மரம் பேசுகிறது!

ஒரு பேரிருள் சூழ்வதை உணர முடிகிறது.

வெகு தூரத்தில் இல்லை. மிக சில மைல்களில் அந்த நாள் வந்து விடத்தான் போகிறது.

ஒவ்வொரு கோடைக்கும் சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பை அத்தனை சுலபமாக கடந்து விட முடியாது. அந்த ஊரில் இல்லை இந்த ஊரில் இல்லை. வட நாட்டில் இல்லை. மேற்கே இல்லை என்ற போது சற்று எட்டிப் பார்க்கும் எதிர் வீட்டு மனப்பான்மையில்தான் இருந்தேன். இதோ இப்போது என் வீட்டிலேயே தண்ணீர் இல்லை என்ற போதுதான் திக்கென்று விக்கி நிற்கிறது எம் சிறுவாணி.

dry land tree

நீரின்றி அமையாது உலகு. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை லிட்டர் நீரை பயன்படுத்துகிறான். இந்த உலகில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். கணக்கே பிரமிப்பாக இருக்கிறது இல்லையா. அத்தனை மனிதர்களுக்கும்... அத்தனை விலங்குகளுக்கும்.... அத்தனை உயிரினங்களுக்கும் நீரே அமுதம். அதன் தீர தீர தீரா அமுதசுரபி காடுகளும் ... சுழற்சியும். நீரை மனிதர்களால் உருவாக்க முடியாது. அது இயற்கையின் கொடை. அதன் மீது குடை சாய்த்து மறைப்பதை போலொரு அயோக்கியத்தனம் வேறு என்ன இருக்க முடியும். ஆசை பேராசையாய் ஆன பிறகு... நீரை பணமாக்க துணிந்தான் மனிதன். புத்திசாலி என்று தன்னை நினைத்துக் கொண்ட மனிதன் மறைநீர்க்கு... இளிச்சவாய நாட்டுக்குள் குடத்தைத் தூக்கிக் கொண்டு வந்து நின்றான். நீரை விட பணமே பிரதானம் என்ற முட்டாள் ஆட்சியாளர்கள்... அண்டாவில் நிரப்பி கொடுத்தார்கள். நிரப்ப நிரப்ப நிரம்பி வழிகிறது நம் காடும் கனவும். நீரற்ற கண்மாய்களில் கோவணத்தோடு கனவு காண்பது என்னவோ நம் காலத்து மீன்கள் தான்.

நான் சிறுவயதில் புரியாமல் யோசித்திருக்கிறேன். "எதற்கு இந்த அசோகர் இத்தனை மரங்களை நட்டார் என்று...." நட்டது அசோகரோ.. அருளோ....? நட்டவன் கடவுளுக்கு ஒப்பானவன். அவனே ஆதியை கை நழுவாமல் பற்றி இருந்தவன். அவன்தான் தீர்க்கதரிசி. இந்த பூமி மரமின்றி நல்ல மழை பொழியாது என்று உணர்ந்தவன். எல்லாமே சுழற்சியின் ஞாபகங்களால் உருவானவை. கோடாரி கதை, விறகு வெட்டி கதைகளை தூரோடு தூக்கி எரியும் காலம் இது. தங்கக் கோடாரி அல்ல... தங்க கோபுரமே கொடுத்தாலும் மரம் வெட்டோம் என்ற சபதமே இந்த பூமியை காப்பாற்றும். தேவைக்கு வெட்டும் போதும் அதற்கு மாற்றாக இரண்டு மரங்களை நட வேண்டும். அது தான் தெய்வ வாக்கு. அல்லது தாக வாக்கு.

மரம் பேசுகிறது என்று கூறும் "ஓசை" இயக்க நண்பர் "பாஷா"வை பேரதிர்ச்சியோடு கடக்கும் நல்லவர்களின் மத்தியில் நான் ஒரு பைத்தியக்காரனைப் போல கவனித்தேன். மரத்தை வெட்டும் போது அது வெட்டுபவனுக்காவும் அழுகிறது. புலம்புகிறது. உயிரின் பதறலைக் கொண்டு அலை பாய்கிறது. கவலை கொள்கிறது. பின் செத்துப் போகிறது. காலங்களை சுமந்து கொண்டு வாழ்வின் சாட்சியாய் நம்பிக்கையின் வேராய் நிற்கும் மரத்தை வெட்டி வீழ்த்தும் போது.. கால இடைவெளி பற்றிய ஆவணங்களை அழித்தெறிகிறோம் என்று பொருள் தோழர்களே,.

