நவீன இந்திய ஒன்றியத்தின் சூழலியல் விவாதங்களும் பார்ப்பனிய கருத்தமைவுகளும் பல்வேறு வழிகளில் ஒன்றுக்கொன்று நெருக்கமாகப் பின்னிப்பிணைந்துள்ளதைக் கண்டறிவதில் நமக்கு ஏதும் சிரமமில்லை! சனாதன வைதீக இந்து மதக்கருத்தியலின் ஊடாக திரிபுவாத புனைவு வரலாற்றை எழுதிய இருபதாம் நூற்றாண்டின் பார்ப்பன/ஆதிக்க இந்து சாதிய வரலாற்றாளர்கள்தான் இருபத்தியன்றாம் நூற்றாண்டின் சூழலியலாளர்களாக பரிணமித்துள்ளாதாகவேத் தெரிகிறது!.

இதன் காரணமாகவே இந்திய மக்கள் தொகையில் பாதி விழுக்காட்டினருக்கும் மேலான வர்களின் திறந்தவெளி மலம் கழிப்புச் சிக்கல், உலகின் மிகப்பெரும் அவலமான மனித மலத்தை மனிதனே அள்ள நிர்பந்திக்கிற சமூகக் கட்டமைப்பு, பூர்வகுடி மக்களின் வாழிடப்பெயர்ப்பு போன்ற வன்கொடுமைகள் மீதான காத்திரமான விமர்சனங் களையும் செயற்பாடுகளையும் மேட்டிமை சூழலியல் அறிவு ஜீவிகளால் முன்னெடுக்கப்படுவதில்லை.அவர்களின் கண்ணோட்டத்தில் இவையெல்லாம் பெரும் சமூகச் சூழலியல் சிக்கல்களே அல்ல!

ஏனெனில் இவையனைத்துக்கும் காலங்காலமாக இந்து மதக் கருத்தமைவால் சமூக ஏற்பு வழங்கப்பட்டுள்ளது! மாறாக கங்கை நதியைப் புனிதப்படுத்துவது, பசு வதையைத் தடுப்பது, புலால் உணவைத் தவிர்க்கச் சொல்வது, ஆயிரம் மரங்களை நடுவது, இயற்கையை இறையியலோடு இணைத்து மலைகள், கடல்கள் மற்றும் நதிகளுக்குப் புனித அங்கி அணிவிப்பது இவையே இவ்வறிவு ஜீவிகளின் ஆகச்சிறந்த சூழலியல் விவாதங்களாகவும் செயல்பாடுகளாகவும் உள்ளன.

இச்சனாதன இறையியல் சூழல்வாதிகள் சூழலியலை இந்துமதத்தின் பாதுகாவலர்களாக அணுகுகிறார்கள் என்றால் பிறிதொரு அணியினரோ இயற்கையின் அழகியல் குறித்த வர்ணனைகள்,சாகச வேட்டைக்கதைகள் மற்றும் காட்டுவழிப்பயண அனுபவங்களால் சூழலியலை காட்டுயிர்த்துறையாக குறுக்கிவிடுகின்றனர். சூழல்வாதிகள் அல்லது இயற்கைவாதிகள் என்றால் பறவை பார்ப்பவர்கள், விலங்கினங்கள் குறித்து மட்டும் அக்கறையுடைவர்கள் என்ற கருத்தியல், பொதுவெளியில் வலுப்பெற இவ்வணி குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளது.இதிலும் வைதீக பார்ப்பனர்களின் மேலாதிக்கம் அதிகமிருப்பதை விளக்கத்தேவையில்லை. இதன் காரணமாகவே செம்பருந்து ‘பிராமினி கைட்’ (Brahmini Kite)) ஆகியது தனிக்கதை!

இவ்விரு முகாம்களிலிருந்தும் தப்பிப் பிழைத்து மீண்டு வருகின்ற அணியினர் சூழலியல் சிக்கல்களால் ஏற்படுகிற விளைவுகளைப் பக்கம்பக்கமாக சகல புள்ளிவிவரங்களுடன் விளக்கி, இறுதியில் குண்டு பல்புகளையும் நீர்க்குழாய்களையும் அணைத்துவிட்டால் சிக்கல் தீர்ந்ததென தனிநபர் ஒழுக்க நெறிகளை வற்புறுத்துவதில் முடங்கிவிடுகின்றனர்.

