சேரிகள் வாழ்வின் துயரங்கள், அது பற்றிய எந்த உணர்வும் இல்லாதோரின் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை. சாக்கடையும் கழிவுகளும் கூடியிருக்கும் குடிசைப் பகுதிகள்... மூக்கை மூடியபடியும், முகத்தைத் திருப்பியபடியும் கடந்து போக வேண்டிய கணத் துயரம் நமக்கு.

பெருந்துன்பத்தில்தான் மனிதர்கள் ஆகச்சிறந்த பக்குவத்தை அடைகிறார்கள் என்பதும், வலியின் எல்லையைக் கண்டவர்களை வேதனைகள் ஒன்றும் செய்வதில்லை என்பதும், தீப்பற்றி எரியும் போது தன் அடுப்புக்கான நெருப்பை சேமிக்க நினைப்பதுமே சேரி வாழ்வின் எதார்த்தம்.

நம்பிக்கை தொலையும் நேரத்தில் பிறந்து , துயர் பெருகும் பொழுதுகளில் வாழ்ந்து, உண்மை அழியும் கணத்தில் மரிப்பது. இது, இந்தியச் சேரிகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்களின் சுருக்கமான சுயசரிதை. இந்த சுயசரிதையை மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது "ஸ்லம்டாக் மில்லினர்' திரைப்படம். பிரிட்டிஷ் இயக்குநர் டேனிபோயல் இயக்கத்தில் இந்தியும், ஆங்கிலமும் கலந்த இருமொழி படமாக வெளிவந்திருக்கிறது.

திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்து, பெரிதளவில் பாராட்டுகளைப் பெற்ற "ஸ்லம்டாக் மில்லினர்' அய்ந்து "கிரிட்டிக் சாய்ஸ்' விருதுகளையும் நான்கு "கோல்டன் க்ளோப்' விருதுகளையும் வென்றிருக்கிறது. பத்து ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு நிலைகளிலிருந்தும் வாழ்த்துகளும் விமர்சனங்களும் விரைகின்றன.

ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை, இந்தப் படத்திற்கும் திரைக்கதை அமைப்பிற்கும் செய்ய வேண்டிய நியாயத்தை முழுமையாக செய்திருக்கிறது. "கோல்டன் க்ளோப்' விருதுகளோடு சேர்ந்து ஆஸ்கரையும் வெல்ல, ரகுமானின் நேர்மையான இசை "ஸ்லம்டாக் மில்லினருக்கு' பெரிதும் உதவியிருக்கிறது. திரைக்கதையின் உண்மையையும் உன்னதத்தையும் சீர்கெடாமல் பாதுகாக்கும் ஏ.ஆர்.ரகுமான், கொண்டாடப்பட வேண்டியவர்தான்!

ஆனால் ரகுமானை வாழ்த்துவதோடு இந்த திரைப்படத்திற்கு நாம் செய்யும் மரியாதை முடிந்துவிடக் கூடாது. "ஸ்லம்டாக் மில்லினர்' தாங்கியிருக்கும் கதைக்களம், இந்தியாவின் ஜனநாயக முகத்தில் விழுந்திருக்கும் அழுத்தமான அறை.

ஜமால், சலீம் இருவரும் சகோதரர்கள். மும்பையின் மிகப் பெரிய சேரியான தாராவியைச் சேர்ந்தவர்கள். விமான ஓடுதளத்தில் பிற சிறுவர்களோடு விளையாடுவது அவர்களின் விருப்பமான பொழுதுபோக்கு. ஓடுதளத்தில் விளையாடும் சிறுவர்களை விரட்டுவதும், பிடிப்பதும், அடித்துத் துவைப்பதும், "தெருநாய்களே' என்று வசைபாடுவதும் போலிஸ்காரர்களின் பெருவேலையாக இருக்கிறது.

