எனக்கா சர்க்கரை நோய்?- சென்ற இதழ் தொடர்ச்சி

ஆபரேஷன் செய்வதற்காக அதிகாலை ஐந்து மணிக்கு முருகேசனை தயார் செய்யலாம் என எழுந்து பார்த்த கோவிந்தனுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. முருகேசனை படுக்கையில் காணவில்லை. காலையிலிருந்து மருத்துவமனை முழுவதும் தேடி அலைந்து கொண்டிருந்தான் கோவிந்தன். அப்போது தான் வேலுச்சாமி அங்கு வந்து சேர்ந்தான். இருவரும் சுந்தரை சந்தித்து நடந்ததை பற்றி விவரித்து கொண்டிருந்தனர். முருகேசன் இரவு முழுவதும் உறங்காமல், தனக்கு இந்த சின்ன வயதில் இப்படி நேர்ந்து விட்டதே என அழுது கொண்டிருந்ததாக கோவிந்தன் கூறினான். அப்போது வேலுச்சாமி, சர்க்கரை வியாதி இவ்வளவு சின்ன வயதில் அதுவும் ஏழ்மையான சூழலில் வாழும் முருகேசனுக்கு எப்படி வந்திருக்கும் என சுந்தரிடம் கேட்டார்.

பொதுவாக சர்க்கரை வியாதியும், இரத்த கொதிப்பும் பணக்காரர்களுக்கு தான் வரும் என்பதாக பலர் தவறாக நினைத்து கொண்டிருப்பதாக சுந்தர் கூறுகிறார். உடல் உழைப்பில்லாமல், ஒரே இடத்தில் அமர்திருக்கும் வேலையை செய்பவர்-களுக்கும், நமது பண்டைய உணவு பழக்கத்தை மறந்துவிட்டு உள்ளே நுழைந்துள்ள துரித உணவு கலச்சார காரர்களுக்கும், நவீன உலகமய சூழலில் சாதாரண மனிதன் மீது ஏற்பட்டுள்ள தாக்கமும் அதன் விளைவான மன அழுத்தத்திற்கு உள்ளாக கூடியவர்களுக்கும், அவர்கள் எந்த பிரிவை சார்ந்தவர்களாக இருந்தாலும் எவ்வித பேதமுமின்றி இந்த நோய்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுந்தர் விளக்கினார். இவ்வாறன பாதிப்புக்கு உள்ளவர்களுக்கு உடலில் கொழுப்பு அதிகமாகியும், இரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்படுத்தியும், உடலில் சர்க்கரை அளவு குறைக்க-முடியாமல் சர்க்கரை வியாதியை ஏற்படுத்தி பல இன்னல்களை உருவாக்கிறது என்று சுந்தர் மேலும் விளக்கினார்.

குறிப்பாக, உடல் உழைப்பில்லாமல் இருப்பவர்களுக்கு இந்த வியாதிகள் எப்படி வருகிறது என்பதை தெளிவாக விளக்குமாறு கோவிந்தன் கேட்டான்.. நமது முன்-னோர்கள் ஆதிகாலத்தில் வேட்டையாடியும், பின்னர் அதனை தொடர்ந்து விவசாயம் செய்தும், தொழிலாளியாக உடல் உழைப்பு செய்வது வாழ்ந்த பொழுது, தாங்கள் சாப்பிட்ட உணவு செரிமானம் அடைந்ததோடு, அந்த உணவின் மூலம் உடல் உழைப்பிற்கு தேவையான சக்தியும், உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தியும் சரியான விகிதத்தில் கிடைத்து வந்தன. தற்பொழுது சில தொழில்களில் உள்ள பல்வேறு வேலை பிரிவுகளில் சாதாரண அடிமட்ட நிலையிலிருந்து உயர்மட்ட நிலைவரை உடல் உழைப்பில்லாமல் உட்கார்ந்த இடத்தில் வேலை பார்க்கும் சூழல் நிலவிவருகிறது. அப்படி தினமும் தொடர்ச்சியாக உடல் உழைப்பின்றி இருக்கும் போது, தாங்கள் சாப்பிடும் உணவில் உடல் உழைப்பு, உடல் இயக்கத்திற்கு தேவையானதைவிட அதிக அளவு கலோரி வெளியேற்றபட முடியாமல் FIXED REFRIT-இல் சேமித்து வைக்கப்படுவதை போல், கொழுப்பு படிமங்களாக உடலின் பல்வேறு பகுதிகளில் சேமித்து வைக்கப்படுகிறது.

