மார்கழி மாதம் வந்தால் எப்படி நாய்களின் செய்கைகள் முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு செல்லுமோ, அதே போல மே மாதம் வந்தால் தமிழ்த் தேசியவாதிகள் என்ற போர்வையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு கும்பல் கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் வண்டை வண்டையாய் திட்டுவதை கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு வாடிக்கையான நடவடிக்கையாகவே வைத்திருக்கின்றது. ஏதோ கருணாநிதியும், அவரது குடும்பமும் சிங்கள அரசுக்கு நிதியும், இராணுவ உதவிகளையும் வழங்கி ஈழ மக்களை படுகொலை செய்யச் சொன்னது போல ஒட்டுமொத்த ஈழத் துயரத்துக்கும் அவரையே பொறுப்பாக்குவதன் மூலம் இன அழிப்புக்குக் காரணமான முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கத் துணை புரிகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் ஈழப் படுகொலை நடக்கும்போது பால்வாடி படித்துக் கொண்டிருந்த சிறுசுகள் எல்லாம் ஈழப் பிரச்சினையின் தலையும் தெரியாமல், வாலும் தெரியாமல் பேஸ்புக்கில் இன்று கம்பு சுற்றுவதுதான்.
உலகத்தில் வேறு எங்குமே இப்படி ஓர் அரசியல் கூத்தை செய்யும் கோமாளிக் கூட்டத்தைப் பார்க்க முடியாது. ஈழப் போர் உச்சத்தில் இருந்த போதே தமிழக மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் ஓட்டுப் போட்டார்கள் என்பதும், ஈழப் பிரச்சினை இங்கிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரிய அரசியல் அதிர்வலைகளை எல்லாம் ஏற்படுத்தும் அளவிற்கு அப்போதே வலிமையாக இல்லை என்பதும் தான் உண்மை. காரணம் மிக எளிமையானது. இங்கிருக்கும் தமிழ் மக்கள் ஈழத் தமிழர்களை ஈழத் தமிழர்களாகவே பார்த்தனர். அதுதான் சரியானதும் கூட.
முதலில் இலங்கை என்பது இந்தியாவைப் போன்று இறையாண்மை பொருந்திய ஒரு தனிநாடு என்பதையும், அங்கிருக்கும் மக்களுக்கு அது சிங்களவர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும் தன்னுடைய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் உள்ளது என்பதையும் அங்கீகரிக்க வேண்டும். யாரும் புரட்சியை ஏற்றுமதி செய்ய முடியாது. அந்த அடிப்படையில்தான் தமிழர்களை கொடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய சிங்களப் பேரினவாத அரசிற்கு எதிரான விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும் என்பதையும், அங்கே தமிழ் மக்களுக்குப் பதிலாக அதே இடத்தில் ஒருவேளை தமிழ்ப் பேரினவாத அரசு ஒன்று இருந்து சிங்களவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் நாம் நிச்சயம் சிங்களவர்கள் பக்கமே இருக்க வேண்டும் என்பதும்தான் சரியான மார்க்சிய வழியிலான நிலைப்பாடாகும்.
ஈழப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது என்பது அவர்கள் ஒடுக்கப்படும் தேசிய இன மக்கள் என்பதனால்தான், நிச்சயமாக அவர்கள் தமிழர்கள் என்பதற்காக அல்ல. இதில் முதலில் தெளிவு வேண்டும். ஈழத் தமிழ் மக்கள் ஈழ மண்ணின் மைந்தர்கள். அவர்கள் ஒரு தேசிய இனமாக அங்கு வாழ்கின்றார்கள். அதே போல இந்தியாவில் வாழும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இங்கு வாழ்கின்றார்கள். இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை மொழி மட்டுமே. ஆனால் மொழி மட்டுமே ஒரு தேசிய இனம் என்ற தகுதியைப் பெற போதுமானதல்ல. “ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு, மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகம்” என்று ஸ்டாலின் வரையறுக்கின்றார்.
அந்த அடிப்படையில் ஈழத் தமிழ் மக்கள் இலங்கையின் தேசிய இனமே ஒழிய இங்கு வாழும் தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவு அல்ல. அப்படி கட்டமைப்பது அவர்களை இலங்கையின் தேசிய இனம் என்ற தகுதியை இல்லாமல் செய்ய உதவுமே தவிர வேறு எதற்கும் உதவாது. ஆனால் இங்கிருக்கும் சில பிழைப்புவாதிகளும், அற்பவாதிகளும் திட்டமிட்டே ஈழத் தமிழ் மக்களை இங்கிருக்கும் தமிழக மக்களின் தொப்புள்கொடி உறவு, அதற்காக இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு உதவ வேண்டும், இல்லை என்றால் அவர்கள் எல்லாம் தமிழினத் துரோகிகள் என்ற பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்ததன் மூலம் ஈழத்தில் இயல்பாகவே உருவாகி இருக்க வேண்டிய சிங்கள - தமிழ் ஜனநாயக சக்திகளுக்கு இடையேயான பிணைப்பு உடைக்கப்பட்டு பெரும்பான்மையான சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிராகப் போகும் நிலையை ஏற்படுத்தி, விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். இன்று வரையிலும் அவர்கள் அதைத்தான் செய்து வருகின்றார்கள்.
