இந்து சமூக அமைப்பின் குணாம்சம் என்ன? அது சுதந்திரமான சமூக அமைப்பா? இக்கேள்விக்கு விடை காண்பதற்கு முன், சுதந்திர சமூக அமைப்பின் தன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. நல்வாய்ப்பாக, இக்கருத்து விவாதத்திற்குரியதன்று. பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் சுதந்திர சமூக அமைப்பின் அடிப்படை இயல்புகளைப் பற்றி கருத்து மாறுபாடு எதுவுமில்லை. இந்த அடிப்படை இயல்புகள் பலவாக இருந்த போதிலும் இரு கூறுகள் அடிப்படையானவை. முதலாவதாக, தனி மனிதர் தனக்குத் தானே முடிவெல்லையாகிறார் என்பது. சமூகத்தின் குறிக்கோளும் நோக்கமும் தனிமனிதர் வளர்ச்சியும் அவர்தம் ஆளுமையின் மேம்பாடுமேயாகும். சமூகம் தனி மனிதனுக்கு மேலானதன்று. தனிமனிதர் சமூகத்தில் தன்னை உட்படுத்தினால், அது தன் மேம்பாட்டிற்காகவும், அவசியமான அளவிற்கும்தான்.

இரண்டாவது இன்றியமையாக் கூறு, சமூக வாழ்வில் உறுப்பினர்களிடையேயுள்ள உறவுகள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்னும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். சுதந்திர சமூக அமைப்பின் அடிப்படைக் கூறுகளாக இவ்விரண்டினையும் ஏன் கருதிட வேண்டும்? தனி மனிதரை சமூக நோக்கங்களுக்கான வழிமுறையாகக் கருதாமல், முடிந்த முடிவாக ஏன் கருதிட வேண்டும்? தனிமனிதர் உரிமைகளைக் காப்பதற்கு நாம் ஏன் நமது விலைமதிப்பற்ற உடைமைகளையும் உயிர்களையும் தியாகம் செய்ய வேண்டும்? இக்கேள்விக்கு விடை காண்பதற்கு முன், தனி மனிதர் என்று நாம் பேசும் பொழுது எப்பொருளில் பேசுகிறோம் என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும்...

சகோதரத்துவம் ஏன் இன்றியமையாதது?

ஒரு தனி மனிதன் மற்றவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தி, உடன் வாழும் மனிதருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் மன நிலையே சகோதரத்துவம் எனப்படுவது. தூய பவுல் (St.Paul) இதனைச் சரியாக விளக்குகிறார் :

“மனித இனத்தவர் அனைவரும் ஒரே ரத்தத்தைச் சேர்ந்தவர்கள். யூதரென்றும் கிரேக்கரென்றும் எவருமில்லை. அடிமை என்றும் ஆண்டான் என்றும் ஆணென்றும் பெண்ணென்றும் கூட எவருமில்லை. அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றேயாவர்'' பிளைமவுத்தில் இறங்கிய பொழுது, யாத்திரிகத் தந்தையர் கூறியதும் இக்கருத்தையே: “இறைவனின் புனித உறுதிமொழி ஆவணப்படி, நாம் அனைவரும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டுள்ளோம். அதன்படி ஒவ்வொருவரின் நலனையும், ஒட்டுமொத்தமாக அனைவரின் நலனையும் காக்கக் கடமைப்பட்டுள்ளோம்.''

இவ்வணர்வுகள் சகோதரத்துவத்தின் சாராம்சமாகும். சகோதரத்துவம் கூடிவாழும் இயல்பை வலுப்படுத்துகிறது. நடைமுறையில் மற்றவர்களின் நலனில் ஒவ்வொருவரும் வலுவான ஆர்வம் கொள்கின்றனர். சகோதரத்துவம் மற்றவர்களின் நலன்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளச் செய்து, நடைமுறையில் பெரிதும் பிறர் நலன் பேணுகிறது. சகோதரத்துவ உணர்வுடைய தனிமனிதன் மற்றவரிடம் மரியாதை செலுத்துகிறான்.

வாழ்வதற்கு வேண்டிய நடைமுறைகளைக் கவனிப்பது போலவே, மற்றவர் நலன் பேணுவதும் இயல்பான, அவசியமான ஓர் கூறு ஆகிறது. பிறரிடம் முழுமையாகப் பரிவு காட்டாத ஒரு தனிமனிதன் பொதுநிலையில் ஒத்தியங்குவது இயலாத செயலாகும். சமூக உணர்வு வளர்ச்சி பெறாத தனிமனிதன் மற்றவரைத் தன்னுடைய நலன்களுக்கு எதிரானவர்களெனக் கருதி, மற்றவர்களைத் தோற்கடித்தால்தான் தான் வெற்றி பெற்று இன்புற்று வாழமுடியும் என்று நினைக்கிறான்.

சுதந்திரம் என்பது என்ன? சுதந்திர சமூக அமைப்பில் அது ஏன் இன்றியமையாததாகிறது? சுதந்திரம் இரு வகைப்படும்: சிவில் மற்றும், அரசியல் உரிமை. 1. சிவில் உரிமை என்பது சுதந்திரமாக இயங்கும் உரிமை. சட்டமுறைப்படியன்றி வேறுவகையில் சிறைப்படுத்த முடியாத நிலை 2. பேச்சுரிமை – சிந்தித்தல், எழுதுதல், படித்தல், விவாதித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. 3. செயலுரிமை.

முதல் வகை சுதந்திரம் அடிப்படையானது. அடிப்படையானது மட்டுமன்று, அது இன்றியமையாததும்கூட. அதன் மதிப்பைப் பற்றி அய்யம் எதுவும் இருக்க முடியாது. இரண்டாவது வகைச் சுதந்திரத்தை கருத்துச் சுதந்திரம் எனலாம். பல காரணங்களுக்காக அது முக்கியமானது. சமூக, அரசியல், தார்மிக, அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கும் காரணமாவது. கருத்துச் சுதந்திரம் இல்லாத இடத்தில் சமூக நிலையில் மாற்றமின்றி ஒரே விதமாகவே இயங்கும். இதனால் மிகவும் அவசியமானவையாக இருப்பினும் கூட, புதுமையானவை அனைத்தும் நிராகரிக்கப்படும். செயல் உரிமை என்பது தான் நினைத்ததைச் செய்யும் உரிமை. செயலுரிமை ஏட்டளவில் இருந்தால் மட்டும் போதாது; அது உண்மையானதாகவும் இருத்தல் வேண்டும். 

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 95)

Pin It