இந்தியத் துணைக் கண்டத்தின் நடுவே சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார், சார்க்கண்டு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஊடாக நீண்டு கிடக்கிறது தண்டகாரண்யம். இரும்புத் தாது முதல் பாக்சைட்டு வரை விலை மதிக்கவியலாத கனிம வளம் தண்டகாரண்ய மலைக்காடுகளில் மறைந்துள்ளது. இந்தக் கனிம வளத்தைக் கைப்பற்றவே டாட்டாக்கள், மிட்டல்கள், அம்பானிகள் உள்ளிட்ட இந்தியப் பன்னாட்டுப் பெருங்குழுமங்கள் அவசரப்படுகின்றன. இந்தப் பெருங்குழுமங்களே இந்திய அரசை ஆட்டுவிக்கின்றன. 

       ஆனால் தண்டகாரண்யப் பழங்குடி மக்கள், வல்லாதிக்க எதிர்ப்புப் போராட்டப் பாரம்பரியம் கொண்டவர்கள். அவர்கள் பெருங்குழுமங்களின் ஆதாய வேட்டையை எதிர்த்து உறுதியாகப் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை இந்திய அரசு மூர்க்கமாய் ஒடுக்க முனைந்துள்ளது. 

       அய்ரோப்பியர்கள் அமெரிக்காவில் நுழைந்து அம்மண்ணின் மக்களாகிய செவ்விந்திய மக்கள் மீது தொடுத்தச் சிவப்பு வேட்டை போல், இந்திய அரசு தண்டகாரண்யப் பழங்குடி மக்கள் மீது பச்சை வேட்டை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது உண்மையில் மக்கள் மீது அரசு தொடுத்துள்ள போரே தவிர வேறன்று. 

       காந்தியர்கள் முதல் மாவியர்கள் (மாவோயிஸ்டுகள்) வரை பல தரப்பட்டவர்களும் பழங்குடி மக்களைத் திரட்டியும் அவர்கள் சார்பிலும் போராடி வருகிறார்கள். சூழலைப் பொறுத்தப் போராட்ட வடிவங்களும் தலைமைக் கருத்தியல்களும் மாறுபடுகின்றன. பழங்குடி மக்களுக்கு ஆதரவாக அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்களும், அமித் பாதுரி போன்ற பேராசிரியர்களும், மருத்துவர் பினாயக் சென் போன்ற மனித உரிமை ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். 

       நண்பர்கள் யார், நண்பர்களைப் போல் நடிப்பவர்கள் யார் என்பதைப் பழங்குடி மக்களின் போராட்டம் தெளிவாகப் புலப்படுத்தி விட்டது. பழங்குடி மக்கள் மீதான போரில் மன்மோகன் - சோனியா - சிதம்பரம் கும்பலோடு ஒற்றுமை நாடுவதில் மேற்கு வங்க 'இடதுசாரி' முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கு வெட்கமில்லை. தாராளமய தனியார்மய உலகமய வழியிலான 'வளர்ச்சி'ப் பாதையில் வலதுசாரி பாசக, இடதுசாரி சிபிஐ, சிபிஎம், நடுசாரி காங்கிரசு, 'திராவிட சாரி' திமுக, அதிமுக இடையே அடிப்படை வேறுபாடு ஒன்றுமில்லை.

       அறிவூட்டி உணர்வூட்டி பழங்குடி மக்களை அணிதிரட்டி, வல்லாதிக்க எதிர்ப்புப் போராட்ட ஆற்றலாக ஒழுங்கமைத்துள்ள மாவியர்களின் பங்கு சிறப்பானது. குழந்தைகளின் கல்விக்காகவும், பழங்குடி மக்களின் கோண்டு மொழி போன்றவற்றுக்கு வரி வடிவம் தரவும், அம்மக்களின் பண்பாட்டுக் கூறுகளையும் கலை வடிவங்களையும் மீட்டெடுக்கவும் போர்ச் சூழலிலும் கூட மாவியர்கள் எடுத்துள்ள முயற்சிகள் மகத்தானவை. சமுதாயத்தில் சரிபாதியான பெண்களின் பங்கேற்பு இல்லாமல் எந்தப் புரட்சியும் வெற்றி பெறாது என்ற சரியான புரிதலோடு, பெண்களின் விழிப்புணர்வுக்காகவும் ஒழுங்கமைப்புக்காகவும் மாவியர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் மதிப்புமிக்கவை.

