சென்ற இதழில் வெளிவந்த விவேக்குமார் அவர்களின் பேட்டி இந்த இதழில்
நிறைவடைகிறது

Vivekkumar
தேர்தல் அரசியலின் பக்கம்தான் மக்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார்கள். சமூக விடுதலை இயக்கங்களின்பால் அவர்கள் ஈர்க்கப்படுவதில்லை. ஏன்?

இங்குதான் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சமூக இயக்கத்தில் அரசியல் என்பது ஒரு பகுதிதான். அரசியல் எல்லாமுமாகவும் இறுதியாகவும் இருக்கிறது என்பது உணரப்பட்ட எதார்த்தம். மறைமுக செயல்பாடு என்ன? நீங்கள் எங்களுடன் வாருங்கள் என்று நான் எப்படி சொல்வேன். என்னிடம் அதிகாரம் இருப்பதால் நான் உன் நிலையை மாற்றுவேன். ஆகவே அணிதிரளுங்கள். செங்கல்பட்டில் அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர் முகாம் ஒன்று நடந்தது. தலித் இயக்கத்தின் வரலாற்றை நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். புலே, அம்பேத்கர் மற்றும் பெரியாரில் தொடங்குகிறோம். பகுஜன் சமாஜ் கட்சியைப் பொறுத்தவரை, நாங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதல்ல. சமூக மாற்றம்தான் எங்களுக்கு முக்கியம். தற்போது நாங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற மட்டுமே முனைவதாகப்படும். தொலைநோக்கில் பார்த்தால், அதிகாரம் என்பது எங்கள் இலக்கிற்கான வழி மட்டுமே. அந்த இலக்கு சமூக மாற்றமே. படிநிலைப்படுத்தப்பட்ட ஆதிக்க சமூகமாக அல்ல; சமத்துவ சமூகமாக மாற்றவே முயல்கிறோம். அதுதான் விளைவு. அதுதான் நடக்கிறது.

மக்கள் தங்கள் தலைவர்களை குறித்தும், அவர்களது அடையாளத்தைக் குறித்தும் பேசுகிறார்கள். கிராமங்களில் என்ன நடக்க வேண்டும். தலித் பகுதிகள் - சேரிகளுக்கு அடையாளம் இல்லை. அவை பெரிய கிராமங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. அந்த கிராமத்தின் பகுதியாகவே இருந்தது. ஏன்? கிராமங்கள் வருவாய் கிராமங்களாக ஆக்கப்பட்டன. யார் வருவாய் அளிக்கிறார்களோ அவர்களுடைய பெயரிடப்பட்டது. தலித்துகள் வருவாய் அளிக்கவே இல்லை. அதனால் அவர்கள் பெயரே இல்லை. ஒரு வேளை "அம்பேத்கர் கிராமம்' என்ற அடையாளம் அளிக்கப்பட்டால், நான் அம்பேத்கர் கிராமத்தில் வாழ்கிறேன் என்பது ஓர் அடையாளம். நான் அம்பேத்கர் கிராமத்தைச் சேர்ந்தவன். அதுதான் என்னுடைய அடையாளம். யார் அம்பேத்கர்? யாரும் சொல்லவில்லை. தற்போது "ஜெய்பீம்' என்பது நேரடியாக ஒரு குறியீடாகிப் போனது. தற்போது பல சாதிகளுக்கிடையில் சமூகப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. குறைந்தபட்சம் அவர்கள் ஒன்றாக அமரத் தொடங்கிவிட்டனர். ஆக, சமூக இயக்கம் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறது. ஏனெனில், அணி திரட்டும் பணி இன்னமும் சமூகவியலாகவே இருக்கிறது. ஆனால், மாற்றத்திற்கான கருவி அரசியல்தான்.

"அரசியல் அதிகாரமே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான திறவுகோல்' என்ற அம்பேத்கரின் மேற்கோள், முன்பின் தொடர்பின்றி (Out of Context) பலராலும் வலியுறுத்தப்படுகிறதே...

ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை எளிமைப்படுத்தும் செயல் இது. இங்குதான் நீங்கள் திறன் குறைந்த தலைவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதை இந்த அளவு எளிமையாக எடுத்துக் கொள்ள முடியாது. கான்சிராம் மிகப் பெரிய தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தவர். எனவே, அரசியல் எல்லாமும் இறுதியும் என்று நான் நினைக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி இன்னமும் ஓர் சமூக இயக்கமே. அது இயக்கமாக இல்லாது போகும் நாளில் செத்துவிடும். அதிகாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு அணி திரட்ட முடியாது. ஏனெனில், அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கப் போவதில்லை. உங்கள் அதிகாரத்தோடு நீங்கள் மனிதராகவும் கருதப்பட வேண்டும்.

இன்று தலித்துகள் மீது வன்கொடுமைகள் நிகழ்த்துவதற்கு முன் அனைவரும் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பார்கள். அதனால்தான் ஒட்டுமொத்த கொலைகள் தற்போது உத்தரப் பிரதேசத்தில் நடப்பதில்லை. அது போன்ற செய்திகளை நீங்கள் பார்க்க இயலாது. 1980களுக்கு முன் பரவலான வன்கொடு மைகளைக் காணலாம். அதிகாரம், போரின் போக்கை மாற்றிவிடும் என்பது மக்களுக்குத் தெரியும்!

ஆனால், நீங்கள் சொல்வது போல தமிழகத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி ஓர் இயக்கமாக இல்லையே?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்த் தலைவர்களிடம் உள்ள சிக்கல் என்று நான் கடந்த ஓர் ஆண்டில் கணித்தது என்னவெனில், தமிழ் தலித்துகள் தற்போது மூன்று வகையான இயக்கங்கள் அல்லது மூன்று வகையான சமூக எதார்த்தங்களில் சிக்கியுள்ளனர். முதலாவதாக, அவர்கள் தமிழ்ப் பண்பாட்டிற்கு பலியாகி இருக்கின்றனர். அவர்களை தமிழ் அடையாளத்தை விட்டு வெளிக் கொணர்வது, மிகுந்த கடினமான ஒன்றாகும். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் தலைவர்களே தமிழ்ப் பண்பாட்டிற்கு பலியாகியிருக்கின்றனர். நான் உங்களுக்கு ஒரு சான்று கொடுக்கிறேன். தமிழ்ப் பண்பாடு, இந்து பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையது. தமிழ்ப் பண்பாடு அல்லது தமிழ் அடையாளம் என்று நீங்கள் கூறும்போது, தமிழ் நாட்டில் தமிழ் தலித்துகளுக்கு எதிராக அதிக வன்கொடுமைகள் நடக்கின்றனவே?! உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் எங்களுக்கு அது குறித்து வேதனையாக இருக்கிறது. இரண்டாவதாக அர்ப்பணிப்பும் பிளவுபட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டால், அது சரியாக உள்ளது. ஆனால், தலித்துகளோடு நேரடியாக இணைந்து பணியாற்றுவது என்று வரும்போது அது நடப்பதில்லை. மக்கள் இடஒதுக்கீட்டிலிருந்து நிறைய பெற்றிருக்கிறார்கள். ஆனால், தலித்துகளோடு இணைந்து பணியாற்றுவது என்று வரும்போது அவர்களுக்கு அந்த அர்ப்பணிப்பு இல்லை. மூன்றாவதாக அம்பேத்கர் இங்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். தி.மு.க. இயக்கத்தால் அம்பேத்கரின் தத்துவங்கள், பெரிதும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

