தொடர்புடைய படைப்புகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது.

சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

சனவரி 26: பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுக்கு சென்னை ராயப்பேட்டையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பேராசிரியர் ஜெயரஞ்சன், மூத்த வழக்குரைஞர் துரைசாமி, வாலாசா வல்லவன், எழிலன் எம்.எல்.ஏ, மரு. அமலோற்பவநாதன், மனநல மருத்துவர் சிவபாலன், மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன், பேராசிரியர் கல்யாணி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் பொதுச்செயலாளர் உடனான தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

சனவரி 30: கோவை சிவானந்தா குடியிருப்புப் பகுதியில் கழகத்தின் சார்பில் ‘தமிழீழமும் திராவிடர் இயக்கமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

பிப்ரவரி 1: பல்கலைக்கழக மானியக்குழு விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்து, பல்கலைக்கழகங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சித்ததைக் கண்டித்து கழகத்தின் சார்பில் சேலம், சென்னை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, தேனி, மயிலாடுதுறை, வேலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், மதுரை, திருச்சி காஞ்சிபுரம் என தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பிப்ரவரி 02: பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவுநாளையொட்டி 26-வது நிமிர்வோம் வாசகர் வட்ட கூட்டம் ராயப்பேட்டை விஜய் மகாலில் நடைபெற்றது. ஊடகவியலாளர்கள் கரிகாலன், மில்ட்டன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பிப்ரவரி 22: தூத்துக்குடியில் ‘திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார்.

பிப்ரவரி 22: கோபியில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் தலைமையில் ‘பெரியார் என்னும் பெருநெருப்பு’ கருத்தரங்கம் நடைபெற்றது. ஊடகவியலாளர்கள் கரிகாலன், இந்திரகுமார் தேரடி, மில்டன், யூ2புரூடஸ் மைனர், அதர்மம் மனோஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

பிப்ரவரி 23: புதுக்கோட்டையில் ‘ஏன் வேண்டும் பெரியார்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஊடகவியலாளர் கரிகாலன், அதர்மம் மனோஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

பிப்ரவரி 26: இந்தித் திணிப்பு, வெள்ள நிவாரண நிதி மறுப்பு என தமிழர் விரோதப் போக்குடன் செயல்படும் பா.ஜ.க. அரசை கண்டிக்கும் விதமாக, கோவை ஈஷா மையத்திற்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

மார்ச் 15 முதல் சென்னை, விழுப்புரம், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து ‘பெரியார் இன்னும் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?’ என்ற தலைப்பில் பரப்புரைப் பயணம் தொடங்கி, மார்ச் 22 அன்று மயிலாடுதுறையில் மாநாட்டுடன் முடிவுற்றது. தமிழ்நாடெங்கும் 500 இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் மக்கள் பேராதரவோடு நடைபெற்றன.

ஏப்ரல் 8 - 14: ‘சூத்திர, பஞ்சமர்களிடமிருந்து பிராமணர்கள் விலகி தங்களது மேலாண்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்று இன ஒதுக்கல் கருத்தைப் பேசிய சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு’ என்ற மயிலாடுதுறை மாநாட்டுத் தீர்மான விளக்க பரப்புரைக் கூட்டங்கள் சென்னை, திருப்பூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் நடைபெற்றன.

ஏப்ரல் 20: சேலம் மாவட்டம் மேச்சேரியில் இன ஒதுக்கல் கருத்தைப் பேசிய சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு’ என்ற மயிலாடுதுறை மாநாட்டுத் தீர்மான விளக்க பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி கருத்துரையாற்றினார்.

ஏப்ரல் 21: மயிலாடுதுறை மாநாட்டு தீர்மானத்தின்படி, இன ஒதுக்கல் கருத்தைப் பேசிய சங்கராச்சாரியை கண்டித்து தமிழ்நாடெங்கும் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றார். கோவை, நாமக்கல், ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, திருப்பூர், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏப்ரல் 25, 26: நியமனப் பொறுப்பில் வரும் ஆளுநர்களை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் என துணைவேந்தர்கள் நியமன வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பின்னரும் உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டியதை அடுத்து, ஆர்.என்.ரவியை கண்டித்து சேலம், மதுரை, சென்னை, கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏப்ரல் 26: இன ஒதுக்கல் கருத்தைப் பேசிய சங்கராச்சாரியைக் கண்டித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏப்ரல் 28: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில், ‘இன ஒதுக்கல் கருத்தைப் பேசிய சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு’ என்ற மயிலாடுதுறை மாநாட்டுத் தீர்மான விளக்க பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் சிறப்புரையாற்றினார். ‘இன ஒதுக்கல் கருத்தைப் பேசிய சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு’ என்ற மயிலாடுதுறை மாநாட்டுத் தீர்மான விளக்கம் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார்.

