ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது இயற்கையாக இருக்கும் காடுகள்தாம். காலங்காலமாகக் காடுகளை மக்கள் பாதுகாத்தும், பயன் படுத்தியும் வாழ்ந்து வருகிறார்கள். வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு காடுகளும், காடு சார்ந்த நிலமும் சமூகச் சொத்தாகவும், உரிமையாகவும் இருந்தது,

காடுகள் எவருக்கும் சொந்தமாக இருந்தது கிடையாது. இந்தியாவைக் கொள்ளை யடிக்க வந்த வெள்ளையர்கள் வன நிலங்களை தனி உடைமையாக்கினார்கள். வனத்தி லிருந்து கிடைக்கும் செல்வங்களை கொள்ளையடிக்கும் தந்திரங்களை கையாண்டார் கள். மக்களின் சமூகச் சொத்தாக இருந்த வனமும், வனம் சார்ந்த நிலமும் வணிகப் பொருளாக மாற்றப்பட்டது. அடர்ந்த காடுகள் பெருமளவில் வெட்டி அழிக்கப்பட்டன; வெள்ளையர் ஆட்சியின் போதுதான். வெள்ளையர் தங்கள் நாட்டிற்கு தேவையான தேக்கு, அகில், சந்தனம், ஈட்டி, கோங்கு, போன்ற மரங்களை கப்பல் கப்பலாக கொண்டு சென்றார்கள். ஆரம்பத்தில் இருப்புப் பாதை போடுவதற்கு வெள்ளையர்கள் காடுகளை அழித்து தேக்கு மரக் கட்டைகளைக் கொண்டு இருப்புப் பாதைப் போட்டார்கள். பழங்குடி மக்களிடமிருந்து வன நிலங்களைப் பறித்து பெரும் முதலாளிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் நீண்ட கால குத்தகைக்கு (99 ஆண்டு) கொடுத்தார்கள். அதுவும் மிகக் குறைந்த குத்தகைக்கு வன நிலங்களைக் கொடுத்தார்கள்.

“சுதந்திர” இந்திய அரசும் வெள்ளையர்களின் வனக் கொள்கையையே கடைபிடித்தது. பழங்குடி மக்களிடமிருந்து காடுகள் பறிக்கப்பட்டன. தமிழக அரசும் இதே பாதையில்தான் சென்றது.

1995க்குப் பிறகு பழங்குடி மக்களை வன ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து பெருமளவில் வெளியேற்றியது. இதனை எதிர்த்துப் பழங்குடி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நடத்தினர். இவற்றின் காரணமாக சில பாதுகாப்புகளைப் பெற்றனர்.

புலிகள் காப்பகம்

ஆயினும் அரசின் பழங்குடி மக்கள் பகைப் போக்கு புதிய வடிவங்களை எடுத்தது அவற்றுள் ஒன்றாக தமிழக அரசு கடந்த 31.12. 2007 அன்று அரசு ஆணை மூலம்(G.o. Ms. No 145) ஆனை மலைப் பகுதியில் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள வனப் பகுதியை புலிகள் புகலிடமாக(critical wildlife habitat) அறிவித்து மேலும் 34 வனக் கிராமங்களில் சுமார் 7000 ஏழாயிரம் மக்களை வெளியேற்றப் போவதாகவும் இங்கு வாழும் பொதுமக்களுக்கு மறுவாழ்வு திட்டமாக குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 இலட்சம் வீதம் வழங்க போவதாகவும் வனத்துறை அதிகாரிகளும் வருவாய் துறை அதிகாரிகளும் நாளேடுகளில் செய்திகளை வெளியிட்டார்கள். இதே போன்று சத்திய மங்கலம் வனப் பகுதியையும் தற்போது புலிகள் காப்பகமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே 1962 இல் முண்டந்துறை புலிகள் காப்பகம் 567.50 ச.கி. மீட்டர் பரப்பிலும் களக்காடு புலிகள் காப்பகம் 327. 61 ச.கி. மீட்டர் பரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த ஆணை வனச் சட்டத்திற்கு எதிரானது. மத்திய அரசின் வனப்பாதுகாப்புச் சட்டம் 1972 இல் 38 ஆவது பிரிவில் உட்பிரிவு 5(4)ன்படி எந்த ஒரு வனப்பகுதியையும் புலிகள் புகலிடமாக அறிவிக்கும் முன்பு அரசு ஒரு நிபுணர் குழுவை (விலங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள) ஏற்படுத்தி அந்தக் குழுவின் ஆய்வறிக்கையைப் பெற்று எவ்வளவு பரப்பளவு கொண்ட வனப்பகுதி தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் ஆதிவாசி மக்களின் வனவுரி மைகள் எந்த வகையிலும் பாதிக்காமல் அங்கு வாழும் மக்களோடு கலந்து பேசி கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்திய பிறகே புகலிடமாக (critical wild life habitat) அறிவிக்க வேண்டும்.