உ.பி.யில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி, முன் அமைப்புகள் மற்றும் அறிமுகங்கள் எதுவுமின்றியே தமிழகத்தில் நுழைந்தது. முன் அமைப்புகள் என்றால், "பாம்செப்' மற்றும் "டிஎஸ்4'. மேலும், தொண்டர்களுக்கும் பயிற்சிக்குரிய போதிய காலம் இல்லை. சிந்திக்கும் திறனே அனைத்திற்கும் அடிப்படை; அதிகாரம் அடிப்படை அல்ல. அதிகாரம் இலக்கை அடைவதற்கான வழி. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்? அது உணர வைக்கப்பட வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியைப் புரிந்து கொள்ளும் முன் தமிழகத்தின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகளுக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் உணர வேண்டும். அடிப்படையில் இவையெல்லாம் அழுத்தம் கொடுக்கும் அமைப்புகள். அவை அரசியல் கட்சிகள் அல்ல. ஒரு குறிப்பிட்ட ஒற்றைத் தத்துவத்தின் அடிப்படையில் அவை எழுந்தன. எந்த சிந்தனை வழிமுறையும் இல்லை. இலக்கியம் இல்லை. கட்டமைப்பு இல்லை. உண்மையில் அவை தனித்தனியானவை. ஒரு குறிப்பிட்ட சாதியினர் வேறு. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி இப்படி தொடங்கப்படவில்லை. அது ஒரு குழுவாகத் தொடங்கப்பட்டது. அதற்கு ஓர் அடிப்படை உள்ளது. அதற்கு உள்ளடக்கம் உள்ளது. அது சமூக இயக்கங்களைப் புரிந்து கொண்டுள்ளது. அது மற்றவர்களைப் போல இல்லை. தமிழ் நாட்டிலும் அதுதான் வழிமுறை. முதலில் அடிமட்ட அளவில் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மாவட்டம்தோறும்... மாவட்ட அளவில் மட்டுமல்ல; வட்ட அளவிலும், கிராம அளவிலும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் அரசியல் இயக்கம் உருப்பெறாது. இவை அனைத்திற்கும் ஒரு தெளிவான திட்டம் எங்களிடம் உள்ளது. காற்றுவாக்கில் எதையும் நாங்கள் சொல்லவில்லை. தெளிவான திட்டங்கள் உள்ளன.

தொல். திருமாவளவனுக்கோ, டாக்டர் கிருஷ்ணசாமிக்கோ ஓர் அரசியல் கட்சிக்கான பார்வை இல்லை. அவர்களிடம் இருப்பது பிரச்சினைகளின் அடிப்படையிலான இயக்கம். ஒரு நாள் தனியார் துறையில் இடஒதுக்கீடு பற்றி பேசுவார்கள்; அடுத்த நாள் கோயில் நுழைவு; பிறகு பஞ்சமி நிலம்; மற்றொரு நாள் சிலைப் பிரச்சனை. ஓர் அரசியல் கட்சியை நடத்தும் விதம் இதுவல்ல. ஓர் அரசியல் கட்சி தனக்கென ஒரு செயல் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். இது எதிர்வினை அரசியல். அழுத்தம் கொடுக்கும் திட்டம். அதனால் நீங்கள் மற்றவர்களின் செயல் திட்டத்திற்கு எதிர்வினை ஆற்றுகிறீர்கள். கான்சிராம் உறுதியானவர். மாயாவதியும் அப்படித்தான். அவர்கள் மற்றவர்களின் செயல் திட்டத்திற்கு எதிர்வினை ஆற்றுவதில்லை. ஒரு வன் கொடுமை நடந்தால்கூட, அவர்கள் அங்கு சென்று போராட்டம் நடத்துவதில்லை. இம்முறையில் சென்றால் உங்கள் செயல் திறனை நீங்கள் இழந்துவிடுவீர்கள். உங்களை மட்டுமே சார்ந்து உங்கள் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். எதிர் வினை ஆற்றுவதன் மூலம் உங்கள் ஆற்றல் வீணாக்கப்படுகிறது. இதைத்தான் அவர்கள் நெடுங்காலமாக செய்து வருகிறார்கள். உங்களை அணி திரள விடமாட்டார்கள். அதனால் உங்கள் ஆற்றலை நீங்கள் திறம்படப் பயன்படுத்த வேண்டும். சகோதரத்துவ அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தலித்துகளும் சிறுபான்மையினரும்; தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும். இவை அனைத்திற்கும் தலித்துகள் தலைமை வகிப்பார்கள். இதுதான் மக்களை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறை. ஆற்றலை சேமிக்கும் வழி. அதை சரியான திசையில் செலுத்தும் வழி.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலித் - பார்ப்பனர் கூட்டணி குறித்து உங்கள் கருத்து என்ன?

