அன்பிற்கினிய நாட்டுப்பறவைகளே !

அண்மைக் காலமாக நமது பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், இந்தியாவின் ‘அன்னை’ சோனியாவும், இவர்களின் ஊதுகுழல்கள் ஊடகங்களும் உலகின் தற்கொலைப் பட்டியலில் அதிதீவிர வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கும் நம் இந்திய மக்களுக்கு ‘மாவோயிஸ்ட் பயங்கரவாதம்’ பற்றிப் பாடம் கற்பித்துக் கொண்டிருந்தது நமக்கு தெரியும். குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டுவதுப் போல இந்திய மக்களுக்கு மாவோயிஸ்ட் பூச்சாண்டிக் காட்டிக்கொண்டே மாவோயிஸ்ட்களை வேரோடு அழிக்கும் (battle to the finish) பச்சை வேட்டை நடவடிக்கை (Operation Green Hunt) என்னும் பெயரில் ஒரு மாபெரும் உள்நாட்டுப் போரை இந்துய அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதற்கொண்டு நடத்தி வருகிறது. இந்திய அரசின் இந்தத் தாக்குதல் திட்டம் என்பது தனது உள்நாட்டு மக்கள் மீதான இராணுவத் தாக்குதல் என குற்றம்சாட்டியும், இத்திட்டத்தை இந்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று வலிறுத்தியும் “இந்திய அரசே! உள்நாட்டு மக்கள் மீதான இராணுவத் தாக்குதலைத் திரும்பப் பெறு!” என்ற தலைப்பில் அருந்ததிராய், அமிர் பாதூரி, சந்திப் பாண்டே, காலின் கொன்சால்வஸ் முதலானோரை உள்ளடக்கிய சர்வதேச அறிவாளர்கள், மனித உரிமையாளர்களைக் கொண்ட குழுவினராலிந்திய பிரதமருக்கு 12.10.09 அன்று திறந்த மடல் ஒன்று அனுப்பப்பட்டது.

2008 ஆம் ஆண்டில் இந்திய அரசின் திட்டக் குழுவினால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவொன்று தனது அறிக்கையில், “மாவோயிஸ்ட் இயக்கம் என்பது நிலமற்ற, ஏழை விவசாயிகள், பழங்குடியினரிடையே, உறுதியான அடித்தளத்தைக் கொண்ட ஒரு அரசியல் இயக்கம் என அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் தோற்றமும் வளர்ச்சியும் அதன் உறுப்பாய் உள்ள மக்களின் சமூக வாழ்நிலையோடும், அனுபவங்களின் பின்புலத்தோடும் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும். அரசின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளி என்பது மேற்கூறிய நிலைமைக்கான காரணக் கூறுகளில் ஒன்றாக இருக்கின்றது. வன்முறை மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது இவ்வியத்தின் அறிவிக்கப்பட்ட நீண்டகாலக் கொள்கையாக இருந்த போதிலும், அதன் அன்றாட நடைமுறைகளின் வெளிப்பாடுகளில், இது சமூகநீதி, சமத்துவம், பாதுகாப்பு இவற்றோடு தளமட்ட முன்னேற்றத்திற்கான போராட்டம் என்பதாகவே பார்க்கப்பட வேண்டும்” என்று கூறுகிறது.

“மைய இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகளின் கொரில்லாப் படை என்பது அநேகமாக, பரம ஏழைகளின், பட்டினியின் கோரப்பிடியில் தவித்துக் கொண்டிருப்பவர்களுமான பழங்குடி மக்களால் ஆன படையாகும்”. என்று புகழ்பெற்ற எழுத்தாளரும் நன்கு அறியப்பட்ட அறிவாளருமான அருந்ததிராய் தனது ‘இந்தியாவின் இதயத்தின் மீதான போர்’ என்ற கட்டுரையில் கூறியிள்ளது கவனிக்கதக்கது.

