நான் என் பள்ளிக் கல்லூரிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். ஆனால் எழுதின எதையும் பிரசுரத்துக்கு அனுப்பியதில்லை.

 

1964. ஆண்டு எனக்கு மிகவும் சோதனையான காலம். என் மனைவி இந்திராவுக்கு விபத்து ஏற்பட்டு தில்லி மருத்துவ மனையில் இருந்தாள். முதுகெலும்பில் அறுவைச் சிகிச்சை. வீட்டில் மூன்று இளங் குழந்தைகள். ஆஸ்பத்திரிக்கும், வீட்டுக்கும், கல்லூரிக்குமாக அலைந்துகொண்டிருந்தேன்.

 

அப்பொழுது ‘மனித இயந்திரம்’ என்ற கதையை எழுதினேன். என் மன நிலையைச் சுட்டிக் காட்டுவதாக இருந்தது அக்கதை.

 

அக்காலக் கட்டத்தில் ‘ஆனந்த விகடனில்’ ஜெயகாந்தன் கதைகள் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. என்னுடைய கதையை ஏன் விகடனுக்கு அனுப்பக்கூடாது என்று எனக்குத் தோன்றிற்று.

 

எந்த பெயரில் அனுப்புவது என்பது அடுத்த கேள்வி. ஆஸ்பத்திரியிலிருந்த என் மனைவிக்கு உற்சாகமாக இருக்கக்கூடுமென்று எண்ணி அவள் பெயரைத் தேர்ந்தெடுத்தேன். கதையை அவளுக்குப் படித்துக் காட்டினேன். ‘இது கதையே இல்லை.. உங்கள் மன ஓட்டப் பிரதிபலிப்பு, போடுவார்களா?’ என்று என் மனைவி கேட்டாள் ‘கதை பிடிக்கலியா?’ என்றேன் நான். ‘எனக்குப் பிடிச்சிருக்கு. அது போதுமா’ என்றாள் என் மனைவி.. ‘இந்திரா பார்த்தசாரதி’ என்ற பெயரிலேயே கதையை விகடனுக்கு அனுப்பினேன். அது செப்டம்பர் மாதம் இறுதி.

 

அப்பொழுது நான் தில்லியில் ‘டிபன்ஸ் காலனி’ என்ற இடத்தில் இருந்தேன். கரோல்பாகில், என் பல்கலைக்கழக நண்பர் பேராசிரியர் ஆறுமுகம் இருந்தார். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அவரைச் சந்திக்க ஒரு நாள் கரோல்பாக் சென்றிருந்தேன். அவருடன் அஜ்மல்கான் வீதி வழியாக வந்து கொண்டிருந்த போது, ஒரு தென்னிந்திய வெற்றிலைப் பாக்குக் கடையில், விகடன் போஸ்டரில், ‘மனித இயந்திரம்’ ‘முத்திரைக்கதை’ என்ற வாசகத்தைப் படித்ததும் திடுக்கிட்டேன். என் கதையாக இருக்குமோ என்ற சந்தேகம். என் மனைவி கூறியது என் நினைவுக்கு வந்தது. ஜெயகாந்தன் எழுதும் நல்ல கதைகள் வரும்போது, ஏன் இதுவும் பிரசுரமாகியிருக்கக் கூடாது என்று நான் என்னையே கேட்டுக் கொண்டேன்.

 

‘கொஞ்சம் இருங்க’ என்று நண்பரிடம் சொல்லிவிட்டு, கடைக்குச் சென்று விகடன் வாங்கினேன். பிரித்துப் பார்த்தேன். என் கதைதான்!

 

என் முதல் மகன் பிறந்தபோது எனக்கேற்பட்ட மகிழ்ச்சி போல், மனம் உவகையால் நிறைந்தது.

 

விகடனை நண்பரிடம் காண்பித்து, ‘என் கதை இது.’ என்றேன்.

 

நண்பர் ஆறுமுகம் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்து தோய்ந்தவர். நச்சினார்க்கினியர் உரைக்குப் பிறகு வந்த எந்தத் தமிழ் நூலையும் அவர் படிக்க விரும்புவதில்லை.

 

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். முகத்தில் கழிவிரக்கம் தெரிவது போல் எனக்குப் பட்டது. நவீன இலக்கியப் படைப்பு என்று செய்யக்கூடாத ஒன்றைத் தமிழை முறையாகப் படித்த ஒருவன் செய்கின்றானே என்ற வேதனையும் அவர் முகத்தில் தெரிந்தது.

 

‘மெய்யாலுமா சொல்றீங்க?’ என்றார் அவர் வருத்தத்தை முகத்தில் தேக்கி..

 

‘ஆமாம், சார்’ என்றேன் நான்.

 

‘நீங்களும் கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க..’ என்றார் அவர்.

 

‘நீங்களும்னு ஏன் சொல்றீங்க.. ‘உம்’மை எதுக்காக?’

 

அவர் பதில் கூறவில்லை.

 

என் மனைவி மருத்துவ மனையிலிருந்து அப்பொழுது வீட்டுக்கு வந்து விட்டாள். நான் ஒரு ‘டாக்ஸி’யை எடுத்துக் கொண்டு அவளுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று விரைந்தேன்.

 

அவளிடம் விகடனைக் கொடுத்துப் ‘பிரிச்சுப் பார்’ என்றேன்.

 

‘உங்க கதையா?’

 

‘என் கதையேதான்..’

 

‘முத்திரைக் கதைன்னா?’

 

‘நல்ல கதைன்னு அர்த்தம்..பாக்கிக் கதைகளுக்கு ஐம்பது ரூபாய் சன்மானம்னா இதுக்கு நூறு ரூபா.’

 

‘மதிப்பு ரூபாயில்தானா?’

 

‘இந்தக் காலத்திலே வேற எதை வைச்சிண்டு மதிப்பை நிர்ணயிக்க முடியும்? ‘என்றேன் நான்.

 

இதற்குப் பிறகு நான் எழுதிய ஐந்து கதைகள், இரண்டெண்டு மாத இடைவெளியில், தொடர்ந்து, முத்திரைக் கதைகளாக விகடனில் வெளி வந்தன. இதுதான் தொடர்ந்து நான் எழுதுவதற்கான நம்பிக்கையை எனக்குத் தந்திருக்க வேண்டும்.

-இந்திரா பார்த்தசாரதி

Pin It