('அவுட்லுக்' ஆங்கில வார இதழில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் முதல் பகுதியை இவ்விதழில் வெளியிடுகிறோம். அடுத்த இதழில் கட்டுரை நிறைவுறும். தமிழாக்கம்: அ.முத்துக்கிருஷ்ணன்)

Arunthathi Roy
அவதூறுகள் வேடிக்கையாகக்கூட இருக்கலாம். அதுவும் மத போதகர்களின் பீடத்தில் அவர்களின் ஒளிவட்டம் அதிரடியாகப் பறிக்கப்படும் பொழுது, அது பெரும் வேடிக்கைதானே! சில அவதூறுகள் சிதையும் தன்மை கொண்டவை. அவை அவதூறுகள் சுமத்துபவரைவிட, சுமத்தப்பட்டவருக்கு கடும் பாதிப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தும். இத்தகையதொரு சூழலில்தான் நாம் தற்பொழுது இருக்கிறோம். இந்த நிலநடுக்கத்தின் மய்யப் புள்ளியில் இருப்பவர், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியான ஒய்.கே. சபர்வால். இவர், அண்மைக் காலம் வரை, இந்த நாட்டின் பலம் பொருந்திய நிறுவனத்தை வழிநடத்தியவர். அது உச்ச நீதிமன்றம்.

ஒரு முன்னாள் தலைமை நீதிபதியின் மீது அவர் பணி புரிந்த காலத்தில் அவதூறுகள் நிகழ்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிறகு, அறுவை சிகிச்சை செய்து தலையை மட்டும் வெட்டி எடுத்து, எஞ்சியுள்ள நிறுவனத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினமானது. மேலும், நீங்கள் அந்த நிறுவனத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தால், நேரடியாக சிறைச் சாலையில் வரவேற்று அடைக் கப்படலாம். எங்களில் சிலர் அதற்கான விலை என்ன என் பதை உணர்ந்துள்ளோம். நரி, கோழி, தானிய மூட்டை என மூன்றையும் ஒவ்வொன்றாய் எடுத்துக் கொண்டு ஆற்றைக் கடப்பது போன்றது அது. ஆற்றில் தண்ணீர் வெள்ளமாய் பாய்கிறது. எனது படகில் ஓட்டை விழுந்து தண்ணீர் கசிகிறது. எனக்கு நல்வாய்ப்பு கிடைக்கட்டும்.

பெரும் நீதி வழங்கும் இடமான உச்ச நீதிமன்றம், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை மட்டும் நிலை நாட்டவில்லை; அது நுண்ணிய அளவில் நம் வாழ்வையும் மேலாதிக்கம் செய்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சிறியதும், பெரியதுமாகப் பல்வேறு தளங்களில் பயணப்படுகிறது. சுற்றுப்புறச் சூழலுக்கு எது உகந்தது -எது உகந்ததல்ல; அணைகள் கட்டப்பட வேண்டுமா; நதிகள் இணைக்கப்பட வேண்டுமா; மலைகள் இடம் பெயர்க்கப்பட வேண்டுமா; காடுகள் அழிக்கப்பட வேண்டுமா என அது தீர்மானிக்கிறது. நம் நகரங்களின் தோற்றம் எப்படி அமைய வேண்டும்; அங்கே யார் வாழ வேண்டும் என்பதையும் அதுதான் தீர்மானிக்கிறது.

சேரிகள் அப்புறப்படுத்த வேண்டுமா; கடைகள் மூடப் பட வேண்டுமா; தெருக்கள் அகலப்படுத்தப்பட வேண்டுமா; தொழிற்சாலைகளை மூடுவதா-இடம் மாற்றுவதா அல்லது தனியார்மயப் படுத்துவதா, பாடப் புத்தகங்களில் என்ன இடம் பெற வேண்டும்; பொது போக்குவரத்தில் என்ன எரிபொருள் பயன்படுத்தப்பட வேண்டும்; போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் வசூலிக்க வேண்டிய அபராதத் தொகையின் பட்டியல் எனப் பலவற்றையும் நீதிமன்றங்கள்தான் தீர்மானிக்கின்றன.

