இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். அவரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உலகையே பிரம்மிக்கவைத்து விட்டது. விஞ்ஞான உலகில் புகழ் பெற்று விளங்கிய நியூட்டனின் கண்டு பிடிப்புகளைக் கேள்விக்கு உட்படுத்தி, அதைத் தவறு என நிரூபித்துக் காட்டிய மேதை. அவருடைய வாழ்க்கை வரலாறு, அவருடைய கண்டுபிடிப்புகள் என்பவையெல்லாம் ஒரு வியக்கவைக்கும், பிரம்மிக்க வைக்கும் பகுதிகள். அப்படிப்பட்ட ஓர் அறிவியல் மேதை கடவுள் கோட்பாட்டில் என்ன நிலை எடுத்தார் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

இவருடைய வரலாறு பற்றி எழுதியவர்கள் பலர் உண்டு. அப்படி எழுதியவர்களில் கடவுள் நம்பிக்கையாளராக இருந்தால், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மத நம்பிக்கையாளர், கடவுள் நம்பிக்கையாளர் என்று எழுதி விடுவதும், மேலும் சில கடவுள் நம்பிக்கையாளர்கள் அவரை கடவுள் நிந்தனையாளர், மத எதிர்ப்பாளர் என்று தூற்றியும் உள்ளனர். அதேபோது கடவுள் மறுப்பாளர்கள் அவரை அப்பட்டமான நாத்திகர் என்றோ, மத எதிரி என்றோ சொல்லுவதில்லை. மேலும் சிலரிடம் அவர் பற்றி மேலும் பல குழப்பங்களும் உண்டு.

சிறந்த எழுத்தாளர் - அண்மையில் காலமாகி விட்ட சுஜாதா, ஐன்ஸ்டைன் பற்றி கூறுகிற போது, ‘மனித சரித்திரத்தில் அறிஞர்கள் பெரும்பாலா னோருக்கு கடவுள் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கடவுள் சொக்கட்டான் ஆடுவதில்லை என்ற போது, கடவுள் ஒருவர் இருப்பதாகத்தான் எண்ணினார், ஆனால் அவரது கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்ததாகச் சொல்லப்படும் நவசக்திப் பிள்ளையாரோ, முப்பாத்தம்மனோ, அஹுராமாஸ்தாவோ, பரமபிதாவோ, அல்லாவோ இல்லை’ என்று சுஜாதாவுக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.

மேலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள உருவமற்ற கடவுள்- இருப்பதாக ஏற்றுக் கொண்டவர் என்றும் சுஜாதா முடிவுக்கு வருகிறார். கடவுளைப் பற்றிய சுஜாதாவின் சொந்த கருத்து என்ன? அவர் பல கட்டங்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘கடவுள்’ என்ற தலைப் பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளார். அந்தப் புத்தகம் பூராவும் பல்வேறு காரண, காரியங்களை விஞ்ஞான அடிப்படையில், புராண நூலின் அடிப்படையில், திறமையாக விவாதம் செய்து ஏதோ ஒரு சக்தி, விளக்க முடியாத ஒரு சக்தி, விஞ்ஞானமும் கண்டு பிடிக்க முடியாது திணறும் அளவுக்கு ஒரு சக்தி இருப்பதாகத்தான் முடிவுக்கு வருகிறார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எந்தக் குழப்பமும் இல்லாமல் தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். I do not try to imagine a personal God, it suffices to stand in awe at the structure of the world, in so far as it allows our inadequate senses to appreciate it”. “கடவுளைத் தனிநபர் போல் கருதி நான் கற்பனை செய்ய முயலவில்லை. இந்த உலகக் கட்டமைப்பை முழுமையாக அறிய முடியாத நிலையில் நமது அறிவு எந்த அளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறதோ அந்த அளவிற்கு வியந்து மதித்து நின்றால் அதுவே போதும்” என்கிறார்.

இதன் பொருள் மிக ஆழமானது. இந்த உலகை- இயற்கையை எவ்வளவு தூரம் புரிந்து கொள்ள முடியுமோ, அந்த அளவு இதை வியந்து போற்றலாம், மதிக்கலாம், மேலும் மேலும் நமது அறிவால் இயற்கையின் புதுமைகளைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அந்த அளவுக்கு மேலும் பூரிப்போடு மதிக்கலாம்,. போற்றலாம், அறிவின் கண்டு பிடிப்பு எல்லை முடிந்து விடவில்லை, அப்படி எல்லையும் இல்லை என்பதாகும். நேரில் கண்டதை, புரிந்ததை தெரிந்து கொண்டதை, மதிக்கிறேன் மாயையை, அரூபத்தை, அறிவால் அறிய முடியாததை மதிப்பதில்லை, போற்றுவதில்லை என்பது இதன் பொருளாகும். இவர்தான் கடவுள், அவர்தான் கடவுள். இவர் தேவதூதர், அவர் ஆண்டவனின் அவதாரம் என்று சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது என்கிறார்.

