பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் என்ற இந்த நூலை ஒரு பெரியாரின் தொண்டன் என்ற அடிப்படையில் பெருமிதத்தோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்று சில சொற்களை சொல்ல விரும்புகிறேன். இந்த தமிழ்ச் சமுதாயத்தில், தமிழ்நாட்டில் மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தலைவர்களில் பெரியார் தான் முதன்மையானவர். அப்படிப்பட்ட தலைவரை இவரது சரியான உருவம் எது, இவருடைய சரியான சிந்தனைகள் எவை என்று விளக்குவதற்கு அவருடைய கருத்துகள் முழுமையாக தமிழ்ச் சமுதாயத்திற்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் மறைந்து முப்பது ஆண்டுகள் ஆன நிலையிலும், தோழர் ஆனைமுத்து அவர்கள் வெளியிட்ட பெரியார் சிந்தனைகளைத் தவிர, அதற்கு ஆதாரமாக பெரியாரின் கருத்துகள் இவைதான் என்று சொல்லுவதற்கு வேறு தொகுப்புகள் இல்லை.

அது தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மட்டும் தான். முழுமையான படைப்புகள் அல்ல. முழுமையான அவருடைய சிந்தனைகள் தமிழ் சமுதாயத்திற்குக் கிடைக்கவில்லை. பெரியார் ஒவ்வொரு கருத்தைப் பற்றியும் என்ன சொல்லி இருக்கிறார், என்ன நிலையைக் கொண்டிருந்தார், ஏன் அந்த நிலையைக் கொண்டிருந்தார் என்று விளக்குவதற்கு வாசகர்கள் தாங்களாக படித்துவிளங்கிக் கொள்வதற்கு அவர் நூல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. அது ஒரு பெரிய சங்கடமான சூழல் தான். திராவிட ர் கழக சார்பில் பெரியாரின் களஞ்சியங்கள் ஆறு தொகுதிகள் வெளிவந்தன. 1991 ஆம் ஆண்டோடு அது நின்று போய்விட்டது. 2005ல் தான் 7வது தொகுதி வெளிவந்துள்ளது. அது தீண்டாமையைப் பற்றி, சாதியைப் பற்றி பெரியார் கொண்டிருந்த கருத்துகளை விரிவாக விளக்குகிறது.

நாங்கள், தந்தை பெரியார் திராவிடர் கழக சிறு இயக்கமாக இருந்தாலும் சென்ற ஆண்டு பெரியார் ஆண்டுவாரியாக பேசியதையும், ழுதியதையும் தொகுத்து தரவேண்டும் என்று எண்ணத்தில் அடிப்படையில் குடிஅரசு 1925 பெரியாரின் எழுத்தும் பேச்சும் என்ற தொகுப்பை வெளியிட்டோம். 1926ம், 27ம் இப்பொழுது வெளியிட தயாராக இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் உங்களுக்கு கிடைக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் பெரியார் என்ன சிந்தனைகள் கொண்டிருந்தார் என்று அறிவதற்கு தேடித் தேடி ஆய்ந்து நமக்கு கொடுக்கிற அறிஞர்கள் தான் பல செய்திகளை நமக்கு விளக்கிச்சொல்ல முடிந்தது. காரணம் நமக்கு செய்திகளை கொடுக்க வேண்டியவை இரண்டு தான். ஒன்று பாடநூல். மற்றொன்று செய்தித்தாள்கள். பாடநூல்கள் எதையும் முழுமையாக கொடுக்காது.

பெரியார் என்றால் யார்? கதர் மூட்டையை தோளில் தூக்கி விற்றார். 500 தென்னை மரங்களை வெட்டினார் இவர் தான் பெரியார். பாரதிதாசன் யார்? அழகின் சிரிப்பு எழுதினார். குடும்ப விளக்கு எழுதினார். அவர் தான் பாரதிதாசன். இப்படித்தான் பாடநூல்கள் சொல்லின. முழுமையான செய்தியை சொல்வதில்லை. நான் அடிக்கடி சொல்லுவேன், புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்று இவ்வளவு காலமும் பாடப்புத்தகம் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். ஒருவராவது புத்தர் அரச மரத்தடியிலிருந்து அறிவுத் தெளிவு பெற்றார் என்று எழுதியதில்லை. போதி மரம் என்றால் ஏதோ மரமென்று நாங்கள் எல்லாம் கருதிக் கொண்டிருந்தோம். ஒரு பாடப் புத்தகம் கூட இதுவரை எழுதவில்லை.

அப்புறம் பத்திரிகைகள் அவைதம் நமக்கு உரிய செய்திகளைக் கொடுப்பதில்லை. எது பரபரப்பாக இருக்கிறதோ அதை மட்டும் கொடுக்கின்றன. இந்தக் கடமையை யார் ஆற்றுகிறார்கள் என்றால் ஆய்வாளர்கள் தேடிச் சென்று பல செய்திகளை விளங்க வைக்கிறார்கள. அதே பெரியாரைப் பற்றி எழுப் பப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு எஸ்.வி.இராசதுரையும், வ.கீதாவும் இணைந்து எழுதிய பெரியார் சுயமரியாதை சமதர்மம் என்ற நூல், தோழர் எஸ்.வி.இராசதுரை எழுதிய ஆகஸ்ட் 15 என்ற நூல் நிறைய விளக்கங்களை கொடுத்தது ஒவ்வொரு நிலையிலும் பெரியார் நிலைப்பாடுகளை எல்லாம் விளக்கி, அவர் ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்தார்; அதில் என்ன நியாயங்கள் இருக்கின்றன என்பதை அவர்கள் தெளிவுபடுத்தினர்.