சாக்கடைக் கழிவுகளோடு, இண்டு இடுக்கில் நெருக்கடியாக வாழ நேர்ந்திருந்தாலும் சேரியின் சிறுவர்கள் மிக மகிழ்ச்சியாக எல்லாவற்றையும் (போலிஸ்காரர்கள் துரத்துவது உட்பட) சவாலாக ஏற்று வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் மன உறுதியை சோதிப்பது போல, மேலும் மேலும் துயரங்களும் இடர்களும் அவர்கள் வழியில் வந்தபடியே இருக்கின்றன. ஒருநாள், சேரியை நோக்கிப் பாய்ந்து வரும் இந்துத்துவவாதிகள் ஜமால் மற்றும் சலீம் முன்பே தாயை அடித்துக் கொல்கிறார்கள். தொடரும் கலவரத்திற்கு அஞ்சியும் தப்பித்து ஓடுங்கள் என்ற தாயின் குரலுக்குப் பணிந்தும் இருவரும் உயிர் பிழைக்க ஓடுகிறார்கள்.

இந்த ஓட்டத்தில் இவர்களோடு இணைகிறாள் லதிகா என்ற சிறுமி. சலீம் அவளை சேர்த்துக் கொள்ள மறுக்கிறான். ஆனால் ஜமால் தனக்கு மிகவும் பிடித்த "த த்ரீ மஸ்கிட்டர்ஸ்' என்ற கதையை குறிப்பிட்டு, அதில் வரும் ஏதோஸ், பார்தோஸ் நாம் என்றும், இவளை மூன்றாவது மஸ்கிட்டராக சேர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறான் (மூன்றாவது மஸ்கிட்டரின் பெயர் அவனுக்கு நினைவில் இல்லை).

ஆனால் சலீம் அதற்கு சம்மதிக்கவில்லை. இனிமேல் குடும்பத்துக்கு தானே மூத்தவன் என்றும், தான் சொல்கிறபடி கேட்டு நடக்க வேண்டுமென்றும் ஜமாலை எச்சரிக்கிறான். ஆனால் அவன் பேச்சை மீறி ஜமால் லதிகாவை தங்களோடு இருக்க வைக்கிறான். மூவரும் பரந்து விரிந்த குப்பை மேடுகளில் படுத்துறங்கி குப்பை பொறுக்குகிறார்கள். அந்த இடத்தில் தன் கூட்டாளிகளோடு வரும் மமன், மூவருக்கும் குளிர்பானம் கொடுத்து தன்னோடு அழைத்துச் செல்கிறான். மமன் அழைத்துச் செல்லும்

இடத்தில் இவர்களைப் போலவே நிறைய குழந்தைகள் இருப்பதைக் கண்டு, தங்களுக்கு நல் வாழ்க்கை கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

சிறுவர்களின் குரல் வளத்தை சோதிக்கும் மமன், நன்றாகப் பாடினால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று சொல்லி பயிற்சி எடுக்கச் சொல்கிறான். ஜமாலின் குரல் நன்றாக இருப்பதால் பாதி பயிற்சி எடுக்குமாறு கூறுகிறான். இதனால் உற்சாகமடையும் ஜமால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாடிக் கொண்டேயிருக்கிறான். ஜமாலுக்கு நேர்மாறாக இருக்கிறான் சலீம். முரட்டுத்தனமாக நடந்து பதிலுக்கு பதில் பேசி யாரையும் தாக்குவதற்கு தயாராக இருப்பதால், அவனைத் தன்னோடு வைத்துக் கொள்கிறான் மமன்.

