(சென்ற இதழ் தொடர்ச்சி)

இலங்கையில் இராமாயண கதை மிகப்பர வலாக வழங்கி வரவில்லை. (பக்கம் 50) என்று குறிப்பிடுகின்றார்.

பேராசிரியர் எச்.டி.சங்காலியா லங்கா என்பது இலங்கையோ அல்லது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவுகளில் ஒன்றோ என்று கருதுவது இராமய ணத்தை ஆழ்ந்து படிக்காமலும் புவியியல், மொழியி யல், தொல்லியல், பண்பாட்டியல் ஆகியவற்றை கணக் கில் கொள்ளாமல் செய்யப்படும் முடிவே ஆகும் என்று கூறுகிறார். (பக்கம் 51).

பேராசிரியர் சங்காலியா மேலும் ராமன் (Rama) என்ற பெயர் பல்லவர் காலம் வரை தமிழகத்தில் அறி யப்படவில்லை. சோழர் காலத் தில் நான்கு இடங்களில் மட்டும் குறிப்பிடப்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார். (பக்கம் 52) இராமேஸ்வரம் கோவில் மிகப் பழமை யானது அல்ல (பக்கம் 53) என்றும் குறிப்பிடுகிறார். கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன் கோவிலில் தான் முதல் முதல் இராமாயணக் கதை சிற்பத்தில் வடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார் (பக்கம் 53)

பேராசிரியர் சங்காலியா இரா மாயணத்தில் குறிப்பிடப் படும் இராமர் கட்டிய பாலம் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கட்டப்பட்டது அல்ல என்று குறிப்பிடுகிறார். இந்த பகுதி தட்டையாக தாழ்வான மணல் பகுதியாகும் என்றும், இந்த பகுதியில் கல் கிடையாது என்றும், மரங்களும் அரிது என்றும் குறிப்பிடுகிறார். இங்கு கடலில் காணப்படும் மணல் மேடு என்பது பழமையானது. இது ஆஸ்திரே லியா வரை அமைந் துள்ளது. இது பற்றிய கடல்கள் ஆய்வுகள் 1964ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். (பக்கம் 49).

பேராசிரியர் எச்.டி.சங்காலியா, டி.பரமசிவம் ஐயர் மற்றும் ஆய்வாளர்கள் இராமாயணத்தில் குறிப்பிடப் படும் லங்கா என்பது இலங்கை அல்ல என்றும் திட்ட வட்டமாக ஆய்வு செய்து குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே இராமேஸ் வரத்தில் பாலம் இராமர் கட்டவில்லை என்றும் தெளிவு படக் கூறியுள்ளார்கள்.

இராமனைக் கடவுளாக வழி படத் தொடங்கியதும், விஷ்ணுவின் அவதாரமாக கொள்ளப்பட்டதும், பிற்காலத்தியது என்பர் ஆய்வாளர். பேராசிரியர் ஆர்.ஜி.பண்டாரகர் தனது Early History of Deccan நூலில். இராமன் கடவுளாக உயர்த்தப் பட்டது பிற் காலத்திலே என்பதை பேராசிரியர் ஏ.எல். பாஷம் “முஸ் லீம் ஆக்கிரமிப்பு ஏற்பட்ட பின்பு தான் ராமன் வழிபாட்டு மரபு (சிuறீt) பிரபலமாகி றது’’. (The Wonder that was India பக்கம் 306) என்று கூறுவதன் மூலம் உறுதி செய்கிறார். பேராசிரியர் பாஷமின் மேற்கண்ட கூற்றில் இன்றைய அரசியலுக்கான மூலக் கூறு அடங்கியுள்ளது என்பதை உணரலாம்.

இராமாயணக் கதை தமிழ் நாட்டில் சங்க காலத்தில் அறியப்பட்டிருந்தது என்பதை புறநானுறு 378ஆம் பாடலும், அகநானுறு 70ஆம் பாடலும் காட்டும். இது பற்றிய குறிப்பினை மு.இராக வையங்காரின் ஆராய்ச்சி தொகுதி தொகுப்பில் உள்ள ”இராம யணமும், தமிழ் வழக்குகளும்” (1935) என்ற கட்டுரை விளக்கமாகக் காட்டும். “பிராட்டி (சீதை) இடை வழியில் போட்ட அணிகளை வானரர் கள்கண் டெடுத்து அவற்றை அணிமுறைய றியாமல் விரலணிகளை செவியி லும், செவி யணிகளை விரலிலும், அரை யணி களை கழுத்திலும், கழுத்தணிகளை அரையிலுமாக மாறி அணிந்தனர் என்ற இராமா யண செய்தியை உவமைப் படுத்தி யிருப்பது காணலாம். இவ்வரிய செய்தி வேறெங்கும் காணப்படா ததாகும்.” என்று கூறுகிறார் (ஆராய்ச்சி தொகுதி பக்கம் 28) (புறநானுறு 378)