பெரியார் பொதுவுடைமைப் பிரச்சாரத்தை கைவிட்டு ஓடிவிட்டார் என்று சொன்னபோது கூட அவர்கள் சொன்னார்கள். ஆம் 1935 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் ஒரு அறிக்கை விடுகிறார். மார்ச் 31ஆம் நாள் ஒரு அறிக்கை விடுகிறார். இரண்டிலும் சொல்கிறார். பொதுவுடைமைப் பிரச்சாரத்தை நாம் கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார் உண்மைதான். ஆனால் 28 நாட்கள் கழித்து, அதே 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் தோழர்களே மே தினம் கொண்டாடுங்கள்! இந்த சாக்கிலாவது பொதுவுடைமைக் கருத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று அறிக்கை விடுகிறார். 28 நாட்கள் கைவிட்டிருந்தார். ஆனால் அதையே அவர் மீது பெரும் குற்றச் சாட்டாக தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. அவர் நீதிக் கட்சியை ஆதரித்தது ஏன்? இரண்டாம் உலகப் போரின் போது அவர் மேற்கொண்ட நிலைகளுக்கான காரணம் - இவை எல்லாம் விமர்சிக்கப்பட்டன. அதற்கு அவர்கள் நூல்களிலே விளக்கம் சொன்னார்கள்.

பெரியாருடைய தமிழன், திராவிடன் என்பவை பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பெரியார் தமிழ்த் தேசியத்திற்கு எதிரி என்றுதான் பெரும்பாலும் பேசப்பட்டு வந்தது. பெரியார் திராவிடன் என்று சொன்ன காரணத்தால், திராவிடர் கழகம் என்று பெயர் வைத்த காரணத்தால், அவர் தமிழினத்திற்கு எதிரி; மற்ற திராவிட இனத்தைச் சார்ந்த மற்ற தேசீய இனங்கள் நம்மைச் சுரண்டுவதற்கும், ழுத்துவதற்கும் நாம் மானங்கெட்டு இருப்பதற்கும் பெரியார் சொன்ன திராவிடம் தான் காரணமாக இருந்தது என்றெல்லாம் சொன்னார்கள். இந்த நிலைக்கு விளக்கம் வேண்டும் என்று வருகிறபோது தான் அருமைத் தோழர் சுப.வீ.அவர்கள் இந்த நூலைக் கொண்டு வந்து அதில் பலவற்றிக்கு விளக்கம் கொடுத்துள்ளார். ஒவ்வொருவரும் இந்த தமிழ் தேசியத்திற்குள் யார் யாரை உள்ளடக்கி பேசினார்கள். அவர்கள் வெளியே நிறுத்தியது யாரை? என்பதை சிறப்பாக விளக்கிதள்ளார்.

மறைமலை அடிகள் பேசிய சமய தேசியம், (தமிழ் தேசியம்) அவரைத் தவிர, அவர் சாதியைத் தவிர மற்றெல்லோரையும் வெளியே நிறுத்தியது. ம.பொ.சி. பேசினார் தெலுங்கர்கள், கன்னடர்கள் என்று. தமிழர்களைத் தவிர மற்றவரை வெளியே நிறுத்தினார். யாரை உள்ளடக்கினார்? பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொண்டார். அவர் பேசிய தமிழ்த் தேசியத்தில் தமிழர்களிடம் தமிழ் மொழி இருக்க வேண்டும். ஆனால் இந்து என்ற அடிப்படையில் வடமொழியும் இருக்கவேண்டும். வழிபாடு வடமொழியால் செய்வதுதான் பயனுள்ளது என்ற கருத்தைக் கொண்டிருந்தார். அதைத் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறார். ஆனாலும் ம.பொ.சி. அவர்கள் தான் சுயநிர்ணய உரிமை என்கிற சொல்லை, அந்தக் கருத்தை, சொல்லாடலைக் கொண்டு வந்தவர் என்ற அடிப்படையில் அவரைப் பாராட்டத்தான் வேண்டும் என்று இந்த நூலிலே குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் நான் மாறுபடுகிறேன். சுயநிர்ணய உரிமை என்பதை அவர் 1946ஆம் ஆண்டுதான், தமிழரசு கழகத்தை உண்டாக்கி, அதற்கு பிறகு தான் கொள்கையாகச் சொல்கிறார். ஆனால் பெரியார் 1940 ஆம் ஆண்டிலிருந்தே சுய நிர்ணய உரிமை என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார்.

1940ல் குடிஅரசில் தலையங்கம் எழுதுகிறார் 1943ல் ஒரு தலையங்கம் எழுதுகிறார். இரண்டிலும் பெரியார் சொல்கிறார்.