நீதிபதிகளின் வாகனங்கள் மீது எந்த வண்ணத்தில் (அது சிவப்புதான்) விளக்குகள் இருக்க வேண்டும், அது சிமிட்ட வேண்டுமா (வேண்டும்தான்) வேண்டாமா என்று கூட அதுதான் முடிவு செய்கிறது. தன்னை உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு என அழைக்க விரும்பும் இந்த தேசத்தின் மக்கள் சார்ந்த கொள்கைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் முதன்மை நடுவராக நீதிமன்றம் விளங்குகிறது.

வஞ்சப் புகழ்ச்சியாகக் கூற வேண்டுமெனில், நீதி சார்ந்த செயல்பாடுகளின் மீது அரசியல்வாதிகள் மிகப் பெருமளவுக்கு மனக்குறை கொண்டிருந்தனர். 1980 வாக்கில், விளிம்பு நிலை மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்கள் நியாயம் பெரும் வகையில் நீதிமன்றத்தின் கதவுகள் அகலத் திறந்தன. இதை நாம் பொதுநல வழக்குகளின் தொடக்க காலம் என்றுகூட வரையறுக்கலாம். சிறிய நம்பிக்கைகளும் உண்மையான எதிர்பார்ப்புகளும் ஒன்றிணைந்தன. நீதிமன்றத்தை மக்கள் அணுக, பொதுநல வழக்குகள் வழிவகை செய்தன.

அதேவேளையில் எதிர்மாறாகவும் அது இயங்கியது. நீதிமன்றங்களும் மக்களின் மீது ஆளுமை செலுத்தக்கூடிய அளவுக்கு நெருங்கியது; இதுவரை நீதித்துறையின் ஆளுமைக்கு வராத பல தளங்களுடன் அது தன் தொடர்புகளை ஊடுறுவி ஏற்படுத்தியது. அதனால் பொதுநல வழக்குகள்தான் நீதிமன்றங்களை இத்தனை பலம் பொருந்தியதாக மாற்றின என்றுகூட நாம் வாதிடலாம். கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு விதமான தீர்ப்புகளின் வழியாக, ஒரு நாடகக் காட்சியைப் போல நீதிமன்றங்கள் தங்களின் அதிகாரத்தின் எல்லைகளை விரித்துக் கொண்டே வருகின்றன.

இன்று, நவதாராளவாதம் தனது கோரப்பற்களை நம் வாழ்விலும் கற்பனையிலும் ஆழப் பாய்ச்சியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வாழ வழியற்ற நிலையில், தங்களின் உறைவிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இது, இந்தியா தனது இலக்கை (இந்து அல்லாத 10 சதவிகித வளர்ச்சி விகிதம்) அடைவதற்கான உறுதி கொண்ட முன்னோட்டம். அதைவிட வளர்ந்து வரும் கிளர்ச்சிகளை ஒடுக்க, பல விரிவான வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான தந்திரங்களில் ஒன்றுதான் நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தினர் தங்களின் விருப்பமாகக் கருதும் ‘சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது.' சட்டத்தின் ஆட்சி என்கிற இந்த முதுமொழி அல்லது நல்லொழுக்க அறிவுரை, பல நேரங்களில் நீதியின் அடிப்படை மெய்மையிலிருந்து வெகு தூரம் துல்லியமாக விலகிவிடுகிறது (விலகிவிடலாம்).

சட்டத்தின் ஆட்சி என்கிற இந்த சொற்றொடர், அது இயங்கும் தளத்தைப் பொறுத்து அர்த்தம் பெறுகிறது. அந்த சட்டம் யாரை பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டது என்பதைப் பொறுத்து அது அர்த்தம் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, 90களின் தொடக்கத்திலிருந்து பல சட்டங்கள் ஒரு வித ஒழுங்கமைவுடன் நீக்கப்பட்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம், மக்களின் அடிப்படை உரிமைகளைக் கோரும் சட்டங்கள் (வீடு/சுகாதாரம்/கல்வி/ குடிநீர்). பன்னாட்டு நிதி ஆணையம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பல்வேறு பன்னாட்டு நிதி நிறுவனங்கள், தங்களின் கடன்களை வழங்குவதற்கு முன்பாகவே இந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என முன்நிபந்தனை அல்ல; நிபந்தனையை விதித்தன, கருப்பு- வெள்ளையாக. (இதைப் பண்பட்ட மொழியில் உள்கட்டமைப்பு சீரமைப்புத் திட்டம் –Structural Adjustment Program)

