கறுப்பு மை குறிப்புகள் - 5

       என்றுமே சரி செய்ய முடியாத ஊனத்தையும், காயத்தையும் உருவாக்கிவிட்டு அமைதியாகிவிட்டன ஊடகங்கள். விளையாட்டுப் போட்டிகளின்போது, பாலினச் சோதனை செய்ய வேண்டியது கட்டாயமில்லை. குறிப்பிட்ட புகார்கள் வரும்போது மட்டுமே பாலினச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாந்தியின் புறத்தோற்றத்தைப் பார்த்து சந்தேகம் கொண்ட வீராங்கனைகள் சிலர் அளித்த புகாரின் பேரிலேயே, அவர் பாலினச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

santhi_403ஒலிம்பிக் போட்டிகளில்தான் பெரும்பாலும் இந்த சர்ச்சை கிளம்பும். ஆண் வீரர்கள் பெண் பிரிவில் ஓடுவதைத் தடுக்கும் பொருட்டே பாலினச் சோதனைகள் நடைமுறைக்கு வந்தன. 1966 இல் நடைபெற்ற "அய்ரோப்பிய அத்லெட்டிக் சாம்பியன்ஷிப்' போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய ரஷ்ய மற்றும் கிழக்கு அய்ரோப்பிய வீராங்கனைகளில் பலர் ஆண் என்று கிளம்பிய சர்ச்சையாலேயே, முதன் முதலாக பாலினச் சோதனை நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த சோதனைக்கு, தொடக்க காலத்தில் இருந்தே எதிர்ப்புக் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஏமாற்றுச் செயலை கண்டறிவதற்கு, இந்த சோதனை பயன்படுகிறது என்பது உண்மைதான். இப்பரிசோதனை வீரர்களுக்கு உண்டாக்கும் மன உளைச்சல், சமூகச் சுரணையின்மை, நூறு சதவிகிதம் சரியான, உறுதியான முடிவுகளை தர முடியாதது போன்ற காரணங்களால் தொடர்ந்து சர்ச்சையில் இருந்து வருகிறது. பாலினச் சோதனையால் மிகவும் பாதிக்கப்படுகின்றவர்கள் நடுவின் பாலினர் (Intersex). மரபணு வேறுபாடுகள் ஒருவரை ஆண் மரபணுக்களோடும், பெண் உடல் உறுப்புகளோடும் உருவாக்கலாம். வெளித்தோற்றம் ஆணாகவோ, பெண்ணாகவோ அமைந்து – உள் உறுப்புகள் நேர்மாறாகவும் இருக்கலாம். நடுவின் பாலினர் என்பவர்கள் இவர்கள்தான்.

பெண் உறுப்புகளோடு பிறக்கும் ஒரு குழந்தை – புறத்தோற்றத்திலும் மன ரீதியாகவும் பெண்ணாகவே வளரும்போது, தனக்குள் ஒளிந்திருக்கும் இப்பாலின வேறுபாட்டை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆணுக்குரிய ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதையும், மரபணு மாறுபாடுகளையும் "குரோமோசோம்'களின் விளையாட்டையும் பல கட்ட ஆய்வுகளிலேயே உறுதி செய்ய முடியும் என்கிறபோது, தன் உடல் திறனாலும் மன உறுதியாலும் விளையாட்டில் சாதிக்க வரும் பெண்கள், தங்களின் உடலுக்குள் நிகழும் உண்மைகளை அறிந்திருப்பார்கள் என எதிர்பார்ப்பது நியாயமற்றது. ஏழ்மையான சூழலில் வளர்ந்த சாந்திக்கு பதக்கமும், அதனால் கிடைக்கும் அங்கீகாரமுமே வாழ்வின் அதிபெரிய விஷயமாக இருந்தனவே தவிர, தன் புற அக விஷயங்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.

சாந்தி : “உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அக்கறையும் எடுத்துக்கிற வாய்ப்பில்லாத குடும்பத்துல பிறந்ததுதான் நான் செஞ்ச தப்பு. எனக்கு விவரம் தெரிஞ்சு, எப்பவுமே நான் மெலிஞ்சுதான் இருக்கேன். மன உறுதி ஒண்ணுதான் என்னை ஓட வச்சது. பாலும் பாதாமும் சாப்பிட்டு ஓடினவங்களுக்கு மத்தியிலஎத்தனையோ நாள் வெறும் பச்சத் தண்ணியைக் குடிச்சு ஓடியிருக்கேன். அப்போல்லாம் இந்த சாந்தியோட வாழ்க்கையைப் பற்றி யாரும் அக்கறைப்படல. ஆனா, ஒரு பிரச்சனை, ஒரு சர்ச்சைன்ன உடனே என் கூடவே இருந்து பார்த்தது மாதிரி எழுதவும் பேசவும் செஞ்சிட்டாங்க. என் தனிப்பட்ட நிலையிலயும் சரி, பொதுவா தடகள வீராங்கனைகளை எடுத்துக்கிட்டாலும் சரி, சின்ன வயசுல இருந்து உடலை வருத்துறோம். உடல் உழைப்பு இல்லாம தடகளத்துல சாதிக்க முடியாது. ஏன்னா, இது கும்பல் விளையாட்டு அல்ல. ஒவ்வொருத்தரும் தனித்தனியா உழைச்சா மட்டுமே பதக்கம் கை வந்து சேரும்.''