இன்று இந்தியா தான் தனது நாட்டின் எதிர்காலத் திட்டத்தை வகுக்க, நிர்ணயிக்க உரிமை கொண்டதென கூறுகையில், தமிழ்நாட்டின், திராவிட நாட்டின் எதிர்காலத்திட்டத்தை நிலையை வகுக்க, நிர்ணயிக்க தமிழ்நாட்டுக்குத்தான் உண்டென்று நான் விளக்கிக் கொண்டு வருகிறேன். உண்மையிலேயே தமிழ் மகன் சுயநிர்ணய உரிமையைப் பெற்றிருந்தால் தன்னைப் பார்ப்பனியத்துக்கு அடிமைப்படுத்தி தன்னைச் தாசி மகன் சூத்திரன் என்று அழைத்துக் கொள்ள வெட்கப்படாமலிருப்பானா? என்று கேட்கிறோம். இந்த இழிதன்மை, மானங் கெட்ட வாழ்வு ஒழிய வேண்டுமானால் தமிழ னுக்குச் சுயநிர்ணய உரிமையிருத்தல் வேண்டுமென்பது நன்கு விளங்கும்.

என்று அவர் 11.2.1940ல் குடிஅரசில் எழுதுகிறார். அதே போல் இன்னொன்று; சாவர்க்கருக்கு 60-வது பிறந்த நாள் வருகிறது. அதைக் கண்டித்து பெரியார் ஒரு அறிக்கை விடுகிறார். சாவார்க்கர் காந்தியைக் கொல்வதற்கு முன்பாகவே, அதாவது 1923ல் இந்துத்துவா என்ற தத்துவத்தை இந்த மண்ணில் விதைத்த சாவர்க்கர்; அவரைப் பற்றி அதைக் கண்டித்து எழுதுகிறபோது, அவர் பேசிய இந்து தேசியத்தைக் கண்டித்து எழுதுகிறபோது சுய நிர்ணய உரிமை கோருவது ஆக்கிரமிப்பா?’ என்ற தலைப்பில் 8.6.43ல் விடுதலையில் ஒரு அறிக்கை விடுகிறார். அதற்கு முன்பும் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறார்.

“தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ் நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரீகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும் பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்.

இரண்டு கட்டுக்களையும் உடைப்பதுதான் தமிழனை விடுதலை பெற வைக்கும் என்ற கருத்தினை குடிஅரசு 17.9.1939ல் அவர் சொல்லுகிறார். 1930 ஆம் ஆண்டு மே மாதம் சேலத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் அவர் பேசுகிறபோது இந்தியா ஒரு நாடாயிருக்கிறதா? இந்தியா - சாதிகள் காட்சி சாலையாக, மதக் கண்காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சி சாலையாக இருக்கிறதே தவிர ஒரு நாடு அல்ல என்று பேசியிருக்கிறார். 1937ல் தமிழ்நாடு இந்தியாவோடு சேர்ந்தது அல்ல என்று சொல்கிறார். 1938ல் தான் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் வைக்கிறார். அதில் கூட சுப.வீ. அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பெரியார் நான்கு மாநிலத்தையும் ஒன்றாக இணைக்கிற தேசியத்தை தான் கொண்டிருந்தார் என்று ழுதியிருக்கிறார்.

அது சரியான கருத்து அல்ல. 1938ல் கடற்கரையில் நடந்த இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில், செப்11-ல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை வைக்கிறார். ஆனால், அப்போது சென்னை ராஜதானியத்திலுள்ள மலையாளிகளும், கன்னடியர்களும், தெலுங்கர்களும் ஆகிய எங்கள் நிலை என்னாவது? என்று கேட்டபோது யார் யார் கேட்கின்றார்கள் என்றால், அண்டைய மாநிலத்தில் வாழுகிற எல்லா மலையாளிகளும், எல்லா தெலுங்கர்களும், எல்லா கன்னடியர்களும் அல்ல - சென்னை ராஜதானியிலுள்ள மலையாளிகளும், கன்னடியர்களும், தெலுங்கர்களுமாகிய எங்கள் நிலை என்னாவது என்று சொன்னபோது நான் திராவிட நாடு திராவிடருக்கே என்று முழக்கத்தை மாற்றிக் கொண்டேன் என்று சொல்கிறார். ஆனால் இப்படி மாற்றிக் கொண்ட காலத்திலெல்லாம் கூட அவர் திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை 1939லிருந்து 55 வரையிலும் சொல்லுகிறார்.

ஆனால் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்னால் இன்னும் ஏன் அதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் வைக்கிறார். அதுவும் சொல்கிறார் இந்த தெலுங்கனுக்கும், கன்னடனுக்கும் மலையாளிக்கும், ஆரிய எதிர்ப்புணர்வோ, வடநாட்டு எதிர்ப்புணர்வோ சிறிதும் இல்லை. அவர்கள் எல்லாம் நல்ல வேளையாகத் ஒழிந்து விட்டார்கள். எனவே மீண்டும் முழக்கமிடுவோம் தமிழ்நாடு தமிழருக்கே என்று சொல்லுகிறார். அதற்கு முன்பு அவர் சொல்லுகிறபோது கூட ஒவ்வொரு இடத்திலும் அவர் தமிழ்நாடு, தமிழ்நாடு என்று தான் சொல்லுகிறார். தன்னுடைய எல்லா அறிக்கைகளிலும் - அதுவும் திராவிட நாடு என்று பேசிக் கொண்டிருகிற காலத்தில் கூட, சொல்லுகிறேன், அவர் பேசிய திராவிடநாடு என்பதன் உள்ளடக்கம் தமிழ் நாடாகவே இருந்தது.

