நமது செய்தி ஊடகங்கள் மிகவும் விழிப்புணர்வுடையவை. ஆளும் வகுப்பாருக்கு ஆற்ற வேண்டிய தொண்டை அப்பழுக்கின்றி அவை ஆற்றி வருகின்றன. எந்தச் செய்தியை அடக்கி வாசிக்க வேண்டும் எந்தச் செய்தியைத் ‘தண்டோராப்’ போடவேண்டும் என்பது அவற்றிற்கு நன்கு தெரியும். மய்யத் தணிக்கை ஆணையம் வெளிக்கொணர்ந்த அலைக்கற்றை ஊழலையும் நிலக்கரி ஊழலையும் தங்களுக்குக் கிடைத்த ‘வரப்பிரசாதங்களாக’ அவை கொண்டாடின. இப்பொழுது சோனியா மருமகன் வதேரா ஊழல் கையில் கிடைத்து விட்டது; தூள் கிளப்புகிறார்கள்.

நாம் ஊழலை ஆதரிக்கவில்லை; ஊழலை வெளிக்கொணர்வதையும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தையும் வரவேற்கிறோம். ஆனால் இந்த ஊழல்களுக்கும் கொள்ளைகளுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற அரசியல் பொருளியல் சமூகக் காரணங்களை ஆராய வேண்டாமா? அவற்றிற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்க வேண்டாமா? அங்கெல்லாம் இவ்வூடகங்கள் கள்ள அமைதி காக்கின்றன. இப்பொழுது கூட ஊழலை எதிர்த்துப் பெருங்கூச்சலிடுவது மக்கள் அதற்கான உண்மைக் காரணங்களைக் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான்; இருக்கின்ற சமூக அரசியல் பொருளியல் அமைப்புக்கெதிராக அவர்கள் கிளர்ந்து எழுந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.

koodankulam_637

அலைக்கற்றை, நிலக்கரி ஊழல்களை வெளிச்சமிட்ட அதே தணிக்கை ஆணையம்தான் அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையத்தைப் பற்றியும் படம் பிடித்துக் காட்டியுள்ளது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள இன்றைய நிலையில் தணிக்கை ஆணையம் வெளிப்படுத்தியுள்ள உண்மைகள் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கக் கூடியவையாக அமைந்துள்ளன. ஆனால் நம் செய்தி ஊடகங்கள் அவற்றை அடக்கமாக வாசித்து அமைதி காத்தன. மக்களின் போராட்டம் வலுவடைந்து விடக்கூடாதே என்ற கவலைதான் அதற்கான காரணம்.

அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் என்ற இந்த அமைப்பு 1983 நவம்பர் 15இல் தொடங்கப்பட்டது. 1969இல் தாராபூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்ட பொழுது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அணுமின் நிலைய வடிவமைப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணி நடைமுறைகள் ஆகியன குறித்து அறிவுரை வழங்க நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டியதின் தேவை உணரப்பட்டது. அப்பொழுது அணு ஆற்றல் துறை அதற்கென ஒரு குழுவை அமைத்தது. அதுவே இன்றைய அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையமாக உயர்ந்துள்ளது. உருவாகும்பொழுதே அது தற்சார்பான அதிகாரம் படைத்த ஆணையமாக இயங்கும் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் அது அன்றிலிருந்து இன்று வரை அவ்வாறில்லை என்பதுதான் மெய்நடப்பு.

ஒழுங்குமுறை ஆணையம் வெறும் காகிதப்புலி, அதன் குடுமி அணு ஆற்றல் துறையின் கையிலேயே உள்ளது என்று குற்றம் சாட்டுகிறார் அதன் முன்னாளையத் தலைவர்களில் ஒருவரான முனைவர் ஏ.கோபாலகிருட்டிணன். அவர் கூற்றை மெய்ப்பிப்பதாய் வெளிவந்துள்ளது தணிக்கை ஆணையத்தின் அறிக்கை. ஒழுங்குமுறை ஆணையம் மய்ய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்ட கீழ்நிலை அமைப்பே என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது தணிக்கை ஆணையம்.

