கதை சொல்லிகள் மனிதர்கள் பேசத் தெரிந்த காலத்திலிருந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஏற்றுதலும் போற்றுதலுமாய் அவர்கள் வரலாற்றில் பெருமையோடு நிலைத்திருக்கிறார்கள். பெருங் கதையாடல்களுக்கு மாற்றாக கணக்கிலடங்காக் கதைகளைக் கொண்டது சிறுகதையுலகம். மனித வாழ்விலிருந்து ஒரு நிகழ்வை ஒரு பொறியாய் எழுத்தில் வடிப்பது சிறுகதை ஆசிரியனின் பணியாகும். இதில் வல்லமை மிக்கவர்கள் ஒரு சிறுகதையிலேயே மனிதரின் முழு வாழ்வையும் சிருஷ்டித்து விடுகிறார்கள். காமராஜின் இந்தக் கருப்புநிலாக் கதைகள் வல்லமையோடு வடிக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் வரும் கதைகள் அடையாளப்படுத்த முடியாத எளிய விளிம்புநிலை மாந்தர்களைப் பற்றியவையாகும். வறுமையும், அந்த வாழ்வின் கொடூரங்களும் அவர்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதை பழைய - புதிய பாணிகளை இணைத்து கருப்பு நிலாக் கதைகள் கூறுகின்றன. இன்றும் நமது கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் பேயாட்டம் போடுகின்றன. ஒரே மாதிரியான வறுமைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் சாதியின் பெயரால் மனிதர்கள் ஒடுக்கப்படுவது தொடர்கிறது. இந்த அபத்தங்களை வெல்வது கடினமாயிருக்கிறது. விடுதலையின் ஒத்திகையில் சிறந்த பாடகராய் கட்டபொம்மு நாடகத்தில் நடிக்கும் அருந்ததியரை ஏற்கமறுக்கும் சாதிவெறி கொடிகட்டிப் பறக்கிறது. வேரை விரட்டிய மண்ணில் சலவைத் தொழிலாளியின் மகன் கிராமத்துக் கொடுமையிலிருந்து தப்பி சென்னைக்கு ரயிலேறுகிறான். ரயிலிலேயே அவனது சாதி பறந்துவிடுகிறது.

மனிதரின் சிந்தனையை வடிவமைப்பதில் புனைகதை உத்தி நல்ல பலனளிக்கிறது. மருளாடியின் மேலிறங்கியவர்கள் கதையில் ஒரு வேசையின் வாழ்க்கை சாமியாடியாகி, அருள்வாக்குச் சொல்லும் மருளாடியாவது நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதைகள் சாத்தூர் பகுதியில் வாழ்ந்த, வாழும் மனிதர்களையும் அவர்களது அவலமான வாழ்க்கையிலிருந்தும் தோன்றியவை. இந்த வாழ்வை அருகிலிருந்து பார்த்தாலும் அருமையான கதையாக்கிச் சொல்லுகிற திறமை கதை சொல்லிக்கு இருக்கவேண்டும். காமராஜுக்கு நிறையவே இருக்கிறது.

சம்பாரி மேளம் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நான் மெய்ம்மறந்து கேட்டு ரசித்த ஒன்றாகும். சம்பாரி நாயனமும், கனத்த தவில்களும் சுற்றி நிற்கும் ஆயிரம் ஜனக் கூட்டத்தையே ஆட்டுவிக்கும். இந்தக் கதையில் "குழந்தைகள் எப்போதும் மலர்களைக் குவித்து வைத்தது போல் தூங்குவார்கள். அவர்களுக்கு மட்டுமே நித்திரையின் போது சிரிக்கிற சிலாக்கியம் வாய்க்கும். அந்தக் குழந்தைகளோடு நிலவில் கடவுள் விளையாடுவதாய் கிராம்த்துத் தாய்மார்கள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்" என்பதில் அழகு சொட்டுகிறது. இந்தத் தொகுப்பிலேயே சிறந்த கதை கருப்பு நிலாக்களின் கதை தான். ஒடுக்கப்பட்டு வீழ்ந்து கிடந்த பெண் ஓங்காரமாய் எழுந்து ஆட்களையே சாய்த்து விடுகிறாள். இக்கதையின் நடை உயிரோட்டம் மிக்கதாகும். அல்லபர் காம்யு தனது காலி கூலா கதையின் பாத்திரம் மூலம் பேசுவது நினைவுக்கு வருகிறது. "விதியை அறிய முயற்சித்தேன். அது இயலாது என்பது புரிந்ததும் எனக்கான விதியை நானே உருவாக்கிக் கொள்வதெனத் தீர்மானித்தேன். "இந்த ஒடுக்கப்பட்ட பெண்ணும் விஷ மதுவாலும், அரிவாள் மனையாலும் பழி தீர்க்கிறாள்.

நாலைந்து பக்கங்களிலேயே நறுக்குத் தெறித்தாற் போல கரிசல்காட்டு மனித வாழ்வை நம் கண்முன்னே நிறுத்தி விடுகிறார் காமராஜ். ரயிலை போகும் போதும் வரும் போதும் பார்க்கிற மக்கள் அதில் ஏறிப் பார்த்ததில்லை. கிழவியைக் கிண்டல் செய்வது, சிரிக்க வைக்கிறது. டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்து பிடிபட்ட சிறுவனை நிலைய அதிகாரியே டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கும் மனிதாபிமானம் உலுக்குகிறது.

சர்ச்சுகளில் தரும் அப்பம் எப்படிப்பட்டது என்று தெரியாமல் அதை ஒரு பெரிய தின்பண்டமாய் நினைத்துக் கேட்கும் கன்னியப்பனைப் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள். நாமும் சிரிக்கிறோம். கள்ளக் காதலர்களை அடித்துக் கொன்று போட்டுப் பேயடித்ததாய் கதைவிடும் கதை சிறப்பானது. முளைப்பாரிகள் வயலில், பாட்டுக்காரி தங்கலட்சுமி, மனநலக் காப்பகத்தில் மனநலமுள்ளவளையும் அடைத்துள்ள கொடுமையைக்கூறும் கதை அருமை. கதைகளுக்கு காமராஜ் தரும் தலைப்புகள் அற்புதமானவை. உதாரணமாக ஆனியன் தோசையும் அடங்காத லட்சியமும், பெரியார் பேரனுக்குப் பிடித்தமான பேய் போன்றவற்றைக் கூறலாம்.

இவன் நினைத்தால் ஏராளமாய் கதை எழுத முடியும். ஆனால் எழுதித் தொலைக்க மாட்டேங்கிறானே என்று காமராஜைப் பற்றி நான் நினைப்பதுண்டு. அற்புதமான கதைகளை ஏராளமாய் எழுதட்டும். கரிசல் இலக்கியம் செழிக்கட்டும் கருப்பு நிலாக் கதைகள் போல.

வெளியீடு:

வம்சிபுக்ஸ்

19, டி.எம்.சாரோன்

திருவண்ணாமலை

விலை ரூ.70

Pin It