குஜராத், மராட்டியம், கர்நாடகம் என்று இந்தியாவின் மேற்குப் பகுதி, இந்துத்வா பயங்கரவாதிகளின் இருப்பிடம் ஆகியுள்ளது. அவர்களின் அடுத்த குறி தமிழ்நாடுதான் என்பதை நாம் அறிவோம்.

கடந்த நான்கு ஆண்டுகளில், மூடநம்பிக்கைகளை எதிர்த்த, இந்துத்வாவை எதிர்த்த நான்கு எழுத்தாளர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். 2013இல் நரேந்திர தபோல்கர், 2015இல் கோவிந்த் பன்சாரே, குல்புர்கி, இப்போது 2017இல் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ். இந்துத்வா பயங்கரவாதத்திற்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவைப்படுகின்றன என்று தெரியவில்லை.

கொல்லப்பட்ட நான்கு எழுத்தாளர்களும் ஒரே மாதிரியான சித்தாந்தத்தைக் கொண்டவர்கள். முற்போக்குச் சிந்தனையாளர்கள். ஒரே மாதிரி கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களைக் கொன்றவரைகளைக் கண்டுபிடித்து இன்றுவரையில் தண்டிக்கவில்லை. நம் நாட்டின் ஜனநாயகம் பற்றி நாம் வாய் கிழியப் பேசுகின்றோம். ஆனால், இடதுசாரி, முற்போக்கு, பகுத்தறிவுக் கருத்துகளை பேசுவோருக்கு இங்கே உயிருக்கே பாதுகாப்பில்லை என்ற நிலைதான் தொடர்கிறது.

கௌரி லங்கேஷ் பத்திரிகே என்னும் கன்னட வார இதழின் ஆசிரியர் அவர். மூட நம்பிக்கைகளை எதிர்த்துக் கடுமையாக எழுதக் கூடியவர். பாஜக குறித்தும், சங் பரிவாரங்கள் குறித்தும் அவருடைய விமர்சனங்கள் சமரசமற்றவை. அனைத்தையும் கடந்து, மோடி பற்றி அவர் அண்மையில் எழுதிய விமர்சனங்கள் கூர்மையானவை. அவற்றை இந்துத்வா பயங்கரவாதிகளால் தாங்கிக்கொள்ள முடியாதுதானே! பேனாவிற்கு எதிராகப் பேனாவைக் கூர் தீட்ட முடியாத கோழைகள், பேனாவிற்கு எதிராகத் தங்கள் துப்பாக்கிகளை நீட்டியுள்ளனர்.

கௌரி லங்கேஷ் தன் இதழில் விளம்பரங்களைக் கூட வெளியிடுவதில்லை என்பதுகுறிக்கத் தக்கது. விளம்பரங்களைப் பெற்றால், பிறகு அவர்களை விமர்சித்து எழுதுவது கடினம் என்பதால், பொருள் நட்டம் பற்றிக் கவலைப்படாமல், ஆண்டுக்கட்டணங்களை மட்டுமே நம்பித் தன் இதழை நடத்தியவர் அவர். அத்தகு நேர்மையாளருக்குத்தான் துப்பாக்கிக் குண்டுகளைப் பரிசாக வழங்கியிருக்கிறது, பயங்கரவாதிகளின் உலகம். வீட்டு வாசலில் காத்திருந்து, அவருடைய மார்பிலும், நெற்றிப் பொட்டிலும் குறி பார்த்துச் சுட்டுள்ளனர்.

தீண்டாமையை மட்டும் எதிர்த்த காந்தியார் இவ்வுலகில் வாழ அனுமதிக்கப்பட்டார். ஆனால் என்று அவர் சாதி அமைப்பையும் சேர்த்து எதிர்க்கத் தொடங்கினாரோ, அன்றே அவரின் வாழ்வுரிமையைப் பறித்துவிட்டது பயங்கரவாதக் கும்பல். அப்படித்தான், இடதுசாரிக் கலைஞர் சப்தர் ஹஸ்மியையும் சுட்டுக் கொன்றது.

இவைகள் வெறும் கொலைகள் மட்டுமில்லை. மிரட்டல்களும் கூட! இந்துத்துவாவிற்கு எதிராக யாரேனும் பேசினால், எழுதினால், பாடினால் இதுதான் முடிவு என்று சொல்லாமல் சொல்லி மிரட்டுகிறது பயங்கரவாதம்.

தேவ கவுடா, குமாரசாமி ஆகியோரின் துணையோடு, கர்நாடகத்திற்குள் உட்புகுந்த பாஜக, இன்று அங்கே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.. தமிழ்நாட்டிலும், அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் துணையோடு உள்ளேவரத் துடிக்கிறது. ரஜினிகாந்த்தும் தங்களுக்குப் பயன்படமாட்டாரா என்ற ஏக்கத்தில் இப்போது அவர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு மிகக் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது! சற்று ஏமாந்தாலும், பாஜக நுழைந்துவிடும். ஒரு நூற்றாண்டாய்த் திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும், ஒடுக்கப்பட்டோர் இயக்கங்களும் போராடிப் பெற்ற சமூக நீதி, இன உணர்வு, கருத்துரிமை ஆகியனவற்றை மட்டுமின்றி, நம் உயிர்களையும் நாம் இழக்க நேரிடலாம். முற்போக்குச் சிந்தனையாளர்கள், மதச் சார்பற்றோர் அனைவரும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டிய நேரம் இது!

Pin It