10.5.1941 ல் விடுதலையில் ஒரு அறிக்கை விடுகிறார். இதுவரை எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தும் ஒன்றும் முடியாததால்தான் இன்று, தமிழ்நாடு தமிழருக்கே (அடைப்புக் குறிக்குள் திராவிட நாடு திராவிடருக்கே) ஆக வேண்டும் என்கின்ற கிளர்ச்சி செய்கின்றோம். திராவிடநாடு என்பதை அடைப்புக் குறிக்குள் போட்டுத் தான் ழுதுகிறார். தமிழ்நாடு தமிழருக்கானால் 10 வருஷத்தில் தற்குறித்தன்மை பறந்து போகும். 3 வருஷத்தில் பிறவி ஜாதி முறை ஒழிந்து போகும்.

5 வருஷத்தில் ஆரிய மூடநம்பிக்கை அறவே ஒழிந்து போகும். ஒரு வருஷத்தில் வெளிநாட்டு ஆரியர்கள் சுரண்டல்கள் நின்னு போகும்.  என்று வரிசையாக சொல்லிக் கொண்டு வந்து - அப்பொழுது இரண்டாவது உலகப் போர் நடக்கிறது -சொல்லுகிறார், ஆதலால் இந்த தத்தம் முடிந்தவுடன் நமது கிளர்ச்சி தமிழ்நாடு தமிழருக்கு ஆகச் செய்வதுதான் என்று சொல்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் திராவிட நாடு திராவிடருக்கே என்று சொல்லிக் கொண்டும் முழக்கம் வைத்துக் கொண்டுமிருக்கிறார். ஆனால் அவர் சொல்வது 1941 இல் தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆவதற்காகத் தான் முழக்கம் வைக்க போகிறேன் என்று சொல்கிறார்.

“இந்தியா நேஷனாக வேண்டும் என்பதும் இந்துமதத்தை ஒழிப்பது என்பது போல்தான் முடியாத காரியமாகும். நாம் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் உள்ள எல்லையை ஒரு நேஷனாக ஆக்கிக் கொள்ளலாம். நம் தாய்மொழி தமிழ், தாய்மொழி தமிழாக உள்ளவனுக்கு வேறு ரத்த கலப்பு இல்லாதவரை அவனது தாய் நாடும் தமிழ் நாடாகத்தான் இருக்க முடியும்? ஆகவே, தமிழர் தமிழ் நாட்டைத் தாய்நாடாக ஆக்கி கொண்டு ஒரு நேஷனாக, ஓர் இனமான இன ஒற்றுமைதடன் அயலான் சம்பந்தத்தை அரசியல், சமூக இயல், மத இயல், பொருளாதார இயல், இவ்வளவிலும் விலக்கி தனித்து இருந்து வாழ வேண்டுமானால் தனித்தமிழ்நாடு வேண்டும்.என்று 28.6.1943 அன்று விடுதலை தலையங்கத்தில் எழுதுகிறார்.

இந்த காலகட்டத்திலெல்லாம் பெரியார் திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை வைத்திருந்தார். ஆனால் அவர் அறிக்கையிலும், பேசுவதிலும் எல்லாம் தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான் பேசி வருகிறார். ஆனாலும் கூட அவர் மீது குற்றச்சாட்டுகள் சொல்வதுண்டு. ஏன் பெரியார் தமிழன் என்ற சொல்லை கையாளாமல் திராவிடன் என்ற சொல்லை கையாள்கிறார் என்றால் “தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த நமக்கு மாறுப்பட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா? தமிழன் என்றால் அவனும் வந்து விடுகிறான் என்று சொல்கிறார்.

மேலும், “சூத்திரன் என்பவர்களுக்குத் திராவிடர் என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, என் அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் பெயரில் நான் மேலே சொன்ன அத்தனை பேரும் ஒன்று சேர வசதி இருக்க வேண்டும். அதில் சூத்திரனல்லாத ஒரு தூசி கூட புகுந்து கொள்ள வசதியிருக்கக்கூடாது. அயலார் புகுந்துகொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டும். இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கிறார்.

“ஒரு காலத்தில் தமிழர் என்பது தமிழ் (திராவிட) பண்பு உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும் இன்று அது மொழிப் பெயராக மாறி விட்டிருப்பதால், அம்மொழி பேசும் ஆரியப் பண்புடைய மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன் வந்து விடுகிறார்கள். அதோடு ஆரியப் பண்பை நம் மீது சுமத்த, அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள். எனவேதான் அந்த திராவிடன் என்ற சொல்லைக் கையாண்டேன் என்று சொல்லிவிட்டு, சொல்கிறார்.

“தமிழ் என்பதும் தமிழர் கழகம் என்பதும் மொழிப் போராட்டத்திற்குத் தான் பயன்படுமேயொழிய, இனப் போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது. மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதி தானேயொழிய முழுப்போராட்டமாகவே ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாய பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே இவை எல்லாவற்றிலிருந்துமே நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்து விடாது என்பதால்தான் அந்த திராவிடன் என்ற சொல்லை நான் பயன்படுத்தினேன் என்கிறார்.