ஏப்ரல் 30: தோழர் பத்ரி நாராயணன் நினைவுநாளையொட்டி ‘கற்போம் களம் காண்போம்’ என்ற தலைப்பில் சென்னை மாவட்ட இளைஞர் அணி சார்பில் முழு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. கழகத் தோழர்கள் பிரகாசு, ஜெயப்பிரகாசு, மகிழவன், திமுக சூர்யா கிருஷ்ணமூர்த்தி, ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர்.

மே 03: தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் ‘திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார்.

மே 03: ‘ஏன் வேண்டும் திராவிட மாடல் ஆட்சி’ என்ற தலைப்பில் கோவை சின்னியம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வடகாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் பொங்கல் விழா நடத்தியதற்காக ஆதிக்க ஜாதியினர் கொடூரமான தாக்குதல் நடத்தினர். திவிக தோழர்கள் வடகாட்டில் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டு, நீதி கிடைக்க துணைநிற்போம் என உறுதி அளித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சீர் வாசகர் வட்டம் சார்பாக 2025-ஆம் ஆண்டுக்கான சமூகப் போராளி விருது அறிவிக்கப்பட்டது.

மே 9: திருவாரூர் தங்கராசு நூற்றாண்டையொட்டி நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 27-வது கூட்டம் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார்.

மே 16: மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசிய மதுரை ஆதீனத்தை கைது செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் மற்றும் தோழமை இயக்கத்தினர் பலர் கண்டன உரையாற்றினர்.

மே 17: தமிழ்நாடு அறிவியல் மன்றம் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் இணைந்து சென்னை ராயப்பேட்டையில் குழந்தைகளுக்கான ஒரு நாள் பழகு முகாம் நடத்தியது. ஆசிரியர் சிவகாமி, முத்துராணி, விரட்டு கலைக்குழு ஆனந்த் பயிற்சி வழங்கினர். சிற்பி ராஜனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

மே 18: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளில் நாகர்கோவிலில் திரை நட்சத்திர இசை விழா நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கழகத் தலைவர் வேண்டுகோளை அடுத்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

மே 24: சேலம் மாவட்டம் கொளத்தூரில் பெண்கள் தலைமையேற்று நடத்திய நாத்திகர் விழா நடைபெற்றது. இவ்விழாவின் மூடநம்பிக்கை எதிர்ப்பு ஊர்வலக் காட்சிகள் மற்றும் மாநாட்டு உரைகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி விவாதத்தை ஏற்படுத்தியது.

சூன் 01: ‘இடஒதுக்கீடு - அ முதல் ஃ வரை’ என்ற தலைப்பில் கழகத் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் புதிய தோழர்களுக்கான அறிமுக வகுப்பு நடைபெற்றது.

சூன் 01: மடத்துக்குளம் மோகன் 4-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மடத்துக்குளம் நான்கு சாலை சந்திப்பில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. குமரலிங்கம், கொழுமம், காரத்தொழுவு, கணியூர் ஆகிய இடங்களில் இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரியை கண்டித்து பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. 20 ஆண்டுகளாக சரித்திர குற்றவாளி பட்டியலில் வைக்கப்பட்டிருந்த கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் சட்டப் போராட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டார்.

சூன் 10: ஆனைமலை முக்கோணம் பகுதியில் குடிஅரசு மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் சிவகாமி, இரா.உமாபதி, காசு.நாகராசன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

சூன் 12: மேட்டூர் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தாய்த்தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னை செங்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு ‘அறிவரண் தளபதி பொட்டு அம்மான்’ நூலை வெளியிட்டார். இனமுரசு சத்யராஜ் நூலைப் பெற்றுக்கொண்டார்.

சூன் 21: பாலஸ்தீன ஆதரவுக்குழு சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முதல் ரவுண்டானா வரை பேரணி நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

கோவை சிவானந்தா குடியிருப்புப் பகுதியில் கழகத்தின் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.

சூன் 25: வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தபசி குமரன் தலைமையில் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சூலை 04: புரட்சிப்பெரியார் முழக்கம் நிதிநிலை மற்றும் வளர்ச்சி குறித்து இணைய வழியில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

சூலை 05: நங்கநல்லூரில் குடிஅரசு மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆகியோர் உரையாற்றினர்.