புகழ் பெற்ற பிரிட்டிஷ் நாத்திகரான Douglas Adams “Is there an Artifical God? (செயற்கையாக கடவுள் ஒருவர் இருக்கிறாரா?) என்ற பொருள் பற்றி அருமையான சொற்பொழிவு ஒன்றை ஆற்றியுள்ளார். அதில் “அறிவியல் முறையில் கேள்வி கேட்கப்படாத, கேள்வி கேட்கக்கூடாத கடவுள் ஒருவர் ஏன் தேவைப்படுகிறார் என்பதைத் தெளி வாக அலசியிருக்கிறார்” என்று சுஜாதா தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். உண்மைதான். உலகில் மக்களை நம்ப வைக்க ஆத்திகர்களுக்கு செயற்கையான ஒரு கடவுளை, இல்லாத ஒரு கடவுளை, இயற்கையான கடவுள் போல் நம்ப வைக்க ஏன் அவசியம் ஏற்பட்டது என்பதையும், மேலும் கடவுள் பற்றி உருவான நம்பிக்கை களையும், வரலாற்று ரீதியாகவும் ஆடம்ஸ் விளக்குகிறார்.

ஆனால், டக்லஸ் ஆடம்ஸ் கடவுள் பற்றி கேட்டு விட்டுச் சென்ற கேள்வி இன்னமும் பலமாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘‘Is it not enough to see that a garden is beautiful without having to believe that there are fairies at the bottom of it too?’’

ஒரு தோட்டத்தைப் பார்க்கிற போது அந்தத் தோட்டத்தின் கீழ் ஒரு அமானுஷ்ய உயிர்கள், தேவதைகள் உள்ளதாக நம்பாமல், அந்தத் தோட்டத்தின் அழகை மட்டும் பார்ப்பது போதாதா என்று டக்லஸ் ஆடம்ஸ் கேட்கிறார். தோட்டத்தை ரசிக்கலாம், வர்ணிக்கலாம், அதற்கு மேல் எல்லாம் வல்ல ஒரு அபூர்வ சக்தி ஒன்று இயங்குகிறது என்று எண்ண வேண்டுமா? என்கிறார்.

மேலும் சுஜாதா ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றி பேசுகிற போது அவர் Cosmic Religious Feeling உள்ளவர் என்கிறார். பொதுவாக Cosmic என்பது பிரபஞ்சத்தின் ஒழுங்கான, முறையான, சீரான இயக்கம் பற்றி சொல்லுவது. அதன் ஒழுங்கு மீறாதா, விதி மீறாத இயல்பினைப்பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எண்ணி வியந்து மெய் மறந்து விடுகிறார். இப்படி ஒருவித அமைதியான உணர்வுக்கு ஆளாகிறார், இதைத்தான் Cosmic Religious Feeling என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்கிறார் என்கிறார். இதுபற்றி நாம் விளக்க மாகப் பார்க்க வேண்டும்.

மதம் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ன சொல்லுகிறார்?

நாம் இயற்கையின் பயன்களை அனுபவிக்கிறோம். புதிய புதிய உண்மைகளைக் கண்டறிந்து, பூரிப்படைகிறோம். ஆனால் நம்மால், மனத்தால் இன்னமும் புரிந்து கொள்ள இயலாத ஏதோ ஒன்று இருக்கிறது. அதனுடைய அழகும், மேன்மையும், மறைமுகமாக மங்கலாக பிரதிபலிக்கிறது. இந்த உணர்வுதான் மதத்தன்மை கொண்டது. இந்தப் பொருளில் நான் மதம் சார்ந்தவன் - என்று கூறுகிறார். இதைத்தான் Cosmic Religious Feeling என்றும் சொல்லுகிறார். இந்தக் கூற்று இப்போது உள்ள எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல, எந்த மதத்தையும் அவர் சார்ந்தவர் அல்லர்.

கடவுளை தனியர் போல் (Personal God) கருதி நான் கற்பனை செய்ய மாட்டேன் என்று அவர் கூறியதற்கு கடுமையான எதிர்ப்பு வந்து, உங்கள் மதம்தான் என்ன என்று கேட்டபோது அதற்குத் தந்த பதில் இது : “கடவுள் அன்றாடம் குறுக்கிடுகிறார், தலையிடுகிறார், அற்புதங்களைச் செய்கிறார், தப்பு செய்கிறவர்களை தண்டிக்கிறார், தன்னை வணங்கு கிறவர்களை ரட்சிக்கிறார்” என்றெல்லாம் சொல்லுகிற மதத்தைச் சார்ந்தவர் அல்ல அவர். அப்படிப்பட்ட கடவுளை அவர் ஏற்கவில்லை.

