சோனியா காங்கிரசுக் கட்சி குடியரசுத் தலைவர் தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்குத் அதிதீவிரம் காட்டுகிறது.. இந்த அலங்காரப் பதவியில் பிரணாப்பை அமர வைப்பதன் மூலம் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை எளிதாக வெற்றி பெறச் செய்ய முடியுமென்பது சோனியா போடும் கணக்கு. ஒருவேளை தோற்றுப் போனாலும் எதிர்வரும் சிக்கலைச் சமாளிக்க குடியரசுப் பதவியில் தம் கையாள் இருந்தால் உதவக் கூடும் என்பது அவரின் இன்னொரு கணக்கு.

நாற்பது ஆண்டுகள் காங்கிரசுக் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர் பிரணாப். அவர் காங்கிரசுக் கட்சியின் நிரந்தர விசுவாசி. குறிப்பாக நேரு குடும்பத்தின் அடிவருடி.பிரதமர் பதவிக்கு ஏங்கித் தவித்தவருக்கு ஆறுதல் பரிசாக இப்பதவி சோனியா கருணையால் கிடைக்க உள்ளது. கருணைக்குக் காரணம் உண்டு.  

ஈழத் தமிழினத்தைக் கருவறுக்கத் துடித்த சோனியாவின் கருத்தறிந்து செயல்பட்டவர்தான் இந்தப் பிரணாப் முகர்ஜி. தமிழீழ மக்களைக் கொன்று குவிக்கவே இவருக்கு வெளியுறவுத் துறை வழங்கப்பட்டது. பணி முடிந்ததும் நிதித் துறை வழங்கப்பட்டது.இப்பொழுது குடியரசுத் தலைவராய் முடிசூட்டப்பட உள்ளார். ஈழப்போரின்போது முகாம்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி சிங்கள அரசின் ஏவலாளியாகப் பணி செய்தவர். ஈழத் தமிழரின் இரத்தத்தில் நனைந்த கைகள் இவருடைய கைகள்.

இக்கொலைகாரனைத் தமிழகத்திற்கு அழைத்து வந்து விருந்து கொடுத்த பெருமைக்குரிய மாமனிதர் தமிழினத் தலைவர் முத்துவேலர் கருணாநிதிஆவார். உதட்டில் ‘டெசோ’ அமைப்பும், நெஞ்சில் பிரணாப்பையும் வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் வித்தையைக் கருணாநிதியைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது.

பிரணாப் மிகச் சிறந்த நிர்வாகி என்று வாய் கூசாமல் புளுகி ஆதரிக்கிறார். கருணாநிதியின் தமிழ்நாட்டுக் கூட்டணியில் உள்ள தொல்.திருமாவளவன், எந்தக் கூட்டணியிலும் இல்லாத மருத்துவர் ராமதாசு, தமிழினத்திற்கு இரண்டகம் செய்வதற்கே பிறப்பெடுத்த மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாசு காரத் ஆகியோரும் பிரணாப்பை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர்.

பிரணாப்பை ஆதரிக்கும் மேற்படிக் கட்சிகள் (மார்க்சிஸ்ட் தவிர) முள்ளி வாய்க் கால் படுகொலையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி அப்போது அரங்கேற்றிய நடிப்புக் காட்சிகள் நம்முன்னே விரிகின்றன.

2008 அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி தில்லி அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினார். போர் நிறுத்தம் ஏற்படாவிடில், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர் என அறிவித்தார். அதற்குக் காலக்கெடு வேறு விதித்தார். பிறகு அதே மாதம் 24 ஆம் நாள் மீண்டும் போர் நிறுத்தம் கேட்டு மனிதச் சங்கிலி நடத்தினார். கருணாநிதி நடத்துவதெல்லாம் நாடகமென்று நன்கு அறிந்த தில்லி அரசு அடுத்த இரண்டு நாளில் பிரணாப்பைத் தமிழகத்திற்கு அனுப்பி வைத்து நாடகத்தில் ஒரு திருப்பு முனையை உருவாக்கியது.