உணவு செரிக்கப்பட்ட பிறகு கிடைக்கும் குளுகோசை நமது உடல் பயன்படுத்த வேண்டு-மானால், சக்கரை வியாதி இருப்பவர்களுக்கு இந்த இன்சுலின் தனது பணியை செய்யமுடியாமல் செயலிழந்து இருக்கும். அதனால் இரத்தத்தில் குளுகோசின் அளவு அதிகரித்து காணப்படும். இதனால் உடலின் அனைத்து பகுதிகளும் கண், சிறுநீரகம், நரம்பு, இதயம் பாதிப்புக்கு உள்ளாவதோடு, நிரந்தர ஊனத்திற்கும் உள்ளாக்கப்படுகிறது.. இப்படிபட்டவர்கள் மீண்டும் உடல் உழைப்பு செய்யும் போது இனசுலின் பழையபடி தனது பணியை தொடர்ந்து செய்து இரத்த சர்க்கரை அளவை தொடர்ச்சியாக நடக்க வேண்டும் என அறிவுறுத்திகி-றோம் என்று சுந்தர் விளக்கினார்.

ஆரோக்கியமான வாழ்விற்கு அனைத்து தரப்பு மக்களும், உடல் உழைப்பை தரகுறைவாக எண்ணாமல் தங்களுடைய அன்றாட வாழ்க்கை நடைமுறையுடன் சேர்த்து கடைபிடித்தல் அலுப்பு தட்டாமல் உற்சாக மூட்டுவதாக இருக்கும் என வேலுசாமி கூறினான். அதுசரி, உணவு பழக்கவழக்கம் எப்படி இந்த நோய்களை ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக விளக்குமாறு கோவிந்தன் சந்தேகம் எழுப்பினான். அதற்கு சுந்தர், ஆதிகாலத்தில் பச்சை காய்கறி, மாமிசம் ஆகியவைகளை உணவாக உட்கொண்ட ஆதிமனிதன் பின்னர் ஒவ்வொரு கட்டமான நாகரீக வளர்ச்சிக்கு ஏற்றவாறு உணவு பழக்கத்தை மாற்றி கொண்டே வந்ததிருக்கிறான். ஆனால் அந்த மாற்றங்கள் சாதாரணமாக ஓரிரு நாட்களிலோ அல்லது சில மாதங்களிலோ நடக்கவில்லை, மாறாக ஒவ்வொரு உணவு பழக்க மாற்றமும் பல தலைமுறை தலைமுறையாக பரிசோதிக்கப்பட்டு அதன் தரம் ஆராயப்பட்டு (அறிவியல் ஆராய்ச்சியாக இல்லாமல் அனுபவ ஆராய்ச்சியாக) பின்னர் நடைமுறைபடுத்தப்பட்டிருக்கிறது.

நமது தமிழக உணவு கலாச்சரத்தில் பெரும்பான்மையான உணவு வகைகள், அவித்து ஆவிசூட்டில் சமைக்க கூடிய உணவு வகைகளாக இருப்பது நமக்கு தெரியும். அதேபோல பொறித்தல், வறுத்தல் மற்றும் நெருப்பில் சூடுதல் போன்ற முறைகள் சமீபத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்து சேர்ந்த அயல்நாட்டு உணவு கலாச்சாரங்கள் என்பதும் நமக்கு தெரியும். ஆனால், இதையல்லாம் தூக்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு சமீபத்தில் மேற்கத்திய நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டும், நவீன நாகரிகத்தின் சின்னமாக கருதப்பட்டும், பல உக்திகளின் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டும் நம் இளைஞர்களையும், சிறு குழந்தைகளையும் தனக்கு நிரந்தர அடிமைகளாக மாற்றியுள்ள துரித உணவு கலாச்சாரத்தை பற்றி நாம் ஆழ்ந்த கவலையுடனும் எச்சரிக்கையுடனும் அணுக வேண்டியுள்ளது. 