ஆனால் தமிழக அரசோ நடுவண் அரசின் வனச் சட்ட விதிகளையெல்லாம் பின்பற்றாமல் ஆனைமலைப் பகுதியையும் சத்திய மங்கலம் வனப் பகுதியையும் புலிகள், புகலிடமாக அறிவித்தது. இது 1972 மற்றும் 2006 இல் இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய செயலாகும். சத்திய மங்கலம் வனப் பகுதியில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

இதே போன்று நமது ஆதிவாசிகள் விடுதலை முன்னணியின் சார்பில் ஆனைமலைப் பகுதியில் துண்டறிக்கைகள் மூலம் பிரச்சாரம் நடத்தினோம். உடுமலைப் பேட்டையில் பழங்குடி மக்களை திரட்டி 01.12.2008 அன்று மாநாடு நடத்தினோம். நீலகிரி மாவட்டம். மசினக் குடியிலும் மற்றும் மலைக் கிராமங்களிலும் புலிகள் காப்பகத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.

இந்நிலையில் வனச் சட்டங்களுக்குப் புறம்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் அனைத்தையும் புலிகள் புகலிடமாக செயலலிதா அரசு அறிவித்துள்ளது. இதனால் சத்தியமங்கலம், களக்காடு முண்டாந்துறை, ஆனைமலை, முதுமலை(நீலகிரி) ஆகிய மலைகளில் வாழும் பல லட்சக் கணக்கான பழங்குடி மக்களும் மற்றும் இதர வனம் சார்ந்து வாழும் மக்களும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். புலிகள் காப்பகப் பகுதியில் மக்கள் சுதந்திரமாக காடுகளுக்குள் சென்று; தேன், கடுக்காய், நெல்லிக்காய் போன்ற சிறுவன மகசூல் (minor forest produce) பொருட்களை சேகரிக்க முடியவில்லை. வனத்து றையினர் தடைவிதித்துள்ளனர். இப்போது தேனி மாவட்டம் மேகமலையையும், கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளையும் புலிகள் காப்பகமாக அறிவிப்பதற்கு செயலலிதா அரசு திட்டமிட்டு வருகிறது. புலிகள் காப்பக பகுதிகளிலுள்ள கிராம ஊராட்சி மன்றங்கள் யாவும் புலிகள் காப்பகத் திட்டத்தைக் கைவிடக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு தெரிவித்துள்ளன. அரசு இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. பழங்குடியினர் மற்றும் இதர வனவாழ் மக்களின் வனவுரிமை அங்கீகாரச் சட்டம் 2006 இன் படி கிராம சபை ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கக் கூடாது. அப்படி அறிவித்தால் இச்சட்டம் பிரிவு 7 இன் படி கிரிமினல் குற்ற மாகும்.

புலிகள் காப்பகத்தில் நடப்பது என்ன?

