ஆதிக்கமும் ஜாதியும் ஆழமாக வேரூன்றியுள்ள திரைத்துறைக்குள் நுழைந்து அங்கு தலித்தியம், பவுத்தம் என்று துணிச்சலுடன் விவாதிக்கும் எதிர்க்குரலுக்குச் சொந்தக்காரர் கோபி. புரட்சியாளர் அம்பேத்கரின் எழுத்துக்களால் உத்வேகம் பெற்று, ஜாதி ஒழிப்பு களப்பணிகளினூடே திருவள்ளூரில் உள்ள காட்டூரிலிருந்து தொடங்கிய இவரது பயணம், அதே ஆற்றலுடன் திரைத்துறையில் நடக்கும் கதைத் திருட்டு, சுரண்டல் மற்றும் பிற அநீதிகளுக்கு எதிர்வினையாற்றத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆறுமாத காலமாக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் உற்று நோக்கப்பட்ட கோபியின் செயல்பாடுகளிலில் பொதிந்திருக்கும் நியாயங்களை ‘தலித் முரசு’டன் பகிர்ந்து கொள்கிறார்.

சந்திப்பு: ஜெய்சாம்யாக்

கலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தலித் வாழ்வென்பது என்னவாக இருக்கிறது என்றால் ஒன்று, வன்கொடுமையை எதிர்த்துப் போராட வேண்டியதாய் இருக்கிறது அல்லது ஏதேனும் ஒரு தன்னிச்சையான முடிவோடு வாழ வேண்டியதாய் இருக்கிறது. தலித் அரசியல் கட்சிகளிடமும் பெரிய செயல் திட்டங்கள் என்று எதுவும் இல்லை. அது அன்றாட நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுவதாகவே உள்ளது.

ஆனால் விடுதலைக்கான வாழ்வென்பது அப்படி இல்லை. அது எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால், பெரிய செயல்திட்டங்களை வைத்துக் கொண்டு அத்திட்டங்களை நிகழ்காலங்களில் அம்மக்கள் மிக எளிமையாகக் கையகப்படுத்திக் கொள்கிற விடயமாக இருக்க வேண்டும். பொதுவாகவே இந்தியா முழுவதும் உள்ள தலித் சமூகத்திடம் என்னதான் பிரச்சனை என்று வினவும் நிலையில் தலித் விடுதலை அரசியல் பேசுபவர்களைத் தவிர்த்து மற்ற எவர்க்கும் சாதி ஒழிப்பு பற்றியோ தங்களுக்கு ஏற்படுகிற வன்கொடுமைகள் பற்றியோ, தாங்கள் சந்திக்கிற அதிகாரமற்ற சூழல் குறித்து அக்கறையோ கவலையோ இருப்பதாகத் தெரியவில்லை.

அதற்கான உளவியல் மிக முக்கியமானது. இந்த உளவியலை கருத்தில் கொள்ளாமல் தலித் அரசியல் பேசுவதில் அர்த்தமில்லை. இதன் பண்புகள் இலக்கியமாக இருக்கிறது; சினிமாவாக இருக்கிறது; வணிகமாக இருக்கிறது; சுற்றுச்சூழலாக இருக்கிறது; தனது அன்றாட வாழ்வாக இருக்கிறது. ஆக, இவை எல்லாவற்றையும் பேசக்கூடிய மய்யமாக கலையே இருப்பதாக நான் நம்புகிறேன்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் செயலாற்றி வருகிறீர்கள். இத்துறையில் நீங்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நான் என் தலித் வாழ்க்கையைப் படமாக்க வேண்டும் என்று போராடுகிறேன். ஒரு தலித் செயல்பாட்டாளனாகப் பயணத்தைத் தொடங்கிய நான், மீண்டும் ஒரு தலித் கலைஞனாக என்னைத் தகவமைத்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், கருப்பர்களின் குழந்தை ஒன்று பிறக்கிறது என்றால் அக்குழந்தை வெள்ளையர்களின் வேலைக்கருவியாகவே பார்க்கப்படுகிறது. எப்பொழுது கருப்பர்கள் தங்களுடைய கலையின் வழியாக, தங்களுடைய வரலாற்றை, தங்களுக்கு ஏற்பட்ட அடிமை முறைகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தினார்களோ அப்பொழுதே அது சர்வதேச அளவில் பொது சமூகத்தின் மனசாட்சியை தொடுகிறது. எப்பொழுது ஒடுக்குமுறைகள் பொதுமனசாட்சியை பாதிக்கிறதோ அப்பொழுதே அக்கலைவடிவம் அவர்களுக்கு ஆதரவான ஓர் அரசியல் வடிவமாக உருப்பெறுகிறது.

