டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 1இல் இரண்டாவது பகுதியாக உள்ள மொழிவாரி மாநிலங்கள் குறித்த அவரது கட்டுரைகளை நாம் இங்கு பரிசீலிக்கலாம். இப்பகுதி மூன்று கட்டுரைகளைக் கொண்டுள்ளது. முதல் கட்டுரை 1948இல் மொழிவாரி மாநில ஆணையத்திற்கு அம்பேத்கர் அளித்த அறிக்கை. இரண்டாவது கட்டுரை, மொழிவாரி மாநிலங்கள் குறித்து "டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் 23.4.1953 அன்று அவர் எழுதிய கட்டுரை. மூன்றாவது கட்டுரை 1955 டிசம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில் அவர் எழுதியது சிறுநூலாக வெளிவந்தது. இவற்றுள் முதல் கட்டுரை இரண்டு விஷயங்களைப் பரிசீலிக்கிறது. அவை, 1. மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதில் உள்ள சாதக, பாதகங்கள் 2. பம்பாயை மொழிவாரி மாநிலமாக அமைப்பது தொடர்பான சிக்கலும் அதற்கு அம்பேத்கர் அளிக்கும் தீர்வும்.

மொழிவாரி மாநிலம் அமைப்பதால் விளையும் நன்மையாக, அது ஜனநாயகத்திற்கு தேவையான சமூக ஒருமிப்பு உருவாக்குவதை அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். இதற்கு மாறாக, சமூக ஒருமிப்பு இல்லாத பன்மைத் தன்மை கொண்ட சமூகத்தில் ஜனநாயகம் வெற்றியடைய முடியாது. காரணம், “அதிகாரம் பாரபட்சமின்றியும், தேவைக்கேற்பவும், எல்லாருடைய நன்மைகளையும் கருத்தில் கொண்டு பயன்படுத்தப் படுவதற்குப் பதிலாக, ஒரு பிரிவினர் கொழுக்கவும், பிற பிரிவினர் தீங்கடையும் வகையிலும் பயன்படுத்தப்படுவதுதான்'' என்றும் அவர் விளக்குகிறார். மொழிவாரி மாநிலங்கள் உருவாவதால் ஏற்படும் பாதகங்களாக அவர் குறிப்பிடுவது : 1. தங்களது இனம், மொழி, இலக்கியம் குறித்த பெருமித உணர்வுள்ள குழுக்களின் எண்ணிக்கைக்குத் தக்க அதிக அளவிலான தேசங்கள் உருவாவதற்கு மொழிவாரி மாநிலங்கள் காரணமாகி விடும். இது தொடர்பான விளைவுகளால் மய்ய அரசின் செயல்பாடு சாத்தியம் அற்றதாகி விடும்.

2. மொழிவாரி மாநிலங்கள் உருவாவது மய்ய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையில் அவசியமான நிர்வாக உறவுகளைப் பேணுவதற்கு சாவு மணி அடித்துவிடும். மொழிவாரி மாநிலங்கள் தங்கள் பகுதியின் மொழியை அலுவல் மொழியாக்கினால், இதனால் ஏற்படும் சிக்கல்கள், இந்தியாவின் சிதைவுக்கு வழிவகுக்கும். அதனால், மொழிவாரி மாநிலம் அமைக்க உடன்படும் அதே நேரத்தில், அம்மாநிலத்தின் மொழியை, அது தேசிய மொழியாக இல்லாத பட்சத்தில், அதை அலுவல் மொழியாக்க அனுமதிக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார். மாநில மொழிக்குப் பதிலாக ஒரு பொது மொழியை அலுவல் மொழியாக்குவது, அம்மாநில பண்பாட்டைப் பாதுகாப்பதற்கு இடைஞ்சலாக இருக்காது. அரசு நிர்வாகம் தொழிற்படும் இடங்களில் மட்டுமே அலுவல் மொழி பயன்படுத்தப்படும். பண்பாட்டு வெளி முழுவதும் மாநில மொழிக்கு உரியதாகவே இருக்கும் என்கிறார் அம்பேத்கர்.

