சென்னையை ஒட்டியுள்ள திருமழிசைப் பேரூரில் தமிழக அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஒருவர் 'பப்ளிக் ஸ்கூல்' என்ற பெயரில் உலகத் தரம் வாய்ந்த பள்ளி ஒன்றைக் கட்டி வருகிறார்.

பள்ளி அமையும் இடம் முன்பாக எழிலார்ந்த பூங்கா அமைப்பதற்காக அங்கே உள்ள இடுகாட்டை அப்புறப்படுத்த முனைகிறார்கள்.

இசுலாமியர் இடுகாட்டையும் அப்புறப்படுத்தி அங்கே பள்ளியின் வாகனங்கள் வந்து போக 50 அடி தார்ச்சாலை போடவிருக்கிறார்கள்.

பள்ளி கட்டும் இடத்திற்கு பக்கம் இருந்த 4 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வளைத்துக் கொண்டுவிட்டனர்.

திருமழிசைக்கு நீர் ஆதாரமாக இருக்கிற இடுகாட்டை ஒட்டிய ஓடை இந்தப் பள்ளிக்காக மண்கொட்டி மூடப்பட்டு விட்டது.

1986 ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டு காலமாக இளங்காளி அம்மன் நகரில் 200 ஏழைக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நகரையே இப்பள்ளிக்காக இல்லாதழிக்கப் பார்க்கிறார்கள்.

12.04.2010 அன்று திருமழிசை மக்கள் மின்வெட்டைக் கண்டித்துப் போராடினார்கள். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, பெண்கள் உட்பட 17 பேர் சிறை வைக்கப்பட்டார்கள். ஆனால் போராட்டத்தின் விளைவாக பகல் 12 முதல் 3 மணி வரை இருந்த மின்வெட்டு காலை 9 முதல் 11 ஆக மாறியது. இந்தப் பள்ளியைக் குளிர்பதன அறைகளோடு அமைக்க இருக்கிறார்கள். அதற்காகவே மீண்டும் பள்ளி முடியும் நேரமான மாலை 4 முதல் 6 வரை மின்வெட்டு நேரத்தை மாற்றி விட்டார்கள்.

திருமழிசை, ஆழ்வார் பிறந்த மண் என்பதால் கோபுர உயரத்தை மீறி மாடி வீடுகள் கட்டுவதில்லை என்பது அம்மக்கள் பின்பற்றி வருகிற மரபு. இந்தப் பள்ளி அதை மீறி பல அடுக்கு மாடிகளோடுதான் கட்டப்படுகிறது.

பெற்றோர்கள் இப்பள்ளியை நாடி வரச்செய்வதற்காகத் திருமழிசை, புறநகரில் இல்லை, சென்னையில்தான் இருக்கிறது எனக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதற்காகவே திருமழிசையின் அஞ்சல் குறியீட்டு எண் 602107 என்பதை சென்னை - 600124 என மாற்றிவிட்டார்கள்.

இவை அனைத்தும் அந்தந்த அரசுத் துறைகளின் துணையோடு நடந்திருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

வணிக நோக்கிலான தனியார் பள்ளிக்காக நடைபெற்றுள்ள அரசுத் துறைகளின் இந்த முறைகேடுகளைக் கண்டித்து 2010அக்டோபர் 12 அன்று பொதுக்கூட்டம் மார்க்சிய மன்றம் மற்றும் வீடற்றோர் சங்கம் சார்பில் திருமழிசை மேலண்டை மாடவீதியில் நடைபெற்றது. மார்க்சிய மன்ற அமைப்பாளர் தோழர் ச. ஜெயநேசன் தலைமை வகித்தார். பேராசிரியர் சரசுவதி, ததேவிஇ தோழர் வே. பாரதி கண்டன உரையாற்றினர். வீடற்றோர் சங்கத் தோழர் பி.ஜி.வி.சதீசு நன்றி தெரிவித்தார்.

Pin It