சூழலியல் சிக்கல்களால் ஏற்படுகிற விளைவுகளுக்கு அதீத அழுத்தம் கொடுப்பவர்கள் அதற்கான அடிப்படைக் காரணத்தை சரியான கண்ணோட்டத்தில் பகுப்பாயத் தவறுகின்றனர். மேலும் தமிழ்ச்சமூகத்தின் இலக்கிய மரபும் ஆன்மிக மரபும் தனிநபர்வாதத்தையும் தனிநபர் ஒழுக்கத்தையும் முன்வைத்த வியாக்கியானைங்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதால் இம்முடிவகளுக்கு அவர்கள் வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதன் காரணமாக சமூகம், அரசியல், பொருளாதர தளங்களோடு உலக வாழ்வின் சிக்கல்களை இணைத்துக்காண இயலாதவர்களாக உள்ளனரோ என்ற ஐயமும் மேலெழும்புகிறது.

இதனால் தான் என்னவோ, ஒவ்வொரு சிக்கலுக்கும் உடனடியான தனிநபர் சார்ந்த சீர்திருத்தத் தீர்வு களை முன்வைப்பதில் இவ்வணியினர் திருப்தி கொள்கின்றனர். சில நேரத்தில் சற்று முன்னேறி, அரசின் முதலாளிய சன நாயகச் சட்டகத்திற்குள் முக்குளித்து சில சட்டத்திருத்தங்களையும், ஊழலற்ற அரசையும், தொழில்நுட்பத் தீர்வுகளையும் நிலவுகிற சூழலியல் சிக்கல்களுக்கு மாற் றாக முன்வைப்பதில் முட்டி நிற்கின்றனர்.

மேற்சொன்ன முரண்பாடுகளுக்கெல்லாம் அடிப்படைக்காரணியாக இருப்பது சூழல்வாதிகளிடம் பின்தங்கியுள்ள தத்துவஞானப்பார்வைதான் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. அதாவது இயற்கை, சமுதாயம், மனிதன் மற்றும் இவற்றிற் கிடையேயான உறவை விஞ்ஞானப்பூர்வமாகப் புரிந்துகொள்கிற, உலகின் சாராம்சத்தை அறிந்து கொள்கிற உலகு கண்ணோட்டத்தைக் குறித்ததாகும்.

உலக வாழ்வின் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் விதத்திலான முற்போக்கான சித்தாந்த நிலைப்பாட் டின் அடிப் படையில் சூழலியல் விவாதங்களை முன்னெடுக்காததன் விளைவாகும். உலகு கண்ணோட்டம் குறித்த புரிதலில் பிந்தங்கியிருத்தல், தவறாகப் புரிந்துகொள்ளுதல் அல்லது இப்புரிதல் இல்லாமல் உலக வாழ்வின் சிக்கல்களை ஆராய முயலுதல் என்பது பிற்போக்குத் தனமான முயற்சி யாகும்.

நாம் எப்படி உலகைக் காண்கிறோம், உலகின் சாரத்தை எவ்வாறு உள்வாங்கியுள்ளோம் என்ற அடிப்படையிலிருந்து நாம் துவங்க வேண்டியுள்ளது. அவ்வகையில் இந்திய தமிழ்ச் சமூகத்தில், இரண்டாயிரம் வருடத்திற்கும் மேலாக வேத, புராண, புரட்டல்வாத மதக்கருத்தியலாளர்களால் பயிற்றுவிக்கப்பட்ட உலகம் குறித்த புரிதல் என்னவோ இறைவனால் படைக்கப்பட்டதும் இறைவனின் திருவிளையாடல்களுக்குமான களம் என்ற மட்டத்திலேயே இருக்கிற காரணத்தால், அடிப்படை அம்சத்திலிருந்து நமது பகுப்பாய்வைத் தொடங்குவது அவசியமாகிறது.
பொருளும் கருத்தும்:

நாம் வாழ்கிற உலகம் எவ்வாறு தோன்றியது? இதில் மனிதனின் பாத்திரம் என்ன? இவ்வுலகை இயக்குகிற சக்தியென்ன என்பன போன்ற இயற்கை, மனிதன் குறித்த கேள்விகளை பல தத்துவஞானிகள் மனித வரலாற்றின் தொடக்ககாலம் தொட்டே எழுப்பியும் விவாதித்தும் வந்துள்ளனர். இக்கேள்விகளுக்கான பதிலையும் விளக்கங்களையும் முன்வைக் கிற தத்துவஞானிகளை நாம் இரு முகாம்களாகப் பிரிக்கலாம்.