கலை என்பது அரசியலின் மிக அடிப்படையான விஷயமாகவும் அரசியல் என்பது கலையின் வழியாக தன்னை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்கான மிகப்பெரிய விடுதலைக்களமாக இருப்பதையும் நான் உணர்கிறேன். இந்த அடிப்படையில்தான் தலித் மக்களுக்கான படங்களை உருவாக்குவது, தலித்துகளையே கலைஞர்களாக ஆக்குவது, தலித் வாழ்வை கலையாக மாற்றுவது என்ற நோக்கத்தோடு நான் திரைத்துறைக்கு வந்தேன். இங்கு சிறுபான்மையாக உள்ள தலித் சமூகம் ஆதிக்கச்சமூகத்தால் வெறுக்கப்படுகிற சமூகமாகவோ, ஒடுக்கப்படுகிற சமூகமாகவோ, தன்கீழ் பணிசெய்கின்ற சமூகமாகவோ கருதப்படுகின்ற சூழலில் – தலித் சமூகத்தை கலையினூடாக – பொதுச்சமூகத்தின் மொத்தமனசாட்சிக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக அமைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

வழக்கமாக அவர்களின் வாழ்வை படைப்பாக்குவதா அல்லது அப்படிப் படைப்பாக்குவதிலேயே அவர்களின் உளவியலை பொதுமனசாட்சிக்கு கொண்டு செல்கிற ஓர் அரசியல் வேலைத்திட்டத்தோடு செய்வதா என்கிறபோது நான் இரண்டாவது வேலைத்திட்டத்தை செய்தேன். பெரும்பாலானோர் அவர்களின் வாழ்க்கையை படைப்பாக்கி இருக்கிறார்கள். நான் அதை வெறும் படைப்பாக மட்டும் அல்லாமல் உரையாடலாகவும் விவாதமாகவும் மாற்ற விழைகிறேன். எனது கருத்தை பொது இடத்தில் மறுதலிக்காத வகையில் விளிம்புக்கு இட்டுச் செல்கிறேன்.

குறைந்தபட்சம் ஏதாவது ஓரிடத்திலாவது என்னை மறுதலிக்காமல் போவீர்களானால் அதையே எனக்கான வாய்ப்பாகக் கருதி அவ்விடத்தையே எனக்கான ஓர் அரசியல் களமாக மாற்றுவதற்காகவோ விசாலமாக்கிக் கொள்வதற்காகவோ அதை ஒரு புள்ளியாக நான் கருதுகிறேன். அவ்விடத்தில் தான் ஒரு கலைக்குழு வரவேண்டும் என்பதற்காக மிகப்பெரிய பணியை செய்து வருகிறேன். இந்த மாற்றத்திற்கான வேலைகளை செய்யும்பொழுது பெருவாரியான பொருளாதாரம் யாரிடம் இருக்கிறது என்று சொன்னால் இங்கிருக்கும் ஆதிக்கச் சமூகத்திடம்தான் இருக்கிறது. அவர்களிடம்தான் இத்திட்டங்கள் குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

ஆதிக்கச் சமூகத்திலும் தன்னை ஓர் இடதுசாரி சிந்தனையாளராகவும் தலித் ஆதரவாளராகவும் பெண்ணியச் சிந்தனையாளராகவும் மனித உரிமைகளைப் பற்றி பேசுபவராகவும் இருப்பவர்களிடத்தில் தான் நாம் போய் பேச வேண்டி இருக்கிறது. பொத்தாம் பொதுவாக நாம் இப்படியான கலைப்படைப்புகள் குறித்துப் பேசிவிட முடியாது.

இங்கே பார்வையாளர்களுக்கு இரண்டு கட்டங்கள் இருக்கின்றன. வழக்கமாகவே சினிமா என்ற ஒன்றை இங்கு பார்த்து வந்திருக்கிறோம். அதைத்தான் உண்மையான சினிமா என்று இவர்கள் நம்புகிறார்கள். அது சினிமா இல்லை என்பதை முதலில் புரிய வைக்க வேண்டும். வாசிப்பவர்களிடமும் கலை ரசிகர்களிடமும் நாம் முதலில் எதை வாசிக்க வேண்டும், எதை ரசிக்க வேண்டும் என்பதிலிருந்து முதல் கட்ட வேலையை தொடங்க வேண்டியிருக்கிறது. இது வரையிலும் திரையில் கண்ட மனிதர்களை உடனடியாக கலைத்துவிட்டு வேறு மனிதர்களைக் கொண்டு நிரப்ப வேண்டியிருக்கிறது.