வாகனங்கள் விரையத் தொடங்கும் பகல் பொழுதில் மும்பையின் சாலைகளைப் பிச்சைப் பாத்திரங்களோடு நிறைக்கிறார்கள், மமன் பயிற்சியளித்த எண்ணற்ற சிறுவர்கள். நெளிந்த பாத்திரத்தை குலுக்கியபடி வாகன கதவுகளைத் தட்டிப் பிச்சை கேட்கும் சிறுவர்கள் தொழில் நேர்த்தியோடு அதைச் செய்கிறார்கள். சலீம் எப்போதும் லதிகாவோடு சண்டை போடுகிறான். மமனுக்கு உதவியாளனாக இருக்கும் செருக்கில் அவளை ஓயாமல் மிரட்டுகிறான்.

ஓர் இரவில் மறைமுகமான இடத்தில் மமனோடு இருக்கிறான் சலீம். அங்கு ஒரு சிறுவனை பாடச் சொல்லிக் கேட்கிறான் மமன். சிறுவன் நன்றாகப் பாடுவதைக் கேட்டு, நீ தேறிவிட்டாய் என்று சொல்லி, தனது உதவியாளரைப் பார்க்கிறான். அவன் சட்டெனத் துணியில் மயக்க மருந்தைக் கொட்டி சிறுவன் முகத்தில் பொத்தி அவனை மயக்கமடையச் செய்கிறான். தயாராக இருக்கும் வேறொருவன், மயங்கிய நிலையில் இருக்கும் சிறுவனின் கண்களை பழுக்க காய்ச்சிய கரண்டியால் தோண்டி எடுக்கிறான். இதைப் பார்த்து சலீம் உறைந்து நிற்க, மமன் அவனிடம் ஜமாலை அழைத்து வருமாறு கூறுகிறான். நீ என்னை மாதிரி ஆகி நிறைய சம்பாதிக்க வேண்டாமா என்று ஆசை காட்டுகிறான்.

சலீம் ஜமாலை அழைத்து வருகிறான். மமனிடம் ஜமால் சிறப்பாகப் பாடி முடிக்க, சலீமிடம் மயக்க மருந்தை எடுக்கச் சொல்லி சைகை செய்கிறான். ஆனால் சலீம் பாட்டிலை எடுத்து மமனின் முகத்தில் வீசியெறிந்துவிட்டு, ஜமாலை இழுத்துக் கொண்டு தப்பியோடுகிறான். லதிகாவும் இந்த ஓட்டத்தில் சேர்ந்து கொள்ள, மமன் தன் கூட்டாளிகளோடு விடாமல் துரத்துகிறான். தண்டவாளத்தில் விரையும் ரயிலைப் பிடிக்க ஓடும் சிறுவர்கள் ரயிலில் ஏறிவிடுகிறார்கள். ஆனால் லதிகா பின்தங்குகிறாள். அவளைப் பிடித்துச் செல்கிறான் மமன். தன் உற்றத் தோழியான லதிகாவைப் பிரிந்த சோகத்தில் துடிக்கிறான் ஜமால்.

பசிக்கும் வயிறு அவர்களை மீண்டும் எதார்த்த வாழ்க்கைக்குத் திருப்புகிறது. பல்வேறு வேலைகளைச் செய்கிறார்கள். ரயிலிலேயே பொருட்களை விற்கிறார்கள். திருடவும் ஏமாற்றவும் கற்றுக் கொள்கிறார்கள். தாஜ்மகாலில் சுற்றுலா வழிகாட்டியென பொய் சொல்லி வெளிநாட்டுப் பயணிகளை தன் திறமையான பேச்சால் வசப்படுத்தி சம்பாதிக்கிறான் ஜமால். வாசலில் கிடக்கும் பயணிகளின் காலணிகளை திருடி விற்கிறான் சலீம். காலம் சற்றே கடந்திருந்தாலும் ஜமாலால் லதிகாவை மறக்க முடியவில்லை.

