(டாக்டர் பி.டி.சத்யபால், ஆந்திர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை பேராசிரியர். அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் மாணவராக சேர்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2.7.2013 அன்று அங்கு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பி. டி. சத்யபால் பங்கேற்று ஆற்றிய உரையை கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாவது பகுதியை இவ்விதழில் வெளியிடுகிறோம்.)

காலனிய எதிர்ப்பு என்பது இந்தியாவில் ஒரு தேசியத்தை, தேசிய உணர்வை அதன் நேரடியான பொருளில் கட்டமைத்து விடவில்லை. மாறாக, ஓர் உண்மையான தேசியத்தைக் கட்டமைக்கத் தேவையான கூறுகளான சம உரிமை மற்றும் சமமாக நடத்தப்படுதல் அதாவது சம குடியுரிமை போன்றவற்றை – பெரும்பான்மை தொல்குடி மக்கள் பெறுவதிலிருந்து தடுப்பதற்காகவேதான் – காலனிய எதிர்ப்பு நிலை உருவாக்கப்பட்டது என்ற உண்மை விளங்கும். மேற்கண்ட இரு நிலைப்பாடுகளும் புதிதாக தோன்றிவரும் இந்து பெரும்பான்மை சமூகத்தின் மீது சிறுபான்மை பார்ப்பனியம், தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவது என்ற அடிப்படையிலிருந்தே எழுந்தவை.

இத்திட்டத்தை தேசிய இயக்கம் என்ற போர்வையில் வழிநடத்தியதில் காந்தி முதன்மையானவர். உண்மையில் இணக்கமான ஒற்றை இந்து சமூகத்தை அமைப்பதே தனது இறுதி நோக்கமாகக் கொள்வதில் அவருக்கிருந்த அக்கறையும் அதில் அவர் பெரும் மயக்கம் கொண்டிருந்ததையும் அவருடைய தந்திரமான ஏகாதிபத்திய தன்மை வாய்ந்த அணுகுமுறைகளிலும் காணலாம். பார்ப்பனியம் இவ்வாறு இயங்கிக் கொண்டிருந்த பொழுது மறுபுறம் நாடு முழுவதும் பார்ப்பனிய எதிர்ப்பு மற்றும் சாதி எதிர்ப்பு ஜனநாயக இயக்கங்கள் ஜோதிபாபுலே தொடங்கி அயோத்தி தாசர், பெரியார், அம்பேத்கர் வரை – காலனிய இந்தியாவில் – ஒரு ஜனநாயக சமூகத்தை நிறுவுவதற்கான குரலாக ஒலித்தன.

இவ்வியக்கங்கள் பார்ப்பனிய செயல் திட்டத்திற்கு எதிராகவே இயங்கின. சமூக விடுதலைக்கானப் போரின் தீரமிக்க தலைவரான அம்பேத்கர், எப்படி பார்ப்பனிய முறையானது பெரும்பான்மை தொல்குடி மக்களின் இயற்கையான மாண்பை மறுத்து அவர்களை மனித நிலைக்கு கீழாகத் தள்ளுகிறது என்பதை விளக்கினார். இதன் விளைவாக, அவர்களுக்கு தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமை உட்பட மூன்று அவசியமான உரிமைகள் மறுக்கப்பட்டன.

அதாவது, பெரும்பான்மை தொல்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட அடையாளப் பெயர்கள் எல்லாம் அவர்கள் தங்களுக்கு தாங்களாகவே வழங்கிக் கொண்ட பெயர்கள் அல்ல. மாறாக மற்றவர்கள் அவர்களை அவ்வாறு அழைத்தனர். அனார்யா, பிசாசா, சூத்திரா, அதி சூத்திரா போன்ற அடையாளங்களும் சாதிகளின் பெயர்களும் குடும்பப் பெயர்களும் கூட அவமதிப்பானதாகவும் இழிவுபடுத்துவனவாகவும் ஒடுக்குமுறையின் அடையாளங்களாகவும் இருக்கின்றன. தொல்குடி பெரும்பான்மை மக்களுக்கு தங்கள் தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அசுத்தமான தொழில்களை பரம்பரைத் தொழிலாக மேற்கொள்ளவே கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

