தீண்டத்தகாத மக்களை இந்திய அரசியல் அரங்கிற்கு கொண்டு வருவதிலும் - இந்திய ஜனநாயகத்திற்கு அடித்தளமிடுவதிலும் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு - 2

காந்தி, வல்லபாய் பட்டேல், ஜவகர்லால்நேரு மற்றும் சர். பிரபாசங்கர் பட்டானி ஆகியோர் சிம்லாவில் வைஸ்ராயை சந்தித்தனர். இந்த சந்திப்பில் கருத்து வேறுபாடுகள் எல்லாம் சமரசம் செய்யப்பட்டன. லண்டன் செல்வதற்காக, விரைவில் கப்பலைப் பிடிப்பதற்காக காந்தி பம்பாய் புறப்பட்டுச் சென்றார். சரோஜினி நாயுடு, பண்டிட் மாளவியா மற்றும் தன் பரிவாரங்களுடன் காந்தி, ஆகஸ்டு 29 இல் கப்பலில் லண்டனுக்குப் பயணமானார். 1931 செப்டம்பர் 12 இல் லண்டன் சென்றடைந்தார்.

வட்டமேசை மாநாட்டின் இரண்டாவது கூட்டத்தொடர், 1931 செப்டம்பர் 7 இல் தொடங்கியது. இம்முறை மாநாட்டில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சர் முகம்மது இக்பால் - முஸ்லிம் லீக் தலைவர், டாக்டர் எஸ்.கே. தத்தா - கிறித்துவப் பிரதிநிதி, பி.டி. பிர்லா - பெரும் நிதியாளர், பண்டிட் மாளவியா - ஒரு சனாதன சீர்திருத்தவாதி, சரோஜினி நாயுடு - இந்தியாவின் இசைக்குயில், சர். அலி இமாம் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். இந்தக்கூட்டத் தொடரின் தனிச்சிறப்பு அம்சம் - உடனடியாகப் புரிந்து கொள்ள முடியாத தன்மையை உடைய காந்தி - இதில் பங்கேற்றதாகும். வட்ட மேசை மாநாட்டின் முதல் கூட்டத்தொடர், டென்மார்க் இளவரசர் இல்லாத "ஹாம்லெட்'டாக இருந்தது.

மாநாடு தொடங்குவதற்கு சிறிது முன்பாக, பிரிட்டனில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தொழிற்கட்சி அரசு மாற்றப்பட்டு, ஒரு தேசிய அரசு பதவிக்கு வந்தது. பிரதமர் ராம்சே மெக்டொனால்டு முன்பு போலவே தொடர்ந்து பதவியில் இருந்தார். இந்தியத்துறை அமைச்சர் வெட்ஜ் வுட் பென்னுக்கு பதிலாக சர் சாமுவேல் ஹோர், அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார். சர்ச்சில் போன்ற "கன்சர்வேடிவ்' தலைவர்கள் இந்தியாவுக்கு உத்தேச அதிகார மாற்றத்தைக் கடுமையாக எதிர்த்தனர். வட்டமேசை மாநாட்டின் முதன்மைப் பணி பெடரல் கட்டமைப்புக் குழுவிலும், சிறுபான்மையோர் குழுவிலும் நடைபெற வேண்டியிருந்தது.

வட்டமேசை மாநாட்டின் முதலாவது கூட்டத் தொடரின் இணையொத்த குழுக்கள் தயாரித்த அறிக்கைகளை, மாநாடு ஆய்வு செய்து விரிவாக்கம் செய்ய வேண்டும். 1931 செப்டம்பர் 15இல் காந்தி மாநாட்டில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அனைத்து இந்திய நலன்களையும், வர்க்கங்களையும் காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று அவர் உரிமை கொண்டாடினார். காங்கிரஸ், முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஏனெனில் முஸ்லிம்கள் அதன் தலைவர்களாக இருந்துள்ளனர்; முஸ்லிம்கள் அதன் செயற்குழு உறுப்பினர்களாகவும் உள்ளனர் என்று அவர் மாநாட்டில் கூறினார். அது, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஏனெனில், தீண்டாமையை ஒழிப்பது, காங்கிரசின் அரசியல் கொள்கைகளில் ஒன்றாகும்.