இப்புற உலகே முதன்மையானது. நம்மைச்சுற்றியுள்ள இயற்கை நிகழ்வுகளை உள்வாங்கி அதைச் சிந்தனையில் செயலில் பிரதிபலிக்கிறவனாக மனிதன் உள்ளான். ஆகவே புறவயத்தில் உள்ள பொருளே முதன்மையானது; சிந்தனை இரண்டாம் நிலையானது என உலகு குறித்தக் கண்ணோட்டத்தை முன்வைப்பவர்கள் பொருள்முதல்வாதிகள். இவர்களுக்கு நேரெதிராக உலகை, உலகுக்கு அப்பாலிருந்து விளக்குவதும், உலகானது ஒரு தெய்வீக சக்தியால் இயக்கப்படுகிறது என்கிற விளக்கத்தை முன்வைப்பவர்கள் கருத்து முதல்வாதிகள் ஆவார்கள்.

உலகை இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீகசக்தி இயக்குவதால், அத்தெய்வீக உணர்வே முதலெனவும் புறவயப் பொருண்மை உலகு இரண்டாம் நிலையானதாகவும் இருப்பதாக இவர்களின் விளக்கங்கள் அமைகிறது. உலகு குறித்த இவ்விரு கண்ணோட்டத்தையும் நாம் கூர்ந்து நோக்குகையில் பொருள்முதல்வாதத் தத்துவம் உலகின் சாராம்சத்தை தெளிவாக முன்வைக்கிற முற்போக்குத் தத்துவமாகவும், கற்பனையிலிருந்து உலகை விளக்குகிற கருத்து முதல்வாதத் தத்துவம் அறிவியலுக்குப் புறம்பான விளக்கங்களை முன்வைக்கிற பிற்போக்குத்துத் தத்துவமாகவும் இருப்பது தெளிவாகிறது.

கருத்துமுதல்வாதத் தத்துவம் மூடநம்பிக்கை மற்றும் மதத்தின் இருத்தலுக்கான நியாயப்பாட்டை வழங்குகிறது. மதத்தின் தோற்றத்திற்கும் அது தொடர்ச்சியாக இயங்குவதற்குமான உயிர்ப்பாற்றலை வழங்குகிறது. இறைவனின் தூதராக, அவதாரமாக உலகின் மதகுருமார்களும், மத போதகர்களும் தங்களை அறிவித்துக் கொண்டு உழைக்காமல் வாழ்கிற, உழைக்கும் மக்களின் உழைப்பை உறிஞ்சிக் குடிக்கிற சுரண்டலுக்கு நியாய கற்பிதம் கோருகிறது.

இந்துமதக்கருத்தின் வேத புராணங்கள், சாத்திர சடங்குகள், மூட நம்பிக்கை மற்றும் பழமைவாதத்தின் ஊற்றாக உள்ளதும் சமூகப் படிநிலை வரிசையின் ஊடாக சாதியின் பெயாரல் சமூகத்தைச் செங்குத்தாகப் பிரித்து, உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு இறையியல் நியாயப்பாடு வழங்குவதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. லெனினின் சொற்களில் சொல்வதென்றால் உலகு கண்ணோட்டம் குறித்த கருத்துமுதல்வாதத் தத்துவ முயற்சியானது “பொய்யான அருவருக்கத்தக்க நழுவுதல்” ஆகும்.

வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால் உலகு குறித்த பொருள்முதல்வாத விளக்கம் மூடநம்பிக்கைகளை, மதகுருமார்களின் கற்பனை, கட்டுக்கதைகளை உடைக்கிற முற்போக்கு தத்துவமாகவும், கருத்துமுதல்வாத விளக்கம் சுரண்டலுக்கான பிற்போக்குத் தத்துவமாகவும் இருப்பது தெளிவாகிறது. மேலும் இங்கு உலகு குறித்த பொருள்முதல்வாதத் தத்துவத்தை விஞ்ஞானப்பூர்வ உலகு கண்ணோட்டமாகப் புனரமைத்த பெருமை மார்க்ஸ் மற்றும் எங்கெல்சையே சேரும்.ஏனெனில் இவர்களுக்கு முந்தைய பொருள் முதல்வாதிகள் உலகை வெறும் சட இருப்பாகப் பார்த்தார்கள். மாறாக மார்க்சோ பொருள்முதல்வாத தத்துவத்தில் வரலாற்றுணர்வையும் இயக்கத்தையும் பிணைத்து “தத்துவத்தை” “சமூக விஞ்ஞானமா”க்கினார்.