திமுக என்ற மாநிலக் கட்சி ஈழத் தமிழர்களுக்கு உதவுவதும், உதவாமல் போவதும் அந்தக் கட்சியின் உரிமையாகும். ஒடுக்கப்படும் தேசிய இன மக்களின் விடுதலைக்குக் குரல் கொடுப்பதும், அதற்கு ஆதரவாக நிற்பதும் ஜனநாயக சக்திகளின் கடமை என்ற வகையில் கலைஞர் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்ய முடியும். அதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை இன்னொரு நாட்டின் பிரச்சினைக்காக பதவி விலகச் சொல்வதில் என்ன யோக்கியத் தன்மையோ அரசியல் தெளிவோ இருக்க முடியும்? ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆங்கிலம் பேசும் மக்கள் தான் இருக்கின்றார்கள். அமெரிக்க ஆங்கிலேயர்களின் தொப்புள்கொடி உறவு என்பது ஐரோப்பாதான். அதற்காக அமெரிக்காவின் பிரச்சினையை காரணம் காட்டி யாரும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளின் பிரதமர்களைப் பதவி விலக வேண்டும் என்று சொல்வதில்லை. அப்படி சொன்னால் சொல்பவனை பிடித்து மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுவார்கள்.
பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்போடு ஈழத்தில் நடத்தி முடிக்கப் பெற்ற இன அழித்தொழிப்பில் இந்தியாவின் கை இருந்தது என்பதும், காங்கிரஸ் அதில் முக்கிய பங்காற்றியதும் உண்மையே. அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் காங்கிரசின் இடத்தில் பாஜக இருந்திருந்தாலும் அதேதான் நடந்திருக்கும். ஈழத்தில் நடத்தி முடிக்கப் பெற்ற இன அழித்தொழிப்பு என்பது உலக முதலாளிகளின் மூலதனக் குவியலுக்காக நடத்தப் பெற்றதாகும். இவர்கள் சொல்வதுபோல திமுக - காங்கிரசு அரசைக் கவிழ்த்து இருந்தாலும், நிச்சயம் அங்கு நடத்தி முடிக்கப் பெற்ற இன அழித்தொழிப்பை யாரும் தடுத்து நிறுத்தி இருக்க முடியாது என்பதுதான் உண்மை.
இன்று கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார் என்று குற்றம் சாட்டும் நபர்கள் ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது பாஜவுக்கும், அதிமுகவுக்கும் ஓட்டுப் பிச்சை எடுத்ததையோ, இந்திய ஆளும் வர்க்கத்தின் மீது விடுதலைப் புலிகளுக்கு மயக்கம் ஏற்பட கங்கணம் கட்டிக் கொண்டு பரப்புரை செய்ததையோ யாரும் இன்னும் மறந்து விடவில்லை. இன்னும் சொல்லப் போனால் இன்று தமிழ்நாட்டில் பிரபாகரனின் பேரைச் சொல்லி பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பன கைக்கூலியின் கட்சி சார்பாக ஈழப் படுகொலைக்குப் பின்னர் ஐநாவின் டப்ளின் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையில், "ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTEயினர் பெற்றோரிடம் இருந்து பிடுங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTEயினர் செய்தனர். மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTEயினர் அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள். தப்பிக்கப் பார்த்த தமிழர்களை சுட்டுக் கொன்றனர்" என்றும் சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறிய அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்தது.
இன்று கலைஞருக்கு எதிராக வருடா வருடம் மே மாதமானால் கம்பு சுற்றப் புறப்படும் வீராதி வீரர்கள் இப்படி ஓர் அறிக்கையை ஐநாவில் தாக்கல் செய்த அந்த யோக்கிய சிகாமணி யார் என்று தவறியும் சொல்ல மாட்டார்கள். பார்ப்பன அடிவருடிகள் எல்லாம் ஒன்றுபடும் புள்ளி இதுதான். இந்தக் கும்பல் எப்படிப்பட்ட கும்பல் என்றால், ஈழத்துத் தமிழர்களை எல்லாம் தொப்புள்கொடி உறவு என்று சொல்லும், ஆனால் இங்கே சூத்திர சாதி வெறியர்களால் தலித்துகளின் குடிசைகள் கொளுத்தப்படும் போதும், சாதி ஆணவப் படுகொலை செய்யப்படும்போதும் அது எங்கோ வேறு நாட்டில் நடப்பது போல தனது நவதுவாரங்களையும் இறுக்கமாக மூடிக் கொள்ளும்.
இன்று ஈழத் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அவர்கள் மீள் குடியமர்த்தப்பட வேண்டும், சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்திட வேண்டும், தமிழ்க் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், தமிழர்களின் நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும், பாசிச ராஜபக்சே கும்பலுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை விரைந்து மேற்கொள்ள வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்றவற்றை வலியுறுத்துவதுதான் நேர்மையான செயலாக இருக்குமே அல்லாமல், சும்மா வெறுமனே கலைஞர் மீது குற்றம் சுமத்துவதல்ல. அப்படி சுமத்துபவர்களின் உண்மையான நோக்கம் அவர்களின் உள்ளத்தில் ஊறிப் போன பார்ப்பன அடிவருடித்தனம்தான்.
மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட வேண்டும் என்று சொல்வதுகூட அவர்கள் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் மக்கள் என்பதால்தான், நிச்சயமாக தமிழர்கள் என்பதற்காக அல்ல. அதே அளவுகோலோடுதான் நாம் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நடைபெறும் தேசிய இனப் போராட்டங்களையும் ஆதரிக்கின்றோம். அதுதான் சரியான நிலைப்பாடும்கூட...
- செ.கார்கி