மேலும் 1955ல் சொல்கிறார் சென்னை மாநிலம் என்று பிரிக்கிறான். மொழிவாரி மாநிலமாக பிரிக்கிறான். தமிழ்நாடு என்று பெயர் வைக்காமல் சென்னை மாநிலம் என்று பெயர் வைப்பான் போல் தெரிகிறது. மாநிலங்கள் சீரமைப்பு குழுவின் அறிக்கை வருவதற்கு முன் பெரியார் ழுதுகிறார்.

“அதைவிட கொடுமையான செய்தி இருக்க முடியாது. என்னுடைய நாட்டை தனியாகப் பிரித்து, மாநிலமாக பிரிக்கிறாய். பிரித்து அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் சென்னை ராஜதானி என்ற பெயர் வைப்பதாக அறிகிறேன் என்று சொல்லி அதைக் கண்டித்து இதையெல்லாம் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதை சொல்லி விட்டு பிறகும் சொல்கிறார்.

“இவ்வளவெல்லாம் செய்த பிறகும்கூட திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டு தமிழன் என்ற சொல்லியாவது தமிழகத்தைப் பிரிக்கலாம். அது வெற்றிகரமாக முடிவதற்கெல்லாமல் பார்ப்பான் வந்து நானும் தமிழன் தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான். இதற்காகத்தான் நான் திராவிடன் என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்துகிறேன் என்றுசொன்னார். அதற்குப் பிறகு 1956ல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை மாற்றிக் கொண்டாலும் கூட திராவிடன் என்ற சொல்லை சமுதாய விடுதலைக்கு தொடர்ந்துவிடாமல் சொல்லிக் கொண்டு வந்தார். அரசியல் விடுதலை என்று வருகிறபொழுது தமிழ், தமிழன் என்ற அடையாளத்தையும், சமுதாய விடுதலை என்று வருகிறபோது திராவிடன் என்ற அடையாளத்தையும் சொல்லி வந்திருக்கிறார்.

கடைசி வரை பெரியார் இந்த சிந்தனையோடுதான் இருந்தார். தோழர் சீமான் அவர்கள் சொல்கிறபோது சொன்னார். இறுதி நாட்களில் வலி வந்தபோதுகூட சொல்லை பிசிறில்லாமல் தொடர்நது சொன்னார். அந்த சொற்கள் என்ன தெரிதமா? அவர் பேசுகிறார் அந்த ஒலி நாடாவைக் கேட்டால் தெரியும்.

“நீ யார்? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். உன்னுடைய உணவு வேறு என்னுடைய உணவு முறை வேறு; உன்னுடைய உடை வேறு; என்னுடைய உடை வேறு; உன்னுடைய கலாச்சாரம் வேறு, என்னுடைய கலாச்சாரம் வேறு; உன்னுடைய நடப்பு வேறு என்று சொல்கிறார்.

வலி வந்து விடுகிறது. உடனே அய்யோ, அம்மா, அப்பா என்று இரண்டு நிமிடம் முனகிவிட்டு, கொஞ்சம் தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு பேசத் தொடங்குகிறார். “என் நடப்பு வேறு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?என்று கேட்கிறார். நம் காலில் கல் இடித்து விட்டால்கூட பேசிக் கொண்டு வந்த செய்தி மறந்துவிடும். என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை பக்கத்திலிருப்பவரிடம் கேட்போம். பெரியாருக்கு வந்த அந்த வலிதான் அவருக்கு சாவில் கொண்டு போய் முடித்த வலி. இரண்டு நிமிடம் அந்த வலியில் துடித்த பின்னாலும் தமிழன் மேல் உள்ள அக்கறை, தமிழன் தனியாக நிலையான அரசாக வாழவேண்டும் என்று எண்ணிய அவரது சிந்தனை உன்னுடைய நடப்பு வேறு என்று சொல்லிவிட்டு வலி வந்து இரண்டு நிமிடம் கதறிவிட்டு, அதற்குப்பின்னால் சொன்னார்.

என் நடப்புவேறு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். வெளியே போ என்று அந்த சிந்தனையோடுதான் இறுதிவரை இருந்தார். அவரைப் பொறுத்தவரை மூன்று செய்திகளில் தொடக்கத்திலிருந்து உறுதியாக இருந்தார். ஒன்று சாதி ஒழிய வேண்டும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற சாதி பேதம் கூடாது. அடுத்து, அவர் ஆண், பெண், என்ற பாலின பேதம் கூடாது. 1927லிருந்து தொடர்ந்து குடிஅரசில் அவர் ழுதி வருகிறார். மூன்றாவதாக ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது மூன்றையும் ஒழிக்க பாடுபடும் இந்த சுயமரியாதை இயக்கம். அந்த மூன்றில் அவர் தொடர்ந்து எச்சரிக்கையாக, கவனமாக இருந்தார். அவர் தமிழ்நாட்டுக்கு விடுதலை என்று பேசுகிறபோது கூட அதை சாதி ஒழிப்பின் நீட்சியாகத்தான் பார்த்தார்.

