பழைய பக்கங்களிலிருந்து

1931 பிப்ரவரி 2, 3, 4, 5 ஆகிய நான்கு நாட்கள் சென்னைப் பல்லாவரத்தில் மறைமலை அடிகளார் தலைமையில் இயங்கிய பொதுநிலைக் கழகத்தின் இருபதாமாண்டு நிறைவு விழா அடிகளார் தலைமை யில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :

சீர்திருத்தத் தீர்மானங்கள்

கழக முதன் மாணவருஞ், சென்னைப், பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியருமான திருவாளர் மணி. திருநாவுக்கரசு முதலியாரவர்கள் பல்லாவரம் பொது நிலைக் கழகப் பேரவையின் மூன்றாம் நாள் கொண்டு வந்து, ஆசிரியர் மறைமலையடிகளின் உடன் பாடு பெற்றும், அவையினரெல்லாரின் முழு உடன்பாடு பெற்றும் நிறைவேற்றி வைத்த சீர்திருத்தத் தீர்மா னங்கள் வருமாறு:

I. மடம்

1. திருவாவடுதுறைப் பண்டார சந்நதிகளான ஸ்ரீலஸ்ரீ வைத்திய லிங்கதேசிக சுவாமிகள் நமது பேரவை நிகழ்ச்சிகளைப் பாராட்டி நன்கொடை வழங்கியும், மறைமலையடிகளார்க்கு வரிசை செய்துஞ் சிறப்பித்தமைக்காக, அச் சைவத்திருத்தலைவருக்கு இக்கழகத்தார் தமது நன்றியறிதலைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றனர்.

2. திருப்பனந்தாள் ஆதின பண்டார சந்நதிகள், நமது கழகப் பேரவையிலே புலவர் நிகழ்த்திய விரிவுரைகளையெல்லாம் அச்சிட்டு வெளியிட ஆகும் பொருட்செலவைத் தருவதாக ஒப்புக் கொண்டமைக் காக, அச் சைவத் திருத்தலைவருக்கு இக்கழகத்தினர் தமது நன்றியறிதலைத் தாழ்மையுடன் அறிவித்துக் கொள்கின்றனர்.

3. சைவ மடாதிபதிகள் அனைவருந் தமிழ்வழிக் கல்விக்குஞ், சைவசமய விளக்கத்திற்குந், தமிழ்ச் சைவ நூல் வெளியீடுகட்கும் மிக்க பொருள் தக்க வழியிற் செலவிடவேண்டுமென, அத்திருமிகு பெரியார்கள் எல்லாரையும் இக்கழகங் குறையிரந்து வேண்டுகின்றது.

4. மடாதிபதிகள், தமிழர் இல்லங்களிலே நடை பெறலாகுஞ் சடங்குகளையெல்லாஞ் செய்விப்பதற்கும், வேற்றுமையின்றி எல்லாக் குலத்தினர்க்கும் பொதுவா கச் சமயக்கிரியைகளைக் கற்பிப்பதற்கும் வேண்டும் முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென இக்கழகத்தார் விரும்பு கின்றனர்.

II. கோயில்

5. கடவுள் வழிபாடு ஆற்றும் ஒருவர் தவிர, ஏனையோர் எல்லார்க்குங் கடவுளை வணங்கும் முறையில் ஏதொரு வேற்றுமையுங் கோயில்களிலே இருத்தாலாகாதென்றுந், திருநீறு வழங்கும் முறையிலும் உயர்வு தாழ்வு கருதாது மக்கள் நிற்கும் வரிசை முறையே அதனை வழங்கல் வேண்டுமென்றும் இக்கழகத்தார் கோயிற்றலைவர்களைக் கேட்டுக் கொள்கின்றனர்.