காங்கிரஸ் சுதேச சமஸ்தானங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எவ்வாறெனில், “தற்பொழுதும்கூட, அவற்றின் சொந்த மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் எத்தகைய தலையீடும் செய்யாமல், இந்திய மன்னர்களுக்கு அது சேவை செய்ய முயல்கிறது'' என்று காந்தி மன்னர்களைப் பார்த்துக் கூறினார். காங்கிரஸ் பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று கூறிய காந்தி, ஏனெனில் டாக்டர் அன்னிபெசன்ட், சரோஜினி நாயுடு போன்ற பெண்கள் அதனுடைய தலைவர்களாக இருந்து வந்துள்ளனர். அவர் காங்கிரசின் ஒரே பிரதிநிதியாக வந்திருப்பதால், அவரே இந்திய நாட்டின் ஒரே பிரதிநிதியாகவும் இருந்தார் என்றாகிறது!

காந்தியின் இந்த உரையிலிருந்து, எந்தத் திசையில் காற்றடிக்கிறது என்பதை டாக்டர் அம்பேத்கர் உணர்ந்தார்.அதே நாளில் அவரும் முதல் உரையை நிகழ்த்தினார். பெடரல் கட்டமைப்புக் குழு, சமஸ்தானம் விரும்புவதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு வழங்கிவிட முடியாது என்று அவர் மன்னர்களிடம் கூறினார். இதைக் கேட்டதும் உடனே பிகானீர் மகாராஜா பேசுவதற்கு எழுந்தார். சமஸ்தானங்கள் ஒரு வெற்றுக் காசோலையில் கையெழுத்திட முடியாது என்று அவர் பதில் கூறினார்.

டாக்டர் அம்பேத்கர் தனதுகருத்தை வலியுறுத்துகையில், ஒரு சமஸ்தானம் சமஷ்டியில் இணைவதற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு,அது தனது குழு மக்களுக்கு ஒரு நாகரிகமான வாழ்க்கையை வழங்குவதற்குத் தேவையான வளங்களும், திறனும் உடையது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார். பெடரல் பேரவைக்கான சமஸ்தானங்களின் பிரதிநிதிகள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; நியமனத்தின் மூலம் அல்ல என்பதுதான் டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த முக்கிய நிபந்தனை. நியமனமானது நிர்வாகத்தை சட்டப்பேரவைக்குப்பொறுப்பற்றதாக்கிவிடுகிறது. சட்டப் பேரவை பெரும்பான்மை ஆட்சி அடிப்படையில் இயல்பாகச் செயல்பட்டு வருவதாக, வெளி உலகத்திற்கு ஒரு பொய்யான தோற்றத்தைக் கொடுக்கிறது என்பது, அவருடைய உறுதியான கருத்தாகும்.

நியமனக் கோட்பாடு, பொறுப்பாட்சிக்கோட்பாட்டுக்கு எதிரானதாகும். சிறப்புப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற நிலப்பிரபுக்களின் கோரிக்கையைப் பொருத்தவரையிலும், அவர்களுக்கு சிறப்புப் பிரதிநிதித்துவம் கொடுக் கக் கூடாது. ஏனெனில் அவர்கள் வைதிகர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்தின் நற்பயன்களைத் தோற்கடித்து விட்டார்கள் என்று அவர் கூறினார். சமஸ்தானங்களில் உள்ள மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நிகழ்த்தப்பட்ட முதலாவதும் சிறந்ததுமான உரை இதுவேயாகும் என்பது வெளிப்படை.