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 சதவிகித சட்டமன்ற உறுப்பினர்கள் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 34 பேர் மட்டுமே பார்ப்பனர்கள். 17 சதவிகித பார்ப்பனர்கள் மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அப்படியென்றால் 83 சதவிகித பார்ப்பனர்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்கவில்லை. அமைச்சரவையைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் 100 சதவிகிதம் தலித். அவைத் தலைவர் 100 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர். 20 அமைச்சர்களில் 8 தலித்துகள் மற்றும் 4 பார்ப்பனர்கள். 40 சதவிகிதத்தினர் தலித்துகள். 20 சதவிகிதம்தான் பார்ப்பனர்கள். தனித்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர்களிலும் தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள் 36 சதவிகிதம். முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களோடு சேர்த்து பார்ப்பனர்கள் வெறும் 13.6 சதவிகிதம் மட்டுமே. வாக்கு விகிதம், அமைச்சரவையில் பங்கு விகிதம் இவற்றை வைத்துப் பார்க்கும்போது, இது தலித் - பார்ப்பனர் கூட்டணி அல்ல. மாறாக இது இன்னமும் பகுஜன் கூட்டணியே. அதில் பார்ப்பனர்களும் "உயர் சாதி'யினரும் அங்கம் வகிக்கிறார்கள். ஏனெனில், 18 சத்திரியர்களும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வென்றிருக்கிறார்கள். "உயர் சாதி'யினர், ஒருவரோடு ஒருவர் இணக்கம் உள்ளவர்கள் அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பார்ப்பனர்களுக்கும் தாகூர்களுக்கும் இடை யிலான சண்டை என்பது புகழ் பெற்றது.

பொருளாதார அளவுகோலின்படி, ஆதிக்க சாதியினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் மாயாவதி கூறுகிறாரே?

நீங்கள் மாயாவதியின் அறிக்கையை கவனமாகப் படிக்கவில்லை. அவர், இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் இருக்கலாம் என்றார். ஆனால், மத்திய அரசு அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் நானும் அதைப் பரிசீலிப்பேன் என்றுதான் கூறினார். முதலில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரட்டும். இது நடக்குமென நினைக்கிறீர் களா? ஒருபோதும் நடக்காது. ஏனெனில், அரசமைப்புச் சட்டத்தில் அதற்கு இடமில்லை. நம் தலைவர்களுக்கும் அரசியல் விளையாட்டு விளையாடத் தெரியும் என் பதை ஏன் நம் மக்கள் புரிந்து கொள்ள மறுக் கிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை!

தலித் போராட்டம் எதை மய்யமாகக் கொண்டிருக்க வேண்டும்?

மூன்று வகையான தேவைகள் உள்ளன. உடல் ரீதியானவை. உளவியல் ரீதியானவை. மற்றும் தன்னிறைவு. உடல் தேவைகளை யாரும் நிறைவேற்றிக் கொள்ள இயலும். ஒரு நாய்கூட தன் வயிற்றை நிரப்ப வேண்டியவற்றை தேடிக் கொள்ள இயலும். தலித்துகளுக்கு அது சிக்கல் அல்ல. தலித்துகளின் சிக்கல் இரண்டு : ஒன்று உளவியல் தேவை. அவர்களுக்கு சொந்த உடைமை கள் தேவை. அவர்கள் சமூகத்தின் ஓர் அங்கமாக இருக்க விரும்புகின்றனர். அவர்கள் ஒதுக்கப்படுவதால், அவர்கள் தாங்கள் சமூகத்தின் அங்கம் அல்ல என்று கருதுகிறார்கள். அதனால் அவர்களுக்கு ஒரு சமூகம் தேவை. அதனால்தான் அம்பேத்கர், ஒரு பெரிய சமூகம் வேண்டுமென்றார். ஏனெனில், பவுத்தத்தை தழுவினால் உங்கள் சொந்த சமூகத்தின் பெரிய அங்கமாக நீங்கள் மாறுவீர்கள்.