மீண்டும் மும்பை திரும்பி அவளை கண்டுபிடிக்க விரும்புகிறான். மமனால் கண் பறிக்கப்பட்ட சிறுவன் லதிகா இருக்கும் இடத்தைச் சொல்கிறான். ஜமால், சலீம் இருவரும் அங்கு விரைகிறார்கள். அதுவொரு சிவப்பு விளக்குப் பகுதி. நடனமாடிக் கொண்டிருக்கும் லதிகாவை அவர்கள் சந்திக்கும் நேரத்தில் அங்கு வரும் மமன் மூவரையும் பிடிக்க முயல, சலீம் துப்பாக்கியால் அவனை சுட்டுக் கொல்கிறான்.

பின் மூவரும் தப்பித்துச் செல்கிறார்கள்.

துப்பாக்கி வைத்திருக்கும் சலீம், ஜமாலை அடித்து விரட்டி லதிகாவை தன்னோடு வைத்துக் கொள்கிறான். ஜமாலை காப்பாற்றும் பொருட்டு லதிகாவும் அதற்கு சம்மதிக்கிறாள். மமனின் எதிரியான ஜாவேதின் அணியில் சேர்ந்து தாதாவாகிறான் சலீம். ஜமால் ஒரு கால்சென்டரில் தேநீர் வாங்கி வரும் வேலையாளாகச் சேர்கிறான். இருவரும் பருவ வயதை எய்தியிருக்கிறார்கள்.

இயல்பாகவே திறமைசாலியாக இருக்கும் ஜமாலை தன் வேலையை கவனித்துக் கொள்ளச் சொல்லி அமர்த்திவிட்டுச் செல்கிறார், கால்சென்டர் பணியாளர் ஒருவர். இதைப் பயன்படுத்தி கம்ப்யூட்டர் டேட்டாபேசில் சலீம், லதிகாவைத் தேடுகிறான் ஜமால். தீவிர தேடுதலுக்குப் பின் ஆன் லைனில் கிடைக்கும் சலீம் தன்னோடு வந்துவிடும்படி ஜமாலை அழைக்கிறான். லதிகாவை மீட்கும் பொருட்டு அங்கு செல்லும் ஜமால், அவள் இப்போது ஜாவேதின் கட்டுப்பாட்டில் இருப்பதை அறிகிறான். தினமும் மாலை 5 மணிக்கு சத்ரபதி ரயில் நிலையத்தில் காத்திருப்பேன் என்று லதிகாவிடம் சொல்லி வெளியேறுகிறான் ஜமால். ஜாவேத் தன் வீட்டை மாற்றிவிடுவதால் மறுபடியும் லதிகாவைத் தொலைக்கிறான்.

இந்நிலையில்தான் ஜமாலுக்கு "யார் கோடீஸ்வரராவது' ("கோன் பனேகா குரோர்பதி') என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறது. எல்லா கேள்விகளுக்கும் மிகச் சரியாக பதில் சொல்லி முன்னேறுகிறான் ஜமால். கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகளை தன் கடந்த காலத்தில் இருந்தும், கடந்து வந்த கசப்பான வாழ்விலிருந்தும் கண்டறிகிறான். ஆனால் நிகழ்ச்சியை நடத்தும் பிரேம் குமாருக்கு ஒரு சாய் வாலாவுக்கு அத்தனை விடைகளும் தெரிந்திருப்பது, வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

ஜமால் ஏதோ ஏமாற்று வேலை செய்வதாக போலிஸில் புகார் கொடுக்கிறான். கடைசி கேள்விக்கு பதில் சொன்னால் இரண்டு கோடியை வெல்லலாம் என்ற நிலையில், ஜமாலை கைது செய்து அடித்து துவைத்து விசாரணை செய்கிறது போலிஸ். அவனுக்குப் பின்னால் பெரிய கும்பல் இயங்குவதாக சந்தேகப்பட்டு துன்புறுத்தப்படுகிறான். இந்த நிலையில் விசாரணை அதிகாரிக்கு ஒவ்வொரு கேள்விக்கும் விடை தெரிந்த சூழலை விளக்குவதன் மூலம் தன் வாழ்க்கையை விவரிக்கிறான் ஜமால்.