சூலை 05: ‘இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல்’ என்ற தலைப்பில் சேலம் பொன்னம்மாபேட்டையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

சூலை 07: கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி, ஒன்றிய அரசைக் கண்டித்து மதுரை திருவள்ளுவர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் மதக் கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார் அமைப்புகளைக் கட்டுப்படுத்தக் கோரி சென்னை மற்றும் ஈரோடு தெற்கில் காவல்துறையிடம் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 28-வது கூட்டம் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். எட்வின் பிரபாகரன், பிரகாசு ஆகியோர் நூல் திறனாய்வு செய்தனர்.

சூலை 12: ‘இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல்’ என்ற தலைப்பில் சேலம் அம்மாபேட்டையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

சூலை 26: தாய்த்தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் உருவான காட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். தோழர் தியாகு பெற்றுக் கொண்டார்.

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 29-வது கூட்டம் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் தலைமையில் வேலு பிரபாகரன் நினைவேந்தல் கூட்டமாக நடைபெற்றது. இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் வேலு பிரபாகரனின் கொள்கைசார் பணிகளை பகிர்ந்துகொண்டனர். நெல்லையில் பொறியியல் பட்டதாரி கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து கழகத் தலைவர் அறிக்கை, கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து கோவை உக்கடத்தில் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்; மனிதம் நம் அடையாளம் - ஜாதி நமக்கு அவமானம்’ என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

சூலை 27: சாலிகிராமத்தில் நடைபெற்ற வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், இனமுரசு சத்யராஜ், கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

ஆகஸ்ட் 01: விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் மதக் கலவரத்தை தூண்டும் சங் பரிவார் அமைப்புகளைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் காவல்துறையிடம் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 03: சேலம் மாவட்டம் மேச்சேரியில் இளைஞர் அணி சார்பில் பெரியார் என்னும் பெரு நெருப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மில்டன், யூ2புரூடஸ் மைனர், இந்திரகுமார் தேரடி கருத்துரை வழங்கினர். கழகத் தலைவர் நிறைவுரையாற்றினார்.

ஆகஸ்ட் 06: ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும், கவின் படுகொலைக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தரக்கோரியும் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 08: குடியாத்தத்தில் குடிஅரசு மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. ஜாதி மறுப்பு மற்றும் விதவை மறுமணம் செய்துகொண்ட இணையர்கள் இந்நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர். கழகத்தலைவர் சிறப்புரையாற்றினார்.

ஆகஸ்ட் 09: சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் படத்திறப்பு நிகழ்ச்சி தேவநேயப் பாவாணார் அரங்கத்தில் நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படத்தைத் திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி 5 ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு நினைவேந்தல் உரையாற்றினார்.

ஆகஸ்ட் 11: சென்னை ரிப்பன் மாளிகை முன்பு நடைபெற்ற தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு தபசி குமரன் தலைமையில் கழகத் தோழர்கள் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 12-14: சென்னையில் ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!’ என்ற தலைப்பில் 3 நாட்கள் தொடர் பிரச்சாரம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 12-14: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!’ என்ற தலைப்பில் 2 நாட்கள் தொடர் பிரச்சாரம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 16: ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 17: சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள கே.வி.ஆர். திருமண மண்டபத்தில் ‘பெரியார் என்னும் பெருநெருப்பு’ கருத்தரங்கம் மாநாடு போல நடைபெற்றது. வழக்குரைஞர் திருமூர்த்தி, மில்ட்டன், மைனர், இந்திரகுமார் தேரடி, கரிகாலன், ‘லவுட் ஸ்பீக்கர்’ ஸ்ரீநிதி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

ஆகஸ்ட் 24: எஸ்.வி.ராஜதுரையின் Periyar: Caste, Nation and Socialism நூலின் அறிமுக விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அன்பகத்தில் நடைபெற்றது. ஏ.எஸ்.பன்னீர்செல்வன், டெல்லியைச் சேர்ந்த வித்யா பூஷன் ராவத், முனைவர் கார்த்திக் ராம் மனோகர், ஆந்திர திராவிடப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம் ஆகியோர் விரிவாக உரை நிகழ்த்தினர்.

ஆகஸ்ட் 23- 25: சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!’ என்ற தலைப்பில் 3 நாட்கள் தொடர் பிரச்சாரம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 27: திருப்பூர் மாஸ்கோ நகரில் இந்து முன்னணி சார்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை கழகத் தோழர்கள் முயற்சியால் அகற்றப்பட்டது.