காடுகளை அழித்தல் தன் வீட்டுக்கே தீ வைத்தலுக்கு சமம் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்ள போகிறோம். புலி இருக்கும் காடே வளமான காடு. புலிகள் இருக்க புதர்கள் வேண்டும். யானைகள் காட்டின் பேரழகு. காடு அழிய அழிய கோவிலில் பிச்சையெடுக்கும் யானைகளின் எண்ணிக்கை பெரும்பாவமென அரங்கேறத்தான் செய்யும். காட்டின் பிரமாண்டத்தை கையேந்த விடும் இந்த மானுடத்தை விதிகளின் விழிகள் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. தனக்கு தேவை என்பதைத்தாண்டி பண்டமாற்று முறை கொஞ்சம் சிரமம் என்பதைத் தாண்டி... பணம் புழங்கத் துவங்கிய பிறகு..எங்கோ, எவனுக்கோ ஆரம்பித்த பித்து.. முறுக்கேறி முறுக்கேறி.. மூச்சு முட்டி....கழுத்தை நெரித்து.. இதோ வெறும் 10 பணக்காரனுக்காக மட்டுமே இந்த நாடு தினம் தினம் தன் கண்களை மூடிக் கொண்டே குருட்டுப் பூனையாய் கிடைத்த விட்டத்தில் எல்லாம் எட்டிக் குதித்துக் கொண்டிருக்கின்றன.

அவிநாசி சாலையில் இருந்த மரங்களை வெட்டிய பாவத்தை இப்போது அனுபவிக்கிறோம். கோவையில் இத்தனை வெயில் எந்த காலத்தில் இருந்தது. இந்தக்காலத்தில் என்று எதிர்காலம் இனி சொல்லும். வெயிலின் வெக்கைகளில் எல்லாம் உயிரோடு சருகான இலைகளின் கோபம் இல்லாமலா போகும். நல்ல வேலை பொள்ளாச்சி சாலைக்கு அந்தக் கொடுமை நடக்கவில்லை. நடந்த கொடுமைக்கு பிராயச்சித்தம் தேடிய "ஓசை" அமைப்பினர்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். ஆம்.. வெட்ட இருந்த மரங்களை வேரோடு பிடுங்கி சற்று உள்ளே தள்ளி யாருக்கும் எந்த வித இடையூறும் இல்லாத இடத்தில் 30 க்கும் மேற்பட்ட மரங்களை நட்டி மரங்களின் ஆன்மாவை குளிர செய்து இருக்கிறார்கள். இந்த செய்தியை கேட்ட நொடியில் என் பாலைவனத்தில் பொத்துக் கொண்டு மேலெழும்பும் சி ஜி வேலையைப் போல எனக்கு பிடித்த ஒரு மரம் வளர்ந்து நிமிர்ந்ததில் இதோ எழுதும் நினைவுகளில் சற்று மழை காண்கிறேன்.

மரங்களை வேரோடு பிடுங்கி வேறு பக்கம் நடுவதில்.... நம் மண்ணின் மரங்கள் மட்டுமே வேர் பிடித்து உயிர் பிடித்து மீண்டும் வளர்கின்றன.... மற்ற மரங்கள் பட்டு போகின்றன என்று கூறினார்கள். மண்ணின் இயல்பை.. அதன் பாரம்பரியத்தை.. அதன் பண்பை உணர்த்த இதை விட நாம் அறிய வேண்டியது ஒன்றும் இல்லை. மரமாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் அதனதன் மண்ணில் இருக்கும் போதுதான் வேர் பிடித்த வாழ்வு சாத்தியமாகிறது. என் மலை உச்சியில் நின்று கத்தி விளையாடிக் கொண்டிருக்கும் என்னை எப்போதாவது நான் காண நேர்கையில் இப்படித்தான் தோன்றும். ஒரு பெரு மழை அசைத்து பார்க்கும் என் உயிர்ப்பின் சுவடுகளை நான் உணரும் தருணம்தான் இயற்கையின் கொடை. யாருக்காவது இறைவனின் கொடை என்றும் தோன்றலாம். இயல்பாகவே காடும் காடு சார்ந்த வாழ்வை விரும்புகிறவன் நான். அதற்கு என் சிறுவயது மலை சார்ந்த வாழ்வின் ஆதிகளில் வேர் பிடித்து திரியும் என் மனதின் அசைவுகள் காரணமாக இருக்கலாம்.

