சென்னைக்கு 500 கி.மீ. தொலைவிலிருந்த ‘நர்கீஸ்' புயல் திசைமாறி மியான்மரை சிதிலமாக்கிய நேரம்தான் அது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வேகமான காற்றும் சிற்சில இடங்களில் மழையும் பெய்தது. அன்று அந்த தலித் பகுதியில் நகராட்சிக் குழாய்களில் தண்ணீர் திறக்கப்படும் நேரம். அதுவும் வேலூர் மாவட்டம் ஆம்பூர் என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உப்புத் தண்ணீர், அதாவது புறக்கடைக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய தண்ணீர் வரும். அந்தத் தண்ணீரை குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ பயன்படுத்த முடியாது. சமையலுக்குக்கூட பயன்படாது. சில நேரங்களில் நல்ல தண்ணீர் நகராட்சிக் குழாய்களில் வரும். நல்ல தண்ணீர் என்பதைக்கூட குடிக்க முடியாது. ஆனால் குளிக்கலாம், சமையல் செய்யலாம். அப்படி நல்ல தண்ணீர் வரும் நேரம், மக்கள் தெருக்களில் தான் இருப்பார்கள்.

ஏப்ரல் 29 அன்று மாலை நேரத்தில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. குழாய்களில் தண்ணீர் வர, லேசாக மழையும் தூர ஆரம்பித்தது. காற்று வீசியவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்தத் தருணத்தில் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட சான்றோர்குப்பம் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில், அன்னை மேரி தெருவில் உள்ள மின்சாரக் கம்பம், காற்றுக்கு நிற்க முடியாமல் கீழே சாய்ந்தது மின் கம்பிகள் தரையில் விழுந்தன.

காற்றுக்குத் தாங்காமல், அடிப்பக்கம் அரிக்கப்பட்டிருந்த மின் கம்பம் சரிந்தவுடன், ஆம்பூர் மின்சாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் ஆகியும் மின்சார வாரியத்திடமிருந்து எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. மின்சாரம் தடைப்பட்டிருந்ததால் மின்சாரம் இல்லை என்று கருதி குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்ற அம்மு (எ) செல்வி (35) மற்றும் ஜானகி (50) ஆகியோர் திடீரென்று மின்சாரம் வர, மின்சாரம் தாக்கி கீழே விழுந்தனர். சுற்றியிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் மின்சாரத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்பொழுதும் மின் துறையிலிருந்து யாரும் வராததால் அங்கிருக்கும் இளைஞர்கள் சிலர் மின்மாற்றியில் மின்சாரத்தைத் துண்டித்து விட்டு, அடிபட்டவர்களை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு வேகமாக சென்றிருக்கின்றனர். அதற்குள் ஊரே திரண்டு விட மக்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது.

மின்கம்பம் இருக்கும் இடத்தின் அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் லட்சுமி என்னும் பெண் குழந்தை (ஏழாம் வகுப்பு), "போன வருஷத்திலிருந்தே சொல்லிக்கிட்டுத்தான் இருக்கோம். இந்த கம்பம் உழறமாதிரி இருக்கு, மாத்துங்கன்னு கேட்டதுக்கு யாருமே கண்டுக்கல'' என்று சொன்னார். அதே தெருவில் இருக்கும் கண்ணையன் (57),"எத்தனையோ முறை ஈ.பி. காரங்களுக்குச் சொல்லியாச்சி. அப்பவே இந்த கம்பத்த மாத்தியிருந்தாங்கன்னா ரெண்டு பேரு செத்திருக்க மாட்டாங்க'' என்றார். சாந்தா (50), "எப்பவோ போட்ட இரும்பு கம்பம் துருபிடிச்சு சாய்ரமாறி இருந்தது. மாத்துங்கன்னு ஈ.பி.காரங்ககிட்டே சொல்லியும் கேக்கல'' என்று சொன்னார்.

ஆம்பூர் சான்றோர்குப்பம் என்பது சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிற பகுதி. ஆறு வழிச் சாலை அமைக்கப்பட்டதால் ஒரு பகுதி வீடுகளின் வாசலே நெடுஞ்சாலைதான். எனவே, எல்லா மக்களும் நெடுஞ்சாலைக்கு வந்துவிட, மின்சாரம் தாக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வண்டிகளை நிற்க வைத்திருக்கிறனர்.

இதற்குள் யாரோ தகவல் தர சாலைமறியல் என்று தவறாகக் கருதிய போலிஸ் படையும் அங்கு வந்துவிட்டது. போலிசுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு கூடியது. அப்பகுதி நகர மன்ற உறுப்பினரின் கணவர் குமரேசன் பேசுகையில், "அடிபட்டவர்களை தூக்கிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போறதுக்குத்தான் ரோட்டுக்கு வந்தோம். எந்த வண்டியும் நிக்கல. அதனால, வண்டிகளை நிறுத்தினோம். இதப் போலிஸ் தப்பா நினைச்சு எங்க மேலயே சாலை மறியல்னு கேஸ் போடறாங்க'' என்றார்.