போர் நிறுத்தக் கோரிக்கையை அதுவரை வற்புறுத்தி வந்த கருணாநிதியோ பிரணாப்பைச்சந்தித்து விட்டுச் சொன்னார். ‘இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தியளிக்கிறது’.

பிரணாப்பும் கோபாலபுரம் வீட்டு வாயிலில் நின்று செய்தியாளரிடம் பேட்டி கொடுத்தார்.

செய்தியளர் : போர் நிறுத்தம் வருமா?

பிரணாப் : இந்திய அரசு இலங்கை அரசைப் போர் நிறுத்தம் செய்யும்படி கோராது.

செய்தியாளர் : படைக் கருவிகள் கொடுப்பதை நிறுத்துவீர்களா?

பிரணாப் : இலங்கை அரசுக்குப் படைக் கருவிகள் கொடுப்பது இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங் களைப் பாதுகாப்பதற்கு.

செய்தியாளர் : இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்து?

பிரணாப் : இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதை நிறுத்த முடியாது. பன்னாட்டுப் படையினருக்குப் பயிற்சி யளிப்பது போலத்தான் இலங்கைக்கும் பயிற்சி கொடுக்கிறோம்.

பிரணாப்பின் ஆணவம் நிறைந்த பேட்டிக்கு கருணாநிதியிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. அவருடைய பதவி விலகல் நாடகமும், மனிதச் சங்கிலி நாடகமும் அப்பட்டமாய் அம்பல மாகியது அன்றுதான்.

அவருடைய உண்ணாநிலைப் போராட்டம் இரண்டாவது நாடகமென்பது தனிக் கதை. தமிழ்க் குடிதாங்கி மருத்துவர் ராமதாசு ஈழத்துத் தமிழ்க் குடிகள் கொல்லப்படுவது தாங்காமல் துடித்தவர்!

19.2.2009 அன்று பழ.நெடுமாறன் தலைமையில் கோவையில் கூடிய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுசி கலையரசன் ஆகியோருடன் மருத்துவர் இராமதாசும் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் (இலங்கை அரசைப் போர் நிறுத்தம் செய்யக் கோரி இந்தியா வலியுறத்த முடியாது என்று கூறிய) பிரணாப் முகர்ஜி பேட்டியைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி தந்த மருத்துவர் இராமதாசு,‘பிரணாப் முகர்ஜியின் இந்தப் பேச்சு சிங்கள இனவெறி இராசபக்சேவுக்கு மிகப் பெரிய துணிச்சலையும் தெம்பையும் அளித்துள்ளது என்றும் இதனைத் தாம் கண்டிப்பதாகவும் கூறினார்.

இப்போது அதே இராமதாசு ‘பிரணாப்பிற்கு மாற்றாக நல்ல வேட்பாளர் யாருமில்லையென்பதால் குடி யரசுத் தலைவர் தேர்தலில் அவரை ஆதரிக்கிறோம் என்கிறார். ‘இன்னைக்கு நல்லவரு, நேத்து ஏம்பா கெட்டவரு’ன்னு வடிவேலு பாணியில் கேள்வி கேட்கத் தோன்றுகிறது.

தொல். திருமாவளவனோ பூசாரி பிரணாப்பை விட்டு விட்டு நேராகச் சோனியா அம்மனிடமே முறையிட்டார் ‘தாயே! போரை நிறுத்துங்கள்! என்று. கைகூப்பிக் கேட்டும் அவரின் வேண்டுதல் பலன ளிக்கவில்லை. ‘காங்கிரசை வேரோடு வீழ்த்துவேன்’ என்று அன்று சூளுரைத்த அம்மாவீரரே 2009 ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரசு வேருக்கு முதல் ஆளாக நீரூற்றினார். அத்தோடு நீர்த்துப்போனது அவரின் ஈழ விடுதலை அரசியல். மதவாத சக்திகள் தலை தூக்குவதைத் தடுத்து நிறுத்தவே பிரணாப்பை ஆதரிப்பதாக இப்போது கூறுகிறார். காங்கிரசு ஆட்சிக் காலத்தில்தான் பாபர் மசூதியை இடித்தார்கள் என்பதை யாராவது அவருக்கு எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