அடுத்து தன்னிறைவு. மக்கள் மதத்தின் பாற்பட்டே வாழ்கிறார்களா? மதம் மாறிவிட்டீர்கள். சரி, உங்கள் பொருளாதார தேவைகள் என்னவாயின? எப்படி தன்னிறைவு அடைவீர்கள்? பவுத்தராக இருப்பதால் மட்டும் வாழ்ந்துவிட இயலுமா? அல்லது கிறித்துவ மதத்திற்கு மாறிவிட்டால் வாழ்ந்து விடலாமா? வேறு ஒன்றும் செய்ய வேண்டாமா? எப்படி தன்னிறைவு அடைவீர்கள்? அதற்குப் பல நிறுவனங்கள் தேவை. அரசியல் இருக்கிறது. பொருளாதாரம், கலை, பண்பாடு எல்லாம் இருக்கின்றன. அவை அனைத்திலும் நீங்கள் பங்கு வகிக்க வேண்டும். பாபாசாகேப் இரு வழிகளையும் தந்திருக்கிறார் : அரசியல் சட்டம் மற்றும் மதம். நீங்கள் கடந்து செல்ல வேண்டுமெனில், உங்களுக்கு அரசியல் சட்டம் இருக்கிறது. அரசியல் சட்டத்தில் நான் பொதித்துள்ள உரிமைகளைப் பெறுங்கள், நடைமுறைப்படுத்துங்கள். ஓர் அரசியல் கட்சியை அமைக்கும் எண்ணம் அவருக்கு இல்லையா? மதமாற்றம், அரசியல் மற்றும் கல்வி இவற்றிற்கு இடையே எந்த முரண்பட்ட உறவும் இருப்பதை நான் காணவில்லை.

ஓர் இந்து, ஒரு பார்ப்பனராக இருக்கிறார்; ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருக்கிறார்; பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கிறார். ஆனால், நீங்கள் ஒரு பவுத்தராக இருந்து கொண்டு, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் "பாம்செப்' என்ற சமூக இயக்கத்திலும் பங்கு வகிக்க இயலாதா? ஏனெனில், மனிதர்கள் பன்முக அடையாளங்களை உடையவர்களாகவே வாழ்கிறார்கள். நமது பிரச்சினை என்னவெனில், நாம் ஒற்றை அடையாளத்தோடு வாழ விரும்புகிறோம். நான் ஒரு பெரியாரியல்வாதி. நான் ஒரு அம்பேத்கரியவாதி. அவ்வளவுதான். ஆனால், அவை இறுதி இலக்கை அடையும் வழி மட்டுமே. இறுதி நோக்கம் என்பது நாம் இந்த வாழ்க்கையை எவ்வாறு மகிழ்ச்சியுடனும், நமது சகோதரர்களை மீட்டெடுக்கவும் வாழ்கிறோம் என்பதுதான். நான் ஒரு பவுத்தன். சரி. ஆனால், நான் உன்னிடம் பேச மாட்டேன். உன்னை வளர்த்தெடுக்க முயலமாட்டேன். அது பலனளிக்குமா? அதனால்தான் பாபா சாகேப் கேட்டார். பிக்குகள் நண்பனாக, தத்துவாசிரியனாக, வழிகாட்டியாக இருக்கப் போகிறார்களா அல்லது துறவிகளாக மட்டுமா என்று. அவரே அதற்கு விடையும் அளித்திருக்கிறார். பிக்குகள் வெகு மக்களுக்கு நண்பர்களாக, தத்துவாசிரியர்களாக, வழிகாட்டிகளாக இருந்தால், பவுத்தம் மிக வேகமாக வளரும் என்றார்.

தலித் இயக்கத்திற்கு ஒரு பரந்த வெளி இருக்கிறது. ஒரு ஜனநாயக சமூகத்தில் நமக்கான உரிமைகள் இருக்கும். பார்ப்பனர்களை நாம் மூன்று வகையில் எதிர்கொண்டால் - அரசியல், பொருளாதாரம், சமூகம் - சாதி அழித்தொழிக்கப்படும். நாம் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. பார்ப்பனரை அழைக்க வேண்டியதில்லை. கடவுளிடம் செல்ல வேண்டியதில்லை. நமக்கென ஒரு மதம் இருக்கும். ஆனால், அரசியலில் இதை எப்படி செய்வீர்கள்? ஏனெனில், அவர்கள் தான் சட்டதிட்டங்கள், கொள்கைகள் அனைத்தையும் முடிவு செய்கிறார்கள். வளர்ச்சி எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை அவர்கள் பங்கிடுவார்கள். அதனால் நாம் அதில் பங்கெடுக்க வேண்டும். நீங்கள் அதில் ஓர் அங்கமாக இருந்தால், பார்ப்பனர்கள் வந்து உங்கள் காலைத் தொடுவார்கள். அவர்கள்தான் எப்போதும் நடப்புகளையும் கொள்கைகளையும் வகுத்தனர் என்பது இல்லை. அவர்களும் பங்கெடுப்பார்கள். இந்த இடத்தில்தான் பிரதிநிதித்துவ ஜனநாயகம், பங்கெடுக்கும் ஜனநாயகமாக மாற வேண்டியுள்ளது.

