குழந்தைகளையும், குழந்தைகளின் மனநிலையையும் அதன் கற்பனைத் திறனையும் புரிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் குறிப்பாகக் குழந்தை எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். இதை பிரஞ்ச் எழுத்தாளர் அந்த்வர்ன்து செந்த் - எக்சுபெரி அவர்கள் எழுதியுள்ளார்கள். இதனை மலையாளம் வழி தமிழில் யூமா வாசுகி அவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

எழுத்தாளர் தனது அனுபவம் போல் தொடங்கி, குட்டி இளவரசன் மூலம் குழந்தைகளின் மனம் எவ்வாறு எல்லாம் கற்பனை செய்ய வல்லது என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக்கியுள்ளார்.

சித்திரம் வரைவதில் ஆர்வமுள்ள, வன விலங்குகளில் ஈடுபாடுள்ள ஒரு குழந்தை, குட்டி யானையை விழுங்கிய பாம்பின் படத்தை வரைகிறது. ஆனால் அது பெரியவர்களின் பார்வையில் தொப்பி போல் தெரிகிறது. பெரியவர் களுக்கு எப்போதும் விளக்கங்கள் தேவைப்படுகின்றன என்பதைப் புரிந்து கொண்ட குழந்தை பாம்பின் உட்பகுதியை, பாம்புக்குள் யானை இருப்பது போன்ற படத்தை வரைந்து விளக்க வேண்டிய தேவை எழுகிறது.

குழந்தையிடம் அதன் முதல் சித்திரத்தையே திருப்பிக்கொடுத்து விட்டு நீ படி, புவியியல் படி, வரலாறு படி, கணக்குப்படி, இலக்கணம் படி எனக்கூறும் பெரியவர்களைப் பற்றி குழந்தை இவ்வாறு மதிப்பீடு செய்கிறது. ÔÔஇந்தப் பெரியவர்களுக்கு விஷயம் ஒன்றும் புரியவில்லை. நேரா நேரத்தில் அவர்களுக்கு விஷயங்களை விளக்கிப் புரிய வைப்பது என்பது ஒரு சலிப்பூட்டும் வேலைதான்ÕÕ.

ÔÔசித்திரம் வரைவது எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் ஆறாம் வயதிலேயே நான் அதைக் கைவிட வேண்டி வந்தது. எப்படி என்று உங்களுக்குப் புரிகிறதல்லவாÕÕ

ÔÔகறாரான நடவடிக்கைக்காரர்களான பெரியவர்களிடம் நெருங்கிப் பழகுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆயினும் அவர்களைப் பற்றி எனக்குப் பெரிய மதிப்பொன்றும் ஏற்படவில்லை. நான் இந்தப் பெரியவர்களின் நிலைக்கு இறங்கி, இறங்கி வந்து கடைசியில் அரசியலைக் குறித்தெல்லாம் பேசவேண்டி வந்தது, இப்படியெல்லாம் பேசுபவர்கள் மீது அவர்களுக்கும் பெரிய மரியாதைதான்ÕÕ.

குழந்தைகளும் பெரியவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கிறார்கள் என்பதை இந்த நூல் புரிய வைக்கிறது.

ஒவியம் வரையும் ஆசை பெரியவர் களால் மழுங்கடிக்கப்பட்ட சிறுவன், பறக்கும் விமானம் ஒரு பாலைவனத்தின் நடுவே விழுந்து விட அச்சிறுவனிடம் குட்டி இளவரசன் ஒரு ஆட்டுக்குட்டியின் ஓவியத்தை வரையச் சொல்லிக் கேட்கிறான். அச்சிறுவன் வரைந்து தரும் ஓவியம் நோய்வந்த ஆடு மாதிரி இருந்ததால் குட்டி இளவரசனைத் திருப்திப்படுத்தவில்லை. மீண்டும் மீண்டும் வரையும் ஒவியங்களும் செம்மறிக்கிடா மாதிரியும், கிழட்டு ஆடு போலவும் இருந்ததால் குட்டி இளவரசனனைத் திருப்திப்படுத்த வில்லை. ஆனால் ஒரு பெட்டியை வரைந்து அதனுள் ஆடு இருக்கிறது என்று கூறியதும் குட்டி இளவரசன் மகிழ்ச்சியாகி கற்பனையில் ஈடுபடுகிறான். குழந்தைகளின் கற்பனை எப்படியெல்லாம் இருக்கும் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

குட்டி இளவரசன் வானத்தில் பயணித்து பல்வேறு கிரகங்களில் ஏறுபவன், தற்பெருமைக்காரன், விஞ்ஞானி எனப் பலரையும் சந்திக்கிறான். ஒவ்வொருவரும் தனித்தனி உலகில் வாழ்கிறார்கள் என்பதையும், அதைப்பற்றி குழந்தைகள் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் கற்பனை நயத்தோடு இந்நூல் குழந்தைகளுக்காகச் சிறப்பாக விளக்குகிறது. ஒவ்வொரு பெரியவர்களும் ஒரு காலகட்டத்தில் குழந்தைகளாய் இருந்தவர்கள்தான் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.

யூமா வாசுகியின் இயல்பான மொழிபெயர்ப்பும் பதிப்பும் சிறப்பாக உள்ளது.

குட்டி இளவரசன்

அந்த்வர்ன்து

செந்த்-எக்சுபெரி

தமிழில்: யூமா வாசுகி

Pin It