இயக்கவியலும் இயக்கமறுப்பியலும்:

இயற்கை நிகழ்முறையாகட்டும் அல்லது அதன் தொடர்ச்சியான சமூக நிகழ்முறையாகட்டும் இவ்விரண்டுக்கும் பின்னாலிருப்பது இயக்கமாகும்.இயக்கமில்லாமல் இயற்கையும் சமூகமும் இல்லை.இவ்வியக்கமே உலகின் சாரம்சமாக உள்ளது. முதலில் இயற்கை நிகழ்முறைக்கு வருவோம். இயற்கையில் அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஊடுருவி இயங்கும் தன்மையுடையதாக உள்ளது. இவ்வியங்கியல் தன்மையை அணு முதல் பேரண்டம் வரையிலும் நாம் காணலாம். இங்கு இயக்கம் என்பது இருத்தலுக்கும் மறுப்பிற்குமான போராட்ட மாகும்/முரண்பாடாகும். இது ஹெகலின் இயக்கத்திற்கான விளக்க மாகும்.

பௌதீகத்தில் புரோட்டானுக்கும் நியூட்டிரான்களுக்குமான எதிர்வுகளின் இயங்கியல், வானவியலில் புவிஈர்ப்பு விசை மற்றும் அதற்கெதிரான விசையின் இயங்கியல், இரசாயனவியலில் வேதியல் பொருட்களினுடைய இயங்கியல் என எதிர்வுகளின் மறுப்பே/முரண்பாடே இயக்கமாக நாம் அனைத்தையும் காண்கிறோம்.

இயற்கை நிகழ்முறையின் இயங்கியல் போக்கை அடிப்படையாகக்கொண்டு ஆராய்ந்ததன் விளைவாகவே டார்வினால் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை வளர்த்தெடுக்க முடிந்தது. மனிதக் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்ததை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடிந்தது. வானவியல், பௌதீகம், இரசாயனவியல் என அனைத்துத் துறைகளிலும் இவ்வியங்கியல் தன்மை துலக்கமாகத் தெரிந்தாலும் இயற்கை தொடர்பாக உயிரியல் துறையில் நிரூபிக்கப்பட்ட இயற்கையின் இயக்கவியல் தன்மைதான் நமது புரிதலுக்கு மிகவும் அணுக்கமாகிறது.

டார்வினின் பரிணாமக் கோட்பாட்டிற்கு முன்பாகவே இத்துறையின் இயக்கவியல் கூறுகளை விளக்கிய எங்கல்சின் பங்களிப்பு அசாதாரணமானது. அதனால்தான் டார்வினின் பரிணாமக்கோட்பாடு வெளியானபோது அதை முதலில் மெச்சிப் புகழ்ந்தவர்களாக எங்கெல்சும் மார்க்சும் திகழ்ந்தார்கள். இதுகுறித்து “கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற நூலில் எங்கெல்ஸ் இவ்வாறு எழுதுகிறார்.

இயற்கைதான் இயக்க வியலுக்கான நிரூபணம். நவீன விஞ்ஞானத்தைப் பொறுத்த வரை, நாளுக்குநாள் மேன்மேலும் அதிகரித்துவரும் மிக வளமான விவரப் பொருள் களைக் கொண்டு அது இந்த நிரூபணத்தை நிலைநாட்டி யுள்ளது என்பதைச் சொல்லி யாக வேண்டும். முடிவாகப் பார்க்குமிடத்து, இயற்கை யானது இயக்கவியல் போக்கில் செயல்படுகிறதே அன்றி, இயக்க மறுப்பியல் போக்கில் செயல்படவில்லை என்பதை யும், முடிவில்லாமல் திரும்பத் திரும்பத் தொடங்கிய புள்ளிக்கே வந்துசேரும் சுழற்சி யின் நித்தியமான ஒருமுகப் போக்கில் இயற்கை இயங்க வில்லை; மாறாக, அது மெய்யான, வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சிக்கு உள்ளா கிறது என்பதையும் நவீன விஞ்ஞானம் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஏனையோர் அனைவருக்கும் முன்பாக டார்வின் (Darwin) பெயரைக் குறிப்பிட்டாக வேண்டும்.

