நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டம் - 2014 என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற “நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான இழப்பீடு, வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் திருத்த அவசரச் சட்டம் - 2014” என்ற நிலப்பறிப்பு அவசரச் சட்டத்தை நடப்பு நாடாளுமன்றத் தொடரில் எப்படியாவது நிரந்தரச் சட்டமாக்கிவிட வேண்டும் என்பதில் நரேந்திர மோடி முனைப்பாய் இருக்கிறார்.

இந்த அவசரச் சட்டம் நிரந்தரச் சட்டமாக மாற்றப்பட வேண்டுமென்றால் நாடாளுமன்ற மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். பாரதிய சனதாவுக்கு மக்களவையில் வலுவான பெரும்பான்மை உள்ளது. ஆனால், மாநிலங்களவையில் அக்கட்சியும், அதன் கூட்டணியும் சிறுபான்மையாக உள்ளது.

இச்சட்டத்திற்கு காங்கிரசு உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

தில்லி ஜந்தர் மந்தரில் அன்னா அசாரே தலைமையில் பல்வேறு உழவர் அமைப்புகளும், மக்கள் இயக்கங்களும் பல்லாயிரக்கணக்கில் மக்களைத் திரட்டி இச்சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஆயினும் அரிதாக நிகழக்கூடிய நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை நடத்தியாவது அதில் தனக்குள்ள மொத்தப் பெருபான்மையைப் பயன்படுத்தி நிறைவேற்றிவிடுவது என்ற திட்டத்தில் மோடி இருக்கிறார்.

அதே நேரம் பா.ச.க. தலைவர் அமித்ஷா மூலம் சில எதிர்க்கட்சிகளை வளைத்துப் போடவும், பெயரளவிற்கான சில விவசாயிகள் அமைப்புகளை வளைத்துப் போடவும் முயற்சிகள் நடக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னால் இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி செயலலிதாவைச் சந்தித்துவிட்டுப் போனதும் இந்த வியூகத்தின் ஒரு பகுதிதான்.

பதவிக் கட்சித் தலைவர்களின் பணப் பசியும், பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளின் நிலப் பசியும், மோடியின் அதிகாரப் பசியும் ஓர் நேர்கோட்டில் சந்திக்கின்றன.

எனவே வேறு ஏதேனும் சிக்கல்களை முன்னிலைப்படுத்தி கூச்சல், குழப்பம், வெளிநடப்பு என்று நடத்திவிட்டு, நாடாளுமன்றத்தில் இச்சட்டத்திற்கான எதிர்ப்பு வாக்குகளை குறைய வைத்து, இக்கட்சிகளில் சில அரசுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கவும் வாய்ப்பு உண்டு. அச்சூழலில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை கூட்டுவதற்கான தேவை இல்லாமலேயே மோடியின் விருப்பம் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

சுமார் 20 ஆண்டுகள் நடைபெற்ற மிக நீண்ட மக்கள் போராட்டத்திற்குப் பிறகு  உருவானதுதான் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் - 2013 ஆகும். இதில் 10A என்ற புதிய பிரிவைச் சேர்ப்பதன் மூலம், 2013ஆம் ஆண்டு சட்டத்தின் உழவர்களுக்கான  வலிமையான பாதுகாப்புக் கூறுகள் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டன. (விரிவிற்கு காண்க: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2015, சனவரி 16-31 இதழ்)

இவ்வாறு ஒரே அடியில் வேளாண் நிலங்கள் பெரு முதலாளிகளுக்கு திறந்துவிடப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள். மோடிக்கு மட்டுமின்றி இதற்கு ஆதரவாக எந்த வகையில் செயல்பட்டாலும் அக்கட்சிகளுக்கு கையூட்டை கோடி கோடியாக வாரி வழங்க அணியமாக உள்ளார்கள்.

கொள்கை என்ற வகையிலும், மிகப்பெரும்பாலான தேர்தல் கட்சிகளுக்கு மாற்றுப்பார்வை ஏதும் இல்லை. ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு தங்கள் மாநிலத்திற்குப் பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளை வரவழைக்க முண்டியடித்து நிற்கின்றனர். 

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் முதலீட்டாளர்களின் மாநாட்டை நடத்தி குறைந்தது 1 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கப்போவதாக அறிவித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு சதுர அடி நிலம் ஒரு ரூபாய் என்ற அளவில் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்து தங்கள் மாநிலத்திற்கு தொழில் தொடங்க வருமாறு முதலாளிகளைக் கூவி அழைக்கிறார்.

பெருந்தொழில்கள் வருவதென்றால் அவர்களுக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலம் கொடுத்தாக வேண்டும். தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் மிகப்பெரும்பாலான நிலங்கள் சாகுபடி நிலங்கள்தாம்.  உழவர்களிடமிருந்து இந்நிலங்களைப் பறித்து அளிப்பதுதான் இவ்வரசுக்கு உள்ள ஒரே வழி. 