அவ்வாறு நிரப்பும் பொழுது அந்தந்த மனிதர்களையே பயன்படுத்தும் பொழுது அவர்களுக்குள் ஓர் இயல்பான கைகுலுக்கல் அங்கு நிகழ்கிறது.இதற்கான வேலைகளை நாம் செய்கிறோம். இவற்றையெல்லாம் செய்வதென்பதே ஒரு தலைமுறைக்கான வேலையாக இருக்கிறது. இந்த வேலைகளுக்காக ஆதிக்க சாதியினரிடையே பொருளாதாரத்தில் மிக பலமாகவும் அதற்கான வாய்ப்புகளோடும் இருப்பவர்களிடத்தில்தான் நாம் போய் பேச வேண்டியிருக்கிறது.இது போன்ற சூழல்களில்தான் நான் ஏமாற்றப்படுகிறேன்.

எப்படி ஏமாற்றப்படுகிறேன் என்றால், எல்லா ஆதிக்க சமூகத்திடமும் ஒரு நோய்க்கூறு இருக்கிறது. என்னதான் இவர்கள் தலித் அரசியல் பேசினாலும் தமிழ்த்தேசிய அரசியல் பேசினாலும் இடதுசாரியம் பேசினாலும் அவர்களுக்குள் ஏற்கனவே அவர்கள் பழகின ஆதிக்க சாதியினுடைய அடையாளங்கள் மிகப்பெரிய வணிகமாகவும், கர்வம் கொண்ட அதிகாரமாகவும் இருக்கிறது. அது என்ன செய்கிறது என்றால் – நாம் என்னதான் மிகப்பெரிய விடுதலைக்கான அரசியலைப்பற்றி சினிமா எடுப்பது குறித்து இவர்களுடன் பகிர்ந்து கொள்ள வந்தாலும் – அதற்குள் இருக்கிற வணிகத்திற்கான கண்ணியை மிக நுட்பமாக அவர்கள் கண்டறிகிறார்கள். அதை மட்டுமே அவற்றிலிருந்து நீக்கும்பொழுது அதன் உயிர் போய் விடுகிறது. என்னுடைய பல கதைகள் திருடப்பட்ட பொழுது நான் செய்த போராட்டங்கள் அனைத்தும் அப்படியானதாகவே இருக்கின்றன.

திரும்பத்திரும்ப என்ன நினைக்கிறார்கள் என்றால் என்னுடைய கதைக்கான இழப்பீட்டை கேட்பதற்காகத் தான் போராடுகிறேன் என்றும் அது எனது கதை என்று சொல்லி பெயருக்காகப் போராடுகிறேன் என்றும் சொல்கிறார்கள். ஆனால், அப்படியில்லை.நான் எல்லோரிடத்திலும் திரும்பத்திரும்ப சொல்வது ஒன்றைத்தான். போரை யார் வேண்டுமானாலும் நிகழ்த்துங்கள்.

ஆனால் நான் எந்தப்போரை கனவு கண்டேனோ அந்தப் போரை நிகழ்த்துங்கள். அதை விடுத்து என்னிடமிருக்கும் எனது போர்த்தந்திரத்தை எடுத்துக்கொண்டு எனக்கு எதிர்த்தரப்பில் நின்றுகொண்டு எனக்கு எதிராகவே போர் செய்யும் பொழுது உங்களுக்கு எதிராக ஒரு தன்னந்தனி கலைஞனாக உங்களிடம் சண்டையிட வேண்டிய தேவை எனக்கிருக்கிறது. இச்சூழலில் நான் மிகவும் தனித்து சிரமப்படுகிறேன். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறேன்.இதை இவர்கள் என்னுடைய தனிமனிதப் பிரச்சனையாகக் கருதுகிறார்கள்.ஆனால் அது அப்படியல்ல.