அம்பேத்கரின் இந்த வலுவான கருத்துகள் -சமஸ்தான மன்னராட்சி முறைக்கும், நிலப்பிரபுக்களுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் ஓர் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதன் விளைவு என்னவெனில், மாநாட்டில் பேசியவர்கள் ஒவ்வொருவரும் தமது உரையின் ஏதாவது ஒரு பகுதியில் டாக்டர் அம்பேத்கரின் உரையை மறுத்தோ, ஆதரித்தோ பேசினர். ஏனெனில், அவர்களில் பெரும்பான்மையினர் அவருடைய கருத்துகள் தீவிரமானவையாகவும் புரட்சிகரமானவையாகவும் இருப்பதாகக் கருதினர்.

அடுத்த நாள் காந்தி தனது கருத்துகளைக் கூறினார். வட்டமேசை மாநாட்டுப் பிரதிநிதிகள், தேசத்தினால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அல்ல. மாறாக, பிரிட்டிஷ் அரசினால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்றார் அவர். லண்டனுக்குப் புறப்படுவதற்கு முன்னால் காந்திக்கு இதுதெரியாது என்பதல்ல. ஆனால், இப்பொழுது அவர் பிரதிநிதிகளை கிண்டல் செய்து சினமேற்றத் தொடங்கினார். சமஷ்டி சட்டப் பேரவையில் சமஸ்தானங்களின் பிரதிநிதிகளைப் பற்றிய டாக்டர் அம்பேத்கரின் கருத்துகளைப் பொருத்தவரை, பொதுவாகக் கூறும் போது, தனது பரிவு டாக்டர் அம்பேத்கரின் பக்கம்தான் என்ற அதே நேரத்தில், தனது மனம் கேவின்ஜோன்ஸ் மற்றும் சர் சுல்தான் அகமது பக்கம்தான் என்று காந்தி கூறினார்.

அந்த இருவரும் மன்னர்களின் காந்தி ஆதரவை எதிரொலித்தனர். சமஷ்டிக்கான அறிவிக்கைக்கு காந்தி ஆதரவு கொடுத்தார். அதே நேரத்தில், சமஸ்தான மக்களுக்கு எதிராக, மன்னர்களின் கருத்து நிலைக்கு ஆதரவு கொடுத்தார். “சமஸ்தானங்களுக்கு அவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கூறுவதற்கு, இங்கு நமக்கு உரிமையில்லை என்று பணிவுடன் நான் கூறுகிறேன்!''

பின்னர் காந்தி, பிரதிநிதிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்த அச்சாணியான பிரச்சினைக்குத் திருப்பினார். வெவ்வேறு சமூகங்கள் கோரி வந்த சிறப்புப் பிரநிதித்துவப் பிரச்சினையைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் இவ்வாறு கூறினார்: “இந்து - முஸ்லிம்- சீக்கியர் சிக்கலுக்குத் தனி தீர்வு காண வேண்டுமென்பதை காங்கிரஸ் ஒப்புக் கொண்டுள்ளது. அதற்கு சொல்லத்தக்க வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. ஆனால், அதை எந்த உருவத்திலும் வடிவத்திலும் காங்கிரஸ் விரிவுபடுத்தாது. சிறப்பு நலன்களின் பட்டியலை நான் காது கொடுத்துக் கேட்டேன். தீண்டத்தகாதவர்களைப் பொருத்தவரை, டாக்டர் அம்பேத்கர் என்ன கூறுவதற்கு விரும்புகிறார் என்பதை என்னால் இன்னும் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும், தீண்டத்தகாதவர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் டாக்டர் அம்பேத்கருடன் காங்கிரஸ் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளும். தாழ்த்தப்பட்டவர்களின் நலன்கள், இந்தியா முழுவதிலும் உள்ள வேறு எந்தப் பகுதி அல்லது எந்தத் தனி நபரின் நலன்களைப் போன்றே நேசிக்கத்தக்கதாகும். எனவே, மேற்கொண்டு எந்த சிறப்புப் பிரதிநிதித்துவத்தையும் நான் மிகவும் வன்மையாக எதிர்க்கிறேன்.