புலிகளையும் கானுயிர்களையும் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில் ராஜஸ்தானில் சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் ஒரு புலிக்கு ரூபாய் இரண்டு கோடிகள் வீதம் செலவு செய்தோம் எனக் கணக்கு காட்டியது வனத்துறை, நடுவண் அரசின் தணிக்கைத் துறை இந்த உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது. 2005 ஆம் வருடம் சரிஸ்கா புலிகள் காப்பகத்தை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் இங்கு ஒரு புலிகூட இல்லை யென்பதை கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.

நடுவண் அரசின் தலைமை தணிக்கை அதிகாரியின் 2001-2006 அறிக்கை தமிழகத்தில் நடந்த முறைகேட்டை அம்பலப்படுத்தியது. அதன் சாரம் வருமாறு:

திருநெல்வேலி மாவட்டம் மாஞ் சோலை வனப்பகுதியில் 8, 373. 57 ஏக்கர் நிலம் பாம்பே பர்மா டி.ரே.டி.ங் கம்பெனிக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் 99 வருட குத்தகைக்கு 1929 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் வழங்கப்பட்டது. தேயிலை, காப்பி மற்றும் பணப்பயிர்கள் மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும். மரங்கள் தவிர பிற அனைத்தும் சாகுபடி செய்யலாமென்றும், மழை தரும் அடர்ந்த காடுகள் 970 ஏக்கர் நிலப்பரப்பில் சங்கிலியாறு பகுதியில் இருப்பதை அழிக்கக் கூடாது என்றும் அதை மீறி அழித்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் நிபந்தனை விதித்து பாம்பே டையிங் முதலாளியின் பி.பி.டி.கம்பெனிக்கு குத்தகைக்கு வழங்கப் பட்டது. ஆனால் பி.பி.டி. நிறுவனம் அதை மீறி அடர்ந்த மழை தரும் காடுகளை அழித்து 249 ஏக்கர் சங்கிலியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியை அழித்து தேயிலைத் தோட்டமாக 1987 இல் மாற்றிவிட்டார்கள். இது குத்தகை ஒப்பந்ததிற்கு எதிரானது என தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியது.

ஆனால் இன்று வரை குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து வன நிலத்தை மீட்டெடுக்க களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் களக்காடு முண்டத்துரை புலிகள் காப்பகத்தில் புலிகள் பற்றிய கணக்கெடுப்பு 1989 இல் 22 புலிகள் இருந்தது என்றும் அது 1993- 1995 இல் 16 புலிகளாக குறைந்துவிட்டன என்றும் 1997இல் 28 புலிகள் இருந்தன என்றும் 2001 இல் 20 புலிகள் இருந்தது என்றும் கூறுவது புலிகள் பற்றிய கணக்கெடுப்பு நம்பக் கூடியதாக இல்லை யென்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புலிகள் காப்பகத்தில் வாழும் காணி பழங்குடி மக்கள் இதுவரை புலிகளைப் பார்த்ததே இல்லை என்று கூறுகிறார்கள்.

இதே போன்று முண்டந்துறை வனப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் புலிகளை பார்த்ததே இல்லை என்று உறுதிபடக் கூறுகிறார்கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் எத்தனை புலிகள் உள்ளன, இதுவரை புலிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு செலவு செய்யப்பட்டது? மாஞ்சோலை தேயிலை தோட்ட முதலாளி 249 ஏக்கர் அடர்ந்த காடுகளை வெட்டி அழித்திருப்பதாக 2001- 2006 சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே! அந்த நிலத்தை ஏன் மீட்கவில்லை? மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் பாம்பே டையிங் முதலாளி நூஸ்லி வாடியாவுக்கு கொடுக்கப்பட்டதை ஏன் ரத்து செய்யவில்லை? தலைமைக் கணக்காயர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே அது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இன் படி தகவல் கேட்டேன். புலிகள் காப்பக துணை இயக்குனரே இதுவெல்லாம் ரகசியமானது என்று பதில் தெரிவித்துள்ளார். தகவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளேன். பதிலைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Pin It