நம் உடலுக்குள் ஆண்/பெண்ணுக்கான (அப்படி பகுக்கப்பட்ட) 2 ஹார்மோன்களுமே சுரக்கின்றன. உடலை அதிகம் வருத்தும்போது ஆண் ஹார்மோன், பெண்ணுக்குள் அதிகமாக சுரக்க வாய்ப்பிருக்கிறது. ஆண்டுக்கணக்கில் மேற்கொள்ளப்படும் பயிற்சியால் தடகள வீராங்கனைகளுக்கு இந்த விஷயம் பொது. உங்களுக்கு சந்தேகம் வராத எந்தப் பெண்ணுக்குள்ளேயும்கூட ஆன்ட்ரோஜன் (ஆண் ஹார்மோன்) அதிகம் சுரக்கலாம்.

சாந்தி : “இந்த ரிஸ்க் இல்லாம தடகளத்துல இருக்க முடியாது. இந்த விளையாட்டுல சாதிக்கிறதுக்கு நாங்க கொடுக்குற விலை அது. அன்னைக்கு பி.டி. உஷா, இன்னைக்கு கேஸ்டர் செமன்யானு எவ்வளவோ பேர் சந்தேகங் களாலயும், சோதனைகளாலயும் நொறுக்கப்பட்டிருக்கோம். ஓடி சாதிச்ச ஒரு பொண்ணுகிட்ட இருந்து எளிதா பதக்கத்தை பறிக்கிற அதிகாரிகள், அதன் பின்னால உண்டாகுற விளைவுகளை யோசிக்கிறதில்ல. என்கிட்ட இருந்து பதக்கத்தை மட்டும் பறிக்கல; என் வாழ்க்கை, சந்தோஷம், நிம்மதி, லட்சியம், எதிர்காலம் எல்லாத்தையுமே பறிச்சுட்டாங்க.''

பாலினக் குறைபாடுகள் அல்லது வேறுபாடுகள் உள்ள பெண்களைப் பாகுபடுத்தி வைக்கும் இச்சோதனையை, அதன் தொடக்க காலம் தொட்டே மருத்துவ உலகம் குறிப்பாக, மரபணு ஆய்வாளர்களும், ஹார்மோன் நிபுணர்களும் எதிர்த்தே வருகின்றனர். அதற்கான காரணங்கள், மிக நேர்மையானவை. நடுவின் பாலினம் என்பது இயற்கையின் உருவாக்கம். மருத்துவ உலகம் இதை அசாதõரணமான அமைப்பாகவும், பிறவிக் குறைபாடாகவும் பார்க்கிறது. அவ்வளவே. உடலின் அகம் மற்றும் புறத்தில் உண்டாகும் சிறு முரண்பாடுகள் ஒருபோதும் பெண்ணை பெண்ணில்லாமல் ஆக்குவதில்லை என்பது நிபுணர்களின் வாதம்.

இயற்கை – உயிர்களை எத்தனையோ கோடி வகைகளில் உருவாக்கி வைத்திருக்கும் போது, மனிதன் தன் ஆற்றலால் கண்டறிந்த உண்மைகள் மிகக் குறைவானவை. அறிவியல் தோன்றுவதற்கு முன்பு – மதங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பு, ஆதி மனிதனிடம் ஆண் பெண் என்ற பகுப்போ, பாலின மாறுபாடுகள் என்ற பாகுபாடோ இருந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாமே உயிர்கள் அவ்வளவுதான்.

அறிவியலுக்கு முன் தோன்றிய மதங்கள் இப்புவியில் நிரப்பிய மூட நம்பிக்கைகளாலேயே மனித சமூகம் பாழ்பட்டது. பெண் அடிமைப்படுத்தப்பட்டாள், ஆண் உயர்ந்தவனானான்; மாற்றுப் பாலினர் (Transgender) ஒடுக்கப்பட்டனர், ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்களே இயற்கையானவை, வாழத் தகுதியானவை என்ற கருத்து நிலைநிறுத்தப்பட்டது. உயிர்கள் மற்றும் இயற்கை குறித்த உண்மைகளை அறிவியல் உலகம் முன்வைத்தபோது, அவை பெரும்பாலும் மதங்களின் கற்பனைக் கதைகளுக்கு எதிரானவையாகவே இருந்தன. அதனால் மதம் பிடித்த மனிதர்களெல்லாம் அறிவியலுக்கு எதிராகப் போரே நிகழ்த்தினர்!

