ஒரு இராசீவ் காந்தி உயிர் போனதற்காக ஓர் இனத்தையே ஈழத்தில் அழித்திட இலங்கைப் போரில் இந்தியா பங்கு கொண்டது. இந்திய அரசும் வடநாட்டு ஊடகங்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும் குற்றப்பரம் பரையினர் போல் இன்று வரை சித்தரித்து வருகின்றன.

இராசீவ் காந்தி கொலைக்குப்பின் செயலலிதாவும் கருணாநிதியும் அவரவர் ஆட்சிக் காலத்தில் அந்தக் கொலையை சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு தமிழின உணர்வு அமைப்புகளுக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்தனர். கூட்டங்களுக்குத் தடை, கூட்டங்களில் பேசியோர்க்குச் சிறை என்று சனநாயக உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பொடாச் சட்டத்தை ஏவினார் செயலலிதா! பொடாச் சட்டம் நீக்கப்பட்டுவிட்டதால் பின்னர் முதல்வரான கருணாநிதி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும், குண்டர் தடுப்புச் சட்டத்தையும் ஏவினார்.

இத்தனை உரிமைப் பறிப்புகளும் சனநாயக மறுப்புகளும், இராசீவ்காந்தி கொலையுண்ட பின்னணியில் உருவாக்கப்பட்ட பொதுமக்கள் அனுதாபத்தைப் பயன்படுத்தியே ஆட்சியாளர்களால் அரங்கேற்றப்பட்டன.

ஆனால் இப்போது அந்த இராசீவ்காந்தி கொலை வழக்கில் அப்பாவிகளே தண்டிக்கப்பட்டுள்ளனர்; தூக்குக் கொட்டடியிலும் கொடுஞ்சிறையிலும் இருபத்திரண்டு ஆண்டுகளாக அப்பாவிகளே வதைபடுகின்றனர் என்ற உண்மைகள் வெளிவந்துள்ளன.

ஒப்புதல் வாக்கு மூலம் - கொலைச் சதி என்ற இரண்டு கற்கள் மீது இவ்வழக்கு கட்டப்பட்டது. இவ்விரண்டும் பொய்யாகப் புனையப் பட்டவை என்பதை அவ்வழக்கை விசாரித்த அதிகாரி தியாகராசனின் ஒப்புதல் வாக்கு மூலமும், நீதிபதி கே.டி.தாமஸ் கூற்றும் மெய்ப்பிக்கின்றன.

ஒப்புதல் வாக்கு மூலம் சாதாரணமாகப் பேசி வாங்கப்படுவதில்லை. பிடித்து வைத்துள்ள நபரை அம்மணமாகத் தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டு, கீழே நெருப்பு மூட்டி அனல் தாவச் செய்தல், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வயர்களை ஆண் அல்லது பெண் உறுப்பில் சொருகுதல், உடம்பெங்கும் மின்அதிர்வுகளைப் பாய்ச்சுதல், அம்மணமாகக் கீழே படுக்க வைத்து, அந்த நபர் மீது இரு காவலர்கள் ஏறி நின்று கொள்வது ஒரு காவலர் அந்த நபரின் குதிகாலில் அடித்துக் கொண்டே இருப்பது (லாடம் கட்டுதல்), அடித்துக்காயப்படுத்தி, தண்ணீர் ஊற்றப்பட்ட அறைக்குள் அம்மணமாக இருக்கச் செய்தல் போன்ற பலவகையான கொடுஞ்சித்திரவதைகள் செய்த பின்னர், காவல் அதிகாரிகள் சொல்லும் குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளும் கட்டாயத்தை அந்நபருக்கு உண்டாக்குவார்கள். இப்படிப் பெறப்படும் ஒப்புதல் வாக்கு மூலம் குற்றஞ்சாட்டப்பட்டவர் மனம் திருந்தி, குற்றத்தை ஒப்புக் கொண்டதால் கொடுக்கப்பட்டது என்று சட்டம் கூறுகிறது.

