(வீரத் தமிழச்சியின் சவுக்கடி...சில திருத்தங்களுடன் )

இனி நான்

மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன்

நீட்டுக்காகப் போராட மாட்டேன்

பசுவைக் கொல்ல மாட்டேன்

குசுவையும் விட மாட்டேன்

ஸ்டெர்லைட்டுக்காக குண்டடிபட்டு

சாக மாட்டேன்

பெட்ரோல் விலை ஏறினால்

நியுட்ரினோ சோதனை செய்தால்

மூச்சுக் காட்ட மாட்டேன்.

எட்டுவழிச் சாலை போட்டால்

நடைபயணம் செல்ல மாட்டேன்

மீத்தேன் எடுத்தால் சத்தம் போட மாட்டேன்

கோடிகோடியாய் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தால் ஒன்றும் சொல்ல மாட்டேன்.

மலம் அள்ளும் தொழிலை ஒழிக்கச் சொல்லிக் கேட்க மாட்டேன்

மணல் கொள்ளையையும்

கண்டு கொள்ள மாட்டேன்

காவிரியில் தண்ணீர் விடாவிட்டால் வழக்குத் தொடுக்க மாட்டேன்

சொந்தக்காரர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தால்

வாய் திறந்து கேட்க மாட்டேன்

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால்

யாரையும் பொறுப்பேற்கச் சொல்ல மாட்டேன்

மீனவர்கள் கைது செய்யப் பட்டால்

உரிமைக்காக கொடி பிடிக்க மாட்டேன்

ஓகி புயலில் ஒருத்தரும் வரலே என்றால் ஆவணப் படம் எடுக்க மாட்டேன்

ஈழத்திற்கு ஐநாவில் பேச மாட்டேன்

வெள்ள நிவாரணத்திற்கு நிதி  திரட்ட மாட்டேன்

பேராசிரியர்கள் பாலியல் தொல்லை செய்தால்

காட்டிக் கொடுக்க மாட்டேன்.

இரத ஊர்வலத்திற்குக் குறுக்கே நிற்க மாட்டேன்

தாடி வைக்க மாட்டேன்.

பொட்டு வைக்காமல் இருக்க மாட்டேன்

வங்கிகளில் கல்விக்கடன் கேட்க மாட்டேன்

சங்கிகள் என்று சொல்ல மாட்டேன்

காவி நிறம் பிடிக்காது எனத் தவிர்க்க மாட்டேன்.

மாலை எட்டு மணிக்குமேல் எங்கும் செல்ல மாட்டேன்.

பணமதிப்பிழப்பு செய்தாலும்

பண்பற்றவர்கள் எனக் கூற மாட்டேன் .

மருத்துவமனைகளில் குழந்தைகள் இறந்தாலும்

சொந்தச் செலவில் சிலிண்டர் வாங்க மாட்டேன்.

கெயில் கொண்டு வந்தால் மயிரேயென்று கத்த மாட்டேன்

சமூக விரோதிகள் என்றால்

சூடு சுரணை பார்க்க மாட்டேன்.

வெளிநாட்டுக்குத் தப்பியோடியவர்களைக்

திரும்பக் கொண்டுவரச் சொல்லிக் கேட்க மாட்டேன்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கக் கேட்க மாட்டேன்.

தீட்டுக் காலத்தில் கோவிலுக்குப்

போக மாட்டேன்.

இந்தித் திணிப்பு செய்தால்

மொழிப் போராட்டம் நடத்த மாட்டேன்.

புருஷன் செத்தால்  மறுமணம்

செய்து கொள்ள மாட்டேன்

ஊருக்குள் வரவிடுங்கள் எனக் கேட்க மாட்டேன்

சமத்துவச் சுடுகாடு ஒருபோதும் கோரமாட்டேன்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையோடு நடக்க மாட்டேன்

வன்புணர்வு செய்தாலும் எதிர்ப்புக் 

காட்ட மாட்டேன்

சேரி நக்சலாக இருக்க மாட்டேன்

தாமரை தவிர வேறு பூவைச் சூட மாட்டேன்

சமூகநீதிப் பற்றிக் கவிதை எழுத மாட்டேன்

அம்பேத்கரியம் பேச மாட்டேன்

இந்தி எழுத்துகளைத் தார்பூசி அழிக்க மாட்டேன்.

கொடி பிடித்துக் கோஷம் போட மாட்டேன்.

செத்தாலும் பௌத்தராகச் சாக மாட்டேன்

கொஞ்சம் பொறுங்கள்

அவசரமாய் வருகிறது

உங்கள் ஒழுக்கத்தின்மீது

கொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன்.

Pin It