ஆண் – பெண் என்ற முக்கியமான இரண்டு எதிர்பாலினத்தை மட்டுமே அங்கீகரித்த மதக் கோட்பாடுகள் – மாற்றுப் பாலினர்களையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும், நடுவின் பாலினரையும் இயற்கைக்கு எதிரானவர்களாக, குற்றவாளிகளாக முன்னிறுத்தியது. XX பெண்களுக்கான குரோமோசோம்களாகவும், XY ஆண்களுக்கான குரோமோசோம்களாகவும் பகுத்திருக்கிறது மருத்துவ உலகம். அப்படியில்லாமல் குரோமோசோம்களின் அமைப்பு XXதூ, XXXY அல்லது XXX – ஆக அமைந்திருக்குமானால் அது அசாதாரணமாகவும், குறைபாடாகவும் கருதப்படுகிறது.

நடுவின் பாலினர் என சொல்லக் கூடியவர்களுக்கு குரோமோசோம்கள் இப்படி அமைந்திருக்கும். குரோமோசோம்களின் அமைப்பு மட்டுமே இப்படியிருக்குமே தவிர, இதனால் கூடுதல் பலனோ – சக்தியோ இவர்களுக்கு கிடைப்பதில்லை. நடுவின் பாலினராக கண்டறியப்பட்ட ஒரு பெண்ணுக்கு, இயல்பாக ஒரு பெண்ணுக்குரிய வலு மட்டுமே இருக்கும். அவர்களும் திறமையாலும், விடாமுயற்சியாலும்தான் தடகளத்தில் சாதிக்கிறார்கள். இதை எத்தனையோ முறை உறுதி செய்தும், சர்வதேச விளையாட்டு உலகம் அதை ஏற்க மறுக்கிறது.

நடுவின்பாலினர், மாற்றுப் பாலினர் அல்லர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகள் ஹார்மோன் சிகிச்சை எடுத்த மாற்றுப் பாலினர், ஒலிம்பிக்கில் விளையாட அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், நடுவின்பாலினருக்கு அப்படி எந்த வாய்ப்புமே வழங்கப்படுவதில்லை. அமெரிக்க மக்கள் தொகையில் 1.7 சதவிகிதம் பேர் நடுவின்பாலினர்தான். தென்னாப்பிரிக்காவில் 500 பேரில் ஒருவர் நடுவின் பாலினர். இயற்கை, மனிதர்களை இப்படியும் உருவாக்குகிறது. அவ்வளவே! இதில் புருவம் உயர்த்தவோ, முகம் சுளிக்கவோ, பெருமூச்சுவிடவோ எதுவுமில்லை. நடுவின் பாலினர் பெண்ணாகப் பிறந்திருந்தால், கடைசி வரை பெண்தான். இதை எந்த சோதனைகளும் மாற்றாது.

eva_400போலிஷ் நாட்டு தடகள வீராங்கனை ஈவா க்ளோபுகோவ்ஸ்கா பாலினச் சோதனையில் தோல்வி அடைந்ததாக தடை செய்யப்பட்டார். மருத்துவர்கள், ஈவாவுக்கு எந்த கூடுதல் தகுதியும் இல்லை என வாதிட்டும், அதை சர்வதேச தடகள குழு ஏற்கவில்லை. பாலினச் சோதனை விமர்சகர்கள், ஈவாவுக்கு நடந்தது அப்பட்டமான பாகுபாடு என்று குறிப்பிட்டனர். தான் பொறுப்பேற்க முடியாத ஒரு விஷயத்திற்காக ஈவாவைப் போல, சாந்தியைப் போல எத்தனையோ வீராங்கனைகள் வாழ்வைத் தொலைத்திருக்கின்றனர். இதில் வேதனை என்னவென்றால், 46 XX குரோமோசோம் அமைப்பு கொண்ட ஆண்கள் இருந்தாலும் – பாலினச் சோதனை ஒருபோதும் ஆண்களுக்கு நடத்தப்படுவதில்லை.

சாந்தி : “ஹார்மோன் மாறுபாடுகள் கூடுதல் சக்தியை கொடுக்கும்னு இவங்களா ஒரு கற்பனை பண்ணிக்கிறாங்க. நாங்க உழைக்காம, பயிற்சி இல்லாமலா ட்ராக்ல ஓட வந்துடுறோம்? எனக்கு 28 வயசாகுது. என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தா, ஓட்டத்தை தவிர எதுவும் தெரியல. என் நல்லது, கெட்டது எல்லாமே ஓட்டத்தினாலதான் நடந்திருக்கு. என் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஓட்டம்தான் தீர்மானிச்சிருக்கு. அப்படின்னா எவ்வளவு இழந்திருப்பேன்? எவ்வளவோ விட்டுக் கொடுத்திருப்பேன்? பொழுதுபோக்குனு ஒண்ணு எனக்கு இருந்ததேயில்ல. சராசரியான ஒரு பொண்ணு மாதிரி படிப்பு, வீடு, திருமணம்னு என்னாலயும் வாழ்ந்திருக்க முடியும்! என் ரத்தத்துக்குள்ள கலந்திருக்கும் விளையாட்டு தான் இப்பவும் என்னை இயக்கிட்டு இருக்கு.''