இதுவொரு தனிமனிதப் பிரச்சனையே அல்ல.இது ஒரு சமூகத்தினுடைய பிரச்சனை.ஒரு சமூகத்தினுடைய பிரச்சனையை ஒரு தனிமனிதன் தன்னுடைய குரலால் சமூகத்திடம் பேசலாம்.ஆனால் பேசப்படுகிற எல்லா உண்மைகளும் இந்த சமூகத்தினுடைய மிகப்பெரிய இன்றியமையாத அடிப்படையான கருத்துகள். இவை பறிபோகும் பொழுதோ மறுதலிக்கப்படும் பொழுதோ ஏமாற்ற அல்லது கொள்ளையடிக்கப்படும் பொழுதோ – மொத்த சமூகத்திற்கான கோபமாக அது மாறும்பொழுதுதான் அந்த தனிமனிதனுடைய எல்லா போராட்டங்களும் வெற்றி பெறுகின்றன என்று நான் நம்புகிறேன். அந்த அடிப்படையில் தான் நான் எனது கதையை மீட்டெடுக்க விரும்புகிறேன்.

ஒரு கதையை இந்த இடத்தில் ஒரு பாதிப்பிற்கு உட்பட்டு நான் எடுத்துவிட்டேன் என்று சொன்னால் அதைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களை தண்டிக்க வேண்டும் என்றோ பொது இடத்தில் நிற்க வைத்து அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்றோ நான் இதுவரையில் நினைத்ததில்லை.ஒரு கலைஞனாக என்னால் அப்படி நினைக்க முடியாது. நான் என்ன நினைக்கிறேன் என்றால் இந்த தவறை நீங்கள் எப்போதும் செய்யாதீர்கள். நீ தமிழ்த்தேசியம் பேசுகிறாய், தலித்தியம் பேசுகிறாய், இடதுசாரியம் பேசுகிறாய் என்றால் உன் சமூகத்திற்குள்ளிருந்தே ஒருவன் வரும்பொழுது அவனை தூக்கிக்கொண்டு போகவேண்டிய கடமை உனக்குத்தானே இருக்கிறது. ஆனால் அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு எனக்கு முன்னால் நீ ஓடுகிறாய் என்றால் அது கடமையாக அல்லாமல் கொலையாகத்தானே இருக்க முடியும்.

தலித் சினிமா பற்றி சொல்லுங்கள்...

தலித் சினிமா என்பது சாதியக்கட்டமைப்பை ஏற்பது அல்ல; அந்தக் கட்டமைப்பையே நொறுக்குவது. ஒருவர் தான் தலித் சினிமா எடுக்கிறேன் என்று சொல்வதில்லை. என்னுடைய வரலாற்றையோ, என்மீது ஏற்படுத்தப்பட்ட துயரத்தையோ, ஒடுக்குமுறையையோ நான் பதிவு செய்வது என்பது ஒரு வடிவமாகவும், மற்றொன்று அவ்வாறு பதிவு செய்வதற்குள் எனக்கிருக்கிற அரசியல் அறிவை நான் பதிவு செய்வதாகவும் இருக்கிறது. இங்கு மாற்று சினிமா குறித்துப் பலரும் பேசி வருகிறார்கள். அவர்களிடத்தில் நான் மாற்று சினிமா என்றால் என்ன என்ற கேள்வியை முன்வைத்த பொழுது அவர்கள் ஈரான் சினிமா, துருக்கி சினிமா, ரஷ்ய சினிமா போன்ற உலக சினிமா ஏதாவது ஒன்றைப் பார்த்துவிட்டு அதனடிப்படையில் ஒரு கருத்தை தெளிவின்றி முன் வைக்கின்றனர். அவர்களிடத்தில் மீண்டும் மீண்டும் இந்தியச் சூழலில் மாற்று சினிமா என்றால் என்ன என்று நாம் வலியுறுத்தி கேட்கும் பொழுது அவர்களிடத்தில் விடையில்லை.

இந்தியாவைப் பொருத்தவரையில் மாற்று சினிமா என்பது ஒரு தலித் சினிமாவாக இருக்கிறது; முஸ்லிம் சினிமாவாக இருக்கிறது; பவுத்த சினிமாவாக இருக்கிறது. ஏனென்றால் இங்கு சினிமா என்றால் அது இந்து பண்பாட்டையும் ஆதிக்கசாதியையும் மய்யப்படுத்தி படம் எடுப்பதையே வழக்கமாகவும் அதுவே இங்கு வணிகமாகவும் கலையாகவும் அந்த வாழ்க்கையே இங்கு வாழ்வியலாகவும் நம்ப வைக்கப்படுகிறது. இது மட்டுமே சினிமா கிடையாது என்கிற இடத்தில் இதுவரைக்கும் மறுக்கப்பட்டவை என்று பார்க்கும் பொழுது அது முஸ்லிம் சினிமாவாகவும், பவுத்த தத்துவமாகவும், தலித் வாழ்வியலாகவும் இருக்கிறது. அதுவே மாற்று சினிமாவாகவும் இருக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரையில் மாற்று சினிமா என்றால் அது தலித் சினிமாதான். அதை விடுத்து இங்கு எதை எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். தலித் சினிமா பற்றி பேசுவர்களிடத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் தலித் அதிகாரம் குறித்து பேசுகிறோம் என்கிறார்கள். அதிகாரத்தின் மொழி என்ன?சினிமாவில் தலித் அரசியல் பேசும் உங்களுக்கான தலித் மொழி என்ன? ஒரு தலித் மற்றொரு தலித்திடம் உரையாடுவதற்கான அரசியல் மொழி என்ன? இந்த அரசியல் மொழியை கண்டறியாமல் நீங்கள் தலித் அரசியல் பேச முடியாது.