பம்பாயை மொழிவாரி மாநிலமாக அமைப்பது தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டு அலசும் பகுதியை இனி காணலாம். பம்பாயை மொழிவாரி மாநிலமாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், அம்மாநிலத்தில் வாழ்ந்து வந்த குஜராத்திகள் ஆவர். குஜராத்திகளின் சார்பிலான வாதங்களை முன்வைத்தவர்கள் வாசில், தாண்ட் வாலா, கீவாலா ஆகிய பேராசிரியர்களாவர். அவர்கள் இரண்டு திட்டங்களை முன்வைத்தனர். அவற்றுள் முதலாவது திட்டம், பம்பாயை ஏற்கனவே இருப்பது போன்றே இரு மொழி பேசும் மாநிலமாக தொடர்ந்து நீடிக்க அனுமதிப்பது. இதற்கு, 1. “பல மொழியினர் வாழும் மாநிலமே சிறந்தது. சிறுபான்மை மக்களின் சுதந்திரத்திற்கு அதுவே ஆபத்து விளைவிக்காததாக இருக்கும். 2. மாகாணங்களை மறுவரையறை செய்வது, விவேகத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே ஒழிய, தேசிய இன அடிப்படையில் அல்ல'' என்று அவர்கள் சாக்குகளை முன்வைத்தனர்.

அவர்கள் முன்வைத்த இரண்டாவது திட்டம், பம்பாய் நகரத்தைத் தனியாகப் பிரித்து அதைத் தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதாகும். பம்பாய் எப்போதுமே மகாராட்டிராவின் பகுதியாக இருந்ததில்லை. பம்பாயின் வணிகத்தையும் தொழிலையும் உருவாக்கியவர்கள் அங்குள்ள குஜராத்தியர்களே ஆவர் என்பது போன்ற காரணங்களை தங்களின் வாதத்திற்கு ஆதரவாகக் கூறினர்.

குஜராத்தியர் முன்வைத்த இத்திட்டங்களை அம்பேத்கர் கடுமையாகச் சாடினார். பல மொழிகள் பேசும் ஒரு மாநிலம் தேசிய இனங்களின் முரண்களினால், மோதல்களினால் சிதறுண்டு போகும். மாகாணங்களின் எல்லைகள் என்பவை வெறும் நிர்வாக ரீதியிலான எல்லைகள் மட்டுமே. மொழி அடிப்படையில் மாகாணங்களை மறு வரையறை செய்த பின்னரும், மாகாணங்கள் பல்வேறு வகுப்புகளின் கூட்டுக் கலவையாகத் தான் இருக்கும். சிறுபான்மை வகுப்புகளின், இனங்களின் பாதுகாப்புக்கு மய்ய அரசின் அரசமைப்புச் சட்டமும், நீதித்துறையும் அதிகாரங்கள் பெற்றுள்ளன. பம்பாய் நகரம் மகாராட்டிராவுக்குச் சொந்தமானது என்று புவியியல் தீர்ப்பு வழங்குவதாக இருக்கிறது. குஜராத்தியர்கள் பம்பாயின் தொழிலையும் வணிகத்தையும் கட்டியெழுப்பினர் என்பதில் உண்மையில்லை. அவர்கள் ஆங்கிலேயரிடம் சலுகை பெற்ற வியாபாரிகளாக மட்டுமே வந்தனர். தொழில்களை கட்டியெழுப்பியவர்கள் அய்ரோப்பியர்களே என்று அடுக்கடுக்கான பதில்களைத் தக்க சான்றுகளுடன் அளித்து, பம்பாய் மகாராட்டிராவுக்கு உரிமையானதே என்று நிறுவுகிறார்.

இரண்டாவது கட்டுரையான, வரைமுறைகள் மற்றும் தராதர நிர்ணயம் ஆகியவற்றின் அவசியம் என்கிற கட்டுரையில், அவர் அலசும் செய்திகளை இனி பார்ப்போம். இக்கட்டுரையில் காங்கிரசும் அதன் தலைவரான நேருவும் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கும் விஷயத்தில் நாடகமாடியதாகவும், அவர்களின் தாமதப்படுத்தும் நடவடிக்கைகளால் அவர்களது கட்சியைச் சேர்ந்த பொட்டி சிறீராமுலு, பட்டினி கிடந்து உயிர் நீக்க வேண்டியிருந்தது என்றும் குற்றம் சாட்டுகிறார்.