ஆண் – பெண் சமத்துவமும், பாலியல் சுதந்திரமும் கொண்ட நாடுகளில் பாலினச் சோதனை தோல்வி ஒரு பொருட்டாகாமல் போகலாம். இந்தியாவைப் போன்ற மத ஆதிக்கமும், சாதிய ஒடுக்குமுறையும், பாலினப் பாகுபாடுகளும் நிறைந்த ஒரு நாட்டில் அதன் பிறகு, அந்த வீராங்கனை ஒருபோதும் தலைநிமிர்ந்து வாழ முடியாது. சந்தேகப் பார்வைகளையும், கிசுகிசுப் பேச்சுகளையும், கிண்டல்களையும் வாழ்க்கை முழுவதும் கடக்க வேண்டியிருக்கும். ஆண்களுடனும் சேர முடியாமல், பெண்களுடனும் பழக முடியாமல் தனிமை எனும் படுகுழியில் தள்ளப்படுவர். சாந்திக்கும் அதுதான் நடக்கிறது. பாலைவனத்தில் தொலைந்து போனதைப் போல திக்கற்று நின்று கொண்டிருக்கிறார். வறுமையும் சாதிய ஒடுக்குமுறையும் ஏற்கனவே அழுத்திக் கொண்டிருந்த நிலையில், பாலின சர்ச்சை சாந்தியை மொத்தமாக உடைத்து விட்டது.

சாந்தி : “குடும்பத்துக்கு மூத்த பொண்ணா எனக்கு நிறையப் பொறுப்புகள் இருக்கு. என் சகோதரர்களை படிக்க வைக்கிறேன். அவங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும். செங்கல் சூளையில் கூலிக்கு அவியிற என் பெற்றோரை மீட்கணும்னு ரொம்ப சின்ன ஆசைகள்தான் எனக்கிருந்துச்சு. ஆனா என்னோட லட்சியம் ரொம்பப் பெரியது. ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்குறதுதான் என் இலக்கு. இப்போ என் லட்சியமும் போச்சு. குடும்பத்தை நல்லபடியா காப்பாத்தணுங்கற ஆசையும் நிறைவேறல. யாரும் எனக்கு வேலை கொடுக்க மாட்டேங்குறாங்க. எங்க போனாலும் வேற்றுகிரகத்துல இருந்து வந்த மாதிரி பார்க்குறாங்க. நான் என்ன தப்பு செஞ்சேன்? என் குடும்பத்துக்காகக்கூட நான் எதுவும் செய்யல. ஆனா, இந்த நாட்டுக்கு எத்தனை மெடல்கள் கொண்டு வந்து சேர்த்திருக்கேன். அந்த நன்றி இந்த நாட்டுக்கு ஏன் இல்லை?

தேசிய கீதம் பாட, இந்திய கொடியை ஏற்றி, எல்லோரும் எழுந்து நிற்க பதக்கத்தைக் கழுத்துல ஏந்துறப்போ, போர்க்களத்துல ஜெயிச்ச மாதிரி ஒரு உணர்வு உண்டாகும். எல்லா தாழ்வுகளும் அழிஞ்சி, உலகத்தோட உயரத்துல நிக்கற மாதிரி தோணும். அந்த உணர்வுக்கு ஈடு இணையில்ல. நாட்டுக்கு பெருமை சேர்த்த நிறைவு மனம் முழுக்க நிறைஞ்சிருக்கும். ஆனா இந்த நாட்டுக்கு என் பதக்கங்களோ, வெற்றிகளோ ஒரு பொருட்டே இல்லன்னு இப்போ புரியுது. இல்லன்னா பாலினச் சோதனைங்கற பேர்ல நான் அலைக்கழிக்கப்பட்டதை இவ்ளோ மோசமா வேடிக்கை பார்த்திருக்காது. இப்போ வரைக்கும் நான் இருக்கேனா, செத்தேனான்னு பார்க்க ஆளில்ல. பாலினச் சோதனையில் தோல்வியடைஞ்ச தென்னாப்பிரிக்க வீராங்கனை கேஸ்டர் செமன்யாவுக்கு அந்நாட்டு அரசும் மக்களும் அளிச்ச ஆதரவு, அவரை திரும்ப ஓட வச்சிருக்கு. ஆனா, என்னை ஒரு அகதி மாதிரி உணர வச்ச இந்தியாவுல பிறந்ததுக்காக வெட்கப்படுறேன்.''