பச்சை வேட்டை நடவடிக்கையின் நோக்கம் என்ன? சி.என்.என்.ஐ.பி.என்னுக்கு அளித்த நேர்காணலில் அருந்ததிராய் பின்வருமாறு கூறினார். “கடந்த 30 ஆண்டுகளாக சட்டீஸ்கர் போன்ற பகுதிகளில் நக்சலைட்டுகள் இருந்து வந்துள்ளனர். இன்று ஏதோ ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டது போன்ற கூக்குரல் எழுப்பபடுவது ஏன்? அதாவது அரசு இப்போது காட்டுப்பகுதி முழுவதையும் முற்றிலும் எவரும் இன்றி அப்புறப்படுத்தித் தாரை வார்க்க விரும்புகிறது. ஜார்க்கண்டிலும், சட்டீஸ்கரிலும் பெருமளவிலான புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் கையெழுத்தாகி செயல்படுத்த முடியாமல் தேங்கி நிற்கின்றன. சிவப்பு வளாகத்தில் (மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்) விரவியுள்ள கனிமப் பொருட்களின் புதையலைக் கண்டால், அது உண்மையெனத் தெரியவரும். ஜிண்டால், டாடா, எஸ்ஸார் என முதலில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடப்பட்ட ஆண்டுதான் சல்வாஜூடும் என்ற கொலைப் படை துவக்கப்பட்டது” என்று அருந்ததிராய் கூறினார்.

மெலும் அவர் கூறுகையில், “ஒரிசாவில் உள்ள பாக்சைட், இரும்பின் மதிப்பு சுமார் 4 டிரில்லியன் டாலர்கள் (சுமார் 200 இலட்சம் கோடி ரூபாய்) இந்த நான்கு டிரில்லியன் டாலர்களோடு, சட்டீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் புதைந்திருக்கும் பலகோடி டன் உயர்தர இரும்புத்தாதுவின் மதிப்பையும், யுரேனியம்,சுண்ணாம்புக்கல்,டாலமைட்,நிலக்கரி,வெள்ளியம், மார்பிள், செம்பு, வைரம்,அதங்கம், குவார்ட்சைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்ட்ரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் போன்ற 28 வகை அரிய கனிமப் பொருட்களின் பல மில்ல்லியன் டாலர் மதிப்பையும் கூட்டிக் கொள்ளுங்கள். அவற்றோடு கையெழுத்திடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் (ஜார்க்கண்டில் மட்டும் 90 ஒப்பந்தங்கள்) இணைந்த பகுதியாக அம்மாநிலங்களில் கட்டப்படவிருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள், அணைகள், நெடுஞ்சாலைகள், இரும்பு, எஃகு மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள், அலுமினிய உருக்காலைகள் ஆகியவற்றோடு பிற உள்கட்டுமானத் திட்டங்களின் பண மதிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இப்பச்சை வேட்டையின் பிரம்மாணடத்தையும், முதலீடு செய்திருப்பவர்களின் அவசரத்தையும் புரிந்து கொள்ள உதவும் ஒரு கோட்டுச் சித்திரத்தை வழங்கும்” என்று கூறுகிறார்.

மேலும் “இந்த அளவிற்கு புரளும் பணத்தின் அளவு மிகப் பெரியதாக இருக்கும் போது, இதில் ஆதாயம் பெறும் பங்காளர்களை அடையாளம் காண்பது அத்துணை எளிதல்ல. சொந்த ஜெட் வானூர்தியில் மிதக்கும் சுரங்க நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளில் தொடங்கி, மாதம் இரண்டாயிரம் ரூபாய் காசு வாங்கிக் கொண்டு தம் சொந்த மக்களையே பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி, மக்களைக் கொலைசெய்து, கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தி சுரங்க வேலை தொடங்குவதற்கு இடத்தை காலி செய்து கொடுக்கின்ற சல்வாஜூடுமின் பழங்குடி இன சிறப்புக் காவல் அதிகாரிகள் வரை முதல், இடை, கடைநிலை என பரந்து விரிந்து கிடக்கின்றது. இந்த பங்காளர்களின் உலகம், பதவியையும் அதிகாரத்தையும் பய்ன்படுத்திக் கொண்டு தமது நலன்களை மேம்படுத்திக் கொள்ள இவர்கள் அனைவரும் தாராளமாக அனுமதிக்கின்றனர்” என்று கூறுகிறார்.