இது, தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக, காந்தியாலும், காங்கிரசினாலும் செய்யப்பட்ட போர்ப் பிரகடனம் அன்றி வேறொன்றுமில்லை. “திரு. காந்தி இப்படியொரு பிரகடனத்தை செய்துள்ள நிலைமையில், இந்தப் பிரச்சினை மீதான விவாதத்திற்கு முக்கிய அரங்காகிய சிறுபான்மையோர் குழுவில் திரு. காந்தி என்ன செய்வார் என்பதை நான் அறிவேன்'' என்று அம்பேத்கர் மேலும் கூறினார். செப்டம்பர் 18 இல் சமஷ்டிக் கட்டமைப்புக் குழுவில் அம்பேத்கர் எழுந்து, பெடரல் சட்டப்பேரவை மற்றும் பெடரல் நிர்வாகக் குழுவின் அமைப்பு தொடர்பாக, காந்தி முன்வைத்த கருத்துகள் அவருடைய சொந்தக் கருத்துகளா என்று கேட்டார். திவான் பகதூர் ராமசாமி முதலியார் எழுந்து, அரசியல் துறையாக அமைந்துள்ள அரசு ஊழியர்கள் - இந்தியாவிலோ வெளியில் வேறு எங்கேயுமோ, வேறு எந்த அரசு ஊழியர்களைப் போன்றோ மனசாட்சி பூர்வமாகவும் நியாயமாகவும் செயல்படுகின்றவர்களேயாவர் என்றார். டாக்டர் அம்பேத்கர் உடனே, அப்படியென்றால், பின்னர் ஏன் அவர் பொறுப்பாட்சி வேண்டுமென்று விரும்பினார் என்று கேட்டார்.

தனது உரையில் பண்டிட் மாளவியா, பொறுமையாக இருக்கும்படியும் மன்னர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டுமென்றும்கேட்டுக் கொண்டார்.மேலும் அனைத்து செல்வாதாரங்களையும் அரசு பயன்படுத்தி, மக்களிடையே தொடக்கக் கல்வியை ஊக்குவிப்பதற்குப் போதிய நிதியை செலவிட்டிருந்தார். தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் என்ற சொல், இதற்குள் வரலாற்றுப் பழங்கதையாகியிருக்கும் என்று அவர் உறுதியாகக் கூறினார்.

உடனே டாக்டர் அம்பேத்கர், தன்னுடைய சொந்த விஷயத்தையே சுட்டிக் காட்டி - தான்கல்வி கற்றவனாக இருந்த போதிலும், தான் இன்னும் ஒரு தீண்டத்தகாதவனாகவே இருப்பதாகக் குறிப்பிட்டார். தனது உரையில் சர். அக்பர் ஹைதர், டாக்டர் அம்பேத்கருக்குப் பதிலளிக்கையில், “டாக்டர் அம்பேத்கருடையதைப் போன்ற சொற்பொழிவுகள், நிலைமையின் எதார்த்தங்களைப் போதிய அளவு புரிந்து கொள்வதில்லை'' என்றார். இதற்கு பதிலளிக்கையில், “எதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொள்ளாத குற்றத்தை நான் ஒருபோதும் செய்ததில்லை'' என்றார் அம்பேத்கர்.