“அனைத்து அங்கக உயிரினங்களும், தாவரங்களும், விலங்குகளும், மனிதனும்கூட, கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பரிணாம நிகழ்வுப்போக்கின் விளைவுகளே என்று நிரூபித்ததன் மூலம், இயற்கையைப்பற்றிய இயக்கமறுப்பியலான கருத்துருவுக்கு டார்வின் அதிவலுவான அடி கொடுத்தார். எனினும், இயக்கவியல் முறையில் சிந்திக்கக் கற்றுக் கொண்ட இயற்கைவாதிகள் மிகச் சிலரே. விரல்விட்டு எண்ணி விடலாம்.

இயற்கையின் இயங்கியல் தன்மையை, நிலையில்லாமல் மாறிக்கொண்டிருக்கும் போக்கை நாம் அறிந்துகொண்ட மாத்திரத் தில் உலகின் சாராம்சம் நமக்கு அணுக்கமாகிறது. இதற்கு மாறாக கருத்துமுதல்வதாமோ இயற்கையின் இயக்கத்தை மறுக்கிறது.கருத்துமுதல்வாதிகள் இயற்கை என்றும் நிலையானது என்பார்கள்.இறைவன்,ஆன்மா என்கிற இவர்களின் கோட்பாடு ஆதிக்க கருத்தியலாக இன்று உலகை ஆள்கிறது. பெரும்பாலான சூழல்வாதிகளும் இயற்கையாளர்களும் மத நம்பிக்கையிலிருந்து விடுபடாத காரணத்தால் இயற்கையின் இயங்கியலுக்கு எதிர்நிலையில் இருந்து இயற்கையைக் காக்க குரல் கொடுக்கிற பேரவலத்தை நாம் கண்டுவருகிறோம்.

இயற்கையின் இயக்கவியலைப் புரிந்துகொண்ட இயற்கையாளர்கள் சிலரே என நூறு ஆண்டுக்கு முன்பாக எங்கெல்ஸ் குறிப்பிட்டது இன்றைய நவீனகால இயற்கையாளர்களுக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது. அண்டம் முதல் அணுவரை இயற்கை விதிகளின்படி இயங்கிவருகிற உலகு, அண்டத்தை இறைவனின் படைப்பாகவும், சூட்சும சக்திகளால் உலகம் இயக்கப்படுவதாகவும், இவ்வுலகம் என்றுமே மாறாதது என்றும் நம்புகிறவர்கள்தான் பெரும்பான்மையான இயற்கையாளராக/சூழல்வாதிகளாக இருக்கின்றனர். இது முரணின் உச்சம். இறைவன், பிரம்மம் என்கிற பிற்போக்குவாதிகளின் சூழல் கரிசனங்கள் இயற்கைக்கு மேலானவை யாக மதத்தை வைக்க மட்டுமே உதவுமே தவிர சிறு புல்லைக்கூட காக்க உதவாது.

மார்க்சும் எங்கெல்சும் உலகு கண்ணோட்டம் குறித்து முன்வைத்த இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவமே மார்க்சியத் தத்துவம் ஆகும். உலகு கண்ணோட்டம் குறித்த விஞ்ஞானப்பூர்வ பொருள் முதல்வாத இயக்கவியல் விளக்கங்கள் சமூகத்தின் இயக்கத்தைப் புரிந்துகொள்வதற்கான உட்கருவைக் கொண்டுள்ளதோடு அதை மாற்றி புனரமைப்பதற்கான புரட்சிகர நடைமுறை அரசியலையும் உள்ளடக்கத்தில் கொண்டுள்ளது.

சமூகத்தின் இயக்கம்:

மனித சமூகத்தின் இயக்கமானது உற்பத்தி என்கிற அடிப்படை யில் நிகழ்கிறது. மனிதன் தனது உயிர்வாழ்வின் முன்நிபந்தனைத் தேவையின் பொருட்டு உணவு மற்றும் இதர தேவைக்காக உற்பத்தி யில் ஈடுபடுகிறான். இயற்கையை உழைப்பின் மூலமாக புனரமைக்கிறான். எனவே உற்பத்தியே சமுதாயத்தின் அடிநாதமாகும். இதன் மேலேயே அரசியல்,பண்பாடு போன்ற மேற்கட்டுமானங்கள் இயங்குகின்றன. சமுதாயத்தில் உற்பத்திக்காக மனிதன் மேற்கொள்கிற உழைப்பு நடவடிக்கையே சமுதாயத்தை இயக்கும் பொருளாக உள்ளது.

“மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின் உற்பத்தியும், உற்பத்திக்கு அடுத்தபடியாக, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் பரிவர்த்தனையுமே சமூகக் கட்டமைப்பு முழுமைக்குமான அடித்தளம் ஆகும். வரலாற்றில் உருவாகி வந்த ஒவ்வொரு சமுதாயத்திலும், செல்வம் வினியோகிக்கப்படும் முறையும், சமுதாயம் வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் முறையும், [அந்தச் சமுதாயத்தில்] என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் எவ்வாறு பரிவர்த் தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பதை யும் சார்ந்தே உள்ளது. வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துரு, இந்த வரையறுப்பிலிருந்தே தொடங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தின்படி, அனைத்து சமூக மாற்றங்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான முடிவான காரணங்களை, உற்பத்தி, வினியோக முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, மனிதர்களின் சிந்தனைகளிலோ, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி குறித்த மனிதனுடைய முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வுகளிலோ அல்ல”

‘கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்’
எங்கெல்ஸ்

இவ்வாறாக இயற்கை,மனிதன்,சமுதாயம், இவற்றிற்கிடையேயான உறவைக் குறித்த புரிதலுக்கு சமுதாயத்தின் பொருளாதரஅரசியல் என இன்னபிற சிக்கலுக்கான தீர்வைக் கண்டடைவதற்கு மார்க்சிய& லெனினிய தத்துவம் ஒரு சித்தாந்தக் கருவியாக உள்ளது. இம்முற்போக்கு அறிவு ஆயுதத்தின் துணைகொண்டே நாம் நிலவுகிற சமூகச் சூழலியல் சிக்கல்களை பகுப்பாய்வதற்கு முற்பட வேண்டும்.எதிர்வுகளின் இயங்கியலாக உலகைக் காண்கிற மார்க்சிய தத்துவத்தில் நிகழ்வு ஜ் சாராம்சம் மற்றும் பகுதி ஜ் முழுமை என்பது முக்கிய எதிர்வுகளாகும்.சமுதாய நிகழ்முறையின் இம்முக்கிய எதிர்வுகளைக் கொண்டு சூழலியல் சிக்கல்கள் குறித்து பகுப்பாய்வு முயற்சியை மேற்கொள்வோம்.

நிகழ்வும் சாராம்சமும்:

சமூக இயக்கத்தின் முக்கிய எதிர்வுகளில் ஒன்று, நிகழ்வு X சாரம்சம். எந்தவொரு சமூகநிகழ்வும் ஒரு சாராம்சத்தின் அடிப்படையிலேயே நிகழ்கிறது.உதாரணமாக பெண்களின் மீதான வன்கொடுமைகள் என்கிற விளைவின் சாராம்சமானது வரலாற்றுக் கட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் பாத்திரம், பாலியில் கல்வி, குடும்பம் மற்றும் அரசமைப்பில் பெண்களின் ஆளுமை போன்ற விளைவின் உள்தொடர்புகளைக்கொண்டு பகுப்பாய்வை மேற்கொள்ள வேண்டும். நிலவுகிற சூழலியல் சிக்கல்களில் ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். வாகனப் பெருக்கத்தால் நகரங்களில் ஏற்படுகிற காற்று மாசை எடுத்துக்கொள்வோம்.

இங்கு “காற்று மாசு” என்கிற நிகழ்வை மட்டும் பிடித்துக்கொண்டு நமது சூழலியல் அறிவுஜீவிகள் ஊடக விவாதத்திற்கும் கருத்தரங்கில் உரையாற்றுவதற்கும் கிளம்பிவிடுகின்றனர். மாறாக நகரத்தில் காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் ஏன் பெருகின? மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்துவிட்டதா? நகரங்களில் மக்கள் ஏன் அதிகமாக குவிகின்றனர்? நகரங்களுக்கு மக்களை நெட்டித்தள்ளுகிற ஊக்கி எது? இரு சக்கர வாகனச் சந்தையின் போக்கு போன்ற உள்தொடர்புகளை, நிகழ்வுக்குத் தொடர்புடைய அம்சங்களை, நிகழ்வின் சாராம்சத்தைப் பகுப்பாய்வு செய்யத் தவறுகின்றனர். இதன் காரணமாக,வெறும் “காற்று மாசு” என்கிற வெளிப்படை நிகழ்வை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கு உடனடி மாற்றுகளை அவசர அவசரமாக முன் வைத்து அத்துடன் ஓய்ந்துவிடுகின்றனர்.