இந்தச் சூழலில் சட்டத்தின் ஆட்சி என்பதன் பொருள் என்ன? ‘அமெரிக்காவின் மக்கள் வழி வரலாறு' என்ற நூலின் ஆசிரியர் ஹோவார்டு சின், பொருத்தமான வார்த்தைகளில் பின்வருமாறு விளக்குகிறார் : "சமனற்ற முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டு வரும் சொத்தையும் அதிகாரத்தையும், சமமான முறையில் பகிர்ந்தளிப்பது- சட்டப்படியான ஆட்சியின் வேலை அல்ல. சமனற்ற நிலை உறுதி செய்யப்படுவதை, சட்டத்தின் அதிகாரமாக மாற்றுவது தான் சட்டத்தின் ஆட்சி. சொத்தையும் வறுமையையும் அது மறைமுகமாக, மிகவும் சிக்கலான பங்கீட்டிற்கு உட்படுத்தி, பாதிப்புக்கு ஆட்படுபவர்களை அது கையறு நிலையில் நிர்கதியாய் விடுகிறது.''

தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் பல முடிவுகளை எடுப்பதில் குழம்பிப்போய் திகைத்து நிற்பதை நாம் காண்கிறோம் (எடுத்துக்காட்டாக, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களிலிருந்து இடம் பெயர்வது, நகரங்களிலிருந்து இடம் பெயர்வது, அவர்களின் பணிகளிலிருந்து விரட்டப்படுவது). அதனால் இந்த சிக்கல்கள் நிறைந்த முடிவுகளை எடுக்கும் பொறுப்பு, நீதிமன்றத்தினுடையதாக மாற்றப்பட்டு வருகிறது. இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது. இதுதான் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவது.

நீதிமன்ற அதிகாரத்தின் விஸ்தீரணம் பெருகும் அதேவேளையில், அதனைக் கூடுதலாக கண்காணிக்கும் எந்த நடைமுறையும் இங்கில்லை. மாறாக, அதிலிருந்து தொலை தூரமாகி விட்டது. பொது வாக ஜனநாயக கட்டமைப்பில் எல்லா நிறுவனங்களின் செயல்பாடுகளை யும் ஏதோவொரு ஏற்பாட்டின் பெயரில் கண்காணிக்கவும், அதன் திறன் சார்ந்து மதிப்பீடு செய்யவும் வகை செய்யப்பட்டிருக்கும். இங்கே அப்படி எந்த ஏற்பாட்டையும் நீதித்துறை அனுமதிக்கவில்லை. சுதந்திரமான ஒழுங்குமுறைக் குழு ஒன்று நீதித்துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்கிற (Committee for Judicial Accountability) பரிந்துரையைக்கூட நீதித்துறை எதிர்த்தது. இந்தியத் தலைமை நீதிபதியின் ஒப்புதலின்றி, எந்த நீதிபதியின் (நடப்பில் உள்ள நடைமுறை) மீதும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய இயலாது என அது ஆணையிட்டது (அப்படி இதுவரை அனுமதி வழங்கப்பட்டதேயில்லை). நீதித்துறை தன்னை தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்தும் பாதுகாத்துக் கொண்டது. நம் ஆயுதங்களில் மிக எளிமையானது அது.

நீதித்துறையின் ஆயுதங்களில் மிகவும் பயனுள்ள, துரித விளைவுகளை தரக்கூடியதாக நீதிமன்ற அவமதிப்பு திகழ்கிறது. அது தனக்கு எதிராகவோ, நீதியின் மாண்பைக் குறைக் கும் வகையில் யாரும் பேசினாலோ, செயல்பாடுகளில் ஈடுபட்டாலோ-அதனை கிரிமினல் குற்றம் என்கிறது. அந்தச் சட்டம் மறைபொருள் கொண்ட மொழியில் உள்ளது. அந்த மொழி இதைவிட மத்தியகால பெண்ணிய நாணம், தன்னடக்கம் ஆகியவற்றை நிலைநாட்ட நன்கு பொருந்தும். விமர்சகர்களை; சங்கடங்கள் ஏற்படுத்தும் கேள்வி கேட்பவர்களை மட்டுப்படுத்துவதற்கும், சிறையில் அடைப்பதற்கும் விருப் பப்படியான அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது.

