காஷ்மீரின் மரணக் குழிகள்

வடக்கு காஷ்மீரின் பந்திபோரா, பாரமுல்லா மற்றும் குல்வாரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 55 கிராமங்களில், இதுவரை அடையாளம் காணப்படாத 2700 பேரை மொத்தமாகக் கொன்று புதைத்துள்ள மரணக் குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 2900 உடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று "உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம்' தெரிவித்துள்ளது. இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் அங்கனா சாட்டர்ஜி, “அரசு இவ்வறிக்கைக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; அலட்சியப்படுத்தக்கூடாது'' என்று கூறியிருக்கிறார். மேலும் 2700 மரணக் குழிகளில் 2,373 உடலங்கள் (87.9 சதவிகிதம்) பெயரிடப்படாதவை. “இத்தகைய மரணக் குழிகள், இனப்படுகொலை அல்லது போர்க்குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து வெளிப்படுபவை. இந்திய ராணுவத்தினரும் துணை ராணுவத்தினரும் தண்டனை மற்றும் விசாரணையிலிருந்து தப்பிக்க இத்தகு மரணக் குழிகளை உருவாக்கி இருக்கலாம்'' என்று அவர் கூறுகிறார்.

இந்திய பாதுகாப்புப் படையினர் 50 "போலி மோதல் கொலை' களையும் செய்திருப்பதாக இவ்வறிக்கை கூறுகிறது. இந்த அய்ம்பது பேரில் 39 பேர் முஸ்லிம்கள், 4 பேர் இந்துக்கள், 7 பேரை அடையாளம் காண முடியவில்லை. இவ்வாறு பலியானவர்களை எல்லாம் தீவிரவாதிகளாகவும், வெளிநாட்டிலிருந்து ஊடுருவியவர்களாகவும் அரசு சொல்கிறது. சுதந்திரமான ஆய்வுகளை மேற்கொண்டால், இங்கு மொத்தமுள்ள 10 மாவட்டங்களில், 1989 முதல் 8 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர் என்ற தகவலுடன் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத மரணக் குழிகள் பற்றிய தகவல்களும் ஒருமித்துச் செல்வதை உணர முடியும்.

“அய்க்கிய நாடுகளும் அதன் உறுப்பு நாடுகளும், இந்திய அரசு காஷ்மீரை ராணுவமயமாக்கி வருவதைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை'' என்று சாட்டர்ஜி கூறியிருக்கிறார். காஷ்மீரில் 1989 முதல் 2009 வரை நடைபெற்ற வன்முறை மற்றும் ராணுவமயமாக்கலால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் போலி மோதல் கொலைகளும், காவல் நிலைய மரணங்களும் அடக்கம் என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் இம்மோதலில், 6 லட்சத்து 67 ஆயிரம் ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் தொடர்ந்து எந்தவித தண்டனைகளுமின்றி, காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுகின்ற பெயரில் செயல்பட்டு வருவதாக சாட்டர்ஜி கூறுகிறார். இது தொடர்பான மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் "தலித் முரசி'ன் சனவரி இதழில் விரிவாக இடம்பெறவிருக்கிறது.

எங்கே பிரதிநிதித்துவம்?

மத்திய அரசுப் பணியில் 88 அரசு செயலாளர்களும், 66 கூடுதல் செயலாளர்களும், 249 இணைச் செயலாளர்களும், 471 இயக்குநர்களும் உள்ளனர். ஆனால் அரசை வழி நடத்தும் அதிமுக்கிய அதிகாரம் கொண்ட இப்பதவியில், ஒரு தலித் கூட இல்லை. ஒரே ஒரு தலித் மட்டும் கூடுதல் செயலாளர் பதவியிலும், 13 பேர் இணைச் செயலாளர் பதவியிலும், 31 பேர் இயக்குநர் பதவியிலும் உள்ளனர். பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களில் நான்கு பேர் செயலாளர் பதவியிலும், ஒருவர் கூடுதல் செயலாளர் பதவியிலும், ஒன்பது பேர் இணைச் செயலாளர் பதவியிலும் உள்ளனர். நாடாளுமன்றத்தில் 16.12.2009 அன்று, மத்திய நிர்வாகத்துறை அமைச்சர் பிருத்விராஜ் சவுகான் இத்தகவலை தெரிவித்திருக்கிறார்.

தலித்துகள் விற்பனைப் பொருட்களா?