மற்ற உணவு வகைகளை போலில்லாமல் இந்த துரித உணவு வகைகள், பல நாட்கள் கெடாமல் பாதுகாத்து வைப்பதற்காக பல வேதி பொருட்கள் சேர்க்கபடுவதோடு, அதிக அளவு கலோரியுடன் சேர்த்து சுவையுடன் வழங்கப்படுகிறது. இந்த துரித உணவுடன் சேர்த்து குளிர்பானங்கள் குடிப்பது நவீன நாகரீகத்தின் உச்சமாக கருதப்படுகிறது. நிரந்தரமாக உடலில் தங்கி பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் அடங்கிய உணவை உண்பதில் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை விட என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பதை உணர்ந்து, அதை சேர்த்து கொள்ளலாமா இல்லையா என்பதை நமது சமுதாயம் அனுபவ ரீதியாகவோ, அறிவியல் ரீதியாகவோ முடிவு செய்வதற்கு அவசியம் கொடுக்காமல் ஒட்டுமொத்த பாரம்பரிய உணவு பழக்கத்தையே கலவாடிவிட்டு அந்த இடத்தை இந்த மேற்கத்திய உணவு வகைகள் ஆக்கிரமித்துவிட்டன. இன்று சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் உணவு வகைகள் ஆக்திரமித்து விட்டன. அங்கு விற்கப்படும் பிசா முதல் கல்லிபட்டியில் தள்ளு-வண்டியில் விற்கப்படும் சில்லிசிக்கன் மற்றும் பானிபூரி வரை இந்த கலாச்சாரம் பரவி விரிந்து ஊடுருவி இருக்கிறது. அதிக கலோரியை மட்டும் கொடுக்கும் இந்த உணவு வகைகளை உண்ணக்கூடிய உடல் உழைப்பில்லாத ஆசாமிகள் பல நோய்களின் நிரந்தரமான தாக்குதலுக்கு உள்ளாக்-கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றார் சுந்தர்.

பானிபூரி, பப்ஸ் மற்றும் குளிர்பானங்கள் சாப்பிடுவதால் இவ்வளவு விளைவுகள் ஏற்படும் என்பது இதற்கு முன்னாள் தனக்கு தெரியாது என்றும், ஆனால் அந்த உணவு வகைகள் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருப்பதால் தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி சாப்பிடுவது உண்டு என்றும் கோவிந்தன் அதிர்ச்சியுடன் தெரிவித்தான்.. படித்த மேதாவி முதல், படிக்காத பாமரன் வரை இந்த உணவு வகைகளை விரும்பி சாப்பிடும் போது, அதன் தீமைகளை மக்களுக்கு புரியவைத்து அதனுடைய தாக்கத்திலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பணியை உடனடியாக செய்ய வேண்டாமா என வேலுச்சாமி சுந்தரிடம் கேட்டான். உங்களுடைய ஆதங்கம் சரியானதே, ஆனால் அது காலம் கடந்த ஆதங்கம் என்பதை தவிர என்னால் வேறு ஒன்றும் கூறமுடியாது என்றார் சுந்தர்.

இன்று நம் நாட்டில் ஏறத்தாழ 10 கோடி பேருக்கு மேலானவர்கள் சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு போன்ற வியாதிகளின் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பல ஆயிரக்கணக்கானோர் இந்த வியாதிகளின் தாக்கத்திற்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். மேலும் ஒருவர்கூட இது போன்ற வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களின் தாக்கத்திற்கு உள்ளாக கூடாது என்பதை மனதில் கொண்டு நாம் பணியாற்ற வேண்டிய அதே நேரத்தில், ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நோய் முற்றி, முருகேசனை போல் ஊனமடைந்தோ, பார்வை இழப்பு ஏற்பட்டோ, சிறுநீரகங்கள் பாதிக்கப்-பட்டோ இறக்க கூடிய அவலமான சூழலையை உடனடியாகத் தடுக்க வேண்டியிருக்கிறது என சுந்தர் ஆதங்கத்துடன் கூறினார்.

சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்-பத்தில் பல வருடங்களுக்கு எவ்விதமான அறிகுறிகளோ, பாதிப்போ தென்படாது. பாதிக்கப்-பட்டவர்கள் மாற்றவர்களை போலவே தானும் எவ்வித கட்டுபாடும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் உடலில் உள்ள உயர் இரத்த அழுத்தமோ, அதிகமான சர்க்கரையோ தனது பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டே இருக்கும். நோய் ஒரு குறிப்பிட்ட நிலையை கடந்த பிறகு, உடலின் ஒரு பகுதியில் நோயின் அறிகுறி மிகவும் தீவிரமான தாக்கத்துடன் வெளிப்படும். அப்பொழுது நாம் என்ன நோய் என்று கண்டு பிடித்தாலும், ஏற்கனவே அந்நோயினால் ஏற்பட்ட இழப்பை நம்மால் ஈடுசெய்யவே இயலாது என்பதை நாம் உணர வேண்டும். அத்தோடு அந்த அளவிற்கு நோய் முற்றிய நிலையில் வரும் நோயாளியின் குடும்பம் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாவதோடு, பொருளாதார ரீதியிலும் பின்னுக்கு தள்ளப்படு-கிறது என சுந்தர் விளக்கினார். முடிவாக இரண்டு விஷயங்கள் நமக்கு தெளிவாகிறது, ஒன்று - நோய் வருவதற்கு முன்பே ஆரோக்கியமான உணவு பழக்கம், உடல் உழைப்பை கடைபிடித்து, தகுந்த இடைவெளிகளில் நம் உடலை பரிசோதித்து கொள்வது, இரண்டு நோய் வந்த பிறகு தகுந்த சிகிச்சையையும், பரிசோதனைகளையும் வாழ்நாள் முழுவதும் மேற்கொள்வது என்று வேலுச்சாமி முடிவெடுத்தான்.