சென்னை அடையாற்றில் உள்ள அழகான மல்லிகை மாளிகைதான் - மேலே சொல்லப்பட்ட சித்திரவதை முகாமாக, சிறப்புப் புலனாய்வுக் குழுத்தலைவர் கார்த்திகேயனால் மாற்றப்பட்டது. அங்கு வைத்துதான் பேரறிவாளன் உள்ளிட்ட பதினாறு பேரிடம் தியாகராசன் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கினார்.

பணி ஓய்வு பெற்ற தியாகராசனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது; பேரறிவாளன் சொல்லாத ஒன்றை சொன்னதாக எழுதி நாம் அவரிடம் கையெழுத்து வாங்கி, ஒப்புதல் வாக்கு மூலம் தயாரித்துவிட்டோம்; அதனால் அவர் தூக்கிலிடப் படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தாம் செய்தது அறம் தவறிய செயல் என்று வருந்தி, இப்போது ஊடகங்களில், “உயிர்வலி’’ என்ற ஆவணப்படத்தில் பேசிவிட்டார். இலண்டன் பி.பி.சி. தமிழ் ஒலிபரப்பு உலகெங்கும் தியாகராசனின் நேர்காணலைக் காற்றலையில் பரப்பிவிட்டது.

“சிவராசனுக்குப் பேட்டரி வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அது என்ன காரியத்திற்காகத் தேவைப்பட்டது என்று அவர் என்னிடம் சொல்லவில்லை; அவர் இராசீவ் காந்தியைக் கொல்வதற்கான வெடிகுண்டை இயக்குவதற்காக இந்த பேட்டரியைப் பயன்படுத்தப் போகிறார் என்ற செய்தி எனக்குத் தெரியாது.” என்று பேரறிவாளன் சொன்னதைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன் என்று இப்போது தியாகராசன் கூறுகிறார்.  “ஏன் அந்தத்தவற்றை செய்தீர்கள்” என்று கேட்டதற்கு “அவ்வாறு நான் செய்யாமல், அறிவு சொன்னதை அப்படியே எழுதியிருந்தால் அவர் குற்றம் செய்ததாக ஆகாது. குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டு சொல்வதுதான் ஒப்புதல் வாக்கு மூலம்; எனக்கு மேலதிகாரிகள் இட்டபணி ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கவேண்டும் என்பதுதான்; காவல்துறை எப்போதுமே தனது வழக்குத் தயாரிப்புக்கு இசைவாகவே ஒப்புதல் வாக்கு மூலம் தயாரிக்கும். அதைத்தான் அறிவு விசயத்திலும் நான் செய்தேன். ஆனால் அது ஓர் உயிரை வாங்கப் போகிறது என்று தெரிந்ததும் உறுத்தல் ஏற்பட்டது; தூக்கம் போனது; அறம் தவறக்கூடாது என்பதற்காக உண்மையைச் சொல்கிறேன்” என்கிறார் தியாகராசன்.

இராசீவ் கொலை வழக்கில் உருப்படியான சாட்சியமும் கிடைக்கவில்லை; தடயமும் கிடைக்கவில்லை. மிக முகாமையான தடயம் இராசீவ்காந்தியை கொன்ற இடைவார்க் குண்டு (பெல்ட் பாம்). அந்த வெடிகுண்டு எங்கே தயாரிக்கப்பட்டது. யார் யாரால் தயாரிக்கப்பட்டது. என்ற விவரமே கிடைக்கவில்லை என்று இன்னொரு விசாரணை அதிகாரியான இரகோத்தமன் கூறுகிறார். இக்கருத்து உச்சநீதிமன்றத் தீர்ப்புரையிலும் இடம் பெற்றுள்ளது.

