"இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, போர்களில் வெல்வது எப்படி என்பது குறித்து ஒரு நூல் எழுத வேண்டும். ஏனெனில், ராஜபக்சேயின் கோட்பாடு வெகு எளிமையானது. அதில் மூன்று முக்கிய விதிகள் இருக்கின்றன. முதலாவதும் முக்கியமானதுமான விதி : போரை சாட்சிகளின்றி நடத்து; ஊடகங்கள், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் எட்டாத அளவில் இருப்பதை உறுதிப்படுத்து. இரண்டாவது விதி : ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடு; எந்த சட்டதிட்டங்களோ, உலகளாவிய விதிமுறைகளோ அவர்களை கட்டுப்படுத்தாதவாறு பார்த்துக் கொள். மூன்றாவது விதி : சாட்சிகளே இல்லாத நிலையில் மனித உரிமை மீறல்களைப் பற்றிக் கவலைப்படாதே.''
– பி.சி. வினோஜ் குமார் ‘தெகல்கா' இதழில் எழுதியுள்ள செய்திக் கட்டுரை ஒன்றில்
மருத்துவர்களைக் காப்பாற்றுக!
கடும் போர் நடைபெற்ற இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் மே 15 வரை காயமுற்றவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வந்த மருத்துவர்களான டி. சத்தியமூர்த்தி, வரதராஜா மற்றும் சண்முகராஜா ஆகியோரை – இலங்கை அரசு கொழும்பில் பயங்கரவாதிகளை விசாரிக்கும் பிரிவில் அடைத்து வைத்திருக்கிறது. இவர்கள் மூவரும் இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மருத்துவர் வரதராஜா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற நடவடிக்கைகளைப் பார்த்த இவர்கள்தான் தற்பொழுதுள்ள முக்கிய சாட்சிகள். எனவே இவர்கள் வெளியில் இருந்தால் உலகச் சமூகத்திற்கும், ஊடகங்களுக்கும் பொது மக்கள் மீதான ராணுவத்தின் அத்துமீறல்களை சொல்லிவிடுவார்கள் என்பதால் இவர்களை மறைத்து வைத்திருக்கிறது. இம்மூன்று மருத்துவர்களையும் பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' உலகளவில் பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறது. உயிர் காக்கும் மருத்துவர்களின் உயிர் காக்க நாமும் தீவிரமாக செயல்பட வேண்டும். விரிவான செய்திகளுக்கு பார்க்கவும் : www.amnesty.org
ஒவ்வொரு நிலையிலும் போராட்டம்
மும்பையில் உள்ள மாதா ராமாபாய் அம்பேத்கர் நகரில் 11.7.1997 அன்று, டாக்டர் அம்பேத்கர் சிலையை சில சாதி வெறியர்கள் அவமானப்படுத்தினர். இதைக் கண்டித்து கிளர்ந்தெழுந்த தலித்துகள் மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர், 26 பேர் படுகாயமடைந்தனர். இதற்குக் காரணமாக இருந்த காவல் துறை ஆய்வாளர் மனோகர் காதம் என்பவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை (7.5.2009) வழங்கியிருக்கிறது. அநீதி நடைபெற்று 12 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இவ்வழக்கை தாமதப்படுத்த பல்வேறு வழிகளில் மாநில அரசும், அரசியல்வாதிகளும் முயன்றனர். அரசுத் தரப்பு வழக்குரைஞரை நியமிக்க, அரசு நான்கு ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. அது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்கள் சட்டம் ஒழுங்கை குலைக்க முயன்றனர்; அந்தப் பகுதியையே சூறையாட முயன்றனர் என்றும், தலித்துகள் பொறுப்பற்றவர்கள் என்ற தோற்றத்தையே வழக்கு முடியும் வரை குற்றம் சொல்லிக் கொண்டே வந்தனர். பாதிக்கப்பட்ட எட்டுப் பேர் மீது சூறையாடல் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தலித்துகள், ஒரு எண்ணெய் லாரியை தீயிட திட்டமிட்டதாகவும், பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதாகவும் காவல் துறை சுமத்திய அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் நிராகரித்தது. தலித்துகள் தங்கள் கைகளில் கொடூரமான ஆயுதங்களை கொண்டு வரவில்லை என்றும், ஒரு பேருந்தை தாக்க முற்படும் போது கூட, அதில் இருந்த பயணிகளை கீழே இறங்கச் சொல்லியிருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு எவ்விதக் காயமும் விளைவிக்கவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. இவ்வழக்கு குறித்து கருத்து தெரிவித்த சிறப்பு வழக்குரைஞர் பி.ஜி. பான்சோடே, "இத்தீர்ப்பு நீதிக்காகப் போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி. இவ்வழக்கைப் பதிவு செய்யவும், சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் – ஒவ்வொரு நிலையிலும் போராட வேண்டியிருந்தது'' என்கிறார் (‘தி இந்து', 8.5.2009).