எடுத்துக்காட்டாக, நூறு டாலர் கரன்சியில் இருக்கும் புகைப்படம் யாருடையது என்ற கேள்வி கேட்கப்படும்போது, ஜமாலின் நினைவுகள் பின்னோக்கிச் சென்று லதிகாவை தேடி மும்பைக்கு வரும் காட்சி விரிகிறது. லதிகா இருக்கும் இடத்தைச் சொல்லும் கண் பறிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒரு சுற்றுலா பயணி தனக்குக் கொடுத்த நூறு டாலரைக் கொடுக்க, அதைத் தொட்டுப் பார்த்து ஆச்சரியப்படும் சிறுவன், இதிலிருக்கும் படம் யாருடையது தெரியுமா என்று கேட்கிறான்.

ஜமாலுக்கு தெரியவில்லை. பெஞ்சமின் ப்ராங்க்ளின் என்று சொல்லி புன்னகைக்கிறான் சிறுவன். ஜமாலை சந்தேகப்பட்டு மிதிக்கும் போலிஸ், ஆயிரம் ரூபாய் நோட்டில் இருக்கும் புகைப்படம் யாருடையது என்று கேட்க, அதற்கான விடை அவனுக்கு தெரியவில்லை. தான் இதுவரை ஆயிரம் ரூபாயைப் பார்த்ததில்லை என்றும், நிகழ்ச்சியில் அந்த கேள்வி கேட்கப்பட்டிருந்தால் தனக்கு விடை தெரிந்திருக்காது என்றும் கூறுகிறான் ஜமால்.

இப்படியாக ஒவ்வொரு கேள்விக்குமான பதிலை அளிக்க முடிந்த கதையை ஜமால் விளக்க, அவன் தரப்பு நியாயங்களைப் புரிந்து கொண்டு அவனை விடுவிக்கிறது போலிஸ். கடைசி கேள்விக்கு பதில் சொல்ல நிகழ்ச்சிக்கு வரும் ஜமாலிடம் கேட்கப்படும் கேள்வி, "த த்ரீ மஸ்கிட்டர்ஸ்' கதையில் வரும் மூன்றாவது மஸ்கீட்டரின் பெயர் என்ன? விடை தெரியாத ஜமால் போன் செய்து கேட்கும் "லைப் லைனை' பயன்படுத்துகிறான். இதற்கிடையில்

ஜமாலின் சாதனையை பரபரப்பான செய்தியாக தொலைக்காட்சிகள் வாசிக்கின்றன. இதை லதிகா பார்க்கிறாள்.

சலீம் தன் கார் சாவியையும் செல்போனையும் கொடுத்து லதிகாவை தப்பித்துப் போகச் சொல்கிறான். விடையைக் கேட்க சலீமுக்கு போன் செய்யும் ஜமால், லதிகாவின் குரலைக் கேட்டு அதிர்ச்சியடைகிறான். அவள் தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறுகிறாள். அவளுக்கும் விடை தெரியவில்லை. "லைன்' துண்டிக்கப்படுகிறது. ஜமால் தானாகவே யூகித்து "அராமிஸ்' என்று பதில் சொல்லி இரண்டு கோடியை வெல்கிறான். லதிகா அவனுக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கிறாள். இருவரும் இணைகிறார்கள். சலீம், ஜாவேதை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்கிறான்.

விகாஸ் ஸ்வரூப் என்ற இந்தியரால் எழுதப்பட்ட "க்யூ அண்ட் ஏ' என்ற நாவல்தான் "ஸ்லம்டாக் மில்லினராக' திரை வடிவம் பெற்றிருக்கிறது. கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் முன்னும் பின்னுமாக குழப்பமின்றி நகரும் திரைக்கதையை எழுதியவர் சிமன் ப்யூபாய். தெருவோரக் குழந்தைகளின் மனோவியலையும், சேரி வாழ்வின் உண்மைகளையும் எதார்த்தமாக காட்சியமைக்கும் பொருட்டு, சிமன் மூன்று முறை இந்தியாவிற்குப் பயணம் செய்து ஆய்வு செய்திருக்கிறார்.