ஆகவேதான், அவர் கடவுள் சொக்கட்டான் ஆடுபவர் அல்லர் என்கிறார்.சொக்கட்டான் விளையாடுவது என்பது இயற்கை விதியோடு சேர்ந்தது அல்ல, அதிர்ஷ்டம் என்கிறார்களே; குருட்டுப்பயன் என்கிறார்களே, Luck என்கிறார் களே, அதைத்தான் சொக்கட்டான் ஆடுவது என்கிறார். இதில் ஒருவர் திறமையாக விளை யாடலாம், ஆனால் அவரையும் தோற்கடிக்க இன்னொருவர் வருவார். ஆனால் இயற்கை விதி என்பது அப்படி அல்ல, முறைப்படி ஒழுங்குரீதியாக நடப்பது, ஆகவேதான் God does not play dice என்கிறார்.

இப்படி அவர் சொன்னதற்கே மதவாதிகள் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். உதாரணமாக, அமெரிக்காவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், டாக்டர் புல்டன் ஜே.ஷுன் என்பவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டனை கிண்டல் அடிக்கிறார். பிரபஞ்சத்தைக் கடவுளாகக் கருதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மதத்தில் (Cosmical religion) எஸ் என்னும் எழுத்தைக் கூடுதலாகச் சேர்த்து விட்டார் என்று கேலி பேசுகிறார். அதாவது Cosmical religion என்று இருக்க வேண்டும், S எழுத்தைத் தவறாகச் சேர்த்து விட்டதால் Cosmic Religion என்று வந்து விட்டதாம்.

ஓக்லஹொமாவில் உள்ள கல்வாரி ஆலயச் சங்கத்தை நிறுவிய ஓர் அமெரிக்கர் எழுதிய கண்டனக் கடிதம் : “பேராசிரியர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களே, அமெரிக்க நாட்டில் உள்ள ஒவ்வொரு கிறித்துவனும், எங்களுடைய கடவுளிடத்திலும், அவருடைய மகன் யேசு கிறித்து விடத்திலும் எங்களுக்கு உள்ள நம்பிக்கையை விட்டுவிட மாட்டோம். இந்நாட்டு மக்களின் கடவுளிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை யெனில், நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, அங்கேயே திரும்பிப் போகலாம் என்றுதான் உங்களுக்குச் சொல்லுவார்கள். இஸ்ரேலியருக்கு (யூதருக்கு) நல்லதாக அமையும் வகையில் என் சக்திக்குத் தகுந்த அளவு செய்திருக்கிறேன். இந்நிலையில் யூதராகிய நீங்கள் தெய்வத்தைப் பழிக்கும் ஓர் அறிக்கையை வெளியிடுகிறீர்கள். இஸ்ரேலியரை நேசிக்கும் கிறித்துவர்கள் (அவர்களுடைய) செமிடிக் இனத்திற்கு எதிரான உணர்வை எங்கள் நிலத்திலிருந்து துடைத்து எறியப் பல முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அந்த முயற்சிகளையெல்லாம் மிஞ்சும் வகையில் உங்களுடைய மக்களுக்கு (இஸ்ரேலியர்களுக்கு) ஊறு செய்யும் வகையில் நீங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை இருக்கிறது.”

பேராசிரியர் ஆல்பர்ட் ஐன்ஸ்டன் அவர் களே, அமெரிக்க நாட்டின் ஒவ்வொரு கிறித்தவ னும், உங்களுக்கு உடனடியாகச் சொல்லும் மறுமொழி உங்களுடைய கிறுக்குத்தனமான, பொய்யான(உயிர்களின்) படிநிலை வளர்ச்சிக் கோட்பாட்டை (பரிணாமக்கொள்கையை-Theory of evolution) உங்களுடன் எடுத்துக் கொண்டு, நீங்கள் புறப்பட்டு வந்த ஜெர்மனிக்கே திரும்புங்கள், அல்லது சொந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்டது போல உங்களுக்கு வரவேற்பு நல்கிய மக்களின் நம்பிக்கையை குலைக்கும் முயற்சியை நிறுத்துங் கள் என்பதாகும். கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