மாற்று சினிமா பற்றி பேசும் நீங்கள் தலித் சினிமாதான் மாற்று சினிமா என்பதை என்றாவது உற்றுணர்ந்திருக்கிறீர்களா? மாற்று சினிமாக்காரர்களிடத்தில் இதுபோன்ற விசயங்களை நாம் முன் வைக்கும் பொழுது அவர்கள் என்னை மறுக்கிறார்கள். ஏனென்றால் நாம் முன்வைக்கும் கேள்விகள் அவர்களின் கற்பனையின் மீதும் அவர்களின் மொத்த அனுபவத்தின் மீதும் வைக்கப்படுகிற கேள்விகளாக இருந்தாலும் இவையனைத்தையும் மறுதலிப்பதால் நான் அவர்களையே மறுதலிப்பதாக எண்ணுகிறார்கள். ஏனென்றால் இங்கு மாற்று சினிமா பற்றி பேசுபவர்கள் பார்ப்பனர்களாகவும் தலித் அல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சொந்த வாழ்வும் புரிபடவில்லை; இங்கு மறுதலிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வும் புரியவில்லை. இவையனைத்தும் ஓர் அரசியல் வரலாற்றுப் பிழையாகவே நிகழ்ந்து வருகிறது.

"பன்றி' திரைப்படத்தில் எதிர்ப்புதான் அதிகாரமாக இருக்கிறது. நீங்கள் ஒரு நிலையை எனக்கு அளிக்கும் பொழுது அதை ஏற்காமல் மறுதலிப்பதுதான் அதிகாரமாக இருக்கிறது. மாறாக, அந்நிலையை ஏற்றுக்கொள்ளும் பொழுதே நான் எனது எதிர்ப்பை இழந்து விடுகிறேன். தலித் அரசியல் என்பது முற்றிலும் எதிர்ப்பாக இருக்கிறது. அது எல்லாவற்றையும் தகர்க்கும்; எல்லாவற்றையும் உடைக்கும். அப்படியானால் தலித் அரசியல் என்பது மிகப்பெரிய வன்முறையாக இருக்குமா என்றால் அப்படி இல்லை. இங்குதான் பவுத்தம் மிகப்பெரிய நீதியாக அதற்குள் வேலை செய்கிறது.

ஒரு போர் ஒரு வீரனை உருவாக்கி விடுகிறது.ஒரு வீரன் ஒரு போரை உருவாக்கி விடுகிறான்.மிகப்பெரிய வீரனான புத்தன் ஒரு மிகப்பெரிய போரை தடுத்து நிறுத்தி விடுகிறான். ரோகிணி ஆற்று நீர் பங்கீட்டுப் பிரச்சனையில் சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையே நடக்கவிருந்த மிகப்பெரிய போரை ஒரு மிகப்பெரிய போர் வீரன் தடுக்கிறான். ஆனால் அதைவிட மிகப்பெரியப் போரை உலகம் முழுவதும் தொடங்கி விட்டிருக்கிறான். அவர் உலகம் முழுவதும் தொடங்கிய போர் என்பது இரண்டு நாடுகளுக்கிடையில் நிகழும் போராக இல்லாமல் ஒரு மனிதனுக்கும் ஒரு சமூகத்திற்கும் இடைப்பட்ட உறவுகளைப் பற்றிய மிகப்பெரிய உரையாடலை உருவாக்கியிருப்பதுதான்.