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் மாவட்டத்தில் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் 2.75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமான ராஜ்புத்திர குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்ய ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாவீர், அவருடைய மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகளான ராகேஷ், முகேஷ், கைசாலால், சிதார் மற்றும் அவருடைய மனைவி சஜானி ஆகியோர் கடந்த ஆண்டு விற்கப்பட்டனர். ஆனால் இக்குடும்பம் கொத்தடிமையில் இருந்து தப்பித்து வெளியேறிய பிறகுதான் இந்த உண்மை உலகத்திற்கு தெரிய வந்தது. ஓராண்டுவரை கொத்தடிமைகளாக இருந்த இவர்களை ராஜ்புத்திர குடும்பத்தினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்நிலையில்தான் அருகிலுள்ள காடுகளுக்கு தப்பித்து, தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர். இந்து இந்தியாவில் தலித்துகள் உயிர்களாகக் கருதப்படுவதில்லை; பண்டங்களாகவே கருதப்படுகிறார்கள். தலித்துகளை பிறவி அடிமைகளாகவே இந்து சமூகம் கருதுவதால்தான், இப்பிறவி இழிவை ஒழிக்க "நான் இந்துவாக சாகமாட்டேன்' என்று பாபாசாகேப் அம்பேத்கர், இந்து சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைந்தார். இந்துக்களாக இருக்கும் தலித்துகள் அறை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

“கழுதைக்குப் பேர் முத்துமாரி''

குஜராத் மாநிலத்தில் "நானோ கார்' உற்பத்தி செய்யப்படும் இடத்தை சமூக நீதிப் பார்வையுடன் அணுகினால், தீண்டாமைக் கொடுமை பளிச்சென வெளிப்படுகிறது. பிக்காபாய் சோலங்கி (50) என்பவர், லோட்ரியால் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தலித் அல்லாதவர்களுடன் இதுவரை கை குலுக்கியதே இல்லை. காரணம்? “நாங்கள் தீண்டத்தகாதவர் என்பதால் எங்களை யாரும் தொடுவதில்லை'' என்கிறார் அவர். மேலும், கையால் மலமள்ளும் தொழிலை குஜராத்தில் ஒழிப்பதற்காக இடையறாது போராடும் மார்ட்டின் மெக்வான் நடத்தும் "நவ் சர்ஜன் அறக்கட்டளை', குஜராத்தின் 1655 கிராமங்களில் நடத்திய ஒரு விரிவான ஆய்வில், தேநீர்க் கடைகளில் தலித்துகளுக்கு "ராம்பத்ரா' என்ற தனிக் குவளையில்தான் தேநீர் வழங்கப்படுகிறது என்ற உண்மையை கண்டறிந்துள்ளது.

லோத்ரியால் கிராமத்து தலித் பெண்கள் காய்கறி கடைகளில் காய்களை தொட்டு வாங்க முடியாது. தேவையான காய்களுக்குரிய பணத்தை கடைகளில் வைத்து விட்டால், அவர்களுடைய முந்தானையில் காய்களை கொட்டி விடுவார்கள். மேலும் ஓர் ஆய்வில் கருத்து தெரிவித்த 98 சதவிகித தலித் அல்லாதோர், தலித்துகளுக்கென தங்கள் வீடுகளில் தேநீர் மற்றும் உணவு கொடுப்பதற்கென தனி பாத்திரம் வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். மார்ட்டின் மெக்வான் சொல்கிறார் : “தீண்டாமையின் பல வடிவங்களிலும் தூய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் சாதி இந்துக்களின் மனநிலையாக இருக்கிறது. இத்தகைய இழி நிலையை புனிதப்படுத்துவதற்குதான் இத்தீண்டாமைப் பாத்திரங்களுக்கு "ராம்பத்ரா' என்று பெயரிடப்பட்டுள்ளது.'' தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு செய்தி. தனது 75ஆவது பிறந்த நாளை கொண்டாடும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன், திருச்சியில் நடைபெற்ற ஒரு விழாவில் நால்வருக்கு விருது வழங்கினார். அதில் முக்கியமானவர் இளையராஜா. இவரைத் தொட விரும்பாத ஜெயேந்திரன் ஆசி மட்டும் வழங்கி விட்டு, தன் உதவியாளர் கையால்தான் விருதுகளை கொடுத்தாராம் ("நக்கீரன்', 26.12.09). அங்கு, தீண்டாமைப் பாத்திரத்திற்கு ராமன் என்ற அயோக்கியனின் பெயர். இங்கு, தீண்டாமையை காப்பாற்றும் குற்றவாளிக்கு "அந்தணன்' என்று பெயர்.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால்... 

