பெனி அதிகாரிகளுக்கு மெக்கன்சியின் வரலாற்று ஆய்வுத் திட்டம் குறித்தும், அப்பணிக்கான இந்திய உதவியாளர்களின் பங்கு குறித்தும் விளக்க முயற்சி செய்திருப்பதைக் காண முடிகிறது (2012, 104).

இவ்வகையில் மெக்கன்சியின் உதவியாளர்கள் தென்னிந்திய வியலுக்கு புரிந்த பணிகளை அடையாளங் காணமுடிகிறது. எனினும், காலனிய ஆவணங்கள் முழுமையாய் வெளிப்படும் தருணத்தில் காலனிய ஆட்சிக்காலத்தில் இயங்கிய இந்திய அறிவாளர்கள் குறித்த புரிதலை விரிவாகப் பெறமுடியும். இந்தியா வில் பணிபுரிந்த ஒவ்வொரு ஐரோப்பிய அறிஞர்களுக்கும் உறுதுணையாய் இந்திய அறிவாளர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் ஆய்வினை விரிவுபடுத்தும்போது ஐரோப்பிய அறிவு மரபை இந்திய அறிவாளர்கள் எத்தகைய வகையில் உள்வாங்கி செயல்பட்டிருக்கிறார்கள், அது இந்திய அறிவு மரபில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த பல்வேறு புரிதல்களைப் பெறமுடியும். 

தொகுப்பாக...

 • சென்னைக் கீழைத்தேயவியல் பள்ளி உருவாக்கம் பெற தென்னிந்திய வரலாறு மற்றும் மொழி குறித்த திட்டங்களை வகுத்து செயல்பட்ட காலின் மெக்கன்சி மற்றும் எல்லீஸ் ஆகிய இருவர் குறித்தும் இணைத்தாற்போல ஆய்வு மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் உள்ளது.
 • மெக்கன்சி, எல்லீஸ் ஆகிய இரண்டு அறிவாளர்களும் தங்களுடைய திட்ட மேம்பாட்டிற்காக அறிவு மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களின் திட்டம் ஆசியக் கழகத்தின் கருத்தாக்கத்தி எதிராக தென்னிந்தியாவை மையப்படுத்திய மாற்றுக் கருத்தாக்கத்தை முன்வைத்தது .
 • தென்னிந்திய மொழிகள் குறித்த மெக்கன்சியின் சிந்தனை எல்லீஸூக்கு முந்தைய வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இதுவே எல்லீஸின் திராவிடச் சான்றாகவும், கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணமாகவும் வளர்ந்திருக் கிறது.
 • தென்னிந்திய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கத்தில் மெக்கன்சி குழுவினர் எத்தகைய ஆவணங் களைத் தொகுத்திருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்குள் இயங்கிய தென்னிந்தியா குறித்த கருதுகோளின் தன்மை குறித்தும் அறிய முடிகிறது.
 • மெக்கன்சி போன்ற ஐரோப்பிய அறிஞர்களுக்கு இந்திய உதவியாளர்கள் எத்தகைய வகையில் பணி யாற்றியிருக்கிறார்கள் என்பதையும், அவர்களின் பணிகளே ஐரோப்பிய அறிஞர்களை முன் னிறுத்தி அடையாளப்படுத்த உறுதுணையாய் அமைந்திருக்கிறது என்ற கருத்துநிலையையும் பெறமுடிகிறது. 

பயன்பட்ட நூல்கள்

 • Trautmann, Thomas R. 2009, The Madras School of Orientalism, Oxford University Press, New Delhi
 •  Trautmann, Thomas R. 2006, Languages and Nations: The Dravidian Proof in Colonial Madras, Berkely and Los Angels: University of California Press
 •  Babington, B.J., 1869, An Account of the Sculptures and inscriptions at Mahabalipur in Descripture and Historial Papers Relating to the Seven Pagodas on the Coromandal Coast. M.W.Carr (editon), Madras Govrnment Press
 •  Wilks, Mark, 1810-17, Historical Sketches of South India, 3 Vols., London, Longman, Hurst, Rees and Brown.
 •  Howes, Jeniffer, 2010, Illustrating India, The Early Colonial Investigations of Calin Mackenzie (1784-1821), Oxford University Press, New Delhi.
 •  Mantena, Rama Sundari, 2012, The Origins of Modern Historiography in India, Antiquarianism and Philology, 1780-1880, Palgrave, Macmillan, United States.
 •  The Journal of the Royal Asiatic Society, Vol.I, London, 1834

 Asiatic Researches, Vol.9, London, 1809.

Pin It