பேராசிரியர் சக்குபாய் மறைந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது எங்களுடன் திராவிடர் கழகத்தில் பெரியார் இயக்கத்தின் குடும்பமாக இணைந்து பழகியவர்கள் பேராசிரியர் சக்கு பாயும் அவரது இணையர் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களும் ஆவார்கள்.

1979 ஆம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு விழாவில் முதன்முறையாக பெரியார் மேடையில் பேசினார் பேராசிரியர் சக்குபாய். அப்போதுதான் அந்த இணையர்களை நான் சந்தித்தேன். தொடர்ந்து திராவிடர் கழக மேடைகளில் கருத்தரங்குகளில் இருவரும் பேசினார்கள். இந்த நட்பு குடும்ப உறவுகளாக மலர்ந்தது. 

திருச்சி பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராக பேராசிரியர் சக்குபாய் செயல்பட்டார். அப்போது வைக்கம் நூற்றாண்டு விழாவை ஒட்டி கருத்தரங்கம் நடத்தி அந்த உரைகளை பல்கலைக்கழகம் சார்பில் நூலாக வெளியிட்டார்.

ஈழப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பெரியார் இயக்கத் தோழர்கள் மிகத் தீவிரமாக களம் இறங்கி செயல்பட்ட காலத்தில் இந்த இணையர்களின் பங்கு மகத்தானது. பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இந்த இணையர்களின் மகன் பண்ணன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு விடுதலைப் புலி தோழர்களுடன் கடல் வழியாக ஈழம் சென்று போராட்டக்களத்தில் பங்கேற்று உயிர்த்தியாகம் செய்தார்.

அப்போது பேராசிரியர் நெடுஞ்செழியன் என்னிடம் இவ்வாறு கூறினார், "நாட்டில் விதைத்தேன்': வீட்டில் முளைத்து விட்டது" இந்த வரிகள் இப்போதும் நெஞ்சில் பதிந்து நிற்கிறது. திருச்சி பெரியார் மாளிகையில் பாதுகாக்கப்பட்டிருந்த பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிக்கை தொகுப்புகள் அச்சாக வெளிவர வேண்டும் என்று எல்லோரும் விரும்பினோம்.

ஒரு கோடை விடுமுறையில் ஒரு மாதத்திற்கு மேல் திருச்சி பெரியார் மாளிகையில் தங்கி ‘குடிஅரசு’ கட்டுரைகளை கையால் பிரதி எடுக்கும் முயற்சியில் சுமார் 15 தோழர்கள் ஈடுபட்டனர். அந்த பெரு முயற்சிக்கு பெருந்துணையாக ஆர்வத்தோடு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர் பெரியார் மாளிகை நிர்வாகியாகவும் தந்தை பெரியாரின் செயலாளராகவும் இருந்த எங்கள் அன்புக்குரிய மறைந்த புலவர் இமயவரம்பன் ஆவார். அந்தக் குழுவில் இணையர்கள் பங்கேற்றனர்.

ஒரு பயிற்சி வகுப்பில் தனித் தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்தி பேசினார் என்ற குற்றத்தை சுமத்தி கைது செய்யப்பட்டு 5 ஆண்டு காலம் பெங்களூரு சிறையில் இருந்தார் நெடுஞ்செழியன். அவரை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வருவதற்கு பெருமுயற்சி எடுத்தவர்களில் ஒருவர் மறைந்த தஞ்சை ரத்தினகிரி அவர்கள்.

தமிழ்நாட்டில் ஈழப் போராட்ட காலத்தில் அரசியல் பொறுப்பு ஏற்று செயல்பட்ட பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன் ஈழத்தில் 1990-இல் அமைதி உடன்பாடு ஒன்று ஏற்பட்டபோது ஈழம் புறப்பட்டுச் சென்றார். இளங்குமரன் 9 ஆண்டுகாலம் எங்களது இல்லத்தில்தான் தங்கி இருந்தார். அவரை வழி அனுப்புவதற்கு நானும் எனது இணையர் மேடம் சரஸ்வதி அவர்களும் பேபி சுப்ரமணியம் அவர்களோடு திருச்சி சென்று கலைஞர் நகரில் உள்ள சக்குபாய் அவர்கள் இல்லத்தில் நான்கு நாட்கள் தங்கி, படகில் வழி அனுப்பி வைத்த நினைவுகள் நிழலாடுகின்றன.

தமிழ்நாடு அரசின் உயரிய விருதைப் பெற்ற பேராசிரியர் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் மறைவுற்றார். தொடர்ந்து சக்குபாய் அவர்களும் விடைபெற்றுக் கொண்டு விட்டார். கொள்கைக்காக அந்த இணையர்கள் வாழ்ந்தார்கள் என்பது அவர்களின் பெருமைக்குரிய அடையாளம்.

அவரது மகள்கள் நகைமுத்து, குறிஞ்சிக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.