மேலோட்டமாகப் பார்த்தால் அது மய்ய அரசின் அணு ஆற்றல் துறைக்கும் அணுமின் நிறுவனத்திற்கும் கட்டுப்படாத அமைப்புப் போலத்தான் தோன்றும். சட்டப்படி மேற்கண்ட இரு அமைப்புகளுக்கும் அது அறிக்கை அளிக்க வேண்டியதில்லை. அணு ஆற்றல் ஆணையத்திற்கு மட்டும் அறிக்கை தந்தால் போதும். சிக்கல் என்னவென்றால் அணு ஆற்றல் ஆணையத்தின் தலைவரும் அணு ஆற்றல் துறைச் செயலாளரும் ஒருவரே. அது மட்டுமின்றி அணுமின் நிறுவனத்தின் தலைவர் அணு ஆற்றல் ஆணையத்தில் உறுப்பினராகவும் உள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக ஒழுங்குமுறை ஆணையம் தன் வரவு செலவிற்கு முற்றிலுமாக அணு ஆற்றல் துறையையே நம்பியுள்ளது. இதனால் அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் எவருக்கும் கட்டுப்படாத தற்சார்பான தனி அதிகாரம் படைத்த அமைப்பு என்று சொல்வதில் பொருளே இல்லை.

நிலைமை இவ்வாறிருக்கும்பொழுது ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுரைகளை, வழிகாட்டுதல்களை, பரிந்துரைகளை எவர் மதிப்பர். ஒழுங்குமுறை ஆணையத்தின் பாதுகாப்பு மீளாய்வுக் குழுவின் அணுஉலை பாதுகாப்புக் குறித்த 3200 பரிந்துரைகளில் 375 பரிந்துரைகளை அணு ஆற்றல் துறை இன்று வரை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்கிறது தணிக்கை ஆணையம். அதில் 137 பரிந்துரைகள் 2005ஆம் ஆண்டிற்கு முந்தியனவாம். கதை இப்படியிருக்க நம் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான ஒழுங்குமுறை ஆணயத்தின் 17 பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்கள். உச்சநீதிமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அணு பாதுகாப்புக் குறித்த பன்னாட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட விதிகளில் விதி 8 அணுவைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் பாதுகாப்பை வகுக்கும் ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் இடையே ஒட்டோ உறவோ கூடாது எனத் தெளிவாக வலியுறுத்துகிறது. இதில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1970 வாக்கிலேயே அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சருக்கு அறிவியல் அறிவுரையாளராக இருந்த அசோக் பார்த்தசாரதி சுற்றுப்புறச் சூழலையும் மக்கள் நலத்தையும் பேணுவதற்கு அதிகாரமுள்ள ஒழுங்குமுறை ஆணையத்தின் தேவை குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந்தியத் திருநாட்டு அணு ஆற்றல் ஆதரவாளர்கள் மக்கள் நலத்தை முற்றாகப் புறம் தள்ளி வல்லாதிக்க நலன்களுக்கு ‘எசமான விசுவாசத்துடன்’ பணியாற்றி வருகின்றனர். திட்டமிட்டே அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குட்பட்ட அமைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் இதோ இயங்கத் தொடங்கிவிடும் நம் மின்சார நெருக்கடியெல்லாம் ஒரு நொடியில் தீர்ந்து விடும் என்று அறிவியலாளர்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை எல்லோரும் பேசி வருகிறார்கள். ஆனால் இதெல்லாம் ஊரை ஏமாற்றும் பேச்சு என்பதை தணிக்கை ஆணையம் வெளிப்படையாகப் போட்டுடைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் எந்த அணுமின் நிலையமும் திட்டமிட்ட காலத்தில் திட்டமிட்ட செலவில் முடிக்கப்படவே இல்லை என்கிறது அதன் அறிக்கை. அதைவிட எந்த அணுமின் நிலையமும் திட்டமிட்ட மின் உற்பத்தி அளவை எட்டவே இல்லை என்ற உண்மையையும் அது உரைக்கிறது.