சமஷ்டிக் கட்டமைப்புக் குழுவில் இந்த விவாதங்களின் போது, மோதல்களும் கருத்துப் பரிமாற்றங்களும், உலகின் அரசியல் சாசன வரலாறு பற்றிய பரிசீலனையையும், சுதந்திர இந்தியா பற்றிய கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்றன. அந்தப் பொருள்கள் மீதான டாக்டர் அம்பேத்கரின் உரைகள் - எண்ணற்ற தகவல்களையும், அக்கறையையும், மதிப்பு மிக்க ஆலோசனை களையும் கொண்டதாக இருந்தது. அரசியல்வாதி, பாரிஸ்டர், அரசியல் சட்டநிபுணர், பேராசிரியர், கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களின், சமஸ்தான மக்களின் நண்பன் என்ற வகையில் அம்பேத்கர், தனது ஆழ்ந்த கல்வி அறிவின் பல்வேறு முகங்களுடன் மாநாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இப்பொழுது 1931 செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரம் முடிவிற்கு வந்திருந்தது. சிறுபான்மையோர் குழு தனது பணியை செப்டம்பர் 28 இல் தொடங்குவதாக இருந்தது. இந்த மாநாடு தொடங்கவிருந்த தருணத்தில், காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி, டாக்டர் அம்பேத்கரை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். சரோஜினி நாயுடுவின் வீட்டில் காந்திக்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் இடையில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி டாக்டர் அம்பேத்கர் காந்தியை சந்தித்து, தனது கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால் காந்தி அது குறித்து மனம் திறந்து பேசவில்லை. மற்றவர்கள் ஒத்துக் கொண்டால், டாக்டர் அம்பேத்கரின் கோரிக்கைகளுக்குத் தானும் இசைவு தெரிவிப்பதாகக் கூறினார்.

1931, செப்டம்பர் 28 இல் சிறுபான்மையோர் குழு, முதன்முறையாகக் கூடியது. இந்தியாவில் சிறுபான்மையினரின் பிரச்சினை எல்லோரையும் திகைக்க வைத்துள்ளது என்று பிரதமர் கூறினார். பிரதிநிதிகள் தங்களுக்குள்ளாகவே உடன் பாட்டுக்கு வருவதற்குத் தவறிவிட்டதால், அரசு மத்தியஸ்தம் செய்து வைக்க வேண்டுமென்று சில பிரதிநிதிகள் ஆலோசனை கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் மத்தியஸ்தத்தை ஒருவேளை அவர்களில் சிலர் ஏற்றுக் கொள்ளாமல் போகக்கூடும் என்று அவர் கருதினார். இதைக் கேட்டதும் ஆகாகான், அன்று இரவு காந்தி முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்கவிருக்கிறார், எனவே கூட்டத்தை ஒத்திப் போடலாம் என்று கூறினார். ஆகாகானின் யோசனையை ஆதரித்த மாளவியா, பொது விவாதத்தை ஒத்தி வைக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தார்.

இந்து - முஸ்லிம் உடன்பாடு தொடர்பாக, முஸ்லிம் தலைவர்களுக்கும் காந்திக்கும் இடையில் நடைபெற்று வரும் ரகசியப் பேச்சுகள் பற்றி அம்பேத்கர் தெரிவித்திருந்தார். எனவே, கூட்டத்தை ஒத்திப் போடவேண்டும் என்ற அறிவிக்கையைக் குறிப்பிட்ட அவர், “தாழ்த்தப்பட்ட வர்க்கங்களைப் பொருத்தவரை, எங்களுடைய கோரிக்கைகளை ஏற்கனவே கடந்த முறை சிறுபான்மையோர் துணைக் குழுவின் முன் அளித்துள்ளோம். நான் செய்வதற்கு எஞ்சியுள்ள ஒரே ஒரு விஷயம் என்னவெனில், வெவ்வேறு சட்டப் பேரவைகளில் நாங்கள் விரும்பும் பிரதிநிதித்துவ அளவை எடுத்துக் கூறும் ஒரு சிறிய அறிக்கையை இந்தக் குழுவின் முன்னால் அளிப்பதேயாகும்.''

