பன்னாட்டு நிதியம், உலக வங்கி, புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் போன்றவற்றுக்கு எதிராக தீரத்துடன் நின்றாலும்கூட, இந்திய நாட்டு மக்களிடையே மட்டுமின்றி தங்களுக்குள்ளாகவேகூட, சி.பி.எம். கட்சியினர் மதிப்பை இழந்து நிற்கிறார்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்களோ, அந்தச் சமூகம் எந்தளவுக்குப் பிளவுபட்டதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அவர்களும் மோசமாகப் பிளவுபட்டுள்ளனர். தங்களது தன்னுணர்வு நிலையை உயர்த்தவும், சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கவும் தங்கள் அளவில் அவர்கள் எந்த விதமான முயற்சிகளும் எடுப்பதில்லை. நேர்மையானவர்களும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்களும் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க முடியும் என்றொரு முடிவை அக்கட்சி எடுக்குமேயானால், தொழிற்சங்கம் என்றொரு அமைப்பே இல்லாமல் போய்விடும்.

நிர்வாக அமைப்பு முறை, தொழிற்சங்க உறுப்பினர்களை ஊழல் பேர்வழிகளாக மாற்றி விட்டது. தங்களை நெறியற்றவர்களாகவும், மனித நேயமற்றவர்களாகவும் மாற்றி விடுகிற அமைப்புமுறைக்கு எதிராகப் போராடுகிற செயல்திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. தொழிற்சங்கத் தலைவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும் வழமையான ஒன்றாகி விட்டது. அனுதாபம் கொண்ட பணியாளர்களிடமிருந்து சில நாட்களுக்குச் சிறிது உதவி கிடைக்கும்; அதன் பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் திக்கற்றுத் திண்டாடும் வகையில், இச்சிறிதளவு உதவிகளும் இல்லாமல் போய்விடும்.

தனியாருக்குத் தாரை வார்க்கப் படுவதற்கு எதிராக "பால்கோ' பணியாளர்கள் அறுபதுக்கும் மேற்பட்ட நாட்களாக வேலை நிறுத்தம் செய்தபோது, நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினர் என்று சொல்லப்படுபவர்களில், எந்தவொரு பகுதியினரும் உதவிக்கு வரவில்லை. "பால்கோ' பணியாளர்களின் போராட்டத்திற்கு, சட்டிஸ்கரின் சாதாரணப் பொது மக்களே உதவிக்கு வந்தனர். "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்ற முழக்கத்தை, நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினர் என்று சொல்லப்படுபவர்கள் – ஒரு வேத மந்திரமாக, வெறும் சடங்குத்தனமானதாக சுருக்கி விட்டனர். முதலாளித்துவத்திற்கு எதிரான போரில் உழைக்கும் வர்க்கமே தலைமை வகிக்கும் என்ற ரீதியிலான சோசலிசத்தின் விதி, நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினர் என்று சொல்லப்படுபவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் தாங்கள் செய்யக் கடன்பட்ட எந்தக் கடமைகளையும் நிறைவேற்றியதில்லை.

தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து வருவோரைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவின் உதிரிப் பாட்டாளிகளிடம் எந்த கரிசனத்தையும் அவர்கள் காட்டியது இல்லை. சமூகத் தீமைகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக எந்தவிதமான எதிர்ப்பையும் இவர்கள் காட்டியதில்லை. மாறாக, அவற்றையெல்லாம் எவ்விதத் தயக்கமுமின்றி இவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். தங்களது பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்காக சொற்ப நிதியை ஒதுக்குவதற்கு அரசாங்கத்தைத் தொடர்ந்து நெருக்கி வருவதும், அதன் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகப் பொதுக் கருத்து உருவாகும் அளவுக்கு – அவ்வப்போது நடத்துகின்ற போராட்டங்களும்தான் அவர்களது ஒரே சாதனையாக இருக்கிறது. தனியார் நிர்வாகத்திற்கு எதிரான அவர்களின் வெற்றி விகிதம் மிகக் குறைவானதேயாகும். நகர்ப்புற உழைக்கும் மக்களில் "முன்னேறிய பிரிவினர்' என்று சொல்லப்படுபவர்களைக் குறித்து இதுவரை சொல்லப்பட்டவை போதுமானவை ஆகும்.