சென்னை அணுமின் நிலையம் (கல்பாக்கம்)1965இல் 60 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் ஒவ்வோர் அணு உலைக்கும் முதலீட்டுச் செலவு இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்தது. அவ்வாறே ஒவ்வோர் அணுஉலை செயல்பாட்டிற்கும் திட்டமிட்ட காலத்தைக் காட்டிலும் எட்டாண்டுகள் கூடுதலாகப் பிடித்தது. நரோரா அணுஉலையின் கதை இதைவிட மோசமானது. திட்டமிட்ட முதலீட்டுச் செலவைக் காட்டிலும் அது 188%இற்கும் மேல் ஏப்பமிட்டுவிட்டது என்கிறார் மய்யத் தணிக்கையாளர். இக்கணக்கு அதன் செயல்பாட்டிற்கு முந்தைய கணக்கு. செயல்பாட்டிற்குப் பிந்தைய கணக்கு இன்னும் கூடுதலாக இருக்கும். கூடங்குளம், பரோடா, மனுகுரு, துருவா, தாராப்பூர் என எங்கேயும் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்கிறது தணிக்கை ஆணையம். கூடங்குளம் 2013இல் செயல்படத் தொடங்கும் 1000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படும் என்பதெல்லாம் வெறும் கட்டுக் கதை.

கோடி கோடியாய் மக்களின் வரிப் பணத்தை ஏப்பமிடும் இவ்வணுமின் நிலையங்கள் இதுவரை திட்டமிட்ட மின் உற்பத்தி அளவை எட்டியதே இல்லையென்றாலும் அணுஆற்றல் துறையின் வாய்ச்சவடாலுக்குக் குறைவே இருப்பதில்லை. 2000ஆம் ஆண்டுவாக்கில் 10000 மெகாவாட்உற்பத்தியைச் சாதித்து விடுவோம் என்று அது தம்பட்டமடித்தது. ஆனால் தணிக்கை ஆணையம் வெளிப்படுத்தும் உண்மைகள் அதிர்ச்சி அளிப்பனவாக உள்ளன.

1995&96இல் 940 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தியில் தொடங்கி படிப்படியாக அதிகரித்து 2001ஆம் ஆண்டில் 7880மெகாவாட் உற்பத்தியை எட்டிப் பிடிப்பதாகத் திட்டம் தந்தது அணு ஆற்றல் துறை. ஆனால் உரு.5291.48 கோடி செலவு செய்த பிறகு 1998 மார்ச்சில் அது கூடுதலாக உற்பத்தி செய்தது எதுவுமே இல்லை என்கிறது தணிக்கைத் துறை. நம் மாண்புமிகு அணு விஞ்ஞானி நாராயணசாமி இதற்கு இதுவரை எந்த விடையும் தந்ததாகத் தெரியவில்லை. தணிக்கை ஆணையம் வெளிப்படுத்தும் இன்னொரு உண்மை தொழிலாளர்களின் பாதுகாப்புக் குறித்தது. முன்பு ஒவ்வோர் அணுமின் நிலையத்திலும் கதிர்வீச்சுப் பாதுகாப்பிற்கென உடல் நல அலகு ஒன்றிருந்தது. அது பாபா அணு ஆய்வு மய்யத்தோடு இணைந்திருந்தது. 2009இல் இந்த அலகுகளெல்லாம் அணு ஆற்றல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டன. அதாவது யார் அணு உலைகளை இயக்குகிறார்களோ அவர்களே தொழிலாளர்களின் கதிர்வீச்சுப் பாதிப்புக் குறித்தும் ஆய்வு செய் வார்கள். அவர்களின் ஆய்வு முடிவு எந்தக் கதிர்வீச்சுப் பாதிப்பும் இல்லை என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? அதனால்தான் அணு உலைகளுக்குள் நிகழும் பல்வேறு விபத்துகள் வெளி உலகுக்குத் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன. நம்மூர் அரசியல்வாதிகளும் சோரம் போன அறிவியலாளர்களும் இந்தியஅணுமின் நிலை யங்கள் பாதுகாப்பானவை என்று பெருமை பேசிக் கொள்ளவும் முடிகிறது.