இன்னொரு முகாமையான விவரம், இராசீவ் காந்தியைக் கொலை செய்ய உள்ள செய்தியைத் தமிழ்நாட்டில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று 7.5.1991 அன்று தமிழ் ஈழத்திற்கு சிவராசன் கமுக்கக் குறியீட்டு மொழியில் கம்பியில் லாத தொலைபேசி மூலம் பேசிய செய்தியாகும். இந்த செய்திப் பதிவு பின்னர் எடுக்கப்பட்டு இந்திய உளவுத்துறையால் படிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், காத்ரி, கே.டி.தாமஸ், வாத்வா ஆகிய மூன்று நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்தனர். இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் கே.டி. தாமஸ். அவர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் கடந்த சில ஆண்டுகளாக, ராஜீவ்கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களைத் தூக்கிலடக் கூடாது, வாழ்நாள் தண்டனையாக அதை மாற்றவேண்டும் என்று கோரிவருகிறார். அது பொதுவான மரண தண்டனை ஒழிப்புக்குரல் மட்டுமன்று. குற்ற உணர்வின் வெளிப்பாடாகவும் உள்ளது. அவர் இப்போது சொல்கிறார்:“7.5.1991 அன்று சிவராசன் விடுதலைப் புலிகள் தலைமையகத்துடன் தொடர்புகொண்டு பேசியபோது குறிப்பிட்ட செயல் பற்றி தமிழ்நாட்டில் யாருக்கும் தெரிவிக்க வில்லை என்று கூறியுள்ளார். இது காவல்துறையின் குற்ற அறிக்கையில் இருந்தது. ஆனால் அதை நாங்கள் பொருட் படுத்தாமல் விட்டுவிட்டோம்” என்கிறார்.

நீதிபதிகள் அதைப் பொருட்படுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இராசீவ்காந்தியைக் கொள்வதற்கான சதி ஆலோசனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளவில்லை என்றாகும். அதாவது சி.பி.ஐ. போட்ட 120B என்ற குற்றச் சதி மெய்ப்பிக்கப்படாமல் போயிருக்கும். 120B செல்லாததாகி, ஒப்புதல் வாக்கு மூலங்கள், காவல்துறை அதிகாரியின் விருப்பப்படி தயாரிக்கப்பட்டவை என்று ஆகிவிட்டால் பின்னர் இந்த வழக்கில் யார் மீதான குற்றச்சாட்டும் நிற்காது. புனையப்பட்ட இந்த பொய் வழக்குக் கட்டடம் தானாகவே பொலபொலவெனச் சரிந்து விழுந்து மண்மேடாகி விடும்!

தமிழ்நாட்டுத் தடியன் கார்த்திகேயனுக்கு மட்டும் மனச்சான்று உறுத்தவே இல்லை. ஏதோ மனிதஉரிமை மாமேதை போல பொதுவாக மரணத்தண்டனை வேண்டாம் என்பதே தனது விருப்பம் என்று பசப்பி வருகிறார். கார்த்திகேயன் ஓர் அரம்ப (ரவுடி) அதிகாரியாகச் செயல்பட்டவர் என்பது அண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி மூலம் அம்பல மானது. நேர்படப் பேசு விவாதத்தில் கலந்து கொண்டு, “என்ன விளையாடுறீங்களா, எதுக்காக இந்த நிகழ்ச்சி! சட்டம் கோர்ட்டு, எல்லாம் சும்மாவா? நீங்க நெனச்சா மறுவிசாரணை வேண்டுமா? அதெல்லாம் நடக்காது” என்று கார்த்திகேயன் போட்ட கூச்சல் காற்றலையில் உலகத்துக்கே கேட்டது!

திரும்பெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் இராசீவ் காந்தி நிகழ்ச்சிகள்- கொலை நிகழ்வு உட்பட அனைத்தும் காணொலிப் படமாக்கப்பட்டுள்ளது (வீடியோ). அந்தக் காணொலிப் படப்பதிவை அன்றைய சி.பி.ஐ. இயக்குநர் எம்.கே. நாரயணன் எடுத்துக் கொண்டு போனார். அதைப் புலன் விசாரணைக்கு அவர் தரவே இல்லை; நீதி மன்றத்திலும் அதைத் தாக்கல் செய்யவில்லை ஏன்? எதை மறைப்பதற்காக - யாரைப் பாதுகாப்பதற்காக அந்த காணொலி அப்புறப்படுத்தப்பட்டது?

