மாசி படப்புக்கு மாரியம்மன் கோயில்ல எப்பவும் விசேசந்தான். எங்குட்டாகப்பட்ட ஆளுகளெல்லாம் பஸ்ஸு காரு வேனுன்னு புடிச்சி வந்திருவாக. ஊருவிட்டு ஊருபோயி பிழைக்கப்போன குடும்பமெல்லாம் துட்டெ துட்டுன்னு பாக்காம வந்து சொந்த பந்தத்தோட கூடி கும்மாளமடிச்சிட்டு போவாங்க. அவங்கவங்களுக்கு ஏண்ட மட்டும் கோயிலுக்கு செய்திட்டும் போவாங்க. இந்த ஊரெ பொறுத்தமட்டுல அவ்வளவு பேரும் அன்னாடு காட்டு வேலைக்குப்போயி சீவனம் கழிக்கிறவங்க. 'அங்கே உலையிலெ இங்கே குலையிலேன்னு' பிழைப்பு போயிட்டிருக்கும்.

இந்த மாசி சிவராத்திரி சமயந்தான் கோயில்ல நாலஞ்சு நாளைக்கு அன்னதானம் நடக்கும். யாரும் உலை வைக்க தேவையில்லெ. சனங்க அப்பொதான் நாவுக்கு ருசியா ரெண்டு தொடுகறி பாயாசம் அம்பளத்தோட இலைச்சாப்பாடு சாப்புட்டுப் போட்டு ராத்திரி ராத்திரி வேடிக்கை விளையாட்டுன்னும் பொழுதுபோகும். ரவ்வும் பகலும் காச்சாமூச்சாம் கம்மங்கொழக்கட்டைன்னு ஒரே ரேடியோ அவயந்தான். வருசத்துக்கு ஒரு தடவை ஊருக்குள்ள இந்த ரேடியோவை கட்டுறதனால ஆளாளுக்கு மைக்குல பேச ஆசைப்படுவாங்க.

அதுலயும் நம்ம அய்யாச்சாமி இருக்கானே அவனை மாதிரி யாரும் பேசமுடியாது. ரிக்கார்டு ஓடி முடிஞ்சு பாட்டு நின்னதும் "அல்லோ ஹல்லொ ஹல்லோ நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது திக்கெட்டும் புகழ்பெற்ற எமது சுல்தானியா சவுண்ட் சர்வீஸ். கரண்ட் உள்ள இடங்களுக்கும் கரண்ட் இல்லாத இடங்களுக்கும் புத்தம் புதிய இசைத்தட்டுகளைக் கொண்டு நவீன முறையில் ஒலி அன் ஒளி அமைத்துத் தரப்படும். மறவாதீர் சுல்தானியா! சுல்தானியா! வணக்கம் அடுத்த இசைத்தட்டு முழக்கம்"

ரேடியோ செட்டுக்காரன் உடனே அடுத்த ரெக்கார்டை போடுவான். அய்யாச்சாமியை கண்ணுல கண்டுட்டா போதும் டகார்ன்னு மைக்கை போட்டு கையில கொடுத்திருவான். அது எந்த ரேடியோ செட்டாயிருந்தாலுஞ்சரி. ராத்தரி மேடையில வேடிக்கை நடக்கிற இடத்துல என்னென்னமோ புதுசுபுதுசா பேசுவான். நல்லா பேசிட்டிருக்கும்போதே திடீர்ன்னு அண்ணாத்துரை மாதிரி கருணாநிதி மாதிரி தொண்டைய கனைச்சிக்கிட்டு பேசுவான். அப்பொ பாக்கணும் வாயி கோணலுமாணலாப் போகும்.

சிவராத்திரிக்கு எப்பவும் வில்லுப்பாட்டு, குறவன் குறத்தி, கரகாட்டம் நாடகம்ன்னு நடக்கும். இந்தவாட்டி இந்த ஊர்க்காரரான மெட்ராஸ் மயில்ச்சாமி மொதலாளி அந்தப் பக்கத்திலிருந்து பெரிய பாகவதரை கொண்டாந்துட்டாரு. ஆயிரக்கணக்குல செலவழிச்சு அவரு உபயத்துல மேடையெல்லாம் ரொம்ப பெரிசா போட்டிருந்தாங்க. சுத்துப்பட்டியெல்லாம் போர்டு வெச்சு விளம்பரம். பேப்பர்லயெல்லாம் போட்டிருந்தாங்க. வர்ற மனுசன் அப்படி. கச்சேரி பண்ண வர்ற அந்த ஆளு புதுசா அநேக ராகங்களை கண்டுபிடிச்சவராம் ஏகப்பட்ட கீர்த்தனைகள் எழுதியிருக்காராம். சினிமாவுல நாலு பாட்டு பாடுனாலும் நறுக்குன்னு பாடியிருக்கார்ங்கிறாங்க.

