“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்” (குறள்: 505)  

என்ற திருக்குறளில் வள்ளுவர் ஒருவரின் பெருமைக்கும், ஏனைய சிறுமைக்கும் அவரின் செயல் மட்டுமே முக்கிய காரணம் என்று ‘தெரிந்து தெளிதல்’ என்னும் அதிகாரத்தில் மிக அழகாக கூறிச்செல்கிறார். இதனை முற்றிலும் எற்றுக் கொள்ளும் படியாக அல்லது ஆமோதிக்கும் விதமாக பரெட்டோக் கோர்பாடு விளங்குகிறது. அதாவது ‘ஒரு செயலின் 80 சதவீத வெற்றி என்பது 20 சதவீத செயல்களைக் கொண்டே தீர்மானிக்கப் படுகிறது’ என்பது இக்கோட்பாட்டாளர் பரெட்டோக் அவர்களின் கூற்றாகும். எனவே இக்கோட்பாட்டிற்கு 80/20 விதி என்ற மற்றொரு பெயரும் உண்டு. பரெட்டோக் இச்சிந்தனையை இத்தாலியில் உள்ள நிலவுடைமைச் சமுதாய மக்களின் ஏற்றத்தாழ்வு மூலம் உணர்ந்து கொண்டதாக கூறுகிறார். ஆதாவது இத்தாலியில் உள்ள 80 சதவீத நிலம் 20 சதவீத மக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதைக் கனித்ததின் விளைவு, இன்று வணிகம், பொருளாதாரம் மற்றும் உற்பத்தித்திறன் போன்ற துறைகளில் இக்கோட்பாடு மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பரெட்டோக் கோட்பாட்டின் வரலாறு

               தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் 20 சதவீத காரணிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மீதமுள்ள 80 சதவீத செயல்பாடுகளை மிக எளிதாக செய்து வெற்றிபெற முடியும் என்பதுதான் இக்கோட்பாட்டின் மையக் கருவாகும். இக்கோட்பாடினை இத்தாலியின் பொருளாதார வல்லுநரும், சமூகவியலாளருமான வில்/ப்ரெபோ பரெட்டோ அவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தினார். இவர் கோட்பாட்டின் தொடர் ஆய்வுகளை செல்வபகிர்வு பொருளாதார செயல்பாடுகள் போன்ற துறைகளில் மேற்கொண்டு அதன் வடிவங்களை கண்டறிந்தார். இதன் வெளிப்பாடாக காலப்போக்கில், பொருளாதாரத்தைத் தாண்டி நிஜவாழ்க்கை சூழ்நிலைகளிலும் இக்கோட்பாடு பொருந்துவதை சமூக ஆய்வாளர்களும், வணிக நிறுவன நிர்வாகிகளும் உணர்ந்தனா;. மேலும், பரெட்டோ அவர்கள் இந்த கோட்பாட்டின் படி அதன் விகிதம் எப்போது துல்லியமாக 80:20 ஆகவே இருக்க முடியும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. மாறாக அவை சூழ்நிலைக்கு ஏற்றார் போல விகிதமானது மாறுபடும் தன்மையுடையது என்கிறார். இதன்மூலம் குறைந்த அளவு காரணிகளே பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை இக்கோட்பாடு விளக்குகிறது. இந்த குறைந்தளவு காரணிகளான முன்னுரிமை, நிர்ணயம், முடிவெடுத்தல் மற்றும் வள ஒதுக்கீடு போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் நிர்வாகங்களில் பெரும் செயல்களை செய்து முடிக்க முடியும் என்பது இந்த கோட்பாட்டின்  முக்கிய அம்சமாகும். ஆகவே இக்கோட்பாட்டினை நிதி மேலாண்மையில் பயன்படுத்தப்படும் ஒரு மிகச்சிறந்த உத்தியான லீவரேஜ் உடன் ஒப்பீட்டு கூறமுடிகிறது. நிறுவனங்களின் சிறந்த நிதி மேலாண்மையை மேற்கொள்வதற்கு குறைந்த முதலீடு, கடன் மற்றும் நிலையான செலவுகளான சில லாபத்திற்கான பெரிய நகர்வை ஏற்படுத்துவதுதான் லீவரேஜ் என்று அழைக்கப்படுகிறது. எனவே 80:20 விதியும் அதனை பிரதிபலிப்பதால் லீவரேஜ் முறையை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

பரெட்டோக் கோட்பாட்டின் பயன்கள்

             வுணிக நிறுவனங்களில் 80 சதவீத பிரச்சனைகள் வெறும் 20 சதவீத புகார்களின் மூலம்தான் ஏற்படுகின்றது என்பதால், 20 சதவீத தவறுகளில் நிறுவனங்கள் கவனம் செலுத்தினால் போதும் 80 சதவீத பிரச்சனைகளை தவிர்த்துவிடலாம். அதன்மூலம் வணிகத்தை நிறுவனங்கள் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றிவிட முடியும்.

             பொது பொருளாதார கொள்கைகளில் குறைந்த கொள்கைத் தலையீடுகளைக் கொண்டு பெரிய சமூக பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது.

             கல்வி மற்றும் கற்றல் திறனில் 20 சதவீத மாணவர் மற்றும் ஆசிரியர்களின் சீரிய பங்களிப்பு சமூகத்தின் 80 சதவீத மாற்றங்களுக்கு விதையாக அமைவதை யாராலும் மறுக்க முடியாது.