எப்போதும் மரம் அசையும் காற்றுடன்.....எப்போதும் குடை மறந்த மழையுடன்...எப்போதும் மனம் நிறைந்த குளிர்ச்சியுடன் கழிந்த பால்யத்தை இப்போது நினைத்தாலும் மனமெங்கும் மழை தான். விழியெங்கும் கதை தான். இதோ இன்று கண் முன்னால் மரம் அற்று... நதியற்று.... ஆறு வற்ற காணுதல் கொடுமையில் கொடுமை. வடுக்களின் தனிமை. எப்போது திறந்தாலும் ஓடி வரும் ஓடையில் படக்கென்று படுத்து நாயைப் போல வாய் வைத்து நீர் குடித்தவன்..... இன்று பிளாஸ்டிக் போத்தலில் வாங்கி மகானைப் போலக் குடிக்கிறேன். குலை நடுங்கும்...... குரல்வளை பிடுங்கும்... தாகம் மிரளும் தத்துவம்.

கண் உறுத்தும் வறட்சிக்கு முன் ஓ வென குற்ற உணர்ச்சியோடு நிற்கிறேன். நானும் கூட இதற்கு காரணம்தான். உள் மனம் சத்தமிட்டு கூறுகிறது. நானும் இந்தக் காற்றை மாசு படுத்தி இருக்கிறேன். மரங்களுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறேன். பிளாஸ்டிக் கோப்பைகளை மற்ற குப்பைகளோடு சேர்த்துப் போட்டிருக்கிறேன். சாக்லேட் கவர்களை.......கொரியர் கவர்களை......கூச்சமே இல்லாமல் சாலையில் போட்டு போயிருக்கிறேன். கடந்த வாரம் வரை கறி வாங்க... மீன் வாங்க.. காய் கறி வாங்க... வெறும்கையோடு சென்று வாங்கியவைகளை பாலிதீன் கவர்களில் வாங்கி வந்திருக்கிறேன். வெட்கிக் கவிழ்கிறேன். துக்கித்து உணருகிறேன். உள்ளுக்குள் எழும் தாகத்தை எந்த நீரால் நிரப்ப...

இயல்பாகவே மண்ணுக்கும் மரத்துக்கும் துரோகம் செய்வது தவறென்று நினைக்கும் மானுடத்தை இழக்க வைத்திருக்கிறது..... இன்றைய நவீனம். ஆறுதல்... "ஓசை" போல சில அமைப்புகள். சத்தமிட்டு கூக்குரலிட்டு சொல்ல வேண்டும் இன்னும் பல அமைப்புகள்.

ஒரு சொட்டு நீருக்காக அண்டை மனிதனின் ரத்தம் குடிக்கும் மரணத்தனம் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அருகாமையில்... உங்கள் அறையில்.... நீங்களே மறந்து விட்டு சொட்டிக் கொண்டிருக்கும் தண்ணீர் குழாயின் வழியாக கூட வரலாம்.

நிலத்தடி நீர் இன்னும் தன் கரையை நீட்டித்துக் கொண்டது. மறுசுழற்சி மாறி விட்டது. புகையும்... அமிலமும்... மண்ணை மலடாக்கி.... காற்றின் கற்பை உறிந்து கொண்டிருக்கிறது. புலப்படாத வரைப்படத்தின் நிறத்தில் "ஒரத்துப்பாளையம்" அணையின் ஞாபகம் காரணமே இல்லாமல் வந்து போகிறது. காரணம் தேடுபவர்கள் ஒரு முறை அணையை கொஞ்சம் எட்டிப் பாருங்கள். டாலர் சிட்டியின் அம்மணத்தனம் தெரியும்.