தலித் அரசியல் என்னவென்று உங்களால் வரையறுக்க இயலுமா?

தனித்தனி குழுக்கள் தங்கள் அளவில் வரையறுத்துக் கொள்ளலாம். ஆனால், தலித் சமூகத்தின் - அறிவுசார் சமூகத்தின் ஓர் அங்கம் என்ற அளவில் நான் உணர்ந்தது என்னவெனில், தலித் அரசியலை எடுத்துக் கொண்டாலும், பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியலை எடுத்துக் கொண்டாலும் - அதன் அடிப்படை தலித்துகளே. ஏனெனில், ஒரு தலைவர் இருக்கும் நிலையில் அதனிலிருந்து வேறுபடுத்த இயலாது. அதுதான் உங்களை அடையாளப்படுத்திக் கொள்வதன் தொடக்க நிலை. தலித் அடையாளத்தை உடைக்கப் போகிறேன் என்று சொன்னால், அது கடினம். ஏனெனில், தலித் அடையாளத்திற்கான குறியீடுகள் உங்களிடம் உள்ளன. அம்பேத்கர் எப்போதும் தலித் சமூகத்தினூடே அடையாளப்படுத்தப்படுகிறார்.

உங்களுக்கு பூர்வக்குடி அடையாளம் (Mulnivasi Identity) வேண்டுமெனில், நீங்கள் வேறு விதமாக அணுக வேண்டும். அனைவரும் சொல்வது போல் அது அத்தனை எளிதல்ல. ஓர் அடிப்படையான குறியீடும் அடையாளமும் இருக்கும்போது, அதை விட்டு வெளியேறுவது கடினமானது. நாம் செய்யக் கூடியதெல்லாம் நமது தளத்தை விரிவுபடுத்துவது மட்டுமே. அதை எவ்வாறு செய்வீர்கள்? மேலும் அடிப்படைகளை இணைப்பதன் மூலம் விரிவுபடுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோரையும், மதம் மாறிய சிறுபான்மையினரையும் இணைத்துக் கொண்டதைப்போல. 1978 முதல் 2007 வரை முப்பது ஆண்டுகள் அணி திரட்டலுக்குப் பின்னரும் எத்தனை பேர் "பகுஜன்' (பெரும்பான்மை மக்கள்) கருத்தியலுக்கு மாறியிருக்கின்றனர்? சமூக அளவில் வெகு சிலரே பகுஜன் சமாஜ் கருத்தியலுக்கு மாறி யுள்ளனர். அரசியல் தளத்தில் மட்டுமே "பகுஜன்' கருத்தியல் உருவாக்கப்பட்டுள்ளது. "பாம்செப்' குறித்துப் பேசுகிறோம். எத்தனை பிற்படுத்தப்பட்டவர்கள் "பகுஜன்' கருத்தியலை ஏற்றுக் கொண்டுள்ளனர்? மிகக் குறைவானவர்களே. ஏனெனில், இயற்கையான அடையாளம் அப்படியே இருக்கிறது. அதே குறியீடுகளையும் மொழியையும் மாற்றாமல் அடையாளத்தை மாற்ற இயலாது.

