art horseசுற்றுச் சூழலுக்குப் பெருந்தீங்கிழைத்து வந்த நெகிழி தற்போது தடைசெய்யப்பட்டுவிட்டது. நீண்டகாலமாகப் புழக்கத்தில் இருந்து மக்களின் அனைத்துவிதப் பயன்பாடுகளிலும் இரண்டறக் கலந்துவிட்ட இந்த நெகிழிக்கு ஈடானதும் அதன் இடத்தை இட்டு நிரப்பத்தகுந்ததும் சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு செய்யாததுமான ஒரு பயன்பாட்டு பொருள் இன்னும் சரிவரக் கிடைக்கவில்லை.

நெகிழிக்கு முன்பான சூழலில் அதன் இடத்தை நிரப்பியிருந்த ஏராளமான மூலப்பொருட்கள் இன்று அருகிவிட்டன. குறிப்பாக எளிதானதும் இயற்கைக்கு உகந்ததுமான பனையோலையால் செய்யப்பட்டு பயன்பட்டு வந்த பொருட்கள் இன்று இல்லை. அதைச் செய்து வந்தவர்கள் பெரும்பாலும் இந்தப் பனையோலை சார்ந்த தொழிலில் இருந்து வெளியேறி விட்டார்கள். அந்தத் தொழிலில் அடுத்தடுத்து தொழில்நுட்ப வளர்ச்சிக்குச் செல்ல வேண்டிய நிலை துண்டிக்கப்பட்டு விட்டது.

இன்றைய நெகிழியின் இடத்தை நிரப்பும்படியாக பனையோலையில் பயன்பாட்டுப் பொருட்களைச் செய்துதரும்படி அந்தத் தொழில் இருந்தவர்களை அணுகி, தான் சொல்லுகிறபடி பனையோலையில் இந்தந்த விதமாகப் பைகள் செய்து தரும்படி கேட்டதாகவும் அதை விளங்கிக் கொண்டு செய்து தருவதற்கான எந்தத் நுட்பத்திறனும் அற்றவர்களாக, விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்ததாக நண்பர் ஒருவர் தெரிவித்தார். அந்தத் தொழில் முற்றாக அழியும் நிலைக்கு வந்துவிட்டது. அது நீடித்துவருவதற்கான எந்தச் சூழலும் இல்லை என்பதாலேயே அது அழியும் நிலைக்கு வந்திருக்கிறது. அது நீடித்துச் செல்வதற்கும் அதில் வளர்ச்சி நிலை அடைவதற்கும் எந்தக் காரணிகளும் இல்லை.

இதேநிலை மண்பாண்டத் தொழிலுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது என்றாலும் பனையோலை சார்ந்த தொழிலுக்கு உள்ள நிலைபோல முற்றிலும் அழிவுக்கு உள்ளாகாமல் இருந்து வருகிறது. அந்த மண்பாண்டத் தொழிலுக்கு ஒரு நிலையான சந்தை இருந்துவருகிறது. எனவே நீடித்துவருகிறது. அந்தத் தொழிலில் தொழில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு அது நீடித்து வருகிறது.

மண்ணால் ஆன பொருட்கள் பலவும் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருந்துவரவில்லை. பெரும்பாலும் அவை பண்பாடுசார்ந்த நிகழ்வுகளிலேயே ஆகப் பெரும்பான்மையாகப் பயன்பாட்டில் இருந்துவருகிறது. கோயில்களில் பொங்கல் பானை, ஆயிரங்கண் பானை எனத் தொடங்கி தீச்சட்டி, விளக்குவரை தேவைப்படுகின்றன. குலதெய்வ வழிபாட்டு மரபில் புரவி எடுப்பு இன்றியமையாத ஒன்றென்பதால் அதற்காகவேனும் மண்பாண்டத் தொழில் நீடித்துவருதற்கான காரணிகளைக் கொண்டுள்ளது.

அனைத்துவிதப் மதப் பண்பாட்டு நிகழ்வுகள் மண்ணால் உருவாக்கப்பட்ட பொருட்கள் இன்றி அந்நிகழ்வு முற்றுப்பெறாது. இறப்பு நிகழ்வில் கொள்ளிச்சட்டி முதல் நீர்க்குடம் எடுப்பதுவரை அத்தியாவசியமான, தவிர்க்கவியலாத ஒன்றாக மண்கலங்கள் இடம்பெறுகின்றன. அதிக அளவில் பொங்கல் பானையும் சிறிய வகை விளக்குகளும் அழகுக்கான சுடுமண் சிற்ப உருவங்களும் கோயில்களில் நேர்ச்சை செய்து வைக்கப்படும் குதிரைகள், சிறிய தெய்வ உருவங்களே பெரும்பாலும் இந்த மட்பாண்டத் தொழிலில் இடம்பிடித்துள்ளன.

இதற்குமாறாக பனையோலையால் செய்யப்பட்ட பொருட்கள் வழிபாட்டு அம்சங்களில் உள்ளிட்ட வேறு தேவைகளில் சிறிய அளவிலான பாத்திரத்தை வகிக்கின்றன. எனவே சமூகத்தின் வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பனைசார் ஓலைப்பொருட்கள் வளர்வதற்கான காரணிகள் ஏற்படவில்லை.

தமிழக வரலாற்றில் ஒரு கண்டுபிடிப்பானது பொதுப் பயன்பாடுக்கு அறிமுகப்படுத்தப்படும்போது அக்கண்டுபிடிப்பும் அந்தத் தொழில்நுட்பமும் நீண்டகாலம் நீடித்து இருக்கும் வகையில் அதை இறைவழிபாட்டுடனோ, பண்டிகைகளினுடனோ திருவிழாக்களுடனோ இணைத்து வைக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளதைக் காணமுடிகிறது. அவ்வாறான வழக்கத்தின்படி இணைக்கப்படுவதனால் அவை பின்னர் சடங்காக ஆகிவிடுகிறது.

எள்ளில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு அதைத் தீப ஏற்றலுக்குத் தயாராகி மலைமேலே ஏற்றி வெளிச்சத்தைக் கொண்டுவந்த நாளையே ‘கார்த்திகை தீபம்’ என்றானது என்கிறார் அயோத்திதாசப் பண்டிதர். வெறும் தொழில்நுட்பம் என்றளவில் நிற்காமல் அதை ஒரு பண்பாட்டு நிகழ்வுடன் இணைக்கப்படும் போது நிலைத்து நிற்கும் தன்மையைப் பெற்றுவிடுகிறது. நிலைத்து நிற்கும் பண்பாட்டுடன் அந்தத் தொழில்நுட்பமும் பயன்பாடும் தொடர்ந்து வருவதால் அதுதொடர்பான தொழிலும் நிலைத்து விடுகிறது.

மண்பாண்டத் தொழிலாளர்களின் உற்பத்திப் பொருட்கள் வழிபாட்டுடனும் பண்பாட்டு நிகழ்வுடனும் தொடர்பற்று இருந்தால் பனை ஓலைத் தொழில்போல் இதுவும் அழிந்து போயிருக்கும். தொழில்நுட்ப அறிவியலைத் தலைமுறைகளுக்குக் கடத்திச் செல்வதற்கான உத்தி என்பது பண்பாட்டுவழிக் கடத்தல் ஊடாக நடந்துவரும் செயல்தான் பின்னர் மூடநம்பிக்கை எனப் பெயர் சூட்டப்பட்டது.

- யுகன்

Pin It