பெரியார் கடவுள் மறுப்பைக்கூட, சாதி ஒழிப்புக்கு தடையாக இருக்கிறது என்று உணர்ந்து, தெளிந்து பிறகு கடவுள் மறுப்புச் சொல்கிறார். அவர் இலட்சியத்தை, இலக்கை அடைய கடவுள் தடையாக இருக்கிறார் என்பதால்தான் கடவுளை மறுத்துப் பேசினார். கடவுள் மறுப்பே இவர் இலட்சியமல்ல. அவர் இலக்கை அடைய ஒரு வழியாக எடுத்துக் கொண்டார். அதை ஒரு கருவியாக எடுத்தார் கையில். அதே போலத் தான் சாதி ஒழிந்த சமுதாயம் அமைவதற்கு அல்லது வேறு வழியில் சாதியற்ற சமுதாயம் அமைந்துவிட்டாலும் தொடர்ந்து அது நீடிப்பதற்கு ஒன்றுபட்ட இந்தியாவில் முடியாது என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார்.

அவர் இந்தியாவில் இருக்கிற மூன்று தேசியங்களைச் சொல்லுகிறார். வேடிக்கையாகச் சொல்லுகிறார் என்ன தேசியம் இரண்டு ஆரியர்கள் ஒன்று சேர்ந்து கொள்கின்றனர். வடநாட்டு ஆரியனும், இங்கிலாந்து ஆரியனும் தங்களுக்குள் ராஜீ செய்து கொண்டு எங்கள் மீது, சமஸ்கிருத மொழி தேசியத்தை, மார்வாடி பொருளியல் தேசியத்தை, குஜராத்தி அரசியல் தேசியத்தை நுழைக்கப் பார்க்கிறார்கள் என்று அறிக்கை விடுகிறார். அவர் ஆகஸ்ட் 15 ஐ துக்க நாள் என்று சொன்னதுகூட அந்த பொருளில் தான் சொல்லுகிறார். விடுதலை நாளை துக்கநாளாக சொல்லுகிற போது கூட அறிஞர் அண்ணா அவர்கள் மறுத்து சொல்கிறார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியார் கருத்துக்களை கவிதையாக சொல்லுவார். அவர் சொன்னார் ஒரு குட்டிக் குதிரையும், தாய்க்குதிரையும் பேசிக் கொள்வதைப் போல. குட்டிக் குதிரையின் வாயில் இரத்தம் ஒழுக தாய்க் குதிரையிடம் வந்து நிற்கிறது.

கடிவாளத்தில் இறுக்கிய கடைவாயில் குருதியாறு

வழிந்திட எதிரில் நின்று மகிழ்ந்திடும் குட்டி தன்னை

உடைந்த உள்ளத்தால் நோக்கி உரைத்தது கிழத்தாய்.

ஏ அடிமையே உனைப் பிணித்த ஆங்கில வண்டியில்லை வடக்குள குப்பன் உன்றன் வன்முதுகின்

மேலேறி

கடிவாளத்தை இறுக்கிறான்! கருதினாயில்லை

வாயில் வடிகின்ற குருதி காணாய்!

வலி உணர்கின்றாய் இல்லை

என்று கிழட்டுத் தாயாக பெரியாரையும், குட்டிக் குதிரையாக அண்ணாவையும் உருவகப்படுத்தி பாடுகிறார் பாரதிதாசன்!

பெரியார் திராவிடநாடு என்பது தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்த பகுதி என்று சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில் “சும்மா திராவிட நாடு என்று சொல்வது நம்முடைய காரியத்தைக் கெடுக்கத்தான் பயன்படுமே தவிர வேறெதற்கும் பயன்படாது என்பதை அறிய வேண்டும் என்றுகூட கோபமாக சொல்கிறார்.

மாநில சுயாட்சி பற்றி பேசும்பொழுதுகூட, மாநில சுயாட்சியைப் பற்றி பேசாதீர்கள். மாநில சுயாட்சி வந்து என்ன ஆகப் போகிறது என்று கோபமாக எழுதினார். அன்று மாநில சுயாட்சி பற்றி தி.மு.க பேசிக் கொண்டிருந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு மாநிலசுயாட்சி மாநாடு நடக்கிறது. அப்போது பெரியார் சொல்லுகிறார்,