மய்ய அரசின் இருப்பையே தாங்கிப் பிடித்திருக்கும் நிலையில் இன்று சி.பி.எம். கட்சி இருக்கிறதென்றால், இந்நிலைக்குக் காரணமாக அமைந்தவர்கள், நகர்ப்புற உழைக்கும் மக்களில் முன்னேறிய பிரிவினர்தான். ஆனால், இவர்கள் மீது ஒருவகை மெல்லுணர்வை விரயம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. வர்க்க ஒற்றுமையைப் பாதுகாப்பது என்ற பெயரில், ஆதிக்க சாதிப் பார்வையாளர்களுக்காக மட்டுமே ஆடிக் கொண்டிருப்பதன் மூலம், சி.பி.எம். கட்சி எந்த நன்மையையும் அடையப் போவதில்லை. பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டிற்கு சி.பி.எம். கட்சியினர் வழங்கும் நிபந்தனையற்ற, முழு மனதுடன் கூடிய ஆதரவு மட்டுமே, இந்திய மக்கள் தொகையில் மிகப் பெரும் பிரிவினராக விளங்கக் கூடிய பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதரவை அவர்களுக்குப் பெற்றுத் தரும்.

பிற்படுத்தப்பட்டவர்களிலும், ஆதிக்க சாதியினரிலும் உள்ள ஏழைகளை முன்னேற்ற வேண்டுமென சி.பி.எம். விரும்பினால், நகர்ப்புற ஆதிக்க சாதியினரின் மனக்கடுப்பைத் தணிக்கக் கூடியதாக இருக்கும் "கிரீமிலேயர்' கருதுகோளையும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையையும் பரிந்துரைப்பதற்குப் பதிலாக, மக்கள் ஜனநாயகப் புரட்சியைக் கொண்டு வருவதற்கான வழிகளையும், உபாயங்களையும், உத்திகளையும், வியூகங்களையும் அது வகுக்க வேண்டும்.

லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், மாயாவதி போன்ற சமூக நீதித் தலைவர்கள், ஆதிக்க சாதியிலுள்ள ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக வாதாடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் வாதாடுவதற்கு தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை ஒன்றாகத் திரட்டுவதில் அவர்கள் அடைந்த தோல்வியே காரணமாக இருக்கிறது. பெரும்பான்மை மக்களின் வாக்கு பிளவுபடுவதால் ஏற்படும் இழப்பை, ஆதிக்க சாதியினரின் வாக்குகளால் சரிக்கட்டி விடலாம் என இவர்கள் நம்புகின்றனர். இவ்வாறு கூறுவது, பெரும்பான்மை மக்கள், ஆதிக்க சாதியிலுள்ள ஏழைகள் ஆகியோருக்கிடையிலான ஒற்றுமையின் தேவையை மறுப்பது ஆகாது. ஆனால், அவ்வாறான ஒற்றுமை எனும் மாளிகையின் அஸ்திவாரம், பொருளாதார அளவுகோல்படி இடஒதுக்கீடு வழங்குவது என்பதன் மீது கட்டப்படுவதாக இருக்கக் கூடாது. மாறாக, வேளாண்மையில் உலகமயமாக்கலின் தாக்கம், நிலச்சீர்திருத்தங்கள், விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம், சுகாதாரம், கல்வி, உள் கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற உண்மையானப் பொருளாதாரப் பிரச்சனைகளின் அடிப்படையில் மக்களைத் திரட்டுவது என்பதன் மீதும் அது கட்டப்பட வேண்டும்.