மல்லிகையில் நடந்த ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கும் நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டன. அது அப்படியே நீதிமன்றத்தில் தரப்படவில்லை. புலனாய்வுப் பிரிவினர் அதை வெட்டி ஒட்டி “எடிட்” செய்துதான் கொடுத்தார்கள் என்கிறார் இன்னொரு விசாரணை அதிகாரியான மோகன் ராஜ். என்னென்ன உண்மைகளை மறைக்க இத்தனை திருட்டுத்தனங்களை சி.பி.ஐ.யும் இந்திய ஆட்சியாளர்களும் செய்தார்கள்?

இராசீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் அதிகாரிகளும், தீர்ப்பளிப்பதில் நீதிபதிகளும் சட்டத்தைக் கடைபிடிக்க வில்லை. கொல்லப்பட்டவர் இராசீவ்காந்தி, நேருவின் பேரன். இந்திராவின் மகன் - முன்னாள் பிரதமர் என்ற அடிப்படையில் “அரண்மனை விசுவாசத்தை” மட்டுமே அளவுகோலாக வைத்துள்ளனர்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்; பத்து குற்றவாளிகள் தப்பினாலும் ஓர் அப்பாவி தண்டிக்கப்படக் கூடாது என்று ஆட்சியாளர்களும் நீதித்துறையினரும் பேசுவ தெல்லாம் வெறும் பசப்புச் சொற்கள் என்பது ஐயம் திரிபற மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகளும் தங்கள் தீர்ப்புரையில், “இராசீவ் கொலைகாரர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்பது தேசத்தின் கூட்டுமனச் சான்றின் விருப்பம் ஆகும்” என்று கூறியுள்ளார்கள். ஒருகொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் குற்றவாளிகள் என்பது ஐயம் திரிபற மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்பது தான் சட்டத்தின் தேவை. பொதுமக்கள் விரும்புகிறார்கள். எனவே சில பேரையாவது தூக்கில் போடவேண்டும்; சில பேர்க்காவது வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்பது சட்டத்தின் வற்புறுத்தல் அன்று. இந்திய நீதித்துறையின் மிக உச்சத்தில் உட்கார்ந்திருக்கும் கற்றறிந்த நீதிபதிகளே, இராசீவ் காந்தி கொலை வழக்கில் சில பேரையாவது தூக்கில் போடவேண்டும் என்பது பொதுமக்கள் விருப்பம் என்று கூறினால் இந்நாட்டில் நீதி என்ன யோக்கியதையில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இந்திராகாந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் “பொது மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக “நாலைந்து பேரைத் தூக்கிலிடவில்லை; நாலைந்து பேர்க்கு வாழ்நாள் தண்டனை வழங்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். தமிழ் இனத்திற்கு எதிராக வரும்போது இந்தியா எல்லா நிலையிலும் இனக் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்கிறது. இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஆரியத்தின் சூழ்ச்சியா?

1980 ஆம் ஆண்டு பச்சன் சிங் வழக்கில் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, மரண தண்டனை வழங்குவது பற்றித் திருப்புமுனைத் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. கொலைக்குற்றம் மெய்ப்பிக்கப்பட்டாலும் சகட்டுமேனிக்கு எல்லாருக்கும் தூக்குத் தண்டனை வழங்கக்கூடாது. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று அத்தீர்ப்பு வரம்பு கட்டியது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மரணதண்டனை முற்றாக நீக்கப்பட்ட நிலையில், அத்திசையைநோக்கி இந்தியாவும் நகர்வதற்காக அடியெடுத்து வைக்கப்பட்டதே அத்தீர்ப்பு.

கொலை நடந்த போது, அக்குற்றத்தில் ஈடுபட்டோர் மனநிலை - சிறைத் தண்டனை பெற்று விடுதலையானால் அவர்கள் திருந்தி வாழ்வார்கள் என்ற நம்பிக்கை ஆகியவை குறித்து சாதகமான நிலைமைகள் இருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது; சிறைத் தண்டனைதான் வழங்க வேண்டும் என்று அத்தீர்ப்புக் கூறியது. ஐந்து நீதிபதிகளின் இத்தீர்ப்பைப் புறக்கணித்துவிட்டு அரண்மனை விசுவாசத்தைக் காட்டுவதற்காக மூன்று நீதிபதிகள், பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்று காரணம் கூறி நளினி, சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகிய நான்கு பேர்க்கும் மரண தண்டனை வழங்கினார்கள். நளினிக்கு மட்டும் மரண தண்டனை வாழ்நாள் தண்டனையாக பின்னர் தமிழக அரசால் மாற்றப்பட்டது.