அம்பேத்கர் தன் கடின உழைப்பின் மூலம் பார்ப்பனியத்தின் பொருளாதாரத்தை தோலுரித்துக் காட்டினார். தலைவிதி மற்றும் கர்மவினை போன்ற பார்ப்பனிய சித்தாந்தங்கள் எவ்வாறு உழைக்கும் தொல்குடி மக்கள் மீது வறுமையைத் திணித்தது என்றும் அதை பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு விரும்பி ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டனர் என்பதையும் விளக்கினார். இது மூலதனத்தின் மூன்றாம் பரிமாணத்தை – பண்பாட்டு மூலதனத்தை – அடையாளம் காட்டியது.

வட்டமேசை மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு ஜனநாயகப் புரட்சியின் தூதுவராக தலித் மக்களை ஒரு தனித்த சிறுபான்மையினராக அங்கீகரிக்க வலியுறுத்துவதன் மூலம் அவர்களின் சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளைப் பாதுகாக்க முற்பட்டார். அதன்மூலம் பார்ப்பனிய அமைப்பால் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் தாங்கள் எவ்வாறு பார்ப்பனியத்திற்கு உடல் மற்றும் உளவியல் ரீதியாக அடிமையாக உள்ளோம் என்பதை உணர்ந்து, அதற்கெதிராகக் கிளர்ந்

தெழுந்து அடிமைத்தளையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வர் எனக் கருதினார். சிறுபான்மை வகுப்பு என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அவரது கோரிக்கை என்பது, இந்து பெரும்பான்மை என்ற போர்வையில் பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராக அமைந்தது. பிரிவினைவாத இந்து மகா சபாவிற்கும் மதச் சார்பற்றது என்று கூறிக்கொண்ட காங்கிரசிற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்று அம்பேத்கர் கருதினார். மேற்கண்ட அவரின் இந்த முடிவின் விளக்கம் தெளிவானது. மேற்கண்ட இரு அமைப்புகளுக்குமே அவற்றின் அறிவிப்புகளுக்கு அப்பால், பாரம்பரியமான ஒற்றை இந்து சமூகத்தை நவீன காலத்தில் உருவாக்குவதேயன்றி தேசக் கட்டமைப்பு என்பது அவற்றின் கொள்கை அல்ல.”இந்துத்துவம் என்பது ஏகாதிபத்தியத்தின் ஒரு வடிவம்'' என்பதே அம்பேத்கரின் தெளிவான மதிப்பீடு ஆகும்.

வட்டமேசை மாநாட்டில் இந்து பெரும்பான்மையினர் அம்பேத்கரின் முயற்சிகளை முறியடித்து வெற்றி பெறுவதன் மூலம் இங்குள்ள தொல்குடி பெரும்பான்மை மக்கள் எவ்வித உரிமைகளையும் பெறாமல் தடுப்பதும், அவர்கள் பார்ப்பனர்களின் தயவையும் கருணையையும் மட்டுமே சார்ந்து இருக்கச் செய்வதும்தான் காந்தியின் ஒரே நோக்கமாக இருந்தது. அச்சமயம் 13.11.1931 அன்று நடைபெற்ற சிறுபான்மையினர் ஆணையத்திற்கான மாநாட்டில் பங்கேற்ற அனைத்து சிறுபான்மை குழுக்களும் (கிறித்துவர்கள், முஸ்லிம்கள், ஆங்கிலோ இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் மற்றும் சீக்கியர்கள்) ஓர் ஒப்பந்தத்திற்கு வந்துவிட்டிருந்தன. அவர்கள் "சிறுபான்மையினரின் ஒப்பந்தம்' ஒன்றை ஏற்படுத்தி அதை பிரித்தானிய அரசிற்கு தெரிவித்தனர். பிரித்தானிய அரசும் வகுப்புவாரி தீர்ப்பை அவர்களுக்கு விரைவில் வழங்குவதாக உறுதியளித்தது. இந்த நிகழ்வுகளால் ஆத்திரமடைந்த காந்தி, பார்ப்பனிய ஆயுதக் கிடங்கில் இருந்த அனைத்து ஆயுதங்களையும் அம்பேத்கருக்கு எதிராகக் களமிறக்கினார்.