       உலகில் ஆயுதப் போராட்டம் நடத்துகிற எந்த அமைப்பும் இராணுவ வாதப் பிறழ்வுகளிலிருந்து விலக்குப் பெற்றதில்லை. இது மாவியர்களுக்கும் பொருந்தும். லெனின் கூறியது போல், தவறே செய்யாமலிருக்க வேண்டுமானால் எதுவுஞ் செய்யாமலிருக்க வேண்டும். குறிக்கோளில் உறுதிப்பாடும், மக்களைச் சார்ந்து போராடும் நிலைப்பாடுமே தவறுகளைக் களைந்து முன்னேற உதவும். அழித்தொழிப்பு ஒன்றே போராட்ட வடிவம் என்ற தொடக்கக் கால சாரு வழியிலிருந்து மாவியர்கள் போராட்ட உத்திகளில் பெரிதும் முன்னேறியிருப்பதை மறுக்கவியலாது.

       பழங்குடி மக்களை அணிதிரட்டி மாவியர்கள் நடத்தி வரும் ஆயுதப் போராட்டத்தை நாம் அட்டியின்றி ஆதரிக்கிறோம். அதேபோல் இந்திய அரசுக்கும் பெருங் குழுமங்களுக்கும் எதிராக காந்தியர்கள், சுற்றுச் சூழலியர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் நடத்தும் போராட்டங்களையும் ஆதரிக்கிறோம். இந்தப் பல்வேறு போராட்ட அணிகளுக்கும் இடையில் உரையாடலும் ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் தேவை எனக் கருதுகிறோம்.

       இந்தப் போராட்டங்கள் வல்லாதிக்கர்களை வழிமறித்;து ஒரளவு தடுத்து நிறுத்தியுள்ளவரை நம்பிக்கையளிக்கக் கூடியவை. அதேபோது இவற்றிற்கென்று தெளிவானதோர் அரசியல் குறிக்கோள் இல்லாமல் நேர் வகையில் வெற்றிபெற முடியாது. சனநாயக உள்ளடக்கம் கொண்ட இந்தப் போராட்டங்கள் சனநாயக அரசியல் அதிகாரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்பட வேண்டும். சனநாயக அரசியல் அதிகாரத்துக்குரிய ஆட்சிப்புலம் எது என்பதுதான் மையக் கேள்வி.

       இந்தியப் புரட்சி, இந்திய அரசதிகாரத்தைக் கைப்பற்றல் என்ற நோக்குடன் பழங்குடி மக்களின் போராட்டத்தை அதற்கான ஒரு படியாக மட்டும் மாவியர்கள் கருதுவார்களானால், கடந்தகால வரலாற்றின் படிப்பினைகளை அவர்கள் எந்த அளவுக்கு உள்வாங்கினார்கள் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

       தண்டகாரண்யப் பழங்குடிகளுக்கென்று மொழிகளும் தேசிய இனங்களும் உண்டு. ஒவ்வொரு குடியினமும் தேசிய இனமாக உருவாகி வருகிறது கண்கூடு. அம்மக்களின் தேசியப் பேரவாதான் ஜார்கண்டிலும் சத்திஸ்கரிலும் தனி மாநிலக் கோரிக்கைகளாக உருப்பெற்றது. தமிழ்நாட்டில் தனிநாட்டுக் கோரிக்கை மாநில சுயாட்சிக் கோரிக்கையாக சுருங்கியபோது என்ன நடந்ததோ அதே நிலை தான் அங்கேயும். புரட்சித் தளபதிகளாகத் - தொடங்கிய பழங்குடித் தலைவர்கள் மாநில முதல்வர்களாகவும் அமைச்சர்களாகவும் அரியணையேறி ஊழல் பேர்வழிகளாக மாறிவிட்டனர். சிபுசோரனும் மதுகோடவும் நாமறிந்த உதாரணர்கள்.

       இந்திய அரசமைப்புக்குப் பழங்குடிகளை உட்படச் சொல்வதில் எவ்வித வரலாற்று நியாயமும் இல்லை. இந்தியா என்கிற கட்டமைப்பே பழங்குடி மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கான ஏற்பாடுதான். பழங்குடி மக்கள் போராட்டத்தை விரிவுபடுத்தி, இந்தியப் புரட்சி நடத்துவது என்பது இந்தியத் துணைக் கண்டத்தின் பன்மொழி, பல்லின இயல்பையும், அதன் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியையும் அசட்டை செய்வதே ஆகும். மெய்ம்மையிலிருந்து கருத்தியல் உண்மைகள் வகுக்கப்பட வேண்டுமே தவிர, கருத்தியல் உண்மைகளின் - நம்பிக்கைகளின் - அடிப்படையில் மெய்ம்மைகளை மாற்றி வரையறுக்க இயலாது.