புலன் விசாரணை - நீதித் துறையின் தீர்ப்பு ஆகிவற்றில் ஏற்பட்டுவிட்ட இத்தனை அநீதிகளையும் ஓரளவாவது சரி செய்வதற்கான வாய்ப்பு அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவர்க்கு வழங்கப்பட்டிருகிறது. குடியரசுத் தலைவர் என்பது நடைமுறையில் நடுவண் அரசு என்று பொருள்படும்! ஆனால் நடுவண் அரசு குடியரசுத் தலைவர் மூலம், பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனுக்களை ஏற்க மறுத்தது; தூக்கிலிட நாள் குறித்தது.

தூக்கை நிறைவேற்றாமல் தடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கப்பட்டது. ஆனால் அவ்வழக்கைத் தானே விசாரித்து முடிவு செய்வதாக உச்சநீதிமன்றம் தன் விருப்பத்தின் பேரில் எடுத்துக் கொண்டுள்ளது.

நீதிபதி கே.டி.தாமஸ், விசாரணை அதிகாரிகள் வி.தியாகராசன், மோகன்ராஜ், இரகோத்தமன் ஆகியோர் நடந்துள்ள தவறுகளை ஒப்புக்கொண்ட பிறகு, இனி உச்ச நீதிமன்றம் கருணை மனு மீதான தீர்ப்பு வழங்கட்டும் என்று நாம் காத்திருக்கக் கூடாது.

இராசீவ் காந்தி கொலை வழக்கு நூற்றுக்கு நூறு பொய்வழக்காகப் புனையப்பட்டு அப்பாவிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இனி நமது கோரிக்கை, கருணை மனுவை ஏற்றுக் கொள்க என்பதல்ல.

1. இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரும் அப்பாவிகள் என்று அறிவித்து அவர்கள் அனை வரையும் அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்ததாக குடியரசுத் தலைவர் அறிவிக்க வேண்டும். அரசமைப்புச் சட்ட விதி 72 அதற்கான முழு அதிகாரத்தை குடியரசுத் தலைவர்க்கு வழங்கியுள்ளது.

2. தவறாகத் தண்டிக்கப்பட்டு 22 ஆண்டுகள் மரணதண்டனைக் கொட்டடியில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதுடன் அவர்களுக்குத் தலா பத்து கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை இந்திய அரசு வழங்க வேண்டும்.

வாழ்நாள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் நளினி, அருப்புக் கோட்டை இரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ், செயக்குமார் ஆகியோரையும் உடனடியாக விடுதலை செய்து இழப்பீட்டுத் தொகையாக தலா ரூபாய் பத்து கோடி இந்திய அரசு வழங்க வேண்டும்.

3. ஏற்கெனவே சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டதாக விடுதலை செய்ப்பட்டுள்ள 19 பேர்க்கும் தலா ஐந்து கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை இந்திய அரசு வழங்க வேண்டும்.

4. இந்திய அரசு உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமை இயக்க வல்லுநர்களையும் கொண்ட விசாரணை ஆணையம் அமைத்து இராசீவ் கொலை வழக்கு விசாரணையில் பொய்வழக்குப் புனைய காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு இந்தக் கோரிக்கைகளைத் தீர்மானமாக சட்டப் பேரவையில் நிறை வேற்றி பிரதமருக்கும் குடியரசுத் தலைவர்க்கும் அனுப்ப வேண்டும்.

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இன உணர்வு அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் இக்கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றவில்லையெனில் இராசீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் வைக்கப்பட்டுள்ள சிறைச் சாலைகளை பல்லாயிரக் கணக்கில் - இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு முற்றுகையிட வேண்டும்!

Pin It