இந்திய அரசால் தீவிரமாகத் தேடப்படும் மாவோயிஸ்டுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கிஷன்ஜி என்பவர், தன்னை "பிராமணன்' என்று வெளிப்படுத்திக் கொண்டதை ("தெகல்கா' நேர்காணல்) கடந்த இதழில் சுட்டிக்காட்டியிருந்தோம். மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள "புதிய ஜனநாயகம்' ஏடு, கிஷன்ஜியை நாம் விமர்சித்ததை ("தலித் முரசின் வர்க்காஸ்ரம வெறி') சாடியிருக்கிறது. நமக்கு கிஷன்ஜியின் ஜாதி என்னவென்றே தெரியாது. வர்க்கத்தை முதன்மைப் படுத்துகின்ற இப்புரட்சிக்காரர்கள், தங்களை வர்க்க ரீதியாகவும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல், முற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்தவராகவும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல், வர்ண – ஜாதி அடிப்படையில் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை என்ன என்பதுதான் நாம் முன்வைத்த விமர்சனத்தின் மய்யக்கரு. அதற்கு பதில் சொல்ல வக்கற்ற "புதிய ஜனநாயகம்', பிறப்பின் அடிப்படையில் ஒருவரை தீர்மானிப்பதும், அணுகுவதும் பார்ப்பனியம் என்று நமக்கு புத்தி சொல்லிவிட்டு முடிவுரையில், நாம் முன்னெடுக்கும் தலித்தியத்தை “ஏகாதிபத்தியம் பெற்றெடுத்த கள்ளக் குழந்தை'' (குழந்தையில் என்னடா நல்லக் குழந்தை / கள்ளக் குழந்தை?) என்று கூறி, நமக்கு பூணூல் மாட்டி, நம்மை அடிமையாக சித்தரித்துள்ளது. பேசுவது முற்போக்கு, கம்யூனிசம். ஆனால், ஆத்திரம் வந்தால், அறிவு மறைந்து ஆண்டைத்தனம்தான் வெளிப்படுகிறது

****

பந்த் சிங் (50) – பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த புரட்சிகர தலித் பாடகர். விவசாயத் தொழிலாளர் அமைப்பான மஸ்தூர் முக்தி மோட்சா அமைப்பின் தலைவர். 2000 ஆம் ஆண்டில் இவருடைய இளைய மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டதை எதிர்த்து நீதி கேட்டு, தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 2002இல் இக்குற்றத்தைச் செய்த சாதி இந்துக்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இக்குற்றவாளிகள் அவரை பழி தீர்க்க 5.1.2006 அன்று அவர் மீது தொடுத்த கடும் தாக்குதலில் மரணத்தின் விளிம்புக்கு சென்றார் பந்த் சிங். அவருடைய இரு கைகளும் ஒரு காலும் வெட்டப்பட்டு, மற்றொரு காலும் புரையோடிப் போய்விட்டது. இதிலிருந்து மீண்டு தற்பொழுது புத்தெழுச்சியுடன் பாடத் தொடங்கி இருக்கிறார் பந்த் சிங். இரு கைகளையும் இரு கால்களையும் இழந்தும் சமூக அநீதிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் இப்போராளியின் விடுதலை உணர்வு, நம் சுணக்கத்தை கலைக்கட்டும்

****

விடுதலைப் புலிகள் - ரணில் விக்ரமசிங்கேவை தேர்தலில் ஆதரித்திருக்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் தேர்தலைப் புறக்கணித்ததால்தான் – ராஜபக்சே பதவிக்கு வந்து இவ்வளவு அழிவையும் செய்துவிட்டார் என்று முதல்வர் கலைஞர் பேசுகிறார். சரி என்றே வைத்துக் கொள்வோம். தற்பொழுது ராஜபக்சேயும், (ரணில் விக்ரம சிங்கே முன்னிறுத்தியுள்ள வேட்பாளர்) சரத் பொன்சேகாவும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களில் யாரை ஆதரித்தால் தமிழர்களுக்கு நல்லது என்று கலைஞர் கூறுவாரா?

கோவை ராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர், பெரியார் தி.க

Pin It