1. புதிதாக உருவாக்கப்படும் மாநிலம் தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்குமா? 2. அம்மாநிலம் அமைக்கப்பட்ட, பிறகு அங்கு என்ன நடக்கும்? 3. உருவாக்கப்படும் அம்மாநிலம் இந்தியா முழுவதிலும் உள்ள அம்மாநிலத்தின் மொழி பேசுபவர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமா? இவைதான் புதிய மொழிவாரி மாநிலம் உருவாக்கப்படுவதற்குத் தேவைப்படும் வரைமுறைகளும், தராதர நிர்ணயங்களும் என்கிறார் அக்கட்டுரையில். இக்கட்டுரையில் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபிறகு, அங்கு நிலவரம் என்னவாக இருக்குமென்றால், ஒன்று அல்லது இரண்டு பெரும்பான்மைச் சாதிகள் ஆதிக்கம் செலுத்தும் விதமாகவே இருக்கும். பிற சிறுபான்மைச் சாதிகளின் பாதுகாப்புக்கு எதுவும் எஞ்சியிருக்காது. எடுத்துக்காட்டாக, பஞ்சாபில் ஜாட்டுகளின் ஆதிக்கத்தில் பிறர் வாழ வேண்டியிருக்கும். ஆந்திராவில் ரெட்டிகள், காப்புகள், கம்மாக்கள் ஆகியோரின் ஆதிக்கமும், மகாராட்டிராவில் மராட்டாக்களின் ஆதிக்கமுமே இருக்கும். மொழிவாரி மாநிலம் என்கிற போர்வையில், ஒரு வகுப்புவாதப் பெரும்பான்மை தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு திட்டமிட்ட தடைகளும், சரிபார்ப்புகளும் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் இக்கட்டுரையை முடிக்கிறார்.

மூன்றாவது கட்டுரையான மொழிவாரி மாநிலங்கள் குறித்த சிந்தனைகள் என்னும் கட்டுரை குறித்துப் பார்க்கும் முன்னர் அச்சிறு நூலுக்கு அவர் எழுதிய முன்னுரை குறித்துப் பார்க்கலாம். இக்கட்டுரையில் உள்ள கருத்துக்கள் சில அவர் ஏற்கனவே தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு முரண்பட்டவை. அது குறித்துப் பேசும்போது, “விரோதமும், வெறுப்பும் கொண்டவரும் எனது கருத்து மாற்றங்களைத் தனக்கு சாதகமாய் எடுத்துக் கொள்கிறவருமான ஒரு விமர்சகருக்கு எனது பதில் வெளிப்படையானது. கருத்து மாறாமல் இருப்பது என்பது கழுதையின் நற்பண்பாக இருக்கிறது என்று எமர்சன் கூறியிருக்கிறார். முட்டாள்தனமாக நடந்து கொள்ள நான் விரும்பவில்லை.

“ஒரு பொறுப்புள்ள மனிதன், தான் கற்றுக் கொண்டவற்றைப் புறந்தள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு பொறுப்புள்ள மனிதனுக்கு மீள் சிந்தனை செய்யவும், தனத சிந்தனைகளை மாற்றிக் கொள்ளவும் தைரியம் வேண்டும். தான் கற்றவற்றைப் புறந்தள்ளவும், தனது சிந்தனைகளை மறுவார்ப்பு செய்யவும் சரியானதும் போதுமானதுமான காரணங்கள் இருக்க வேண்டும் என்பது உண்மைதான். சிந்தனையில் இறுதி நிலை என்று எதுவும் இருக்க முடியாது'' (பக்.203-204) என்று குறிப்பிடுகிறார். இக்கருத்துக்களை அவர் எழுதியது தனது இறுதி ஆண்டுகளில் என்பதை கருத்தில் வைத்து இவ்வரிகளைப் படித்தால், அவரது மேதமையோடு அவர் பேணி வந்த நெறிகள் அவரை எவ்வளவு உயரத்தில் வைத்துப் பார்க்க வைக்கின்றன என்பது புரியும்.