இந்தியப் பெருமுதலாளி வர்க்கக் கட்சியென்று காங்கிரசைக் குற்றம் சாட்டும் மார்க்சிஸ்டு கட்சியின் நிலையோ பரிதாபத்திற்குரியது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஊக்குவிப்பதாக முழங்கி வந்த மார்க்சிஸ்டுக் கட்சியினர் இப்போது பிரணாப்பை ஆதரிப்பதாகக் கூறுகின்றனர். பாரதீய சனதாக் கட்சியின் ஆபத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் அவரை ஆதரிக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டனராம்! 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டனர். அன்று பாசகவால் ஆபத்து இல்லை, இன்றோ ஆபத்தாம். இப்படிக் கூறுவதில் இவர்களுக்கு வெட்கமே இல்லை. உண்மையை இவர்களின் கூட்டணிக் கட்சியான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அம்பலப்படுத்தியுள்ளது. மேற்கு வங்க அரசியலில் மம்தா பானர்ஜியின் கை ஓங்கியிருப்பதை இக்கட்சி விரும்பவில்லை. வரும் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ‘வங்காள இனத்தைச் சேர்ந்த பிரணாப்பைப் புறக்கணித்த மம்தாவிற்கு வாக்களிக்காதீர்!‘ என்று பரப்புரை செய்வதற்கு ஏற்ற வகையில் குடியரசுத் தலைவர் தேர்தலை மார்க்சிஸ்டு கட்சிப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது என்று அக் கட்சி ஜனசக்தி ஏட்டில் பகிங்கரமாகவே குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்த் தேசிய அமைப்புகளை இனவாத முத்திரை குத்தும் மார்க்சிஸ்ட்டுகள் வங்காள இனவாதத்தில் மூழ்கிப்போவது வெட்கக் கேடான செயலாகும்.

இந்தித் தேசிய இனத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறையில் தமிழினம் தனக்கான உரிமைகளை மீட்டெடுக்கவே முடியாது. குடியரசுத் தலைவரும் இந்த அமைப்பு முறைக்குக் கட்டுப்பட்டவரே. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைப்பதற்கே இவரின் அதிகாரம் பெரும்பாலும் பயன்படுகிறது. இப்பதவியால் தமிழக அரசு மூன்று முறை கலைக்கப்பட்டிருக்கிறது. தமிழக மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படாத ஒருவரைத் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும் புகழ்மாலை சூட்டுவதும் தமிழினத்திற்குச் செய்திடும் இரண்டகமாகும். அதைக் காட்டிலும், தமிழின அழிப்பில் கோடாரிக் காம்பாகச் செயல்பட்ட பிரணாப்பை ஆதரிப்பதென்பது மன்னிக்கவே முடியாத குற்றமாகும்.

இப்போதுள்ள பிரதீபா பாட்டில் மூன்று தமிழருக்குத் தூக்கிலிடும் நாள் குறித்தவர். முன்பிருந்த அப்துல் கலாமோ அணு உலையை ஆதரித்துத் தமிழரின் உயிருக்கு உலை வைத்தவர். அடுத்து பிரணாப் பொறுப்பேற்றால் தாயகத் தமிழர்,ஈழத் தமிழர் ஆகியோரின் துயரம் கூடுமே ஒழிய குறையாது. ஆளும் கட்சிகளின் கைப்பொம்மையாகச் செயல்படும் குடியரசுத் தலைவர்கள் நமக்கு இனி வேண்டவே வேண்டாம். செல்லாத காசைக் கொண்டு ஊர் போய்ச் சேர முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அது போலவே தமிழர்கள் அதிகாரமற்ற குடியரசுத் தலைவர் பதவி மூலம் எந்த உரிமையையும் வென்றெடுக்க முடியாது என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை.

Pin It