தென் ஆப்ரிக்கருக்கும் நாய்களுக்கும் உள்ளே அநுமதியில்லை என்ற போர்டை கராச்சி நகர சபையார் சில இடங்களில் தொங்க விட்டிருக்கிறார்களாம். 

kuthoosi gurusamyதென் ஆப்ரிக்கர் அங்குள்ள இந்தியரைக் கொடுமையாக நடத்துகிறார்கள் என்பதற்காகப் பதிலுக்குப் பதில் புத்தி கற்பிக்கும் முறையில் இக்காரியம் செய்யப்படுகிறது என்பது எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.

ஆதித்திராவிடர்களும், குஷ்டரோகிகளும், ஐரோப்பியர்களும் உள்ளே நுழையக் கூடாது என்ற போர்டுகள் தமிழ் நாட்டில் பல கோவில்களில் தொங்க விடப்பட்டிருக்கின்றன.

அப்படியானால் ஆதித்திராவிடரும், தென் ஆப்ரிக்கா வெள்ளையரைப் போல ஏதேனும் போக்கிரித்தனமாக நடந்து கொண்டார்களா? என்று கேட்கிறான், என் தம்பி.

ஆமாண்டா! அப்பா! ஆமாம்! ஆதித் திராவிடர்கள் நிலம் உழுது, விதை விதைத்து நெல் அறுத்துக் கொடுத்துத் தொலைக்கிறார்கள்!

 குடிப்பதற்குத் தங்களுக்குத் தண்ணீரில்லாவிட்டாலும், மற்றவர்களுக்குக் குளம் வெட்டிக் கொடுக்கிறார்கள். வீட்டையும் வயலையும் காவல் காத்துத் தொல்லை கொடுக்கிறார்கள்!

கோவிலுக்குள்ளே 63 பேர் கூட்டத்தில் டிரில் கிளாசில் நிற்பது மாதிரி, நந்தன் நிற்கிறான்! ஆனால் வெளியேயோ, கந்தனைத் தடுப்பதற்கு ஒரு போர்டு தொங்குகிறது!

 குஷ்டரோகியும் ஆதித் திராவிடனும் பிணைக்கப்பட்ட ஒரு போர்டு!

அதுதான் ஆப்ரிக்காவில் பழிக்குப் பழி வாங்குகிறான். வெள்ளைக்காரன்! நல்லா வேணும்! 

நம்ம கந்தனைக் குஷ்டரோகிண்ணு சொன்னா, வெள்ளையன் அங்கே நமக்கு முத்தங் கொடுப்பானோ? என்று கேட்கிறான், தம்பிப் பயல்.

 ஒரு சாண் பயலுக்கு என்ன துடுக்குத் தனம், பாருங்கள்!

டேய்! தம்பீ பிராமணாளுக்கு மட்டும் வீடு வாடகைக்கு விடப்படும், பிராமணாள் காப்பி கிளப், பிராமணர் இங்கே, இதரர் அங்கே என்ற போர்டுகளைப் பார்த்திருக்கிறாயா, எங்கே யாவது? என்று கேட்டேன்! இளித்தான்.

12 வயதுப் பார்ப்பனப் பையன், டேய், முனிசாமி! என்று கூப்பிடும்போது, 50 வயது முனிசாமி, ஏன் சாமி? என்கிறான். 

ஏனப்பா! உட்கார்ந்து தொலையேன்; வழியிலே ஏன் நிற்கிறே, என்கிறார், ட்ராம்-பஸ்-கண்டெக்டர், ஒரு திராவிடத் தோழரைப் பார்த்து! 

அவர் சூட் போட்டிருந்தாலுஞ் சரி, 8 மோதிரங்களைத் தூக்கிக்காட்டினாலுஞ் சரி! ஆனால் ஒரு பார்ப்பனன் உச்சிக் குடுமி, கிழிந்த வேட்டி சகிதமாக, டிபென் காரியரைத் தூக்கிக்கொண்டு புகையிலை அடக்கிக் கொண்டிருந்தாலும், நமது கண்டக்டர் தோழர் என்ன சொல்கிறார்? சாமி, ஏன் நிக்கிறீங்க! உக்காருங்க சாமி! என்கிறார்.

பதில் என்ன சொல்கிறான், அப்பார்ப்பன மடையன், (சமையற்காரன்)? ஏய்! போப்பா! நீ உன் வேலையைப் பாரு! என்கிறான். 

கண்டர்டர் இஞ்சி தின்ன - மாதிரிக் காட்சி யளிக்கிறார்!

 ஆப்ரிக்காவைப் பற்றிப் பேசுகிறார்களே, மான வெட்கமில்லாமல்? இங்கே வீட்டுக்கு வீடு தென் ஆப்ரிக்கா! தெருவுக்குத் தெரு ஸ்மட்ஸ் துரைகள்! ஆனால் கேட்க நாதியில்லை!

(குத்தூசி குருசாமி அவர்கள் 1946 முதல் விடுதலை ஏட்டில் குத்தூசி என்ற தலைப்பில் எழுதியவற்றை 1948-இல் தொகுத்து விடுதலையை வெளியீடாக வெளியிட்ட பலசரக்கு மூட்டை என்ற நூலில் உள்ள ஒரு கட்டுரை.)

நன்றி: வாலசா வல்லவன்

Pin It