இனி கட்டுரைக்குள் போகலாம். மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையத்தின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது குறித்த பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கை வெளிவந்த பின் அப்பரிந்துரைகளில் காணப்பட்ட பாதகங்களை விமர்சிக்கும் நோக்கத்தில், இக்கட்டுரை அம்பேத்கரால் எழுதி வெளியிடப்பட்டது. கமிஷனின் அறிக்கை வடமாநிலங்களுக்குச் சாதகமாகவும் தென்னிந்திய மாநிலங்களுக்குப் பாதகமாகவும், மகாராட்டிராவுக்கு கேடு விளைவிப்பதாகவும் இருந்தது. அந்தக் காரணங்களுக்காக கமிஷனையும், அக்கமிஷனை அமைத்த நேரு போன்றோரையும் இக்கட்டுரையில் காட்டமாக விமர்சிக்கிறார்.

“மாநிலத்தின் அளவு என்பது ஒரு பிரச்சனையே இல்லை என்றும், ஒரு கூட்டாட்சிக்குள் அடங்கியிருக்கும் பல்வேறு மாநிலங்களின் அளவில் சமமான தன்மை காணப்பட வேண்டும் என்பதெல்லாம் தேவையே இல்லை என்றும் கமிஷன் நினைப்பது புலனாகிறது. கமிஷன் இழைத்த முதலாவதும் மிகக் கொடுமையானதும் ஆன தவறாகும் இது'' என ஆணையம் தனது பரிந்துரைக்கான அடிப்படையாக வைத்திருந்த அளவுகோலையே கேள்விக்குள்ளாக்குகிறார் அவர். அடுத்ததாக, மகாராட்டிராவை இரு மொழி பேசும் மாநிலமாக நீடிக்க வைப்பது என்று கமிஷன் எடுத்த முடிவைக் கேள்விக்குள்ளாக்குகிறார் : “பலமொழிகள் பேசும் ஒரு மாநிலம் எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்கிற அனுபவத்தைப் பெற வழிவகுக்கும் என்று ஒரு பாடாவதி காரணத்தை முன்வைத்து ஆணையம் இந்த முடிவை முன் வைத்தது.

“கடந்த இருபது ஆண்டுகளாக பம்பாய் மாகாணம் பல மொழிகள் பேசும் மாகாணமாகவே இருக்கும் நிலையில், மராத்தியர்களுக்கும், குஜராத்தியர்களுக்கும் இடையே கடுமையான பகையுணர்வு நிலவி வரும் சூழலில், ஓர் அறிவற்ற மனிதன் அல்லது நடப்பது எதையும் அறியாத ஒரு மனிதன் ஆகியோரால்தான் இவ்வாறான முட்டாள்தனமான திட்டத்தை முன் வைக்க முடியும்'' என்று அதன் முடிவைச் சாடுகிறார் அம்பேத்கர். அவ்வாறே, பம்பாய் நகரத்தை மகாராட்டிராவிலிருந்து பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு முன் வைத்த திட்டத்தையும், பிறரை ஆள மராத்தியர்கள் தகுதியற்றவர்கள் என காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது என்ற சீற்றத்துடன் எதிர்கொண்டார்.

மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் தனது பரிந்துரைகளை ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்ற அளவுகோலின்படி முன் வைத்தது. அதன் விளைவாக உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மிகப் பெரிய மக்கள் தொகையுடன் பெரிய மாநிலங்களாகவும், தென்னிந்திய மாநிலங்கள் மொழி ரீதியாகப் பிரிக்கப்பட்டதால் மிகச் சிறியவையாகவும் பிரிக்கப்பட்டன. இதன் விளைவாக, இந்தியாவின் பிடி முழுவதுமாக வடமாநிலங்களின் கைக்குள் போனது. தென்னிந்தியா முக்கியத்துவமற்றதாகவும் ஆனது.

இதை மிகக் கடுமையாக எதிர்த்தார் அம்பேத்கர். வடக்கின் ஆளுகையை தெற்கு ஏற்றுக் கொள்ளாது. “வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. வடக்கு பழமை வாத மனப்பாங்குடையது. தெற்கு முற்போக்கானது. வடக்கு மூடநம்பிக்கை கொண்டது. தெற்கு பகுத்தறிவுடையது. தெற்கு கல்வியில் முன்னேறியது. வடக்கு கல்வியில் பின் தங்கிப் போனது. தெற்கு நவீனமான பண்பாட்டைக் கொண்டது. வடக்கின் பண்பாடு பழமைத் தன்மை கொண்டது'' என வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்திக் காட்டுகிறார். “வடக்கு இன்னமும் சதிப்பழக்கத்தைக் கொண்டிருக்கிறது; நங்கா சாதுக்களைக் கொண்டிருக்கிறது. நங்கா சாதுக்கள் ஹரித்துவார் விழாவில் நிகழ்த்திய நாசங்களுக்கு எதிராக உத்திரப் பிரதேசத்தில் யாராவது போராடினார்களா?'' என்று கேள்வி எழுப்பினார்.

