உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர்

        உலகம் முழுவதிலும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று ஐநாவின் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி அமைப்பு (ஐஎஃப்ஏடி) தெரிவித்துள்ளது.

        இந்த அமைப்பின் 33வது ஆட்சிமன்றக் குழு கூட்டம் புதன் கிழமை அன்று ரோம் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைப்பின் தலைவர் கனாயோ வான்ஸ் பேசுகையில், ‘உலகளவில் பசியால் வாடும் மக்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 100 கோடி அளவை தாண்டியிருக்கிறது.

        உலகில் விவசாயத்தை மேம்படுத்துவது தான் இந்த மக்களின் பசியை போக்குவதற்கான சிறந்த வழியாக நாங்கள் கருதுகிறோம். பசியோடு இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக, ஆபத்தான நச்சு கலந்த உணவை உண்பவர்களின் எண்ணிக்கை இருக்கிறது.விவசாயத்தை பெருக்குவதன் மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதோடு, பசியையும் அகற்ற முடியும்’ என்றார்

        பணக்காரர்களின் நலன் பேணுகின்ற உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளால் மனித குலத்திற்கு ஏற்பட்ட விளைவு இது. இதனை மாற்ற மண் சார்ந்த மக்கள் சார்ந்த மாற்றுப் பொருளியல் நிறுவப்பட வேண்டும். 

மனைவியை முக்காடு (பர்தா) அணிய வலியுறுத்தினால் பிரான்சில் குடியுரிமை கிடையாது

        பிரான்சு நாட்டில் இஸ்லாமியர் ஒருவர் தம் மனைவியை முக்காடு போட்டுக் கொள்ள வற்புறுத்து வதாகவும், வீட்டில் மற்ற ஆண்களோடு பேசவிடாமல் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் அந்த இஸ்லாமியர் மற்ற பெண்களுக்குக் கைகொடுக்கவும் மறுக்கிறார். அவர் தமக்குக் குடியுரிமை வழங்குமாறு பிரான்சு அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.

        பிரஞ்சுப் பண்பாட்டுக்கும் பிரஞ்சுத் தன்மைக்கும் எதிரான அந்த இஸ்லாமியர்க்கு குடியுரிமை வழங்க மாட்டோம் என்று அந்நாட்டுத் தலைமை அமைச்சர் பிராங்காய் பில்லன் கூறிவிட்டார்.

        ஐரோப்பா-1 வானொலி நேர்காணலில் இவ்வாறு அவர் கூறினார். பிரஞ்சு மதிப்பீடுகளையும் பண்பாட்டையும் மதிக்காதவர்களுக்கு பிரான்சில் இடமில்லை என்றும் தலைமை அமைச்சர் சொன்னார்.

        மேற்படி இஸ்லாமியர் பெயரென்ன, எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் கூறப்படவில்லை.

        2010 சனவரி கடைசிக் கிழமையில்தான், பிரஞ்சு நாடாளுமன்ற அறிக்கை, பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், மக்கள் போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் பெண்கள் முக்காடு (பர்தா) அணிந்து கொள்வதைத் தடை செய்யுமாறு அரசைக் கோரியது.

        ஐரோப்பாவிலேயே இஸ்லாமியச் சிறுபான்மையினர் அதிகம் வாழும் நாடு பிரான்சு என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சற்றொப்ப 1,900 இஸ்லாமியப் பெண்கள் மட்டுமே முக்காடு அணிகின்றனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

        அண்மையில் எடுத்த கருத்துக் கணிப்பொன்றில் அந்நாட்டில் 57 விழுக்காட்டு மக்கள் முக்காடு அணிவதைத் தடைசெய்யும் சட்டத்தை வரவேற்றுள்ளனர்.

        மிகை நாகரிகத்திற்குப் பெயர்போன பிரான்சு நாட்டில் பிரெஞ்சுத் தன்மை, பிரெஞ்சுப் பண்பாடு ஆகியவற்றை வலியுறுத்துகிறார்கள். முற்போக்கான தமிழ்த் தேசியத் தன்மையை வலியுறுத்தினால் முகம் சுளிக்கும் சிலர் உலகப் போக்கை உணரவேண்டும்.

மிகையாக இணையதளத்தைப் பயன்படுத்தினால்

மிகையான மனஅழுத்தம்

        இணையதளத்தை அதிகமாகப் பயன்படுத்து வோருக்கு ஏற்படும் மனத்தளர்ச்சி நோய் பற்றி பிரித்தானியாவில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளனர். இணையதளத்திற்கு அடிமை ஆகிவிட்டவர்களே இந்த நோயினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள் என்கின்றனர் அந்த அவ்வாய்வாளர்கள். அப்படிப்பட்ட அடிமைகள் தங்களின் சராசரி வாழ்க்கையை இணைய தளத்திலேயே கழித்துவிடுகிறார்கள்.

        லீட்ஸ் பல்கலைக்கழக முன்னணி ஆய்வாளர் கட்ரியோனா மாரிசன் கூறுகிறார்: “நவீன கால வாழ்வில் இணையதளம் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. ஆனால் அது தரும் பயன்களின் மறுபக்கம் இருள் சூழ்ந்துள்ளது”.

