காந்தியின் கபட வாதங்களை அம்பேத்கர் எப்படி எதிர் கொண்டார் என்பதை விளக்கி கழகத் தலைவர் கொளத்தூர் மணி அம்பேத்கர் பிறந்த நாளில் சேலத்தில் ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி:

இட ஒதுக்கீடு என்பதைகூட, பதவி பெறும் நோக்கத்திற்காக அம்பேத்கர் சொல்லவில்லை. அனைத்து சமுதாய மக்களுக்கும், ஆட்சியிலும், அதிகாரங்களிலும் பங்கு இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கு அவர் கொண்ட பொருள். அவர் சொன்ன முறையும், அவருக்கு பின்னால் வந்தவர்கள் அதை எடுத்துக் கொண்ட முறையும் வெவ்வேறாக இருக்கிறது. நவீனத்துவத்தின் எதிரியாக இருந்தவர் காந்தி. அவருக்கு எதிர்ப்பைக் காட்டுவதற்கான அடையாளமாக, மிடுக்கான உடையோடும், பெருமித தோற்றத்தோடும் அம்பேத்கர் இருந்தார்.

அது அவர் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. ஆனால், அவருக்கு பின்னால் வந்த தலைவர்கள் அவரை போல் உடைகளை, காலணிகளை அணிவதுதான் அம்பேத்கரியம் என்று கருதிக் கொண்டார்கள். அவர் ஆட்சி அதிகாரத்தை, அரசியல் அதிகாரத்தை சமூக விடுதலைக்கு ஒரு வழியாக மட்டும் வைத்திருந்தார். இப்போது இவர்கள் அதை முடிந்த முடிவாக ஒரே இலட்சியமாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள். சமுதாயத்தின் மீது அவர் வைத்த பார்வை என்னவாக இருந்தது என்பதில் இருந்துதான் அம்பேத்கரை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாட்டின் விடுதலை பற்றி பேசுகிறபோது, இந்திய விடுதலைக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு பெரியார் மீதும், அம்பேத்கர் மீதும் உண்டு.

காங்கிரசை எப்போதும் எதிர்த்து வந்த அம்பேத்கர், காந்தியும், காங்கிரசும் தீண்டதகாதவர் களுக்கு செய்தது என்ன? என்று ஒரு புத்தகமாக எழுதி, இந்த மக்களுக்கு காந்தியும், காங்கிரசும் செய்த துரோகங்களை பட்டியலிடுகிறார். பல வீடுகளின் முன்னால் நாய்கள் இருக்கிறது எச்சரிக்கை என்ற பொருளில் “பிவேர் ஆப் டாக்ஸ்” என்று எழுதியிருப்பதைப்போல், அந்த புத்தகத்தின் இறுதி அத்தியாயத்திற்கு முந்தைய அத்தியாயத்தில், “பிவேர் ஆப் காந்தி” என்ற தலைப்பை அம்பேத்கர் எழுதியுள்ளார்.

தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றத்திற்காக பல முயற்சிகள் எடுத்ததில் ஒன்றாகத்தான், 1930 ஆம் ஆண்டு வட்டமேசை மாநாட்டிற்கு சென்று பல செய்திகளை எடுத்து வைத்தார். காங்கிரஸ் அப்போது கலந்து கொள்ளவில்லை. 1931 ஆம் ஆண்டு தான் காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின்படி வட்டமேசை மாநாட்டில் காந்தி கலந்து கொள்கிறார். (உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி, இனி போராட்டம் நடத்த மாட்டோம் என்றும், வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்கிறேன் என்றும் போடப்பட்டதுதான் “காந்தி-இர்வின் ஒப்பந்தம்”)

1930 ஆம் ஆண்டு வட்ட மேசை மாநாட்டிற்கு செல் வதற்கு முன்னால் காந்தியை சந்தித்து பல விவாதங்களை செய்து, நீங்கள் ஏன் எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகமே செய்கிறீர்கள் என்று கேட்டு விட்டுத்தான் அம்பேத்கர் மாநாட்டிற்குப் போனார். அந்த மாநாட்டில் அம்பேத்கர் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரிட்டிஷ் பிரதமர், தாழ்த்தப்பட்ட வர்களுக்கு இரட்டை வாக்குரிமை தனித்தொகுதி உண்டு என அறிவித்தார். அப்படி கூடாது என்று போராடினார் காந்தி. இசுலாமியர் களுக்கும், சீக்கியர்களுக்கும் தனித் தொகுதியை ஏற்றுக்கொண்ட காந்தி, தாழ்த்தப்பட்ட வர்களுக்கு வழங்குவது, இந்துக்களை பிரிக்கும் சூழ்ச்சி என்றார். அம்பேத்கர் கேட்டார்... “இது வந்து தானா இந்துக்களை பிரிக்கப் போகிறது? நீங்கள் என்ன இணைத்தா வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எப்போதும் எங்களை அரவணைத்துக் கொண்டா இருக்கிறீர்கள்? எப்போதும் பிரிந்திருக்கிற நாங்கள், இப்போதும் பிரிந்திருந்து நாங்கள் பெறப் போகும் மேம்பாட்டை ஏன் தடுக்கிறீர்கள்?” என்று.

சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த காந்தியை பார்த்து அம்பேத்கர் கேட்டார்..... “நீங்கள் எப்போதாவது உங்களின் உச்சபட்ச கோரிக்கையான இந்திய நாட்டின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறீர்களா? எங்கள் உரிமையை பறிப் பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறீர்களே” என்று. “ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின்  உரிமைகளை விட, ஒரு காந்தியின் உயிர் பெரிதல்ல, உறுதியாக நில்லுங்கள்” என்று. அப்போது வெளி நாட்டில் இருந்த பெரியார் அம்பேத்கருக்கு தந்தி கொடுத்தார். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கண்மூடித் தனமான தாக்கு தல்கள் நடத்தப்பட்டதால் உரிமை களை விட்டுக் கொடுக்க நேர்ந்தது. தொடர்ச்சியாக காந்தியின் சூதான போக்கினை எதிர்த்து நின்ற தலைவர்கள் பெரியாரும் அம்பேத்கரும்.

இந்த சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள மக்களின் உரிமையைப் பற்றி, அவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை ஆய்வு செய்வதற்காக வந்ததுதான் சைமன் கமிஷன். அதை வரவேற்றவர்கள் இந்தியா முழுவதும் இரண்டே தலைவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் தான். எல்லோரும் எதிர்த்தார்கள். பெரியார் ஆதரித்து வந்த நீதிக் கட்சியும் எதிர்த்தது. அப்போது பெரியார் எழுதினார்...

“சைமன் கமிஷனில் இந்தியர்கள் யாரையும் நியமிக்கவில்லை என்ற காரணத்தைச் சொன்னார்கள். மிண்டோ மார்லி, மாண்டேகு சேம்ஸ்போர்டு வந்த போதெல்லாம் கேட்காமல், இப்போது மட்டும் ஏன் கேட்கிறாய்? ரவுலட் சட்டத்தை ரவுலட் மட்டுமா எழுதினான்? குமாரசாமி சாஸ்திரியும் சேர்ந்துதானே எழுதினான். அதனால் என்ன பலன் கிடைத்தது? அவன் வீட்ல நான்கு பேருக்கு வேலை கிடைத்தது. நல்லது வந்தா மட்டும் நீ ஏற்றுக் கொள்கிறாய். கெட்டது வந்தா வாயை மூடிக் கொள்கிறாயே. நல்ல வேளையாக இந்தியர்கள் யாரையும் நியமிக்கவில்லை. நியமித்திருந்தால் பார்ப்பானை தான் நியமித்திருப் பான். அவன் எங்களுக்கு எதிராகத்தான் இருந்திருப் பான். எனவே இதை நான் வரவேற்கிறேன்” என்று எழுதினார்.

இரண்டாம் உலகப் போரில், இந்தியப் படையை ஆங்கில அரசு போரில் ஈடுபடுத்தியது. இதனால் இந்தியர்களுக்கு என்ன லாபம் என்று கண்டித்து காந்தி அறிக்கை விட்டார். எப்போதும் காந்தியை எதிர்க்கும் அம்பேத்கர் அப்போது வரவேற்றார். காந்தியார் கேட்ட கேள்வியில் நியாயம் இருக்கிறது வரவேற்கிறேன், அதே சமயத்தில் காந்தியாரிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது.

இந்திய விடுதலைப் போரில் தாழ்த்தப்பட்டவர்களை ஈடுபடுத்து கிறீர்களே! அதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது என்று கேட்டார். அதைத்தான் இன்றும் சொல்கிறோம். தமிழ் தேசியம் பேசுகிற பல பேர் சிக்கல் இல்லாத பிரச்சினை என்பதற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாதி இல்லை என்று பேசினால்தான் சிக்கல் வரும். தமிழ் தேசியம் என்று சொன்னால் எந்த சிக்கல்களும் இல்லை. இந்திய நாட்டு விடுதலையின்போது அம்பேத்கர் கேட்டார். தமிழ்நாட்டிற்கு விடுதலை விரும்புகிற நாம் கேட்கிறோம், சாதி ஒழிப்பு இல்லாத தமிழ்நாட்டு விடுதலையில் நமக்கென்ன இருக்கிறது? சாதி ஒழிப்பை இலக்காகக் கொண்ட, அதை நோக்கமாகக் கொண்ட, அதை போராட்டத்தோடு இணைத்துக் கொண்ட தமிழ்நாட்டு விடுதலைக்கு நாம் போராடுவோம்.

பெரியார் கேட்ட தனித் தமிழ்நாடு, சாதி ஒழிந்த, பாலியல், பொருளியல் பேதமொழிந்த - பொது உரிமை கொண்ட பொதுவுடைமை சமத்துவ சமுதாயத்தைப் படைக்க வேண்டும் - தடையாகவே விளங்கும் பார்ப்பன, பனியா கும்பலிடம் இருந்து பிரிந்து, வடவர் சுரண்டலற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே பெரியார் கேட்ட தனிநாடு. சாதி ஒழிப்பே உண்மை விடுதலை என்பதை ஏற்றுக் கொள்வோம் என்று கூறி விடைபெறுகிறேன்.

Pin It