ஒரு வரைவுத் திட்டத்தை வகுத்து, அத்திட்டம் பரிந்துரைக்கப்படுவதற்கென ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்பே, ஒரு விரிவான உடன்பாடு எட்டப்படுகின்ற அளவுக்கு, அதை ஒரு பொது விவாதத்திற்கு முன்வைக்க வேண்டுமென சி.பி.எம். கட்சி மய்ய அரசை வலியுறுத்தியது. இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்துவிட முடியாது என உணர்ந்த பிறகு, அவ்வாறு நடைமுறைப்படுத்துவதைப் படிப்படியாகச் செய்ய வேண்டும் எனக் கூப்பாடு போடும் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் படைக்கலன்களில் ஓர் ஆயுதமாக சி.பி.எம். கட்சியின் இந்நிலைப்பாடு இருக்கிறது. கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டை பொது விவாதத்தின் மூலம் தீர்க்க முடியாது. அரசின் தீர்க்கமான, தெளிவான நடவடிக்கை மட்டுமே இப்பிரச்சனையைத் தீர்க்க முடியும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான முதலாவது ஆணையம் காகா காலேல்கரின் தலைமையில் 29.1.1953 அன்று தோற்றுவிக்கப்பட்டது. அவ்வாணையம் தனது அறிக்கையை 30.3.1955 அன்று அளித்தது. மிகப் பெரிய ஜனநாயகவாதியான நேரு அவ்வறிக்கையைக் குளிர்பதனக் கிடங்கிற்கு அனுப்பி வைத்தார். அவ்வாணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை குறையாமல் இருந்து கொண்டே இருந்தது. அக்கோரிக்கை வேகமெடுத்தவுடன் மொரார்ஜி தேசாய் அரசு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மற்றொரு ஆணையத்தைத் தோற்றுவித்தது. அவ்வாணையம் தனது அறிக்கையை 1980இல் அளித்தது. இவ்வறிக்கையும்கூட குளிர்பதனக் கிடங்கிற்கே அனுப்பி வைக்கப்பட்டது. 1990இல் மண்டல் குழு அறிக்கையின் ஒரேயொரு பரிந்துரை மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதுவே மிகக் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது.

மண்டல் பரிந்துரைகளுக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் கடுமையான எதிர்ப்புப் போராட்டம் மட்டுமின்றி, மிகக் கொடுமையான வகுப்புக் கலவரங்கள் நிகழக் காரணமாக இருந்த ரத யாத்திரையை நடத்தியதோடு, பாரதிய ஜனதா வி.பி. சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளவும் அந்நடவடிக்கையே காரணமாக அமைந்தது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இரண்டாவது பரிந்துரை நடைமுறைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது; அதுவும்கூட ஓர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் அதற்குச் சாதகமான சூழல் ஏற்பட்ட பிறகுதான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இன்னும் கூடுதலாக எவ்வளவு காலத்துக்குப் பொது விவாதம் நீடிக்கும்? இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாகப் பொது விவாதம் எப்போது பலனளிக்கும் என்பதை சி.பி.எம்.மால் சொல்ல முடியுமா?

மண்டலின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை, சி.பி.எம். இதுவரையிலும் உணர்ந்து கொள்ளவில்லை எனலாம். பாரதிய ஜனதாகட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடித்தது, பிற்படுத்தப்பட்ட, தலித் கட்சிகளின் போராட்டமேயன்றி வர்க்கப் போராட்டம் அன்று. வி.பி.சிங் தலைமையிலான அரசு மண்டல் அறிக்கையை வெளியிடும் வரையிலும் இந்துத்துவக் கும்பல் வேக வேகமாக வளர்ந்து, மய்ய ஆட்சியைத் தனது சொந்த பலத்திலேயே கைப்பற்றும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் திடீரென்று திருட்டுத்தனமாக முளைத்த ராமன் கோயிலின் கதவை திறந்து விடுவதென்ற ராஜிவ் காந்தி அரசின் முடிவைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா தொடர்ச்சியாக நடத்திய மதவாத நடவடிக்கைகளின் விளைவாகக் கட்டியமைக்கப்பட்ட இந்துத்துவ உணர்வானது, மண்டல் என்ற உறுதியான பாறையில் மோதிச் சிதறியதால்தான், தனது சொந்த பலத்தில் மய்ய அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்த அக்கட்சியின் அனைத்து நம்பிக்கைகளும் தூள்தூளாயின.