செப்டம்பர் 01- 10: சென்னை மாவட்ட இளைஞர் அணி சார்பில் ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!’ என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் பிரச்சாரம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சி, நையாண்டி நிகழ்ச்சி, 20க்கும் மேற்பட்ட பேச்சாளர்களின் உரை வீச்சு என பெரிதும் கவனம் ஈர்த்தது இப்பரப்புரை.

செப்டம்பர் 2- 3: ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ என்ற தலைப்பில் மயிலாடுதுறையில் 2 நாட்கள் தொடர் பிரச்சாரம் நடைபெற்றது.

செப்டம்பர் 07: ஈரோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தலைமைக்குழு கூடியது. செப்டம்பர் 17 முதல் டிசம்பர் 24 வரை தமிழ்நாடெங்கும் ஜாதி எதிர்ப்பு பரப்புரையை தீவிரமாக மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் 07: ஈரோடு மல்லிகை அரங்கில் சீர் வாசகர் விருது விழா நடைபெற்றது. குடிஅரசு தொகுப்புப் பணிக்காக கழகத் தலைவருக்கு சீர் விருதுடன், ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. கழகத் தலைவர் குறித்து மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு, கழகத் தோழர்களை உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்த்தியது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் ராஜஸ்தானி உணவகம் ஒன்று தமிழில் பெயர்ப்பலகை வைக்காததைக் கண்டித்து கழகத் தோழர்கள் இருமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசின் ஆணையை நாங்களே நிறைவேற்ற நேரிடும் என எச்சரித்ததை அடுத்து, பெயர்ப்பலகையில் தமிழ்ப்பெயரும் சேர்க்கப்பட்டது.

செப்டம்பர் 14: ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சத்யா, மைனர், இந்திரகுமார் தேரடி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

செப்டம்பர் 17: பெரியார் பிறந்தநாளையொட்டி ராயப்பேட்டையில் ‘மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நடிகர் சத்யராஜ், வழக்குரைஞர் ப.பா.மோகன், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். 20-க்கும் மேற்பட்ட ஜாதி மறுப்பு இணையர்களுக்கு நடிகர் சத்யராஜ் நினைவுப்பரிசு வழங்கினார்.

செப்டம்பர் 19: காசா மீதான போரை நிறுத்தக்கோரி இஸ்ரேலை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை புதுப்பேட்டையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கழகத்தோழர்கள் பங்கேற்றனர்.

செப்டம்பர் 23: தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் பெரியாரின் 147-வது பிறந்தநாளையொட்டி, ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் நிறைவுரையாற்றினார்.

செப்டம்பர் 28: கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய இளைஞர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. பால்.பிரபாகரன், ஆசிரியர் சிவகாமி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். சிற்பி ராசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.

 * ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ என்ற தலைப்பில் குமாரபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கேப்டன் அண்ணாதுரை, கோபி வேலுச்சாமி ஆகியோர் உரையாற்றினர். சிற்பி ராஜனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது.

அக்டோபர் 04: திருச்சியில் பெரியார் என்னும் பெருநெருப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திரகுமார் தேரடி, மைனர், ராஜீவ் காந்தி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

அக்டோபர் 05: ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ என்ற தலைப்பில் திருப்பூரில் ஒரே நாளில் 11 கூட்டங்கள் நடைபெற்றன.

அக்டோபர் 10: ஆனைமுத்து நூற்றாண்டு விழா மலர் வெளியீட்டு நிகழ்ச்சி அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் வாலாசா வல்லவன் தலைமையில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் மலர் வெளியிட்டார். ஆ.ராசா, விடுதலை இராசேந்திரன், கு.ராமகிருஷ்ணன், செந்தலை கவுதமன், சுப.வீ ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

அக்டோபர் 11: ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஈரோடு வீரமணி, மைனர், இந்திரகுமார் தேரடி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

அக்டோபர் 15, 16: திருவண்ணாமலையில் ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ என்ற தலைப்பில் 8 இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன.

நவம்பர் 08: திமுகவின் பவள விழாவை அக்கட்சியின் இளைஞர் அணி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத்திருவிழாவாகக் கொண்டாடியது. அதன் ஒரு அங்கமாக நடைபெற்ற முற்போக்கு புத்தகக் காட்சியில் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் பங்குபெற்றது. 9 நாட்கள் நடைபெற்ற இப்புத்தகக் காட்சியில் ரூ.82,000-க்கு கழக நூல்கள் விற்பனையாகின.

நவம்பர் 09: அறிவுத்திருவிழாவின் அங்கமாக நடைபெற்ற “இருவண்ணக் கொடி வயது 75” இருநாள் கருத்தரங்கின் இறுதி அமர்வில், ‘கருஞ்சட்டைக் கழகமும் கருப்பு சிவப்புக் கழகமும்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார்.

 * ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பவானியில் “மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. நாத்திக சோதி, கோபி வேலுச்சாமி, நாமக்கல் சாமிநாதன், இராம.இளங்கோவன் உள்ளிட்டோர் உரையாற்றினர். சூலூரில் ‘மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்’ பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் துரைசாமி, பரிமளராசன், நிர்மல், வெங்கட், திருப்பூர் முத்து ஆகியோர் உரையாற்றினர்.

நவம்பர் 14: ஆஸ்திரேலியா தமிழ் கலை மற்றும் கலாச்சார இயக்கம் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் பேராசிரியர் சரசுவதி ஆகியோருக்கு அடிலெய்டில் பாராட்டு விழா நடைபெற்றது.

நவம்பர் 26: கோவை, திருப்பூர், மேட்டூர், சென்னை ஆகிய பகுதிகளில் சட்ட எரிப்பு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவுகூர்ந்து பலர் உரையாற்றினர்.

நவம்பர் 27: சேலம் கொளத்தூரில் தமிழீழப் போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாவீரர் நாள் உரை நிகழ்த்தினார்.

 * ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் தமிழ்தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நவம்பர் 29: சேலத்தில் ‘, மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்’ பரப்புரைக் கூட்டம் ஒரே நாளில் 4 இடங்களில் நடைபெற்றது.

டிசம்பர் 07: கோவையில் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி ஈரோடு வடக்கு மாவட்டம் சித்தாரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. நாத்திக சோதி, கோபி வேலுச்சாமி, இராம.இளங்கோவன் உரையாற்றினர்.

 * திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைக் கண்டித்து கோபியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 08: கோவையில் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி மயிலாப்பூர் பல்லக்கு மாநகரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. உமாபதி, தேன்மொழி, மைனர், புதுவை தீனா, விசிக சாரநாத் ஆகியோர் உரையாற்றினர்.திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைக் கண்டித்து சென்னை எழும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 09: திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைக் கண்டித்து திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 10: கோவையில் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி மயிலாப்பூரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அன்பு தனசேகர், வழக்குரைஞர் திருமூர்த்தி, உமாபதி, ரவுத்திரா ஆகியோர் உரையாற்றினர்.

டிசம்பர் 11: மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் தீர்ப்பளித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைக் கண்டித்து மேட்டூரில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மைனர், கரிகாலன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

டிசம்பர் 13: கோவையில் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், கணேசபுரம் ஆகிய 4 இடங்களில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. 20-க்கும் மேற்பட்டோர் உரையாற்றினர்.

டிசம்பர் 14: ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் வாராந்திர தெருமுனைக் கூட்டம் அம்மாபேட்டை பகுதியில் நடைபெற்றது. பெரியார், அம்பேத்கர் மற்றும் கழக களப்பணிகள் குறித்த காணொளிகள் திரையிடப்பட்டன. தாரமங்கலத்தில் சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் ‘மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம் ’ பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெருந்திரள் மக்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

டிசம்பர் 15: கோவையில் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி, ‘மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்’ என்ற தலைப்பில் வடசென்னையில் முழு நாள் பரப்புரை நடைபெற்றது.

டிசம்பர் 21: கோவையில் நடந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி, ‘மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்’ என்ற தலைப்பில் ஈரோடு வடக்கு மாவட்டம் குருவரெட்டியூரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. டிசம்பர் 24-இல் பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 24: ராயப்பேட்டையில் களப்பணியில் உயிர்நீத்த கண்ணன் - குமாரின் 20-ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தபசி குமரன், அன்பு தனசேகர், விசிக ரூதர் கார்த்திக், அறிவுமதி ஆகியோர் உரையாற்றினர். ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் பெரியாரின் நினைவுநாளில் இரத்தினசாமி, சண்முகப்பிரியன், செல்வராசு உள்ளிட்ட 13 தோழர்கள் உடல்தானம் பதிவு செய்தனர். கோவை ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி, ‘மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்’ என்ற தலைப்பில் மடத்துக்குளத்தில் 3 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

டிசம்பர் 26: ஏற்காடு மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் பெரியார் பெரியாரை நாம் தமிழர் கட்சி மறைத்ததை கண்டித்து, மீண்டும் பெரியார் பெயரை கழகத் தோழர்கள் எழுதி பதிலடி கொடுத்தனர்.

டிசம்பர் 29: கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாபெரும் ஜாதி ஒழிப்புப் போராட்டம் நடைபெற்றது. ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விடுதலை இராசேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.