சாந்தியைப் போலவே தென்னாப்பிரிக்க கிராமம் ஒன்றில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர் கேஸ்டர் செமன்யா. மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரருடன் பிறந்த செமன்யாவுக்கு சிறு வயது முதலே விளையாட்டுதான் போக்கிடம்! ஊக்கமோ ஊட்டச்சத்தோ கிடைக்க வாய்ப்பற்ற சூழலில்தான் அவரும் வளர்ந்தார். தற்பொழுது 19 வயதாகும் செமன்யா ஓட்டத்தில் காட்டிய வேகமும், பதித்த முத்திரைகளுமே அவர் மீது சந்தேகம் எழுப்பக் காரணமாக அமைந்தன. 2008 காமன்வெல்த் போட்டிகளில் 800 மீட்டரில் தங்கத்தை வென்று சர்வதேசக் களத்தில் இறங்கிய செமன்யாவிற்கு, 2009 ஆம் ஆண்டு முழுக்க பதக்கக் காலம். 800 மீட்டரிலும், 1500 மீட்டரிலும் வென்றது மட்டுமின்றி அடுத்தடுத்த போட்டிகளில், பலரின் சாதனைகளை முறியடிக்கும் வகையில் அமைந்தது அவரது வேகம்.

ஒரே ஆண்டில் 800 மீட்டரில் 25 நொடிகளும், 1500 மீட்டரில் 8 நொடிகளும் குறைத்த செமன்யாவின் சாதனை, கொண்டாட்டத்தைவிட சந்தேகத்தைக் கிளப்பியது. ஊக்க மருந்து பயன்படுத்தியவர்களால் மட்டுமே இது சாத்தியம் எனக் கருதிய "அத்லெட்டிக் சர்வதேசக் கூட்டமைப்பு' (IAAF), செமன்யாவை பாலினச் சோதனைக்கு பரிந்துரைத்தது. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டத்திற்கான இறுதிப் போட்டி நடப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் பாலினச் சோதனை செய்தி கசிந்தது. ஊடகங்கள் பரபரப்பைக் கிளப்பின. மனம் தளராமல் ஓடிய செமன்யா, அந்தப் போட்டியிலும் தங்கம் வென்று சாதனை புரிந்தார்.

ஊடகங்கள் கிளப்பிய பரபரப்பு பலரை யும் கொந்தளிக்கச் செய்தது. தடகள வீரர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், போராளிகள் என தென்னாப்பிரிக்காவே செமன்யாவிற்கு ஆதரவாகக் களம் இறங்கியது. போட்டி முடிவதற்கு முன்பே சோதனைக்குப் பரிந்துரைத்தது, இனப்பாகுபாட்டின் வெளிப்பாடு என்ற குற்றச்சாட்டுகளும், மனித உரிமைக்கு எதிரானது என்ற குரல்களும் செமன்யாவை அரவணைத்தன. "நான் எப்படியிருக்கிறேனோ அப்படியே என்னை கடவுள் படைத்திருக்கிறார். என்னை நான் முழுமையாக அங்கீகரிக்கிறேன்' என்று தன்னம்பிக்கையோடு பேட்டி அளித்தார் செமன்யா.

தனி நபரின் மருத்துவ உண்மைகளையும், அந்தரங்கத்தையும் பாதுகாக்கும் பொருட்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து செமன்யாவை திருப்பி அழைக்கவும் துணிந்தது தென்னாப்பிரிக்க அரசு. சமூக ரீதியான, சட்ட ரீதியான எல்லா பாதுகாப்பையும் அளித்ததோடு, பதக்கமும் பரிசுப் பணமும் பறிக்கப்படாமல் பாதுகாத்தது. தென்னாப்பிரிக்கர்கள் செமன்யாவை கதாநாயகியைப் போல கொண்டாடுகின்றனர். ஒரு பெண்ணை தடகளத்திற்கு தகுதியற்றவராகப் பார்க்கும் IAAF – இன் வாதங்களில் தெளிவில்லை என சொல்லி, கடைசி நிமிடம் வரை செமன்யாவோடு நின்றது தென்னாப்பிரிக்கா.

semanyaசாந்தி : “குடிமக்கள் தன் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறாங்க. தோஹாவுல எனக்கு அவ்வளவு பெரிய அவமானம் நிகழ்ந்தப்போ, எனக்காக ஒருத்தர்கூட குரல் கொடுக்கல. 110 கோடி இந்தியர்களும் என்னை கைவிட்டுட்டாங்க. பணம், பதக்கம் இதெல்லாத்தையும்விட செமன்யாவுக்கு கிடைச்சது தார்மீக ஆதரவுநாங்க இருக்கோம்ங்கற நம்பிக்கை. சர்வதேசக் களத்துல நின்று இவ்ளோ பெரிய குழப்பமான சர்ச்சையை நான் மட்டும் எப்படி எதிர்கொள்ள முடியும்?