ஊடகங்கள் கூட நீதித்துறை தொடர்பான தகவல்கள், செய்திகள் என்கிற பொழுது கொஞ்சம் சுருங்கிக் கொள்வது பெரும் வியப்புக்குரியதல்ல. நீண்ட கிரிமினல் வழக்குகள், சிறைவாசம் ஆகியவற்றை சந்திக்கும் துணிச்சலுடைய பத்திரிகையாளர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். அண்மைக்காலம் வரை, உண்மையைக்கூட நேர்மை வாய்ந்த தற்காப்பாக இந்த நீதிமன்ற அவ மதிப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ள வில்லை. உங்களிடம் ஒருவேளை நீதிபதி ஒருவருக்கு எதிராக முதற் காட்சியில் தோன்றுகிற (Prima Facie) சாட்சியம் உள்ளது. அவர் யாரையேனும் தாக்கியுள்ளார். பலாத் காரம் புரிந்துள்ளார் அல்லது யாருக்கேனும் சாதகமாகத் தீர்ப்பு வழங்க லஞ்சம் பெற்றுள்ளார் என்கிற பொழுது, நீங்கள் அந்த சாட்சியத்தைப் பெரிதுபடுத்தினால், அது கிரிமினல் குற்றம். ஏனென்றால், அது நீதித்துறையின் மாண்பை "அவமானம் அல்லது ஒழுங்குணர்வு குலையச் செய்யும்' அல்லது "தாழ்வு அல்லது இழிவு' செய்யும்.

மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், அது மிகவும் சிறிதளவே. கடந்த ஆண்டு நாடாளுமன்றம், நீதிமன்ற அவ மதிப்புச் சட்டம் தொடர்புடைய திருத்தத்தை கொண்டு வந்தது. இனி நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்புடைய வழக்கில் உண்மையை தற்காப்பாக நிலை நிறுத்தலாம். பல வழக்குகளில் அதனை நிரூபிப்பதற்கு சிறிது புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டியது வரலாம் (சபர்வால் வழக்கு அல்லது விவகாரம் என வைத்துக் கொள்ளலாம் இந்த விவகாரத்தைப் போல). ஆனால், ஒரு விசாரணையைக் கோரும் பொழுது நீங்கள் வழக்கை விவரித்தாக வேண்டும். நீங்கள் வழக்கை விவரித்தால், அது நீதிபதியின் மீதான குற்றங்களை சுட்டிக் காட்டுவதற்கு சமம். அதற்காக நீங்கள் நீதிமன்ற அவமதிப்பின் பெயரில் கைது செய்யப்படலாம். ஆதலால் : விசாரணையின்றி எதனையும் நிரூபிக்க இயலாது. நிரூபிக்கப்படாத எதனையும் விசாரிக்க இயலாது. எனவே, நம்முன் தெளிந்து சிந்திப்பது என்கிற மார்க்கம் உள்ளது. எடுத்துக்காட்டாக,

1. இந்தியாவில் உள்ள நீதிபதிகள் தெய்வப் பிறவிகள் 2. நாகரிகம், பண்பு, ஒளிவு மறைவு, நன்னடத்தை, நேர்மை என இவை அனைத்தும் அவர்களின் டி.என்.ஏ. வில் (DNA) பொதிந்துள்ளது 3. சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு நீதிபதியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாதது மேற்சொன்னதற்குச் சான்று 4. நீதித் துறை வாழ்க! ஜெய்ஹிந்த்.

எஸ்.பி. பரூச்சா போன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள், வெளிப்படையாக நீதித்துறையில் மலிந்திருக்கும் ஊழல், லஞ்சம் குறித்துப் பேசும் பொழுது நாம் சற்று குழம்பித்தான் போகிறோம். இந்த சந்தர்ப்பங்களில் நாம் காதுகளை பஞ்சால் அடைத்துக் கொள்ள வேண்டும் அல்லது ஏதாவது ஒரு மந்திரத்தை ஓத வேண்டும். இது நம் இறுமாப்பை சிதைக்கலாம், நம் சுதந்திர உணர்வை கடிவாளமிட்டு நிறுத்தலாம். இல்லை எனில், நாம் ஒரு நீதிமன்ற சர்வாதிகாரத்தில்தான் வாழ்கிறோம் என ஒப்புக் கொள்ளலாம். ஆனால், இங்கே அரண்மனையில் ஓர் அவதூறு நிகழ்ந்துள்ளது. அது என்ன?
Pin It