“சில மேதாவிகள் பிரகஸ்பதிகள், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கேட்கிறார்கள். இதன் கருத்தென்ன? வெறும் செருப்பாலடிக்காதே. அந்தச் செருப்புக்குப் பட்டு ஜரிகை கொண்டு குஞ்சங்கள் கட்டி அதனால் அடி என்று கேட்பது போல் தானே இருக்கிறது? இழிவை, மடைமையை, மானமற்றத் தன்மை யை, குறையைக் கவலையைத் தீர்க்க, அந்த அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும் உன்னால்என்று கேட்கிறார். அதிக அதிகாரம் கொடுத்தாலும் சரி, இந்தியாவில் இணைந்திருக்கிறவரை இந்த இழிவை போக்க முடியாது, மானத்தை மீட்க முடியாது என்பதில் பெரியார் உறுதியாக இருந்து கருத்துகளை சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கரும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லுகிற நிலையில் கூட அம்பேத்கர் மீது விமர்சனம் வைக்கிறார். அவர் சட்ட அமைச்சர் பதவியை விட்டு வெளியேறுகிறார் நான்கு காரணங்களை சொல்கிறார். வெளியேறுகிறபோது ஒன்று நாட்டினுடைய உள் விவகார கமிட்டியோ, வெளி விவகார கமிட்டியோ கூடுகிறபோது என்னை அழைப்பதில்லை. இது ஒரு குற்றச்சாட்டு. ஒரு அமைச்சரை அமைச்சரவைக் கூட்டத்திற்கு கூட தீர்மானம் எடுக்கும் போது கூட அழைப்பதில்லை. இன்னொன்று இந்து சட்டத் தொகுப்பு மசோதா நிறைவேற்றப்படாமல் நேரு இழுத்து அடிக்கிறார். இதோடு இன்னும் இரண்டு காரணங்களையும் அவர் சொல்லுகிறார். ஒன்று அமெரிக்காவின் உதவியை இந்தியா பெறுவதற்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தடையாக இருக்கிறது. மற்றொன்று காஷ்மீரை இந்துக்கள் வாழுகிற பகுதியை இந்தியாவோடும், இஸ்லாமியர்கள் வாழுகிற பகுதியை பாகிஸ்தானோடும் இணைத்துவிட வேண்டும். அதாவது துண்டு போடலாம் என்று சொல்லுகிறார் அம்பேத்கர். அப்போது அதைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் எழுதப்படுகிறது. அதில் சொல்கிறார்.

“மற்ற இரண்டு விசயத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். அது சுயமரியாதை சம்மந்தப்பட்ட விசயம். ஆனால் இந்தியா அமெரிக்காவை ஆதரிக்க வேண்டும். அய்.நா. சங்கத்தில் சீனாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்பது டாக்டர் அம்பேத்கரின் கொள்கை. இதை சுயமரியாதையுடைய இந்நாட்டு மக்கள் எவரும் ஒப்புக் கொள்ள முடியாது. கீழ்த்திசை நாடுகளை அடிமைப்படுத்த விரும்பும் அமெரிக்காவுக்குச் சலுகை காட்டுவோமேயானால் அது இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைப்பதற்காகவே முடியும். இந்தியாவில் உண்மையான மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பணக்கார, வைதீக, முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்படுத்துவதாகவே முடியும்.

இத்தகைய ஆட்சி ஏற்படுமேயானால் முதன்மையாக விவசாயிகள் அடிமைப்பட்ட சமூகமாக வாழ வேண்ய நிலைமை தான் ஏற்படும். இந்த உண்மையை அவர் சிந்திக்காத காரணம் என்னவென்று கேட்கிறார். அடுத்து காஷ்மீரத்தைப் பற்றி அவர் சொல்லும் யோசனையையும் நாம் ஒப்புக் கொள்ள முடியாது. காஷ்மீரத்தைப் பற்றி முடிவு செய்யும் விஷயத்தைக் காஷ்மீர் மக்களுக்கே விட்டுவிட வேண்டும். காஷ்மீரத்திலே புகுந்திருக்கும் இந்தியாவும் வெளியேற வேண்டும், பாகிஸ்தானும் வெளியேற வேண்டும். இதுதான் காஷ்மீர மக்களுக்கு நீதி சொல்வதாகும் என்று பெரியார் சொன்னார்.

காஷ்மீர் பிரச்சினையை பற்றி நீங்கள் யார் பேசுவதற்கு? இந்தியாவும், பாகிஸ்தானும் யார்? காஷ்மீரிகள், அவர்களைப் பற்றி முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அவன் தன் எதிர்காலத்தை அவன் முடிவு செய்யட்டும். இப்படி அம்பேத்கர் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று சொல்லுகிறார். இந்த செயல்களில் அமெரிக்காவை நாம் துணைக்கு அழைக்கக் கூடாது. நம்மை அடிமை ஆக்கிவிடும். அடக்கிவிடும். ஒழித்துவிடும். காஷ்மீர் பிரச்சினை காஷ்மீர் மக்கள் முடிவெடுக்கட்டும் இந்தியா ஏன் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கருத்தைக் கொண்டவராக இருந்திருக்கிறார். எனவே தந்தை பெரியார் திராவிடர் கழகம் தந்தை பெரியாரின் இலட்சியமான சாதி ஒழிப்பு நிகழ வேண்டுமானால் ஒன்றுபட்ட இந்தியாவில் முடியாது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது. ஒன்றுபட்ட இந்தியாவில் சாதி ஒழிப்பு நிகழ்ந்து விடுமேயானால் அதைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடியாது என்றும் உணர்கிறோம்.