மதச் சிறுபான்மையினருக்கு எதிரான இந்துத்துவ கும்பலின் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் திரளானது, மண்டலின் கரம் பற்றித்தான் மீண்டது. "கமண்டல்' என்பதன் எதிர்ச்சொல் "மண்டல்' என்பது உறுதியானது. "மண்டல்' கணிசமான அளவுக்கு "கமண்டலை'ப் பலவீனப்படுத்தியதால்தான், "கமண்டல்' கும்பல் "தேசிய ஜனநாயகக் கூட்டணி' என்ற ஓர் அணியை ஏற்படுத்த வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. ஆனால், மண்டல் முகாமுக்குள் எழுந்த சச்சரவை பாரதிய ஜனதா தனக்கு முழு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு, மண்டல் முகாமில் ஏற்பட்ட பிளவுகளே காரணமாக இருந்தன.

மீண்டும் 2004இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அடைந்த தோல்வியிலும் – பிற்படுத்தப்பட்ட, தலித் கட்சிகளின் பங்கே கூடுதலாக இருந்தது. உத்திரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் முலாயம் சிங், மாயாவதி, ராம்விலாஸ் பாஸ்வான், லாலு பிரசாத் யாதவ், மு. கருணாநிதி ஆகியோரின் தலைமையிலான பிற்படுத்தப்பட்ட, தலித் கட்சிகளே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் படுதோல்வியை அளித்தன. இப்படிச் சொல்வதென்பது, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரசைத் தோற்கடித்த சி.பி.எம். தலைமையிலான வர்க்க சக்திகளின் பங்கைக் குறைத்துச் சொல்வதாகாது.

மண்டலின் பங்கை ஆராய்வதில் இயங்கியல் அணுகுமுறையை சி.பி.எம். துணைக்கு அழைக்க வேண்டும். மண்டல் பிரிக்க மட்டுமல்ல; இணைக்கவும் செய்கிறது. சுதந்திரத்திற்கு முந்தைய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்திற்குப் பிறகு, மண்டல் இணைத்ததைப் போன்று இவ்வளவு பெரிய அளவிற்கு இந்திய மக்களை வேறு எதுவும் இணைக்கவில்லை. மதம், மொழி, பிரதேச வாரியான வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு பொதுவான அடையாளம், ஒரு பொதுவான பெயர், ஒரு பொதுவான இலக்கு ஆகியவற்றை இந்தியாவின் அறுபது சதவிகித மக்களுக்கு மண்டல் வழங்கியது.

இந்து மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஒரே தனித்த தளத்திற்குக் கொண்டு வந்ததன் மூலம் – மதம், சாதி, வர்க்க ஒற்றுமைக்கான ஒரு வலுவான அடித்தளத்தை அது உருவாக்கியது. பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை வகுப்புகளில் உள்ள மதவாத சக்திகளை எதிர்கொள்ள ஒரு சிறந்த முறை என இது நிறுவப்பட்டது. மண்டல், சாதியின் அடிப்படையில் மக்களை ஒரே நேரத்தில் பிரிக்கவும், இணைக்கவும் செய்தது.

மண்டலினால் ஏற்பட்ட பிளவின் அளவோடு ஒப்பிடுகையில், அது சாதித்த ஒற்றுமையின் அளவே மிகக் கூடுதலானது.

இந்தியாவிலுள்ள தலித்துகளை, ஒரு பொதுவான தன்னுணர்வு நிலையுடன் டாக்டர் அம்பேத்கர் ஒருங்கிணைத்தார். ஆனால், 60 சதவிகித சூத்திரர்களின் மக்கள் தொகைக்கு, இவ்வாறான இணைப்பு இல்லாமல் இருந்தது. 3,743 சாதிகளை சேர்ந்த, இந்தியாவின் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை உடையவர்களும், சாதி அடிப்படையிலான பதினாயிரக்கணக்கான தொழில்களில் ஈடுபட்டு, கடுமையான உடல் உழைப்பின் மூலம் தங்களது வாழ்க்கையை நடத்துபவர்களுமான பிற்படுத்தப்பட்ட மக்களை – மதம், மொழி, பிரதேச வாழிடங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒரே தன்னுணர்வு நிலையில் மண்டல் இணைத்தது என்றால், அது மிகையில்லை. இந்தத் தன்னுணர்வு நிலை மேலும் பலப்படுத்தப்படவும், ஒருங்கிணைக்கப்படவும் வேண்டும். இந்திய தேசப்பற்றிற்கு ஒரு புதிய உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் மண்டல் வழங்கியிருக்கிறது.