வேலுச்சாமி கூறியது முழுவதும் உண்மையே என்றாலும், நம்மை போன்ற முன்றாம் உலக நாடுகளில் பிரச்சனை மக்களுக்கு புரிய வைப்பதில் ஒருபுறமும், மக்கள் பிரச்சனைகளை உணர்ந்து அதற்கு சரியான தீர்வை நோக்கிய திட்டமிடுதலில் மறுபுறமும் உள்ளது என சுந்தர் கூறினார். உதாரணமாக, 100 நபர்களுக்கு இரத்த கொதிப்பு இருப்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். அதில் 50 லிருந்து 25 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று கொள்கிறார்கள் என்பதோடு அதிலும் 12 பேர் மட்டுமே போதிய அளவிற்கு தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து கொள்ளக்கூடிய விழிப்புணர்வற்ற சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

ஒவ்வொரு சர்க்கரை நோயாளியையும் சரியான நேரத்தில் நோயின் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிய வேண்டியதோடு, தகுந்த இடைவெளிகளில் கண் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், நரம்பு மண்டல மருத்துவர், இதய மருத்துவர், உணவு பழக்கம் மற்றும் உடல் உழைப்பு பற்றி ஆலோசனை வழங்குபவர் போன்றவர்களிடம் பரிசோதனை செய்ய கூடிய வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்து, தரமான வாழ்வை உத்தரவாதப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆட்சி நடத்துபவர்களுக்கு இருக்கிறது. ஆனால் கோடிக்கணக்கான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, பல்வேறு மட்டங்களில் போதிய அளவிற்கு பரிசோதனை கூடங்கள், மருத்துவர்கள், ஆலோசர்கள் நியமிப்பது மற்றும் அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்-படுத்துவது போனறவைகளை பற்றி திடமான செயல்திட்டம் இதுவரை இல்லாமல் இருப்பது வேதனை அளிக்ககூடியதாக இருக்கிறது என்று சுந்தர் தெரிவித்தார்.

மூவரும் விவாதித்து கொண்டே வெளியில் வந்துகொண்டிருந்த பொழுது, அவர்கள் தேடி கொண்டிருந்த முருகேசன் எதிரில் வந்து நின்றான். இவ்வளவு நேரம் எங்கே சென்றிருந்தீர்கள், நீங்கள் காணாமல் போய்வீட்டிர்கள் என பதறிபோய் விட்டோம் என கோவிந்தன் கேட்டான். ஆபரேசன் செய்யலாமா வேண்டாமா என தனக்கு மிகுந்த பயம் இருந்ததாகவும், அதை தெளிவு படுத்துவதற்கு மருத்துவமனைக்கு வெளியில் ரோட்டோரமாக அமர்ந்திருக்கும் கிளி ஜோசியரிடம் ஜோசியம் கேட்டு வந்ததாகவும், ஆபரேஷன் செய்து கொள்ளலாம் என ஜோஷியம் கூறிவிட்டதாகவும், தனக்கு முழு சம்மதம் என்றும் முருகேசன் கூறினான். இதனை பார்த்து மிகவும் வேதனை அடைந்த வேலுச்சாமி, ஒரு புறம் மக்களை விழுப்புணர்வு அடைய செய்யாமலும் மறுபுறம் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காமலும் இருக்ககூடிய இந்த சமூக அமைப்பை கண்டு கொதிப்படைந்து தன் ஆதங்கத்தை சுந்தரிடம் வெளிப்படுத்தினான். முருகேசனை ஆபரேஷன் அரங்குக்குள் அனுப்பி விட்டு, இந்த சமநிலையற்ற மோசமான சமூக அமைப்பை கண்டிப்பாக மாற்றியாக வேண்டிய அவசியத்தை உணர்ந்தபடியே ஆழ்ந்த சிந்தனையில் வேலுச்சாமி ஆழ்ந்தான்.......!!!

Pin It