             உற்பத்தி மற்றும் நேர மேலாண்மையில் பணிகளுக்கான முக்கியத்துவம் மற்றும் நேரபகிர்வு அந்த நிறுவனத்தின் உற்பத்தி திறன் வெகுவாக முன்னேறுவதை நாம் கண்கூடாகப் பார்க்க உதவுகிறது.

பரெட்டோக் கோட்பாட்டின் நன்மைகள்

             அறிவு சார்ந்த முன்னுரிமை தெளிவிற்கு வழிவகை செய்கிறது.

             நேரமும் வளங்களும் சேமிக்கப்படுகிறது.

             அனைத்து மூலகாரணிகளை கவனிக்கச் செய்கிறது.

             20 சதவீத காரணிகள் மீதான முடிவெடுத்தல் என்பது இலகுவாகவும், சரியாகவும் இருப்பதற்கு இக்கோட்பாடு மிகவும் உதவுகிறது.

பரெட்டோக் கோட்பாட்டின் தீமைகள்

             இதில் முக்கிய காரணிகளின் விகிதங்கள் எப்போதும் 80:20 என்ற விகிதத்தில் இருப்பதில்லை. எனவே இக்கோட்பாடு அறிவியல் மற்றும் கணிதமுறைக் கோட்பாட்டுகளுக்கு மாறாகவும் அமைகின்றது. எனவே அதன் முடிவுகள் ஒரே போன்று இருக்க வாய்ப்பில்லை.

             இக்கோட்பாட்டினை மிகையாக அல்லது தவறாகப் பயன்படுத்தினால் நீண்டகால பயன்பாடு அல்லது முக்கியமான அம்சங்கள் புறக்கணிக்கப்படலாம். எனவே இதனை ஒரு வழிகாட்டும் கொள்கையாக மட்டுமே பயன்படுத்தமுடியும்.

கோட்பாட்டின் சமகால நிகழ்வுகள்

             சில்லரை வணிக நிறுவனங்களான வால்மார்ட்  (Walmart), Big Bazaar  போன்ற நிறுவனங்கள் சில முக்கியமான மற்றும் அதிக நகர்வுகளைக் கொண்டு பொருட்களை முன்னிலை படுத்துவதால்; அதிகமான வாடிக்கையாளர்களைக் கவர்ந்து பின்னர் அதிகப் பொருட்களை விற்பனை செய்வது என்பது இக்கோட்பாட்டின் விளைவாகும்.

             ஆப்பிள் நிறுவனத்தின் 20 சதவீத பொருட்கள்தான் அந்த நிறுவனத்திற்கு 80 சதவீத வாய்ப்பை ஈட்டித் தருகிறது. அதாவது அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்தாலும் iphone போன்ற சில பொருட்கள்தான் அந்நிறுவனத்தின் வருவாயில் 80 சதவீத பங்குகளை ஈட்டித் தருகிறது.

             Netflix  போன்ற நிறுவனங்களில் வழங்கப்படும் 20 சதவீத படங்கள்தான் பார்வையாளர்களின் 80 சதவீத பார்வை நேரத்தை ஈர்த்து கொண்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

             வங்கி போன்ற நிதித்துறை நிறுவனகளில் 20 சதவீத கடனாளர்கள்தான் 80 சதவீத வாராக் கடன்களுக்கு பொறுப்பாளர்களாக இருக்கின்றனா;. எனவே கடன் வழங்குவதில் வங்கிகள் 20 சதவீத பயனாளர்களை கவனமாகத் தவிர்த்தால் 80 சதவீத வாராக்கடன் தவிர்க்கப்படும். மேலும் வங்கிகள் திவாலாகுவதில் இருந்து காக்கப்படும்.

             அனைத்து வகையான நிறுவனங்களிலும் நுகர்வோரின் புகார்கள் தோராயமாக 20 சதவீதம் என்ற அளவிலே பதிசெய்யப்படும். அதனை குறித்த சமயத்தில் தீர்வு கண்டுவிட்டால் நிறுவனத்தின் 80 சதவீத பிரச்சனைகளை சரிசெய்துவிடலாம். இது அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

பரெட்டோக் கோட்பாடு தனிநபர், நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் உருவாக்குநர்களை மிக முக்கியமான காரணிகளின் மீது கவனம் செலுத்த உதவும் சக்திவாய்ந்த பகுப்பாய்வு கருவியாகும். அற்பமான பல காரணிகளில் கவனம் செலுத்துவதைவிட, மிக முக்கியமான காரணிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் குறைந்த வளங்களிலேயே சிறந்த பயன்களை அடைய வழிவகுக்கும். அதன் எளிமையும் பரவலான பயன்பாடும் பொருளாதாரம், மேலாண்மை மற்றும் தனிநபர் வாழ்வில் பயன்படுத்தும் போது மிகச் சரியான தீர்வினை எளிதாக மேற்கொள்ள இக்கோட்பாடு பெரும்பங்கு வகிக்கின்றது.

- முனைவர் வீ. கிருஷ்ணகுமார், உதவிப் பேராசிரியர், ஏ.வி.ச கல்லூரி, போடிநாயக்கனூர்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.