மண்டலுக்கும், சுதந்திரத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தேசப்பற்று என்பது, பார்ப்பனிய தேசப்பற்றாகவே இருந்தது. இந்தியா முழுவதிலும் "ராமகாதை' வழங்கப்படுவது, இந்து சடங்குகள் இந்தியா முழுக்கப் பொதுவானதாக இருப்பது ஆகியவற்றின் அடிப்படையிலேயே "வேற்றுமையில் ஒற்றுமை' என்பதன் அடித்தளம் கட்டப்படுவதாக இருந்தது. வட இந்திய ஆரிய நாகரிகத்திற்கும், பண்பாட்டுக்கும் அந்நியமானவர்களாகத் தங்களை எப்போதும் உணர்ந்த தென்னிந்தியாவைச் சேர்ந்த சூத்திரர்கள், இப்போது வட இந்தியாவைச் சேர்ந்த தங்கள் சூத்திரச் சகோதரர்களோடு ஒன்றுபட்டவர்களாக உணர்கிறார்கள்.

மண்டல் குழுவின் தலைவரான பி.பி. மண்டல், தென்னிந்தியாவில் ஒரு திருஉருவமாக மாறிவிட்டிருப்பதிலும், ஜோதிபா புலே, நாராயண குரு, பெரியார், அம்பேத்கர் போன்ற சமூக நீதியின் வரலாற்று நாயகர்களுடன் மண்டலின் படமும் இணைந்து தோன்றுவதிலும் வியப்படைய ஒன்றுமில்லை. அம்பேத்கர், பெரியார், ஜோதிபா புலே, நாராயண குரு ஆகிய நான்கு தலைவர்களுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். வட இந்தியாவில் இவர்களுக்கு இணையாக எவரும் இல்லாமல் இருந்தது. அவ்வெற்றிடத்தை பி.பி. மண்டல் நிரப்பினார்.

தென்னிந்திய பிற்படுத்தப்பட்டோர், ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சாதிகளின் உரிமை சாசனமாக மண்டல் அறிக்கையை உயர்த்திப் பிடித்தனர். தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் மண்டல் பங்களிப்பு செய்தது போல் வேறெந்த இயக்கமும் செய்ததில்லை. மண்டல் பிற்படுத்தப்பட்டவர்களை மட்டும் ஒன்றிணைக்கவில்லை;

முற்பட்ட சாதிகளையும் அது ஒன்றிணைத்திருக்கிறது. மண்டலுக்கு முன்பு வரையிலும், பீகாரில் ஆதிக்க சாதியினரிடம் இவ்வளவு ஒற்றுமையை ஒருபோதும் எவரும் கண்டதில்லை. மண்டலுக்குப் பின்னர் ஆதிக்க சாதி என்பவர்களிடையே தமக்குள்ளேயான கலப்பு மணத்தை அங்கீகரிக்கும் போக்கு, பெருமளவுக்கு உயர்ந்திருக்கிறது. எதிர்காலமற்றதும், மனித விரோதமானதுமான அகமணமுறையைப் பேணும் சமுதாயத்தின் உறுதியான சுவர்களை உடைப்பதில் இது மிகப் பெரிய பங்காற்றும். பழமையானதும் இழிவானதுமான இந்து சமூகத்தை, ஒரு பெரிய நெருக்கடியில் புதுப்பித்துக் கட்டுவதற்கான நம்பிக்கைகளுடன் மண்டல் குழு பரிந்துரைகள் கொண்டு வந்து விட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். 

- தமிழில்: ம.மதிவண்ணன்

(முற்றும்)

Pin It