எப்பவுமே நான் தனியாகத்தான் இருந்திருக்கேன். அப்பவும் தனியாதான் நின்னேன். இப்பவும் தனியாதான் இருக்கேன். தென்னாப்பிரிக்கா செமன்யாவை ஒரு வீராங்கனையா மட்டும் பாதுகாக்கல; ஒரு குடிமகளா, தன் நாட்டு உறுப்பினரா பாதுகாத்திருக்கு. ஆனா நான் இங்க யாருக்குமே தேவைப்படல. என் வெற்றிகளோ, தோல்விகளோ இங்க யாரையும் பாதிக்கல. ஏன்னா... விளையாட்டுங்கற பேர்ல இங்க நடக்குறதெல்லாம் வியாபாரம்தான். காமன்வெல்த் போட்டிகள் நடத்தி 35 ஆயிரம் கோடியை சுருட்டினாங்க. என்னால யாருக்கு என்ன லாபம்?''

மத்திய அரசு சாந்தியை ஆதரித்து ஓர் அறிக்கைகூட விடாத நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி சர்ச்சைக்கு முன் அறிவித்தபடியே பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை யையும், எல்.சி.டி. தொலைக்காட்சியையும் வழங்கினார். கத்தக்குறிச்சி கிராம மக்களும், சாந்தியின் குடும்பத்தினரும் அவரை அரவணைத்தனர். அவ்வளவுதான். அதோடு முடிந்தது அவரது தடகளக் கனவு. "உலகத்தரம் வாய்ந்த ஒரு வீராங்கனையை இழந்துவிட்டோம்' என குறிப்பிட்டார், சாந்தியின் பயிற்சியாளர் நாகராஜ்.

சாந்தி : “நான் ஒரு பெண். அவ்வளவு தான். அதற்கு மேல அங்க கேள்விகளுக்கு இடமில்லை. நீங்க யாரா இருக்கிறீங்களோ அதை எந்தப் பரிசோதனையாலும் அழிக்க முடியாது. மொத்த உலகமும் என்னை சந்தேகமா பார்த்தப்போ, எந்தக் கேள்வியும் கேட்காம என்னை அரவணைத்து, அங்கீகரிச்ச முதல்வருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.''

பகுத்தறிவாளர்கள், பெண்ணியவாதிகள், பொதுவுடைமைவாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அறிவுஜீவிகளால் நிரம்பிய இந்த சமூகத்தின் சுரணையை, ஒரு தலித் குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்த சாந்தியின் நிலை துளியும் கிளறவில்லை. வர்க்க, சாதிய, பாலின ரீதியான ஒட்டுமொத்த ஒடுக்குமுறைக்கும் ஆளான ஒரு பெண்ணின் துயரம் இங்கு யாரையுமே அசைக்கவில்லையெனில், எப்படிப்பட்ட சமூகம் இது? வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் 2007 சூலையில், தமிழக விளையாட்டுத் துறையில் ஒப்பந்தப் பயிற்சியாளராக சாந்தி வேலைக்கு சேர்ந்தார்.

சாந்தி : “5,000 ரூபாய் சம்பளத்தை வச்சுகிட்டு சென்னையில வாழ்க்கை நடத்த முடியல. ரெண்டு வருஷம் வேலை செஞ்சுட்டு, புதுக்கோட்டைக்கே மாறுதல் வாங்கிட்டுப் போயிட்டேன். வாழவே பிடிக்கல. ஓடுறது மட்டும்தான் என் வாழ்க்கையா இருந்தது. அதுக்கும் வாய்ப்பில்லாமப் போச்சு. என் வாழ்க்கை முடிஞ்சது முடிஞ்சதுதான். பணமும் வாய்ப்பும் இல்லாததால, எவ்வளவோ குழந்தைகளோட திறமைகள் கண்டறியப்படாம இருக்கு. என் கனவுகளுக்கு அவங்க மூலமா ஒளியேற்றலாம்னு "ஒலிம்பியா ஸ்போர்ட்ஸ் அகடெமி'யை ஆரம்பிச்சேன். 60 பேரை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்தேன். பேப்பர் மற்றும் பால் பாக்கெட் போடுறவங்கன்னு எல்லோருமே பின் தங்கிய சூழல்ல வாழ்றவங்க.''

பயிற்சியைத் தொடங்கின சிறிது காலத்திலேயே மாநில அளவிலான போட்டிகளில் சாதிக்கத் தொடங்கினர் அந்த சிறுவர்கள். பதக்கங்களோடு வரும் அவர்களின் முகத்தில் தன்னைப் பார்த்துக் கொண்டார் சாந்தி. அகதெமியையும் 60 குழந்தைகளையும் பராமரிப்பது எளிதல்லவே! மாத ஊதியமாகக் கிடைக்கும் சிறிய தொகையை வைத்து, எத்தனை நாட்களுக்கு சமாளிக்க முடியும்? ஒரே ஆண்டில் அகதெமியை மூடினார். சாந்தி பயிற்சியளித்த 60 குழந்தைகளும் தங்களின் தற்காலிகக் கனவு வாழ்வை இழந்து, பேப்பர் மற்றும் பால் பாக்கெட் போடும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர்.