எனவே தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசிய மக்களுக்கான சுய நிர்ணய உரிமை என்பது தந்தை பெரியார் கொள்கை மட்டுமல்ல, தந்தை பெரியார் திராவிடர் கழகக் கொள்கையும் கூடத்தான். அதுமட்டுமல்ல தந்தை பெரியாரும் இறுதிவரை சொல்லிக் கொண்டிருந்தார் என்பது தான் உண்மை. சிலர் அதை மறுக்கிறார்கள். அடுத்து தமிழ் பயிற்றுமொழி என்று வருவதைப் பற்றி சொல்லுவதுகூட சில விவாதங்கள். அது விவாதிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் எங்களுக்கும், தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சிக்கும் ஏற்பட்ட விவாதத்தைப் பற்றிக்கூட இந்த நூலில் சொல்லி இருக்கிறார். அதில் பயிற்றுமொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் என்பதில் எங்களுக்கு முழு உடன்பாடேதான். அதில் எந்த கருத்து மாறுபாடும் கிடையாது. ஆனால் இடைக்கால ஏற்பாடாக - சாதி ஒழிய வேண்டும் என்று கருதிய பெரியார் இடஒதுக்கீடு கேட்டுக் கொண்டிருந்தார் - சாதி ஒழியும் வரை. எனவே தொடர்பு மொழி பற்றியும் அந்தக் கண்ணோட்டத்திலேயே அணுக வேண்டும்; அதையும்கூட விவாதிக்கலாம்.

பெரியாரைப் பொருத்தவரை பெரியார் காங்கிரஸ்காரராக இருந்த காலத்திலே கதர்க்கடையை திறந்து வைக்கப் போகிறார். கோவையில் ஜி.டி.நாயுடு வீட்டில் தங்குகிறார் இரவு முழுக்க இருவருக்கும் விவாதம் நடக்கிறது. கதர் என்பது எதற்கும் உதவாத திட்டம். நீங்கள் ஏன் தூக்கிக் கொண்டு திரிகிறீர்கள் என்று ஜி.டி.நாயுடு கேட்கிறார். பெரியார் கதரை ஆதரித்தே பேசுகிறார். இருவரும் விவாதிக்கிறார்கள். கடைசியாக பெரியார் ஜி.டி.நாயுடுவின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார். ஆம் கதர்த் திட்டம் பயனற்ற திட்டம் தான் என்பதை ஏற்றுக் கொள்கிறார்.

காலையில் கதர்க்கடையைத் திறக்கப் போகும் பொழுது வழக்கமாக தான் அணிதம் கதர் வேட்டியை விட்டுவிட்டு மில் வேட்டியை கட்டி கொண்டு போய் கதர்த்திட்டம் எதற்கும் உதவாத திட்டம் என்ற கதர்க்கடை திறப்பு விழாவில் பேசியவர் பெரியார். எனவே தனக்கு சரி என்று பட்டுவிட்டால், சரியான தத்துவமாக இருக்குமேயானால் தான் சொல்லி வந்திருக்கிறோமே என்பதற்காக அவர் பிடிவாதாமாக பின்பற்றிக் கொண்டிருந்ததில்லை. அதை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பவன் தான் பெரியார் தொண்டன். எனவே விவாதத்திற்கு வரும் பொழுது விட்டுவிடுவது ஒன்றுமில்லை. ஆனால் பெரியாரைப் பொருத்தவரை அவரே கூட மொழி உணர்ச்சி என்று ஒரு கட்டுரை ழுதியிருக்கிறார். விடுதலையில் 25.7.1972ல் அது வந்திருக்கிறது. பெரியார் மறைவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் அதில் அவர் சொல்லுகிறார்.

“மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததிக்காவது சிறிது நாட்டுணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும். உதாரணமாக, இன்று பார்ப்பனர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பார்களானாலும் சமுதாயத் துறையில் எவ்வளவு பேதம் கொண்டவர்களானாலும் சமஸ்கிருதம் (வடமொழி) என்ற மொழி உணர்ச்சியாலேயே அவர்கள் பிரிக்க முடியாத கட்டுப்பாடான இன உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆரியம் சமயத் துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய பல துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலுமே தமிழர்களுக்குள் இன உணர்ச்சி பலப்படவில்லை; குறைந்து வந்து விட்டது. இப்போது பாக்கி உள்ள துறைகளிலும் இந்தி ஆதிக்கம் பெற்று இந்தி மயமாக்கி விட்டால், இந்திதம் ஆட்சிப் பீடம் ஏறி பெருமைபட்டு விட்டால். தமிழன் நிலை என்னவாகும் என்பதை சிந்தியுங்கள் என்று அவர் அறிக்கை விடுகிறார்.

ஆக பெரியார் மொழி உணர்ச்சியைப் பற்றியும் அந்த மொழி உணர்ச்சி உங்களுக்கும் வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கிறார் என்பதையும் உங்களுக்கு நினைவூட்டி, இந்த நூலை உரிய காலத்தில் வெளியிட்டு பெரியாரைப் பற்றி பெரியாருக்கு எதிராக கிளப்பப்படுகிற பல கேள்விகள் பற்றி சரியான விளக்கங்களைக் கொடுத்திருக்கிற தோழர் சுப.வீ. அவர்களை நெஞ்சாரப் பாராட்டி விடை பெறுகிறேன்.

(சென்னை காமராசர் அரங்கத்தில் 19.04.2005 அன்று நடைபெற்ற பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதிய பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசீயம் நூல் வெளியீட்டு விழாவில், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையினை அவசியம் கருதி வெளியிடுகிறோம். அனுப்பி உதவிய தோழர் கண்ணனுக்கு நன்றி)

-கொளத்தூர் மணி

Pin It