அதாவது கரிப்புகையை வெளியிடும் வாகனங்களுக்கு மாற்றாக சூரிய சக்தி மற்றும் மின்சார சக்தியினைக்கொண்டு இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்து வது, பொது வாகனங்களைப் பயன்படுத்துவது, மிதிவண்டியைப் பயன்படுத்துவது அல்லது அருகில் உள்ள இடங்களுக்கு நடந்துசெல்ல பரிந்துரைப்பது என நிகழ்வை/விளைவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு இவ்வகையான உடனடிப் பரிந்துரைகளை அவர்கள் முன்வைக்கின்றனர். இப்பரிந்துரைகள் நடைமுறை சாத்தியப்பாட்டை உள்ளடக்கியுள்ளதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிக்கலுக்கான சாராம்சம் குறித்த விவாதத்திற்குள் நுழையாமல் விளைவுகளின் தீவிரத்தன்மையை மட்டும் கருத்தில்கொள்வதன் வெளிப்பாடே இது.

இவ்வுதாரணத்தை நாம் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசாகும் ஆறுகள், கடற்கரைகள், நிலத்திணைகள் போன்ற சூழலியல் சீர்கேடுகளுக்கும் விரிவாகப் பொருத்திப்பார்க்கலாம். அதாவது சூழலியல் சீர்கேடுகளை ஏற்படுத்துகிற ஆலைக் கழிவுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், கழிவு மேலாண்மையிலும், தீவிர கண்காணிப்பிலும் கவனம் செலுத்தினால் போதும் என்ற முடிவுக்கு வருகின்றனர். அதாவது, தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படுகிற வேதியல் கழிவுகள், கரிப்புகை கழிவுகள் போன்ற எண்ணற்ற கழிவுகளை கண்காணிக்கும் விதத்திலான தீவிரமான சட்டங் களை அரசு இயற்ற வேண்டும், கழிவு மேலாண்மைத் திட்டங்களை அலட்சியம் செய்யாமல் தொழிற்சாலைகள் கடைபிடிக்கவேண்டும், கழிவு மேலாண்மைக்கு மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவேண்டும் போன்ற வாதங்கள் சூடு பறக்க விவாதிக்கப்படுகின்றன.

ஒரு வாதத்திற்கு இதை நாம் ஏற்றுக்கொள்வோம். மாறாக, இவ்வளவு வேதியல் தொழிற்சாலைகளும், இரும்புத் தொழிற்சாலைகளும், தானுந்துத் தொழிற்சாலைகளும் யாருடைய நுகர்விற்காக இங்கு பொருட்களை உற்பத்தி செய்து தள்ளுகின்றன என்ற அடிப்படைக் காரணத்தின் அருகில்கூட வர மறுக்கின்றனர். ஐரோப்பாவின் ஏற்றுமதித் தேவைக்காக சென்னை யின் மறைமலைநகரில் விளையாட்டு ரக தானுந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதற்குத் தேவையான பல லட்சம் லிட்டர் நீரும், மலிவான கூலியில் உழைப்பும் அந்நிய நிறுவனங் களால் சுரண்டப்படுகின்றன. உற்பத்திக் கழிவுகளும் வரைமுறையற்று வெளித்தள்ளப்படுகிறது. இதற்கு அரசானது பொருளாதர வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற சமூக ஏற்பை வழங்குகிறது. உள் நாட்டு தேசிய முதலாளிகளான டாட்ட, பிர்லா, அம்பானிகளுக்கும் இச்சலுகைகள் உண்டு. இந்நிலையில், வெளிநாட்டு/உள்நாட்டு நிறுவனங்களின் பொருளாதார நலன்களுக்காக, சொந்த நாட்டின் இயற்கை வளங்களைப் பலிகொடுக்கும் வகையிலான & அடித்தள மக்களுக்கு எதிரான அரசின் பொரு ளாதாரக் கொள்கைகளை விமர்சிக்க தொழில்நுட்பச் சீர்திருத்தம் பேசும் சூழல்வாதிகள் முன்வருவதில்லை. சிக்கலுக்கு அடிப்படைக் காரணமான அரசின் பொருளாதர கட்டமைப்பை மறந்தும்கூட கேள்வியே கேட்பதில்லை.