எல்லா பாகவதர்களும் இவரை சங்கீதத்துக்கே தாயிம்பாகளாம். தியாகராயருக்கு அடுத்து இப்பொ இவர்தானாம். பீசுமட்டும் பெரிய நோட்டுக்கு ரெண்டு நோட்டு வாங்குறாராம். அப்பேர்பட்ட 'நாத தள்ளி ஸ்ரீனீஸ்சாரி' கோஷ்டியோட வந்து மேடையில உட்கார்ந்துட்டாரு. ஆளு சும்மா ஜம்முன்னு பட்டு வேட்டி பட்டு ஜிப்பா அங்கவஸ்திரமெல்லாம் மாட்டி தவில் வித்துவான் மாதிரி பத்துவிரல்லயும் மோதிரம்மாட்டி ரொம்ப போடுசா இருந்தாரு. ஆனா கச்சேரி கேட்க ஜனங்களைத்தான் காணோம். ஊர்க்காரங்களுக்கு இது புதுசா இருந்தது. ஆட்டம் பாட்டம்ன்னு இல்லாம இப்படிக் கச்சேரியெல்லாம் இவங்களுக்கு புதுசா இருந்தது.

அவங்களுக்கு தெம்மாங்குபாட்டு, சாமியாட்டம், மயானகாண்டம் நாடகந்தான் புடிக்கும். சின்னப்பயகதான் மேடைக்கு கீழே ஒருத்தன் மேல ஒருத்தன் மண்ணள்ளி போட்டு உருண்டு பெரண்டு விளையாடிக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கு பளீர்ன்னு எரியுற டியூப்லைட் வெளிச்சத்துல ஓடிப்பிடிச்சு விளையாடுறதுல அவ்வளவு சந்தோசம். அய்யாச்சாமி மேடை ஏறி மைக்கை புடிச்சான். முன்னாடி ஒரு ஈக்குஞ்சு இல்லேன்னாலும் அவம்பாட்டுல பேச ஆரம்பிச்சான்.

"பெரியோர்களே தாய்மார்களே வருங்கால வாலிபர்களே! இந்த வருசம் நாம் இதுவரை கண்டிராத நிகழ்ச்சி நடக்கப்போகிறது. நீங்களெல்லாம் அமைதி காத்து........." முன்னாடி சின்னப்பயக அழிச்சாட்டியமும் அவயக்காடும் ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. குதியாளம் போட்டு ஆட்டமா ஆடிக்கிட்டிருந்தாங்க. 'ஏலெ சின்னப்பயகள்லாம் அந்தப்பக்கம் போயி விளையாடுறீகளா என்னடா போங்கடா அங்குட்டு அந்தா அந்த உழவுகட்டியில போயி விளையாடுங்களேன்'.....

"ஆகவே இப்பொழுது நாம் அவலுடன் எதிர்பார்த்த நமது.... அடேய்! ராசு மகனே அங்குட்டுப் போயி விளையாடுறியா என்ன வேணுங்கு. பாட்டுக் கச்சேரி. ஆரம்பிச்சாச்சி பயகளை கூட்டுக்கிட்டு அங்குட்டு போடான்னா....... எனவே நீங்கள் ஆவலா எதிர்பார்த்த நாக்குத்தள்ளி சீனி ஆசாரி அவர்கள் இன்னும் சிறிது நேரத்தில்......."

"நாததள்ளி ஸ்ரீனீஸ்சாரி! நாததள்ளி ஸ்ரீனீஸ்சாரி"

மேடையிலிருந்து பெயரை திருத்தஞ்சொல்லி அய்யாச்சாமியை நோக்கி சத்தம் வந்தது. அய்யாச்சாமிக்கு அதெல்லாம் காதுல விழகுலை. "அடேய்! டேய்! ராசுமகனே இங்கேபாரு மண்ணள்ளி போட்டுக்கிட்டிருக்காதே வந்தேன்னா ஓங் ஊட்டியெ ஒடிச்சுப்போடுவேன் படவா. சொல்லிக்கிட்டுத்தான் இருப்பேன் இறங்குனன்னா உனக்கும் பயப்படமாட்டேன் ஙொப்பனுக்கும் பயப்படமாட்டேன் சொல்லீட்டேன்....... ஆகவே மேடையில் இருப்பவர்கள் சாதாரண ஆளுகள் கிடையாது. பம்பாய் கல்கத்தா மாதிரி ஊருகள்ல பாடி..... ஏலேய்.... ஏலேய்.... ஙொப்பன்கிட்டெப் போயி சொல்லவா........" பயல்கள் கேட்கிறமாதிரி தெரியல. அய்யாச்சாமி பேச்சை மதிச்ச மாதிரியே தெரியல.

"இறங்கி வந்து ஒவ்வொருத்தன் சொட்டெலும்ப ஒடிச்சாத்தான் லாயக்குப்படும். இவங்கள்லாம் எப்படியாப்பட்ட ஆளுக தெரியுமாடா. நீ மண்ணள்ளிப்போட்டு விளையாடுறதெ பாக்கவா வந்திருக்காக..... ஆகவே பெரியோர்களே தாய்மார்களே வருங்கால வாலிப நல்லிளஞ்சிங்கங்களே! இன்னும் சிறிது நேரத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் நாக்குத்தள்ளி சீனி ஆசாரி பாகவதர் அவர்கள்..."