6. பழந்தமிழ்க் குடிமக்கள் எல்லாரையும் உயர்வு தாழ்வு பாராது, தூய்மையாகத் திருக்கோயிலே சென்று இடையூறின்றி வழிபாடு செய்தற்கு வேண்டும் முயற்சி களை எடுத்துக் கொள்ள வேண்டுமென, இக் கழகத்தார் கோயிற் றலைவர்களையும் பொது மக்களை யும் கேட்டுக் கொள்கின்றனர்.

(கடவுளை வணங்கும் முறையில் எவரிடத்தேனும் உயர்வு தாழ்வு காட்டுதல் அன்புக்கும் அருளுக்கும் இழுக்காகும். எல்லா மக்களுங்கடவுளாற் படைக்கப் பட்டவர்களே யாதலால், அவர்களெல்லாருங் கோயி லிலே சென்று தம்மைப் படைத்த இறைவனை வழிபடுதற்கு முழு உரிமை உடையராவர். புத்தர், சமணர், கிறித்துவர், மகமதியர், பாரசிகர் முதலான சமயத்தவர்களெல்லாருந், தத்தங் கோயில்களிற் சென்று ஏதொரு வேற்றுமையுமின்றி இறைவனை வணங்கி அளவளாவி வருவதல்லாமலுந், தம் மதத்தவரல்லாத அயல் மதத்தவர்களுந் தம்முடைய கோயில்களுக்கு வந்தால், அவர்களைத் தடை செய்யாமல் உள்ளே சென்று வணங்க விடுகின்றனரல்லரோ? இங்ஙனம் உலகத்திலுள்ள பெரும்பகுதியினரான மக்களெல்லா ருங் கோயில் வழிபாட்டில் ஏதொரு வேற்றுமையுங் காட்டாமல் அன்பினால் அளவளாவி வருதலை நேரே கண்டு வைத்தும், இத் தமிழ்நாட்டிலுள்ள சிறுபகுதி யினரான மக்கள் மட்டும், அன்பும், இரக்கமுமின்றி வேற்றுமைகாட்டித், தம்முள்ளே சிற்சில வகுப்பினரைக் கோயிலினுள்ளே வணங்கவிடாமல், அவரை அடித்துத் துரத்தி, விலங்கினங்களைப் போலப் போராடுவது உலகத்தவரெல்லாராலும் பழித்துப் பேசப்படுகின்ற தன்றோ? இப் பெரும்பழியை உடனே நீக்கிக் கொள்ளா தவரையில், தமிழ்நாட்டவர் விலங்கினங்களாகவே ஏனை நாகரிக மக்களாற் கருதப்பட்டு, அன்பும் ஒற்று மையும் இல்லாராய், அதனால் இறைவன் திருவருட் பேற்றிற்கும் உரியராகாராய்ப் பிறர்க்கு அடிமையாகவே கிடந்தொழிவர். ஆதலால், இத் தீர்மானத்தை உறுதி யாகப் பிடித்து இதனை உடனே வழக்கத்துக்குக் கொணர்ந்து தமிழ்நாட்டவர்கள் உய்வார்களாக!)

7. கோயில்களிலே பொது மாதர்க்குப் பொட்டுக் கட்டும் வழக்கம் அடியோடு தொலையவேண்டு மென் றும், இனி அம்மாதரைக் கொண்டு ஏதொரு திருப் பணியுங் கோயிலிலே செய்விக்கலாகா தென்றும் இக்கழகத்தினர் வலியுறுத்துகின்றனர்.