வேளாண்மை உபரியிலிருந்து படிப்படியாக தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவதற்கு மாறாக, வேளாண்மையை அழித்து தொழில் வீக்கம் உருவாக்குவதைத் தான் இக்கட்சிகளும், அரசு அதிகார வர்க்கத்தினரும் வளர்ச்சி என்று வரையறுக்கிறார்கள்.

இதனால்தான் மோடி அரசின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூக்குரல் எல்லாம் வெற்றுக் கூச்சலாகவும், கபட நாடகமாகவும் அமைகின்றன.

வளர்ச்சி பற்றிய மேற்கண்ட கருத்தியல் பெரும்பாலான படித்தவர்களிடையே வேரூன்றப்பட்டுள்ளது.

பெரும் பெரும் தொழிலகங்கள், விரைவுச் சாலைகள், ஒவ்வொரு அசைவிலும் மின்சாரத்தையும், பெட்ரோலை யும் சார்ந்திருக்கிற கட்டுமானங்கள், மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறைகள், பொருள்களைச் சந்தைப்படுத்தும் விளம்பர கூச்சல் தளங்களான ஊடகங்கள், அனைத்தையும் துய்த்துத் துப்பிவிட வேண்டும் என்ற நுகர்வு வெறி ஆகியவை வளர்ச்சியின் அடையாளங்களாகக் காட்டப்படுகின்றன.

குடும்பத்தோடும், சுற்றத்தோடும் செலவழிக்க நேரமின்றி ஓடி ஓடி 12 மணி நேரம் உழைத்து கைநிறைய காகிதப் பணங்களை அள்ளுவதே வாழ்க்கைத்தர வளர்ச்சியாகப் பரப்பப்படுகிறது.

இவை அனைத்திலிருந்தும் விடுபட்ட மாற்று வளர்ச்சி முறைதான் வளங்குன்றா வளர்ச்சியையும், அமைதியான வாழ்க்கையையும், போரற்ற உலகத்தையும் படைக்கும்.

தமிழ்த் தேசியம் இவ்வாறான மாற்று வளர்ச்சிப் பாதையை முன்வைக்கிறது. தமிழ்த் தேசியம் என்பது வெறும் அரசியல் விடுதலையை மட்டும் குறிக்கவில்லை. மாறாக இயற்கையோடு இயைந்த வளங்குன்றா மாற்று வளர்ச்சிப் பாதையை, அதற்கான மாற்று வாழ் நெறியை முன்வைக்கிறது.

விடுதலைபெற்ற தமிழ்த் தேசம் இன்னொரு குட்டி இந்தியாவாக இருக்கக் கூடாது என்பதில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தெளிவாக இருக்கிறது.

வேளாண்மையை இலாபமான தொழிலாகவும், மகிழ்ச்சியான வாழ்முறையாகவும் மாற்ற வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியம் உறுதியாக இருக்கிறது.

சிறு, நடுத்தர தொழில்கள் சார்ந்த, உற்பத்தி மையங்களை சுற்றியே சந்தை அமைகிற தொழில் வளர்ச்சியையே முன்வைக்கிறது. இதற்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் தேவைப்படாது.

பெரிய பெரிய அணைகள், பெரும் பெரும் கட்டுமானங்கள், நிலக்கரி மற்றும் பெட்ரோலியத்தைச் சார்ந்துள்ள வீக்கப் பாதையை தமிழ்த் தேசியம் வெறுக்கிறது.

கதிரவன் ஆற்றல், காற்று ஆற்றல் உள்ளிட்ட இயற்கை ஆற்றல்களைச் சார்ந்துள்ள எரிசக்தி முறைகளையே முன்வைக்கிறது.

இதற்குப் பொருத்தமாக உள்ளூர் ஆட்சி அமைப்புகளை அதிகாரப் படுத்தும் அதிகாரப் பரவலாக்கல் நிர்வாக முறையை தமிழ்த் தேசியம் கைக்கொள்ளும்.

நுகர்வு வெறியால் வழிநடத்தப்படுகிற, இயற்கையை வெறும் பயன்பாட்டுப் பொருளாகப் பார்க்கிற பேராசை வாழ்க்கையை மறுதலித்து, தேவைக்கு வரம்புகட்டிக் கொள்ளும் இயற்கையை நேசிக்கும் அறவாழ்வை வாழ்க்கை நெறியாக தமிழ்த் தேசியம் வளர்த்தெடுக்கும்.

மோடி அரசின் நிலப்பறிப்புச் சட்டத்தைத் தடுத்து நிறுத்தப் போராடும் அதே வேளையில் இந்தத் தமிழ்த் தேசிய மாற்று வளர்ச்சி முறையைத் தமிழ்நாட்டு இளைஞர்களும், அறிவாளர்களும், உழவர்களும் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

Pin It