இந்த உண்மைகளை இன்று யாராலும் மறுத்துப் பேச முடியாது. ஆக, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரும் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்கான கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் திட்டங்களை ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில் நடுவண் அரசும் மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகின்றன. இம்மோசடித் திட்டங்களுக்க்கு எதிராகவும் தங்களுடைய காட்டின் மீதான உரிமைக்காகவும் பழங்குடிகள், தலித்துக்கள் மற்றும் ஏழை விவசாயிகள் விட்டுக் கொடுக்காமல் போராடி வருகின்றனர். போராடும் மக்களுக்கு மாவோஸ்டுகள் துணை நிற்கின்றனர் என்பதும், பழங்குடி மக்களின் காட்டின் மீதான உரிமைக்கான போராட்டத்தை ஒடுக்கி, அவர்களைக் காட்டிலிருந்து அப்புறப்படுத்தி கனிமவளங்கள் நிறைந்துள்ள காடுகளையும் மலைகளையும் பெரும் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் நோக்கத்தோடுதான் மாவோயிஸ்ட்டுகளின் மீதான பச்சை வேட்டை என்ற போர் தொடுக்கப்பட்டுள்ளது. என்பதை நாம் எளிதில் விளக்கிக் கொள்ள முடியும்.

இப்போது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் என்பது கடந்த காலத்தில் சல்வாஜூடும், ஹர்மத் வாஹினி, சாந்தி சேனா, வேட்டை நாய்கள், கோப்ரா இப்படி பல பெயர்களின் செயல்படும் சிறப்புக் காவல் படைகள், சட்டவிரோத கூலிப்படைகள் மற்றும் சி.ஆர்.பி.எஃப்., பி.எஸ்.பி., நாகா பட்டாலியன் போன்றவற்றின் மூலம் நடத்தப்பட்டுவரும் தாக்குதலின் உயர்ந்த. ஒருங்கிணைந்த வடிவம் என்று சொன்னால் மிகையன்று. இந்தத் தாக்குதல் என்பதன் பொருள் பழங்குடிப் பெண்களைக் கும்பலாக வன்புணர்ச்சி செய்தல், மக்களைக் கொலை செய்தல், கிராமங்களைத் தீக்கிரையாக்குதல் என்பதைத் தவிர வேறோன்றுமில்லை. வீரப்பனைப் பிடிக்கிறோம் என்ற பெயரில் தமிழக அதிரடிப்படை செய்த அப்பகுதி மக்கள் மீதான படுகொலைகள், வன்புணர்ச்சிகள், சித்திரவதைகளை நாம் எளிதில் மறந்திருக்க முடியாது.