தாமதமாகாத நீதி!
தலித் மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெறும்போது, உயர் காவல் துறை அதிகாரிகள் வன்கொடுமை நடந்த அன்றே அவ்விடத்திற்குச் சென்று விசாரிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி அறிவித்திருக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வன்கொடுமை நிகழ்ந்த அன்றே நீதி கிடைக்குமாறு செய்தாக வேண்டும் என்றும், இது தொடர்பாக ஊடகங்களுக்கு உடனே தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். தலித்துகள் படுகொலை செய்யப் பட்டாலோ, தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாலோ, உடனடியாக டி.ஜி.பி. அப்பகுதியைப் பார்வையிட்டு அன்றே ஓர் அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி.க்கும், உள்துறை முதன்மைச் செயலருக்கும் முதல்வர் ஆணையிட்டுள்ளார். அதே நேரத்தில் போலிஸ் சூப்பிரண்டண்ட் தகுதிக்கு குறைவான பதவியில் இருப்பவர்களை, வன்கொடுமைப் பகுதிகளுக்கு அனுப்பக்கூடாது என்றும் 26.5.2009 அன்று நடைபெற்ற சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஒரே நாளில் அரசு அதிகாரிகள் (பெரும்பாலும் சாதி இந்துக்கள்) குறிப்பாக காவல் துறையினர், இவ்வாறு துரித நடவடிக்கை எடுப்பார்களா என்பதில் நமக்கு பெருத்த சந்தேகம் இருக்கிறது. ஆனால் ஒரு முதலமைச்சரிடமிருந்து தலித் சார்பாக இவ்வளவு கடுமையான ஆணைகள் பிறப்பிக்கப்படும்போதுதான் ஓரளவுக்காவது – அரசு நிர்வாகம் தங்களின் அலட்சியத்தையும் சாதியப் பார்வையையும் களைந்து செயலாற்றத் தொடங்கும் என்று நம்பலாம். நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பனர்களுடனான கூட்டணியில், தனது கட்சிக்கு ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவத்தாலோ என்னவோ, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலித்துகளின் பிரச்சனைகளைத் தீர்க்க சில அதிரடி முடிவுகளை முதல்வர் மாயாவதி எடுத்திருப்பது, மிகுந்த வரவேற்புக்குரியதுதான்! தலித்துகள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க, பிற மாநில அரசுகள் குறிப்பாக, இலவசங்களை கேட்காமலே கொடுக்கும் தமிழக அரசு, இப்பிரச்சனையில் தலித் மக்களைப் பாதுகாக்க முன்வருமா?
சிறைகளைவிட மோசம்!
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 1,300க்கும் மேற்பட்ட மாணவர் விடுதிகள் இயங்கி வருகின்றன. ஆனால் இவ்விடுதிகள் சரியான பராமரிப்பு இன்றியும், போதுமான அடிப்படை வசதிகளின்றியும் உள்ளன. எல்லா விடுதிகளிலும் கழிவறைகளும், குளியலறைகளும் மிக மோசமாக இருக்கின்றன. சென்னையில் உள்ள எம்.சி. ராஜா விடுதியில் 400 மாணவர்கள் தங்க வேண்டிய இடத்தில் 1000 மாணவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். ராயபுரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் உள்ள கலா என்ற மாணவி கூறுகிறார் : "நாங்கள் ஆடு, மாடுகளைப் போல ஓர் அறையில் அடைக்கப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு அறையிலும் குறைந்தது 20 பெண்கள் தங்குகிறோம்'' (‘தி இந்து', 20.4.09). ஆதிதிராவிடர் விடுதிகள் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவித்திருக்கும் சமூக ஆர்வலர் ஏ. நாராயணன், "ஒப்பீட்டளவில் ஆதிதிராவிடர் விடுதிகளைவிட சிறைகள் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன'' என்கிறார். உண்மைதான், ஆதிதிராவிடராகப் பிறந்தது ‘கிரிமினல்' குற்றம்தானே!