சாந்தி : “என்ன பண்ணச் சொல்றீங்க? என்கிட்ட பணமில்ல. இருந்த வரைக்கும் சமாளிச்சேன். எப்படியாவது புரட்டிடலாம்னு நம்பிக்கை இருந்துச்சு. ஒவ்வொரு கடை கடையா ஏறி இறங்கினேன். கல்லூரிகளுக்குப் போய் காத்துக் கிடந்தேன். யாருமே இந்த பசங்களுக்கு "ஸ்பான்சர்' பண்ண முன் வரல. நான் கேட்டது லட்சங்களோ, கோடிகளோ இல்ல. ஒரு நாளைக்கு ஒரு முட்டை, ஒரு டம்ளர் பாலுக்கு ஆகும் செலவை ஏத்துக்க எத்தனையோ முதலாளிகள் கிட்ட கெஞ்சினேன். எல்லோருமே கோடிக்கணக்குல பணம் வச்சிருக்கவங்க. பத்து குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இருபது ரூபா கொடுக்க மனசு வரல. என்னாலயும் முடியல. ரெண்டாவது முறையா என் லட்சியம் உடைஞ்சது. எவ்ளோ திறமையான பசங்க தெரியுமா? அடித்தட்டு சமூகத்துல கண்டெடுத்தா, சீனாவோட போட்டிப் போட்டு இந்தியாவும் மெடல் வாங்கும். ஆனா இங்க பணக்காரங்களுக்கும், மேல்சாதிக்காரங்களுக்கும்தான் வாய்ப்பு கிடைக்குது.

விளையாட்டுக்கு குறிப்பா தடகளத்துக்கு உடல் உழைப்பு தேவை. அதுக்கு யார் தயாரா இருப்பாங்க? பணக்காரங்க யாரும் கஷ்டப்பட தயாரா இருக்க மாட்டாங்க. பிறப்புல இருந்து எல்லாமே கஷ்டமாவும் சவாலாவும் இருக்குற ஏழைகளும், எஸ்.சி. மக்களும்தான் தடகளத்துல சாதிக்க முடியும். அவங்களை கண்டுபிடிக்கவோ, பயிற்சி கொடுக்கவோ, ஊக்கப்படுத்தவோ யார் இருக்கா? 35 ஆயிரம் கோடி சுருட்டினவங்களுக்கு, கிராமங்களுக்கு போய் திறமையானவங்களை தேடி கண்டுபிடிக்க ஆர்வமிருக்குமா? ஒரு குட்டி ஆப்பிரிக்க நாடுகூட ஒலிம்பிக்ல மெடல் வாங்குது. ஆனால், இத்தனை கோடி மனித வளமும் இங்க வீணாகிட்டிருக்கு.

காரணம், மேல இருந்து கீழ வரை இங்க எதுவுமே சரியில்ல. எல்லாமே ஊழல். அதனாலதான் கிரிக்கெட் இங்க வாழுது. பணக்கார, மேல்தட்டு விளையாட்டான கிரிக்கெட்ல ஏன் இதுவரையிலும் ஒரு எஸ்.சி.கூட வரல? திறமைக்கு அதுல வேலையில்ல. ஒரு பந்து ஒரு ரேட்னு நிர்ணயிச்சு சூதாடுறாங்க. காசு புழங்குது. அதனாலதான் இவ்ளோ விளம்பரமும், புகழும். 110 கோடி இந்தியர்களும் இந்த சூதாட்டத்துக்குதான் அடிமைப்பட்டு கிடக்காங்க. யாரை, என்ன சொல்றது? இந்த நாட்டுல எதுவுமே சரியில்ல.''

ஒலிம்பியா அகடெமியை மூடிய கையோடு, ஒப்பந்தப் பயிற்சியாளர் பணியையும் விட்டு விலகினார் சாந்தி. மீண்டும் தனிமை அவரை ஆட்கொண்டது. விளையாட்டுத் துறையிலேயே அரசு வேலைக்காக அலைந்து திரிந்தார். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் வெறும் செய்தியாகவே கடந்து போனது, சாந்திக்கு. தங்கம் வென்றதையும், பாலினச் சோதனை முடிவுகளையும் ஒரு செய்தியாகவே படித்து மடித்து வைத்தது இந்த சமூகம். அந்த செய்திக்குள் சுருங்கி சுருண்டு கிடப்பது ஓர் உயிர் என்ற உண்மையை இன்று வரையிலும்கூட எவரும் உணரவில்லை. இந்த நிலையில்தான் தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தார் சாந்தி. அப்போதும், அதுவொரு செய்தியாகத் தோன்றி செய்தியாகவே மறைந்தது.