இந்திய அரசு தனது அனைத்து செயல்பாடுகளையும் நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு என்ற பெயரில் நியாயப்படுத்தி மக்களை முட்டாளாக்க நினைக்கிறது. 1947 இன் அதிகார மாற்றத்துக்குப் பின்னர், ஏகாதிபத்திய மூலதனத்தைச் சார்ந்திருக்கும் தன்மையை நிலைநிறுத்துவதையும், வாரிசுடைமையாகப் பெற்ற குடியேற்ற (காலனிய) ஆட்சியை நல்ல நிலையில் கட்டிக் காப்பதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்கள்தான் அன்றிலிருந்து இன்றுவரை வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 1990 களிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகமயம், தாரளமயம், தனியார்மய கொள்கைகளும் இந்தியாவை முழுமையாகப் பன்னாட்டுக் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காகத் திறந்தி விடுவதை நோக்கமாக்க் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன. இவற்றினுடைய தொடர்ச்சியாகத்தான் மக்களின் வாழ்வாதாரங்களாக எஞ்சியிருக்கக்கூடிய விளைநிலங்களையும், காடுகளையும் ‘சிறப்புப் பொருளாதார மணடலங்கள்’ என்ற பெயரில், பெரும் பணமுதலிகளின் இலாபத்திற்காக நடுவண் அரசும், மாநில் அரசுகளும் மக்களிடமிருந்து பறித்து அவர்களுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ நாடுமுழுவதும் 660 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு (தமிழ்நாட்டில் மட்டும் 95) அனுமதி வழங்கப்பட்டுள்ளன. பசுமைப் புரட்சி என்ற பெயரில் விதை, உரம், பூச்சிமருந்து என்று அனைத்திலும் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. நகர்ப்புற ஏழை மக்கள் நகரங்கள் விட்டு விரட்டியடிக்கப்படிகின்றனர். வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் 1950-1990க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு கோடியே 85 இலட்சம் மக்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஏகாதிபத்தியங்களின் இத்தகைய தாக்குக்தலுக்கு எதிராக மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை மீட்டமைக்க கடுமையான போராட்டங்களை நட்டத்தி வருகின்றனர். சிங்கூர், நந்திகிராம், கலிங்காநகர், லால்கர் என்று மக்களின் போராட்டங்கள் பேருருவம் எடுத்து வருகின்றன. இவை மட்டுமின்றி, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான மக்களின் போராட்டங்களும், சாதி ஆதிக்கத்திற்கு எதிரான தலித் மக்களின் போராட்டங்களும், இந்து மதவெறிக்கு எதிரான சிறுபான்மையினரின் போராட்டங்களும் நாடு முழுவதும் பெருகி வருகின்றன. போராடுகிற மக்களுக்கு எதிராக காவல்துறை, நீதித்துறை, இராணுவம் சட்டமன்றம், பாராளுமன்றம் என்று அரசின் அனைத்துத் துறைகளும் முடுக்கி விடப்படுகின்றன. அனைத்து ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளும், டாடா, பிர்லா, அம்பானி, கோயங்கோ போன்ற உள்நாட்டு பெரும் முதலாளிகளும் ஏகாதிபத்தியங்களின் சிறந்த முகவர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக தங்களிடையே போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்று ஈழ இன அழிப்புப் போரை முன்மாதிரியாகக் கொண்டு ஒரு பெரும் போரை இந்திய அரசு மைய இந்தியப் பழங்குடி மக்கள் மீது நடத்திக் கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் உளவு நிறுவனமும் (மொசாட்), அமெரிக்க இராணுவ அதிகாரிகளும், புதியவகை போர்க்கருவிகளும் இதில் ஈடுபடுத்தப்படுகின்றன. மக்கள் மீதான சுரண்டலை, மக்கள் மீதான போரை ‘மாவோயிஸ்ட் பயங்கரவாதம்’ என்று பூச்சாண்டி காட்டி மறைக்க முயல்கின்றனர். முள்ளிவாய்க்கால் காடுகளுக்குள்ளே இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்தது போல், மைய இந்தியாவின் அடர்ந்த காடுகளுக்குள்ளே பல இலட்சம் பழங்குடி மக்களை தங்களுடைய எசமான கடவுளர்களுக்கு பலி கொடுக்கும் திருப்பணியை ஆட்சியாளர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மோசடித்தனத்தை, அயோக்கியத்தனத்தை எதிர்த்து நாட்டுப்பற்றில் அக்கறை கொண்ட நாம் அனைவரும் ஒரணியில் திரள்வதும், எதிர்த்துப் போராடுவதும் நம்முன் உள்ள உடனடிக் கடமைகளாக உள்ளன. இந்த வரலாற்றுக் கடமைகளை நாம் செய்யாவிடில், நாளை நம்முடைய குரல்வளைகள். சத்தமில்லாமல் அறுக்கப்பட்டிருக்கும்!

ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

நடுவண் அரசே! மாநில அரசுகளே! சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் கும்பலே!

  • பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, வாழ்விடங்களை விட்டு அகற்றாதே!
  • பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலனுக்காக சொந்த நாட்டு மக்களின் மீது போரைத் திணிக்காதே! மக்களின் வாழ்வைச் சூறைபாடும் முன்னூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நீக்கிடு!
  • மைய இந்தியப் பழங்குடி மக்கள் பகுதியில் குவித்துள்ள நடுவண் அரசு, மாநிலப் படைகளைத் திரும்பப் பெறு! அங்கு நடைபெறும் பாசிச இராணுவக் காட்டாட்சியை அகற்றிடு! மக்களுக்கு சனநாயக உரிமைகளை வழங்கிடு!
  • பழங்குடிகள், தலித்துக்கள் மற்றும் உழைக்கும் மக்களைக் கொன்றொழிக்கும் சல்வாஜூடும், சாந்தி சேனா, ஹர்மத்வாஹினி, இரண்வீர் சேனா, சன்லைட் சேனா, பூமிகார் சேனா போன்ற சட்டமுரணான கொலைப் படைகளைத் தடைசெய்! கோப்ரா, சேண்ரா, வேட்டை நாய்கள் போன்ற கொலைக்கார அரசுப் படைகளைக் கலைத்திடு!
  • போர் நடைபெறும் பகுதிகளை பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சனநாயக சக்திகள் நேரில் பார்வையிடுவதைத் தடுக்காதே!

நாட்டுப் பற்றாளர்களே!

  • பச்சை வேட்டை நடவடிக்கை என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல! மக்களுக்கு எதிரான போர்! வளர்ச்சிக்கான போரல்ல! ஏகாதிபத்திய கொள்கைக்கான போர்!

உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு

தொடர்புக்கு : 96298 68871, 94447 11353
Pin It