"ஸ்லம் டாக்'கில் வரும் தெருவோரக் குழந்தைகளிடம் நாம் காணக் கிடைக்கிற நகைச்சுவை உணர்வு, வாழ்க்கை எப்படி புரட்டிப் போட்டாலும் வாழப் பழகிக் கொள்கிற பக்குவம், எல்லாச் சூழலிலும் மகிழ்ச்சியை விட்டுக் கொடுக்காத குழந்தைமை எல்லாம் சேர்ந்து படத்திற்கு புதிய நிறத்தைக் கொடுக்கின்றன.

சேரிப் பகுதிக்கு படப்பிடிப்பிற்காக வரும் அமிதாப் பச்சனை பார்க்கத் துடிக்கும் சிறுவன் ஜமால், மலக்கழிவுகளில் மூழ்கி வரும் காட்சி மனதைப் பிசைந்தாலும் கழிவுகளுக்கு அருகிலேயே வாழ்கிற ஒரு சிறுவன், அதை தன் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஏற்றுக் கொள்ளும் உண்மை உறைய வைக்கிறது.

தலித்துகளை, சிறுபான்மையினரை எந்த ஆதாரமும் இன்றி கைது செய்து விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த முடிகிற அதிகார வர்க்க ஆணவத்தை மிக இயல்பாக, எந்த பிரச்சாரத்தன்மையும் இல்லாமல் மனதால் அதை நிச்சயம் உணர முடிகிற வகையில் பதிவு செய்திருக்கிறது இந்த திரைப்படம்.

இந்தியாவை எப்போதும் இழிவாகப் பார்க்கும் வெள்ளையர்களின் மனோநிலையிலேயே இந்தப் படம் உருவாகியிருப்பதாகவும், "ஸ்லம்டாக் மில்லினர்' இந்தியாவை உலக அரங்கில் கேவலப்படுத்திவிட்டதாகவும் விமர்சனங்கள் வருகின்றன.

வெள்ளையர்களை விடுங்கள், சேரியையும் தலித் மக்களையும், சிறுபான்மையினரையும் மேல்தட்டு ஆதிக்கசாதி இந்தியர்கள் என்ன நல்ல பார்வையா பார்க்கிறார்கள்? சேரியும், மதக்கலவரத்தில் பெற்றோரை இழக்கும் பிள்ளைகளும், விழி பிடுங்கப்பட்ட சிறுவர்களும், பாலியல் தொழிலாளியாக்கப்படும் சிறுமிகளும் இந்தியாவின் எதார்த்தமில்லையா? அதை எதிர்கொள்ளும் துணிச்சலற்றவர்களின் கூவல்கள்தான் இதுபோன்ற விமர்சனங்கள்.

உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற படங்கள், பெரும்பாலும் மக்கள் பிரச்னைகளையும் துயரங்களையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்தவையே. இந்து மதத்தால் பழிவாங்கப்பட்ட தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் நிலையை இந்தியர் ஒருவரால் உண்மையான உள்ளத்தோடு திரைப்படமாகப் பதிவு செய்ய முடியுமா என்ற வலுவான அய்யத்தை நாம் எழுப்பலாம். ஏனென்றால் திரைப்படம் என்ற வெகுமக்கள் ஊடகம், முழுக்க முழுக்க ஆதிக்க சாதியினரின் கைகளில் சீர்கெட்டுக் கிடக்கிறது.