மின்சாரம் தாக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நேரத்தில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இருக்க வேண்டிய மருத்துவர் பணியில் இல்லை. உடனடியாக அவர்களுக்கு முதலுதவி செய்யப்படவில்லை. பிறகு மருத்துவரை அழைத்து வந்து அம்மு மற்றும் ஜானகி அம்மாவுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதன்பிறகு ஆம்பூர் மருத்துவமனையில் முடியாது என்று கூறி, வேலூருக்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்து வேலூருக்கு அனுப்பியது. வழியிலேயே அம்முவும், ஜானகியும் பிணமாகிப் போனார்கள். வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் உடல் ஆய்வு செய்து, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

உயிர்பிழைக்க தண்ணீர் எடுக்கச் சென்றவர்கள், உயிர் துறக்கக் காரணமான எந்த அரசு எந்திரமும் தங்கள் தவற்றை உணர்ந்தபாடில்லை. மின்கம்பம் சாய்ந்து, மின் கம்பிகள் தெருவில் விழுந்து கிடப்பது குறித்து புகார் கொடுத்தும் உடனே வரவில்லை. இல்லையென்றால், அதற்கு முன்பே கம்பம் விழும் நிலையில் இருக்கிறது என்று கூறியபோது மாற்றியிருந்தால், இந்தத் துயரம் நடந்திருக்க வாய்ப்பேயில்லை. மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவுடன் மருத்துவர்கள் இருந்திருந்தால் ஒருவேளை காப்பாற்றி இருக்கலாம். ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மக்கள் சாலை மறியல் நடத்தினார்கள் என்பது தான் இப்பொழுது முக்கியப் பிரச்சினையாகி இருக்கிறது காவல் துறைக்கு. அப்பகுதியில் தலித் இளைஞர்கள், பெண்கள் மீது சாலை மறியல் நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குமரேசன் கூறும்போது, "ஈ.பி.காரங்க தப்பு பண்ணலாம், டாக்டருங்க தப்பு பண்ணலாம். அதப்பொறுக்க முடியாத பொதுமக்கள் மட்டும் தங்கள் ஆதங்கத்த சொல்லக்கூடாதா?'' என்றார். வாணியம்பாடி வட்டம் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க அமைப்பாளர் எம். ஜேசுபாதம், "மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்காக, அவர்கள் மேல் வழக்கு போடுவதெல்லாம் தேவையற்றது. அரசு நிர்வாகங்கள் இதுபோன்ற ஆபத்துகள் நிகழும்போது உடனே வந்து நிவாரணங்களுக்கான செயலில் ஈடுபட்டால், மக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். அதைவிட்டு விட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை'' என்றார்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு இதுவரை மின்சார வாரியம் மட்டுமே 25 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கியுள்ளது. செல்வி என்கிற அம்முவிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இரண்டு பெண்கள், ஓர் ஆண். முதல் பெண்ணிற்கு 18 வயது, இரண்டாவது பெண்ணிற்கு 14 வயது, பையனுக்கு 12 வயதாகிறது. இவர்களை நிர்கதியாக தெருவில் விட்டு விட்டு என் மகள் போய்விட்டாளே என்று கையை பிசைகிறார் அம்முவின் தந்தை சாமுவேல். ஜானகி அம்மாள் மகள் பாப்பாத்திக்கு ஒரே குழந்தை. வேலைக்குப் போகும் பாப்பாத்தியின் குழந்தையை கவனித்துக் கொள்ள அவர் மட்டும்தான் இருந்தார். தற்பொழுது தன் தாயை தவறவிட்டு தவிக்கிறார் பாப்பாத்தி. அரசு ஒரு லட்சம் இழப்பீடு தருவதாக அறிவித்திருக்கிறது. ஆனால் முறையான எந்த அறிவிப்பும் அந்தந்த குடும்பத்திற்கு தரப்படவில்லை.

ஒன்றுமறியாத பெண்கள் இறந்து போனதற்கு காரணம் விபத்தோ, இயற்கை சீற்றமோ இல்லை. மாறாக, அரசு எந்திரங்களின் கவனமின்மையும், அலட்சியப் போக்கும் தான் காரணம். தலித் பகுதி மக்கள் தானே என்ற உதாசீனம். இவைதான் இரண்டு பேரை கொன்று போட்டிருக்கிறது. அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். வெறும் ஒரு லட்ச ரூபாயை நிவாரணத் தொகையாக தருவது கண் துடைப்புதான். அதையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தருவதற்கான எந்த நேரடித் தகவலும் இதுவரை வந்து சேரவில்லை.

இதற்கிடையில் சாலைமறியல் செய்ததாக ஆம்பூர் காவல் துறை, சான்றோர்குப்பம் தலித் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. உயிர்களை பலிகொடுத்தும் வழக்குகளில் சிக்கியும் துன்பப்படுவது தலித் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியாக இந்தியப் பரப்பில் எல்லா இடங்களிலும் வழக்கமாகிவிட்டது என்பதற்கு இது இன்னொரு எடுத்துக் காட்டு. இவர்கள் மேல் போடப்பட்டிருக்கிற வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

1990 இல் புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவின் போது ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளிலுள்ள தலித் மக்கள், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த 10,000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் திரண்டு பேரணி நடத்தினர். விடுதலை உணர்வில் உந்தப்பட்ட தலித் மக்கள், தம் தலைவனுக்கு நன்றி செலுத்தும் எழுச்சிமிக்க ஊர்வலமாய் அது அமைந்திருந்தது. எப்படியோ பெருங்கலவரமாக மாற்றப்பட்ட அவ்வூர்வலத்தில் வில்சன் மற்றும் ராமு ஆகிய இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள்.

கலவரத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கில் ஒன்றுமறியாத தலித் மக்கள், பதினெட்டு ஆண்டு காலமாக நீதிமன்றங்களுக்கு நடந்திருக்கிறார்கள் என்பதும், பிறகு அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர் பேட்டையில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டு இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாயை நிவாரணத் தொகையாக தமிழக அரசு அளித்துள்ளது. அதையே பின்பற்றி ஆம்பூர் சான்றோர் குப்பத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் மூன்று லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக அரசு வழங்க வேண்டும். சாலை மறியல் செய்ததாகப் போடப்பட்ட பொய் வழக்குகளை உடனே திரும்பப் பெற வேண்டும்.
Pin It