கடவுளை எந்த அளவுக்கு வெறுத்தாரோ, அதே அளவுக்கு அரசியலையும் வெறுத்தார் பெரியார். அதனால்தான் தமது இயக்கம், ஒருபோதும் தேர்தலில் பங்கேற்காது என்பதில் உறுதியாக இருந்தார் அவர். ஆனால், பெரியாரின் அடையாளத்தை மட்டுமே முன்னிறுத்திய திராவிடக் கட்சிகள், என்றைக்கு தேர்தல் அரசியலுக்கு வந்ததோ அன்றே அவை சீரழிவுக்கு வித்திட்டன. அந்த அதிகார அரசியலின் பரிணாம வளர்ச்சி இன்று ஊழல், வாரிசு, பார்ப்பனத் தலைமை, வன்முறை, இந்துத்துவா, ஜோசியம் முதலான சீர்கேடுகளுக்கு வழிவகுத்து விட்டது. இடதுசாரி கட்சிகள் (தேர்தலில் பங்கேற்காதவைகூட) "கடவுள்' என்ற இடத்தில் அரசியலை வைத்துள்ளன. எனவே அவர்களைப் பொருத்தவரை, அரசியலின்றி அணுவும் அசையாது! தலித் இயக்கங்களும் அரசியலை முன்னிறுத்தியதால்தான் – சமூக விடுதலையைப் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளிவிட்டன.

ஈழத் தமிழர்கள் குறிப்பாக கடந்த ஆறு மாதங்களாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அய்க்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன : குறைந்த அளவே ஆவணப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 20.1.2009 முதல் மார்ச் 7 வரை மட்டுமே 2,683 தமிழர்கள் (பொது மக்கள்) கொல்லப்பட்டுள்ளனர்; 7,241 பேர் காயமடைந்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 63 தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்; 145 பேர் காயமடைகின்றனர். 30.6.2008 வரை மட்டுமே ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 948 பேர் ஈழத்திலிருந்து அகதிகாளக வெளியேறியுள்ளனர். ஏறக்குறைய 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், சொந்த மண்ணிலேயே இடப்பெயர்வுகளால் அகதிகளாக அல்லலுறுகின்றனர். இவை தவிர, மருத்துவ வசதியின்றியும், பட்டினியாலும் நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.

ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலையைக் கண்டித்து, பல்வேறு அமைப்புகளும், அரசியல் சாராத இயக்கங்களும் நாள்தோறும் ஏதோ ஒரு வகையில் தங்களின் கண்டனக் குரலை எழுப்பி வந்தன. முத்துக்குமாரைத் தொடர்ந்து பலர் தங்களையே எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால், இனப்படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிக்கு வலு சேர்க்க, அரசியல் கட்சிகளை முன்னிறுத்தத் தொடங்கியது – கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்வதற்கு ஒப்பாகி விட்டது. தமிழர்களிடையே தன்னியல்பாக எழுந்த உணர்வை, அவை எப்போதும் போல் தங்களுடைய அரசியல் அறுவடைக்குப் பயன்படுத்திக் கொண்டன.

இதன் விளைவு, "ஈழத் தமிழர்கள்' என இதுகாறும் விளிக்கப்பட்ட மக்கள் "இலங்கைத் தமிழர்'களாகி விட்டனர். போருக்கு எதிராக ஓரணியில் திரண்ட மக்கள் இரு அணிகளாகப் பிளவுபட்டனர். இலங்கை இனவெறி அரசுக்கு எதிரான கண்டனங்கள் – அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், இரு அணிகளுக்கு இடையிலானதாகவும் சுருக்கப்பட்டு விட்டன. தேர்தலில் பங்கேற்காத இயக்கங்கள்கூட, தங்களை ஏதாவது ஓர் அரசியல் அணியில் அடையாளப்படுத்திக் கொள்கின்றன.

ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்புகூட, அரசியல் நுழைந்த பிறகு அது வேறொரு சிக்கலை உருவாக்கி, உண்மைப் பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்து விட்டது. நான்கைந்து ஆண்டுகளாக "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் இணைந்து செயல்பட்டு வந்த விடுதலைச் சிறுத்தைகளையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் எப்போதும் அரசியல் பிரித்தே வைத்திருக்கிறது. அவர்களுடைய ஒற்றுமையை தமிழ் தீர்மானிக்கவில்லை; தி.மு.க.வும் அ.தி.மு.க.வுமே தீர்மானிக்கின்றன! உச்சகட்டமாக, நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டவுடனே – ஈழப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதைப் போல எங்கும் மயான அமைதி நிலவுகிறது.

தேர்தலுக்கான அரசியல் அணி சேர்க்கைகள் முடிந்தவுடன், கடைசி மூன்று மாதங்களில் ஈழத் தமிழர் பிரச்சினையில் மட்டும் ஆதரவாக எந்த அணி சிறப்பாக பணி(நாடகம்)யாற்றியது; எந்த அணி மோசமாக நடந்து கொண்டது என்ற அடிப்படையில், தேர்தல் நிலைப்பாடுகளை சில இயக்கங்கள் எடுத்து வருகின்றன. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் – ஈழத்தில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்திவிடும் என்பதைப் போன்றதொரு தோற்றத்தை அரசியல்வாதிகள் ஏற்படுத்தி வருகின்றனர். தாங்கள் அளிக்கும் ஒரு சாதாரண தேர்தல் வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற வக்கில்லாத இவர்கள்தான், போரையே நிறுத்திவிடுவார்களாம்!

நாடாளுமன்றத் தேர்தல் என்ற சிறு இடைவேளைக்குப் பிறகு, அரசியல் கணக்குகள் நேர் செய்யப்பட்டு – மீண்டும் தமிழ்ப் பாதுகாப்பு, ஈழச் சிக்கல் போன்றவை முதலிடத்திற்கு வரும். அவை மீண்டும் உச்ச நிலையை அடையும்போது, சட்டப் பேரவைக்கான தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டிருக்கும்!

Pin It