காந்தி ஒட்டுமொத்த தலித் மக்களுக்கும் தானே தலைவர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தினால் தானே வெற்றி பெறுபவனாக இருப்பேன் என்றும் கூறினார். அவரது நோக்கமெல்லாம் பிரித்தானிய அரசை குழப்ப வேண்டும் என்பதே! காந்தி, ஒடுக்கப்பட்ட மக்கள் தனி வாக்குரிமை பெறுவதற்கு எதிராக முஸ்லிம் தலைவர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கவும் முயன்றார். இந்துக்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பார்கள் என்ற அவருடைய வாதம் பிரித்தானிய அரசிடமும் மற்றவர்களிடமும் எடுபடாததால் ஆத்திரமடைந்த காந்தி, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியல் சாதியின மக்களை கணக்கெடுப்பதற்கான பகுதியே இருக்காது என்றார்.

"அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தலைவர் அல்லர் என்றார் காந்தி. ஒடுக்கப்பட்ட மக்களிடையே அம்பேத்கரைப் போல தனித் தொகுதி கோரிக்கை வைக்காமல் பொது தொகுதியில் உடன்பாடு கொண்ட எம்.சி.ராஜா போன்ற மற்ற தலைவர்களும் உள்ளனர் என்றார். தனது மிரட்டல்கள் பிரித்தானிய அரசின் முடிவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை

என்பதை காந்தி உணர்ந்தார். அதனால் உச்ச பட்ச கோபத்துடன் 18.8.1932 அன்று ராம்சே மெக்டொனால்டுக்கு தான் எழுதிய கடிதத்தில், தான் மதத்தில் நம்பிக்கை உள்ள ஒரு மனிதனாக அரசின் முடிவிற்கு வருந்துவதாகவும், எனவே இதை எதிர்த்து தான் 20.9.1932 அன்று பிற்பகல் முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தார். பிரதிநிதித்துவப்படுத்துதல் போன்ற அரசியல் சார்ந்த விஷயங்களை காந்தி தார்மீக, மத சம்பந்தப்பட்ட விஷயங்களாக உருவகப்படுத்தினார். அப்பொழுதுதான் எந்த ஒரு மூன்றாம் நபரின் தலையீடும் இல்லாமல் அம்பேத்கரை தனிமைப்படுத்த முடியும் என்று அவர் கருதினார்.

இறுதியாக காந்தி, பார்ப்பனியத்தின் ஆகப் பெரும் ஆயுதமான வன்முறையைக் கையிலெடுத்தார். பிற்போக்குத்தனமான, கட்டுப்பாடில்லாத சக்திகளை தூண்டி விடுவதன் மூலம் அடிமைச் சாதிகளை கட்டுக்குள் கொண்டுவர அவர்கள் மீது வன்முறையைத் தூண்டிவிட்டார். “தீண்டத்தகாத குண்டர்கள் முஸ்லிம் குண்டர்களுடன் இணைந்து சாதி இந்துக்களை கொல்வார்கள்'' என்பன போன்ற காந்தியின் நன்கு அறியப்பட்ட வார்த்தைகள் அப்போதைய "தேசியத்தின்' அவசரத்தை நன்கு உணர்த்துகின்றன.

தீண்டத்தகாத மக்களின் பல குடியிருப்புகள் இந்து ரவுடிகளால் தாக்கப்பட்டன. அப்பொழுது கொடுக்கப்பட்ட அந்த அழுத்தத்தில் வெறும் 5 நாட்களில் பூனா ஒப்பந்தத்திற்கான சமரசம் செய்து கொள்ளப்பட்டது.இந்து மகா சபாவிற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குமிடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தில் காந்தி இந்துக்களின் இடைத்தரகராகச் செயல்பட்டார்.