பிறப்பின் அடிப்படையில் அல்லாத நிலைகளான அரசியல், பொருளாதாரம், கல்வி இவற்றின் மூலம் மட்டுமே அடையாளங்களை உடைக்க இயலும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றின் மூலம் சாதியை அழித்தொழிக்க இயலும். சாதி அடையாளத்தை இவற்றில் அமிழ்த்திவிட முடியும். பிறப்பின் அடிப்படையிலான நிறுவனங்களில் இதனை நாம் செய்ய இயலாது. ஏனெனில், அவை அத்தனை எளிதாகப் போகாது. சான்றாக, ஒரு பிற்படுத்தப்பட்டவர் எப்படி தலித்துகளின் அங்கமாக இருக்க இயலும் என்று நாம் எப்போதும் சொல்கிறோம். ஏனெனில், அவர்கள் தான் தலித்துகளை கொல்ல பயன்படுத்தப்படுகிறார்கள். அதனால் நாம் பகுஜன் தத்துவத்திற்கான ஓர் அடையாளத்தை செதுக்க வேண்டும். சாதியை அழித்துவிட்டே அந்த அடையாளத்தை செதுக்க வேண்டுமானால், பிறப்பின் அடிப்படையில் அல்லாத நிறுவனங்களில் இருந்தே தொடங்க வேண்டும். இங்கே அதிக முரண்பாடுகள் இன்றி மக்கள் இணையலாம். சமூக உறவுகளில் இருப்பதைப் போன்ற தடைகள் இருக்காது. அரசியல் அதிகாரம் இருந்தால், கொள்கைகளை வகுக்கலாம். பொருளாதார கொள்கைகூட வைத்துக் கொள்ளலாம். சான்றாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இனி கிடையாது என மாயாவதி அறிவித்து விட்டார். அவை நிறுத்தப்பட்டு விட்டன. ஆக, வளர்ச்சியும் உங்கள் திட்டப்படியே இருக்கும்.

பிற்படுத்தப்பட்டவர்களையும் தலித்துகளையும் எடுத்துக் கொண்டால், பிற்படுத்தப்பட்டவர்கள் பெரும்பான்மையினர் அல்ல. அனைத்து பிற்படுத்தப்பட்டவர்களும் பொருளாதாரம், அரசியல், சமூக அந்தஸ்து இவற்றில் சமநிலையில் இல்லை. அவர்களுக்கிடையே வேறுபாடுகள் இருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் 5 சாதிகள் உள்ளன. பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக நிலை களில் அவர்கள் அணி திரண்டுள்ளனர் : யாதவர்கள், குர்மிகள், ஜாட், குஜ்ஜார் மற்றும் தோத். அங்கு மொத்தத்தில் 79 பிற்படுத்தப்பட்ட சாதிகள் உள்ளன. அய்ந்தை விட்டுவிட்டால் 74 சாதிகளின் நிலை என்ன? மொத்த இதர பிற்படுத்தப்பட்டவர்களில் 70 சதவிகிதமாக அவர்கள் உள்ளனர். இந்த 74 சாதியினர், ஏறத்தாழ தலித்துகளை ஒத்த பொருளாதார மற்றும் அரசியல் நிலைகளில் உள்ளனர். கிராமப்புறங்களில் சமநிலையிலேயே உள்ளனர். இவர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டினால், நீங்களும் நானும் சமூக இயக்கம் என்ற அளவில் ஒன்றுதான். இப்படித்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் டி.எஸ்.4 மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வரத் தொடங்கினர்.

தற்போது உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற அவைத் தலைவராக ஒரு பிற்படுத்தப்பட்டவர் இருக்கிறார். இந்த வகையில் பகுஜன் கூட்டு உருவாகிறது. சிறுபான்மையினரில்கூட "உயர் சாதி' சிறுபான்மையினரான ஷேக், சயீத், பட்டாணிகள் அல்ல; கீழ்நிலையில் உள்ள உழைக்கும் பிரிவினருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அரசியல் அதிகாரம் அடைந்த உடன் அந்த பிம்பத்தை அனைவருக்கும் அளிக்கலாம். உங்களுக்கு என்று சிறிதாக இருந்தபோதும் நிலையான ஓரிடம் இருந்தால், பிறர் உங்களை நோக்கி வரத் தொடங்குவார்கள். அதுதான் இப்போது நடந்தது. தலித்துகள் - பிற்படுத்தப்பட்டவர்கள் - சிறுபான்மையினர் இவர்கள் கூட்டாக ஒரு நிலையான இடத்தைப் பெற்றிருந்ததால், நமக்கு சிறிய அளவில் ஆதரவு கிடைக்கலாம் என ஆதிக்க சாதியினர் கருதினர். முதலில் உங்களுக்கான நிலையான இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு வலுவõன அரசியல் மற்றும் சமூக நிலையைப் பெற மிக முக்கியமானது. இது தமிழ்நாட்டிலும் நடக்கலாம்.

சந்திப்பு : பாண்டியன்
Pin It