மேலும் “அவர் வால்மீகி இரா மாயணத்தில் வழங்காத மற்றொரு வரலாறு சங்க செய்யுளில் பயில்வ தாகும், அதாவது: தனுஷ்கோடி கடற்கரையில் ஆலமரமொன்றன் கீழ் இராமபிரான் தங்கி மேல் நடத்தற்குரிய யுத்த காரியங்களைப் பற்றி வானர வீரர்களிடம் ஆலோசனை புரிந்தனரென்றும் அப்போது அவ்வனத்தில் வாழ்ந்த பறவை களின் கலப்போசை அதிகமாகி ஒருவர் சொல்வது மற்றவர்க்கு கேட்காதபடி இடையூறு விளை வித்தனவாக, பெருமாள் அவற்றை தம் திருக்கையாலமர்த்தி அவ் வொலி முழுவதும் அடங்கும்படி செய்தனரென்றும்’’ (ஆராய்ச்சி தொகுதி பக்கம்: 29) அகநானூறு 70ஆம் பாடலில் உள்ள செய்தியை குறித்து மேற்கண்டவாறு எழுதி யுள்ளார்.

மேற்கண்ட இரண்டு சங்க குறிப்புகளும் இராமாயண கதை தமிழ்நாட்டில் வழங்கி வந்தது என்பதை காட்டுகிறது. அகநானூறு பாடலில் தனுஷ்கோடியில் இராமர் தங்கியிருந்தார் என்ற குறிப்பு வால்மீகி குறிப்பிடாதது என்று மு.இராகவைங்கார் குறிப்பிடுகிறார். ஆகவே இராமாயணம் தொடர் பான செய்திகள் பல இடங்களில் பலவிதமாக வழங்கி வந்தன என்பது தெரிய வருகிறது. உண்மையில் இராமன் தனுஷ்கோடி வந்து தங்கி இருந்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில், வால்மீகி கட்டாயம் இராமயணத்தில் குறிப்பிட்டிருப் பார்.

மேலும் மு.இராகவையங்கார் தொண்டரடிபொடியாழ்வார் (27)இல் இராமன் பாலம் கட்டிய காலத்தில் அணில் தன் உடம்பில் ஒட்டிய மணலை கொண்டு வந்து கடலில் சேர்த்து உதவி புரிந்தது.

“குரங்குகள் மலையை நூக்க குளித்துத் தாம் புரண்டிட்டோடித்

தரங்க நீ ஏடைக்கலுற்ற சலனமிலா அணிலம் போல்வேன்”.

இக்கதை வேறு வடநூற்களில் காணப்படாத தொன்றாகும். என்று குறிப்பிட்டு அடி குறிப்பாக பேராசிரியர் காளிதாஸ் நாக் சென்னை பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய உரையில் ஜாவா, சுமத்திரா தீவுகளில் வழங்கும் இராமாயணத்தில் இந்த அணில் கதை கூறப்பட்டுள்ளதை குறிப் பிட்டு அதற்கு தென்னாட்டு வழக்கு ஆதாரம் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார் (ஆராய்ச்சி தொகுதி பக்கம் 25).

இது போன்ற கதைகள் வழங்கி வருவது இராமாயணம் ஒரு கட்டுத்திட்டமான கதையல்ல. மாறாக விரிவு படுத்தப்பட்ட கதையாகும் என்பது உறுதி செய்யப் படு கிறது. ஆதியில் மத்திய பிரதேசத்தில் விந்திய மலைக்கு வடக்கே நிகழ்ந்த இராமா யண கதை. தென்னிந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, இலங்கை வரை நீடிக்கப் பட்டுள்ளது. இயற் கையாய் அமைந்த ஆதாம் பாலம் என்பது இராமர் கட்டிய பாலம் என்று கதை நிகழ்ச்சி விரிவாக்கப்பட்டது. இதற் கான உண்மையான காரணங்களை இதுவரை ஆய்வு செய்யப்பட வில்லை.

இந்து மதம் என்ற ஒன்றை உருவாக்கியவர்கள் இந்தியா முழுமைக்குமான ஒரு பொது அடையாளம் தேவை என்பதை கருதி இராமர் இதற்கு பொருத்தமான நபர் என்று இத்தகைய விஸ்தரிப்பு கதை மாற்றத்தை செய்திருக்கலாம். பேராசிரியர் ஏ.எல்.பாஷம் குறிப்பிட்டதைப் போல முஸ்லீம் ஆட்சிக்கு எதிரான ஒரு கட்டமைப்பாகவும், இராமர் கதை நீட்சி நடந்திருக்கலாம். முதன்முதல் கிடைத்த இராமாயணம் நூல் பிரதி கி.பி.1020இல் கிடைத்தது என்று எச்.டி.சங் காலியா குறிப்பிடுகிறார். இதன் பின்புதான் இராமாயணத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. இராமாயணக் கதைகள் தென்கிழக்கு ஆசிய நாடு களில் வழங்கி வருகின்றன. அதனைக் கொண்டு இராமாயண நிகழ்ச்சி அந்த நாடுகளில் நிகழ்ந்தது என்று கொள்ள முடியாது அல்லவா?

Pin It