பூனா ஒப்பந்தத்தின் விளைவுகளை மிகக் கவனமாக ஆய்ந்த அம்பேத்கர், பார்ப்பனிய எதேச்சதிகார தேசியத்திற்குப் பதிலாக தான் கொண்டு வர விரும்பிய – ஒரு நேர்மறையான ஜனநாயகம் நிரம்பிய – தேசியத்திற்கான முயற்சி தடைபட்டு விட்டதாக உணர்ந்தார். இதுபோன்ற தேசியத்தின் பெயரால் அமைந்த வன்முறையை அம்பேத்கர் தொடர்ந்து எதிர்த்தும் போரிட்டும் வந்தார்.பெரும்பான்மை தொல்குடி மக்களின் ஒரே தீர்வான சமூக விடுதலையும் சோதனைக்குள்ளானது. பொதுத் தொகுதி முறையில் தாங்கள் விரும்பிய உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியாது என்பதால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாக்குரிமை என்பது பொருளற்றதாகி விட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் உள்ளது; ஆனால் அதை செயல்படுத்த முடியாது. ஒடுக்கப்பட்ட மக்கள் மூழ்கடிக்கப்பட்டு, அவர்களின் பிரதிநிதிகள் இந்துக்களின் அடிமைகளாக இருக்கப் போவதை அம்பேத்கரால் தெளிவாகக் காட்சிப்படுத்த முடிந்தது. அவ்வாறே தற்பொழுது ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதிகள் ஆதிக்க சாதியினரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாகவே உள்ளனர்.

தீண்டாமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். இரட்டை வாக்குரிமை இந்த நடைமுறையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்கும். ஆனால் இரட்டை வாக்குரிமை முறை பூனா ஒப்பந்தத்தின் மூலம் அழிக்கப்பட்டதால், தற்பொழுது தீண்டாமையை நடைமுறைப்படுத்துவதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம், தீண்டாமையை கடைப்பிடிக்கும் ஆதிக்க சாதியினரின் கருணையை நம்பியே விடப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர். பார்ப்பனிய சாதிகள் 15.08.1947 அன்று பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றனர். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் சுதந்திரத்திற்கான பாதையை 1932 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் நாளே அடைந்திருப்பார்கள்.ஆனால், அது தடுக்கப்பட்டுவிட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் தீர்மானம்மிக்க உறுதியான எதிரியாக தன்னை நிரூபித்துக்கொண்ட காந்தி, அம்பேத்கரிடமிருந்து அம்மக்களைப் பிரிக்க 30.09.1932 அன்று "ஹரிஜன் சேவா சங்' என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் முதல் தலைவர் ஜி.டி.பிர்லா மற்றும் அதன் பொதுச்செயலாளர் ஏ.வி. தக்கர் பாபா என்பவராவார். ஒடுக்கப்பட்ட மக்களை பார்ப்பனியமயமாக்குவதும் இந்துக்களின் செயல்களை ஒடுக்கப்பட்ட மக்களின் பேருதவிகளாகக் காட்டுவதையும் தவிர அந்த அமைப்பிற்கு வேறு நோக்கங்களும் குறிக்கோள்களும் இல்லை.

பூனா ஒப்பந்தம் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகளிலும் நவீன இந்தியாவின் வரலாற்றிலும் குறிப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஒரு பாகுபாடற்ற நடுநிலையான நோக்கில் பார்த்தோமானால் அம்பேத்கரின் பங்கு என்பது ஜனநாயகத்தைக் காப்பவராகவும், நேர்மையான மதிப்பு மிக்க தேசியவாதியாக அவர் இருப்பதையும், மேலும் அவர் ஒரு தனி மனிதராக காந்தியின் புனித முகமூடியை கிழித்ததையும் வெளிப்படுத்தும். ஆனால் பார்ப்பனிய சக்திகளும் அதன் ஊடகங்களும் காந்தியை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகவும், இந்து சமூகத்தை காப்பாற்றியவராகவும், ஒற்றுமையின் மிகப் பெரிய ஆளுமையாகவும், தேசத்தின் தந்தையாகவும் உருவகப்படுத்தின.

அம்பேத்கர் பிரிவினைவாதியாகவும், வகுப்புவாதியாகவும், வெள்ளையர்களின் கைக்கூலியாகவுமே வர்ணிக்கப்பட்டார். இவ்வாறு பார்ப்பனிய சக்திகள் தங்கள் நிலையை கைப்பற்றிக் கொண்டு உறுதியானதுடன் அதன் பின்னான அனைத்து செயல்களாலும் அம்பேத்கரை பின்னுக்குத் தள்ளின.                              

 – தொடரும்

தமிழில் : செ.சரவணன்

Pin It