வடக்கின் ஆதிக்கத்தை குறைப்பதற்காக வடக்கின் பெரிய மாநிலங்களான உத்திரப் பிரதேசத்தை மூன்றாவதாகவும், மத்தியப் பிரதேசத்தை இரண்டாகவும், பீகாரை இரண்டாகவும் பிரிக்க வேண்டும் என்ற திட்டத்தை அம்பேத்கர் முன்வைத்தார். அவ்வாறு பிரித்து, வட மாநிலங்களின் ஆதிக்கத்தைக் குறைக்காவிட்டால் வடக்குக்கும் தெற்குக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடக்கும். இப்போருக்கு தேவைப்படும் நிறைய அடிப்படைகளை காலம் வழங்கும் என அவர் எச்சரித்தார்.

மொழிவாரி மாநில ஆணையத்திற்கு அவர் வழங்கிய அறிக்கையிலிருந்து முரண்படும் விதமாக அம்பேத்கர் இக்கட்டுரையில் குறிப்பிடும் கருத்துக்களில் ஒன்றாக, மகாராட்டிர மாநிலம் குறித்த அவரது கருத்து அமைந்திருந்தது. “சிறிய மாநிலங்கள் என்பவை சாதாரணமான நேரங்களில் நிரந்தரமான சுமையாகவும், நெருக்கடியான நேரங்களில் பலவீனத்தின் ஊற்றுக்கண்ணாகவும் இருக்கும். இவ்வாறான நிலை தவிர்க்கப்பட வேண்டும். எனவேதான் மகாராட்டிராவின் எல்லா பகுதிகளும் ஒரே மாகாணத்தில் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று அவர் முதலில் வழங்கிய அறிக்கையில் குறிப்பிடுகிறார். 1955இல் எழுதிய கட்டுரையில் மகõராட்டிராவை நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்தை முன்மொழிகிறார்.

ஒன்றுபட்ட மகாராட்டிராவைப் போன்ற மிகப்பெரிய மாநிலத்தை ஒரு தனி அரசால் நிர்வகிக்க முடியாது. மகாராட்டிராவின் மூன்று பகுதிகளுக்கும் (கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மகாராட்டிரா) பொருளாதாரத்தில், தொழில் துறையில், கல்வியில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. இவற்றை ஒன்றாகப் பிணைத்து வைப்பதன் மூலம் இவற்றில் மிகவும் பின் தங்கி இருக்கிற மத்திய மகாராட்டிரா மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். மகாராட்டிர மாநிலம் குஜராத்தோடு ஒன்றாக இருந்ததன் மூலம் அரசியலில் மராத்தியர்களின் பங்கு மிகவும் குறைவானதாக இருந்தது. எனவே, மராத்தியர்களின் அரசியல் திறமையை மேம்படுத்த அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பளிக்கும் விதத்தில் மகாராட்டிராவை நான்கு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என அதற்கான நியாயங்களை முன்வைத்தார்.

அரசியல் அமைப்பு என்பது, சமூக அமைப்பின் மீதுதான் கட்டியெழுப்பப்படுகிறது. இந்தியாவில் சமூக அமைப்பு என்பது சாதிய அமைப்பாக உள்ளது. எனவே, இந்தியாவின் அரசியல் அமைப்பில் சாதிகள் என்ன விதமான தாக்கங்களை உண்டாக்குகின்றன என்பதைக் காண வேண்டும். குறிப்பாக, தேர்தல்களில் என்ன விளைவுகளை அது ஏற்படுத்துகிறது என அம்பேத்கர் ஆய்வு செய்கிறார். அவரது ஆய்வின் முடிவுகள் :

1. வாக்களிப்பது சாதியின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது. வாக்காளர் தனது சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்குத்தான் வாக்களிக்கிறார். சிறந்த வேட்பாளருக்கு அல்ல.