வகுப்புவாதப் பிரச்சினையின் தீர்வுக்கு மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருப்பது அறிந்து தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக டாக்டர் அம்பேத்கர் கூறினார். அவர் மேலும் இவ்வாறு கூறினார் : “ஆனால் தொடக்கத்திலேயே இந்த விஷயத்தை மிக மிகத் தெளிவாகக் கூறுவதற்கு நான் விரும்புகிறேன். பேச்சுவார்த்தை நடத்துகின்றவர்கள், தாங்கள் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகளல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காந்தி அல்லது காங்கிரஸ்காரர்களின் பிரதிநிதித்துவத்தன்மை எதுவாக இருந்தபோதிலும் அவர்கள் எங்களைக் கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை. நிச்சயமாக இல்லை. இதை மிகவும் அழுத்தந்திருத்தமாக நான் இந்தக் கூட்டத்தில் கூறுகிறேன்.

தனது உரையின் முடிவில் ஓர் எச்சரிக்கையுடன் அம்பேத்கர் இவ்வாறு கூறினார் : “யார் அதிகப் பிரதிநிதித்துவம் கோரிய போதிலும், யார் அந்தப் பிரதிநிதித்துவத்தைக் கோரிய போதிலும், யார் அந்தப் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்குத் தயாராக இருந்த போதிலும் - அவர்கள் என்னுடைய பங்கிலிருந்து அதை கொடுக்கக் கூடாது, கொடுக்க முடியாது என்று மிகவும் அழுத்தந் திருத்தமாகக் கூறுவதற்கு நான் விரும்புகிறேன்.'' இதைக் கேட்ட மாநாட்டுத் தலைவர் மெக்டொனால்டு, “டாக்டர் அம்பேத்கரின் நிலை, அவருடைய வழக்கமான, உன்னதமான முறையில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள் ளது. அது குறித்து அவர் எவ்வித அய்யப்பாட்டுக்கும் இடம் வைக்கவில்லை'' என்றார்.

காந்தி அக்டோபர் 1ஆம் தேதியன்று மீண்டும் ஒரு வார கால ஒத்திவைப்பைக் கேட்டார். முஸ்லிம் தலைவர்களின் பல்வேறு குழுக்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். இதைக் கேட்டதும் டாக்டர் அம்பேத்கர் எழுந்து, அத்தகைய உடன்பாட்டை எட்டுவதற்கு இடையூறாக எந்தச் சிக்கலையும் உருவாக்கத்தான் விரும்பவில்லை என்றும், ஆனால் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள், அந்த சடங்குப் பூர்வமான குழுவில் பிரதிநிதித்துவம் பெறுவார்களா, இல்லையா என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். காந்தி இதற்கு சாதகமான பதிலளித்தார். இதற்காக டாக்டர் அம்பேத்கர் காந்திக்கு நன்றி கூறிவிட்டு, பிரதிநிதிகள் பக்கம் திரும்பி இவ்வாறு விளக்கினார் :

“சமஷ்டிக் கூட்டமைப்புக் குழுவில் முதல் நாளன்று காந்தி பேசுகையில், இந்திய தேசியக் காங்கிரசின் பிரதிநிதி என்ற வகையில், முஸ்லிம்களையும் சீக்கியர்களையும் தவிர, வேறு எந்த சமூகத்திற்கும் அரசியல் அங்கீகாரம் தருவதற்குத் தான் தயாராக இல்லை என்று கூறினார். ஆங்கிலோ - இந்தியர்கள், தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் மற்றும் இந்தியக் கிறித்துவர்களை அங்கீகரிப்பதற்கு அவர் தயாராக இல்லை. ஒரு வாரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரச்சினை பற்றி விவாதித்தபோதும், சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் என்ற வகையில் நேற்று அவருடைய அலுவலகத்தில் அவரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த பொழுதும், சமஷ்டிக் கட்டமைப்புக் குழுவில் தான் மேற்கொண்ட கண்ணோட்டம் முழுமையான, நன்கு சிந்திக்கப்பட்ட கண்ணோட்டமாகும் என்று மிகவும் தெளிவாக எங்களிடம் கூறினார் என்று கூறுவதின் மூலம் எந்த ஒழுங்கு முறையையும் மீறியதாக நான் நினைக்கவில்லை.'' 

- வளரும்

Pin It