(காமநினைவை விட்டு இறைவனை வணங்கிப் பிறவியைத் தூய்மை செய்தற்கன்றோ எல்லாருங் கோயிலுக்குச் செல்கின்றனர். அப்புனித இடத்திலுங் காமநினைவை எழுப்பி ஆண்பெண் பாலாரைக் கெடுத்தற்கு எளிதிலே இடஞ்செய்வாரான பொது மாதரைத் திருக்கோயிற் றிருப்பணிக்கு வைத்தல் எவ்வளவு தீயதாகும் என்பதை ஒவ்வொருவரும் நன்குணர்ந்து பார்த்து, இதனை உடனே நீக்குதற்குக் கோயிற்றலைவர்களைத் தூண்டி முயல வேண்டும். சைவ வைணவரல்லாத மற்ற மதத்தவர் கோயில்களிலே இத்தகைய தீய ஏற்பாடு இல்லாமையால், அவர்களெல்லாரும் நம்மவரை இதற்காகவும் பெரிதும் இழித்துப் பேசுதலைக் கண்டதுங் கேட்டதும் இல்லையா? பிறர் பழிப்பை அஞ்சியாவது இத் தீய ஏற்பாட்டை ஒழித்து விடுங்கள்!)

8. வேண்டப்படாதனவும் பொருட்செலவு மிகுந்தன வுஞ், சமய உண்மைக்கு முரண்பட்டனவும், அறிவுக்குப்  பொருந்தமற்றவனவுமாகவுள்ள திருவிழாக்களையுஞ் சடங்குகளையுத் திருக்கோயில்களிலே செய்தல் முற்றுங் கூடாதென்றும், வேண்டப்படும் விழாச் சடங்குகளை யுங் குறைந்த செலவில் இசைந்த முறையில் தூய்மை யாக நடத்தல் வேண்டுமென்றும் இக்கழகந் தீர்மானிக் கிறது.

9.கோயில் மண்டபங்கள் தமிழ்மறை ஓதுதற்குஞ் சைவம் விளக்குதற்கும் பயன்படும்படி ஓதுவார்களை யும், புலவர்களையும் ஏற்படுத்திக், கோயிற்றலைவர்கள் சைவ நலங்களைப் பரவச்செய்யுங் கடமையை ஊக்கத் துடன் செய்ய வேண்டுமென இக்கழகம் முடிவு செய் கின்றது.  

10. ஒவ்வொரு கோயிலிலும் வழிபாடு முடிந்ததும், அனைவரும் ஓரிடத்தே அமர்ந்திருந்து இறைவனை நினைந்துருகுவதற்கு ஏற்ற இசைவுகளைக் கோயிற்ற லைவர்கள் ஏற்படுத்த வேண்டுமென இக்கழகம் வேண்டுகின்றது.   

III. குலம்

11.          சாரதா சட்டத்தை உடனே வழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டுமென இந்திய அரசாங்கத்தினரை இது வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. (சாரதா- குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் - ஆ.ர்)

12. பெண்களுக்கு ஆடவரைப் போலவே தாய பாகம் வழங்க வேண்டும் என இக்கழகந் துணிகின்றது. (பெண்களுக்குச் சொத்துரிமை - ஆ.ர்)

13. கைம்பெண் மணம் முதனூல் முடிபுக்கு ஒத்ததே என்றும், அறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்துவாராதவை முதனூன் முடிபாயினும் இப்போது ஒப்புக் கொள்ள முடியாதென்றும், இக்கழகத்தினர் கருதுவதுடன், தலைவர்களும் பொதுமக்களும் ஒத்து ழைத்துக் கைம்பெண் மணத்துக்கான நன்முயற்சிகளைச் செய்ய வேண்டுமெனவும் இது கேட்டுக் கொள்கிறது.