       வீரத் தெலங்கானா (1946-51) தோற்றதற்கான அடிப்படைக் காரணம் 'விசாலாந்திரத்தில் மக்கள் ராஜ்யம்' என்ற அதன் அரசியல் முழக்கத்தைக் கைவிட்டு, இந்தியப் புரட்சியின் செந்தளமாக ('இந்தியாவின் ஏனான்') அதனைக் கருதியதுதான் என்பதை மறந்துவிடக் கூடாது. தெலங்கானா ஆயுதப் போராட்டத்தைத் தெலுங்குத் தேசிய விடுதலை நோக்கி வளர்த்துச் சென்றிருந்தால் போராட்டத்தின் சமூக அடித்தளம் சுருங்குவதற்கு மாறாக விரிவாகியிருக்கும். இந்தியக் கட்டமைப்பை உடைத்து இந்தியாவின் பிற தேசிய இன உழைக்கும் மக்களுக்கும் அது புறநிலையில் உதவியிருக்கும்.

       போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சோவியத்துக் கட்சியின் தலைமையிடம் அறிவுரை கேட்கச் சென்ற இ;ந்தியப் பொதுமை கட்சித் தலைவர்களிடம் மேற்கண்டவாறு ஸ்டாலின் உள்ளிட்ட எவரும் முன்மொழிந்ததாகப் பதிவு இல்லை. காரணம், அந்த நேரத்தில் இந்தியாவின் பல்தேசியத் தன்மையை சோவியத்துத் தலைமை கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை. மாவோ உள்ளிட்ட சீனத் தலைவர்களுக்கும் இதே குற்றாய்வு பொருந்தும். ஸ்டாலின், மாவோ இருவருமே சவகர்லால் நேருவின் தேசிய சனநாயகத் தன்மை பற்றிய மயக்கத்தை வளர்க்கவே முன்னின்றார்கள் என்பது இப்போதைய மாவியர்களுக்கே அதிர்ச்சியளிக்கக் கூடியது.

       போகட்டும் - பழங்குடி மக்கள் போராட்டத்தை அவர்களின் அரசியல் அதிகாரத்துக்கான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும். இந்தியாவிலிருந்து தண்டகாரண்யத்தைப் பிரித்துத் தனியரசாக்குவதா? தண்டகாரண்யக் கூட்டாட்சியில் ஒவ்வொரு பழங்குடியினரும் தன்னாட்சி பெற்றுத் திகழ்வதா? அல்லது ஒவ்வொரு பழங்குடியினமும் தனித் தனியாக விடுதலை பெற்று அரசமைப்பதா? விடுதலைபெற்ற இனங்கள் கூட்டரசாக இணையும் வாய்ப்பை வருங்காலத்துக்கு விட்டு விடுவதா? என்பவையெல்லாம் விவாதிக்க வேண்டிய வினாக்கள்.

       அமெரிக்கச் செவ்விந்தியர்களின் போராட்ட அமைப்பாகிய அமெரிக்க இந்திய இயக்கம் (aim) இன்றளவும் தன்தீர்வும் (சுயநிர்ணயம்) தன்னாட்சியும் கோரிப் போராடுவது ஈண்டு நினைவிற் கொள்ளத்தக்கது. இத்தனைக்கும் அமெரிக்காவில் செவ்விந்தியர் தொகை மிகமிகக் குறைவு.

       தேசிய இனங்களுக்குரிய தன்தீர்வு உரிமை பழங்குடியினங்களுக்கும் பொருந்தக் கூடியதே. ஏனென்றால் ஒவ்வொரு பழங்குடியினமும் உருவாகிவரும் தேசிய இனமே.

       பழங்குடி மக்களின் போராட்டத்தைத் தேசிய விடுதலைக் குறிக்கோளுடன் நடத்தும் போது அதன் சமூக அடித்தளம் விரிவுபெறும். பிற தேசிய இனப் போராட்டங்களுடன் ஒருமைப்பாடு கொள்ள வழி பிறக்கும்.

       முட்டை உடையாமல் குஞ்சு பொறிக்க முடியாது. இந்தியா உடையாமல் பழங்குடி மக்களும் சரி, பிற உழைக்கும் மக்களும் சரி, விடுதலை பெற முடியாது.

       பழங்குடி மக்கள் விடுதலை என்பது இந்தியாவுக்குள் அல்ல, இந்தியாவிலிருந்தே என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். மாவியர்கள் உட்படப் போராடும் ஆற்றல்கள் அனைத்தும் இந்த உண்மையைக் கருதிப் பார்க்க வேண்டுகிறோம்.

- தியாகு

(சமூக நீதித் தமிழ்த் தேசம் ஜூன் 2010 இதழில் வெளியானது)

Pin It