பகுதியும் முழுமையும்:

நிலவுகிற சூழலியல் சிக்கல்களை நிலவுகிற வரலாற்றுக்கட்டத்தின் ஒரு கூறோடு மட்டும் தொடர்புபடுத்திப் பார்ப்பவர்களாக பெரும்பாலான சூழல்வாதிகள் இருக்கின்றனர். மாறாக இயற்கை வரலாற்றிலிருந்து சமூக வரலாறு உதித்தது, அதாவது மனிதக்குரங்கு மனிதனாக படிநிலை வளர்ச்சி பெற்றது, வேட்டையாடியது, கருவிகள் செய்தது, உணவு உற்பத்தி செய்தது, நாகரிகம் பெற்றது, உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு சமூக வளர்ச்சிப் போக்கு நிகழ்ந்தது, உற்பத்தி உடமையாளருக்கும் அதைப் பெறாதவர்களுக்குமான போராட்டமாக சமூக வரலாறு முன்னேறுவது, உடைமை வர்க்கத்திகன் சார்பாக மதமும் அரசும் உருவாக்கப்படுவது, ஒரு வர்க்கத்தின் நலனுக்காக பிறிதொரு வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டியது, நவீன அறி வியலின் துணைகொண்டு அவ்வர்க்கம் உழைப்பையும் இயற்கை வளத்தையும் சுரண்ட விழைந்தது என இப்பின்புலத்தில் சமூக சூழலியல் சிக்கல்களைப் புரிந்துகொள்வதில் பெரும்பாலான சூழல்வாதிகள் அந்நியப்பட்டு நிற்கின்றனர்.

சமுதாயம் தொடர்பான அனைத்துவிதமான அரசியல் பொருளாதார சூழலி யல் சிக்கல்களை நாம் நிலவுகிற வரலாற்றுக் கட் டத்தைக் கவனத்தில் கொண்டும் இதற்கு முந்தைய வரலாற்றுக்கட்ட நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தியும் பார்க்கவேண்டும். மாறாக நேற்று உதித்த ஒரு சூழலியல் சிக்கலை பகுதியளவில் மட்டும் புரிந்துகொண்டு சிக்கலுக்கான தீர்வை முன்வைப்பது பிற்போக்குத்தனத்திற்கே வித்திடும்.

சமூகத்தின் இயக்கத்தை, சமூகத்தின் வரலாற்றை, உற்பத்தி உடமைகளை உரிமையாகக் கொண்ட வர்க்கத்திற்கும் அது கிடைக்கப் பெறாத வர்க்கத்திற் கும் இடையேயான போராட்டமாகக் காண்கிற வர்க்க கண்ணோட்டப் பார்வையே நிலவுகிற சமூக சூழலியல் சிக்கல்களுக்கான தீர்வை நோக்கி நம்மை இட்டுச்செல்வதாக இருக்க முடியும்.

இதற்கு மாறாக, இயற்கையின் வளர்ச்சிப் போக்கிற்கும் சமூகத்தின் வளர்ச்சிப்போக்கிற்கும் அடிப்படை யாக உள்ள இயங்கியல் தன்மையைப் புரிந்துகொள்ளாத, சூழல் நிகழ்முறைக்கும் சமூக நிகழ்முறைக்குமான உறவோடு சூழலியல் சிக்கலை அணுகாத, விளைவு களை மட்டுமே வைத்துக்கொண்டு சிக்கலுக்கான அடிப்படையை ஆராயாத, இறையியலோடு இயற் கையைப் பிணைக்கிற கருத்து முதல்வாத வாதத்தை விலக்காத சூழலியல் விமர்சனங்களும் வியாக்கி யானங்களும், சீர்திருத்தக் கருத்துகளும் ‘இல்லாத ஊருக்குப் போகாத வழி’யைச் சொல்லும் கதையாகவே அமையும்.

தொடரும்

நன்றிக்குரிய தரவுகள்

மார்க்சிய விவாதங்கள், ந.முத்துமோகன்,

காவ்யா பதிப்பகம்

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

வி.கிரபவின்

Pin It