(கைம்பெண் மணம் வழக்கத்துக்கு வந்தாலன்றி நம் நாட்டு மங்கையர் துயர் தீராது; கள்ளப்புணர்ச்சி, கருச் சிதைவு, தற்கொலை முதலியவற்றால் நம் அருமைப் பெண்மக்கள் படும் பெருந்துயர் கண்டு வைத்தும், அவர்களைத் தாலியறுத்தும், மொட்டையடித்தும், வெள்ளைப் புடவையுடுப்பித்தும், உணவெடுக்க வொட் டாது பட்டினியும் பசியுமாய்த் தனியே கிடக்கவைத்தும் அவர்களை வாழ்நாள் முழுதும் வருத்திவருதல் அருள் உடையார் செயலாகாது. கைம்பெண் மணம் வழக் கத்துக்கு வந்தால்தான் ஆண்டில் முதிர்ந்த கிழவர்கள், பதினான்கு ஆண்டுச் சிறுமிகளை மணக்குந் தீய வழக்கம் ஒழியும். கிறித்துவர், மகமதியர், பாரசிகர் முத லான மற்றைப் பெரும் பகுதியனரான மக்களெல்லாம், கணவனிழந்த மகளிரை உடனே மறுமணஞ் செய் வித்துப் பாவமும் பழியுமின்றி நன்கு வாழ்தலை நேரே கண்டும், நம்மனோர் இந் நன்முறையைக் கைப்பறாதது பெருங்குற்றமாம். மறுமணஞ் செய்தல் நம்மிற் பண்டிருந்த வழக்கமேயாதல், ஆரிய வேதநூல் வல்லா ரான தயானந்த சரசுவதி சுவாமிகளால் “சத்தியார்த்தப் பிரகாசிகை”யில் நன்கெடுத்து விளக்கப்பட்டுள்ளது.)

14. சாதிக்கலப்பு மணம் மிகவும் ஏற்றதேயென இக்கழகம் முடிவு கட்டுகின்றது.

(சைவசமயாசிரியர் சைவ நாயன்மார்கள் வரலாறு களை உள்ளவாறே எடுத்துக்கூறும் பெரிய புராண மென்னும் உண்மை நூலை உற்றுநோக்கினால், அதில் மக்கள் முன்னேற்றத்துக்கு வேண்டிய எல்லாவகையான சீர்திருத்த முறைகளைகளையும் நம் ஆசிரியர்கள் முன்னமே செய்து வைத்திருத்தலைக் காணலாம். கோயில் அந்தணர் குலத்திற் பிறந்தவரான சுந்தர மூர்த்தி நாயனார், தம் குலத்தவரல்லாத பரவை சங்கிலி நாச்சியார்களை மணந்தமை எவரும் அறிந்த தேயாம். புறச்சமயததிற் சென்ற திருநாவுக்கரசு நாயனார் திரும்பவுஞ் சைவசமயத்திற் புகுந்தமை அறியாதார் யார்? திருஞானசம்பந்தப் பெருமான், பாணச் சாதியாரான திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவர் மனைவியாரையுந் தம்மொடு கூடவே வைத்து அன்பி னால் அளவளாவியதல்லாமலுந், தாம் சென்ற இடங்க டோறும் அவர்களையும் உடனழைத்துச் சென்றமையும் அவர் வரலாற்றினால் நன்கறியக் கிடக்கின்றதன்றோ? இங்ஙனமே ஈழக்குலச் சான்றாராகிய ஏனாதி நாயனா ரையும், வேட்டுவராகிய கண்ணப்பரையும், செம்பட வராகிய அதிபத்தரையும், இடையராகிய ஆனாய ரையும், பறையராகிய நந்தனாரையும், குயவராகிய திருநீலகண்டரையும், வண்ணாராகிய திருக்குறிப்புத் தொண்டரையும், எண்ணெய் வாணிகராகிய கலியரையும், பௌத்தராகிய சாக்கியரையும், இன்னும் இவர் போன்றோர் பலரையும், ஆசிரியர் சுந்தரமூர்த்தி நாயனார் வணங்கிப் பாடியி ருப்பதோடு, அவர்களின் திருவுருங்களுந் திருக்கோயில் கடோறும் வைத்து வணங்கப்படுகின்றன அல்லவோ?

இவ்வளவு சிறந்த சீர்திருத்தங்கள் இக்காலத்தவராற் புதியனபோற் சொல்லப்படினும், நம் சைவசமயப் பெரியாராற் பன்னூறூண்டுகட்கு முன்னமே வெறும் வாய்ப்பேச்சாய் இல்லாமற் செய்கையிலேயே காட்டப்பட்டு நிலை பேறுற்றிருத்தலைக் கண்டா யினும், நம்மவர்கள் சீர்திருந்துவார்களாக!