2. வெறும் சாதிப் பெரும்பான்மையிலேயே பெரும் பான்மைச் சாதி பதவியைக் கைப்பற்றி விடுகிறது.

3. பெரும்பான்மைச் சாதியின் வேட்பாளருக்கு வாக்களிக்கவே சிறுபான்மைச் சாதிகள் கட்டாயப்படுத்தப் படுகின்றன.

4. பெரும்பான்மைச் சாதியினரால் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராகத் தமது வாக்குகளைக் கொண்டு ஒருவரை அப்பதவிக்கு வெற்றி பெறச் செய்ய சிறுபான்மைச் சாதியினரால் முடிவதில்லை.

5. படிநிலைப்படுத்தப்பட்ட ஏற்றத் தாழ்வின் அடிப்படையிலான சமூக அமைப்பின் விளைவாக ஆதிக்க சாதியினர் தமது வாக்கை ஒரு சிறுபான்மைச் சாதியின் வேட்பாளருக்குப் போட ஒருபோதும் மனமிறங்குவதில்லை. இதற்கு மறுதலையாக, ஒரு சிறுபான்மைச் சாதியைச் சேர்ந்த, சமூக ரீதியில் கீழ்நிலையில் இருக்கும் வாக்காளர் தனது வாக்கை பெரும்பான்மைச் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்குத் தருவதன் மூலம் பெருமிதம் கொள்கிறார். சிறுபான்மைச் சாதியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருபோதும் வெல்ல முடியாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம்.

இப்படிப்பட்ட விளைவுகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது காங்கிரஸ். ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மையாக உள்ள சாதிகளையே வேட்பாளராக அது நிறுத்துகிறது. அதனால்தான் அது வெற்றி பெறுகிறது. நவீன அரசியல் செயல்பட அடிப்படையானதாக உள்ள அரசியல் பெரும்பான்மை என்பது, சாதிப் பெரும்பான்மையால் மாற்றீடு செய்யப்படுகிறது. எனவே, அரசியல் பெரும்பான்மைக்கு ஆட்சி செய்வதற்காக வழங்கப்படும் ஆட்சி உரிமைகளை அப்படியே சாதிப் பெரும்பான்மைக்கும் கைமாற்றித் தருவது மிகவும் ஆபத்தானது. எனவே இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

சாதிப் பெரும்பான்மையின் கொடுங்கோன்மைக்கு எதிராக சில தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மிகப் பெரிய மாநிலமாக ஒரு மாநிலத்தை அமைக்காமல் இருப்பதுதான் முதல் தடுப்பு நடவடிக்கை என்கிறார் அம்பேத்கர். மாநிலம் எந்தளவுக்குப் பெரியதாக இருக்கிறதோ, அந்தளவுக்குப் பெரும்பான்மையினருடன் சிறுபான்மையினரின் விகிதாச்சாரம் குறைவானதாக இருக்கும். முஸ்லிம்களும், தலித்துகளும் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகும் சிறுபான்மையினராகவே இருப்பர்.

இரண்டாவது தடுப்பு நடவடிக்கையாக, சட்டமன்றத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவம் சில சட்டப்பூர்வ ஏற்பாடுகளின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். தற்பொழுது இருக்கும் ஒற்றை உறுப்பினர் தொகுதி முறைக்கு மாற்றாக கூட்டு வாக்களிப்பு முறையுடன் கூடிய பன்மை உறுப்பினர் தொகுதி முறை கொண்டு வரப்பட வேண்டும். அதன் மூலம் சாதிப் பெரும்பான்மையின் கொடுங்கோன்மை கட்டுப்படுத்தப்படும் என்பது அம்பேத்கரின் வாதம்.

தொகுத்துப் பார்க்கும்போது அம்பேத்கரின் மொழிவாரி மாநிலங்கள் குறித்த பார்வை என்பது, அன்று நிலவிய பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வகுத்துக் கொள்ளப்பட்ட ஒன்று. குறிப்பாக தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோரின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பார்வை அது. அதைப் போகிற போக்கில் விமர்சித்துத் தூக்கி எறிகிற உரிமை எந்த கொம்பனுக்கும் கிடையாது.

Pin It