தொடர்புடைய படைப்புகள்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் ஓரளவு பெரிய கிராமம். இந்த கிராமத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்கள் வாழும் பகுதியின் மத்தியில் பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம், அடுத்து 500 மீட்டர் தொலைவில் இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் மக்கள் வாழும் பகுதி அண்ணா நகர் என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. கெம்பனூருக்கு 21, 21b இரண்டு பேருந்துகள்தான். ஆனால் தற்போது 64D,1C, பேருந்துகள் செல்கின்றன, இடைப்பட்ட காலத்தில் 94 பேருந்து சென்றது. கொரானோ காலத்துக்குப் பிறகு செல்வது இல்லை. பொதுவாக மேலோட்டமாக பார்க்கும் போது அண்ணா நகருக்கு 21B காலை 8:30க்கு ஒரு முறையும் 1C ஒரு முறையும் 64D மூன்று முறையும் தானே செல்கிறது பிறகு என்ன பிரச்சனை என்று நினைக்கத் தோன்றும்.

ஆனால் உண்மை நிலை 21 காலை தொடங்கி இரவு வரை 7 முறையும்,21B நான்கு முறையில் மூன்று முறை கெம்பனூரோடு திரும்பிவிடும். உள்ளூர் மக்கள் இதற்காக அவ்வப்போது குரல் கொடுக்கும் போது சமாதானப்படுத்தும் விதமாக மாற்றுப் பேருந்துகளை அனுப்பி உண்மை பிரச்சினையை மூடிமறைத்துவிடுவர் இதற்கு அங்குள்ள திமுக, அதிமுக, பாஜக மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஜாதிய தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் ஒரே நேர்கோட்டில் உறுதியாக உள்ளனர்.

பிரச்சனை நடக்கும் போதெல்லாம் அந்தப் பகுதிக்கு சென்று விசாரிக்கும் ஆர்டிஓ மற்றும் அரசு அதிகாரிகள் உண்மையான ஜாதிய தீண்டாமை பிரச்சனைகள் தெரிந்தும் அதற்கு என்ன தீர்வு என்பது தெரிந்தும் அதற்கு அக்கறை காட்டாமல் இருப்பதுதான் மிக பெரிய வேதனை. திராவிடர் விடுதலைக் கழகம் "வைக்கம் போர் முடியவில்லை" என்ற தலைப்பில் ஜாதிய தீண்டாமை கொடுமைகளை கள ஆய்வு செய்யச் சென்றபோது இந்த ஊரில் அரசு பேருந்து பின்பற்றும் ஜாதிய தீண்டாமை கொடுமையை கெம்பனூரில் உள்ள பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடம் பேசி அதன் உண்மை நிலையை பட்டியலில் இணைத்துக் கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவாக மாநகரத் தலைவர் நிர்மல் குமார் பெயரில் 25/11/2024 அன்று கொடுக்கப்பட்டது. இதே “வைக்கம்போர் முடியவில்லை” ஜாதி தீண்டாமை கொடுமை பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைத்ததன் மூலம் தலைமை மற்றும் சென்னை தோழர்கள் அன்றைய தமிழ்நாடு மாநில பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் புனித பாண்டியன் அவர்களிடமும் கொடுத்தனர். ஆனால் தீர்வு மட்டும் இன்றுவரை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவின் செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் 26/11/2024 ல் விரிவாக வெளியிட்டது. மீண்டும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தற்போது அந்த ஊரில் அரசு பேருந்தில் இன்றும் ஜாதிய தீண்டாமை பிரச்சினை இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து மீண்டும் 22/8/2025 தேதியில் செய்தியாக வெளியிட்டது. ஏற்கனவே திராவிடர் விடுதலைக் கழகம் இந்த புகார் மனு கொடுத்ததையும் கள ஆய்வு செய்ததையும் செய்தியில் இணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 23/8/2025 தேதியில் கோவை போக்குவரத்து பொது மேலாளரிடம் மாநகர செயலாளர் வெங்கட் அவர்கள் கெம்பனூர் அரசு பேருந்து பின்பற்றும் ஜாதிய கொடுமையை குறிப்பிட்டு புகார் கடிதம் கொடுத்தார். ஆதிதிராவிடர் நல ஆணையம் இந்த பிரச்சினை குறித்து கேள்வி கேட்டு 24/9/2025 குள் விளக்கம் அளிக்க கோரி கடிதம் அனுப்பியுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் அரசு பேருந்து பின்பற்றும் இந்த ஜாதித் தீண்டாமை கொடுமையை ஒழிப்பதில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

செய்தி - நிர்மல்குமார், திவிக

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக; கடலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

“மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் ஜாதி ஆணவப் படுகொலை தொடர்ந்து செய்து வரும் ஜாதி வெறியர்களை கண்டித்தும் கடுமையான சிறப்பு சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரியார் சிவா தலைமையில் ஆகஸ்டு-16 அன்று கடலூர் மஞ்சகுப்பம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), தொடக்கவுரையாற்றினார். இள.புகழேந்தி (வழக்குரைஞர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க), திருமூர்த்தி (வழக்குரைஞர் சென்னை உயர்நீதி மன்றம்), லோகு.அய்யப்பன்(தலைவர் புதுச்சேரி திவிக), லூசியா (வழக்குரைஞர் ஆற்றல் மாநில ஒருங்கிணைப்பாளர்), தி.ச திருமார்யன் ( வழக்குரைஞர் விசிக மாநில அமைப்புச் செயலாளர்), எழிலேந்தி (மாவட்ட செயலாளர் தி.க), கார்ல் மார்க்ஸ் (வழக்குரைஞர் பாலா பேரவை), புதுவை பிரகாஷ் (தலைவர் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), ராஜா (ஒருங்கிணைப்பாளர் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), பாலு (மாநில தலைமை குழு உறுப்பினர் மக்கள் அதிகாரம்), பஷிர் அகமது( பிபோல்ட் இயக்கம்), சி.சு சாமிநாதன் (நிறுவனர் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு), சக்திவேல் (அமைப்பாளர் தாயுமானவர் தபெதிக), புதுச்சேரி தீனா( அமைப்பாளர் பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) ஆகியோர் கண்டனவுரையாற்றினார்கள்.

கனிமொழி, பெரியார் பிஞ்சு திராவிட மகிழன் புரட்சிகர பாடல்களைப் பாடினார்கள். கழகத் தோழர்கள் ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்-சென்னை), கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), பழனிவேல் (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்), குணசேகரன், சீதர், சத்தியராஜ், திருஞானம், அறிவழகன் (அறிவியல் மன்றம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.