அன்பொழுக்க அருளழுக்கங்களோ டொத்த எல்லாச் சீர்திருத்தங்களும் முன்னமே சைவசமயா சிரியர் களாற் செய்யப்பட்டிருத்தலை நன்குணர் வார்களாற் புது நாகரிகக்காரர்கள் சைவசமயாசிரி யரைச் சிறிதுங் குறைகூறார். பிற்காலத்தில் ஆரியப் பார்ப்பனர் தம்மை உயர்த்தித் தமிழர்கள் எல்லாரையுந் தாழ்த்தி, அவர் களைச் சாதிச்சண்டை சமயச் சண்டைகளில் நுழைய விட்டுத், தாம் அவர்களுக்குத் தலைவராக நின்று கொள் ளுதற் பொருட்டே கட்டிவைத்த பொய்யான சைவ வைணவ புராண கதைகளே, சைவசமயாசிரியர் செய்த சீர்திருத்தங்க ளுக்குப் பெருந்தடையாய் நிற்கின்றன வென்றும், பொய்யும் புரட்டும் மலிந்த புராண கதைகளை இறுகப்பிடித்திருக்கும் பௌராணிக சைவமானது சைவ சமயாசிரியரும் சைவ சாந்தானா சிரியர் மெய்கண்ட தேவரும் நிலைநிறுத்திய சைவ சிந்தாந்தத்துக்குச் சிறிதும் உடன்பாடாகாதென்றும், பண்டை ஆசிரியர்கொண்ட சைவ சித்தாந்த உண்மை களையே எங்கள் ஆசிரியர் மறைமலையடிகள் சென்ற முப்பத்தைந்து ஆண்டுகளாக எங்கும் பரவச்செய்து வருகின்றாரென்றும், போலிச் சைவர்களும் புது நாகரிகக்காரர்களு முணர்ந்து கொள்வார்களாக!)

IV. தமிழ்

15. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே தமிழ்மொழிக்கே முதன்மை இருத்தல் வேண்டுமென்றும் அங்ஙனம் செய்தலையே தமது கடனாகக் கொள்ளல் வேண்டுமென்றுஞ் செட்டி நாட்டுத் தமிழ்மன்னராகிய சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களை இக்கழகம் வேண்டிக் கொள்கிறது.

16. சென்னைப் பல்கலைக்கழகத்தார் தமிழ் மொழிக்கு இன்னுந் தலைமை தராதிருப்பதற்காக இக்கழகத்தார் வருந்துவதுடன், தமிழ்நாட்டிலே தமிழுக்கே முதன்மை இருக்க வேண்டுமென வற்புறுத்தி, இனித்தமிழை உயர்தனிச் செம்மொழியாகக் கொண்டு செய்ய வேண்டுவனவற்றைச் செய்ய முற்பட வேண்டு மெனவும் அவர் தம்மை இக்கழகம் வேண்டுகின்றது.

17. தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. சிறப்பு வகுப்புக்க (B.A. Honours Course)) ஏற்படுத்தல் வேண்டு மெனச் சென்னைப் பல்கலைக்கழகத்தாரையும், பொது வாக எல்லாக் கல்லூரித் தலைவர்களையுஞ் சிறப்பாகப் பச்சையப்பன் கல்லூரித் தலைவரையும் இக்கழகம் கேட்டுக் கொள்கின்றது.

குறிப்பு: “ பொதுநிலைக் கழக அறிக்கை என்னும் இந்நூலைத் தந்து உதவியவர் மறைமலையடிகளார் பெயரன் மறை. தி. தாயுமானவன் ஆவார். அவர் கைப்பேசி : 8939416182

Pin It