வெயிலில் நின்று கத்துகிறான். உண்ணாவிரதம் இருக்கிறான். குட்டிக் கரணம் போடுகிறான். கடைசியில் உடைகளை களைந்து விட்டு அம்மணமாக நிற்கிறான். சொரணையற்று வேடிக்கை பார்க்கிறது உலகம். என்ன மாதிரி அரசிலமைப்பை நாம் கொண்டிருக்கிறோம். விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு என்று எல்லாருக்குமே தெரியும். அந்த விவசாயி தூக்கிட்டு தொங்க அனுமதிக்கும் நாம் என்ன மாதிரி மனிதர்கள். ஆசையை பேராசையை மாற்றி.. எவனோ ஒருவன் வாழ ஊரெல்லாம் பாடுபட... எந்த நியாயமும் இல்லாமல் விதை நெல்லுக்கு பொண்டாட்டி தாலியை அடகு வைத்து வாங்கிய காசில் சிரித்துக் கொண்டிருக்கும் தாத்தாவை வன்மையாக கண்டிக்கும் மனப்போக்குடன் "ஹே........ஹே........ஹே.... கபாலிடா...." என்றபடியே திரும்பினால் ஊருக்கு ஒருவன் தூக்கிட்டு சாகிறான். அல்லது அம்மணமாக திரிகிறான். என்ன நடக்கிறது இங்கே. மழை இல்லை. விவசாயம் இல்லை. மானியம் இல்லை. எந்தக்கடனையும் தள்ளுபடி செய்ய முடியாது. விஜய் மல்லையாவை மட்டும் பாவம் வாராக் கடன் என்று தள்ளி விட முடியும். பிணம் அரசாளும் மண்ணில் பின் எது தான் விளையும் பிணம் தவிர.

குடும்பத்துக்கு சேர்த்தே வீணா போனது ஒரு கட்சி. குடும்பமே இல்லாமல் வீணா போனது ஒரு கட்சி. குடும்பமே தப்பு செய்து வீணா போனது ஒரு கட்சி.

மழை எங்கிருந்து வரும். மரம் நாணும் மானுடமே....... நீ சென்று ஒரு கோட்டர் அடித்து பிரியாணி தின்னு. காசு உன் ஓட்டுக்கு வந்து சேரும்.

எவன் வெட்ட புறப்பட்ட வலி இது. திரும்பும் பக்கமெல்லாம் விசிறிக் கொண்டு திண்ணையாகி கிடக்கும்....கிராமத்தைக் காண்கிறேன். கோவையே வறண்டு விட்டது என்றால்... சென்னையை நினைத்துப் பாருங்கள். திருச்சியை நினைக்கவே முடியாது. எங்கு திரும்பினும் வெயில். எங்கே திரும்ப தண்ணீருக்கு. சிறுவாணி, மலையை விட்டு கோவைக்கு வர எத்தனை போராட்டம் நிகழ்ந்தது என்று யாம் அறிவோம். "இரத்தின சபாபதி" அவர்களின் தியாகம் ஊரறியும். இன்று எல்லாம் பாழ். கிடைத்த சுதந்திரத்தையும் பாதுகாக்க தெரியவில்லை. கிடைத்த நீரையும் பாதுகாக்க தெரியவில்லை. நாண்டு கொண்டு சாக வேண்டும். நொய்யலை பலி கொடுத்தோம். கௌசிகா நதியை பலி கொடுத்தோம். பன்னி மடையில் பொன்னூத்தை காணவேயில்லை. தொள்ளாயிர மூர்த்தி கண்டி அருவியை காணவில்லை. கோவைக் குற்றாலம் குற்றுயிரும் குலையுயிருமாக காண கிடைக்கிறது. இன்னமும் என்ன இருக்கிறது...எல்லாவற்றையும் விழுங்கி விட்டு மலைப்பாம்பு போல நீட்டி நிமிர என்னால் முடியவில்லை. அதனால் தான் எழுதிக் கிழிக்கிறேன். அல்லது கிழிந்து எழுதுகிறேன்.

ஒரு பேரிருள் சூழ்வதை உணர முடிகிறது.

வெகு தூரத்தில் இல்லை. மிக சில மைல்களில் அந்த நாள் வந்து விடத்தான் போகிறது.

உயிரை விலை பேசும் ஒரு சொட்டு தாகத்தின் நாள்..... நீங்கள் நினைக்கும் நிறத்தில் இருக்க போவதில்லை.

- கவிஜி

Pin It