உலக திரைப்பட அரங்கில் இதுவரையும் இந்தியாவை பிரதிபலித்த இந்தி திரைப்படங்கள், மேட்டுக்குடி வாழ்வின் கொண்டாட்டங்களை மட்டுமே இந்திய வாழ்வாக முன்னிறுத்தின. பன்முகத்தன்மையை கொண்ட இந்தியாவிலிருந்து வரும் படைப்புகள், பல்வேறு பண்பாடுகளையும் எதிரொலிக்க வேண்டியது அவசியம். அடித்தட்டு மக்களின் வாழ்வை, துயரை இந்தியாவின் இழி முகமாகக் கருதி மறைக்கப் பார்க்கும் மேட்டுக்குடி ஆதிக்க சாதி சாமர்த்தியத்தை தகர்த்திருக்கிறது "ஸ்லம்டாக் மில்லினர்.'

இத்தனை ஆழமான சமூகப் பிரச்சனையை , பரபரப்புக் குறையாமல், இழுத்தடிக்காமல், வன்முறையின் கோரத்தை ரசிக்கக் கொடுக்காமல் மிக முக்கியமாக எத்தனை அழுத்தினாலும் எழுந்து நிற்க முற்படும் மானுடத்தின் உணர்வெழுச்சியை உணர நமக்கு வாய்ப்பளித்த "ஸ்லம்டாக் மில்லினர்' குழுவை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

இயக்கம் இசை, திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், நடிப்பு என எதிலும் குறை வைக்கவில்லை. குறிப்பாக வசனம். அப்படியொன்றும் ஆகச் சிறந்த வார்த்தைக் கோர்வையெல்லாம் இல்லை.

ஆனால் அது எங்கே வருகிறது என்று தெரியாத அளவிற்கு மிகக் குறைவாக இடம் பெற்று, காட்சிகளையும் சூழலையும் பேச அனுமதித்திருக்கிறது.

காணச் சகியாத எதையும் நாம் பார்க்க விரும்புவதில்லை. கண்களை மூடிக் கொள்வதாலேயே அநீதிகளிலிருந்து தப்பித்துவிட்டதாக நாம் நம்புகிறோம். ஆனாலும் நம் சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்ட அநீதிகள் உலகெங்கும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. எங்கோ நடப்பது பற்றி நமக்கென்ன கவலை? நம் உணர்வுகளின் மனிதத்தன்மையின் வீரியம் அத்தனை வலுமிக்கதல்ல. ஆனால், நம் கால்களுக்கடியில் கைகளுக்கு அருகில், தலைக்கு மேலே வெகு அருகே நடந்தேறுபவை கூட, நம் உணர்வுகளை சுண்டுவதில்லையே ஏன்? காரணம், நாம் கண்களை மூடிக் கொண்டிருக்கிறோம். பலர் விரும்பி, சிலர் அறியாமையில், சிலர் விருப்பமின்றி! கண்களை திறந்திருக்கும் வேறு சிலருக்கு அநீதிகள் குறித்து ஆயிரம் கருத்துகள், கருத்து வேற்றுமைகள்!

அநீதியை பண்பாட்டு அழகியலோடு பார்க்கப் பழகிப் போன துணிவு நம்முடையது. இந்தியாவில் சாதியும் அதை உருவாக்கிய இந்து மதத்தையும் தவிர, இதற்கான சரியான எடுத்துக்காட்டு வேறெதுவும் உண்டா?

"சாதிக் கொடுமையும், இனப்பாகுபாடுதான்' என்று அங்கீகரிக்கக் கோரி, உலக மனித உரிமை அரங்குகளை நாம் தட்டிக் கொண்டிருக்கிறோம். உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்ள வேண்டிய சாதாரண பிரச்சனை சாதி என்கிறது இந்திய அரசு. எல்லையைக் கடந்து உலக மக்களின் காதுகளை எட்டிவிடாமல் தடுத்து நிறுத்தப்படும் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் - இது போன்ற ஆக்கங்கள் மூலம்தான் உலக வெளியை அடைய முடியும்.

Pin It