சாந்தி : “இந்த நாடு மொத்தமா என்னை ஒதுக்கி வச்சிடுச்சு. வாழ்றதுக்கு என்ன பிடிப்பு இருக்கு சொல்லுங்க? யாரும் எனக்கு வேலை கொடுக்க மாட்டேங்குறாங்க. உயிரைக் கொடுத்து ஓடி, எத்தனை பதக்கங்களை கொண்டு வந்து கொட்டியிருக்கேன். அதுக்கெல்லாம் மதிப்பே இல்லையா? கருணை அடிப்படையிலயாவது வேலை கொடுங்கனு ஒரு அதிகாரிகிட்ட கேட்டதுக்கு, கருணை அடிப்படையில வேலை கொடுக்குறதுக்கு, உங்க வீட்ல யாராவது செத்தா போயிட்டாங்கன்னு கேட்டார். உங்களுக்கு கருணை வர்றதுக்கு, எங்க வீட்ல யாராவது சாகணுமா? கொலைக் குற்றவாளிகளுக்கு கருணை அடிப்படையில தண்டனை குறைக்கப்படுது. நான் என்ன தப்பு செஞ்சேன்? வேஷம் போட்டு கொள்ளை அடிக்கிறவங்களுக்குதான் இங்க மரியாதை. இந்த நாட்டுல வாழப் பிடிக்கல, இந்த உலகத்துல இருக்க முடியல.

கொண்டாட எதுவுமே இல்லாத வாழ்க்கையில, என்னோட முதல் சந்தோஷமா இருந்தது விளையாட்டுதான். முதல் விருப்பம், கனவு, லட்சியம், நிம்மதி, நிறைவு எல்லாமே விளையாட்டுதான். அதோட எனக்கு இருந்த தொடர்பு தடயமே இல்லாம அழிஞ்சிருச்சு. இனிமேல் போட்டிகளில் என்னால் கலந்துக்க முடியாது. கலந்துகிட்டாலும் இன்னொரு முறை சர்ச்சை கிளம்பினா, யாரும் எனக்கு துணை நிற்கப் போறதில்லை. மறுபடியும் நான் செத்துதான் போகணும். சாகிறவரை ட்ராக்லயே இருக்கணும்கிறது ஒண்ணுதான் எனக்கு மிச்சமிருக்கிற ஆசை!''

சொந்த நாட்டு மக்களையே அகதிகளைப் போல உணர வைக்கும் வல்லமை கொண்ட ஜனநாயகம், சர்வாதிகாரத்தைவிட கொடியது. ஏனெனில், அறிவிக்கப்பட்ட சர்வாதிகாரம் வெளிப்படையானது. இந்திய ஜனநாயகத்தைப் போல அது சோசலிசம், இறையாண்மை, அகிம்சை என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு மக்களைப் பாகுபடுத்தி துன்புறுத்துவதில்லை. இங்கு சாந்தியின் நிலை தனிப்பட்டதல்ல. ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு உள்ளமும் இப்படித்தான் நொறுக்கப்படுகிறது. இப்படித்தான் துவண்டு கிடக்கிறது.

தனிநபர்களுக்கு இப்படி ஓர் அநீதி நிகழும்போது – தலித் இயக்கங்கள் துணை நின்றிருக்க வேண்டும், பெண்கள் இயக்கங்களும், பெண்ணியவாதிகளும் அரவணைத்திருக்க வேண்டும். சாந்தி அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிடாமல், பாகுபாட்டை எதிர்க்கும் பகுத்தறிவுச் சமூகம் பாதுகாத்திருக்குமானால், அந்த ஆதரவு ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட உள்ளத்திற்குள்ளும் புதிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கும்.

வன்கொடுமைகள் எப்போதும் உதிரம் கொட்டக் கொட்ட நடப்பதில்லை. மிக நுட்பமாகவும் அவை நடந்து முடிகின்றன, சாந்திக்கு நிகழ்ந்ததைப் போல. நல்லதோ, தீயதோ சாதிய சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு என்ன நடந்தாலும் அதை ஒட்டுமொத்தமாக நிகழ்ந்ததாகவே நாம் உணர்ந்தாக வேண்டும். சாந்தியின் வெற்றிகளை கொண்டாடியும், அவரது துயரங்களைத் தாங்கியும் துணை நிற்க வேண்டிய பொறுப்பை நாம் கைவிட்டதால், இன்று அவர் ஓர் அகதியைப் போலவும் குற்றவாளியைப் போலவும் ஒதுக்கப்பட்டிருக்கிறார்.

தனித்த முயற்சியால் வெற்றியின் சிகரங்களில் ஏறிக் கொண்டிருந்த பெண், சரிந்து விழும்போது தாங்கிப் பிடிக்காமல் நொறுங்க வைத்ததற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். இன்னொரு முறை சாந்தியோ, சாந்தியைப்போல இன்னொருவரோ காயப்படாமல் இருக்க – அநீதிகளுக்கு எதிரான நம் குரல் ஆதிக்கவாதிகளுடையதை விடவும் வீரியமிக்கதாக ஒலிக்க வேண்டும். சாதி ஒழிப்புப் போராளிகள் மட்டுமல்ல, சாந்தியைப் போன்ற அடையாளங்களும் சமூக விடுதலையின் குறியீடுகளே. இப்புரிந்துணர்வு மட்டுமே நம் குரலை ஒருங்கிணைத்து ஓங்க வைக்கும்!

Pin It