"கோட்சேயின் ஆதரவும் தேவை''
"மத்திய அரசு பலமான அரசாக இருக்குமானால், இலங்கையில் உள்ள தமிழ்ச் சகோதரர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதை ஏன் தடுக்கவில்லை? இந்த நாடே இயல்பாக தமிழர்களுக்காக கண்ணீர் விடுகிறது, வேதனைப்படுகிறது'' என்று ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலை குறித்து, தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த – ராஜபக்சேவின் உடன்பிறவா சகோதரன் நரேந்திர மோடி கண்ணீர் வடித்திருக்கிறார் (‘தினத்தந்தி' 10.5.09). அதே வாரத்தில் தீவிர ஈழப் பரப்புரையாளர் இயக்குநர் சீமான், ‘த சண்டே இந்தியன்' (17.5.2009) இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "எங்களைப் பொருத்தவரை தமிழ் ஈழத்தை கோட்சே ஆதரித்தால் அவரையும் ஆதரிப்போம்'' என்று கூறியிருக்கிறார். (அதே பேட்டியில் இன்னொரு அபத்தத்தையும் இந்த ‘பெரியாரிஸ்ட்' கூறியிருக்கிறார். ‘வேசி மகன் என்றெல்லாம் பேசலாமா?' என்ற கேள்விக்கு, அதற்காகத் தான் வருத்தப்படுவதாகக் கூறிவிட்டு, ஒட்டுமொத்த தமிழர்களும் வருந்தும்படி பதில் சொல்லியிருக்கிறார் : "அப்படிப் பார்த்தால் தீப்பொறி ஆறுமுகமும், வெற்றி கொண்டானும் வீட்டுக்கே போயிருக்க முடியாது. தந்தை பெரியார் காலம் முழுக்க சிறையில்தான் இருந்திருக்க வேண்டும். இவர்களின் பேச்சைக் கேட்டு வளர்ந்த பிள்ளை நான்'' (!) என்கிறார். இதைவிட பெரியாரை வேறு யாரும் கொச்சைப்படுத்திவிட முடியாது. இவர் பேசியதையும், வெற்றி கொண்டான் பேசியதையும், பெரியார் பேசியதையும் சமன்படுத்திக் கொள்கிறார். பெரியார் யாரையாவது ‘வேசி மகன்' என்று திட்டியிருக்கிறாரா? இந்து மதமும், பார்ப்பனர்களும், சாஸ்திரங்களும், சட்டமும் நம்மை ‘வேசி மகன்' என்று சொல்கிறதே என காலம் முழுக்க ஆத்திரப்பட்டவரை, நாலாந்தரப் பேச்சாளர்களுடன் ஒப்பிடுகிறார்! சீமானை ஆதரிக்கும் தமிழ்த்தேசிய / திராவிட / பெரியார் இயக்கங்களிடமிருந்து ஒரு சிறு கண்டனம்கூட வராதது வெட்கக்கேடானது)
மேலும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டங்களில் இல. கணேசனுக்கு தவறாமல் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது; ஆர்.எஸ்.எஸ். ‘தினமணி' ஈழத் தமிழர் இன்னல் குறித்து அர்ஜுன் சம்பத், ‘சூலம்' புகழ் தொகாடியா போன்றவர்களின் கண்டனங்களை நாள்தோறும் வெளியிட்டு பீப்பாய் பீப்பாயாக கண்ணீர் வடிக்கிறது; தமிழர்களிடையே சூலத்தை விநியோகித்த இந்த யோக்கியவான், அதை ஈழத்தமிழர்களிடையிலும் பரப்ப முயல்கிறார் என்பதைக்கூடவா தமிழர்களால் புரிந்து கொள்ள முடியாது? அது மட்டுமா, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தேர்தலின்போது பா.ஜ.க. மேடையில் பேசுகிறார்; அதை ஆதரித்து ‘இத்தாலிய குடிமகள் சோனியா காந்தி நாட்டை ஆளும்போது, ஒரு தமிழ் எம்.பி. இந்தியாவில் பிரச்சாரம் செய்யக் கூடாதா' என்று பழ. நெடுமாறன் கேள்வி எழுப்புகிறார் – இவையெல்லாம் ‘தமிழ் ஈழ'த்திற்கான விடுதலைப் பாதையாகத் தெரியவில்லை; ‘இந்து ஈழ'த்திற்கான ஆபத்தான பாதையாகவே தெரிகிறது. இதைப் பற்றியெல்லாம் மரத் தமிழர்களுக்கு கவலை இல்லாமல் போகலாம். ஆனால் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நேசிக்கிற நமக்கு ஆழ்ந்த கவலை இருக்கிறது.