நியூஜெர்சியைச் சேர்ந்த வரலாற்றுக்கழகம் ஒன்றின் தலைவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார் : “டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டன் அவர்களே, உங்களுடைய மேதமையை நாங்கள் மதிக்கி றோம். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் கற்றதாகத் தெரியவில்லை. கடவுள் ஓர் ஆவி(Sprit) மூளையைப் பகுப்பாய்வதன் மூலம் எவ்வாறு எண்ணத்தையும், மனக்கிளர்ச்சியையும் அறிய முடியாதோ, அவ்வாறே தொலைநோக்கியைக் கொண்டோ, நுண்பெருக்காடியைக் கொண்டோ கடவுளைக் காண முடியாது. மதம் நம்பிக்கையின் மீது அமைந்தது என்றும், அறிவின் மீது அல்ல என்றும் ஒவ்வொருவரும் அறிவர். சிந்திக்கக்கூடிய ஒவ்வொருவரும் சில நேரங்களில் மதத்தைப் பற்றிய அய்யங்களுக்கு ஆளாகிறார்கள். என்னு டைய நம்பிக்கை பல நேரங்களில் தடுமாற்றத் துக்குள்ளாகி இருக்கிறது. ஆனால் என்னுடைய மதம் சார்ந்த (அ) ஆவிகள் நம்பும் வழுவல்களே இரண்டு காரணங்களுக்காக வெளிப்படுத்துவது இல்லை. 1. மத நம்பிக்கையில் எனக்கு அய்யம் ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சிறிது வெளிப் படுத்தினாலும் அதனால் நான் சார்ந்த மக்களில் சிலருடைய வாழ்வும், நம்பிக்கையும் குலைந்து பாழ்படும். 2. மற்றவருடைய நம்பிக்கையை அழிப்பவர் எவராயினும் அவரிடம் இழிதன்மை இழையோடும்” என ஓர் எழுத்தாளர் சொல்லி யிருப்பதற்கு நான் உடன்படுகிறேன்.

“டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டன் அவர்களே, உங்களுடைய கருத்தைத் தவறாக வெளியிட் டுள்ளனர் எனக் கருதுகிறேன். உங்களுக்குப் பெருமை சேர்க்க விரும்பும் அமெரிக்க மக்கள் மகிழும்படியாக இனியேனும் எதையேனும் நீங்கள் சொல்வீர்கள் என நம்புகிறேன்” என முடிக்கிறார். (எடுத்தாளப்பட்ட நூல் : கடவுள் ஒரு பொய் நம்பிக்கை(The God Delution - Richard Dahkins) தமிழாக்கம் பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான், திராவிடர்க் கழக வெளியீடு).

இன்னும் இதுபோன்ற ஏராளமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டனைத் தூற்றியும், கண்டித்தும் எழுதப்பட்டன. ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டன் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். அவர் ஒரு துறையில் மேதாவியாக இருக்கலாம். அதனால் எல்லா துறைகள் பற்றியும் கருத்துத் தெரிவிக்கலாம் என்று எண்ணுவது அறியாமையில் பேசுவது’ என்றெல்லாம் கூட தூற்றியுள்ளார்கள். மேலே எடுத்துக்காட்டப்பட்ட தூற்றுதல் களுக்கு கீழ்க்கண்ட வகையிலும் பதில் கூறலாம்:

“என் தாயை நான் மதிக்கிறேன், தாய்மை புனிதமானது, போற்றத்தக்கது. என்னைத் தன்னுயிராய் எண்ணி பாலூட்டி சீராட்டி வளர்த்த என் தாய்தான் எனக்குக் கடவுள் மற்றவற்றை நான் தெய்வமாக ஏற்க மாட்டேன்” என்று சொன்னால், அதில் என்ன தவறு இருக்கிறது? அவர் இறைவனுக்கு எதிரி, மதத்துக்குத் துரோகி என ஏசுவது எங்கனம் பொருந்தும்? ஏசுநாதரை ஏசுவதாக ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

அவர் இயற்கையின் மகிமையில் மயங்கிப் போனார், இந்தப் பிரபஞ்சத்தில் அடங்கி உள்ள அத்தனைக்கும் உள்ள தொடர்பை, உறவைக் கண்டு களிப்புற்றார். அனைத்துமே ஒரு ஒழுங்கில், ஒரு பொதுவான விதிக்கு உட்பட்டு இயங்குவதைக் கண்டார். இயற்கையில் மறைந்து கிடக்கும், ஒளிந்து கிடக்கும் இரகசியங்கள் நிறையவே உண்டு என்றும் பிரமித்துப் போனார். அப்படிப்பட்ட வியக்கத்தக்க இயற்கையை - அதன் சக்தியை மதித்தார். போற்றினார். அதுதான் என் மதம் என்றார், அதுதான் என் தெய்வம் என்றார். மற்றவையெல்லாம் மதங்கள் அல்ல, தெய்வங்கள் அல்ல என்றார். ஆகவே அவர் கடவுள் மறுப்பாளர். மத எதிர்ப்பாளர் எனத் தூற்றுப்பட்டார்.

(அடுத்த இதழில் முடியும்)

Pin It