அதிகாரமே அற்ற ஒழுங்குமுறை ஆணையம் தொழிலாளர் பாதுகாப்புக் குறித்தும் எந்தவோர் உருப்படியான செயலையும் இதுவரை மேற் கொள்ளவில்லை. ஏற்கனவே அது உருவாக்கியிருக்க வேண்டிய அணுக்கதிர் வீச்சுப் பாதுகாப்புக் கொள்கை யையும் இதுவரையும் அது வரையறுக்கவில்லை. அவசரகாலத் திட்டமிடல் பயிற்சியிலும் அது போதிய அக்கறை காட்டவில்லை என்பதோடு நடத்தப் பட்ட பயிற்சிகளும் அவசரக்காலத்திற்கு எந்த வகையிலும் உதவாது எனக் குற்றம் சாட்டுகிறது தணிக்கை ஆணையம்.

இன்னோர் எச்சரிக்கை மணியையும் ஒலிக் கிறது தணிக்கைத் துறை. அணு உலைகளைச் செயல் நிறுத்தம் செய்ய எந்தத் திட்ட வழிமுறைகளும் அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையத்திடமோ அணுமின் நிறுவனத்திடமோ இல்லை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அணுமின் நிலையங்கள் உட்பட இந்தியாவில் உள்ள எல்லா அணுமின் நிலையங்களும் செயல்நிறுத்தத்திற்கான வழிமுறைகள் இல்லாமலேயே இயங்கிக் கொண்டுள்ளன. 1998இல் ஒழுங்குமுறை ஆணையம் இது குறித்துக் கையேடு ஒன்றை வெளியிட்டது. அணு உலைப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பே செயல்நிறுத்தத் திட்டமொன்றை ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்பது ஏட்டளவிலேயே உள்ளது. எவரும் அதை வற்புறுத்துவது இல்லை. அணுஉலைகளின் செயல் காலம் முடிவடைந்த நிலையில் அவற்றை என்ன செய்வார்கள் அணுக் கழிவுகளைப் பல்லாண்டுக் காலத்திற்கு எப்படிப் பாதுகாப்பார்கள் என்பதை யாரறிவார்?

நம் அணுத்துறை நிர்வாகம் எவ்வளவு கேடு கெட்டதாக உள்ளது என்பதை மய்ய அரசாங் கத்தின் ஓர் அலகான தணிக்கைத் துறையே அய்யத்திற்கிடமின்றி வெளிப்படுத்தியுள்ளது. இதன் கீழ் அணு உலைகளைத் திறப்பது என்பது நம் தலைகளில் அணுகுண்டைக் கட்டிக் கொள்வதற்கு ஒப்பானது தான். ஆனால் இந்தியா அணு வணிகர்கள் எந்தத் திறனாய்வுக்கும் அஞ்சிப் பின்வாங்கப் போவதில்லை. உலகச் சாவு வணிகர்களோடு அவர்கள் கூட்டு மிகவும் வலுவானது.

ஊழல்களைப் பற்றிக் கூச்சல் போடும் செய்தி ஊடகங்கள் இந்த உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்காது. அவற்றை மூடி மறைக்கவே செய்யும். நடுநிலை என்ற போர்வையில் அவை நுட்பமாக ஆளும் வகுப்பாரின் நலனுக்கே பணி புரியும். இன்று கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கத் தொடங்கினால் மின்வெட்டு நீங்கி விடும் என்ற ஒரு மாயையை அணு வணிக ஆதரவு அரசியல்வாதிகளுடன் சேர்ந்து இவ்வூடகங்களும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன. இவர்களின் பொய்ப் பித்தலாட்டங்கள் முறியடிக்கப்பட வேண்டும். மக்கள் மீது உண்மையான பற்றுக் கொண்ட ஆற்றல்களே இதைச் சாதிக்க முடியும். போராடுவது தென் மாவட்ட மீனவர்கள் மட்டுமே அல்ல ஒட்டு மொத்தத் தமிழர்களே என்ற நிலை உருவாகும் பொழுதுதான் இந்தச் சாவு வணிகர்களைத் தோற்கடிக்க முடியும். நம் எதிர்காலக் குழந்தைகளுக்கு அமைதியான தமிழகத்தை விட்டுச் செல்லமுடியும்.

Pin It