கொடுமைகள் முற்றும் தொலையுமா இங்கு?
கொஞ்சம்நீ எண்ணடா தோழா! - இந்த
அடிமைத் தமிழ்நாட்டில் வாழ்கின்ற வரைநம்
அல்லல்கள் தீருமா தோழா!
வாக்குப் பொறுக்கும் திராவிடக் கட்சிகள்
வஞ்சகம் கொஞ்சமோ தோழா! - நாளும்
தூக்கிச் சுமக்கிறார் காங்கிரசுக் கழுதையை
சொரணையே இல்லையே தோழா!
தேசிய இனங்களைச் சிதைப்பவ ரோடா
தேர்தலில் கூட்டணி தோழா! - விலை
பேசியே பெற்ற அன்னையை விற்றும்
பிழைப்பது பிழைப்போ தோழா!
அம்மவோ... எத்தனை உயிர்க்கொலை அங்கே!
அழுகுரல் தொடருதே தோழா! - சே... சே...
பம்மாத்து அரசியல் பண்ணிப் பிழைப்பதா?
பச்சை நரித்தனம் தோழா!
ஏங்கி ஏங்கியே ஈழத்திற் கழுகிறோம்
இங்கென்ன நிலையடா தோழா! - நாளும்
வீங்கிப் பெருக்கும் மார்வாரி குசராத்தி
வேட்டைக்குத் தீர்வென்ன தோழா!
துடிக்கிற சோதரன் கண்ணீர் துடைக்கவும்
சொந்தக்கை வேண்டுமென் தோழா! - முற்றி
வெடிக்கிற தேசிய விடுதலைப் புரட்சிஓர்
விடியலைக் காட்டுமென் தோழா!
விடியல் எப்போது?
- விவரங்கள்
- தமிழேந்தி
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2009
More articles by தமிழேந்தி
- அண்ணலின் அரும்புகழ் வாழ்க! (22 மே 2023)
- தமிழுக்கான இலக்கியம் (15 மே 2020)
- ‘அன்னவர்கள்’ வாழி! வாழி!! (06 ஜூன் 2019)
- தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? (2) (30 மே 2019)
- தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? (30 மே 2019)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.