அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! நம் மக்களிடையே பேசுவதற்காக நான் லூதியானாவிற்கு தற்பொழுதுதான் முதல் முறையாக வந்திருக்கிறேன். நீங்கள் திரளாகக் கூடியிருப்பது கண்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில், நடைபெற இருக்கும் தேர்தலில் பல்வேறு கட்சிகள் பங்கேற்க விருக்கின்றன. இத்தேர்தலில் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பும் (scheduled castes federation) தமது வேட்பாளர்களை முன்னிறுத்துகிறது. சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களில் மட்டுமல்லாது, நம்முடைய வாக்குகள் கணிசமாக உள்ள சில பொதுத் தொகுதிகளிலும் நமது உறுப்பினர்கள் போட்டியிடுவார்கள். நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றே நான் நம்புகிறேன்.
நம்முடைய வேட்பாளர்களின் வெற்றி, நம் மக்களையே பெருமளவில் சார்ந்திருக்கிறது. நம்முடைய மக்கள் அனைவரும் நமது வேட்பாளர்களுக்கு வாக்களித்தால், வெற்றி உறுதியாகக் கிடைக்கும். எனவே, அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குமான ஒரே அமைப்பான "பட்டியலினக் கூட்டமைப்பு' உறுப்பினர்களுக்கு, நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்...
பல்லாண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகுதான், நாம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில முக்கிய அரசியல் உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். இருபது ஆண்டுகளாக நான் ‘மகாத்மா' காந்திக்கு எதிராகப் போரிட்டேன். அவர், நமக்கு தனித்துவமான சிறப்பு உரிமைகளை வழங்கும் திட்டத்திற்கு எதிராக இருந்தார். தீண்டத்தகாத மக்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டால், அவர்கள் ஒருபோதும் இந்து அமைப்புக்குள் வர மாட்டார்கள் என்று அவர் வாதிட்டார். அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இந்துக்களிடமிருந்து விலகி, தனித்தே நின்றுவிடுவார்கள் என்றார். வட்டமேசை மாநாட்டிலும்கூட, நம்டைய இரட்டை வாக்குரிமை கோரிக்கையை அவர் எதிர்த்தார். பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு நாம் ஓரளவு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளோம். தற்பொழுது, சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதி இடங்களுக்கு, நாம் நமது பிரதிநிதிகளை அனுப்ப முடியும்.
இத்தகைய நம் உரிமைகளை எல்லாம், பல அரசியல் கட்சிகளும் பறித்துவிட முனைப்பாக இருக்கின்றன. அவர்கள் நம்முடைய வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, அவர்களுடைய ஆதரவாளர்களை, நமக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்புகின்றனர். அவர்களுடைய நோக்கங்களை நீங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். தாழ்த்தப்பட்ட மக்கள் தற்பொழுது இருக்கும் நிலையிலேயே நீடித்திருக்க வேண்டும்; அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிவிடக் கூடாது; நம் மக்கள் காலங்காலமாக செய்து வரும் இழிவான தொழில்களையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எனவே, வரும் தேர்தலில் நீங்கள் வாக்களிப்பது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம்டைய வாக்குகள் மூலம் உண்மையான பிரதிநிதிகளே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சட்டத்தில் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் பாதுகாக்கப்படும்.
சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் நம்டைய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், நாம் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. சுதந்திரம் என்பது கேலிக்கூத்தாகவே இருக்கும். இது, ஆதிக்க சாதியினருக்கான சுதந்திரமாகவே இருக்கும்; நமக்கானதாக இருக்காது. ஆனால், நம்டைய உண்மையான பிரதிநிதிகள், சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் இருந்தால்தான், நம்முடைய பிரச்சினைகளும், கோரிக்கைகளும் தீர்க்கப்படும், அப்பொழுதுதான் நமது குழந்தைகள் போதிய கல்வியைப் பெற முடியும்; நம்முடைய வறுமை ஒழியும், அப்போதுதான் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நமக்கு சமமான பங்கு அளிக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டிருப்பினும், பிற கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி இதில் தேவையின்றி தலையிடுகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில், தங்களுடைய ஆதரவாளர்களையே நிறுத்துகின்றனர். காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள், தங்களுடைய கட்சித் தலைவர்களின் நலன்களுக்கு எதிராக, நம்டைய நலன்களைப் பாதுகாப்பார்களா? அவர்கள் நமக்காக என்ன செய்வார்கள்?
காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் பற்றி, நான் சில செய்திகளை சொல்ல விரும்புகிறேன். அந்த முப்பது உறுப்பினர்களும், கடந்த நான்கு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர்கூட, நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் பற்றி கேள்வி எழுப்பியதில்லை. அப்படியானதொரு கேள்வி எழுப்பப்பட்ட போதும், அவைத் தலைவர் இதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அத்துடன் இப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.
(28.10.1951 அன்று, லூதியானாவில் ஆற்றிய உரை)