        16 அகவையிலிருந்து 51 அகவை வரையுள்ள 1319 பேர்களை இணையதளத்தின் வழியாக வினாக்கள் கேட்டு விவரம் திரட்டியுள்ளனர். எந்த அளவு அதிகநேரம் இணையதளத்தில் செலவிடுகிறார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு மனத்தளர்ச்சி உண்டாகிறது.

        இணைதளத்திற்கு அடிமையாகிப் போனவர்கள் மிகுதியாக ஈடுபடுவது பாலியல், விளையாட்டுகள், அரட்டைள் ஆகியவற்றில்தான். இப்படிப் பட்டவர்களின் சராசரி அகவை 21.

        அளவுக் கதிகமானால் அமுதமும் நஞ்சு. இன்றியமையாத் தேவைக்கு மட்டும் இணையதளத்தைப் பயன்படுத்தினால் ஆபத்தில்லை.

ஆயுத விற்பனைக்குக் கையூட்டு

பிரித்தானிய நிறுவனத்தின் முறைகேடு

        பிஏஇ சிஸ்டம்ஸ் என்பது பிரித்தானியாவின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனம். இந்தத் தனியார் நிறுவனம் பல நாடுகளுக்கு ஆயுதம் விற்கிறது.

        சவுதி அரேபியா, தான்சானியா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்கு பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனம் ஆயுதம் விற்றுள்ளது. தன்னிடம் ஆயுதம் வாங்குவதற்காகப் பல நாடுகளின் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் ஆகியோர்க்குக் கோடி கோடியாய் கையூட்டுத் தொகை கொட்டிக் கொடுக்கிறது இந்நிறுவனம்.

        சுவீடன் நாட்டுப் போபார்ஸ் ஆயுத நிறுவனம் இந்திய ஆட்சியாளர்களுக்குக் கோடி கோடியாய்க் கையூட்டுக் கொடுத்ததல்லவா, அதுபோல்தான்.

        பிஏஇ நிறுவனத்தின் கையூட்டு ஊழலைக் கண்டுபிடிப்பதற்காக புலனாய்வு அமைப்பு ஒன்று பிரித்தானிய, அமெரிக்க அரசுகளால் அமைக்கப்பட்டது. அது எட்டு ஆண்டுகள் புலனாய்வு செய்து அறிக்கை கொடுத்தது.

        கையூட்டு ஊழல்களை மூடிமறைக்க பேரம் நடந்துள்ளது. கணக்கு எழுதுவதில் ஏற்பட்ட ஒழுங்கீனங்கள், நிர்வாகக் கோளாறுகள் என்ற அளவில் குற்றச் சாட்டுகளை அந்த அறிக்கை கூறுகிறது.

        இந்த பேரத்தின் படி, அமெரிக்காவிற்கு 25 கோடி பவுண்டும், பிரிட்டனுக்கு 3 கோடி பவுண்டும் தண்டத் தொகையாக பிஏஇ நிறுவனம் கட்டினால் போதும். கையூட்டுக் குற்றத்திலிருந்து அது விடுவிக்கப்படும்.

        சவுதி அரேபியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆயுத விற்பனை செய்வதற்குக் கையூட்டு கொடுத்தது பற்றி அமெரிக்காவில் இந்நிறுவனத்தைப் புலனாய்வுத் துறையினர் விசாரித்த போது, பொய்யான தகவல்களைக் கொடுத்த குற்றத்திற்காக அமெரிக்காவுக்கு மேற்படித் தண்டத் தொகையைத் தரவேண்டும். தான்சானியாவிற்கு ராடார் கருவிகள் விற்கக் கையூட்டுக் கொடுத்ததை மறைத்த குற்றத்திற்காகப் பிரித்தானியாவிற்குத் தண்டத் தொகை தர வேண்டும்.

        டோனிபிளேர் பிரதமராக இருந்த போது பிஏஇ நிறுவன ஊழல்களை மூடி மறைக்கப் பலவாறு உதவியுள்ளார். கடும் மோசடிகளை விசாரிக்கும் அலுவலகம், பிஏஇ நிறுவன ஊழல்களை விசாரித்த போது 2006 இல் அவ்விசாரணையைக் கைவிடச் செய்தார் பிளேர்.

        பிரித்தானியாவின் சுதந்திர சனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நார்மன்லேம்ப் புதிய புலனாய்வுக்குழு அமைத்து பிஏஇ ஊழலை விசாரிக்க வேண்டும் என்று கோருகிறார். சிறு தண்டத் தொகையுடன் பிஏஇ தப்பிக்க விடமாட்டோம் போராடுவோம் என்கிறது ஆயுத வணிகத்திற்கு எதிரான இயக்கம்.

        ஆயுதங்கள் மக்களைக் கொல்வது மட்டுமின்றி அறநெறிகளையும் கொல்கிறது. ஒரு முதலாளி இன்னொரு முதலாளியை வீழ்த்த கையூட்டுக் கொடுப்பது உட்பட எல்லா ஒழுக்கக் கேடுகளிலும் ஈடுபடுகிறார்.

- தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு

Pin It