"சார் சார் ப்ளீஸ் ப்ளீஸ் நாததள்ளி ஸ்ரீனீஸ்சாரி, நாததள்ளி ஸ்ரீனீஸ்சாரி பேரைச் சரியாச்சொல்லுங்க..." பாகவதர் கோஷ்டியிலிருந்த ஒரு ஆள் பதறுனார். அய்யாச்சாமி அவரைப் பார்த்து சரித்தான் என்கிற மாதிரி தலையை ஆட்டிவிட்டு கீழே புழுதியில் விளையாடிக் கொண்டிருந்த பயல்களையே மொறைத்துக் கொண்டிருந்தான். திடீர்ன்னு கோபம் உச்சத்துக்குப்போயி

"ஏலே சின்னக்கண்டாரவோலி மக்கா! சொல்லச் சொல்ல கேக்காம ஆட்டம் போட்டுக்கிட்டிருந்தா, இவங்கள்லாம் மேடையில மயித்தப் புடுங்கவாடா உக்காந்திருக்காங்க. இல்லெ தெரியாம கேக்கேன் அவ்வளவு தூரத்திலிருந்து வந்து நம்ம ஊருக்கு நொட்டுறதுக்கா வந்திருக்காங்க மடப்பயபுள்ளெகளா!"

பிறகும் பயல்கள் மட்டுப்படலை. 'எப்படியும் நாசமாப்போங்க'. அய்யாச்சாமி பாகவதர் பேரை சரியாச் சொல்லத் தெரியாமலும் சின்னப் பயக செய்யுற அழிச்சாட்டியத்தை கட்டுப்படுத்த முடியாமலும் 'எவனும் எப்படியும் போறான் நம்ம தலையிலதான் நடக்குதா' அப்படீன்னு போயிட்டான். அவன் இறங்குற வேகத்தைப் பாத்து பயல்களும் சிதறி ஒரே ஓட்டமா ஓடிட்டாங்க.

பாட்டுக்கோஷ்டிக விக்கினதுமில்லெ. வெறச்சதுமில்லெ. மேடைக்கு கீழே ஒண்ணுரெண்டு மண்ணள்ளிப்போட்டு விளையாடிட்டிருந்த பயல்களும் ஓடிப்போயிட்டான். இன்னும் யாரை வச்சு கச்சேரியை நடத்துறதுன்னு நாலா திக்கமும் திரும்பித் திரும்பி பாத்திக்கிட்டிருந்தாங்க. அப்பொத்தான் சனங்க ஒண்ணொண்ணா வர ஆரம்பிச்சது. பாவம் அவங்களும் வேலை வெட்டிய முடிச்சிட்டுதானெ வரணும். ஆளுக மளமளன்னு வந்து உட்காந்தாங்க. பொம்பளைக கூட்டம் ஏகமா திரண்டுவந்தது. கூட்டம் கிண்ணுன்னு ஏறிருச்சி.

பாகவதருக்கு சந்தோசமாகிப்போச்சி. வீணை, பிடில், கடம், மோர்சிங் மிருதங்கம் எல்லாரையும் பார்த்து வாசிக்கச் சொல்லி தொண்டைக்கு சுதி சேர்த்துக்கிட்டாரு. என்னம்மோ ஏதோன்னு கூட்டம் அமைதியாயிருந்தது.

பாகவதர் கூஜாவிலிருந்து ஒரு டம்ளர் பாலை ஊத்தி குடிச்சுப்போட்டு தொண்டையை செருமி பாட ஆரம்பிச்சார்.

"ஞ்ஞாம்........ ஞ்ஞாம்... ஞ்ஞாம்....... ஞா...."

கூட்டத்துல உட்கார்ந்திருந்த பொம்பளைகள்ல ஒரு பொம்பளை இதைக் கேட்டதும் தாரை தாரையா கண்ணீர் வடிச்சா. அவளால கட்டுப்படுத்த முடியல. கேவிக்கேவி அழகுறா. பிறகும் துக்கம் தாங்க முடியாம பக்கத்திலிருக்கிற ஒரு பொம்பளையக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு 'கோ'ன்னு ஒப்பாரி வச்சா. அவளும் அவளை மெல்ல மெல்ல ஆத்தி, "என்னத்தா என்ன விபரம் ஏம் இப்படி மூச்சை அடக்கமாட்டாம ஆழகுறே"ன்னு கேட்டா. அதுக்கு அவ சொன்னா "வேறொண்ணுமில்லை. நாங் கல்யாணமுடிச்சு இந்த ஊருக்கு வரும்போது எங்கய்யா எனக்கு சீதனமா ஒரு எருமைமாடு பத்திவிட்டாரு. அது திடீர்ன்னு கான நோக்காடு வந்து செத்துப்போச்சி. அது சாகும்போது நாலு காலையும் வெறச்சிக்கிட்டு இந்த ஆள் மாதிரியே ஞா...ஞா....ஞான்னு கனைச்சிக்கிட்டே செத்தது".

-எஸ்.இலட்சுமணப்பெருமாள்

 

Pin It