புத்தரை வெறும் துறவியாகவோ உபதேசியாகவோ நாம் பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது. மனித விடுதலைக்கான பேருண்மையைப்பற்றி பேசுவதற்கு ஒரு மிகப்பெரிய தத்துவஞானி ஓர் ஆதிக்க சமூகத்தின் முன் வந்தான் என்றால் அவன் என்ன மாதிரியான போரை சந்திக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் இங்கு எதிர்ப்பையே நான் அதிகாரமாக நம்புகிறேன்.அதிகாரத்திற்கான மிகப்பெரிய வாய்ப்பாக நான் பவுத்தத்தைப் பார்க்கிறேன்.

வணிகமாயமான திரைச் சூழலில் ஆதிக்கசாதிகள் நிறைந்திருக்கும் சூழலில் நீங்கள் சொல்லக்கூடிய பவுத்த சினிமாவையோ தலித் சினிமாவையோ எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?

இதுபோன்ற சூழல்களில் அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.நோயாளிகளுக்குதான் இங்கு மருத்துவம் தேவைப்படுகிறது. யார் இங்கு தன்னுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறானோ அவன்தான் இங்கு மிகப்பெரிய நோயாளியாக இருக்கிறான். அவன் எப்படி தன்னுடைய நோயை திரும்பத் திரும்ப புதுப்பித்துக்கொள்கிறான் என்றால், என்மீது ஆதிக்கத்தை செலுத்துவதினூடாக, என்னை தலித்தாக அடையாளப்படுத்துவதினூடாக தனது நோயை – ஆதிக்கசாதி என்ற நோயை – புதுப்பித்துக்கொண்டே இருக்கிறான். என்றைக்கு என்மீது சாதியாதிக்கம் செலுத்துவதை நிறுத்துகிறானோ அன்றைக்கே அவனது நோயிலிருந்து விடுபடுகிறான்.இத்தகைய உரையாடலை உருவாக்குவதுதான் நமது கலைப்பøடப்பின் நோக்கமாக இருக்கிறது.

காரல் மார்க்ஸ் சொன்னதைப்போல, முதலாளித்துவத்தை வீழ்த்துவது எப்படி என்று புத்தகம் எழுதி, அது நன்றாக விற்கும் என்றால் முதலாளிகளே அதை விற்கத் தொடங்கி விடுவார்கள். இன்னும் நுட்பமாகப் போக வேண்டுமானால் நமது சேரிக்குள் மளிகைக்கடை வைக்க வந்தவர்களெல்லாம் சாதியை ஒழிக்க வந்தவர்கள் அல்ல. அது ஒரு வணிகம். அதன்பிறகு அங்கு ஓர் உறவு ஏற்பட்டிருக்கிறதா என்பது பெரிய விவாதத்திற்குரிய பகுதி. அது கால ஓட்டத்தில் நடக்கும். அதை நான் இங்கு பேசவரவில்லை. காலம் கனிந்திருக்கிறதா இல்லையா என்றால் கண்டிப்பாக கனிந்திருக்கிறது. ஏனென்றால் இதைத் தொடங்க வேண்டிய கடமை நம்மிடம் தான் இருக்கிறது. ஏனென்றால் சாதியால் யார் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்கள் தான் சாதியை ஒழிக்க வேண்டும்.நோயாளி செய்ய மாட்டான்.அவன் மயக்கத்தில் இருக்கிறான். அதுவே அவனுக்கு போதை கொண்ட பேரின்பமாய் இருக்கிறது. நாம்தான் அதை செய்ய வேண்டும்.நான் அதற்கு தயாராகி விட்டேன்.

இதை கோபி எடுக்கவிருக்கிற "எக்ஸ்' என்ற திரைப்படம் தான் செய்யப்போகிறதா அல்லது தலித் சிந்தனையை முன்வைத்து பலரும் இதை செய்து கொண்டிருக்கிறார்களா?

கோபி என்ற நபரை தள்ளி வையுங்கள். இங்கு இரண்டு விசயங்கள் இருக்கின்றன. ஒன்று, நீங்கள் தலித் சினிமா எடுக்க வந்து விட்டீர்களென்றால் முதலில் நீங்களும் அதுவாக இருக்க வேண்டும். அந்த கதையும் கதைப்படைப்பாளியும் ஒரே இயல்பில் இருக்க வேண்டும். மாறாக ஓர் ஊரில் சாராயம் நன்றாக விற்கிறதென் றால் அங்கு சாராயம் விற்பதும், லேகியம் அதிகம் விற்கும் ஊரில் லேகியம் விற்பதும் என்றில்லாமல் நான் லேகியம் மட்டும்தான் விற்பேன்; யாரும் வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்ற இயல்பில் இருப்பவர்களால்தான் இது முடியும்.

– தொடரும்

Pin It